You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

பெளத்த பிரக்ஞை

கேள்விகள் : எஸ்.செந்தில்குமார்

கு. உமாதேவி

உமாதேவி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். “பண்டைய இலக்கியங்களில் அறநெறிகளும் குண்டலகேசியும்” என்கிற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கிறார். ‘திசைகளைப் பருகுகிறவள்’, ‘தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’ ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் இலக்கிய மரபில் பௌத்த தத்துவப் பிரதிகளான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவற்றிக்குப் பிறகு அதன் நீட்சியாக புனைவும் புனைவற்ற சிந்தனை மரபும் குறிப்பிடும்படியாக உருவாகவில்லை. அதற்கான இலக்கிய காரணத்திலிருந்து இக்கவிதைத் தொகுப்பு குறித்து பேசத் தொடங்கலாமா?

இத்தகைய புரிதல் உருவானதற்கு மகிழ்ச்சி. தமிழக இலக்கிய செயல்பாடுகளில் தமிழ் இலக்கியவாதிகளால் கம்பராமாயணத்திற்குக் கொடுக்கப்பட்ட இடம் மணிமேகலைக்குக் கொடுக்கப்படவில்லை என்பது இளங்கலை முதலே எனக்கிருந்த கோபமும் ஏக்கமும். தமிழர்களின் வாழ்வியல் மதிப்பீடுகளுக்கான இலக்கிய ஆதாரம் மணிமேகலையில் இருந்தும்கூட, அதற்கான எவ்வித விவாதத்தையும் புனைவுகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லாமல் மீண்டும் மீண்டும் புராணங்களைப் பற்றிய பதிவுகளையே திணித்ததே தமிழ் இலக்கிய செயல்பாடுகளின் ஒரு வகையான வன்கொடுமை. கவிதைகளோ அல்லது நானோ பவுத்தம் குறித்தான உள்வாங்கலில் மணிமேகலை எனக்கான கவிதைகளின் கருவூலமாகவே திகழ்கின்றது என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் ஒப்புக்கொள்கிறேன்.

இத்தொகுப்பில் “அன்னாடங்காச்சி” என்கிற கவிதை, புத்தரை பெருங்கதையாடல் என்கிற சொல்லாடலிலிருந்து விளிம்புநிலை மற்றும் சிறுதெய்வ வழிபாட்டு முறை தெய்வத்திற்கான மாற்றத்தை அடையாளமாக்குகிறது. அவ்வாறான அடையாளத்தைத்தான் சொல்ல விரும்புகிறீர்களா?

சீனாவில் தொடக்ககாலத்தில் சிறுதெய்வமாக அடையாளப்பட்ட போதி தருமர் இன்று சீன சமய பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றார். இது போன்று இந்தியாவில் கபிலவஸ்துவின் சிறுதெய்வமாக அடையாளப்பட்ட கவுதம புத்தர் படிப்படியாக பெருஞ்சமய அடையாள நிலையை அடைந்தார். அசோகருக்குப் பிறகு நீண்ட நெடிய நூற்றைம்பது ஆண்டுகாலம் பிராமணர்கள் அடைந்த ஒடுக்குமுறைக்குப் பிறகு புஸ்யமித்ர சுங்கன் பிராமணிய ஆட்சியை நிறுவுகின்றான். படிப்படியான அவர்களின் ஆட்சி விரிவாக்கத்திற்குப் பிறகு தமது பிரதான எதிரிகளான பவுத்த மன்னர்களை, வீரர்களை வென்ற பிராமணிய அரசு பவுத்தத் தத்துவத்தையும் பண்பாட்டையும் வெல்ல முடியாமல் திணறியபோதுதான் பார்ப்பனிய பண்பாட்டின் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. அதன் விளைவாகத்தான் பவுத்தப் பெரும் தெய்வங்களாகக் கருதப்பட்ட கவுதமபுத்தர் இருந்த இடத்தை கற்பனாவாதத்திலிருந்து அல்லது அழுக்கிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகர் பிடிக்கின்றார். இத்தகைய வரலாற்றுப் பின்புலத்திலிருந்துதான் பவுத்தர்களின் – தொடக்ககால குலதெய்வமாக பண்பாட்டில் வேரூன்றிய – குலதெய்வமாக கவுதமபுத்தர் இருந்த மரபை அன்னாடங்காச்சி கவிதையில் பதிவு செய்திருக்கிறேன்.

“அசோகன் என் காதலன்” “ஆதித்தந்தை” ஆகிய இரு கவிதைகள் நேரிடையாகவே அரசியலை பேசுகின்றன. மறுபுனைவில் அசோகனைப் பற்றிய மற்றொரு கண்ணோட்டம் உருவாகிறது.சாலையோர மரம் என்கிற பழமையான வார்த்தையை அழிக்கத்தான் இக்கவிதையா? அசோகனது வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும்போது புத்தர் என்கிற படிமத்திற்கு இணையான படிமம் கிடைத்துவிடுமேன நினைக்கிறீர்களா?

நமது வரலாறு அல்லது இலக்கிய மோசடியின் வெற்றியாகத்தான் அசோகர் பற்றிய மறக்கடிப்பைப் பார்க்க முடிகிறது. எம்.ஜி.ஆர். அவர்களை தமிழகத்தின் மிகச்சிறந்த அல்லது வள்ளல் தன்மைமிக்க முதலமைச்சர் என்று மக்களின் மனதில் பதிவுச்செய்கின்ற ஊடகங்கள், இந்திய மாமன்னரான அசோகரைப் பற்றிய எத்தகைய நினைவுகளையும் புதிய தலைமுறைகளிடம் விதைக்காமல் இருப்பது திராவிடக் கட்சிகள் செய்த ஊழலைவிட மிக மோசமான ஊழலென்றே வரலாற்றை அறிந்த எதிர்காலச் சமூகம் பதிவுச்செய்யும். மனுநீதிச்சோழன் பற்றிய நினைவுகளை மக்களுக்கு நினைவுப்படுத்துகின்ற எத்தகைய சக்திகளாக இருந்தாலும், அவர்கள் சுதந்திரம் அடைந்த இத்தேசத்திற்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். மாறாக, இந்தியாவில் ஒரு அறத்தை அல்லது தத்துவத்தை நம்பி ஒரு தேசத்தை ஆட்சிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு இயங்கிய ஒரு மன்னனை நினைவுபடுத்துவது என்பது, பவுத்தத்தை நம்புகின்ற படைப்பாளிகளின் தலையாய கடமையாகவே உணர்கிறேன்.

‘தெய்வங்கள்’ கவிதை பொது மரபை அழிக்கும் குரலில் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்கள் பெண் தெய்வங்களை சிறுமைப்படுத்தும் சித்திரம் புனையப்பட்டிருக்கிறது. தமிழக ஜாதியிலிருந்து பெண்ணும், பெண் தெய்வ வழிபாடும் பௌத்த தத்துவத் தன்மைக்கு வந்துவிட வேண்டுமென நம்புகிறீர்களா?

