You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

அப்பாவின் பாஸ்வேர்ட்

கேள்விகள்: விநாயகமுருகன்

ஆத்மார்த்தி

1977ம் ஆண்டு மதுரையில் பிறந்த ரவி, ஆத்மார்த்தி என்கிற பெயரில் 2009ம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கினார். 2011ம் ஆண்டில் தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் என்கிற கவிதைத்தொகுப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து மனக்குகை சித்திரம், அதனினும் இனிது, பூர்வ நிலப்பறவை ஆகிய கட்டுரைத்தொகுப்புகளும் சேராக்காதலை சேர வந்தவன், ஆடாத நடனம், அப்பாவின் பாஸ்வேர்டு ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும் 108 காதல் கவிதைகள், நட்பாட்டம், கனவின் உபநடிகன், விளையாடற்காலம் ஆகிய கவிதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பத்திரிகையில் எழுதி வரும் இவர், சினிமாவுக்கான திரைக்கதை, வசனம் எழுதுதல் என முயற்சித்து வருகிறார்.

உங்கள் சிறுகதைகளின் மொழிநடையில் பெரும்பாலும் சுஜாதாவின் பாணி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது எதேச்சையாகஅமைந்துவிட்டதா? அல்லது சுஜாதாவின் தாக்கம் உங்களுக்குள் இருக்கிறதா?

ஏழு வயதிலிருந்தே புத்தக வாசிப்பைச் செய்து வருகிறேன். என்னை மிகவும் வசீகரித்த எழுத்தாளர்களில் சுஜாதா முதன்மையானவர்.எனது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளில் சுஜாதாவின் தாக்கம் இருப்பதாகப் பலரும் குறிப்பிடுவது உண்டு.சுஜாதாவின் கச்சிதத்தையும் கதை முடிவிலொரு துல்லிய அதிர்ச்சியையும் நானும் முயல்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதைக் குறையாகக் கருதவில்லை. எழுதுகிற எல்லாருக்குமே முன்பிருந்த யாராவது எழுத்தின் உயிர்த்திரவத்தை அளித்தாக வேண்டும் என்பதை நியதி என்கிறேன்.

உங்கள் சிறுகதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களோ அல்லது அவர்கள் சமூகம் சார்ந்த புறச்சிக்கல்களோ ஆழமாக சித்தரிக்கப்படுவதில்லை. அதனாலேயே அந்த கதைகள் வெகுஜனத் தளத்தை நோக்கி நகர்வதாக விமர்சனங்கள் உண்டு. வெகுஜன எழுத்துக்கும், இலக்கிய எழுத்துக்குமான வித்தியாசத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

புறச்சிக்கல்கள் ஆழமாக சித்தரிக்கப்படுவதில்லை என்பதை முழுவதுமாக ஏற்பதற்கில்லை.ஆழமும் நீட்சியும் அந்தந்தக் கதைக்கான தேவையைப் பொறுத்தே அமைகின்றன. உளவியல் சிக்கல்களை, தனிமையை, உலகமயமாக்கலுக்கு முன்னும் பின்னுமாக தமிழ்ச்சமூகம் அடைந்து கொண்டிருக்கக் கூடிய சிதைவுகளை, வாழ்வில் சட்டென்று நிகழ்ந்து விடக் கூடிய அபத்தங்களை, முன்பில்லாத நிலையாமையை எல்லாமும் உளவியல் பூர்வமாக என் பல கதைகளில் கையாண்டிருக்கிறேன்.தேவதை மகன், நீலயானி ஈரக்காற்று, இரண்டு கனவு மூன்று காதல், ஒயிலா எனப் பல கதைகள் உண்டு.

வெகுஜனங்களின் வாசிப்பு என்பது இலக்கிய எழுத்துக்கு எதிரான வகைப்பாடு என்பதை முற்றிலுமாகத் தகர்க்க விரும்புகிறேன். போர்ஹேயும் டால்ஸ்டாயும் இலக்கியத்தை எழுதவில்லையா அல்லது அதிகப் பேர் வாசித்ததால் அவர்களது எழுத்துகள் அந்த அந்தஸ்தை இழந்தனவா..? பிரபஞ்சனுடைய எழுத்துகளை நான் தினமணிக் கதிர் தொடங்கி குங்குமம் வரை வாசித்திருக்கிறேன்.அவர் படைக்காத இலக்கியமா..?இலக்கியம் என்றாலே குறைந்த பிரதிகள் விற்பனையாகவேண்டும் என்பதென்ன ஆகமமா..?இன்றைக்கு எழுதப்படுவதன் காலம் எத்தனை ஆண்டுகள் என்பதை யாரால் தீர்மானிக்க முடியும்..?எது இலக்கியம் என்பது மிகவும் பழசாகிப் போன கேள்வி.அதனை வாசகர்களிடமும் காலத்திடமும் விட்டுவிடுவதே நல்லது.

