You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

ஒழுங்கு என்பதே வன்முறையை பொதிந்து வைத்திருக்கும் கருத்தியல்

ஜி. கார்ல் மார்க்ஸ்

கேள்விகள்: மதுசுதன்

ஒரு புத்தகம் 10 கேள்விகள்

wrapper-Veyyil-300x260

கும்பகோணம் உமாமகேஸ்வரபுரத்தில் வசிக்கும் இவர், இதுவரை இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். வருவதற்கு முன்பிருந்த வெயில் என்கிற சிறுகதையும், சாத்தனை முத்தமிடும் கடவுள் என்கிற கட்டுரைத் தொகுப்பும்.

மனிதனின் வக்கிரத்திற்குள்ளும் ஓர் வாஞ்சை இழையோடும் என்பதாக சொல்லி இருக்கிறீர்களே அது சாத்தியமா? சமகால் நிகழ்வுகள் அப்படியானதாய் இல்லையே.

மனிதப் பண்பில் ‘வக்கிரம்’ என்பதற்கு தெளிவான வரையறை ஒன்றும் கிடையாது. வாஞ்சைக்கும் கூட அது ஓரளவுக்கு பொருந்தக் கூடியதுதான். இலக்கியத்தின் வேலை எதையும் வரையறுத்து நேரெதிராக நிறுத்துவது இல்லை. நாம் வக்கிரம் என்று கருதும் ஒன்றைச் செய்பவன் ஏன் வாஞ்சையாகவும் இருக்க முடியாது. இதை நீங்கள் மாற்றிப்போட்டும் யோசிக்கலாம். அதற்கும் சாத்தியம் உண்டுதான்.

இளமையின் தவிப்புகளில் காதலுக்கும் வேலைக்குமே அல்லாடுகிற போது இயல்பூக்கமாய் காமம் உருக்கொள்வதும் அதன் நீட்சியாய் அப்படியான சம்பவங்களும் அனுபவங்களும் மிகச் சர்வசாதாரணமான நிகழ்வாய் கடந்து போவதும் எதனால்?

உங்கள் கேள்வியில், வேலைக்கு அல்லாடுவது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காதலுக்கு எதற்கு அல்லாட வேண்டும்? அது தான் கிடைக்கிறதே! காதலைக் கையாள்வதன் அல்லாட்டம் குறித்து சில கதைகள் பேசுகின்றன. காதலும், காமமும் மிகச் சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வுகள் தான். அது என்ன மலை ஏற்றம் போன்றதா என்ன? காதல் குறித்தும், காமம் குறித்தும் நிறைய பாசாங்குகளை கைகொண்டிருக்கும் சமூகம் நாம். குறிப்பாக இலக்கியத்தில். நிஜத்தைவிட இலக்கியத்தில் இந்த விஷயத்தில் நாம் பின் தங்கிதான் இருக்கிறோம்.

தி.ஜா , தஞ்சை பிரகாஷ் , ஜி.நாகராஜன் போன்றவர்களின் தொடர்ச்சியாய் உங்கள் கதைகளும் பயணிப்பதாய் கொள்ளலாமா?

அவர்கள் மேதைகள். நான் கற்றுக்கொண்டிருப்பவன் என்று வேண்டுமானால் சொல்லலாம். பிறகு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதியவர்கள். பொதுப்பண்பு இருக்கலாம் தான். நான் அவர்களை நிறைய படித்திருக்கிறேன். படிக்கிறேன். எனது கதைகள் பற்றி எழுதும்போது திஜாவைக் குறிப்பிட்டு சாரு எழுதியிருக்கிறார். அதெல்லாம் மகிழ்வுக்குரியவை.
விரசமும் வாஞ்சையும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு தத்தளித்து பிரவாகம் எடுப்பதான அனுபவம் முதுமைக்கு தானே உண்டு. அது எப்படி இளமைக்கு பொருந்திப் போகமுடியும்.

உங்களது கேள்விகளில் ஒரு பொதுத்தன்மையை நான் காண்கிறேன். அது நேர், எதிர் என்று பல நேரங்களில் மையம் கொள்கிறது. இதை புகாராக அல்ல கேலியாகத்தான் சொல்கிறேன். நான் வாஞ்சையாக உணர்வதை நீங்கள் விரசமாக உணரமுடியும். இதில் இளமை, முதுமை என்பதெற்கெல்லாம் எந்தப் பொருளும் இல்லை.

எல்லோருக்குமே சிறுவயது பிராயம் மறுப்பதற்கில்லை.பள்ளிக்கூட கட்டணத்திற்காக மகனை தம்பி வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு காத்திருக்கும் அந்த பொழுதுகளும் சரி… வெறும் கையோடு திரும்பிவரும் மகனின் ஏதுமறியா ஒப்பித்தல்களும் சரி இவையிரண்டிற்குமிடையேயான ஒரு தந்தையின் ஊடாட்டத்தை பதட்டம் நிறைந்த மகிழ்வோடு கடப்பது அவ்வளவு இயல்பானதா?
அது இயல்பில்லைதான். ஆனால் அது மகனுடனான ஒரு உரையாடலை, அன்பை வெளிப்படுத்தும் வழியைத் திறந்துவிடுகிறது இல்லையா? இதை துயரத்தின் வடிகாலாக எல்லாம் சொல்லவில்லை. எல்லா மகத்தான துயரங்களும் கடக்கப்பட்டிருக்கின்றன. துயரத்தில் சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை. அபத்தத்திலும் கூட.

