You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

வாழ்வின் படிப்பினை பேராசியராக உருமாற்றியது

எஸ். மோகனா

“வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன் எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்.” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

“நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தின் மனிதனுக்கான வரலாறாக மாறுகிறது”… மார்க்ஸ்
“இவ்வுலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்”.. மகாத்மா காந்தி
எப்போதுமே மே மாதம் என்பது சந்தோஷம் நிறைந்த மாதமாகவும், அதே சமயம் பிரச்சனைகளை அள்ளிக்கொட்டும் மாதமாகவும் இருக்கிறது; இது முக்கியமாக கல்விப் பணியில் இருப்பவர்களுக்குத்தான். இந்த 2016,மே மாதம் தேர்தல், நம்மைப் படுத்திய பாட்டை, அதில் மக்கள் எழுதிய தீர்ப்பை, தமிழக வரலாறு என்றைக்கும் அழிக்கவே முடியாது. அது போலவே என் வாழ்வில் மறக்கவியலா மாற்றங்கள், பிரச்சினைகள், தீர்வுகள், தீர்ப்புகள், திசை மாற்றங்கள், திருமணம், வாழ்க்கைத் திருப்பங்கள் எல்லாம் நடந்தவை வசந்த காலமான கோடையில்தான்.

என்னை ரொம்பவும் ஆதரித்த பாட்டி (அப்பாவின் அம்மா) நான் மூன்றாமாண்டு படிக்கும்போதே இறந்துவிட்டார்கள். வீட்டில் எனக்கு நெருக்கடியான நிலைமை. தொடங்கியது சோதனை. 1968-71 என்பது வாழ்வில் எதிர்நீச்சல் போட்ட, வாழ்வியலை தக்கவைத்துக்கொள்ள போராடிய காலகட்டம். அதன் தாக்கம் இன்றளவும் உண்டு. அந்நிகழ்வு இல்லை என்றால் இன்று மோகனா இந்த உலகில் இல்லை. என்னை நான் யார் என்று நிரூபித்துக் கொண்ட காலம் அது.

சுமார் 48 ஆண்டுகளுக்குமுன், ஒரு நாள் கோடையில், சோழம்பேட்டையில், எங்கள் இல்லத்தில் ,நிகழ்ந்த நிகழ்வு என் வாழ்க்கைச் சூழலை அடியோடு புரட்டிப்போட்டது. இன்றைக்கு அதனை நினைத்துப் பார்க்கிறேன்..எப்படி அந்த 18 வயது சின்னப்பெண் மோகனா அந்த சிக்கலான, அபாயகரமான சூழலை, யாருடைய உதவியும் இன்றி சமாளித்தாள் என்பதை இன்றைக்கு நினைக்க பயம்மாத்தான் இருக்குது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், B.Scமூன்றாமாண்டு தேர்வு, 1968, ஜூன் மாதம் முடிந்தது. எப்போதும் போல குஷியாக அத்தை வீட்டுக்கு பாவட்டக்குடி ஊருக்குப் புறப்பட்டாச்சு.பாவட்டக்குடி (தி. ஜானகிராமனின் நாவலில் அடிக்கடி வரும் ஊர்), நன்னிலம் & காரைக்கால் அருகில் உள்ள குக்கிராமம். அது இயற்கை எழில் கொஞ்சும், நாகரிகம் எட்டிப் பார்க்காத அப்பாவி விவசாய மக்களின் ஊர். அங்கே, எட்டிப் பிடிச்ச மாதிரி, இருபது அடி தூரத்தில் நாட்டார் வாய்க்கால் (பொன்னியின் செல்வன்…ஆறு) என்ற ஆறும், வாசலிலேயே வாய்க்காலும் ஓடும். அந்த வாய்க்காலிலேயே நீச்சலும் அடித்துக் குளிப்போம். என் நண்பர் சோமு, என்னைக் கல்லூரியில் சேர்த்த, என்னுடன் எப்போதும் அளவளாவும்,எனக்கு படிக்க புத்தகங்கள் எடுத்துத் தரும், நல்ல யோசனைகளை சொல்லும் நண்பர். அங்கு செல்லும்போதெல்லாம் காலை மாலை இரு நேரமும் சந்தித்துப் பேசுவேன். அவர் சுமார் 12 ஆண்டுகால பால்ய நண்பர்.

