You are here
கடந்து சென்ற காற்று 

இரண்டு புத்தகங்கள்

ச.தமிழ்ச்செல்வன்

இரண்டு புத்தகங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேச வேண்டும்.

Picture 010hudal

கடந்த 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை மதுரை அருகே கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் ஓர் அழகான திருமணம் நடைபெற்றது. ச.முருகபூபதியின் மணல் மகுடி நாடகக்குழுவைச் சேர்ந்த கலைஞர்

பூபாலன் -ஹெலன் திருமணம். ஆலமரத்தடியில் நாற்காலிகள் போட்டு அந்நிலப்பரப்பில் வண்ணமயமாய் பூத்துக்கிடந்த காட்டு மலர்கள் பறித்து இரு மலர்மாலைகள் செய்து மணமக்களுக்கு அணிவித்து பறையொலி, ஜிம்ப்ளா மேளத்தின் அதிர்வலைகளின் லயத்துடன் திருமணம் நடைபெற்றது. நான், தமிழச்சி தங்கப்பாண்டியன், கோணங்கி, யவனிகாஸ்ரீராம், வர்த்தினி, இசையமைப்பாளர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜ் எனப்பல கலை இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற கலை இலக்கியத் திருமணம்.நீலகிரி மலைத் தோடர்கள் வந்திருந்து தங்கள் மொழியில் பாட்டுப்பாடி மணமக்களை வாழ்த்தி எல்லோருடைய மனங்களையும் நிறைத்தார்கள். சாதி மற்றும் மதங்களைத் தாண்டிய இக்காதல் மணமக்கள் ஒரு நூலை வெளியிட்டார்கள்.

பாரதி புத்தகாலய வெளியீடான ச.முருகபூபதியின் “உடல் திறக்கும் நாடக நிலம்” அங்கு வெளியிடப்பட்டது. புத்தகம் பேசுது இதழில் அவர் எழுதி வந்த தொடர் புத்தகமாகியுள்ளது, மிக முக்கியமான பண்பாட்டு அரசியலை முன்னெடுக்கும் புத்தகம் என தமிழச்சி,பேராசிரியர் ராம்ராஜ், பால்ராஜ் போன்றோர் குறிப்பிட்டனர்,

அப்புத்தகத்துக்கு முருகபூபதியின் நாடக வகுப்புகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து பங்கேற்று, நாடகத்தில் பூனையாக நடித்து, இன்று பெரிய பெண்ணாக ப்ளஸ் டூ பயிலும் குழந்தை ஜெயஸ்ரீ முன்னுரை வழங்கியுள்ளார். கண்களீல் நீர் கசிந்து, என் கன்னங்களில் நீர் வழிய அம்முன்னுரையை நான் வாசித்து முடித்துப் பெருமூச்சில் கரைந்தேன்.

“வணக்கம் பூபதி அண்ணே, ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் தகுதி கொண்டவளாக உங்கள் கண்களில் நான் புலப்பட்டதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். புத்தகம் முழுவதையும் வாசித்தேன்.இது எங்களுடனான உங்கள் வாழ்க்கையின் பதிவு.

நாடகம் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இடம்பெற்று இருக்கும் அதைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்துபவன் மனிதன்.அதைப் பொதுநலத்துக்காகப் பயன்படுத்துபவன் கலைஞன் ஆகிறான். எங்கள் அண்ணாவைப்போல.அப்படிப்பட்ட கலைஞனின் வாழ்வு எனும் புத்தகத்தில் நான் ஒரு வரியாக இருப்பதாய் எண்ணிப் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”

இந்தக் கடைசி வரியை வாசித்தபோதுதான் மனம் உருகத்துவங்கியது. என்ன அற்புதமான வரி.அப்படியே தொடரும் முன்னுரை,

… “நான் கதை எழுதுவது அவருக்குப் பிடிக்கும்.நானும் என் நண்பன் விஜயபாண்டியும் நிறைய கதைகள் எழுதுவோம். அண்ணன் எங்களுக்கு ஒரு நோட்டு வாங்கிக்கொடுத்தார். அது முழுவதும் கதைகள் எழுதித்தந்தோம். அண்ணன் எங்களுக்கு ஆசிரியர் மட்டுமல்ல. எங்களுக்குக் கதையை நாடகமாக்கி கலைவழி அறிவூட்டிய தாய். நான் நிறைய எழுதி, எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அண்ணனின் ஆசை. அண்ணா அது நிச்சயமாக நடக்கும்.

