You are here

இடப்பக்கம்

ச. தமிழ்ச்செல்வன்

கடந்த மாதம் அதிகமான புத்தகங்களைத் தொட்டுத் தழுவிய மாதமாக அமைந்தது. சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு முக்கியமான காரணம்.அதல்லாமலும் புத்தக வெளியீடு புத்தகத்தை முன் வைத்த கருத்தரங்கு எனவும் பயணங்கள் வாய்த்த மாதமாக இருந்தது.

தஞ்சாவூரில் இரு புத்தகங்கள் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது..விஜய் பிரசாத் எழுதி ச.சுப்பாராவ் மொழிபெயர்த்த பாரதி புத்தகாலயத்தின் “இடது திருப்பம் எளிதல்ல” என்கிற புத்தகத்தை முன் வைத்த கூட்டத்தை தமுஎகச தஞ்சை நகரக்கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள், கவலைகள், விமர்சனங்கள் இவற்றை ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் பேசுகிற புத்தகம் இது. கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து இந்தியாவிலும் உலகெங்கிலும் பல அறிவுஜீவிகள் ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். சிலவற்றை வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான மனோபாவத்துடன் எழுதப்பட்ட புத்தகங்களே அதிகம். கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அறிந்துகொள்ள கம்யூனிஸ்ட் விரோதிகள் எழுதிய புத்தகங்களைப் படிப்பதுதான் ஒரு அறிவுத் துறை மரபாக தமிழகத்திலும் உலகிலும் தொடரும் பண்பு. ஆனால் விஜய்பிரசாத் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆவணங்களின் மூலமாகவே கம்யூனிஸ்ட் கட்சியைப் புரிந்து கொண்டு விவாதிக்கிறார். ஆகவே, புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது மனம் காயப்படாமல் வாசித்து நீண்ட பெருமூச்சுடன் முடிக்க முடிந்தது. இப்படிப் புத்தகங்கள் மிகவும் அபூர்வமாக வருபவை.

விஜய்பிரசாத்தின் மொழியும் அதை ச.சுப்பாராவ் மொழிபெயர்த்திருக்கும் அழகும் லாவகமும் என்னை மிகவும் ஈர்த்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான என் வாசிப்பனுபவத்தின் முக்கியமான பகுதியாக இருக்கும் கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் என் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தடங்களின் மீது கால் பதித்து நடந்து சென்ற இப்புத்தகம் தந்த வாசிப்பு இன்பம் அலாதியானது. எதைப்பற்றி ஒரு புத்தகம் பேசுகிறது என்பது மிக முக்கியம்.அதே அளவு முக்கியமான ஒன்றாக அப்புத்தகம் தரும் வாசிப்பு சுகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

“ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்” என்கிற அந்தோனியோ கிராம்ஷியின் மேற்கோளுடன் புத்தகம் துவங்குகிறது. இந்தியாவின் அரசியல் வரலாற்றை-குறிப்பாக சோசலிசம் என்னும் கருத்தாக்கம் பெற்றிருந்த செல்வாக்கின் வரலாற்றை இப்புத்தகம் அலசுகிறது. மிக்க்கூர்மையான வார்த்தைகளில் வரலாற்றின் முக்கிய தருணங்கள் நினைவுகூரப்படுகின்றன.

ஆராதனைக்குரிய வெறும் விக்கிரகமாக காந்திஜி மாறிப்போனதையும் அவர் ஒரு குறியீடாக,மேற்கோள் காட்ட உதவுபவராக மாறிநிற்பதையும் சொல்லும் அதே பத்தியில் சோசலிஸ்ட்டான லோகியா பகுத்தறிவாளரான பெரியார் ஆகியோரைப்பற்றியும் அதே வீச்சில் குறிப்பிடுகிறார். “லோஹியா, பெரியார் ஆகியோரது பாரம்பரியங்கள் இன்னும் மோசம்.அவர்களது கட்சிகள் இன்றைய அசமத்துவத்துக்குத் தம்மை முழுமையாக சமரசம் செய்து கொண்டுவிட்டன. லல்லு அல்லது கருணாநிதி போன்றோர் எப்போதாவது ஆற்றும் புரட்சிகர உரைகளால் ஒருவர் தவறான முடிவுகளுக்குப் போய்விடக்கூடும். ஆனால் அவை எல்லாம் அவர்களது ஆரம்ப காலங்களின் வெற்று நினைவுகள்” இந்த வரிகளின் உள்ளடக்கத்தில் அற்ப சந்தோஷப்பட்டு நின்றுவிடாமல், என் ஆரம்ப நாட்களின் உணர்வெழுச்சி எனக்குள் இன்றும் அப்படியே இருக்கிறதா அல்லது வெற்று நினைவு என்னும் இடத்தை நோக்கித் திரும்பியிருக்கிறதா என்கிற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்ளத் தூண்டும் வாசகமாக இவ்வரிகளை நான் எடுத்துக்கொண்டேன்.