எனக்கு படித்து முடித்தவுடன், உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம்.அது தொடர்பாகவும் பேசுவோம. எங்களோடு வீட்டில் பாட்டி, அடுத்த வீட்டுக்காரர்கள் என ஏராளமான பெண்களும் உடன் இருப்பார்கள். அப்போது ஒருநாள் நான் சோழம்பேட்டைக்கு திடீரென அவசர நிமித்தம் போய்விட்டேன். நண்பர் அப்போது எனது வீட்டுக்கு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வேறு வேலைகள் உள்ள இடங்கள், நான் எப்படி அவைகளுக்கு விண்ணப்பிக்க என்றும் எழுதியிருகிறார். அவரது படிப்பு M.A.

ஆனால் நண்பர் சோமு எழுதிய கடிதம் என் கையில் கிடைக்கவில்லை. அந்தக் கடிதம் எழுதப் பட்டு இருந்த மொழி ஆங்கிலம். நான் மீண்டும் அத்தை விட்டுக்கு வந்துவிட்டேன். எங்கள் வீட்டில் பொதுவாக என் கடிதம் எதனையும் அப்பா படிக்க மாட்டார்கள். ஆனால் அன்றைய என் துரதிருஷ்டம், என் சித்தப்பா வீட்டில் இருந்தார். நண்பரின் ஆங்கிலத்தில் இருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்து இது ஒரு காதல் கடிதம் என்று நினைத்து ஒரே கோபம்.. வீடே திமிலோகப்பட்டு இருந்திருக்கிறது. எனக்கு எதுவும் தெரியாது.மேலும் இந்தக் கடிதம் ..சாதி விட்டு சாதி வந்து இருப்பதாலும், நண்பர் தலித் என்பதாலும்,என் மேல் மிகவும் கோபம் கொண்டு என்னை வீட்டில் உள்ள அனைவரும், அன்று எனக்கு மிகவும் பிடித்தமான அல்வாவில் விஷம் வைத்து என்னைக் கொன்றுவிட்டு , உடலை கொள்ளிடத்தில் போட்டுவிடுவது என முடிவு எடுத்தனர். இதில் என்ன கூத்து என்றால் சித்தப்பாவின் படிப்பு 5ம் வகுப்பு வரை மட்டுமே.

அன்றே மோகனா மீண்டும் சோழம்பேட்டைக்கு அழைக்கப்படுகிறாள். வீட்டில் மோகனாவைச் சுற்றிலும் 8 பேர்கள் கடோத்கஜர்களாய்.. மோகனா என்ற அந்த சின்னப் பெண் துளியும் பயப்படவில்லை. சோமுவின் கடிதம், மோகனா கையில். மோகனா கடிதத்தை வாசிக்கிறாள். ஆங்கிலக் கடிதத்தின் சாரத்தைக் கூறுகிறாள். சுற்றியுள்ளோர் யாரும் அதனை நம்பவில்லை. மோகனாவின் சித்தப்பா எதிர்பார்த்தது போல, அவர் நினைத்தது போல எந்த வரியும் அந்தக் கடிதத்தில் இல்லை. குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே வியப்பு. இது எப்படி.. காதல் கடிதம் எப்படி மாறியது என திகைத்து நிற்கின்றனர். நினைத்தது நடக்காததால் எல்லோருடைய முகத்திலும் கோபம் கொப்பளிக்கிறது. கடிதம் எழுதியது தலித் அல்லவா? கடிதத்தின் சாரத்தை யாரும் நம்பவில்லை.

