You are here
கடந்து சென்ற காற்று 

சல்யூட் டு மேட்டுப்பாளையம்

ச.தமிழ்ச்செல்வன்

pakkaththil-vandha-appaa1

கடந்த மாதம் எண்ணிக்கையில் அதிகமான கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்தது.பெரும்பாலான இரவுகள் ரயில் வண்டிகளின் படுக்கைகளில் உருளாமல் படுத்திருக்கும் கதி ஏற்பட்டது. எனக்கு அப்படுக்கை எப்போதும் சவப்பெட்டிக்குள் நீட்டிய கைகளோடு படுத்திருக்கும் நாளுக்கான ஒத்திகையாகவே படும். உறங்குவது போலும் சாக்காடுதானே.

ரயில்வே நிர்வாகம் ஒருவர் ஆறு பயணங்களுக்கு மேல் இணையத்தில் முன் பதிவு செய்வதைத் தடை செய்து விட்டது. மூன்று ஊர்களுக்குப் போனால் ஆறு முன் பதிவு காலியாகிவிடுகிறது. நம்மைப்போல மாதாந்திரிகளின் கதை சிக்கலாகி விடுகிறது. மகன், மருமகள், மகள், மருமகன் என எல்லோருடைய ஐடிகளிலும் டிக்கெட் போட்டு அவர்கள் யாரும் தங்கள் ஐடியில் டிக்கெட் போடும் வாய்ப்பைப் பறித்துத்தான் சமாளிக்க நேர்கிறது.ரயில்வே நிர்வாகத்துக்கு பல்லாயிரம் ரூபாய்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் பயணி என்கிற வகையில் என் போன்றோருக்குச் சிறப்புச் சலுகையாக ஒரு மாதத்தில் 20 முன் பதிவுகளாவது செய்துகொள்ள அனுமதி வழங்க ’ஜோக்கர்’ பிரசிடெண்ட் பப்பிரெட்டி பவனிலிருந்து உத்தரவிட வேண்டுமாய் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.இம்மாதம் பெரிய சீரழிவாகப் போய்விட்டது.இப்படிப் பல ஐடிஒகளில் முன்பதிவு செய்வதில் இன்னொரு பெரிய அலப்பரை, டிக்கெட்டுகள் கேன்சல் செய்வது.குறிப்பிட்ட பயணச்சீட்டை எந்த ஐடியில் போட்டோம் என்று தெரியாமல் ஒவ்வொரு ஐடியாகத் தேடித்தேடி அலுத்துப்போகிறது.260 ரூபாய் டிக்கெட்டை கேன்சல் செய்தபோது 20 ரூபாய்தான் திருப்பிக் கிடைத்தது என்கிற வயிற்றெரிச்சல் தனி.பயண அனுபவக்கட்டுரை இலக்கியத்தின் பகுதியாக இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

