You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஸ்டாலின் வெறுப்பு ஏன் நீடிக்கிறது?

என்.குணசேகரன்.

சோவியத் யூனியனை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின் பற்றிய சர்ச்சை, தொடருகிறது.அறுபது ஆண்டுகளாக ஓயாமல் தொடர்கிற இந்த சர்ச்சை, அடுத்த ஆண்டு ரஷியப் புரட்சியின் நூற்றாண்டையொட்டி அதிகரிக்கக்கூடும்.சோவியத் சோஷலிச சாதனைகளை திசை திருப்ப இந்த முயற்சி தீவிரமாக நடைபெறும். மேற்கத்திய மார்க்சியர் பலர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஸ்டாலின் எதிர்ப்பு, சோஷலிச எதிரிகளுக்கு பெரிதும் பயன்பட்டது.,ஸ்டாலினை, ஹிட்லரோடு இணைத்து சித்தரிக்கவும்,கம்யூனிஸமே ஒரு வன்முறை சித்தாந்தம் என்ற பொய்யான பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்கவும் அது உதவியது. உலகை அழிக்கும் பேராபத்தாக உருவெடுத்த பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியனது பங்கினையும், அதற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினது பங்கினையும் மறைக்கும் முயற்சி தொடருகிறது.

மனித விடுதலைக்கு ‘சோசலிசமே….இல்லையேல் காட்டுமிராண்டித்தனம்தான்!’ என்ற ரோசா லக்சம்பர்க்கின் கூற்று தற்போது உண்மையாகி வருகின்றது.இன்றைய அமைப்பு, ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.முதலாளித்துவ மூலதன திரட்டல் வெறியினால், இயற்கை வளங்கள் நாசமாகி வருகின்றது;முதலாளித்துவ வர்க்கங்கள் நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டலாலும்,போரினாலும், பெரும்பான்மை மக்கள் பாதிப்புக்கும்,வேதனைக்கும் ஆளாவதும், பலர் மடிந்துபோவதும் தொடர்கிறது.

இறப்பு,பாதிப்பு என்ற நிலையெல்லாம் தாண்டி,மனிதம் எனும் மேன்மையை அழித்தொழிக்கும் அமைப்பாக முதலாளித்துவம் செயல்படுகிறது.ஸ்டாலினால் அழிக்கப்பட்டவர் எண்ணிக்கை ஒரு கோடி, இரண்டு கோடி,ஐந்து கோடி என்று இடையறாது எண்ணிக்கை விளையாட்டில்,ஈடுபடுகின்றவர்கள்,முதலாளித்துவம் செய்து வருகிற அழித்தொழிப்பைப் பேசுவதில்லை.

1943-ஆம் ஆண்டுகளில் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலின் சந்தைக் கொள்கைகளால்,செயற்கையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மடிந்து போன 40 இலட்சம் இந்தியரைப் பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை.பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-நூற்றாண்டின் துவக்க காலத்திலும் மடிந்து போன 3 கோடி இந்தியர்களைப் பற்றிய மவுனம் நீடிக்கின்றது.

மனித மேன்மையை சோஷலிசமே ஏற்படுத்து, மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்ட ‘ஒவ்வொரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சி’ என்பது சோசலிச அமைப்பில்தான் சத்தியம்.அந்த அமைப்பை உருவாக்குவதற்கான மகத்தான வரலாற்றுப் பரிசோதனையாக ரஷியப் புரட்சியும்,சோஷலிச அமைப்பினைக் கட்டும் பணியும் நடந்தது.

ஒரு பரிசோதனை முயற்சி எனும்போதே அதில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளன. பல நூறு பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புக்கள் உருவான அனுபவங்கள் அறிவியலில் ஏராளம். புதிய சமுகக் கட்டுமானத்திலும் தவறுகள் இல்லாமல் முன்னேறுவது சாத்தியமில்லை.தவறுகளைப் பரிசீலித்து, படிப்பினைகள் பெற வேண்டுமென்பது மார்க்சியம்.

பரிசோதனை மேற்கொண்டவர்களை இழிப்பது,நிராகரிப்பது அனைத்தும் தவறானது.அதிலும் சோசலிசக் கட்டுமானத்தில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால், அந்த பரிசோதனையில் தோல்வி கிடைக்க வேண்டும் என்று எதிரிகள் இடைவிடாது சதிச் சூழ்ச்சி வேலைகளையும்,நேரடித் தாக்குதலையும் தொடுப்பது வழக்கம்.இந்நிலையில் தவறுகளுக்கு வாய்ப்புள்ளன.

எதையுமே இயக்கவியல் பார்வையில் துல்லியமாக எழுதும் ஈ.எம்.ஸ்.நம்பூதிரிபாட் ‘கம்யூனிஸ இயக்கத்தின் தத்துவார்த்த பிரச்னைகள்’ எனும் நூலில் எழுதினார்.