உங்கள் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மத்தியவர்க்கம் அல்லது உயர்மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை, அவர்களின் சமூகத்தை எப்படி பார்க்கின்றீர்கள்?

வெறும் விளிம்புநிலை என்று ஒன்று இருக்கிறதா என்ன.?மாயச்சுவர்களுக்கு வெளியே நிறுத்தப்படுகிறவர்களாகத்தான் விளிம்புநிலை மனிதர்களைக் கருத முடியும். எனது சில சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்களைக் கதைப்படுத்தி இருக்கிறேன். உண்மையில் எந்த வர்க்கத்தில் இருக்கிறோமோ அதனையே ஒரு வாதையாகக் கருதுவதே மனித மனோபாவமாகிறது. பெரும் பணக்காரர்களுக்குக் கவலை இல்லாமல் இருக்குமா என்ன..? தொடர்ந்து அப்படி ஒரு விளிம்பு நிலையும் அதனுள் மனிதர்களும் இருந்தாக வேண்டும் என்பது ஆட்சியாளர்கள் மற்றும் பெருந்தனவந்தர்கள் ஆகியோரின் விருப்பமோ என்கிற ஐயம் எனக்கு உண்டு. ஊழல் என்னும் சொல் தராத அதிர்ச்சியைத் தான் நாளும் திருட்டு என்னும் சொல் தந்து கொண்டிருக்கிறது. திருட்டை நியாயப் படுத்தவில்லை.ஆனால் ஊழல் எனும் சொல் ஏற்படுத்தக் கூடிய அதிர்ச்சி பெரிதாக அல்லவா இருக்க வேண்டும்.? அப்படியா இருக்கிறது?

உங்கள் பெரும்பாலான கதைகளின் ஆரம்பம் புதுமையாக இருந்தாலும் அதன் மையத்தை தாண்டிச்செல்லும்போது அந்தக் கதைகளை சாதாரணமாகவோ அல்லது வெகுஜனரசனைக்கு தீனிபோடுவது போலவோ சட்டென்று முடித்துவிடுகின்றீர்கள். உதாரணம் கோமதிராசன் கதை ஒரு மர்மநாவலின் முடிவுபோல முடிந்துவிடுகிறது. கதையின் போக்கை மீறி இப்படி சட்டென்று துண்டித்துவிடுவதை நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள்?

எனது சிறுகதைகள் பெரும்பாலும் இரண்டு வகைமையானவை என்று சொல்லவிரும்புகிறேன்.ஒன்று உறைந்த ஒரு காட்சியை நோக்கிச் செல்லும் கதைகள். உதாரணமாக ஆடாத நடனம், ஒயிலா, நீலயானி.அல்லது ஒரு நிகழ்வில் சட்டென்று பூர்த்தியாகும் தாட்டியம், அப்பாவின் பாஸ்வேர்ட், ஈரக்காற்று போன்ற கதைகள். கதையின் போக்கைச் சட்டென்று துண்டிப்பதாகக் கருதவில்லை. ஒரு சிறந்த சிறுகதை முடிவைக் கண்டவுடன் முடிந்து போகவேண்டும் என்கிறேன்.

மேலும் மர்மக் கதைகள் தீண்டத் தகாதவைகள் அல்ல.அவற்றை சிறுகதை வடிவில் எழுதிப் பார்ப்பதன் உள்ளே இருக்கக் கூடிய சவால் எனக்குப் பிடிக்கும். வெறும் உரையாடல்களில் கதையை நகர்த்திப் போகும் மழை மேன்ஷன், காயத்ரி மற்றும் இரண்டு மைதிலிகள் ஆகிய கதைகளாகட்டும்; தென் அமெரிக்கக் கதையாடலில் விரிந்து முடியும் வியாழன் கதையாகட்டும் என் பெருவாரிக் கதைகளில் மையக் கதையைத் தாண்டி அதனுடனேயே இயைந்து வரக் கூடிய சிறுசிறு உபமுயல்வுகளையும் செய்து பார்க்கிறேன். பலவிதமான கதைகளை எழுதிப் பார்க்கிறேன். எல்லோருக்கும் படிக்கத் தருகிறேன். அவ்வளவுதான்.

உங்கள் கதைகளில் வரும் அரசியல், சமூகப் பிரச்சினைகள் மேலோட்டமாகவே இருக்கின்றன. அதை ஆழமாக தொட்டுச் செல்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உதாரணமாக “அப்பாவின் பாஸ்வேர்ட்” கதையில் வரும் அந்தப் பெண்ணின் கணவர் ஜாதிச்சண்டையில் சாகாமல் வேறு பிரச்சினையில் இறந்து போயிருந்தாலும் கதை அதன் அளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சென்றிருக்கும். தென்மாவட்டங்களில் நடக்கும் ஜாதிச்சண்டை கதையில் வலிய திணிக்கப்பட்ட தகவலாகவே துருத்திக்கொண்டு நிற்கிறதே?