முதலில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி.நடிகர், .இயக்குநர் கே.பாக்கியராஜும் நானும் சிறப்புரை ஆற்றினோம்.பாக்கியராஜைப் பார்க்க வந்த கூட்டம் என்பதால் அந்த மைதானம் நிரம்பி வழிந்தது.பாக்கியராஜுக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது இணையர் நடிகை பூர்ணிமா ஜெயராமைப்பார்த்து ஒரு ’குடி’மகன் அய்யோ…என்று கத்தி ஓளங்கள்..ஓளங்கள் என்று ஏதோ சொல்ல முயன்று மேடைக்கு அருகில் வந்து தரையில் விழுந்து வணங்கிச் சளம்பிக்கொண்டே இருந்தார்.தோழர்கள் அவரை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தினர்.சீனியர் சிட்டிசன்களாகிவிட்ட வயதான நடிகர் நடிகைகளையும் கூட விடாமல் துரத்தி வணங்கும் தமிழரின் பண்பு மெய்சிலிர்க்க வைத்தது.பாக்கியராஜ் அவர்கள், பக்கத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றபோதும் அவருக்குப் பின்னால் அவரோடு கூடவே ஒரு ஊர்வலமாக ரசிகர்கள் போனதாக ஏற்பாட்டாளர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டம் அவ்வளவு இருந்தாலும் புத்தக விற்பனை படு சுமாராக இருந்ததாக வருத்தப்பட்ட புத்தக விற்பனையாளர்களைத் தேற்ற நம்மிடம் வார்த்தைகள் இல்லை.இந்த அமளியில் நாம் என்ன பேசிவிடப்போகிறோம். மக்கள் கேட்பார்களா என்கிற அச்சம் மேடையில் அமர்ந்திருந்த எனக்கு இருந்துகொண்டே இருந்தது.தண்ணீரைக்குடித்து மனசை வறண்டுவிடாமல் பாதுகாத்துக்கொண்டேன்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், பாக்கியராஜின் நிறைவுப் பேச்சுக்கு முன்னால், நான் உட்பட அன்று பேசிய பல பேச்சாளர்களின் உரைகளை மேட்டுப்பாளையம் மக்கள் அத்தனை அமைதியாகவும் அக்கறையுடனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தேவையான இடங்களில் கரவொலி எழுப்பியும் சிரித்தும் மிகச் சரியாக எதிர்வினை ஆற்றிக்கொண்டும் இருந்தார்கள். சல்யூட் டு மேட்டுப்பாளையம். கொஞ்சம் புத்தகங்களும் வாங்கிவிட்டீர்களானால் டபுள் சல்யூட் அடிக்கலாம்.எப்போதும் சினிமாவுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் இருந்தால் சீரியஸ் உரைகளைக் கேட்கும் பண்பும் அழியாமல் நீடிக்கிறது என்பதன் அடையாளமாக மேட்டுப்பாளையம் கூட்டம் அமைந்தது.பாக்கியராஜும் எழுத்தாளன் என்பதால் என்னை மதித்தும் அங்கீகரித்தும் பேசியதும், நிறைவுரையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசியதும் நல்ல அம்சங்கள்-கூடுதல் நேரம் அவருடைய முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்களை மேட்டுப்பாளையத்தில் படம்பிடித்த அனுபவங்களைச் சொன்னாலும் கூட.தோழர் பாஷா தலைமையிலான தோழர்கள் குழு அங்கு கடுமையான உழைப்பைச் செலுத்தி இத்திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கூட்டம் அவிநாசி புத்தகத் திருவிழா.மேட்டுப்பாளையம் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்தது எனில் அவிநாசியில் ஒரு புத்தகக்கடை(க்ரீன் ஸ்டோர்) நடத்திவரும் தோழர் தினகரனும் அவரது நண்பர் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஆசிரியர் சம்பத் இணைந்து பெருமுயற்சி செய்து இரண்டாம் ஆண்டாக இக்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.தமுஎகச பின்னணியில் நிற்கிறது.கூட்டத்தில் பேசிய நண்பர் ஒருவர் தன்னுடைய ஊரான பெருமாநல்லூரிலும் இதுபோன்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்போவதாகக் குறிப்பிட்டார்.இதுபோன்ற சிறிய ஊர்களில் மக்களைப் புத்தகங்களை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் பரவலாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.இன்னும் ஆயிரமாயிரம் ஊர்கள் காத்திருக்கின்றன.எல்லாச் சிறிய ஊர்களிலும் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகமாகியுள்ள பின்னணியில் அவற்றை நம்முடைய புத்தகக் கண்காட்சிகள் ஊடறுக்கும்படியாகச் செய்ய வேண்டும்.இரும்புக்கோட்டைகளையும் புத்தகம் என்னும் ஆயுதம் கொண்டு அறுக்க முடியும்தானே.புத்தகக் காற்றைச் சுவாசிக்க மறுப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.தொழிற்சங்கம் கட்டியெழுப்ப வாய்ப்பில்லாத இதுபோன்ற இடங்களில் நாம் பணி செய்ய மிகப்பெரிய வாசல்களைப் புத்தகங்கள் திறந்து தரும் அல்லவா?இந்தக்கோணத்தில் யோசித்தால் இன்னும் நூற்றுக்கணக்கான புத்தத்திருவிழாக்களை நாம் நடத்துவோம் என்று படுகிறது.

பாலக்காட்டிலும்,அடுத்த வாரம் ஏலகிரி மலையிலும் இன்சூரன்ஸ் ஊழியர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மதவெறிக்கு எதிராக நம் பண்பாட்டின் சாரமாக இருக்கும் பன்மைத்துவத்தை எப்படி ஓர் போர்ப் பதாகையாக உயர்த்த முடியும் என்பதுகுறித்து விவாதித்தோம்.வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நம்முடைய முழக்கத்தில் ‘ஒற்றுமை’ க்குக் கொடுத்த அழுத்தத்தின் அளவு அதிமாகிவிட்டது. வேற்றுமையின் வண்ணங்களும் வடிவங்களும் எண்ணிறந்தவையாக இருக்கின்றன.ஒரு பண்பாட்டு மெகா கூட்டணிக்கான வாய்ப்பை இப்பன்மைத்துவம் நமக்கு வழங்கிக்கொண்டிருப்பதை நாம் இன்னும் சரிவரக் கவனிக்கவுமில்லை. உள்வாங்கி ஆலோசிக்கவுமில்லை.இவ்விரு ஊழியர் கூட்டங்களிலும் தோழர்களின் ஈடுபாடும் அக்கறையும் அவர்கள் எழுப்பிய எண்ணற்ற கேள்விகளும் எனக்கு மன நிறைவளித்தது.மூத்தோர் சபைகளாக இவை இரண்டும் இருந்தது கவலையையும் அச்சத்தையும், லேசான மனப்பதட்டத்தையும் எனக்கு ஏற்படுத்தியது.

