You are here

வரலாற்றில் பரிசோதனை செய்தவரின் வரலாறு

– என்.குணசேகரன்

“லெனின் மறுகட்டமைத்தல்:அறிவாற்றல் சார்ந்த ஒரு வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பைக் கொண்ட நூலினை .ஹங்கேரியைச் சார்ந்த லெனினிய ஆய்வாளர் தாமஸ் கிராஷ் எழுதியுள்ளார்.(“Reconstructing Lenin:an Intellectual biography” -Tamas Krausz)
“மறு கட்டமைத்தல்” என்கிற சொற்பிரயோகம் லெனினது மூல சிந்தனையை திரிக்கும் முயற்சியாக இருக்குமோ என்று முதலில் ஐயப்பட வைக்கிறது.ஆனால் நூலை வாசிக்கும் போது, நூலாசிரியர் லெனினியத்தை உருக்குலைத்திடாமல் விளக்கிட எடுத்துள்ள பெருமுயற்சியை உணர முடிகின்றது.

நூலாசிரியர் புரட்சிகர தத்துவ வரலாற்றை விளக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற தத்துவ விவாதங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்திடவும் இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்திப் பார்க்கவும் இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது.

எனவே, இது வழக்கமான தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல.லெனினிய கருத்தாக்கங்களின் வரலாறு என்று கூறலாம். “யார் லெனின்?” என்ற முதல் அத்த்தியாயத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மாபெரும் தலைவராக லெனின் உயர்ந்த வரலாறு மிக நுண்ணிய அம்சங்களுடன் விளக்கப்படுகிறது. ஏற்கெனவே வெளிவந்த விவரங்களைத் தாண்டி பரந்த ஆராய்ச்சி விவரங்களுடன் ஆசிரியர் உரையாடுகிறார்.

இதோடு வாழ்க்கை வரலாறு முடிவடைந்துவிடுகிறது.அடுத்து வருகிற நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் லெனினிய கருத்தாக்கங்களின் வரலாற்றை விளக்குகின்றன.

அரசு பற்றிய லெனினின் விவாதம்
ரஷிய அரசை வீழ்த்தி புரட்சி முன்னேறிட, ரஷிய அரசு பற்றிய துல்லியமான நிர்ணயிப்பு தேவைப்பட்டது. ரஷிய அரசின் தன்மை பற்றிய விவாதம் தீவிரமாக நடந்தது,இந்த விவாதத்தை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார்.லெனின் இந்த விவாதத்தில் முக்கிய பங்காற்றியதையும்,பிளக்கனவ் போன்ற மார்க்சியர்களோடு வாதப் போரில் ஈடுபட்டதையும் அவர் விளக்குகிறார்.

நூலாசிரியர் முக்கிய கருத்து வேறுபாடுகளை இவ்வாறு தொகுக்கிறார்.

“ரஷிய மார்க்சியர்களுக்கும், தாராளவாத அணுகுமுறைகளுக்கும் இடையே இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருந்தன. ரஷிய அரசு பற்றிய வரலாற்று ஆய்வில் வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாட்டை மார்க்சியர்கள் பொருத்தி ஆய்வு செய்தனர். இவ்வாறு ஆராய்கிற போது, பொதுவாக, ரஷிய அரசு என்று எடுத்துக் கொள்ளாமல், அது கடந்த காலங்களில் எந்த வடிவங்களில் எத்தகைய வர்க்கத் தன்மையுடன் இருந்தது என்பதையும் சேர்த்து ஆராய்ந்தனர். இரண்டாவதாக, மார்க்சியர்கள் ரஷிய அரசு பற்றிய ஆய்வினை ,ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் தனித்தன்மைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருளாதார அம்சங்களோடு இணைத்து ஆராய்ந்தனர்.போல்ஷ்விக்களும் மென்ஷ்விக்களும் அவரவர் அரசியல் திட்டங்களையொட்டி ரஷிய வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கிட முயற்சித்தனர்.”

ஒவ்வொரு நாட்டின் அரசு பற்றிய வரையறை, புரட்சி இலட்சியத்திற்கு அவசியம்.அரசு பற்றிய விவாதம் இதற்கு வழிகாட்டுகிறது. முன்வைக்கப்பட்ட வாதங்களை நூலாசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ளார்.

முதலாளித்துவ அமைப்பு பற்றிய விவாதமும் முக்கியமானது.ஜெர்மானிய மார்க்சியரான ரோசா லக்சம்பர்க் எழுதிய “மூலதனக் குவியல்” கடும் சர்ச்சைக்கு உள்ளானது.அந்நூல் குறித்த தனது கருத்துக்களை 1913-ஆம் ஆண்டு லெனின் வெளியிட்டார்.