உலகத்தில் பெண்களின் அரசியல் பங்கீடுகளின் பின்புலமாக இருக்கின்ற அரசியலைப் புரிந்து கொள்கின்றவர்களுக்கு, எனது படைப்புகளின் இலட்சியம் புரிந்துகொள்ள முடியுமென்று நம்புகிறேன். ஆண்களின் அரசியல் செயல்பாட்டின் விளைவாகவே உலகின் பல்வேறு பெண்ணிய செயல்பாடுகளின் உளவியலும் இருந்துள்ளது. ஆனால் இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தகைய பின்புலமற்று அது பவுத்த சமய அரசியலின் விளைவாகவே உருவானது. எனவே இத்தமிழ் மண்ணிற்கு பவுத்தம் பற்றியோ பெண்ணியம் பற்றியோ பேசுவது என்பது புதிதல்ல. எனது படைப்புகளின் மூலமாகத்தான் பவுத்தத்தை இங்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. ஏற்கெனவே இங்கு இருப்பதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆதிகால தாய்வழிச் சமூகத்திற்குப் பிறகு பெண்களை சுய சிந்தனையுடைய ஆளுமையாக மதிக்கின்ற மரபு, பவுத்த சங்கத்திலிருந்துதான் தொடங்குகிறது என்பதை துரதிஷ்டவசமாக இங்கு பெண்ணியம் பேசுபவர்கள் கூட அறியாமல் இருக்கிறார்கள். பவுத்த பெண் ஆளுமைகள் தமிழகத்தில் தெய்வங்களாக அங்கீகரிக்கப்பட்டு வணங்கப்பட்டிருக்கிறார்கள்.

உதாரணமாக, மணிமேகலை பிடாரியாக ஆக்கப்பட்டார். அம்பிகாதேவி மாரியம்மனாக ஆக்கப்பட்டார். நல்லதங்காள் புராணங்களால் புனையப்பட்ட – பெண்ணுக்குப் பெண்ணை எதிரிடை வைத்த கதாபாத்திரம் சீரியல்களைப்போல் அண்ணியின் சூழ்ச்சியாலும் பொல்லாங்கினாலும் தனது குழந்தைகள் ஒவ்வொருவரையும் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு தானும் உயிர்துறந்த கதாபாத்திரம். இந்த இந்துத்துவப் புராணக்கதையோடு வடநாட்டில் வாழ்ந்துமறைந்த பவுத்தத் தத்துவப் பேராசிரியரான பிக்குணி தேவியும் தமிழ்க் காப்பியத் தலைவியுமான குண்டலகேசியை ஒப்பிட விரும்புகிறேன். ஊழலையும் கொள்ளையையும் வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொண்டிருந்த சத்துவ பிராமணன்மீது ஈர்ப்புக்கொண்டதால் அவனைத் துணைவனாக்கி நல்வழிப்படுத்தும் நோக்கில் திருமணம் செய்துகொண்டார்.

அவனது தொழிலுக்கு உடன்படாததால் பத்தரை என்ற குண்டலகேசியை கொலைசெய்ய முயல்கின்றான். தற்கொல்லியை முற்கொன்ற குண்டலகேசி வைதீகத்திலிருந்து ஜைனத்தில் மாறினார். ஜைன தத்துவவாதியான அவர் ஒருநாள் சாரிபுத்தரிடம் தத்துவவாதத்தில் தோல்வியுற்று, பின் புத்தரை சரணடைந்து பவுத்தத் தத்துவத்தைக் கைக்கொண்டார். அரசனின் மகளாகிய அம்பிகாதேவி திருமணத்தை மறுத்துவிட்டு மக்களிடம் பரவிய அம்மை நோயைத் தர்க்க மருந்துகளோடு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து குணப்படுத்தினார். இதுபோன்று பொதுவெளியில் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட –சிறுதெய்வங்களாக்கப்பட்ட பவுத்தப் பெண் ஆளுமைகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்காமல் மீண்டும் மீண்டும் புராண இதிகாசங்கள் கட்டமைத்த பிற்போக்குத்தனமான பெண் பாத்திரங்களின் கதைகளும், கதைப்பாடல்களுமே நினைவுகூரப்படுகின்றன. பேராளுமைகளாக இருந்த பெண் ஆளுமைகளை இங்கு நினைவுபடுத்தினாலே போதும் – போராட்டங்களோ கருத்தரங்கங்களோ மாநாடுகளோ செய்யாத சமூக மாற்றத்தை நம்மால் செய்ய முடியுமென்று நம்புகிறேன்.

உங்களது கவிதையின் வழியாக உங்களது நிலத்தை எவ்வாறு அடையாளப்படுத்த முயல்கிறீர்கள்?. பிரதியின்வழியாக நிலக்காட்சியின் வழியாக நிலத்தை உணரும் அனுபவம் சங்ககாலம் தொட்டு வரும் மரபு ஒன்று உள்ளது அல்லவா?

இந்திய மண்ணில்தான் விதைகளைவிட அதிகமாக ஜாதி ஊன்றப்பட்டிருக்கிறது. நிலத்தின் வழியாகவே ஜாதியை அடையாளப்படுத்துகின்ற அல்லது புரிந்துகொள்கின்ற பயிற்சி, நமக்கு அதிகமாகவே இருக்கின்றது. மக்கள்தொகை நூறு கோடியைத் தாண்டிய பிறகும் பொருளாதாரத்திலும் நாகரீகத்திலும் நாம் மேம்படாமல் இருப்பதற்கான தடையாகவே கூட்டுசக்தி உருவாகாமல் பார்த்துக்கொள்ளும் நமது நிலப்பிரிவினைகளைப் பார்க்கிறேன். கிராமங்களின் பெருமைகளைப் பேசுகின்ற குரல்கள் நெடுங்காலமாகத் தொடர்ந்துவருவதைக் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கிராமத்துப் பெருமைகளைப் பேசுகின்ற ஒவ்வொருவரும் தனது ஜாதிப் பெருமைகளையே பேசி இருக்கிறார்கள் என்று. நேரடியாக வன்கொடுமைகளிலிருந்து தப்பிக்கின்ற ஒருவர் நிச்சயமாக நிலத்தின் மூலம் விதிக்கப்பட்டிருக்கின்ற ஜாதி வலைகளிலிருந்து தப்பமுடியாமலேயே திணறிக்கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து விடுபடுகின்ற ஒரு அணுகுமுறையாக நான் எனது நிலங்களை ஜாதியைக் கடந்தே அடையாளப்படுத்துகின்றேன். இருண்ட வானத்தின் பரப்பில் ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்ற நட்சத்திரங்களைப்போலவே ஜாதியற்ற எனது நிலத்தை ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.