இயக்கத்துக்கு வயதாகும் இப்பிரச்னையை (சராசரி வயதைச் சொல்கிறேன்) உணர்ந்து நாங்கள் தமுஎகசவில் இளம் படைப்பாளிகளுக்கான படைப்பூக்கப் பயிலரங்கு ஒன்றைக் கோவையில் நடத்தினோம்.35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும் என கறாராக நின்றோம்.இரு மாவட்டங்களிலிருந்து மட்டும் (எங்க மாவட்டத்திலே இளைஞர்களே இல்லையே தோழர்) முதியவர்களை அனுப்பியிருந்தார்கள்.மற்ற எல்லா மாவட்டங்களிலிருந்தும் முற்றிலும் இளைஞர்களே வந்திருந்தது முகாமை உயிர்த்துடிப்புடன் நடத்த உதவியது.மூத்த படைப்பாளி பிரபஞ்சனும் கூட்டத்தில் இளைஞராகி விட்டார்.

சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நாங்கள் செய்து வரும் பல கல்வி முயற்சிகளில் ஒன்று கதைப்புத்தகங்களை ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு வழங்கி வகுப்பறையில் ஒரு பகுதியாகக் கதை வாசிப்பை இணைப்பது. வயதுக்கேற்ப வேறு வேறு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 9,10,11 வகுப்புக் குழந்தைகளுக்கான கதைப்புத்தகத்தைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ‘பக்கத்தில் வந்த அப்பா’ என்கிற அப்புத்தகத்தை எப்படி வகுப்பறையில் எடுத்துச் செல்வது என்பது குறித்துத் தமிழாசிரியர்களுடன் ஒருநாள் கலந்துரையாடல் நடந்தது. மற்ற பள்ளித் தமிழாசிரியர்களோடு ஒப்பிடுகையில் எஸ்.ஆர்.வி.பள்ளித் தமிழாசிரியர்கள் எப்போதும் எனக்கு நம்பிக்கை அளிப்பவர்கள். தெரியாததைத் தெரியாது என ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. எதையும் கேட்கிற திறந்த செவிகள் அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. பண்டிதத்தனம் இல்லாத பழகு தமிழ் அவர்கள் வாயில் நடமாடுகிறது –இன்னும் கொஞ்சம் பழைய வாடை மிச்ச சொச்சமாக நீடித்தாலும் கூட.

‘இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ளவும்’ அவற்றின் இயக்கங்களையும் பயணங்களையும் உட்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் எண்ணற்ற கருவிகளையும் எந்திரங்களையும் சூத்திரங்களையும் விதிகளையும் அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது.மூளை உள்ளிட்ட மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் கூட ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன.குணப்படுத்த பல்லாயிரம் மருந்துகள் மாத்திரைகள் உள்ளன.ஆனால்,மனித மனதில் நிகழும் அசைவுகள்,துளிர்க்கும் அன்பு,பற்றி எரியும் வெறுப்பு, மூளும் பகையுணர்ச்சி,துரோகத்தின் கருநிழல்,தியாகத்தின் பசுமை என மனங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றின் வழி மானுட உறவுகளைப் புரிந்துகொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே விஞ்ஞானம்,ஒரே கருவி- கலை,இலக்கியம் மட்டுமே.அதிலும் குறிப்பாக எல்லா வடிவங்களுக் கூடாகவும் சாரமாக இருப்பது கதை.கதை மட்டுமே.ஆகவே நம்முடைய வகுப்பறையில் இக்கதைகளைக் குழந்தைகள் விரும்பி வாசிப்பதுதான் முக்கியம்.இக்கதைகளிலிருந்து கிடைக்கும் நீதி என்ன என்கிற இடத்துக்கு நாம் போகக்கூடாது.குழந்தைகளின் கதை வாசிப்பு என்னும் படகுப்பயணம் கதை நதியின் ஓட்டத்தோடு செல்லட்டும். தேவைப்படும் தருணங்களில் மட்டும் ஆசிரியரின் தலையீடு ஒரு சிறு துடுப்பசைவு போல இருந்தால் போதும்’ என நான் சொன்னதை எஸ்.ஆர்.வி.ஆசிரியர்கள் ஆமோதித்தது நிறைவளித்தது.