“கம்யூனிசம் தோற்கடிக்கப்படலாம். பலமுறை தவறான வழியில் சென்று விடலாம். ஆனால் போராட்டத்தின் மூலமாக சுயவிமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று விஸ்வரூபமாக மீண்டும் எழும்” என்கிற மார்க்சின் வரிகளில் தோய்ந்து நம் நிற்க வேண்டிய காலமல்லவா இது. ஆகவே யாரைப்பற்றி விமர்சனம் வைத்தாலும் அதன் மறுபக்கமாக அதே விமர்சனத்தை என் மீது-நம் மீது- வைத்துப் பார்க்கும் ஒரு மனநிலை சமீப ஆண்டுகளாக எனக்கு ஏற்பட்டு விட்டது. இப்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்க இம்மனநிலையும் ஒரு காரணம் எனலாம்.

இந்திய சோசலிசத்தின் (சோசலிஸ்ட்டுகள், காந்திய சோசலிஸ்ட்டுகள், பகுத்தறிவாளர்கள எனப் பலரும் முன் வைத்த சோசலிசமே இந்திய சோசலிசம் என்னும் வார்த்தைகளால் சுட்டப்படுகிறது) வீழ்ச்சியை ஆராயாமல் இந்தியக் கம்யூனிசம் தனிமைப்பட்டுப் போனதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்கிற மைய அச்சில் சுழலும் இப்புத்தகம் சோசலிசத்தை முன் வைத்த இயக்கங்களின் சரிவையும், தத்துவார்த்த வீழ்ச்சியையும் வரலாற்றிலிருந்து உருவி எடுத்த வார்த்தைகளில் பேசுகிறது.

இந்தியாவின் பொதுவரலாற்றோடு இணைத்துத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் பேசமுடியும் என்பதைப்போலவே ’கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை நாட்டின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து பிரித்து வைத்துப் பார்க்கவும் முடியாது’ என்று அடுத்த பக்கத்துக்கு நகரும் புத்தகம், வர்க்க அரசியல் போராட்டச் செயல்பாடுகள் உற்பத்தி இடத்தில் தீவிரமாக இருந்த நாட்கள் போய் இன்று உழைக்கும் வர்க்கம் நுகர்வு மட்டத்தில் போராடத் தனது புரட்சிகர சக்தியைச் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறது.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் எழுச்சியும் பின்னடைவும் குறித்து வெளிப்படையான கருத்துக்களை விஜய்பிரசாத் முன்வைக்கிறார்.

விஜய்பிரசாத் தன் வாதங்களை வெறும் கருத்துக்களாக மட்டும் வைக்காமல் வாசக மனதில் சில காட்சிப்பிம்பங்களை எழுப்பி முன் நகர்கிறார்.இது நமக்குள் வரலாற்றுரீதியான அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்த உதவுகிறது. உதாரணமாக இரண்டைக் குறிப்பிடுகிறேன். காங்கிரஸ் முன் வைத்த சோசலிசத்தின் கதையைச் சொல்ல இரு பிம்பங்களை நினவுபடுத்துகிறார். ஒன்று காந்தியின் கையில் இராட்டையுடனான பிம்பம். இன்னொன்று ராஜீவ்காந்தி எந்நேரமும் கையில் வைத்திருந்த லேப்டாப் (தோஷிபா-75200). ஒரு காந்தியின் கையில் இராட்டை. இன்னொரு காந்தியின் கையில் லேப்டாப். காந்தியின் ‘தர்மகர்த்தா’ முறையிலிருந்து நவீன தாராளமயத்தை நோக்கிப் பாய்ந்த கதையை இவ்விரு பிம்பங்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.அதேபோல கல்கத்தாவின் ஒரு பகுதியில் ஒரு முனையில் சிபிஎம் அலுவலகமும் இன்னொரு முனையில் அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டீஸின் தலைமையகமான மதர்ஸ் ஹவுஸும் அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். “தானம் ஏழைகள் உயிர் வாழவும், பணக்காரர்கள் தம்மை மனிதர்களாக உணரவும் உதவுகிறது.நாங்கள் விரும்புவது வர்க்கப்போராட்டத்தை அல்ல” என்று சொன்ன அன்னை தெரசாவும் வர்க்கப் போராட்டத்தைத்தவிர வேறு எதனாலும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிட்டாது என இயங்கும் சிபிஎம்மும் ஒரு சாலையின் எதிரெதிர் முனைகளில் நிலைபெற்றிருக்கும் காட்சியை விஜய் பிரசாத் நம் முன் நிறுத்துகிறார்.

