You are here
நேர்காணல் 

நூல்களின் வழியே குழந்தைகள் மனிதத்தை உணர்வார்கள்.

நேர்காணல்: யூமா வாசுகி

 கேள்விகள்: எஸ். செந்தில்குமார்

தி.மாரிமுத்து (1966) யூமா வாசுகி என்ற பெயரில் கவிதைகளும் நாவல்களும் சிறார் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். கும்பகோணம் அரசு ஓவியக் கலைத் தொழிற்கல்லூரியில் ஓவியக் கலையில் பட்டயப்படிப்பு படித்தார். உயிர்த்திருத்தல்(1999) சிறுகதைத் தொகுப்பு, ரத்தஉறவு(2000), மஞ்சள்வெயில்(06) ஆகிய இரு நாவல்கள், இரவுகளின் நிழற்படம்(2001) அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு(2001) சாத்தனும் சிறுமியும்(2012) ஆகிய கவிதைத்தொகுப்புகளோடு பெரியவர்களுக்கான அனேக மொழிபெயர்ப்பு நூல்களையும் கொண்டுவந்திருக்கிறார். தனக்கென தனித்த மொழிகொண்ட கவிதைகள், எதார்த்தமான கதாபாத்திரங்களை கொண்ட புனைவுகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருக்கும் யூமாவின் ஓவியங்களும் நுட்பமானவை.

தீவிரமான சிற்றிதழ் சூழலில் இயங்கி வருபவர் நீங்கள். கவிதையின் உச்சபட்சமான செறிவான அடர்த்தியான மொழியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறிர்கள். குழந்தைகளுக்கான கதை எழுதுகிற மனநிலைக்கு எவ்வாறு மாறினீர்கள்?

என் அம்மா வெகுமக்கள் பத்திரிகைகள் படிப்பதி்ல் ஆர்வமுள்ளவர். காசு கொடுத்து வாங்க இயலாத நிலையில், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ராணியோ, குமுதமோ வாங்கி வரும்படி என்னைப் பணிப்பார். அப்போது நான் மிகச் சிறுவன். அவர் படித்துவிட்டு வைக்கும்போது நானும் என் அண்ணனும் எடுத்துப் படிப்போம். முக்கியமாக ராணியில் வரும் படக்கதைகளும் குரங்கு குசலா போன்ற கார்டூன்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சில காலத்துக்குப் பிறகு கொஞ்சம் ‘சில்லறை’ புழக்கம் ஏற்பட்ட பிறகு சிறார் காமிக்ஸ் நூல்களும் துப்பறியும் நாவல்களும் மாயாஜால நாவல்களும் வாங்கிப் படித்தோம்.

பட்டுக்கோட்டை நகரத்தின் எங்கெங்கோ மூலைகளில் என் விருப்பம் கொண்ட சிறுவர்கள் பலர் இருந்தார்கள். எப்படியோ நண்பர்களாகி, புத்தகங்களை மிகுந்த ரகசியமாகப் பரிமாறிக்கொண்டோம். ஏனென்றால் நாங்கள் இதுபோன்று ‘கூடா சேட்டை’ களில் ஈடுபடுவது வீட்டுப் பெரியவர்களுக்குப் பிடிக்காது. படுபயங்கர தீவிரவாதக் குழுபோன்று நாங்கள் காலநேரமோ, பசி தூக்கமோ பாராது புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டோம். புதுப்புது நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. பலவகைப்பட்ட நிறைய சிறார் நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. நான் சில நூறு சிறார் புத்தகங்களையாவது படித்திருக்கக்கூடும். என் சிறு பிராய நினைவுகளில் உவகை தரும் நிகழ்ச்சிகள் வெகுசிலவே. ஆனால், மேற்சொன்ன காலம், இடையறாது சிறார் நூல்கள் வாசித்துக்கொண்டிருந்த காலம் என் ஆளுமைக் கலவைகளில் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருக்குமென்று நினைக்கிறேன். சிறார் படைப்பில், சிறார் பத்திரிகைகளில் ஈடுபடுவதற்கான மனநிலையின் வழி அதுதான்.

பிறகு பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயமோகன் மூலமாக எனக்கு குரு நித்ய சைதன்ய யதி அவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகுதான் நான் மலையாள மொழியையும் அங்குள்ள சிறார் இலக்கியங்களையும் அறிமுகம் கொள்கிறேன்.

ஜெயமோகன் அவர்களின் நீண்ட கால நண்பர் நீங்கள். நீங்களும் அவரும் இணைந்து சொல் புதிது காலாண்டிதழ் நடத்தியிருக்கிறிர்கள். அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். கூடவே அந்த இதழில் குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகம் செய்வதில் நீங்கள் ஆர்வம் காட்டவில்லையா?