பின்னர் வயது கூடக்கூட அனைவரின் பார்வைக்கும் எங்களின் நெருக்கம் தவறாகப்பட்டது. அவரிடம் சிறு இடைவெளி விட்டு இருக்க அனைவரும் வலியுறுத்தினர். என் மனம் மிகவும் புண்பட்ட்து.பின்பு சமூகத்தின் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டேன்.சிந்தித்தேன். இப்போது நான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இன்றும் அண்ணாவை பார்த்தால் அருகில் சென்று கை கொடுக்க வேண்டுமென்று தோன்றும். இருப்பினும் என் மனதைக் கட்டுப்படுத்தி நடிப்பேன். என் முகத்தை அவர் முன் காட்ட மறுத்து பல நாள் விலகிச் சென்று இருக்கிறேன். பெண் என்ற கோட்டின் கீழ் அடிமைப்பட்டு இருக்கிறேன்.அவரது உள்ளங்கை ரேகைகள் எனக்கு வேண்டும். நானும் அவரைப்போல நிறையக் கதைகள் எழுத வேண்டும்”

முருகபூபதியையும் இந்தக் குழந்தையையும் மறந்து விட்டு மேற்கண்ட பத்தியை வாசித்தாலும் அது மிகுந்த மன அழுத்தம் தரும் ஒரு சோக காவியத்தின் ஒரு முக்கிய காட்சியாக நம் மனதில் விரிவதை உணரலாம். இந்தப்பத்தியின் வரிகள் கதறி அழவைத்த வரிகள். எங்கள் செல்லக்குழந்தைகளே எப்படியான ஒரு பிற்போக்கான சமூகத்தில் உங்களை விட்டுச் செல்கிறோம் என்கிற குற்ற உணர்வும் கேவலும் என் மனதில் தொடர்கிறது. அந்தக் கோட்டை நாங்கள் எப்படி அழிப்போம்?

இந்த முன்னுரை முருகபூபதி என்கிற கலைஞனுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது. லெளகீக வாழ்வு அக்கலைஞனுக்கு அளித்த அத்தனை அவமான்ங்களும் கேவலங்களும் இந்தக்குழந்தையின் வரிகளில் அழிந்து போயின. வேறென்ன வேண்டும்?

புத்தகத்தின் கட்டுரைகள் பூபதியின் பள்ளிக்குழந்தைகளுடனான கதை மற்றும் நாடக அனுபவங்களின் தொகுப்பாகவும் சாரமாகவும் கல்வி, பண்பாடு, அரசியல் குறித்த பல கேள்விகளை முன் வைத்து நகர்கிறது. பெற்றோரும் ஆசிரியரும் சமூக ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என வெளியீட்டு விழாவில் பேசிய அனைவருமே குறிப்பிட்டனர். (128 பக்கம்.விலை ரூ.90)

இரண்டாவதாக குறிப்பிட வேண்டிய புத்தகம் ஒரு பழைய புத்தகம். 1946 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். நான் ராணுவத்திலிருந்து திரும்பியிருந்த நாட்களில் ராணுவம், போர்கள் தொடர்பான புத்தகங்களாகத் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பெங்களூருவில் ஒரு பிரபலமான பழைய புத்தக்க் கடையில் வாங்கிய புத்தகம் இது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் முக்கியப் படைத்தளபதியாக நேதாஜியுடன் இணைந்து போரிட்ட மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான் அவர்கள் எழுதிய ”My Memories of I.N.A. & Its NETAJI” என்கிற புத்தகம். அதை இப்போது மீண்டும் எடுத்து வாசித்தேன்.

“நேதாஜி விமான விபத்தில் சாகவில்லை.அவர் ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு வாழ்ந்தார். அது விஜயலட்சுமி பண்டிட்டுக்கும் தெரியும்.நேருஜியின் அரசியல் விளையாட்டில் பகடைக்காயாகத் தூக்கி எறியப்பட்டவர் நேதாஜி” என்பது போன்ற பாஜகவின் அவதூறுகள் ஒருபுறம். “நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை பொதுமக்களும் அறியும் வண்ணம் மத்திய அரசு வெளியிடவேண்டும். 70 ஆண்டுகளாகத்தொடரும் தேவையற்ற பிரச்சாரங்களுக்கு முற்றுப்பிள்ளி வைக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் அரசை வற்புறுத்தி வருவது ஒரு புறம்.

