You are here
Uncategorized 

ஒளிப்பதிவாளர்கள் கடவுள் இல்லை

பிரபுகாளிதாஸ்

கேள்விகள் : எஸ்.செந்தில் குமார்

புகைப்படக்கலைஞர். மும்பையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். குறைந்த ஒளியில் என்பது இவரது முதல் புத்தகம். தற்போது மனைவி மகனுடன் சென்னையில் வசிக்கிறார்.

முகப்பு நூலில் எழுதிய உங்களது கருத்துப்பதிவுகளைத் தொகுத்துப்புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்கிற ஆர்வம் எப்படிஉண்டானது?

புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்கிற எண்ணமெல்லாம் எனக்கு வரவே இல்லை. சாருநிவேதிதா வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்தொகுப்பிலும் என் முகநூல் பதிவு ஒன்றை அவரது கட்டுரையில்குறிப்பிட்டு எழுதினார்.மனுஷ்யபுத்திரன் குங்குமம் இதழில்இணையத்தில் எழுதிச் செல்லும்கைகள் என்கிற தலைப்பில் வந்த கட்டுரையில் என் முகநூல்நிலைதகவல் ஒன்றைப் பகிர்ந்தார்.சாரு, மனுஷ்யபுத்திரன் இருவரால்தான் என் புத்தகம் வெளிவந்தது.

அடிப்படையில் நீங்கள் புகைப்படக்காரர். எழுத்தில் எப்படி ஆர்வம்?

எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், மூவரின்படைப்புகள் மற்றும் பரிந்துரைகள் வாசித்த அனுபவம் மூலம், ஒருவிஷயத்தை எப்படி சொல்வது என்று ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.அதன்மூலம் எழுத ஆசை வந்தது. அதற்கு முகநூல் ஒரு களமாகஇருந்தது.

நீங்கள் எழுதும் முகப்பு நூல் பதிவுகளை உங்களது நண்பர்கள் கவனங் கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் சிபாரிசு செய்கிற புத்தகங்களை வாசகர்கள் மற்றும் சகமுகப்புநூல் பதிவாளர்கள் கவனம் செலுத்தி படிக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா?

நிச்சயமாக கவனிக்கிறார்கள். தீவிரமாகப் பின்தொடர்கிறார்கள். அதேமாதிரி அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்கிறார்கள். புத்தகங்களை வாசித்த கையோடு விட்டுவிடாமல்அதைப்பற்றிய தகவல்களை அவர்கள் வட்டத்தில் உள்ள நண்பர்களுடன்அடுத்த கணமே பகிர்கிறார்கள். நிறைய நண்பர்கள் வாசிக்கும் புத்தகங்களை உடனுக்குடன் பகிர்வதால்வாசிப்பு பற்றிய பிரக்ஞையும் வேகமாக இளைஞர்கள் மத்தியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

உங்களது பதிவுகள் அனைத்தும் சிறிய சம்பவங்கள் அச்சம்பவங்கள் மூலம் நீங்கள் அடைந்த அனுபவம். இந்த எழுத்து வடிவத்தில் உங்களது அனுபவமானது அதே சாரத்தோடு அனைவருக்கும் போய் சேரக் கூடியதாக அமையுமென நினைக்கிறீர்களா?

அனைவருக்கும் போய் சேர்வதில்லை என்றுதான் நம்புகிறேன்.

மாறாக எதிர்வினைதான் அதிகமாக வருகிறது. சர்சைக்குரிய சிலவிஷயங்களை எழுதிய அடுத்த கணம் இன்பாக்ஸ் வந்து வசைச் சொற்கள் குவித்துத் தள்ளுகிறார்கள். அதே ஆட்கள் நேரில் பார்க்கும்பொழுது குழைந்து பேசிப் பம்முகிறார்கள். இவர்களைக் சமாளிக்கவென்று ஒரு தனிமனநிலை வேண்டும் என்று தோன்றுகிறது.