உலகமயமாக்கல் நாகரீகத்தின்வழி ஜாதியம், மதம், மொழி என்கிற மூன்றும் பொதுத் தளத்தில் பொது நீரோடையில் கலந்து ஒன்றுமில்லாத ஒன்றாக மாறிவிடும் சூழலில் சிறுமைப்படுத்தப்பட்ட பெண் என்ற வார்த்தை அடையாளமற்றதாகிவிடுமென நினைக்கிறீர்களா?

இன்றைய சூழலில் ஜாதி ஒன்றும் பொது நீரோடையில் கலந்து அடையாளமற்றதாகவோ, வலிமையற்றதாகவோ மாறிவிடவில்லை. மாறாக நாளுக்குநாள் கூர்மையடைந்துகொண்டே இருப்பதைத்தான் ஜாதி கேவலக்கொலைகளை

வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. யார் கொன்றார்/ யார் தூண்டினார் என்று இந்தக் கொலைகளுக்கு வலைவீசிப் புலனாய்வு செய்யும் காவல் துறை, ஊரறிய செய்யப்படுகின்ற ஜாதிக் கேவலக்கொலைகளுக்கு உள்ள மவுனம் புரிந்துகொண்டிருப்பதைப் பார்த்துவருகிறோம். ஒருவகையில் இதுவும் கொலைகளுக்குத் துணைபோகும் செயல்பாடாகவே நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது வழக்கம் போல பாதிப்புக்குக் காரனமானவர்களைத் தனடிப்பதற்கு எத்தகைய முயற்சியும் எடுக்காமல பாதிப்புக்குள்ளானவர்களை எதிர்த்தாக்குதல் செய்யாமல். இருப்பதற்கு தடியையும் பொய் வழக்குகளையும் வைத்து மிரட்டுகின்ற சூழலில், இந்து சமயத்தால், மேலும் ஒடுக்கப்பட்ட சமூகமான பெண்கள பொதுவெளியில் அடையாளமற்றுப் போவார்கள் என்பது ஒரு கற்பனைவாதமாகவே இருக்கின்றது. ஜாதிக் கேவலக் கொலைகளிலும் அதிக அளவில ஒடுக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான் என்பதை கவுசல்யா, திவ்யா போன்றவர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

“கல்லறைக்கு வெள்ளை அடிப்பவர்கள்” கவிதையின் பகடியை புரிந்துகொள்ளமுடிகிறது. அதேநேரத்தில் பிரச்சனையான அடிப்படை அடையாளத்தை நீக்குதல் என்கிற பிரச்சனை தமிழ் மரபிடமிருந்து எதிர்பார்க்க முடியுமென நினைக்கிறீர்களா?

இந்தியச் சமூகத்தில்தான் பொதுவில் இயங்குபவர்கள்கூட ஜாதிப் பெருமைகளைப் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். அனைத்து ஜாதியினரையும் நுகர்வோராகவும், வாசிப்பாளராகவும், வாடிக்கையாளராகவும் பெற்று பயனை ஈட்டுகின்ற பிரபலங்கள் தனது வெற்றிக்குப்பிறகு ஜாதிப் பெருமைகளைப் பேசியும் எழுதியும் வருகிறார்கள் இத்தகைய போக்கு தமிழ் இலக்கியத்திற்குப் பிற்போக்கான கட்டுகளிலிருந்து விடுவிக்கின்ற வலிமை இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. வேறென்ன செய்வது நமது நாட்டில் மாட்டுக்கறி தின்பவர்களைத்தானே கல்லெடுத்து அடித்துக் கொல்கிறார்கள். மானுடத்தை அறுத்துத் தின்பவர்களுக்கு விருதுகள் கொடுத்து வாழ்த்துகிறார்கள்.

‘காதலர்’ கவிதை வழியாக கண்டடைகிற “இறைமை” உங்களது அவதானிப்பாக இருக்கலாம். அவ்வை, காரைக்கால் அம்மை ஆகியோரின் புனித இறைமையிலிருந்து இன்றைய நவீன உலகின் லௌகீக பெண்ணின் இறைமை எவ்வாறு ஒன்றுபட்டதாக இருக்கமுடியும்?

காலத்தினால் வேறுபட்டதாயினும் அனுபவமென்பது பழமை புதுமைகளைக் கடந்ததாகவே இருக்கின்றது. சங்ககாலத்தில் தனது தந்தையிடம் மகள் கொண்டிருந்த பாசமும், நிகழ்காலத்தில் ஒரு மகள் தந்தையிடம் கொண்டிருக்கின்ற பாசமும் ஒரு வகையினதாகவே இருக்கமுடியும். தற்போது தொடர்பற்ற இடைவெளி இருக்கலாம். ஆனால் அனுபவம் ஒன்றே வழிநடத்துகின்ற, கொண்டாடுகின்ற, புரிந்துகொண்ட, தேற்றுகின்ற ஆளுமையான அப்பாவைப் போற்றுநிலைக்குள் வைப்பது பெருமையுடைத்தே
தொகுப்பில் ‘பாட்டிம்மா’ நல்ல கவிதையாக்கமாக வந்துள்ளது. அதன் மொழி, வடிவம் புனைவும், வரலாறும் கலந்து நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. உங்களது அடையாளமாக இக்கவிதையை எடுத்துக்கொள்ளலாமா?

நிச்சயமாக. இந்த அடையாளத்தின்மூலம் பரிணமித்து வந்திருப்பதை உங்கள் கேள்விகளின் மூலம் உணர்கிறேன். இதைக் கடந்து அல்லது அனுபவித்து வந்ததுதான் எனது இலக்கிய வெளிப்பாடுகளுக்கான அனுபவக் கருவூலமாக இருக்கிறது.

சம்பிரதாயமான கேள்வியுடன் நிறைவுசெய்ய வேண்டியதாகயிருக்கிறது. இக்கவிதைகளுக்கான/உங்களது கவிதைகளுக்கான உந்துதலாக யாரைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

தனிநபரைச் சொல்லவேண்டுமென்றால் மணிமேகலை, சங்ககால இளம்பெண் அவ்வையார் மாதவி, குண்டலகேசி இவர்களைப் பற்றிய உள்வாங்கலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் என்பதோடு, பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கரைப் பார்க்கும்போது, ஒரு மனிதர் இன்னொரு மனிதரோடு சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளையும் அனைத்து நியாயங்களையும் பற்றிக் கவலைப்பட்ட விவாதித்த வழிகாட்டிய ஒருவராக நான் பார்க்கிறேன். அந்த நியாயங்களும் விவாதங்களும்தான், அவரைப் படிக்கின்றபோது உள்வாங்கிய எனக்கு, கவிதைகளில் வெளிப்படுத்துவதற்கு அடிப்படை சாரமாக இருக்கின்றது.