ஜெயமோகனின் நெறியாள்கையில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை சொல்புதிது. ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் (சூத்திரதாரி்), நான், அருண்மொழி நங்கை (ஜெயமோகன் மனைவி), செந்தூரம் ஜெகதீஷ், ரிஷ்யசிருங்கர், மோகனரங்கன் ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினர்கள். தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சி, அகல் பஷீர் ஆகியோர் வடிவமைத்து அச்சிட்டுத் தந்தார்கள். நான் அந்தப் பத்திரிகையில் நிறைய சித்திரங்கள் வரைந்திருக்கிறேன். அதில் நல்ல படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. வேறு எந்த வேலையுமின்றி, காலையில் பழவந்தாங்கலிலிருந்து புறப்பட்டு ராயப்பேட்டை தமிழினி அலுவலகத்துக்குச் சென்று நாள் முழுதும் அமர்ந்திருந்த காலம் சில வருடங்கள். அங்கே சொல்புதிது வேலையும் நடந்துகொண்டிருந்தது. ஒரு சீரிய பத்திரிகையின் உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவனாய் இருந்தது எனக்கு நிறைவளித்தது. சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது.

உங்களது ரத்த உறவு நாவல் எதார்த்தமான நாவலென பலராலும் பாராட்டுக்கு உள்ளானது. குழந்தைக் கதைகளை மொழிபெயர்க்கத் தேர்வு செய்யும் போதும், நீங்கள் எழுதும் போதும் மிகுபுனைவு (fantasy) உலகத்தையும் அதற்கேயுரிய புதிய மொழியை உருவாக்குகிறீர்கள். இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது?

ரத்த உறவு நாவலுக்குக் கொஞ்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். அந்த நாவல் எழுதப்பட்டதே, அண்ணாச்சி, தமிழினி வசந்தகுமார் அவர்களின் இடையறா வற்புறுத்தலாலும் அழுத்தத்தாலும்தான். அந்த நாவல் குறித்து நல்ல அபிப்பிராயங்கள் வந்திருக்கின்றன. கடுமையான விமர்சனங்களையும் அது எதிர்கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கான கதைகளை மொழிபெயர்க்கும்போதோ, வேறு படைப்பு முயற்சிகளில் ஈடுபடும்போதோ என் உள்ளார்ந்த ஒரு பதற்றம், உணரும்படிச் சொல்லிவிட வேண்டுமே எனும் தவிப்பும் அவசரமும்தான் அவற்றுக்கான மொழியைத் தேர்ந்துகொள்கின்றன. மொழி குறித்து எனக்கு முன் தி்ட்டம் ஏதுமில்லை. உள்வசப்பட்டதற்கும் உந்துதலுக்குமான பிணக்க இணக்கங்களில் அது பிறக்கிறது. தவிர, சமயங்களில், இடுக்கமான திருகு மொழிகளில் பிரயாசையுடன் கூறப்படும் மிகுபுனைவில் உள்ள சர்வ எதார்த்தத்தையும், சாதாரண எதார்த்த வரிகளில் வெளிப்படும் அபாரமான மிகுபுனைவையையும் நாம் பார்க்கிறோம். எதார்த்தத்துக்கும் அல்லாததற்குமான வித்தியாசம் அரூப நூலிழையாக உள்ளது. மீனுக்குத் துடுப்புகள் உருவானதற்கு அதன் காலகால எத்தனமே காரணம் என்பதுபோல, வெளிப்படுவதற்காகத் திமிறும் படைப்பு, சுய எத்தனத்திலிருந்தே மொழியை எடுத்துக்கொள்கிறது.

குழந்தைகளுக்கான மிகுபுனைவு கதையின் மொழி அதுசார்ந்த வடிவம் இனிமையான இசை போலிருக்கிறது. அதே சமயம் தீவிர இலக்கியத்திற்குள்ளிருக்கும் கதாசிரியர்கள் எழுதும் மாய எதார்த்தவாத, மிகுபுனைவுக் கதையும் புரியாதபடியிருக்கிறது. உங்களது வாசிப்பில் இவ்வகையை இப்பிரச்சனையை எப்படி நினைக்கிறீர்கள்?

மொழியைப் பொறுத்தவரை – பேருன்னத தத்துவங்கள், மாபெரும் உலக இலக்கியங்கள், அதி நுட்பமான தரிசனங்கள் எல்லாம் அடிப்படையில் எளிமையைக் கொண்டிருக்கின்றன. அந்த எளிமையினூடேதான் அவை நம்மை எட்டவியலாத உயரங்களுக்குக் கொண்டு செல்கின்றன.எளிமையின் வழியில்தான், அப்படி அல்லாதவற்றை துலக்கிக் காட்டுகின்றன. ஜென் கதைகளும் சூஃபி கதைகளும் யேசுவின் வாய்மொழிகளும் எளிமையின் மூலம்தான், உணர்தலின் அதிசயங்களையும் விகாசத்தின் பரவசத்தையும் நமக்கு அணுக்கமாக்குகின்றன. மாயஎதார்த்த எழுத்து (மேஜிக்கல் ரியலிசம்) என்று சொல்லும்போது அங்கே உடனடியாக காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸின் விண் முட்டும் பிம்பம் வந்துவிடுகிறது. அவர் கதைகள் எளிமையை அடிப்படையாகக் கொண்டவை. அந்த அடிப்படையில்தான் அவை கற்பனையின் அற்புதங்களுக்கும் கவித்துவத்தின் உச்சங்களுக்கும் செல்கின்றன.