1.மகாமசானம் – புதுமைப்பித்தன், 2.பக்கத்தில் வந்த அப்பா – சுந்தரராமசாமி, 3.நாற்காலி – கி.ராஜநாராயணன் 4.எழுத இருக்கும் கதை – பிரபஞ்சன், 5.பலாப்பழம் – வண்ணநிலவன், 6.முழுக்கைச் சட்டைக்காரரும் கதிரேசன் என்ற மனிதரும் – வண்ணதாசன். 7.பூமாலை – ஆர்.சூடாமணி, 8.தீர்வு – திலீப்குமார், 9.ஜெயமோகன் – சோற்றுக் கணக்கு, 10.பரிவானது வீடு – எஸ்.ராமகிருஷ்ணன், 11.நறுமணம் – இமையம், 12.வனம்மாள் – அழகிய பெரியவன், 13.கருப்பசாமியின் அய்யா – ச.தமிழ்ச்செல்வன் ஆகிய கதைகளை இந்த ஆண்டு மாணவர்கள் வாசிக்கிறார்கள்.தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்வு செய்வது ரொம்ப கடினமான பணியாகும்.ஏனெனில் எதை விட எதை எடுக்க எனக் குழம்பும் அளவுக்கு அத்தனை அற்புதமான – செறிவான-கதைகள் கொட்டிக்கிடக்கும் கதைவனமாக அது இருக்கிறது.

சிவகாசியில் கட்சி ஊழியர்களுக்கு வாரந்தோறும் தத்துவ வகுப்பு நடைபெற்று வருகிறது.பெரும்பாலும் உழைப்பாளித்தோழர்கள் பங்கெடுக்கிறார்கள்.மார்க்சிய தத்துவத்தை இருபது பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்தை மட்டும் ஒரு மாலைப்பொழுதில் பாடமாக நடத்தினேன்.எழுத்தறிவும் வாசிப்பனுபவமும் குறைவாக இருக்கும் தோழர்களிடம் மார்க்சிய தத்துவம் பேசுவது மிகப்பெரிய சவால்தான்.பொருள் என்பது என்ன? திடம்,திரவம்,வாயு ஆகிய மூன்று நிலைகளில் உள்ள பொருளை எவ்விதம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.பொருள் முதல் வாதம் என்றால் என்ன? என்பதை எளிய கதைகள்,உதாரணங்கள் மூலம் சிரிக்கச் சிரிக்கப் (!) பேசிவிட்டு வந்தேன்.என்னையறியாமல் ஒருவிதக் குற்ற உணர்ச்சியும் வகுப்பு முடிந்தபிறகு கூடவே பைக்கில் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. புரியும்படியாக எளிமையாக இருந்தது எனத் தோழர்கள் சொன்னாலும் 40 ஆண்டுகாலப் பாரம்பரிய உணர்ச்சி என்னை ஆட்கொண்டு சீரிய்ஸாப் பேசவேண்டியதை எல்லாம் இப்படி நீ செய்யலாமா என்று உறுத்திக்கொண்டிருந்தது.

வட சென்னை மாதவரத்தில் தமுஎகச கிளை நிகழ்ச்சியில் நமக்கான பண்பாட்டுப்பாதை குறித்த கருத்தரங்கு.எதிர்பாராமல் அப்பகுதியில் வாழ்கிற எழுத்தாளர்கள் தமிழ் மணவாளனும் யாழினி முனுசாமியும் பங்கேற்றது மகிழ்ச்சி தந்தது.உள்ளூர்க் கலை முயற்சிகளுக்கு இடமளித்து ஓவியம்,புகைப்படக்காட்சி குழந்தைகளின் நடனம் என அந்நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பகுதியில் வாழும் எழுத்தாளர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருந்தார்கள்.ஒரு சிறிய கிளையில் இப்படித்தான் நடக்க வேண்டும்.