பசும்பொன் முத்துராமலிங்கர் மரணத்தின்போது பசும்பொன்னுக்கு நேதாஜி தாடி வைத்து மாறு வேடத்தில் வந்தார் என்றும் இப்போதும் நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்பது போன்ற கதைகள் தமிழ்நாட்டில் ஒரு தரப்பினரால் இன்றும் பேசப்பட்டு வருவதும் ‘நேதாஜி இருக்கிறார்’ எனப் புத்தகங்கள் கூட வெளியிடப்பட்டிருப்பதும் நாம் அறிந்த செய்திகள்.

ஆகவே, ஷா நவாஸ் கான் எழுதிய இப்புத்தகத்தை இப்போது மீண்டும் எடுத்து வாசிக்கும் ஆர்வம் எனக்கு அதிகமானது. பழுப்பேறிய தாள்களில் பதிவாகியுள்ள உயிர்த்துடிப்பு மிக்க பக்கங்களை புரட்டப்புரட்ட விடுதலைப்போரின் தீரமிக்க போர்க்களங்களும் ஆண்களும் பெண்களுமாகச் செய்த அளப்பரிய தியாகங்களும் மனதில் அலையடித்தன.நூலின் 275 ஆம் பக்கத்தில் வந்து மனம் நின்றது.THE SURRENDER என்கிற தலைப்பின் கீழான ஒண்ணரைப்பக்கம் நேதாஜியின் இறுதி நாட்களைப்பற்றிப் பேசுகிறது. அதன் சுருக்கம்:

“1945 ஆகஸ்ட் 16ஆம் நாள் நேதாஜி எல்லாப் படைப்பிரிவினரையும் நேரில் சந்தித்தார். போரில் ஜப்பான் சரணாகதி அடைந்திருந்த சூழலில் இந்தச் சந்திப்புகளை நடத்தினார் நேதாஜி.ஜப்பான் சரணாகதி அடையும்போது இந்திய தேசிய ராணுவமும் சேர்ந்து சரணாகதி அடைவதாக ஜப்பான் அறிவிக்க்க் கூடாது. இந்திய தேசிய ராணுவம் என்பது ஜப்பானுக்குக் கட்டுப்பட்ட்தல்ல. இது சுதந்திர இந்தியாவின் சுதந்திரமான ராணுவம் என்று நேதாஜி ஜப்பானிய ராணுவத்தலைமைக்குச் சொல்லியிருந்தார்.நாங்கள் தனியாக முடிவெடுத்து ஒரு சுதந்திர ராணுவமாக சரண் அடைவோம் என்று சொல்லிய நேதாஜி கடைசியாகப் பார்ப்பதுபோல எல்லாப் படைப்பிரிவுகளையும் சந்தித்தார். வீரச்செயல் புரிந்த படை வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் மெடல்களையும் விருதுகளையும் வழங்கி ஒவ்வொரு படைப்பிரிவிலும் சிறிய உரைகளை நிகழ்த்தினார்.சென்ற பக்கமெல்லாம் வீரர்கள், வீராங்கனைகளின் “டெல்லி சலோ, இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாத் ஹிந்த் ஜிந்தாபாத், நேதாஜி ஜிந்தாபாத்” என்கிற ஆவேச முழக்கங்கள் எழுந்து காற்று வெளியை நிரப்பின. நேதாஜியின் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் உருண்டோடின. இத்தனை பெரிய பிடிமானத்தையும் ஆதரவையும் தன் படைவீரர்களிடமிருந்து வரலாற்றில் எந்தத் தலைவனும் பெற்றிருக்க முடியாது.

அன்று இரவு நேதாஜி அவரது பங்களாவில் எல்லாப் படைத்தளபதிகளுக்கும் இரவு விருந்து அளித்தார். தனக்கு எதுவும் நேர்ந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற விரிவான திட்டத்தையும் உத்தரவுகளையும் தளபதிகளுக்கு விளக்கி வழங்கினார்.மறுநாள் காலையில் சில முக்கிய அதிகாரிகளுடன் அவர் விமானத்தில் சைகோனுக்குப் புறப்பட்டார். ஃபீல்டு மார்ஷல் கவுண்ட் டெராச்சியைச் சந்தித்து ஐ.என்.ஏவின் சரணடையும் திட்டம் பற்றி எடுத்துரைப்பது அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது.ஆனால் டெராச்சி தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இறுதி முடிவை டோக்கியோதான் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆகவே மறுநாள் நேதாஜி தன்னுடன் கர்னல் ஹபிபுர்ரெஹ்மானை அழைத்துக்கொண்டு விமானத்தில் டோக்கியோ நோக்கிக் கிளம்பினார்.