அந்த ஊரில் ஆங்கிலம் தெரிந்த ஒரே நபரான, எதிர்வீட்டு இரத்தின சபாபதியிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள் என்கிறாள் மோகனா.. குடும்பத்தினர் இதுவரை மானம் கப்பலேறியது போதாதா, இதில் நாங்களே கொடுத்து மூஞ்சில் காறித்துப்பச் சொல்ல வேண்டுமா என சீறுகிறார்கள்..மோகனா வேறு வழி இல்லாததால், வீட்டினரை எதிர்வீட்டில் கடிதம் கொடுக்க மீண்டும்மீண்டும் கெஞ்சுகிறாள்.

கடிதம் எதிர்வீட்டில் கொடுக்கப்பட்டு படிக்கப்படுகிறது.. இரத்தின சபாபதி, கடிதம் படித்து விட்டு, அவர் எங்களை விட உயர்ந்த சாதி. அப்பாவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அவர் அப்பாவிடம், “சோமு, உன் மகளைப் பத்தி உனக்குத் தெரியாது. நான்தான் அண்ணாமலையில் மோகனாவுடன் படித்தேன். அப்படி ஒரு சொக்கத் தங்கம் உன் பெண். பையன்கள் ஓம் பொண்ணைபாத்து பயப்படுவாங்க. எதாவது பேசினா திட்டிப் போடும். இந்த லெட்டர்லே நீங்க நெனைக்கிறது மாதிரி இல்லை..வேலைக்கு எங்கெங்கு போகலாம்னு இருக்குது. சரி, போய் வேலையைப் பாரு. உன் பொண்ணுதான், உங்க குடும்பத்தைக் காப்பாத்த போகுது. போயி அத படிக்கவைக்கிற வழியைப் பாரு” என்றார்.

வீட்டிற்கு வந்த என் குடும்ப மக்கள், எப்படி தலித் பையன் நம் பொண்ணுக்கு கடிதம் எழுதலாம் என்று வேறு வகையான ரகளை கிளப்பினர். அன்றிருந்த கால கட்டத்தில், சாதி அடுக்கின் படி, கட்டி வைத்து அவரை பல பல வகைகளில் என் மூலம் தண்டிக்க என்னை வற்புறுத்தினர். நான் கடிதம் எழுதியதற்கு இப்படி ஒரு தண்டனையாக முடியவே முடியாது என மறுத்துவிட்டேன். வீட்டில் நடந்த பிரச்சினைகளை, எனக்கு விழுந்த திட்டு, ஏச்சு பேச்சுக்கு அடிக்கு அளவே இல்லை. வார்த்தைகளுக்கு எல்லையே இல்லை. சொல்ல வார்த்தைகளே இல்லை. வீட்டில் அதன்பின் நான் மட்டும், தனியாக யாரும் என்னோடு பேச மாட்டார்கள். நான் எதற்கும் சிறிது கூட மனம் தளராமல் வீட்டில் இருந்தேன்.

குடும்பத்தினரின் அச்சுறுத்தல், மிரட்டல், பேச்சு, அடி உதை எதற்கும் பயப்படவில்லை மோகனா.. அஞ்சவில்லை. மசியவில்லை. இதற்கெல்லாம் காரணம்..பின்னணி நான் படித்த புத்தகங்கள் மட்டுமே. ஏனெனில், எனக்கு வீட்டில், அந்தக் கிராமத்தில் யாருடனும் பேசும் வாய்ப்பு கூட கிடையாது. வீடு தனி வீடு. மேலும் எனக்கு எப்போதும் தனிமையும் புத்தகங்களும்தான் நிரந்தரத் துணை. அவைதான் இப்படி என்னைத் தைரியசாலியாகவும், எதையும் சந்திக்கக் கூடியவளாகவும், சரியான முடிவெடுத்து செயல்படுபவளாகவும் உருவாக்கியதும், மாற்றியதும் கூட, நான் படித்த புத்தகங்களே. எதிர்வீட்டு அன்றைய இரத்தின சபாபதி.இன்று தாவரவியல் பேராசிரியர். முனைவர் இரத்தின சபாபதி தான்.