பல்வேறு உள்நெருக்கடிகளால் முதலாளித்துவம் சிதைந்துபோகும் என்ற ரோசா லக்சம்பர்கின் கருத்தை லெனின் ஏற்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள்,பல்வேறு வளர்ச்சி வடிவங்கள் பிரத்தியேகமான நிலைமைகள் உள்ளன என்பதையும்,அவற்றை ஆராய வேண்டுமெனவும் லெனின் வலியுறுத்தினார்.ரஷியவிற்கென்று பிரத்தியேகமான முதலாளித்துவ வளர்ச்சி இருப்பதை ஆழமாக கண்டறிந்தார் லெனின்.இதனை “ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சி” என்ற தனது நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலக ஏகாதிபத்தியத்தின் பலகீனமான கண்ணியாக ரஷியா விளங்குவதையும், புரட்சிக்கு ரஷியா சாதகமாக இருப்பதையும்,தொழிலாளி-விவசாய வர்க்கக் கூட்டணி அமைத்து அதிகார மாற்றத்தை சாதிக்க வேண்டுமென்ற கருத்துக்கு லெனின் வந்தார்.

புரட்சி அரசியல் கலை
“மாற்று” “மாற்று அரசியல்” “முதலாளித்துவதிற்கு மாற்று” என்றெல்லாம் பேசப்படும் இன்றைய சூழலில், லெனினது அணுகுமுறை பற்றி நூலாசிரியர் தரும் விளக்கம் முக்கியமானது.

எதிர்படும் பல்வேறு மாற்றுக்களில் ஒரு வழியைக் கண்டறிந்து அங்கீகரிப்பது என்பதுதான், புரட்சி அரசியல் கலையில் அடங்கியுள்ள முக்கிய அம்சமாக ஆசிரியர் கூறுகிறார்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வழி, பாட்டாளி வர்க்க விடுதலை நோக்கிலான தீவிர,புரட்சி நடவடிக்கையாக இல்லாமல் போகலாம்;துவக்க நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் எது சாத்தியமான வழி என்பதிலிருந்து கூட நிச்சயிக்கப்படலாம்.

ஆனால். லெனினிய சிந்தனையில் மாற்று எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறது?
முதலில் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதனை தீர்மானிக்க,அடிப்படை என்ன? குறிப்பிட்ட சூழல்தான் என்பது லெனினியம்.

குறிப்பிட்ட சூழல் எனும் போது வரலாற்று சூழல் முக்கியமானது.

அன்று நிலவும் அரசியல் சக்திகளுக்கிடையிலான உறவுகள்,
ஒவ்வொரு வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கு,
மாற்றத்திற்கான இலக்கு மற்றும் திசைவழி,
தொழிலாளி வர்க்கத்தின் நீடிக்கக்கூடிய கூட்டாளிகளை அணிதிரட்டுவதற்கான தொலைநோக்கு உத்தி
இந்த அம்சங்கள் அனைத்தையும் ஆராய்ந்து, செயலுக்கான வியூகம் அமைக்க லெனினியம் கற்றுத் தருகிறது.அதுவே உண்மையான மாற்றத்தை நிகழ்த்தும்.

இன்றைய உலகில் செயல்படும் பல புரட்சிகர இயக்கங்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கேற்ப புரட்சிகர உத்திகளையும்,நடைமுறைத் திட்டங்களையும் உருவாக்குவதில் தடுமாறுகின்றன. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து, உரிய உத்திகளை உருவாக்க முடியவில்லை என்றால் தோல்வியே தொடர்கதையாகிடும்.

புரட்சிகர உத்திகளே லெனினது வாழ்க்கையாக இருந்தது.ரஷியப் புரட்சி,சோஷலிச நிர்மாணம் ,புரட்சிக் கட்சி அமைப்பு,உலக ஏகாதிபத்தியத்தின் இயங்கு தன்மை என பல பரப்புக்களில் அவரது சிந்தனையும் அவர் நடத்திய கருத்துப்போர்களும் அமைந்தன.இவை அனைத்தும் நூலில் விளக்கப்படுவதால்,புரட்சிகர உத்திகள் பற்றிய அறிவை செழுமையாக்கிக் கொள்ள இந்நூல் உதவிடும்.

ரஷியப் புரட்சி என்ற வரலாற்றுப் பரிசோதனை மேற்கொண்ட ஒரு தலைவனைப் பற்றிய நூலை உயர்ந்த தரத்துடன் ஆக்கியுள்ளார்,தாமஸ் கிராஷ்.இன்றும் லெனின் தேவைப்படுகிறார் என்ற உண்மையை மேலும் அழுத்தமாக பதிந்துள்ளார்.

Related posts

Leave a Comment