எனக்கு இசங்களில் நம்பி்க்கை இல்லை. என் விடுதலைக்காக நான் நம்புவது, கலையின் ஆன்மாவைத்தான். சமீபத்தில் சிவப்புக் கிளி என்றதொரு கன்னடக் கதையை மலையாளத்தில் வாசித்தேன். எளிமையான எழுத்து. யதார்த்தமான சொல்முறை. ஆனால் அது, ஒரு மலையைப் பெயர்த்து நம் மனதில் போட்டுவிட்டுப் போய்விடுகிறது. அந்த கனம் நம்மைக் குன்றச் செய்துவிடுகிறது. ரியலிசத்தின் உள்ளே அப்ஸ்ட்ராக்டும் அப்ஸ்ட்ராக்டின் உள்ளே ரியலிசமும் வெளிவரத் தவித்துக் கொண்டிருக்கின்றன. நாம்தானே கண்டுணர வேண்டும். இரண்டையும் பிரிக்க முடியாது. யதார்த்தம் என்பது, யதார்த்தமற்றதை நோக்கியான பயணத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. யதார்த்தமற்றதும் அப்படித்தான். இதை நீங்கள் ஓவியத்திலும் பொருத்திப்பார்க்கலாம். குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது நாம் மிகு எளிமையின் துணைகொண்டே அதிபுனைவுகளை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.

குழந்தைகள் கதைகளையும் பாடல்களையும் படித்து வளரவேண்டுமென்கிற சிந்தனை அடிப்படையில் ஒரு எழுத்தாளானகிய உங்களிடம் இருப்பது வரவேற்கத்தக்கது. அறிவொளி இயக்கம் போல குழந்தைகளுக்கான கதை கற்றல் இயக்கம் ஒன்றை உங்களுடன் ஒரு மனதோடு இயங்கும் எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து தொடங்கலாமே?

ஐம்பதுகளில், குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராக வை. கோவிந்தன் இருந்தார். அதன் பிறகு அழ வள்ளியப்பா பொறுப்பேற்றார். இன்று சாத்தியப்படுமா என்று நாம் சந்தேகிக்கும்படியான பல அரிய செயல்கள் அன்று நடந்தேறியிருக்கின்றன.சிறார் இலக்கியக் களதில் அந்த சங்கம் முழு தீவிரத்துடன் இயங்கி பெரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் செயல்பாடுகளைப் பட்டியலிட்டால், பக்கம் நீளும். அப்போதைய இயக்கத்தின் பகுதியளவுகூட இப்போது இல்லை. நமக்கென்று ஒரு மிகப் பெரிய சிறார் கலை இலக்கிய அமைப்பு வேண்டும். அனைத்துக் கலை இலக்கியக்காரர்களும் மக்களும் ஆசிரியர்களும் ஆர்வங்கொண்ட அனைவரும் ஒன்றிணைந்த பேரமைப்பு அவசியம். மற்றொன்று, சொல்ல வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் வலியுறுத்துவது, குழந்தைகளுக்கான ஒரு இலக்கிய வெளியீட்டு நிறுவனத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். கேரள அரசு திருவனந்தபுரத்தில் நடத்தி வரும் ‘பால சாகித்ய இன்ஸ்டிட்யூட்’ போல. சி.பி.எம். மின் உறுப்பு நிறுவனமான ‘கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்’ (கேரள அறிவியல் இலக்கியப் பேரவை) போல.

சிறார்களுக்கான கதைகள் பெரும்பாலும் நீதிக்கதை வகைமைச் சார்ந்ததாக எழுதப்படுகிறது. அக்கதைகளின் வழியாக அறத்தையும் பாடத்தையும் குழந்தைகள் கற்கவேண்டுமென விரும்புகிறீர்களா?

கதைகள் வாசிப்பதை குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரி்ய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். ஆங்கிலத்திலே எண்ணற்ற நல்ல நூல்கள் இருக்கின்றன. தமிழில் சிறார் இலக்கியச் சிறந்த நூல்கள் மிகவும் குறைவு. நீதிக் கதைகளைக்கூட கலைப்பூர்வமாக சிறாருக்கு சொல்ல இயலாத ஒரு கற்பனை வறட்சி நமக்கு இருக்கிறது. இது நமது சாபக்கேடு. இந்த நிலையில்தான் நமக்கு, நிறைய அரிய சிறார் நூல்களை மொழிபெயர்த்து முன்னால் வைத்து, தரத்தையும் தளத்தையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியி்ருக்கிறது. நூல்களின் வழியே குழந்தைகள் மனிதத்தை உணர வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க்கைகளை, பிரபஞ்சத்தை, இயற்கையை உற்றறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்கள் என்றென்றும் தோளணைத்துப் பயணிக்கும்படி புத்தகங்கள் அவர்களுக்குக் கனிவு தரும் என்று நம்புகிறேன்.

