You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்…

என்.குணசேகரன்
மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியமான திருப்பம் எது?இந்தக் கேள்விக்கு விடைகள் பல இருக்ககூடும். ஆனால்,வரலாறு, புதிய எல்லைகளைத் தொடுவதற்கு உதவிய சிந்தனை என்ற அளவுகோல் அடிப்படையில் பார்த்தால், கம்யூனிஸம் எனும் சிந்தனைதான் மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியத் திருப்பம் என கூற முடியும்.ஏனென்றால் கம்யூனிஸம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பிற்கு எதிராக, எதிர்நீச்சல் போட்டு வரும் தத்துவம்,அது.

இதனை, பிரெஞ்ச் மார்க்சிய சிந்தனையாளர் அலைன் பதேயு, கம்யூனிஸம் – நாகரிக வரலாறு முழுவதும் என்றென்றும் இடையறாது, நீடித்து வரும் ஒரு எதிர்ப்பு நிகழ்வு(counter-current) என்றார்.

‘முந்தைய காலங்களைவிட தற்போது ,கம்யூனிஸம் எனும் சிந்தனையை வலுவாக முன்னிறுத்த வேண்டிய காலம் இது’ என வலியுறுத்தி வரும் சிந்தனையாளர் அலைன் பதெயு(AlainBadiou). அவரது இந்தக் கருத்தாக்கம் கம்யூனிஸ்ட் கருதுகோள்(communist hypothesis) என்று அழைக்கப்பட்டு பரந்த அளவில் விவாதிக்கப்படுகிறது.இதே தலைப்பின் கீழ் அவரது சிந்தனைகள் தொகுக்கப்பட்டு,நூலாக வெளிவந்தது.ஐந்து தலைப்புக்களில் தனது கம்யூனிஸ தத்துவச் சிந்தனைகளை அவர் விளக்குகிறார்.

கடந்த இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளையும்,19-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பாரிஸ் கம்யூன் எழுச்சியையும் மையமாகக் கொண்டு தனது தத்துவார்த்த சிந்தனையை விளக்குகிறார் பதேயு.இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மே.68 இயக்கம் என்றழைக்கப்படும் பிரெஞ்ச் மாணவர் இயக்கத்தையும்,சீனாவில் நிகழ்ந்த- தற்போது மறந்து போன- கலாச்சாரப் புரட்சியையும் விளக்குகிறார்.

நூலின் கருப்பொருளை விளக்குகிறபோது பதேயு இவ்வாறு குறிப்பிடுகிறார்: இந்த நூல்,மூன்று எடுத்துக்காட்டுகளை முன்வைத்து விரிவாகப் பேசுகிறது.மே ’68, கலாச்சாரப் புரட்சி,பாரீஸ் கம்யூன்ஆகிய மூன்று நிகழ்வுகளும்,வெளிப்படையான, சில சந்தர்ப்பங்களில் இரத்த ஆறு சிந்திய நிகழ்வுகள்; இந்த நிகழ்வுகளின் தோல்விகள் கம்யூனிஸ்ட் கருதுகோளுடன் பின்னிப் பிணைந்தவை;அதன் வரலாற்றுக் கட்டங்களாகவும் அவை விளங்குகின்றன.

(கம்யூனிஸ மாற்றத்திற்கு) தடைகள் பல கொண்டுள்ள இந்த உலகில் மேற்கண்ட இந்த உண்மையான நிகழ்வுகள்,பொதுத் தன்மைகள் கொண்டனவாக உள்ளன.அவற்றை வரையறுக்க முயல்வதுதான் இந்த நூலின் நோக்கம் என்கிறார் பதேயு.

தத்துவத்தின் துணை
கம்யூனிஸ இலட்சியத்தை அடைய தத்துவத்தைக் (philosophy) கருவியாகப் பயன்படுத்துகிறார் பதேயு.அன்றாட வாழ்க்கையில் முதலாளித்துவ ஒழுங்கு ஏற்படுத்தும் அழிவிலிருந்து மனிதனை விடுதலை செய்யும் வல்லமை கொண்டது தத்துவம் என்ற பார்வையோடு தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அநீதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிராக அமைப்புரீதியான எதிர்ப்பியக்கத்திற்கு தத்துவத்தின் துணை தேவை என்பதனை பதேயுவின் எழுத்துக்களில் உணர முடியும்.

தனது தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்த, மேற்கத்திய உலகில் அதிகமாக வெறுக்கப்படும் கம்யூனிஸம் என்ற சொல்லை ஏன் அவர் பயன்படுத்துகிறார்?

‘கம்யூனிஸம்’ என்ற சொல்லை நான் நேசிக்கின்றேன்.ஏனெனில்,அது ஒரு சமூகத்தைப் பற்றிய பொதுவான சித்திரத்தை முன்வைக்கிறது. அந்த சமூகத்தில் சமத்துவம் கோலோச்சும்; அது ஒரு புதிய உலகத்தைக் காட்டுகிறது. அந்த உலகத்தில், பாரம்பர்யமாக இருந்து வந்த சொத்து, உழைப்புப் பிரிவினை, பாகுபாடுகள், அரசின் அடக்குமுறை,பாலின வேறுபாடுகள் போன்ற அனைத்தும் மறைந்து போன உலகாக அது திகழ்கிறது. சமூக பன்முகத்தன்மைகள் பல இருந்தாலும் ஒவ்வொரு நபரும் மற்றவருக்குச் சமம் என்கிற நிலையைத்தான் நான் கம்யூனிஸமாகப் பார்க்கின்றேன்’