ஆனால் இதைத்தாண்டி இந்தப் படைப்பு உருவாவதற்கான நிர்பந்தத்தை இந்த சமூகம்தான் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது. ஒருவகையில் இந்த சமூகத்தின் ஜாதிய செயல்பாடுகளால் ஒவ்வொருவரும் பலாத்காரப்படுத்தப் படுகின்றார்கள் மனரீதியாக, அப்படி பலாத்காரப்படுத்தப்பட்ட ஒரு சாதாரண பெண் எழுதுவதற்குப் பயிற்சியுடையவராக இருந்தால் நாவலாக எழுதுகிறார். கதையாக எழுதுகிறார் அல்லது கட்டுரையாக எழுதுகிறார். நான் கவிதையாக எழுதுகிறேன்.

‘கவிதைகள் எழுதுவது வாசிப்பது தனது வாழ்விற்கும் பயணத்திற்கும் உற்சாகமளிக்கும் செயல்பாடாகும்’ என்று சொல்லும் ஜி. கனிமொழியின் சொந்த ஊர் திருவண்ணாமலை. தற்போது கடலூரில் அரசுப் பணி காரணமாக வசித்து வருகிறார். கோடை நகர்ந்த கதை மற்றும் மழை நடந்தோடிய நெகிழ் நிலம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

உங்களது கவிதைகளை, கற்பனையான மன உலகிலிருக்கும் ஆண் கதாபாத்திரத்திடம் பேசுவது, அக்கதாபாத்திரம் உங்களது கேள்விகளை முன்வைத்து விவாதம் செய்வது என்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளலாமா?

பெண்ணின் தேடல்கள், கோரிக்கைகள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு ஆணை மட்டுமே நோக்கியவை அல்ல. பொதுவெளியில் வைக்கப்படுபவை. அவளின் கனவு வெண்புரவி ராஜகுமாரனல்ல. மிக எளிதானவை அவள் கனவுகள் அவளுக்கான மீட்சி ஒரு அங்கீகாரமாகவோ, ஒரு பாராட்டாகவோ ஒரு சொல்லாகவோ கூட இருக்கலாம்.

பெண்ணும் இயற்கையும் ஒன்றுதான். உலகம் முழுக்க இதன் மைய அச்சிலிருந்து சுழன்று இயங்குகிறது. இதையே தொடர்ந்து நீர், நிலம், காற்று, ஆகாயம், பூமி, நிலவு, மலை என எழுதும் போது வாசிப்பு சார்ந்த சலிப்புத் தன்மை வருகிறது. புதுமாதிரியாக ஏதாவது மொழி ரீதியாகவும் வடிவ ரீதியாகவும் சோதனை செய்ய முயன்று வருகிறீர்களா?.

வழக்கமான பாடுபொருளையும் நூறு வகையாக சுவாரஸ்யமாக எழுதலாம். ஆயினும், தொடுபொருட்களைத் தவிர்த்து உணர்பொருளாகவும் எழுதிவருகிறேன்.

“தன்னால் பார்க்கவியலாத\நடுமுதுகு பெரும் மச்சமென\பெண்ணை\ எப்போதும் பின் தொடர்கிறது\ஓர் இருள்”. பெண் தொடர் இருள் கவிதையில் இருள் என்கிற குறியீட்டு சொல்லால் மொத்த சமூகப்பெண்களின் குரலாக, பிரச்சனையாக மாற்றுகிறீர்கள். கவிதை எழுதுகிற மனுஷியாக உங்களது போராட்டம் இந்த அளவிலானது தானா?.

புறமிருந்து தள்ளும் இருளை உணர்கிறேன். யாவரும் போராட்டத்திற்கு முன் வலுவாகிக்கொள்வது நலமென்று நம்புகிறேன். என் வரையில் பெண்ணியம் என்பது நசுக்கப்படும் ஒரு பெண் எப்போதும் தன் கம்பீரத்தை இழக்காதிருப்பது என்றிருக்கிறேன்.

“வலியின் நிறம்” இத்தொகுப்பிலுள்ள நல்ல கவிதை. தான் பெற்ற மகளிடம் தனது பிரசவத்தை நிறங்களால் காட்சிப்படுத்தும் சித்திரம் உன்னதமானது. அற்புதமானது. இக்கவிதை எழுதிய/எழுத நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

என் மகவின் பிறப்பை என் பிறப்பாய் உணர்ந்தவள் நான். அவள் வரவை என் அழுகையைக் கொண்டு வரவேற்கவில்லை. அது நெகிழ்வின் ஈரமாகவே இருந்தது. உண்மையில் அவை என் மகளின் ஆர்வமான கேள்விகளும், என் ஆதுரமான பதில்களும்தான். அந்த வானவில் மட்டுமே கவிதைக்கு கூடுதல் வண்ணம் தந்தது.

பெண் தொடர் இருள், புகார்களற்றவன் எனும் கவிதை எழுதிய அதே வேளையில் இசை இரைச்சலானது என்று இயற்கையை வியந்து மற்றொரு மனோநிலைக்கு பயணிக்கிறீர்கள். இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?

இசை இரைச்சலானது என்ற கவிதை… ஒரு உணர்வு, அல்லது ஒரு உறவு நம்மை நெருங்கி, நம்மை ஊடுருவி, நம்மில் கலந்து, நம்மைக் கட்டுப்பாடிழக்கச் செய்வது குறித்த பொருள் கொண்டது. எப்போதும், என் சொற்களின் பாத்திரத்தில் அனுபவங்களின் சாரம்.

இக்கவிதைத் தொகுப்பில் பெண்சார்ந்த பிரச்சனை, இயற்கையை முன்வைத்து எழுதிய கவிதை, ஆண்xபெண் என்கிற உரையாடலான கவிதை என்கிற வகையில் அமைந்துள்ளதாக வாசிக்க முடிகிறது. இதைத் தவிர்த்து உங்களது நிலத்தை, உங்களது அடையாளத்தை பதிவு செய்ய புதிய மொழியிலான வடிவரீதியான சோதனையை முயலவில்லையா?

சில நேரடிக் கவிதைகள் தவிர்த்து, நான் எதிர்பால் நோக்கிய கவிதையாக எழுதப்பட்டது அரசியல் கவிதையாக உணரப்பட்டது.. நான் அறத்தின்பால் எழுதிய கவிதைகள் அன்புக்குரியவருக்கென புரியப்பட்டது. எழுதப்பட்ட கவிதைக்கு வாசிப்பின் பல பிரதிகள். என் கைகள் பல திசைகள் நோக்கி இருந்தாலும்,

என் கால்கள் என் நிலத்தில் வேர்பிடித்தவை. எனவே, என் கவிதைகளின் பின்புலமாக என் நிலத்தை நீங்கள் பார்க்கலாம். என் நிலம் குறித்த பிடித்தங்கள் தீராதவை. என் நிலம் பற்றி இன்னும் ஆழமாய் எழுதுவேன்.