இளந்தமிழகம் அமைப்பினரின் புதிய முயற்சியான கதையாடிகள் நிகழ்வில் தமிழ்ச்சிறுகதையின் வரலாறு குறித்து காட்சிப்படிமங்களுடன் (பவர் பாயிண்ட் ப்ரசண்ட்டேசனைத்தான் இப்படிச் சொல்கிறேன்) பேச ஒரு வாய்ப்புக்கிடைத்தது.அரசியல்ரீதியாக முதிர்ச்சியும் செயலூக்கமும் மிக்க தோழர்கள் பல்வேறு அமைப்புகளில் இலக்கிய வாசிப்பிலும் கலை ஈடுபாட்டிலும் கவனமின்றி இருப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.இது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் முழுமையான வளர்ச்சிக்கு உதவாது.அரைகுறை மனிதராக-அரைகுறை இயக்கமாகவே அவர்கள் வளர்வார்கள்.நெடும்பயணத்துக்கு இடையிலும் தோழர் மாவோ யேனான் எழுத்தாளர் மாநாட்டுக்குப் போனதும், கவிதை எழுதியதும், லெனினும் காஸ்ட்ரோவும் படைப்பாளிகளோடு துடியான உறவைப் பேணியதும், இடை விடாமல் இலக்கியம் வாசித்ததும் ஹோசிமின் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டியதும், சாவேஸ் ஒபாமாவுக்கு ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட நாளங்கள் நாவலைப் பரிசளித்ததும்’ இலக்கியவாதியாகவே வாழ்ந்த தோழர் ஜீவாவின் செயல்பாடுகளும் என இலக்கிய ஈடுபாடு கொண்ட புரட்சியாளர்களின் முன்னுதாரணங்கள் நூறு நூறு இருந்தபோதும் ஒரு நாவல்,கதை கூட வாசிக்காமல் நாற்பதாண்டு இயக்க வாழ்வை வாழ்ந்து முடித்த தோழர்களைப் பார்க்க நேர்கையில் தலைக்குள் ஆழிப்பேரலையே மோதித் தள்ளுவது போல் ஆகிவிடுகிறது.இளந்தமிழகம் இள வயதிலேயே ஒரு இயக்கமாகவே இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்துவிட்டது ஆறுதலளிக்கிறது.

அப்புறம் இரண்டு புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஒன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இரு நூல்கள் வெளியீட்டு விழா.காற்று வளையம் என்கிற நாவலும் முயல்தோப்பு என்கிற அவரது சிறுகதைத்தொகுப்பும் வெளியிடப்பட்டன.அளவான கூட்டம்.அருமையான உரைகள் என நகர்ந்தது.நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் தீபலட்சுமியும் ஜோதிமணியும் பேசினோம்.திருமணத்துக்கு முந்தைய பாலுறவு குறித்து விவாதிக்கும் காற்று வளையம் நாவல் பெரிதாக மனதைத் தொடவில்லை.ஆனால் பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் வழக்கம்போல அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின.உலகமயக்காலத்தில் நம் வாழ்வில் தேய்ந்து வரும் பண்பாட்டு மதிப்பீடுகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவராக பாஸ்கர் சக்தி இருக்கிறார்.இத்தொகுப்பிலுள்ள 11 கதைகளும் அதன் சாட்சியாக நிற்கின்றன.நிறைய எழுதி சிறுகதையில் சவால்களை எதிர்கொள்வதுபற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.95க்குப் பிறகு 15 தொகுப்புகள் வெளியிட்டு விட்ட ராமகிருஷ்ணனும் 5 தொகுப்புகள் வெளியிட்டுள்ள பாஸ்கர்சக்தியும் பேசிக்கொண்டிருந்தபோது 1978இலிருந்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ள நான் நடுவில் அமர்ந்திருந்தேன்.

இம்மாத நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக பாரதி புத்தகாலயத்தின் குஜராத் கோப்புக்கள் நூல் வெளியீட்டு விழாவும் அதன் ஆசிரியர் ரானா அயூப் அவர்களின் உணர்ச்சிகரமான உரையும் அமைந்தது.மோடி/அமித்ஷாவின் ஆட்டங்கள் தேசிய அளவில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் அவ்வாட்டங்களுக்கு ஆப்பு வைக்கும் இப்புத்தகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.ஒரு துப்பறியும் நாவலைப்போல விறுவிறுப்பாகச் செல்லும் இந்நூல் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்கும் ஒவ்வொரு ஊழியரும் வாசித்தாக வேண்டிய நூல் என்பேன்.

இப்படி ஓட்டமும் சாட்டமுமாகக் கழிந்த இந்த மாதத்தை உறைய வைத்தது அன்புத்தம்பி கவிஞர் நா.முத்துக்குமாரின் எதிர்பாரா மரணம்.அதற்கு அப்புறம் ஒன்றும் ஓடவில்லை.மனமே ஸ்தம்பித்து நிற்கிறது.இத்தனை பிரியத்தை எல்லோர் மீதும் மழையெனப் பொழிந்த முத்துக்குமாரின் மரணம் நம்ப முடியாததாக எதிரில் நிற்கிறது.
(தொடரும்)

Related posts

Leave a Comment