தத்துவத்துறை சார்ந்த மார்க்சிய பங்களிப்புக்கள் இன்றைக்கு மிகவும் அவசியம்.மார்க்சிய அரசியல், பொருளாதார விமர்சனங்கள் வெளிவரும் அளவிற்கு தத்துவப் படைப்புக்களும்,விவாதங்களும் குறைவு.அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் மார்க்சிய தத்துவ விவாதம் வளர்ச்சி பெறவில்லை.இந்த நிலையில் அலைன் பதேயு படைப்புக்கள் தத்துவ சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

வர்க்க விடுதலை சார்ந்த அரசியலுக்கு தத்துவத்தின் துணை இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்ற வரலாற்றுப் படிப்பினையை உணர்ந்தவர்கள் பதேயுவின் எழுத்துக்களின்மீது மிகுந்த அக்கறை கொள்வார்கள். அவரது எழுத்துக்களில் முரண்படக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. இருந்தாலும் மார்க்சிய தத்துவ வளர்ச்சி முற்றுப் பெற்ற ஒன்று அல்ல என்கிற கண்ணோட்டத்துடன் பதேயு மீதான விமர்சனங்களை முன்வைக்கலாம்.

உண்மையில், சீன கலாச்சாரப் புரட்சியைப் பற்றி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பார்வைகளுக்கும் பதேயுவின் பார்வைக்கும் வித்தியாசங்கள் உண்டு. அதே போன்று மே 68-பிரெஞ்ச் மாணவர் இயக்கம் குறித்தும் வேறுபட்ட பார்வைகள் உண்டு. ஆனால் மாறுபட்ட கோணத்தில் அவர் கலாச்சாரப் புரட்சியையும், மே68-இயக்கம் மற்றும் பாரிஸ் கம்யூன் பற்றி விவரிக்கும்போது அது ஆராயப்பட வேண்டியதாக அமைந்துள்ளது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் புரட்சி என்பது நேர்கோட்டுப் பாதையில் நிகழ்ந்துவிடாது. அது சிக்கலான நிகழ்வுகள் பலவற்றை எதிர்கொண்டு முன்னேற வேண்டியுள்ளது.இதற்கு ஒவ்வொரு நிகழ்வையும் புரிந்துகொள்ளும் வகையிலான மார்க்சிய தத்துவ விவாதங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.

தோல்வியின் முக்கிய புள்ளி
பாரிஸ் கம்யூன் போன்ற தோல்வியைத் தழுவிய நிகழ்வுகள் குறித்துப் பேசும்போது எந்த விஷயம்(point) தோல்வியில் கொண்டு சென்றது என்பதை ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகிறார், பதேயு. இதையும் தத்துவ நோக்கில் கூறுகிறார்.

எந்தத் தோல்வியாக இருந்தாலும் தோல்விக்கான காரணத்தை ஒரு முக்கிய புள்ளியில் நிறுத்தலாம் என்கிறார். இதனால்தான், ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்…இறுதியாக ஒரு உண்மையினைக் கட்டியமைத்து அதனை நேர்மறையான ஒரு பொதுமையின்(…can be incorporated into the positive univarsality of the construction of a truth) கீழ் கொண்டு வர இயலும்.’என்கிறார்.

இதனையே சாதாரண கம்யூனிஸ்ட் ஊழியர்களும் அறியும் வகையில் மாசேதுங் ஒரு கோஷமாக எழுப்பினார். “போராடு! தோல்வியைத் தழுவிடு!மறுபடியும் தோல்வி,மறுபடியும் போராடு..வெற்றி ஈட்டும்வரை மறுபடியும்,மறுபடியும் போராடு. ஏனென்றால் கம்யூனிஸத்திற்கு எதிராக தொல்லை கொடு: தோல்வியைத் தழுவிடு! மறுபடியும் தொல்லை ஏற்படுத்து” என்பது உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்தியவாதிகள், பிற்போக்காளர்களின் தர்க்கமாக இருக்கிறது. எனவேதான் மேற்கண்ட கோஷத்தை மாவோ எழுப்பினார்.

கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூக மாற்றத்திற்கான புரட்சிகளையும் எழுச்சிகளையும் போற்றிப் பாதுகாக்கும் மகத்தான பணியினை பதேயு ஆற்றியுள்ளார்.அவரது விளக்கங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் புரட்சிகர எழுச்சிகளின் மேன்மைகளையும் மாண்புகளையும் பாதுகாப்பது என்ற அவரது உறுதிப்பாட்டை மறுக்க இயலாது.

மேற்கத்திய உலகில் கம்யூனிஸம், வர்க்கப் போராட்டம் போன்ற சொற்றொடர்கள், கடந்த 30 ஆண்டுகளாக வேட்டையாடப்பட்ட சொற்களாக இருந்து வந்துள்ளன.’ நமது மொழியை விட்டு விடாதீர்கள்’ என்று பதேயு கம்யூனிஸ்ட்களுக்கு அறிவுறுத்துகிறார். ஏனெறால் சொல்லைக் கைவிடுவதிலிருந்து துவங்கும் சரணாகதி, இறுதியில் கம்யூனிஸ இலட்சியத்தை எதிரிகள் காலடியில் அடகு வைப்பதை நோக்கிச் சென்றிடும் என்பது அவரது எச்சரிக்கை!
(தொடரும்)

Related posts

Leave a Comment