You are here

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்…

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்…

உலகின் அனைத்துத் தங்க சுரங்கங்களிலும் இருந்து வெட்டி மொத்தமாக எடுத்த புதையலை விட அதிக செல்வம் புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. – வால்ட் டிஸ்னி

மனித வரலாற்றின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான். ‘ புத்தகமே இல்லாத குழந்தைதான் உலகில் உண்மையான அனாதை குழந்தை என்பார் சிஸெரோ. இன்றைய சமூகத்தின் பல்வேறு அவலங்களுக்கான ஒற்றைத் தீர்வு புத்தக வாசிப்பை பரவலாக்குவதுதான் என்பது ஐ.நா. சபையின் சமீபத்திய அறிக்கையின் சாராம்சமாகும். அதிலும் குறிப்பாக நம் இளைய தலைமுறை வாசிப்பதை நாம் உறுதிசெய்யும் ஒரே செயல் மட்டுமே. நோபல் பரிசு உட்பட பெறும் குழந்தைகளாக, படைப்பாக்க உறுதி மிக்கவர்களாக அவர்களை மாற்ற முடியும். மனதை கட்டுப்படுத்துதல், தீய பழக்கங்களுக்கு ஆட்படாதிருத்தல், இலக்கை, லட்சியங்களை உருவாக்குதல், அதற்காக முழு ஈடுபாட்டுடன் உழைத்தல் எனும் வட்டத்தில் வாசிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இதனை மனதில் கொண்டு நம் சமூகத்தை வாசிக்கும் சமூகமாக மற்றும் பெரும் பணி நம்மிடம் உள்ளதை உணர முடிகிறது. ஒரு புத்தகம் நம் குழந்தையின் மனதை மூடிய நிலையிலிருந்து விடுவித்து இருளைப் போக்கி அறிவை விசாலப்படுத்தி வெற்றியாளர்களாக மாற்றும் சக்தி கொண்டது ஆகும். புத்தகம் இல்லாத அறை உயிரற்ற வெற்று உடலைப் போன்றது. படிப்பு வேறு, வாசிப்பு வேறு என்பதை நம் கல்விமுறை நிரூபித்து உள்ளது. பள்ளியில் பரீட்சைக்கு தயாராவதற்காக படிப்பதும், பொழுதுபோக்கு அம்சமாக தொடங்கி பிறகு இலட்சியமாக விரிவடையும் வாசிப்பும் எப்போதுமே ஒன்றாக முடியாது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமனிதர்கள் மெத்த படித்தவர்’ அல்ல.. ஆனால் மிக அற்புதமான வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் அத்தகைய மாமனிதர்கள் வரிசையில் நம் குழந்தைகளும் இடம் பெறத்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் இலட்சியக் கனவு என்பது உறங்கினால் வருவதல்ல நம்மை உறங்க விடாமல் செய்வது… ஒவ்வொரு குழந்தையையும் ஒரு குட்டி நூலகத்தின் அளவற்ற அறிவுப் புதையலின் சொந்த மாக்குவது எனும் இலட்சிய கனவும் அப்படியே. இதனை ஊக்கப்படுத்த 50 சதவிகிதம் ஒவ்வொரு குழந்தைக்கும் நாமே முதலீடு செய்யலாம் என்று முன் வந்துள்ளது பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட நம் “புத்தகம் பேசுது” இதழின் பிரமாண்ட பங்களிப்பு ஆகும். நாளைய சமுதாயத்திற்கான ஒட்டுமொத்த உயர்வுக்காக இன்றே நாம் செய்கிற ஒருவகை அஸ்திவாரமாக இந்த முயற்சி உள்ளது. படைப்பாக்கத்தைத் திறந்து விடும் திறவுகோல் வாசிப்பு. அத்தகைய வாசிப்புப் பழக்கத்தின் முதல் படியை எடுத்து வைக்க எங்கள் திட்டத்தில் இணையும் மாணவக் கண்மணிகளுக்கும் அதனை சாத்தியமாக்கிட முன்வந்த பெற்றோர்களுக்கும் “புத்தகம் பேசுது” தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. வாசிப்பை நேசிக்கும் புதிய சமுதாயத்தை உருவாக்கும் நம் முயற்சியில் ஒன்றிணைவோம். அனைவருக்கும் நன்றி.
– ஆசிரியர் குழு.

Related posts

Leave a Comment