என் எதிர்காலம்தான் என் முன்னே கண்ணை விழித்துக் கொண்டு நின்றது. எதிர்காலத்தைப் பற்றிய தளரா நம்பிக்கை எப்போதும் என்னுள். அதுதான் எனது பலமாகவும் இருந்திருக்கிறது. என் படிப்பு, என் கல்வி தான் என்னை இந்த ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றும் என்று நம்பினேன். எப்படியும் மேல் படிப்பு படித்தே தீருவது..வேலைக்குச் சென்றே தீருவது என ஆணித்தரமாக என்னுள் அழியா இலக்கையும் நம்பிக்கையையும் வைத்திருந்தேன்.

1968, தேர்வு முடிவுகள் பேப்பரில் வந்தன.நான் B.Sc பாஸ் பண்ணியாச்சு.அது மட்டுமல்ல. நான் Annamalai universityயில் மூன்றாவது ரேங்க். எப்படிப்பட்ட சந்தோஷம்.?. இதனை யாரிடம் போய் சொல்வது. யாரிடம் பகிர்ந்து கொள்ள.. எனக்கென்று அப்போது அருகில் எந்த ஜீவனும் இல்லை. நண்பர் சோமு போட்ட கடிதத்த்தின் விளைவு. பாதிப்பு வீட்டில் என்னோடு யாரும் பேசமாட்டார்கள். சமூகப் புறக்கணிப்பு விட்டுக்குள்ளேயே. நான் எதற்கும் கவலைப்படாமல், எப்போதும் போல், Hindu பேப்பர் படித்துக் கொண்டும், புத்தகங்கள் படித்துக் கொண்டும், அனைத்து வீட்டு வேலைகளையும் ஒற்றை ஆளாய் செய்து கொண்டும் திரிந்தேன். எதற்கும் கவலைப்படாத ஜென்மம் இது. யாரும் பேசவில்லை என்றோ, பாஸ் பண்ணியதை, ரேங்க் எடுத்ததை மற்றவர்களிடம் சொல்லி மகிழவில்லை என்றோ வருத்தம் இல்லை. ஆனால் எப்படிப் படிக்க, எப்படிப் படிக்க என்ற துடிப்பு மட்டும் நொடி தவறாமல் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு ஆதரவாய் இருந்த பாட்டி, இப்போது இந்த உலகில் இல்லை. சோமு போட்ட கடிதத்தால், குடும்பத்தில் விழுந்த குண்டு வெடிப்பின் விளைவு இன்னும் சரி செய்யப்படவில்லை. அது காதல் கடிதமாக இல்லாவிடினும் கூட.

நானும் என்னென்னவோ முயற்சி செய்தேன். ஏதும் நடக்கவில்லை. பட்ட மேற்படிப்பு படிக்க முடியவே இல்லை. அப்பா என்னுடன் பேசமாட்டார்கள்.அப்பாவின் கோபம் குறையவே இல்லை. அம்மாவும் நோ பேச்சு. படிக்கக் கேட்டால், பேசப் போனால்,அப்பா முகம் கொடுத்து கேட்பதே இல்லை. மோகனாவின் படிப்பு முற்றுப்புள்ளியை எட்டியது. நிறைய மதிப்பெண் பெற்றும், பல்கலைக்ககழக் ரேங்க் வாங்கியும் மேலே படிக்க கொடுப்பினை இல்லை.என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் நடந்தததா? அவ்வளவுதான்.

1968-1969 க்கான கல்லூரிக் காலம் துவங்கியாச்சு என் நண்பர்கள் சாவித்திரி,, பர்வதம். தனபாக்கியம், அம்சவல்லி, கஸ்தூரி, எல்லோரும் M.A வகுப்பில் சேர்ந்தாச்சு. வகுப்புத் தோழர்கள் சகுந்தலா,அப்துல் ரஹ்மான், சிவகுமார் எல்லோரும் மேல்படிப்புக்கு M.Sc, படிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து விட்டனர். இது இருந்தால், நல்லது என நினைக்கின்றேன்.