பல அரசியல் நிகழ்வுகளையும் வரலாற்றுப்புள்ளிகளையும் மிகுந்த கவித்துவமான சொற்களில் அவரால் விளக்க முடிவது இப்புத்தகத்தின் இன்னொரு அழகு. “தீர்வுகளைப் பிழிந்தெடுக்க கார்ப்பொரேட்டுகள் விரும்பிய பயில்வான் ஒருவர் வந்து விட்டார்” என்று மோடியைப்பற்றிக் குறிப்பிடுவதும் சோசலிசக் கருத்தாக்கத்தை “ஒற்றை ஆளாய் கம்யூனிஸ்ட்டுகள் பாதுகாத்து நிற்கும் நிலை உருவாகியிருப்பதை” குறிப்பிடுவதும், சிங்கூர், நந்திகிராமில் இடதுசாரிகள் இழைத்த தவறுகளுக்கான தண்டனையை இன்னும் சிறிது காலத்துக்கு அனுபவிக்கத்தான் வேண்டும் என்று சொல்வதும் போன்ற பல பகுதிகள் இருக்கின்றன.

இன்னும் சொல்லலாம் வாசிப்பு அனுபவத்தை..எனினும் தோழர்கள் அவசியம் வாசித்து அனுபவிக்க வேண்டிய புத்தகம் என்பதை மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.

மறுநாள் அதே தஞ்சையில்,தோழர் பசு. கெளதமனின் அழைப்பின் பேரில் ரிவோல்ட் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரு புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்..தோழர் புலியூர் முருகேசனின் உடலாயுதம் என்கிற நாவலைப்(உயிர்மை பதிப்பகம்) பற்றி நான் பேச வாய்த்தது. அவருடைய சிறுகதைகளுக்காக கரூரில் சாதி அமைப்பினரால் கடுமையாகத் தாக்கப்பட்டவர் புலியூர் முருகேசன். அவருடைய இரண்டு சிறுகதைகள் மீது எனக்கும் கடுமையான விமர்சனம் இருந்தது என்றாலும் அவரைத் தூக்கிச் சென்று தாக்கியதை நாம் ஏற்கவில்லை. அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம்.

ஒரு இடைவெளிக்குப் பின் இந்த நாவலோடு மீண்டெழுந்து வந்துள்ளார் முருகேசன் என்றே சொல்ல வேண்டும். தன் மீது ஏவப்பட்ட வன்முறைக்கு அஞ்சி முடங்கிப்போகாமல் அவர் எழுத்தோடு பயணம் தொடர்வதை வரவேற்க வேண்டும்.

இந்தியாவின் இடதுசாரி இயக்க வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பது நக்சல்பாரிகளின் இயக்கங்களும் போராட்டங்களும். அவ்வியக்கத்தின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் ஒருவருக்கு இருந்தாலும். அவ்வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும்.அப்போதுதான் இடது வரலாறு முழுமை பெறும் என்றே நான் கருதுகிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் காவல்துறையால் கொல்லப்பட்ட தோழர்கள் மணலூர் சந்திரகுமார்–சந்திரசேகர், இராமநாதபுரம் மாவட்டத்தில் களப்பலியான தோழர் மாடக்கோட்டை சுப்பு ஆகிய நக்சல் இயக்கத் தோழர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பதிவு செய்யும் நோக்குடன் இந்நாவலை எழுதத் துவங்கியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

தோழர் வினோத் மிஸ்ரா தலைமையிலான நக்சல் குழுவின் தமிழகப் பிரிவின் கதையாக இந்நாவலின் ஒரு பகுதி அமைந்துள்ளது.