நாம் காதலிக்க நேரமில்லை படத்தைக் கூட ஒரு டைரக்டர் முதற் படமெடுக்க முடியாமற் போன சோகக் கதையாகக் கருத முடியும். ஆனால் அதுவா நிஜம்? என் சிறுகதைகளில் ‘அரசியல் பேசாதீர்’ என்னும் நெடுங்கதை சமகாலத்தில் அரசியல் நாகத்தின் இருமுனைகளிலும் இரக்கமற்ற தலைகள் இருப்பதை வெளிக்கொணர்ந்த படைப்பு. தவிரவும், அப்பாவின் பாஸ்வேர்ட் கதை சாதிக் கலவரத்தில் ஒரு பிரிவின் கையில் சிக்கிக் கொள்ளும் இருவர். அதில் அதே பிரிவைச் சார்ந்த அந்தப் பெண் கொல்லப்படாமல் இன்னொரு வகுப்பைச் சார்ந்த அவளது கணவர் கொல்லப்படுகிறார் என்பது மைய இழை. இங்கே ஊடுபாவாய் இந்த இழையைப் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் மகனை சாதி என்ற விஷத்துக்கு அப்பால் வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்று படிக்க வைக்கிறாள். அந்தப் புதிய நிலம் அவனுக்கு வேறெதைக் கற்பித்து விடும் அபாயம் உண்டெனினும் கூட சாதி என்கிற நாகத்தின் நிழலிடமிருந்து தப்பிச் செல்ல விழைகிறாள் என்பது அந்தக் கதையின் சாராம்சம். இது தொட்டுச் செல்லும் விலகல் அல்ல என்பதே என் கருத்து. மேலும் நான் எழுதுகிற கட்டுரைகளில் வேண்டுமானால் ஒரு பிரச்சினையை விவரித்து விட்டு, அதற்கு என்னவெலாம் தீர்வாக அமையக் கூடும் என இணைத்தெழுத இயலும்.சிறுகதை வடிவத்தில் அது ஆகாது.என் வேலை ஒரு பிரச்சினையைக் கதைப்படுத்துவது. ஆழப் புதைந்திருக்கும் மனமுட்களை நிரடுவதற்கான மொழி முள்ளாய் என் கதைகள் இருக்க முயல்கின்றன.அவ்வளவே.

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் இரண்டில் எந்த அடையாளம் உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது? இரண்டில் எது சவாலாக இருக்கிறது?

பொதுச்சொல்லான எழுத்தாளர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.கவிஞர் என்று அழைக்கப்படுவதில் சின்னதான ஒரு செயற்கைத் தன்மை விஞ்சுவதாக நம்புகிறேன். இது உரைநடையின் காலம். எழுத்தாளர் என்பதில் சின்னதொரு அமைதி கிட்டுகிறது. சிறுகதைகள் எழுதுவதென்பது வடிவம் சார்ந்த வெளிப்படையான இயங்குதளம் சார்ந்தது.அதன் வரவேற்பும் நிராகரிப்பும் புரிந்துகொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. சிறுகதைகள் ஒருபோதும் மௌனத்தின் அயர்ச்சியை உருவாக்குவதில்லை. கவிதை இருளில் மௌனமாய் இயங்கவல்லது. அது சவால் என்பதை விடவும் கடினமானது என்பதே என் கருத்து.

சிறுகதை, கவிதை, கட்டுரைத்தொகுப்பு என்று பன்முகத்தளத்தில் இயங்குகின்றீர்கள். ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்ததும் அடுத்து கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. ஆத்மார்த்தி யாரென்று தீர்மானிக்க இது சிரமமாக இருக்கிறதே.

நான் கதை சொல்லி. இதுவே ஆழ்மனதின் சொற்கள். ஆனால் கவிதைமீதான ப்ரியம் என்பது வேறாக இருக்கிறது. முதல் கவிதைத் தொகுப்பு அவசரப் பிரசவமாக வெளிவந்தது. சுதீர் செந்திலின் ப்ரியம் மட்டுமே அதற்குக் காரணம். அதிலிருந்த கவிதைகள் அல்ல. அடுத்ததாக காதல் கவிதைகளைத் தொகுத்து 108 காதல் கவிதைகள் வெளியானது. அது என் காதல் காலத்தின் ஞாபகம். பிறகு விகடனில் நட்பாட்டம் வந்தது. உண்மையில் சீரிய இலக்கியத்தின் முகாந்திரங்களுக்கு உட்பட்டு என் சமீபத்திய இரண்டு கவிதைத் தொகுதிகளைத் தான் கணக்கில் கொள்ள முடியும். கனவின் உப நடிகன் மற்றும் விளையாடற்காலம் ஆகியவை. இவ்விரண்டும் உண்மையிலேயே எனக்கு ஆத்ம திருப்தியையும் குறிப்பிட்ட வாசக நண்பர்களுக்கு ப்ரியத்தையும் ஏற்படுத்தியவை. எழுதாமல் இருக்க முடியாமற் போகையில் என் கவிதைகள் எழுதப்படுகின்றன. மற்ற படி கதைகள் கட்டுரைகள் என்றே என் விருப்பம் இருக்கின்றது.