பால்யகால சூழலை வைத்து தொடர்ந்து கவிதை வருகிறது. குறிப்பாக தாத்தா பாட்டியின் நினைவு, சொந்த ஊரை விட்டு வந்த ஏக்கம், தெருக்களின் நினைவு என கவிதைத் தொகுப்பு முழுக்க எழுகிற சூழல் இருக்கிறது. கோடை நகர்ந்த கதைத் தொகுப்பில் அப்படியான முறை கவிதை இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. திட்டமிட்டுத்தான் தவிர்த்தீர்களா?.

பால்யத்தின் காலம் எல்லாருக்கும் ஒரு வெளுத்த காலையைப் போன்றது. அப்போது மகிழ்வின் நிறம் வெள்ளையாகவே இருந்தது. ஆனால், நம்மை நெகிழ்த்திய, உறைவித்த, அழுத்திய, புறந்தள்ளிய ஞாபகங்கள் காலத்தின் வடிகட்டியில் தேங்கியிருப்பவை. அவை கவிதைகளாகின்றன.

காதல் கவிதையை பெண்கள் எழுதினால் அக்கவிதை அவர்களது perssonel சார்ந்த விஷயம் என்றும் கவிதையில் வரும் ஆண் என்கிற கதாபாத்திரம் நிஜத்தில் அப்பெண் கவிஞரின் உண்மையான காதலன் என்கிற தவறான அபிப்பிராயம் தமிழ்ச் சூழலில் நிலவுகிறதே. உங்களது கருத்து என்ன?.

பெண் மனதின் வெற்றிடங்களை ஒரு காதலனால் மிகச்சிறு அளவே நிரப்ப முடியும். ஆணின் முதுகுக்குப் பின்னால் பெண்ணுக்கான பெருவெளி இருக்கிறது. அவள் காதல் அளவிட முடியாதது. அவள் காதலுக்குள் கவிதைகளுக்குள் அவளுக்குப் பிடித்தமான ஆணின் முகத்தைத் தேடுவது அபத்தமானது. தெளிந்தபின் பாருங்கள் – எல்லாக்குளங்களிலும் ஒரே நிலாதான் தெரியும்.

கவிதை தவிர்த்து வேறு எதில் உங்களது ஈடுபாடு?
இசை இன்னொரு பிடித்தம் இசை கோர்க்கப்பட்ட பாடல்கள்… உள்ளத்தின் உதடுகள் ஏதோ ஒரு பாடலை எப்போதும் முணுமுணுத்தவாறே இருக்கின்றன. வெளி இரைச்சல்கள் என் இசையை ஒருபோதும் தொந்தரவு செய்வதே இல்லை.

பயணங்கள் எப்போதும் சொந்தங்களை நோக்கிய செய்த செல்லுகைகள் சமீபமாய் நண்பர்களுடன் இலக்கியத்திற்கான நிறைய பயணங்களாகவும் மாறியிருக்கின்றன. என் பாதை மருங்கில் இன்னும் பச்சையம் கூடியிருக்கிறது..

நண்பர்கள், சொந்தங்கள் தவிர்த்து அலுவல் காரணமாய் நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது இலக்கியத்தின் வாயிலாகக் கிடைத்த நண்பர்களின் உடனிருப்பும், ப்ரியமும் அலாதியானவை. நண்பர்கள் சூழ்ந்த வாழ்வு முற்றிலும் ஆசிர்வதிக்கப்பட்டதாக மாறியிருக்கிறது.

உங்களது கவிதைகளுக்கு ஆதர்ஷமாக அமைந்த கவிஞர்களைப் பற்றி சொல்ல முடியுமா?

உண்மையில் என் முதல் கவிதைக்கு முன்பு வரை நான் கவிதையெழுதுவேன் என்று நான் நம்பியது இல்லை. நான் தொடர்ந்து படித்த சங்கப் பாடல்களின் மொழி தீராத ருசியுடையவையாய் இருந்தது. என் சொற்கள் அங்கிருந்து உதிர்ந்தவை என்று நினைக்கிறேன். கவிதைகள் எழுதப்பழகிய பிறகே நான் பிறர்கவிதைகளுக்குள் நுழைந்தேன். பெரிதாய் பாராட்டப்பட்ட வாழ்வியலைச் சொன்ன கவிதைகளை மட்டும் இல்லை. எளிய சொற்களால் மனதைப் புரட்டிப்போட்ட முகம் தெரியாத கவிஞனின் சின்னக் கவிதையையும் மனதால் வணங்குகிறேன்.

மிகச்சிறந்த கவிஞனாகப் போற்றப்படுபவரால் எல்லாக்கவிதைகளையும் சிறந்த கவிதைகளாக எழுத முடிவதில்லை. எளிய மொழியில் கவிதை பழக நினைப்பவர்கள் நான்கு வரிகளில் மிகச்சிறந்த கவிதையை எழுதி விட முடியும். இப்படி நிறைய கவிதைகளே எனக்கு ஆதர்ஷமாக இருக்கின்றன.

2016ம் ஆண்டு புத்தகக் கண்காட்சி மழை வெள்ளத்தினால் கால தாமதமாகத் தொடங்கியது.ஜுன் 3-ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை தீவுத்திடலில் நடந்தது. ஒவ்வொரு நாளும் புத்தகக் கண்காட்சியில் தமது அரங்கின் முன்பாக பதிப்பகங்கள் புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்பித்தன. இந்த பத்து தினங்களில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மழை வெயில் என சிரமம் பாராமல் லட்சணக்கனக்கான வாசகர்கள் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆண்டு நடந்த சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து சில எழுத்தாளர்களிடம் பத்திரிகையாளர்களிடம், அவர்களது கருத்துக்களைக் கேட்டோம்.

கெளதம சித்தார்த்தன் (எழுத்தளார்):
சின்னச் சின்ன குறைபாடுகளும் அசௌகரியங்களும் தீவுத்திடல் புத்தகக் கண்காட்சியில் இருந்தாலும் எனக்கு மனநிறைவாக இருந்தது. என்னுடைய 6 புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சிக்கென வெளியாகியுள்ளன. எதிர் வெளியீடான ‘முருகன் விநாயகன்’ என்கிற கட்டுரைத் தொகுப்பு இந்தக் கண்காட்சியில் அதிக பட்சமாக 750 பிரதிகளுக்கும் மேலாக விற்றதாக அனிஷ் கூறினார். இந்த நூலை நடிகை குஷ்பூ வெளியிட்டார். நான் உன்னதம் நடத்திய காலத்தில் புதுவகை எழுத்தை அறிமுகப்படுத்தி எழுதிய பல கட்டுரைகள் என்னுடைய சமகால எழுத்தாளர்களிடம் அதிக வசைகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. பல நண்பர்களின் ஆர்வத்துடன் இக்கட்டுரைகளைத்தொகுத்து, ‘யாராக இருந்து எழுதுவது?’. என்ற பெயரில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது.