பெரும்பாலான கதைகள் கிராமபுற சூழல்களையே பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.இன்றைய நகரமயமாக்கல் சூழலில் கிராமிய வாழ்வை பிரதிபலிக்க முனைந்ததின் நோக்கம்.

பதில்: நான் அடிப்படையில் கிராமத்து ஆள் என்பதுதான். என் பால்யம் கிராமத்தில் தான் கழிந்தது.

பெண் சுதந்திரமும் பாலியல் தேவைகளும் அவர்களின் விருப்ப தேர்வுககளாக அல்லாமல் ஆண்களின் திணிப்பிற் குள்ளாகவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் அதை எளிதில் உடைத்தெறிந்து வெளியேறுவது அவ்வளவு சாத்தியமில்லாதபோது வருவதற்கு முன்பிருந்த வெயில் அதை சுக்குநூறாய் உடைத்து போட்டிருக்கிறதே எப்படி?

உங்களது பாராட்டுக்கு நன்றி. உண்மையாகச் சொன்னால், ஆணின் பாலியல் தேர்வும் சுதந்திரமும் கூட இங்கு விருப்பத்திற்கு மாறாகத்தான் இருக்கிறது. ஒட்டு மொத்த சமூகமும் பெண்களுக்கு எதிராக இயங்குகிறது என்பது கற்பிதம் கூட. ஒப்பீட்டளவில் ஆண் கொஞ்சம் கூடுதல் சுதந்திரத்துடன் இருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் மீற நினைக்கிறவர்களுக்கு இங்கு பரந்த வெளி உண்டு. ஆனால் ஆரம்ப கட்ட வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட தைரியசாலிகள். அவர்கள் மீதான என் தீராத காதலுக்கு இதுவே அடிப்படை. என் எழுத்துக்கும் அது தான் அடிப்படை.

திருமணதிற்கு பின்பான தன் விருப்பத்தேர்வு சமூக ஒழுங்கிற்கு எதிரானதாய் அமைந்திருக்கிற போதும் என்மேல் குற்றம் சுமத்த முடியாது என்பதை நிரூபித்து காட்டுவதும் கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பிருப்பது ஊர் கூடி வெட்ட வெளிச்சமாக்கிய பின்பும் அப்படியே அவளையும் ஏற்றுக்கொள்கிற மனோபாவம் உங்கள் கதைகளுக்கு மட்டுமேயானதா அல்லது சமூகத்திற்கும் பொருந்தக்கூடியதா?

ஒழுங்கு என்பதே வன்முறையை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் கருத்தியல்தான். அதை எப்போதும் மீற முயல்வதே மனிதப் பண்பு. காதல் என்று வருகிறபோது இந்த ஒழுங்கை மீறுவதற்கு ஒரு உத்வேகம் கிடைக்கிறது. தீவிரமாக காதலைக் கைகொள்ளும் ஒருத்தி, கற்பிக்கப்பட்ட சமூக ஒழுங்குகளைக் எளிதாகக் கடப்பாள் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். பிறகு, கதையில் அவளை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. கைவிட முடியாது என்பது வேறு இல்லையா?

வயதானவர்களின் மீதான பரிவுணர்ச்சியும் அதன் மீதான அன்பின் வெளிப்பாடும் பணம் கொடுப்பதிலேயே கொண்டு சேர்க்கிறதே இது மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடா அல்லது கழிவிரக்கத்தின் ஒடுக்குமுறையா?

அது அப்படியும் இருக்கமுடியும் என்கிற சாத்தியம் மட்டுமே. அதைத்தாண்டி வேறொன்றுமில்லை.

தந்தைக்கும் மகளுக்குமான உறவு மருமகனால் பிரச்சனைக்குள்ளாகும் போது அதை தீர்க்க முனையும் ஒரு தந்தை இதைத்தானே திருமணமான புதிதில் நாமும் செய்தோம் இப்போது இதை தீர்க்க நமக்கென்ன இருக்கிறது என சுய பரிசோதனை கொள்ள செய்வதும் மகளுக்கு அறிவுரை கூறுவதும் சகிப்புதன்மையுடன் கூடிய வாழ்வை எதிர்கொள்ளவதில் நாம் தோற்று வருகிறோம் என்பதன் அர்த்தமாக எடுத்துக்கொள்ளலாமா?

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வாழ்வில் வெற்றி தோல்வி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அது இலக்கியத்தின் வேலையுமல்ல.

மரணவீட்டில் ஓலமிடும் ஒரு இளம் விதவையின் வேதனையையும் ஓர் இளம் தாயின் தவிப்பையும் ஒரு புள்ளியில் இனைக்கமுடிந்தது எப்படி. ஓலத்தையும் சூழலியல் தவிப்பையும் ஒரு கருத்திற்குள் அடைத்து விடமுடியுமா.

கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். நான் முன்பொரு கேள்விக்கு சொன்னது தான். துயரத்தில் சின்ன துயரம் பெரிய துயரம் என்றில்லை.

Related posts

Leave a Comment