மோகனா கல்லூரி செல்லாத காலகட்டத்தில் அஞ்சல் பணிக்கு வேறு ஊருக்கு செல்லும் அப்பாவுக்கு விடியல் 2 மணிக்கே எழுந்து, சரியாக காலை 4 மணிக்குள், காலை உணவும், மதிய உணவும் தயாரித்துத் தரவேண்டும். அப்பா பேசத்தான் மாட்டார்கள்.. ஆனால் எல்லா வேலையும் வீட்டில் மோகனாதான் செய்யவேண்டும். தம்பி தங்கைகள் ரொம்ப பொடிசு.. எதுவும் தெரியாது. தம்பி, 13 வயது.. பள்ளிக்குச் சென்றுவிடுவான். தங்கை 7 வயது. அப்பா சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாது. அப்பாவுக்கு மட்டும் செய்துவிட்டு வீட்டில் மற்றவர்கள் பட்டினியாய் இருப்போம். காலை கொஞ்சம் அரிசிக் கஞ்சி போதும் போதாமல். மீண்டும் இரவுதான் முழுமையாக சாப்பாடு..மதியம் பசி வயிற்றைக் கிள்ளும்.. நீராகாரம்.. தண்ணீர் தான் அப்பாவைத் தவிர எல்லோருக்கும் வயிற்றை நிரப்புபவையாக இருந்தன. இடையில் தேநீர் வாங்கிக் குடிக்கக் கூட கையில் காசு இருக்காது. முழுமையாக பசி என்றால் என்ன,வறுமையின் நிறம் சிவப்பா, பச்சையா நீலமா என்பதெல்லாம் தெரியும். அதன் பரிமாணம் என்ன, அதன் பாதிப்பு, பசி எப்படி வயிற்றைச் சுண்டி இழுக்கும் என்பதெல்லாம் இன்றைய பேராசிரியர் மோகனாவுக்கு அத்துபடி. அவளுக்கு வறுமையின் சிறப்பை, அதன் கோணத்தை, அதன் முழுமையைக் காட்டிய காலம் அது.

படிக்காமல் இருந்த காலத்தில், தினமும் வேலை செய்து வேறு சம்பாத்திதேன். சோழம்பேட்டையில் ஏழைகள் செய்யும் தொழிலான, தென்னங்கீற்று முடைதல் என்ற வேலை தெரியும். கீற்றுக்கான தென்னை மட்டையை வீட்டில் கொண்டு வந்து போடுவார்கள். நான் நாள்முழுவதும் அதனை முடைந்துவிட்டு அதற்கு கூலியாக 75 காசு/ஒரு ரூ வாங்கி, அதில் வீட்டுச் செலவு செய்வேன். சோறு ஆக்கி தம்பி, தங்கைகளுக்கு போடுவேன்..இதில் பகல் முழுவதும் இப்படியே தான் ஓடும். அப்போதும் கூட புத்தகங்கள் படிப்பதை நிறுத்தவில்லை. எங்கிருந்தோ புத்தகங்கள் வாங்கி விடுவேன் படிக்க. அப்பாவின் நண்பர்கள் சமயத்தில் கொண்டுவந்து தருவார்கள். எந்த கால கட்டத்திலும், எந்த நிலையிலும் வாசிப்பு என்னைவிட்டு நழுவியதோ வழுவியதோ இல்லை. எனது உடலை மூடிய துணி போலவே, எனது மூளையின் மேல் எப்போதும் வாசிப்பு நகர்ந்து கொண்டே இருக்கும். எனது ஊக்கத்திற்கு, சக்திக்கு, செயல்பாட்டுக்கு எப்போதும் புத்தக வாசிப்பு, மட்டுமே என் உணவாக இருந்திருக்கிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பார்த்ததும், தலைவர்களை தரிசித்ததும், வரலாறை வாசித்ததும்,அவற்றை கற்பனை காட்சியில் மகிழ்ந்ததும் வாசிப்பால்தானே. என் உடலிலிருந்து மூச்சு நிற்கும்போது வேண்டுமானால் இது நிற்கலாம். அதுவரை எனது வாசிப்பு, அதன் ருசி, அதன் ரசனை, அதன் ஈர்ப்பு எப்போதும் என்னைத் தொடரும்.