எங்கோ இன்னலுறும் கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள் பற்றி இங்கே மனம் நொந்து எழுதும் பாரதியின் சித்தம், கலை இலக்கிய அனுபவங்களிலிருந்து அவர்களுக்கு ஏற்படும் என்று உறுதிகொள்கிறேன். பெரும் பெரும் தனிமைகளை, பேரழிவுகளை, கடக்க இயலாத தடுப்புகளை, நாசகாரக் கொடூரங்களை உடைத்து நொறுக்குவதற்கு நல்ல நூல்களிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அநீதியின், சுயநலத்தின் பேரரசு ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அது கைப்பற்றிய இடமெல்லாம் புகையும் கனல்கள், சாம்பல்கள், ஓலங்கள்! விரைவில் நாம் குழந்தைகளிடம் நல்ல நல்ல நூல்களை கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது, இதை வென்று வாழும் ஆயுதங்களாக.

தீவிரமான இலக்கிய சூழலில் எழுதிவரும் படைப்பாளர்கள் பெரும்பாலும் தீடீரென குழந்தைகள் இலக்கியத்தில் ஈடுபடுகிறார்கள். அதே போல குழந்தைகள் பாடல்கள், கதைகள் மொழிபெயர்ப்பு நாவல் எழுதிவரும் சிறார் எழுத்தாளர்கள் தீவிர இலக்கிய தளத்தில் ஈடுபடுவதில்லை ஏன்?

சிறார் இலக்கியப் படைப்பாளிகள் பெரியவர்களுக்கென்று எழுதலாம் எழுதாமல் இருக்கலாம். அவர்கள் சிறார் இலக்கியப் படைப்புகளை சிறப்பாகச் செய்வார்களெனில் அதுவே நம் பேறு. ஆயினும், நண்பர் சுகுமாரன் போன்ற ஒரு சில சிறார் இலக்கியப் படைப்பாளிகள் பெரியவர்களுக்கான படைப்புகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். என் பிரச்சினை அது அல்ல. ஒரு சிலரைத் தவிர, சிறார் இலக்கியம் படைப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான படைப்பாளிகள் சிறார் இலக்கிய களத்துக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்கள் என்பது என் திடமான கருத்து.

சிறார் இலக்கியத்துக்கான மனநிலையோ, அதற்கான அர்ப்பணிப்போ, வாசிப்போ அவர்களிடம் சற்றும் இ்ல்லை. நம்மிடையே பல்லாண்டுகளாகப் புழங்கி வரும் ரஷ்ய சிறார் இலக்கியங்களைவிடச் சிறந்த ஒரு முன்மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கிறதா? எவ்வளவு பெரிய பொக்கிஷங்கள் அவை! ஈடு இணையற்ற கலைச் செல்வங்கள்! சாகா வரம் பெற்றவை என்பது அந்த புத்தகங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும்! அவற்றிடமிருந்து கூட இவர்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை.

என் முக்கியமான மன்றாடுதல் என்னவென்றால், ரஷ்ய சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையும் திரட்டி அதே வடிவில் அப்படியே மறுபதிப்புச் செய்ய வேண்டும். அற்புத அழகு வாய்ந்த பதிப்பு நேர்த்தியுடன் தயாரிக்க வேண்டும். இது நடக்குமா என்று தெரியவில்லை.அவற்றில் பல நூல்கள் மறைந்துவிட்டன.

ஒரு சிறார் கதாசிரியர், அவர் எழுதியிருக்கும் சிறுகதை நூலுக்கு ஒரு முன்னுரை வேண்டும் என்று கேட்டார். அவர் கதைகளைப் படித்துப்பார்த்தேன். அவை என் ஆர்வத்துக்கு நிறைவளிக்கவில்லை. நான் அவரிடம், “நீங்கள் இ்ப்போது இந்தக் கதைகளை வெளியிட வேண்டாம். பலவீனமாக இருக்கின்றன. எழுதுவதை நிறுத்துங்கள். ஒரு வருடமோ இரண்டு வருடமோ நல்ல சிறார் இலக்கிய நூல்களைப் படித்துவிட்டு அப்புறம் எழுதலாம். ரஷ்ய சிறார் இலக்கிய நூல்கள் கிடைத்தால் படித்துப்பாருங்கள். மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்” என்று சொல்லி என்னிடமிருந்த சில நூல்களைக் கொடுத்தேன். சில நாட்களுக்குப் பிறகு அவர் தொலைபேசியில், “நீங்கள் கொடுத்த புத்தகங்களைப் படித்தேன். ஆயினும் பரவாயி்ல்லை. என் புத்தகத்தை வெளியிடப் போகிறேன்” என்றார். இப்படித்தான் நிலைமை இருக்கிறது. பெரியவர்களுக்கு எழுதுபவர்கள் குழந்தைகளுக்கும் எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதுவர்கள் மிகச் சிலரே.