‘…மார்க்ஸ்,எங்கெல்ஸுக்குப் பிறகு லெனின்,பிறகு ஸ்டாலின்,பிறகு வந்த, புரட்சிக் கடமையாற்றிய தலைவர்கள், மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை மாற்றவில்லை.புரட்சியின் வெற்றிக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்தனர்….’
‘…இப்பணியினை செய்கிற போது ஸ்டாலின்,மாவோ மற்றும் பல புரட்சிக்காரர்களிடம் குறிப்பிடத்தக்க பல தவறுகள் ஏற்பட்டது என்பது உண்மையே…’

‘…..சோஷலிச ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பான செயல்கள் சோவியத் யூனியனிலும்,சீனாவிலும் நடந்துள்ளன என்பது மறுக்க முடியாது….’ என்கிறார் ஈஎம்ஸ். இனி எந்த நாட்டிலும் இவ்வாறு நடக்காமல் சோசலிசப் பயணம் முன்னேற வேண்டுமென வலியுறுத்தி,அந்த தவறுகள் பற்றி துல்லியமாக பரிசீலிக்க வேண்டும்.இது,நீடிக்கும் ஸ்டாலின் எதிர்ப்பு அரசியலுக்கு மாறானது.

புரட்சி வெற்றி,சோஷலிச அமைப்பினை கட்டும் பணி ஆகியவற்றில் லெனினிய வழியில் பல தத்துவார்த்த சிந்தனைகளை பதிவு செய்துள்ள ஸ்டாலினை முற்றாக நிராகரிப்பது புரட்சி இயக்கத்திற்கு பலன் தராது.அதிலும் புரட்சி இலட்சியம் முற்றுப் பெறாத இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மார்க்சிஸ்ட்கள் ஸ்டாலினது பங்களிப்பை விமர்சனரீதியில் உள்வாங்குவது அவசியம்.புதிய கண்டுபிடிப்புக்கான பரிசோதனைகளில் தவறும்,பின்னடைவும் ஏற்பட்டது என்பதால் அந்த முயற்சிகளையே நிராகரிப்பேன் என்பது அறிவியல் பார்வையாகுமா?

புரட்சிகர நடைமுறைக்கான தேடல்
சிலர் ஸ்டாலினை மார்க்சிய வரிசையில் வைக்கக் கூடாது என்கின்றனர்.அவர்களிடம்,புரட்சிகர நடைமுறை பற்றிய தேடல் இல்லை.மாறும் சூழல்களில் புரட்சி நடைமுறையை மேம்படுத்திட வேண்டும்.அதற்கு முந்தைய மார்க்சிஸ்ட்களின் அனுபவங்கள் முக்கியமானவை.லெனினியம் பற்றிய ஆழமான அறிவு முக்கியத் தேவை.

‘லெனினியத்தின் அடிப்படைகள்,லெனினியம் தொடர்பான பிரச்னைகள்’ உள்ளிட்ட ஸ்டாலினது எழுத்துக்களைப் பயின்றிடாமல்,லெனினியத்தை உள்வாங்குவது சிரமம்.. டிராட்ஸ்கியவாதம் உள்ளிட்ட போக்குகளுக்கு எதிராகப் போராடி,அந்த உக்கிரமான கருத்துப் போரில் முகிழ்த்த தத்துவமாக லெனினியம் விளங்குகிறது. இதனை ஸ்டாலினது எழுத்துக்கள் விளக்குகின்றன.

‘லெனினியத்தை ஏகாதிபத்திய சூழலிலும்,பாட்டாளி வர்க்கப் புரட்சி சகாப்தத்திலும் எழுந்த மார்க்சியம்’ என்று வரையறை செய்து, ஸ்டாலின், லெனினியத்தை விளக்குகிறார்.ஆறு முக்கிய பரப்புக்களில் அவரது விளக்கம் நீள்கிறது. 1. ஏகாதிபத்தியத்தையும்,ஏகபோக முதலாளித்துவதையும் பற்றய லெனினிய ஆய்வு. 2.பாட்டாளிவர்க்கப் சர்வதிகாரம். 3.சோசலிசப் பொருளாதாரத்தை கட்டுவது. 4.தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பாத்திரம். 5.தேசிய இன,காலனித்துவப் பிரச்னைகள். 6.தொழிலாளிவர்க்கப் புரட்சி. இவை லெனினது புரட்சி உள்ளடக்ககத்தை வலுவாகப் பற்றி எழுதப்பட்டவை. இந்தப் புரட்சி உறுதிதான்,முதலாளித்துவ எதிரிகளுக்கு ஸ்டாலின் மீதுள்ள வெறுப்பின் அடிப்படை
மார்க்சிய தத்துவத்தை தொழிலாளர்களுக்காக புரியும் வகையில் 26 வயதில் ஸ்டாலின் எழுதிய நூல்,’சோசலிசமா? அராஜகவதமா?’.தேசிய இனப்பிரச்சனை,மொழியியல் என அவரது பங்களிப்பு விரிகின்றது.1925-27 ஆண்டுகளில் டிராட்ஸ்கியத்திற்கு எதிராக அவர் செய்துள்ள பதிவுகள் புறக்கணிக்க முடியாதவை.

நாட்டினை பின்தங்கிய நிலைமையிலிருந்து மீட்டிட ஐந்தாண்டு திட்டம் உள்ளிட்ட முயற்சிகளை சோவியத் நாடு அன்று மேற்கொண்டது.பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சியை குறுகிய காலத்தில் அடைந்த, அந்த அனுபவங்களும், படிப்பினைகளும்,அதில் ஏற்பட்ட தவறுகளும் கூட எதிர்கால சோஷலிச முயற்சிகளுக்கு அவசியமானது.

Related posts

Leave a Comment