இதுதவிர நான் முக்கியமாக கருதும் புத்தகங்களாக,
1. சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் கட்டுரை/ஆர்.பாலகிருஷ்ணன்/வெளியீடு: பாரதி புத்தகாலயம்

2. பார்வை தொலைத்தவர்கள் (நாவல் / யோசே சரமாகோ.மொ.பெ: எஸ். சங்கரநாராயணன் / வெளியீடு பாரதி புத்தகாலயம்)

3. லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் (கட்டுரை / எடுவர்டோ காலியானோ/ மொ.பெ: ப.கு.ராஜன் / வெளியீடு: பாரதி புத்தகாலயம்)

4. பாலைவனப்பூ (சுயசரிதை/ வாரிஷ்டைரி / எதிர் வெளியீடு/மொ.பெ: எஸ்.ஆர்ஷியா)

5. ஏகாதிப்பத்தியத்தின் பன்பாடு(கட்டுரை/ சிந்தன் பதிப்பகம் / ஜேம் பெட்ராஸ்)

6. இந்துக்களின் மாற்று வரலாறு (கட்டுரை / வென்டி தோனிகர் / எதிர் வெளியீடு)
எஸ்.ஏ. செந்தில்குமார்
(ஃபெமீனா மாத இதழ் பொறுப்பாசிரியர்)

பொதுவாக பொருட்காட்சிக்கு வரக்கூடிய இடம்தான் தீவுத் திடல் என்பதால், பபாஸியின் சென்னை புத்தகச் சந்தைக்கான புதிய இடம் ஒன்றும் அன்னியமானது அல்ல. பொதுப் போக்குவரத்தும் மோசமில்லை. பல திசைகளிலிருந்து இணைக்கும் பேருந்துகள் உள்ளன. சாலை வழி இணைப்புகளும் கூட மோசமில்லை. ஆனால் வட சென்னைவாசிகள் தவிர பிறருக்கு, நகரின் இன்னொரு மூலைக்குச் செல்லும் நெருக்கடி ஏற்படத்தான் செய்கிறது.

1. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்,
காலச்சுவடு பதிப்பகம்
தி.ஜாவின் படைப்புகளில் உள்ள நயமான சித்தரிப்பு, ரசிக்க வைக்கும் நய்யாண்டி, கதாபாத்திரங்களை ரசித்திருக்கிறேன். அவரின் படைப்புகளில் அம்மா வந்தாள் சிறந்தது என்று கேள்விப்பட்டு வாங்கினேன். தனது சாதிக்குள் இருந்த பிழைகளை, குறைகளை இவரைப் போல நய்யாண்டி செய்வதற்கு இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும்.

2. ராஜா வந்திருக்கிறார்-கு.அழகிரிசாமி,
காலச் சுவடு பதிப்பகம்
புத்தகத்தைப் புரட்டி சில பக்கங்கள் வாசித்தவுடனேயே கு.அழகிரிசாமியின் நடை எனக்குப் பிடித்தது. பிறரது சிபாரிசு மிகையல்ல என்ற எண்ணத்துடன் வாங்கிப் போட்டேன்.

3. கி.மு, விவிலியக் கதைகள்-சேவியர், அருவி வெளியீடு
பைபிள் ஒரு செழுமையான கதைக் களஞ்சியம். பெண்களுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக சமகாலப் பார்வையில் தெரியலாம். அவற்றை அவற்றின் காலத்தில் பொருத்திப் பார்க்கும்போது பைபிளின் கதைகளிலுள்ள விரிவும் ஆழமும் வசீகரிக்கக்கூடியது.

4. காரியக் காமராசர், காரணப் பெரியார், தொகுப்பு: மே.கா.கிட்டு, தோழமை வெளியீடு
இரண்டு காரணங்களால் இந்த நூலை வாங்க வேண்டாமென நினைத்தேன். ஒன்று, காமராசர் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழகத்தை முன்னேற்ற முயன்றது, ஏழைகளின் முதல்வராக இருந்தது ஆகியவற்றைப் பற்றி புதிதாக படித்துத் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. காமராசர் பற்றிய நூல்கள் பழம் பெருமை பேசுவதன்றி வேறில்லை என்று இடத்திற்கு வந்துவிட்டன. ஆனால், காமராஜரை ஒப்புமைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்த தனது இளவல்களையும் ராஜாஜி மாதிரியான பிராமண சக்திகளையும் பெரியார் விமர்சித்த விதம், விடுதலையின் தலையங்கங்கள் என்னைக் கவர்ந்தன. அன்றைய தி.மு.கவை பெரியார் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அம்சங்கள் இன்றளவிலும் தி.மு.க, அ.தி.மு.க விஷயத்தில் நிதர்சனமாகவே உள்ளன.

5. அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பை வாங்க வேண்டுமென நினைத்தேன். உண்மையும் கற்பனையும் கலந்து எழுதும் அவரின் தனித்துவமான நடை எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் ஒரு முறை அதே ஸ்டால் வழியே வரும் போது வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் வாழ்க்கையில் ஒரு போதும் கிடைப்பதில்லை, வந்த வழியே மீண்டும் சென்று விட்டதை முடிக்கும் வாய்ப்பு.

சுந்தரபுத்தன்: (பத்திரிகையாளர்)
சென்னை புத்தகக் காட்சி என்றாலே மனசுக்குள் உற்சாகம் வந்துவிடும். நண்பர்களைச் சந்திக்கலாம், நாம் விரும்பும் புத்தகங்களை வாங்கலாம். ஆனால் காயிதேமில்லத் கல்லூரி வளாகம், கிறிஸ்டியன் பள்ளி திடல், ஒய்எம்சிஏ என தொடர்ந்த புத்தகக் கண்காட்சிகளை விட தீவுத்திடல் சற்று வேறுமாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது. புத்தகக் காட்சிக்கு மிகவும் பொருத்தமான விசாலமான இடமாக தீவுத்திடல் இருந்தாலும், நடத்தப்பட்ட பருவகாலம்தான் தவறாக இருந்துவிட்டது.

பத்திரிகைப் பணியில் இருப்பதால் எல்லா காலகட்டத்திலும் வெளிவரும் புதிய நூல்களைக் கவனிக்கும் வசதி இருக்கிறது. அந்த நூல்கள் நம் கைக்கும் கிடைத்துவிடும். இந்த முறை வினோபாபாவேயின் கல்விச் சிந்தனைகள், ஆக்ஸ்போர்டு ஆங்கில இலக்கணம், தரம்பாலின் கட்டுரைத் தொகுப்பு, கொ.மா.கோ. இளங்கோ மொழிபெயர்ப்பில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற சித்திரக்கதைகள், திருலோக சீதாராம் மொழிபெயர்ப்பில் சித்தார்த்தன் நாவல், மெய்யியல், மார்க்ஸ் பற்றிய ஒரு நூல், வரலாற்று மானுடவியல், பிருந்தாசாரதியின் கவிதை நூல் என சிலவற்றை மட்டுமே என்னால் வாங்கமுடிந்தது.