பெரியவர்களுக்கு எழுதும் நம் மிகப் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு சிறார் கலை இலக்கியத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஒவ்வொரு எழுத்தாளரும் சிறார் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த சிரத்தை வைக்க வேண்டும் என்பதும் அதற்கு தமது சிறந்த பங்களிப்பைச் செய்ய முயல வேண்டும் என்பதும் கட்டாயம், மீற முடியாத தார்மிகம். பெரியவர்களுக்கு எழுதும் மலையாள எழுத்தாளர்கள் மிகப்பலர் குழந்தைகளுக்கும் நல்ல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். மாதவிக்குட்டி, எம்.டி. வாசுதேவன் நாயர், உரூபு, சக்கரியா, சேது, ஜி. ஆர். இந்துகோபன், ரேணுகுமார் என்று ஒரு பெரிய பட்டியல் கொடுக்க முடியும்.

ரஷ்ய சிறார் இலக்கியப் புத்தகங்களை வாசித்த போது உங்களது மனநிலை என்னவாகயிருந்தது?

ரஷ்ய சிறார் இலக்கியங்கள் என்னுள் பேருவகையையும் ஊக்கத்தையும் கற்பனையையும் ஒரு கொந்தளிப்பாக எழுப்பின. அப்போது என்.சி.பி.எச். விற்பனை நிலையங்களில் ரஷ்ய நூல்கள் கிடைக்கும்.கெட்டி அட்டை போட்ட ஒரு கனத்த புத்தகம் ஐந்து ரூபாய் விலைக்குக் கிடைக்கும். அவ்வளவு மலிவு விலையில்தான் அந்த மகத்தான நூல்கள் கிடைத்தன.’விளையாட்டுப்பிள்ளைகள்’ போன்ற பல நூட்களை நான் தலையில் வைத்துக் கூத்தாடினேன். அது, படித்துக் களிப்பதும், பார்த்து மகிழ்வதுவுமான அனுபவம். அந்த நூட்களே பின்னாட்களில் என்னை டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ், கோகல், அலெக்ஸி டால்ஸ்டாய், அலெக்ஸாந்தர் குப்ரீன், செகாவ், கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ்,ஷோலகவ் ஆகிய பேராசான்களிடம் இ்ட்டுச் சென்றன. சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘அன்னை வயல்’, ‘குல்சாரி’ போன்ற புத்தகங்களின் பழுப்புத் தாள்களில் ஒரு வசீகர வாசனை வரும். அடிக்கடி அதை உச்சி முகர்வது வழக்கம். அன்னை வயல் படித்த சில நாட்களுக்குப் பிறகு நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானேன்.

குழந்தை இலக்கியத்தில் ஓவியத்தின் பங்களிப்பு பிரதானமாது. நீங்கள் உருவாக்கும் கதைகளில் ஓவியங்களின் பக்கங்கள் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுக்கான ஓவியங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சிறார் இலக்கியப் படைப்புகளி்ல் ஓவியத்தின் பங்கு மிக மிகப் பெரி்து. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்கு எழுதுபவரைவிட, அதற்கு படம் வரைபவர் உயர்ந்த ஸ்தானத்திற்கு சென்றுவிடுகிறார். என் நண்பரான சிறார் இலக்கியப் படைப்பாளி ஒருவர் தன் நூலுக்கு குழந்தைக் கிறுக்கல்கள் போலவே படம் வரைந்து வெளியிட்டார். குழந்தைக் கதைக்கு, குழந்தைகள் வரைவதைப்போன்றே படம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பது அவர் கருத்து. எனக்கு அது ஏற்புடையதாக இல்லை. சிறார் கதைக்குப் படம் வரைவதற்கு ஒரு ஓவியன் தன் ஆற்றலின் இறுதித் துளியையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கதைகளுக்கு அதி சிறப்பாக, மனதைவிட்டு நீங்கா விதமாக, தொட்டுத் தடவி முத்தமிட்டுக் கொண்டாடக்கூடிய வகையில் படங்கள் அமைய வேண்டும். குழந்தைக் கதைகளுக்கு சிறப்பாக வரையப்படும் படங்கள் கதையைக் காட்சியாக விவரித்துப் புரிதலுக்கு ஏதுவாகின்றன, மகிழ்வூட்டுகின்றன, கற்பனையைத் தூண்டுகின்றன. அந்த ஓவியங்களை வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி, ஓவியக் கலையின்பாற்பட்டும் திசைகாட்டுகின்றன.

தமிழிலில் வாய்மொழி கதை மரபும் கர்ணபரம்பரை கதையும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அவ்வகை கதை வகைமைகளை சிறார்கதைகள் எழுதும் போதும் அக்கதைகளுக்கு ஓவியம் வரையப்படம் போதும் நீங்கள் பயன்படுத்த முயன்றுள்ளீர்களா?