B.Sc க்கும், M.Sc க்கும் இடையில் ஓராண்டுக்காலம், வறுமையும் வாசிப்பும், தொடர் வினைகளும், சந்திப்பும், சவால்களும், ஒன்றுடன் இணைந்து ஓடி வந்தன.எதற்கும் சளைக்கவில்லை. அவளின் ஒரே குறிக்கோள் மீண்டும் கல்வியாகவே இருந்தது. மீண்டும் கல்லூரி செல்ல வேண்டிய தருணம், கோடையின் முடிவு,மே மாதம் வந்தாயிற்று. எல்லோருக்கும் தேர்வு முடிவுகள், பாஸ் பெயில். எனக்குத்தான் ஏற்கனவே பாஸ் சர்டிபிகேட். அதுவும் ரேங்க் வாங்கினது இருக்கே. இப்ப உடனடித் தேவை படிக்க பணமும், அப்பாவிடமிருந்து அனுமதியும் மட்டுமே.இதை எங்கிருந்து பெறுவது. ஒரே குழப்பம்தான். இந்த கோபக்கார அப்பாவிடம், எப்படி மீண்டும் படிக்க என்று கேட்க..எப்படி மீண்டும் உதை தின்பதா? இருக்கட்டும், உதைக்குப் பயந்தால் எப்படிப் படிக்க, பட்ட மேற்படிப்பு பட்டம் வாங்க, எப்படி வேலைக்குச் செல்வது. இந்த பிசாசுகளிடமிருந்து என்றைக்கு விடுதலை பெறுவது. என பல சங்கிலித் தொடர் வினைகள் மனசுக்குள் preview செய்யும்.
நடப்பது நடக்கட்டும்.. ஒரு வழியாய் அப்பாவிடம் கேட்டாயிற்று.
“நான் மேலே படிக்கணும்.”
யாருகிட்ட பணம் இருக்கு… படிக்க வைக்க
நான் நெறைய மார்க் வாங்கி இருக்கேன்.படிக்கிறேன்.

என்னிடம் பணம் இல்லை. நான் வாங்கும் சம்பளத்தில் படிக்க வைக்க முடியாது.
ஏற்கனவே உதவி செய்தவர்களை நீ உதறித் தள்ளிவிட்டாய்.(அது தனிக் கதை)
நான் “இதோ இப்ப உங்களிடம் இருக்கும் சொத்து தாத்தா சம்பாதித்தது.
எனக்கு அதில் உரிமை உண்டு. அதை அடகு வைத்து என்னைப் படிக்க வையுங்கள். படித்து, வேலைக்குப் போய் அதனைத் திருப்பித் தந்து விடுவேன்” என்றேன்.

வந்ததே அப்பாவுக்கு கோபம்..கையைத் தூக்கிக் கொண்டு அடிக்க ஓடி வந்தார்கள். தப்பித்து ஓடி வந்துவிட்டேன்.

அதன்பின் என் நண்பர் சாவித்திரி, (என்னைப்பற்றி தமிழ் பெண்கள் கட்டுரையில் எழுதி உள்ளவர். எனது 5 ஆண்டுகால நண்பர்) கொஞ்சம் வசதியானவர், அவரிடம் நான், “நீ எனக்கு படிக்க எப்படியாவது பணம் ஏற்பாடு செய்துகொடு. நான் படிக்க வேண்டும். பின்னர் திருப்பித் தந்து விடுகிறேன்” என கடிதம் எழுதினேன். அப்போது தொலைபேசி, கைபேசி வசதி கிடையாதே. அவர் உடனே. “நீ admission போட்டுவிட்டு வா. பணம் தருகிறோம்.வா” என்றார். அதற்குள் M.Sc விண்ணப்பம் வாங்கி, admission card ம் வாங்கியாச்சு. மதிப்பெண் அதிகம் என்பதால் இடம் கிடைப்பதில் சிக்கல் இல்லை.

