You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

மொழிதான் ஒரு சமூகத்தின் ஆழ்மனம்

கேள்விகள்: கு.தமிழ்ப்பாண்டி

போகன் சங்கர்
கோமதி சங்கர் எனும் இயற்பெயருடைய போகன் சங்கர் 1972ம் ஆண்டு பிறந்தவர். 2000ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கிய இவருக்கு கவிதைக்காக ராஜமார்த்தாண்டன் விருது மற்றும் சுஜாதாவிருதும் கிடைத்துள்ளன. எரிவதும் அணைவதும் ஒன்றே, தடித்த கண்ணாடி போட்ட பூனை, நெடுஞ்சாலையில் மேயும் புல் ஆகிய கவிதைத்தொகுப்பும் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்கிற சிறுகதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. இவர் தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறார்.

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் சிறுகதை எழுத எந்த சூழல் அமைந்தது?. கவிதை மொழியிலிருந்து உரைநடைக்கு வரும்போது உங்களது கவிதைக்கான மொழியிலிருந்து விலகுவதை உணர்கீறீர்களா?.

நான் கவிதை, கதை என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. எல்லாம் நான்தான்.எனக்கு புனைவுக்குச் செல்ல வேண்டுமென்கிற விழைவு முன்பே உண்டு. பெரும்பாலும் என் கவிதை மொழியும் கதை மொழியும் வேறு. ஏனெனில் இரண்டும் வேறு வேறு ஆட்கள் செய்கிற விஷயங்கள். கவிதையில் என் பேனா மேசையை விட்டு இறங்கிவிடுகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைக் கோட்டுப் பகுதியிலிருப்பதால் உங்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான மொழிகள் எழுதுவதற்கு கிடைக்கிறது. தமிழின் புராதனமான மொழி கிடங்கும், அதேசமயம் மலையாளத்தின் பழந்தமிழ் கலந்த சொல்லாடல்களும் உங்களது உரைநடைக்கு எவ்வாறு உதவுகிறது?.

ஒவ்வொருவருக்கும் ஒரு திணை உண்டு என்று நான் நம்புகிறேன். என் திணை குறிஞ்சி என்று இங்கு வந்ததும் நான் கண்டுகொண்டேன். இந்த நிலம் என்னைக் கிளர்த்துவது போல வேறெதுவும் என்னைக் கிளர்த்தியதில்லை. இந்த நிலத்தின் மொழியை தான் நமது பழந்தமிழகத்தின் தொல்மனதுக்கு உரிய சாவியாக நான் நினைக்கிறேன். அல்தூசர் தானே கூறியதோ அல்லது வேறு எவரோ கூறியதாக சொன்னதோ “மொழிதான் ஒரு சமூகத்தின் ஆழ்மனம்”. நான் தமிழின் ஆழ்மனது கேரளத்தில் உயிரோடு இருப்பதாக நினைக்கிறேன்.

“கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் ஜெயமோகன் பாணியிலேயே இருக்கின்றன, குறிப்பாக பூ, பாஸிங் ஷோ, ஆடியில் கரைந்த மனிதன் ஆகிய கதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இதைப் பற்றிய விமர்சனங்களை பலரும் எழுதுகிறார்கள். இந்த விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்?.

பூ கதை ஜெயமோகன் பாணி என்று முன்பே என்னால் சொல்லப்பட்டு, அவரது தளத்திலேயே வெளியானது. பாசிங் ஷோ கதை அவர் மொழி அல்ல. ஆடியில் கரைந்த மனிதன் யார் மொழிக்காவது நெருக்கமாக இருக்கிறதெனில், கோபி கிருஷ்ணனுக்கும் எம். வி. வெங்கட்ராமுக்கும்தான். ஜெயமோகன் முதலில் எழுத வந்தபோது அவர் மொழியில் சுந்தரராமசாமியின் நடையின் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். ஐசக் பாசேவிஸ் சிங்கர் தனது மொழியில் அவரது அண்ணனின் மொழிப்பாதிப்பு உள்ளதாகச் சொல்வார். அவர் அண்ணனும் ஒரு எழுத்தாளர். இப்படி எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அண்ணன் எழுத்தாளர் இருப்பார்.