காலம் காலமாக வாய்மொழிக் கதைகள் தலைமுறைகளினூடே உயிர்த்து வருவது நம் மரபின் நெடுந்தொடர்ச்சிகளில் ஒன்று. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது, குழந்தைமையின் மலர்ச்சிக்கு நாம் அர்ப்பணிக்க வேண்டிய பிரதான கடமைகளில் முக்கியமானது. குழந்தைகளுக்கான ஊட்ட உணவு என்பதில் எப்படி நமக்கு ஒருபோதும் சமரசம் இருக்க முடியாதோ, அதுபோன்றே அவர்களின் உணர்வுக்கான கதைகளை, உடல் மொழி, வாய் மொழி, முகமொழி முதலிய அனைத்துப் பரிமாணங்களுடன் வசீகரமாக வெளிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத அதிஅவசியம். கர்ணபரம்பரைக் கதைகளாகட்டும் அல்லது மற்றவையாகட்டும், சொல்லிக் கொடுப்பதும் சொல்ல வைப்பதும், நாம் அவர்களின் எதிர்காலம் குறித்து கனவு காணும் சமூக நல் விளைவுகளை துரிதப்படுத்தும். உலகப் பெரும் கலைஞர்களும் அறிஞர்களும் தங்கள் பால்ய காலத்தைக் குறித்து நினைவுகூரும்போது, அக்காலத்தில் தாங்கள் கேட்ட கதைகளையும் அசைபோடுவதை நாம் படித்திருக்கிறோம். குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்ற மரபு சமகாலத்தில் அருகிப்போனதற்குக் காரணம், குழந்தைகளைப் பற்றிய அலட்சியமும் அவர்களின் உளவியலையும் உயர்வையும் பற்றிய அறிவின்மையுமே. பெற்றோரின், மற்றோரின் வறட்டு விருப்பங்களை தாங்க முடியாமல் புவிமீது சுமந்தலையும் சிறகற்ற பறவைகளாகவே குழந்தைகள் நிலவுகிறார்கள். இப்போது இப்படியென்றால் எதிர்கால சமூகம் குறித்து பேரச்சம் எழுகிறது.மிக மிகவும் குறைந்தபட்சம், நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்யாத, அவர்களைக் கடவுளின் பிம்பங்களாகப் பார்க்காத சமூகம் ஒன்று உருவாகுமா என்பதுகூட சந்தேகம்தான். பின் இருக்கையில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்கிறார்கள். பேருந்துபோன்ற வாகனங்களில் குறைந்த தூரப் பயணத்தில்கூட பெரியவர்களே கண்ணயர்வது உண்டுதான். அந்தக் குழந்தைகள், இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் எந்தப் பிடிமானமும் இன்றி அமர்ந்து தூக்கக் கலக்கத்தில் சொக்கிச் செல்வதை பெரும் பீதியுடனும் பிரார்த்தனையுடனும் அனேகம் பார்த்துவருகிறேன். சென்னையின் அசுரப் போக்குவரத்தில், ஒருபோதும் நினைத்திராதது நொடியில் நடந்துவிடுமே. வாகனத்தைச் செலுத்துபவர்கள் ஏன் இதில் சிரத்தை கொள்வதில்லை. குழந்தைகளிடம் கலை இலக்கியத்தை அணுக்கமாக்காததற்கான அலட்சியம் ஒரு வகையில் இதுபோன்றதுதான். கவனத்துடன் கொண்டு செலுத்தாவிடில் காரியங்கள் சீர்கெட்டுவிடும்.

நீங்கள் எழுதும் சிறார் இலக்கியத்திற்கான முன் மாதிரியாக யாரை குறிப்பிட விரும்புகிறீர்கள். தமிழில் வாண்டுமாமா உள்ளிட்ட சிறார் கதை எழுத்தாளர்களைப் பற்றிய உங்களது வாசிப்பின் மதிப்பீடு என்ன?

இன்றைக்கு எழுதும், என்னைவிட வயதில் குறைந்த ஒருவர் தம் படைப்பில் இலக்கியத்தின் புதிய சாத்தியங்களை எனக்குக் காட்டித் தரும்போது அவரும் எனக்கு முன்னோடிதான். தமிழில் தேர்ந்த சிறார் இலக்கியங்கள் எண்ணற்று உருவாக வேண்டும் என்பது நம் ஏக்கம். அப்படி இல்லாதது நமக்குத் தலைகுனிவு. அந்த நல்ல கதை எந்தக் கரத்தின் வழியே வரும் என்று நான் காத்திருக்கிறேன். வாண்டுமாமா, முல்லை தங்கராசன், அழ. வள்ளியப்பா, தம்பி சீனிவாசன், லெமன், பெ. தூரன், கிருஷ்ணன் நம்பி, வை.கோவிந்தன், ரேவதிபோன்ற, அந்தக் கால சிறார் எழுத்துக் கலைஞர்களின் வாசகன் நான். அப்போது சிறார் கதைகளுக்கு சித்திரம் எழுதியவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஓவியர் செல்லம். மறக்கவியலாத பெருங்கலைஞர் அவர். நடப்புக் காலத்தில் சிறார் இலக்கியத் தளத்தில் ஆயிஷா நடராசன், சுகுமாரன், பாலபாரதி, விழியன், கோ. மா. கோ. இளங்கோ, வானவில் ரேவதி, விஷ்ணுபுரம் சரவணன், தேவிகாபுரம் சிவா, அம்பிகா நடராஜன் ஆகியோரின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. மலையாளத்தில் மிகச் சிறந்த சிறார் எழுத்தாளர் சுமங்களா. அவரது கதைகளை இப்போது மொழிபெயர்த்துவருகிறேன். சிறார் கதை எழுத்தில் நாம் யோசிக்க வேண்டிய வகைமைகளை அவர் எழுத்தில் நாம் ரசிக்கலாம். நான் மிகவும் வலியுறுத்தும் ஒன்று, சிறார் இலக்கியத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகள் வேண்டும். பெரியவர்களுக்கு எழுதுவதற்கான கற்பனை ஆற்றலைவிட, மொழித்திறனைவிட, குழந்தைகளுக்கு எழுதும்போது நமக்கு அதிகமான சேகரம் தேவைப்படுகிறது. இதற்கு அப்பாற்பட்டு, குழந்தைகளுக்கு எழுதுவதற்கான மனநிலை ஒன்று இருக்கிறது. மிகக் கவிதார்த்தமான, அதிசயமான மனநிலை அது; குழந்தைகளைப்போலவே. அதுதான் இதற்கான அடிப்படை.