M.Sc படிக்க, நண்பரிடம் பணம் வாங்கிப் படிக்க அப்பாவிடம் அனுமதி பெற வேண்டும். மீண்டும், மீண்டும் இடியாப்ப சிக்கல்தான்.

அப்பாவிடம், “என் friend சாவித்திரி நான் படிக்க பணம் தரேன்னு சொல்றாங்க. நான் படிக்கவா? நாம் பின்னாடி திருப்பித் தந்திடலாம்..”

அப்பா கோபமாக..”போ..போ.. எக்கேடோ கெட்டுத்தொலை “அவ்வளவுதான்.
போய்விட்டேன். மேலே படிக்கப் போக அடுத்த நாள் .தயாரிப்பு.

ஆனால் கல்லூரிக்குப் போக, போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லை.

அடுத்த நாள் விடிகாலை 4.00 மணிக்கு வீட்டில் உள்ள பித்தளை அண்டாவை, எடுத்துப் போய் அடுத்த கடையில் உள்ள என் நணபர் ராஜலட்சுமி கடையில் ரூ 10/- க்கு அடகு வைத்துவிட்டு அதனை வாங்கிக் கொண்டு சித்தப்பாவுடன் சிதம்பரம் அண்ணாமலை நகர் பயணித்தேன்.

அண்ணாமலை நகரில் எனக்காக என் நண்பர் சாவித்திரி, அம்சவல்லி, தனபாக்கியம் மூவரும் சேர்ந்து, ரூ 400/= என்னிடம் கொடுத்தனர். M.scக்கான சம்பளம் ரூ.200/= விடுதிக்கட்டணம் ரூ200/= என இரண்டுக்கும் பணம் கட்டிவிட்டு நிறைய சந்தோஷத்துடன், கொஞ்சூண்டு வேதனையுடன், சோழம் பேட்டை வந்து சேர்ந்தேன். அந்த ஆண்டு முழுமைக்கும் என் நண்பர்கள்தான் எனக்கான விடுதிப் பணம், கல்லூரிக் கட்டணம் கட்டினர். பின்னர் அடுத்த ஆண்டு அப்பாவைப் படுத்தி வைத்து, வீட்டுக் கொல்லையை அடகு வைத்து அவர்களின் பணம் திருப்பித் தரப்பட்டு விட்டாலும் கூட.

இன்றைக்கு மோகனா என்ற பெண்ணின் பின்னால் ஒட்டிக்கொண்டு இருக்கும் M.Sc பட்டத்துக்கும், அதன் தொடர்பாய் அவள் வாங்கிய கல்லூரி வேலை, அவளின் வாழ்நிலையின் அடித்தளம் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள்,முதலில், என்னைப் படிக்க வா. பணம் தருகிறேன் வா என்று சொன்ன சாவித்திரியும், என் நண்பர்கள் அம்சவல்லி மற்றும் தனபாக்கியம்தான். இவர்களே அப்போது மாணவர்கள்.. அவர்கள் அப்பாவிடம் வாங்கித்தான் எனக்கு தந்தார்கள்..அவர்கள் இல்லை என்றால் இப்போது மோகனா இல்லவே இல்லை.

அதன் பின்னர் கையில் மூன்றே மூன்று சேலையுடன், M.Sc படிப்பு, பல்கலைக்கழக வாழ்க்கை.என இரண்டு ஆண்டுகள் ஓடியது.ஆனாலும் கூட சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. படிப்பு படிப்பு, புத்தக வாசிப்பு, ஊர் சுற்றல், நூலகம் சேட்டை, ஆசிரியருக்கு பெயர் வைப்பது என எதுவும் குறையாமல் கல்லூரி வாழ்க்கை முடிந்தே போய்விட்டது. .செய்முறை. அதிக மதிப்பெண் பெற்று M.Sc தேர்ச்சி. அம்புட்டுதான். பின்னர் கல்லூரிப் பணி. அது தனிக் கதை.
ஒரு சிறிய இடைவேளை…

Related posts

Leave a Comment