கர்னல் ஹபிபுர் வார்த்தைகளில் கூறுவதானால் “எங்கள் விமானம் டோக்கியோ செல்லும் வழியில் ஃபார்மோசா விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானது. 300 அடி உயரத்தில் எங்கள் விமானத்தின் இறக்கையில் ஏதோ ஒரு பொருள் வேகமாக வந்து மோதியது. அது ஒரு பெரிய வல்லூறாக இருக்கலாம் என நினைக்கிறேன். நிலைகுலைந்த எங்கள் விமானம் அருகிலிருந்த ஒரு மலைச்சரிவில் மோதித் தீப்பற்றிக்கொண்டது, காயங்களுடன் வெளியேறிய நான் நேதாஜியை வெளியே இழுத்தேன். அப்போதே அவரது தலையில் இரண்டு காயங்கள் இருந்தன. அரைமணிநேரம் வரை நேதாஜி சுயநினைவுடன் இருந்தார். பின்னர் நினைவிழந்தார். அதற்கு ஆறு மணி நேரத்துக்குப் பின் அவர் உயிரிழந்தார். அவரது உடலை சிங்கப்பூருக்குக் கொண்டுவர விமான ஏற்பாடு செய்ய வாய்ப்பில்லாமல் போனதால் தாய்பெய் நகர இடுகாட்டில் 22.08.1945 அன்று நேதாஜியின் பூத உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது நானும் உடனிருந்தேன்.”

மறுநாள் ஹபிபுர் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஒருவருடன் சுடுகாட்டுக்குச் சென்று நேதாஜியின் அஸ்தியைப் பெற்று அதை பத்திரமாக டோக்கியோவில் ஒரு வீட்டில் கொடுத்து வைத்துவிட்டு இந்தியா திரும்பினார்.”

பண்டித நேருவின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலம் இன்றைய காங்கிரஸ் கட்சியின் பெயரைக்கெடுக்கவும் நேதாஜியின் புகழில் பாஜக ஆதாயம் அடையும் உள்நோக்கத்துடனுமே இப்போதைய வாத விதண்டாவாதங்கள் முன் வைக்கப்படுவதாகத் தோன்றுகின்றது.

என் கையிலிருக்கும் இப்பழைய புத்தகம் நேதாஜி இறந்த ஓராண்டுக்குள்ளாக வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இப்புத்தகத்தின் பிரதானமான நோக்கமே நேதாஜியின் ராணுவம் ஜப்பானிய ராணுவத்தின் ஒரு கூலிப்படை என்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய மக்கள் மத்தியில் பரப்பியிருந்த விஷப்பிரச்சாரத்தை முறியடித்து உண்மையான வரலாற்றை நிறுவுவதுதான்.

இன்னும் கூடுதலான சிறப்பம்சம் இந்நூலுக்கு ஜவஹர்லால் நேரு அளித்துள்ள முன்னுரை. 1946 அக்டோபர் 10 தேதியிட்ட அம்முன்னுரையில் “நேதாஜியின் அரசியல் வழிமுறையில் நமக்கு முரண்பட்ட கருத்து இருக்கலாம். ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் நோக்கத்திலும் அப்படையில் நின்று ஆயுதமேந்தி பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த எண்ணற்ற இந்தியத்தாயின் புதல்வர்கள் புதல்விகளின் தியாகத்திலும் அப்பழுக்கில்லை. அவர்கள் சிந்திய ரத்தத்தை மறந்து விட்டு இந்திய வரலாற்றை நாம் எழுத முடியாது. அவர்கள் மீது என்ன ராஜதுரோக வழக்கை பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தாலும் அவர்களுக்காக வாதாடி அவர்களை மீட்பது நம் ஒவ்வொருவரின் தேசபக்தக் கடமையாகும்” என்றுதான் எழுதியிருக்கிறார்.

இப்புத்தகத்தில் நேருவும் ஷாநவாஸ்கானும் வெளிப்படுத்தியிருக்கும் உணர்ச்சிகள் உண்மையானவை என்பதை வாசிக்கும் எவரும் உணரமுடியும். உண்மைகளைப் பொய்களால் மூடிமறைத்தே வளர்கின்ற இந்துத்வ வாதிகளின் கபடங்களை இதுபோன்ற புத்தகங்கள் கிழிக்கும்.
(தொடரும்)

Related posts

Leave a Comment