சிறார் கதை உலகில் காமிக்ஸ் புத்தகம் என்பது அளப்பெரிய பங்கீட்டை செய்துவரும் வடிவம். பெரியவர்கள் கூட விரும்பி படிக்கும் ஆவலைத்தூண்டும்விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவ்வடிவத்தை தீவிர இதழ்கள் ஏன் விரிவான இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. தற்போது சிறார் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்கள் அவ்வடிவத்தை ஏன் மேலும் முன்னெடுத்துச்செல்ல முன்வருதில்லை?

சிறாா் இலக்கியத்தில் காமிக்ஸ் எனும் படக் கதையின் பங்கு அளவிட முடியாதது. தற்காலத்தில் பரவலாக மேற்குலகில் கிராபிக் நாவல் என்ற பெயரில் நாவல்களை சித்திரங்களாகச் சித்திரிப்பது வளர்ந்து வருகிறது. மாத்ருபூமி வார இதழில் ஒரு தொடர் கதையை சித்திரங்களாகவே வெளியிட்டாா்கள். சுஜாதா எழுதிய நைலான் கயிறு, ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களில் படக்கதையாக வந்தது. இதோடு சேர்த்து இன்னும் மூன்று நாவல்கள் படக்கதைகளாக வெளிவந்தன. சிறார் சித்திரக் கதைக் களத்தில் ஓவியர் செல்லம் அரும்பணியாற்றியிருக்கிறார். வாண்டுமாவின் கதைகளை செல்லத்தின் சி்த்திரங்கள் வாயிலாகப் படிப்பது எப்படிப்பட்ட இனிக்கும் அனுபவம்! நடிகர் ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் நாயகன் நாயகியாக வைத்து, ஓவியர் ஜெயராஜ் ஒரு துப்பறியும் படக்கதைத் தொடருக்குப் படம் வரைந்தார். மிகத் தேர்ந்த துல்லியமான அருமைச் சித்திரங்கள் அவை! நம் சூழலில், அவரது அபாரத் திறமைக்குத் தகுந்த மரியாதை ஜெயராஜுக்குக் கிடைக்கவில்லை. இப்போது பொன்னியின் செல்வன் கதையை ஓவியர் செல்லம் படக்கதையாக வெளியிட்டிருக்கிறார். ‘அமர்சித்ர கதா’ வரிசையில் பறவை மனிதர் சலீம்அலிபோன்ற பேராளுமைகளின் வாழ்க்கை வரலாறு சித்திரக் கதை நூல்களாக வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் மாத்ருபூமி நிறுவனத்திலிருந்து வரும் படக்கதை பத்திரிகையில் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வெளியானது. படக்கதை நூல்களைப் பற்றி, படக்கதை நாயகர்களைப் பற்றி கிங்விஷ்வா தொடர்ந்து எழுதிவருகிறார். நண்பர் விஜய் ஆனந்த் பெரு முயற்சி செய்து சே குவேரா பற்றிய படக்கதை நூலை மொழிபெயர்ப்பு செய்து தன் பயணி பதிப்பகம் மூலம் வெளியிட்டார். முத்து காமிக்ஸ் மூலம் நாம் மந்திரவாதி மாண்ட்ரெக்கை – டெஸ்மாண்ட்டை, இரும்புக் கை மாயாவியை, ரிப் கெர்பியை, வேதாளரை, ஜானிநீரோவை, டேவிட்டை எவ்வளவு உல்லாசமாகப் படித்தோம்! இப்போது முத்து காமிக்ஸ் மீண்டும் வண்ணத்தில் நிறைய படக்கதைப் புத்தகங்களை வெளியிட்டு வருகி்றது. பல ஆண்டுகளுக்கு முன்பே விடியல் பதிப்பகம் மூலம் பெரியவர்களுக்கான கிராபிக் நாவல் வெளிவந்தது.சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான ஏகோபித்த ஒரு கலை வழிதான் படக் கதை வடிவம். நாம் சொல்ல விரும்புவதை குழந்தைகளிடம் கடத்துவதற்கு வெகு பொருத்தமானது. பைகோ பதிப்பகம், உலக இலக்கியங்களை படக் கதைகளாக வெளியிட்டது. சிறார் பத்திரிகைகள் படக் கதைகளுக்கு கணிசமான பக்கங்களை ஒதுக்க வேண்டும். கவிதை நூல்கள் வெயிட்டால் விற்காது என்று ஒரு நிலை இருபதுபோல படக் கதை நூல்கள் விற்காது என்ற எண்ணம் இருக்குமோ என நினைக்கிறேன். படக்கதை படிப்பது சிறுபிள்ளைத் தனமானது என்ற ஒரு பொதுவான எண்ணமும் உண்டுதானே. பொதுத்தளத்தில் படக்கதைகளை பரவச் செய்வது நமது கடைமையின், அக்கறையின் ஒரு பகுதி.