இது புதினங்களின் பொற்காலமாக இருக்கிறது. தமிழ்நதியின் பார்த்தீனியம், விநாயக முருகனின் வலம், எஸ். செந்தில்குமாரின் காலகண்டம், முருகவேளின் முகிலினி, ஜோ.டி. குரூஸின் அஸ்தினாபுரம், கரன்கார்க்கியின் வந்தார்கள், அபிலாஷின் கதையின் முடிவுக்கு வந்துவிட்டீர்கள், வ. மணிகண்டனின் மூன்றாம் நதி, சல்மாவின் மனாமியங்கள், ஏக்நாத் எழுதிய ஆங்காரம், ஜெயமோகனின் வெண்முரசு, எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை உள்பட பல புதிய புதினங்கள் வெளிவந்துள்ளன. பலருடைய கவனத்தையும் ஈர்த்த நூலாக தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் பேசப்படுகிறது.

இந்தப் புத்தகக் காட்சியில் கேமராவும் கையுமாக அலைந்து திரிந்து எழுத்தாளர்கள், பதிப்பாளர்களின் அனுபவங்களை காட்சியாக பதிவுசெய்த ஸ்ருதி டிவியின் நண்பர் பாராட்டுக்குரியவர்.

செல்லமுத்து குப்புசாமி: (எழுத்தாளர்)
புத்தகத் திருவிழா என்பது புத்தகங்களுக்கான திருவிழா மட்டுமன்று. அது நண்பர்களைச் சந்திப்பதற்கும், உரையாடுவதற்கும், இலக்கிய அரசியல் பேசி கிசுகிசு வளர்த்துக் கொண்டாடவும் இயல்பாக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்வு. அந்த வகையில் புத்தகக் கண்காட்சி என்னளவில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் இந்த முறை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த அனுபவம் வேறு விதமானது. வழக்கமாக ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில் நடைபெறும் நிகழ்வு இவ்வருடம் நடக்கவில்லை. நூற்றாண்டின் மிகப் பெரிய துயரமான பெருமழை-வெள்ளத்தில் சென்னை சிக்குண்டு சீரழிந்து போயிருந்தது. அதன் துயரத்தில் இருந்து மீண்டிருக்கவில்லை. மனதளவில் யாரும் புத்தகங்களைப் பற்றிப் பேசவும், அவற்றைக் கொண்டாடவும் தயாராக இல்லை.

ஜனவரி பொங்கல் விடுமுறை சமயத்தில் பரவலான வரவேற்பு கிடைக்கும். இம்முறை ஜூன் முதல் வாரம் அரங்கேற்றியிருப்பது சற்று தவறுதலான முடிவு என்றே படுகிறது. சரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கும் சமயம் இது. ஜூன் முதல் வாரத்திற்குப் பதிலாக ஏப்ரல் அல்லது மே மாதம் வைத்திருந்தால் சற்று கூடுதலான வரவேற்பும், கவனமும் கிடைத்திருக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி இல்லையேல் பல பதிப்பாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்ற வகையில் இது ஆறுதலூட்டும் விஷயம். ஆனால் சென்னையில் காட்டும் முனைப்பை மற்ற ஊர்களிலும் காட்டி வாசிப்புப் பழக்கத்தை பரவலாக்குவதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களுக்கு புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் அவசியத்தை இந்த புத்தகக் கண்காட்சி ஓரளவேனும் பயன்படும் என்ற நம்பிக்கையில் புத்தகங்களை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே வாங்குவதில்லை என்ற போதும், புத்தகம் வாங்குவதற்கு மட்டுமே புத்தகக் கண்காட்சிக்கு வருவதில்லை என்ற போதும் என்ன மாதிரியான நூல்களை இம்முறை வாங்கினேன் எனப் பகிர்வதில் மகிழ்ச்சி.
ஒரு கூர்வாளின் நிழலில் – தமிழினி – காலச்சுவடு பதிப்பகம்

நமக்கு எதுக்கு வம்பு – கார்ட்டூனிஸ்ட் பாலா – யாவரும் டாட்காம் வெளியீடு
Dissenting Diagnosis – Dr.Arun Gadre & Dr.Abhay Shukla – Published by Random House
நல்ல தமிழ் எழுதுவோம் – என்.சொக்கன் – கிழக்கு பதிப்பகம்
காற்று வளையம் – பாஸ்கர் சக்தி – டிஸ்கவரி புக் பேலஸ்
ஏ.கே. செட்டியார் படைப்புகள் – இரண்டு பாகங்கள் – சந்தியா பதிப்பகம்
மற்றும் அபாயப் பேட்டை (ரமேஷ் வைத்யா), ஆமை காட்டிய அதிசய உலகம் (பாலபாரதி) உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்கள்..
கொ.மா.கோ.இளங்கோ: (குழந்தை இலக்கிய எழுத்தாளர்)
அண்மையில் சென்னை தீவுத்திடல் மைதானத்தில் கோடிக்கணக்கான புத்தகங்களுடன் கூடிய அறிவுத் திருவிழா நடந்தேறியது. கோடையின் உக்கிரமும் பள்ளிக்கூட வகுப்புகள் தொடங்கிய காரணமும் மாணவச் செல்வங்களுக்கு தடையாக அமைந்தன. 500 பக்கங்களுக்கு மேலான கதைகளும் மொழியாக்கப் புத்தகங்களும் கவனிக்கப்பட்ட அளவுக்கு சிறுவர்களுக்கான புத்தகங்கள் கவனம் பெறவில்லை. அனைத்துத் தனியார் பள்ளிகளும் கல்விக்கட்டணம் வசூலிப்பதில் கவனம் செலுத்திய அளவுக்கு மாணவர்களை ஒன்றுதிரட்டி பல குழுக்களாக கண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் ஆயத்தப் பணிகள் செய்யத் தவறிவிட்டன.

பள்ளிப்பாட நூல்களைத் தவிர்த்து இயற்கை குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி, வரலாறு சொல்லும் சுவையான சம்பவங்கள் பற்றி, விலங்குகளின் விநோத வாழ்வியல்குறித்து, அறிவியல் விந்தைகள் என அறிவுவளர்ச்சிக்குத் தேவையான பல கருத்துகளை புத்தங்கள் வாயிலாகத்தான் எதிர்வரும் சமுதாயம் கற்றுச் சிறக்கவேண்டும். அண்மையில் வெளியான சில அற்புதமான புத்தங்களை தமிழ்ச் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சுற்றுச்சூழல் அறிஞர்களின்… / ஏற்காடு இளங்கோ/அறிவியல் வெளியிடு.
’இயற்கையின் ஒரு பகுதிதான் மனிதன். ஆனால் அவன் இயற்கை மீதே போர் தொடுக்கிறான். உண்மையில் அவன், தன்மீதே போர் தொடுக்கிறான் என்கிறார் சுற்றுச்சூழல் பெண் அறிஞர் ரேச்சல் கார்சன். இயற்கையைப் பாதுகாக்க தங்களது வாழ்நாளையே அர்ப்பணித்துப் பணியாற்றிய மற்றும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் 35 அறிவியலாளர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய புத்தகம்.