கவிதை, சிறுகதை தவிர்த்து முகநூலில் அதிகமான பதிவுகளை செய்கிறீர்கள். முகநூல் பதிவை சமூகப் பொறுப்பிற்காகவும், பொழுதுப் போக்கிற்கும் பயன்படுத்தும் சூழலில் உங்களது பதிவுக்கான எதிர்வினை எவ்வாறு இருக்கிறது?. ஊடகங்கள், இணையம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவை தீவிர வாசகத் தரப்பைக் குறைக்கின்றது என்று நினைக்கின்றீர்களா?

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நவீன ஊடகங்கள் இனி நம்முடன்தான் இருக்கப்போகின்றன. நமது மொழியை, இசையை, எல்லாவற்றையும் இவை பாதிக்கும். ஆதிக்கம் செலுத்தும். இவற்றோடுதான் நாம் வாழவேண்டும். படிக்கவேண்டும். எழுதவேண்டும்.

சமீபகாலமாகவே சிறுகதைகள் என்பவை ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, பத்து செகண்ட் கதை என்று சுருங்கியும், சுவாரஸ்யம் இல்லாமல் போவதற்கான காரணம் சிறுகதைகளின் தேக்க நிலை என்று கருதுகிறீர்களா? சிறுகதைகளுக்கென்று ஏதாவது அளவுகோல்கள் இருக்கின்றதா?

இல்லை. சிறுகதைகள் நூறு பக்கங்களுக்கு இருக்கலாம். ஒரு பக்கத்தில் முடித்துவிடலாம். எழுதுகிறவனின் அக விரிவுதான் முக்கியம்
தீவிர வாசிப்புத் தளத்திலிருப்பவர்கள் நீங்கள். தாங்களும் எழுதிப்பார்க்கலாம் என்ற எண்ணம் வரக் காரணம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

எல்லோரும் எழுதிக் பார்க்கலாம். எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அந்த எண்ணத்தைத் தவறென்று சொல்லமுடியாது.

சமீபகாலமாகவே எழுத்தாளர்கள்மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள், தாக்குதல்கள் எழுத்தைப் புரிந்துகொள்ள முடியாத கோபமா? சுயநலமா? அரசியலா?. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு வரவேற்கத்தக்க தீர்ப்பைப் பற்றி உங்களது கருத்து?

முன்பே இந்த விவாதத்தில் ஓரிடத்தில் நான் சொன்னதே .நம்முடைய பொதுத்தளமும் அறிவுத்தளமும் இத்தனை காலமாக சந்திக்காமலே இருந்து வந்தன. ஊடகப் பெருக்கத்தால் அவை சந்திக்கும் பொழுதெல்லாம் இதுபோன்ற அதிர்ச்சிகளை அவர்கள் அடைந்து மிகையாக வினையாற்றுவார்கள். நாம் இரண்டு வெவ்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் இருப்பது போன்ற நிலை. சற்று காலம் பிடிக்கும் அறிவுலகைப் பற்றிய ஒவ்வாமை நீங்க. அதுவரை நமது பிரதிநிதியாக நீதிமன்றங்களைத்தான் நாடவேண்டியிருக்கும்.

உங்களைப்பற்றி?. முதல் சிறுகதை தொகுப்பு வந்திருக்கின்றது, பிரசுரமான உங்களது முதல் சிறுகதை அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ளமுடியுமா?

முதல் கதையை வம்சி பிரசுர சிறுகதைப் போட்டி ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக வந்தது. அப்போது அவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்ததுதான் அதிக மகிழ்வாக இருந்தது.

தற்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் உங்களைப் பாதித்தவர்களையும், மூத்த படைப்பாளிகளில் உங்களைப் பாதித்தவர்களையும் சொல்லமுடியுமா?.

கோபி கிருஷ்ணன், ஆ. மாதவன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்கள் எனக்குப் பிடித்தவர்கள். தற்போதைய எழுத்தாளர்களில் என்.ஸ்ரீராமும், சபரிநாதனும் எனக்குப் பிடித்தவர்கள்.

கவிதை, சிறுகதை…. அடுத்து நாவலா? என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?
ஒரு குறுநாவல்

Related posts

Leave a Comment