குழந்தைகளுக்கு புத்தகங்கள் பள்ளிக்கூடத்தைத் தவிர வேறெங்கும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு எளிதாக சிறார் கதைகள் வாசிக்கும்படியாகவும், அதேசமயத்தில் சிறார் புத்தகங்களை சேகரித்துக் கொள்ளும்வகையிலும் ஏதேனும் திட்டமிருக்கிறதா?

முதற்கட்டமாக, பெற்றோரிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் சிறார் நூல்கள் குறித்தான பிரக்ஞை ஏற்பட வேண்டும். சில பதிப்பகங்களின் உள்ளார்ந்த சமூக நோக்கின் காரணமாக சிறந்த சிறார் நூல்கள் கிடைக்கின்றன என்றாலும் புத்தகங்களுக்கும் சிறாருக்குமான உறவு நலிவு கொண்டிருக்கிறது. பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் முதலிய பதிப்பு நிறுவனங்கள் சிறார் நூல் வெளியீட்டில் தீவிர கவனம் கொண்டிருக்கின்றன. ‘துளிர்’, ‘மின்மினி’, ‘தும்பி’ ஆகிய சிறார் இதழ்களும் குழந்தைகள்பாற்பட்ட ஆழ்ந்த சிரத்தையுடன் வந்துகொண்டிருக்கின்றன.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறார் நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் வீ்ட்டில் தனக்கென்ற ஒரு சொந்த நூலகத்தை, புத்தகங்கள் நிறைந்த ஒரு அலமாரியையாவது உருவாக்கிக்கொள்ள உதவ வேண்டும். நூலகங்கள் இல்லாத பள்ளி என்ற நிலையே பிரதானம், குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில். பள்ளிகளில் சிறார் வாசகர் வட்டங்கள் அமையப்பெற்று, நூல் வாசிப்பும் அது குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதும் இடையறா நிகழ்வாவதும் குழந்தைகள் தங்களுடையதான கதைகளை, கவிதைகளை, பிற கலைகளை வெளிப்படுத்தும் முனைப்பைத் தூண்டுதலும் நடக்க வேண்டும். தவிர, நம் அரசியலாளர்களுக்கு ஆதியிலிருந்தே இது குறித்த சிந்தனை இல்லாததுதான், சிறார் இலக்கியத்தில் நம் பின்னடைவுக்கான தலையாய காரணங்களில் ஒன்று.

ஒவ்வொரு மாதமும் ஒரு குழந்தை என்ன நூல் வாசித்தது என்றறிந்து, அந்தக் குழந்தையின் தேர்ச்சிக்கான அம்சங்களில் அதையும் இணைப்பது நல்ல விளைவைத் தரும் என்று நம்புகிறேன். இதில், சயமபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி மிகவும் பிரயாசைப்பட்டு பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு தமிழகத்திலேயே முன்மாதிரிப் பள்ளியாக விளங்குகிறது. அரசுப் பள்ளிகளும் மற்ற தனியார் பள்ளிகளும் அந்தப் பள்ளியைப் பின்பற்றினாலே நல்ல மாற்றங்கள் சித்திக்கும்.

தீவிர இலக்கியத்திலும் சிறார் இலக்கியத்திலும் பெரும்பங்காற்றி வருகிறீர்கள். சமகாலத்தில் இவ்விரு வகைமையிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களைப் பற்றி குறிப்பிடமுடியுமா?

கோ. மா. கோதண்டம், பாவண்ணன் (இவரது ‘யானை சவாரி’,’மீசைக்காரப் பூனை’ ஆகிய இரண்டு சிறார் பாடல் தொகுப்புகள்) தமிழ்ச்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் (பனி மனிதன் என்ற சிறார் நூல் இவருடையது), தேவதேவன் (துளிர் இதழில் சிறார் கவிதைகள் எழுதியிருக்கிறார்) பெருமாள் முருகன், சங்கரராம சுப்பிரமணியன், சுப்பிரபாரதி மணியன், த.வி.வெங்கடேஸ்வரன், சி. ராமலிங்கம், தமிழ்மகன், வள்ளியப்பன், ரமேஷ் வைத்தியா, வி.அமலன் ஸ்டேன்லி, எம்.பாண்டியராஜன், ப.கூத்தலிங்கம் உதயசங்கர் ஆகியோர் சிறார் இலக்கியத் தளத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். (சில பெயர்கள் விடுபட்டிருப்பின் என் மறதிப் பிழையாகும்). marimuthu242@gmail.com

Related posts

Leave a Comment