உங்களோடு எழுதிக்கொண்டிருக்கும் சமகாலபடைப்பாளிகளை, அவர்களது படைப்புகளை எப்படி பார்க்கின்றீர்கள்? உங்களுக்குப் பிடித்த சமகால எழுத்தாளர்கள் அல்லது நீங்கள் பொறாமைப்படும் படைப்பாளிகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

பாரதியிலிருந்து தொடங்கிப் பழையதோர் பெருங்காலமும் நிறையப் படைப்பாளிகளும் ப்ரியத்துக்குரியவர்கள்.எனக்கு முன்பின் எழுத வந்தவர்கள் என்றெடுத்துக் கொண்டால் யுவன்சந்திரசேகர், கே.என்.செந்தில், ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார், சுகிர்தராணி, விநாயகமுருகன், நேசமித்ரன், லக்ஷ்மி சரவணக்குமார், ஈழவாணி, கணேசகுமாரன், கதிர்பாரதி எனப் பலரையும் பிடிக்கும்.சமீபத்தில் எழுத ஆரம்பித்திருக்கும் சரவணன் சந்திரனின் எழுத்துக்களும் இதில் அடங்கும்.பொறாமைப்படுகிற எழுத்தாளர் ஒருவரல்ல. இரண்டு பேர். குட்டிரேவதியின் கவிதைகளையும் சாருநிவேதிதாவின் கட்டுரைகளையும் பொறாமையோடு சிலாகிக்கிறேன். அபாரமான எழுத்துகள் என்று இவர்களது எழுத்துக்களைச் சொல்வேன்.

இப்போது புதிதாக எழுதவருபவர்கள் முதல் படைப்பிலேயே நாவல் வடிவத்தை தேர்வு செய்கிறார்கள். பத்தாண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள். நாவல்கள் எழுதும் திட்டம் இருக்கிறதா?

எடுத்த எடுப்பிலேயே நாவலைத் தொடுவது ஒன்றும் குற்றமல்ல. நாவல் என்பதன் வடிவம் சார்ந்த கோட்பாடுகள் மாறிக்கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.தன்பெருக்கி நாவல்கள், நாவலற்ற நாவல்கள் மேலும் மேலும் உடைந்து வடிவம் சார்ந்த பல மாற்றங்கள் வந்துகொண்டே தான் இருக்கப் போகிறது என்பது என் கணிப்பு.எனது முதல் நாவல் சதுரம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி இப்போது அதன் நிறைவை அடைந்திருக்கிறது.விரைவில் வெளியாக உள்ளது.எம்ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்ற 1984-ல் துவங்கி 1987-ல் அவர் இயற்கை எய்தும் வரையிலான காலகட்டத்தை மையத்திரையாக்கி மதுரையைக்களனாக்கி இந்த நாவலை எழுதி இருக்கிறேன். இரண்டாவது நாவல் மோகினி. குறிப்புக்களிலிருந்து அத்தியாயங்களாக மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறது.அடுத்தடுத்து நாவல்கள் எழுதும் விருப்பம் உண்டு.
உங்களின் அடுத்த படைப்புகள், அடுத்த இலக்குகள் குறித்து….

பாக்யாவின் வரலாற்றின் வினோதங்கள் எனும் தொடரில் சரித்திரத்தின் அபாரங்களையும் அபத்தங்களையும் கையாண்டு வருகிறேன்.புலன் மயக்கம் என்ற பேரில் அந்திமழை.காம் இணைய இதழில் விரைவில் திரை இசை குறித்த எனது நினைவேந்தல் தொடர் துவங்க உள்ளேன்.இதைத் தவிர பாவையர் மலர் இதழில் கதைகளின் கதை என்ற தொடரில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய எனது அவதானத்தைப் பகிர்ந்து வருகிறேன். இவற்றைத் தவிர திரைப்படத் துறையிலும் ஒரு திரைப்படத்துக்கான எழுத்துக்காரனாய் பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.எழுதுவது பிடிக்கிறது.எனவே எழுதுகிறேன்.எழுத்து சார்ந்த இலக்குகளும் கனவுகளும் நிரம்ப வாழ்தல் இனிது.

Related posts

Leave a Comment