1730ம் ஆண்டு இந்தியாவின் அமிர்த்தா தேவி என்கிற கிராமத்துப் பெண் மரங்களைப் பாதுகாக்க தனது மூன்று பிள்ளைகளுடன் உயிர் துறந்தார் என்கிற சம்பவம், படிப்பவர் மனதிலிருந்து நீங்காமல் இடம் பிடிக்கிறது.

எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்/ புக்ஸ் ஃபார் சில்ரன்/ மருதன்
நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், அலெக்சாண்டர் போன்ற தலைவர்களின் வாழ்வில் ஒரு சில குட்டிக்கதாபாத்திரங்கள் நுழைந்து அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே, ‘எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும்’ என்கிற 12 வரலாற்றுக் கதைகள் அடங்கிய புத்தகம். வர்ஷினி என்கிற சிறுமியின் துணிச்சலான பேச்சு, மாவீரன் அலெக்சாண்டரின் உலகை ஆளும் திட்டதை முடிவுக்குக் கொணர்ந்து அவரை இந்தியாவை விட்டு திரும்பிச் செல்ல வைத்ததும், ஜிம் என்ற சிறுவனது வாழ்வில் நீங்கா இடம் பிடித்த நெல்சன் மண்டேலாவின் கதைகளும் அற்புதம். மருதனின் எழுத்து இளம் சிறார்களின் இதயத்தைக் கவர்கிறது.

எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல் / ஆதி. வள்ளியப்பன் /
புக்ஸ் ஃபார் சில்ரன்.

அன்றாட வாழ்க்கையின் பல செயல்பாடுகளுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகளை சிறுவர்களுக்கு ஏற்ற எளிய நடையில் இதிலுள்ள கட்டுரைகள் விளக்குகின்றன. முட்டைநீள்வட்டமாக இருப்பது ஏன் என்ற கேள்வி முதல் ஏ.டி,எம் எப்படி வேலை செய்கிறது என்பது வரை பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். ’கொதிக்கும் பூமி’,’நம்மைச் சுற்றி காட்டுயிர்’ போன்ற சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் சார்ந்த நூல்களைப் படைத்த ஆதி. வள்ளியப்பன் எழுதிய இந்த நூல் அறிவியல் குறித்த உண்மைகளை விளக்குகிறது.

விலங்குகளின் விசித்திர உலகம் / எஸ்.சுஜாதா / புக்ஸ் ஃபார் சில்ரன்
தேனீ, பெங்குவின், ஆப்பிரிக்க யானை, பாண்டா கரடி, சீல், டால்பின், நீர்யானை என வாழ்விடங்கள், விதவிதமான வாழ்க்கை நடத்தைகள் கொண்ட விலங்குகளின் அற்புத உலகிற்குள் குழந்தைகளைக் கைப்பற்றி அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அவர்களது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வாயிலாக விளக்கங்களை இயல்பாக எடுத்துச் சொல்லும் நூலாசிரியர். விலங்குகள் குறித்த அக்கறையும் நேசமும் கொண்டவர் என்பதை புத்தகத்தைப் படிக்கிறபோது நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

அறிவியல் அ முதல் ஃ வரை / ஆத்மா கே.ரவி, ஆயிஷா இரா.நடராசன் / புக்ஸ் ஃபார் சில்ரன்.
அறிவியல் குறித்த பல்லாயிரம் விவரங்கள், அறிவியல் பதங்களுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருட் குறிப்புகள், கண்டுபிடிப்புகள் மற்றும் இருநூறுக்கும் அதிகமான அறிவியல் அறிஞர்கள் பற்றிய விவரங்கள் என கற்போர் , கற்பிப்போருக்கான கையேடாக விளங்கும் நூல்.
ஆமை காட்டிய அற்புத உலகம் /
யெஸ்.பாலபாரதி / புக்ஸ் ஃபார் சில்ரன்.

ஜுஜோ எனும் வயதான ஆமையின் துணையுடன் நான்கு சிறுவர்கள் அற்புதமான கடலுலகை கண்டு திரும்புவதைப் பற்றிய கதை. சுற்றுச்சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாக சிறுவர்கள் மனதில் இந்நூல் கடல் குதிரை, திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், திமிங்கலம், ஆக்டோபஸ், சுறா, டால்ஃபின்கள் போன்ற கடல்வாழ் உயினங்கள் பற்றிய உண்மைச் செய்திகளும், அவை கடலை ரசிக்க வந்த சிறுவர்களுக்கு உதவிய கற்பனைச் சம்பவங்களும் கதை வாசிக்கும் சிறுவர்கள் மனதில் இனம்புரியாத ஓர் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
கதைடாஸ்கோப் / ஆயிஷா இரா.நடராசன் /
புக்ஸ் ஃபார் சில்ரன்.

கலைடாஸ்கோப் எளிய கணித தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது கலைடாஸ்கோப்பில் உள்ள மூன்று பட்டை வடிவ கண்ணாடிகளால் எட்டு மாய பிம்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
ஆயிஷா இரா.நடராசனின் இந்தப் புத்தகத்தில் கதறியழும் சிங்கம், உதார்விடும் சுறாமீன், அயல் கயம் மயல் முயல் குட்டிகள் என பல விலங்குகள் கதைகளுக்குள் நுழைந்து ஆடல் பாடல் என சிறுவர்களைக் கவரும் கதாபாத்திரங்கள் வருகின்றன. குழந்தைகள் ரசிக்கும் பல சிறுசிறு கதைகளை உள்ளடக்கியது கதைடாஸ்கோப்.

வைத்தியர் மாருதி / கொ.மா.கோதண்டம் / புக்ஸ் ஃபார் சில்ரன்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்வனங்களில் உள்ள விலங்குகள் பறவைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட சிறுவர் நாவல். காட்டின் அரசரான யானையும் அவரின் அரசவை மந்திரியும் வைத்தியருமான மாருதியும் இணைந்து பிற காட்டு உயிரினங்களைக் காக்க எடுக்கும் நடவடிக்கைகள், வைத்தியர் மாருதி சிறுவர் நாவலைப் படிக்கிற குழந்தைகளுக்கு வனங்களைச் சுற்றிப்பார்த்த பேரானந்தம் கிடைக்கிறது. பெரியவர்கள் பலரும் இதுவரை கேட்டிராத விலங்குகளைப் பற்றிய வியப்பான பல தகவல்களும் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. வன அதிசயங்கள் மனதுக்கு உற்சாகத்தை அளிப்பதாக உள்ளன.

Related posts

Leave a Comment