மறைந்த ஒரு நக்சல் இயக்கத் தோழரின் மகன் பெருங்குடிகாரனாக டாஸ்மாக் கடைக்குச் செல்லும் காட்சியில் நாவல் துவங்குகிறது. சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி இளைஞர்களால் தாக்கப்பட்ட ஒரு டாஸ்மாக் கடையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாராய வியாபாரம் நடக்கிறது. அந்தப் போலீஸ்காரருடன் பேசியபடி இளைஞன் கடைக்குள் நுழைகிற காட்சி இன்றைய யதார்த்தத்தின் மீதான பகடியாக அமைந்து சுவாரஸ்யம் தருகிறது.

ஒரு கட்டத்தில் அவன் அறியாத அவனது தந்தையின் வரலாற்றை அம்மா அவனுக்குச் சொல்கிறாள்.அவ்வளவு பெரிய கம்யூனிஸ்ட்டா தன் தந்தை என்கிற வியப்பிலும் பெருமிதத்திலும் தன் தந்தையைத் தேடி அவர் பயணித்த பாதைகளில் அலைகிறான் இளைஞன் குமார். உடல் தானம் செய்திருந்ததால் அவருடைய உடல் ஏதேனும் ஒரு அரசு மருத்துவ மனையில் இன்னும் கூட பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்கிற நம்பிக்கையில் தேடலைத் தொடரும் குமார் இறுதியில் ராயப்பேட்டை மருத்துவமனையில் தன் தந்தையின் முழு எலும்புக்கூட்டின் முன் நிற்கிறான். நக்சல் இயக்கம் எலும்புக்கூடாக அரசாங்க மருத்துவமனையின் காட்சிச்சாலையில் இன்று இருப்பதாக முருகேசன் சொல்கிறாரா என்கிற கேள்வியை எதிரிகள் எழுப்பக்கூடும் என்று கூட்டத்தில் நான் குறிப்பிட்டேன்.

நாவலில் குமாரின் தந்தையாக வரும் தோழர் பாலமுத்து கட்சியின் பாடகர்.ஊடுபாவாகப் பல பாடல்கள் நாவலில் இடம் பெறுகின்றன. தோழர் சுப்பு மரணத்தை ஒட்டி எழுதிப் பாடப்படும் பாடல் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பாக பதிவாகிறது.

“இறக்க வில்லை வீரன் சுப்பு இங்கிருக்கிறேன்
இரண்டு வர்க்கம் இருக்கும் வரையில் போராடுவேன்
கொடிமரத்தை வெட்டியதால் கொடிகள் சாகுமோ-நான்
கோடி மக்கள் கரங்களிலே கொடிகளாகிறேன்”

எனக்கு உடல் சிலிர்த்தது. கூடவே கண்ணீரும் கலந்தது. கோடி மக்கள் கரங்களிலே தோழர்கள் கொடிகளாகாத யதார்த்தம் முகத்திலறைகிறது. வாட்டாக்குடி இரணியன். ஜாம்புவானோடை சிவராமன் துவங்கி நாவலன் ஈறாக எத்தனை தோழர்கள் தஞ்சை மண்ணிலும் பிற நிலப்பரப்பிலும் ரத்தம் சொரிந்தனர். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு இன்னும் வேகத்தோடு பணியாற்றும் தோழர்களின் உணர்ச்சிகளை எண்ணி ஆறுதல் கொண்டது மனம்.
முதல் நாவல் என்பதாலும், தன் மீது விழுந்த பிம்பத்தைத் துடைத்தழிக்கும் ஆவேசத்தாலும் பல கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நாவலுக்கு இடையில் கட்டம் கட்டமாக சேர்த்திருக்கிறார். அது நாவல் என்கிற உணர்வை அழிக்கும் வழிமறிச்சானாகி நிற்பதைச் சுட்டிக்காட்டினேன். நம்பகத்தன்மையைக் குலைக்கும் பல இடங்கள் நாவலில் விரவிக்கிடப்பதையும் சுட்டிக்காட்டினேன். முக மலர்ச்சியுடன் விமர்சனங்களை முருகேசன் ஏற்றுக்கொண்டது நம்பிக்கையூட்டியது.

Related posts

Leave a Comment