பத்தி எழுத்து, முகப்பு நூல் எழுத்து போன்றவை சிறுபத்திரிக்கைசூழலுக்கு எதிரானது என்று ஒருவாதமுள்ளது. தமிழ் எழுத்து சிறுபத்திரிக்கை மூலம் தான் விஸ்தாரமடைந்திருக்கிறது. ஜனரஞ்சகத்தைநோக்கிய எழுத்து, பத்தி எழுத்து, முகப்பு நூல் எழுத்து என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக ஒத்துக் கொள்கிறேன். முகநூல் முழுக்க குப்பையாக நிறைய பதிவுகள் மலிந்து கிடக்கும். ஏகப்பட்ட பிழைகளுடன் சர்வ சாதரணமாக பதிவேற்றுகிறார்கள். தவறுகள்இருப்பதைச் சுட்டிக் காட்டினால் கிண்டல் செய்கிறார்கள். பிழைகளைத் திருத்திக்கொள்ள நேரம் இல்லை என்கிறார்கள். இப்படி இருக்க இவர்களைப் பின்தொடர்பவர்களிடம் மொழிவளம் எப்படி இருக்கும். நாளுக்கு நாள் மங்கிக் கொண்டேதான் போகும்.சாரம்மிக்க மொழி வளம் என்பது சிறுபத்திரிக்கைகள் மூலம் மட்டுமே இன்னும்உயிர் வாழ்கிறது என்பதைத் தீவிரமாக நம்புகிறேன். நிறைய சமகால இலக்கியம் பற்றிய பரிச்சயம் கொண்டு நிறைய படிப்பதன் மூலம் மட்டுமே ஒருவர் பிழையில்லாமல் ஒரு மொழியைக் கையாள முடியும்.

உங்களது முகப்புநூல் பதிவில் பெரும்பாலும் எழுத்து இலக்கியம் இலக்கியவாதிகளுக்கான இடம் அதிகமாக உள்ளது. உங்களைப் பாதித்த எழுத்தாளர்களை சொல்லுங்கள்

எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, நகுலன், க.நா.சு, வைக்கம் முகமது பஷீர், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், எஸ். அர்ஷியா
புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து நாவல் சிறுகதை எழுதும் திட்டமிருக்கிறதா?.

இல்லை. அப்படி எழுதினால் கதை முழுக்க அவமானங்கள்,ஏமாற்றங்கள், துயரங்கள் மட்டுமே நிறைந்ததாக இருக்கும் என்றுதோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை கொண்டாட்டமானது.நாவல் எழுதுவேன். ஆனால் அதில் புகைப்படம் சம்பந்தமாக ஒன்றுமேஇருக்காது.

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுத் துறையைப் பற்றி உங்களது கருத்து?

தமிழ் சினிமா இன்னும் கடந்து போகவேண்டிய தூரம் எக்கச்சக்கம் இருக்கிறது. ஒளிப்பதிவு என்பது படத்தின் ஒரு அங்கம் மட்டுமே. ஆனால்இங்கு ஒளிப்பதிவாளர்கள் தங்களை கடவுள் போல் பாவித்துக் கொண்டு தலைகனம் பிடித்துச் சுற்றும் ஒரு அவலம் இருக்கிறது. இளைஞர்களின் வருகை ஓரளவுக்கு இந்தப் பித்தலாட்டத்தை சீக்கிரம் குறைக்கும் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து சர்வதேச திரைப்படவிழாவிற்குச் சென்று வருபவர் நீங்கள்.உங்களைப் பாதித்த இந்திய அயல் சினிமா இயக்குநர்களைப் பற்றிசொல்லுங்கள்?

பாதித்த இந்திய சினிமா இயக்குனர்கள் என்றால் அது ரித்விக் கதக்,அனுராக் காஷ்யப். இந்த இரண்டு இந்திய இயக்குனர்கள் தங்கள் படங்களின் மூலம் பொதுவில் பேச மறுக்கும் விஷயங்களை, வாழ்வின் இருண்ட பிரதேசங்களைப் பற்றி தங்கள் படங்களில் சொன்னவர்கள். அயல் சினிமா இயக்குநர்கள் Nuri Bilge Ceylan, Majid Majidi, Michael Haneke, Lars Von Trior. இந்த நால்வரின் திரைப்படங்கள் எனக்கு எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்பட்டதில்லை. மிகக் குறைவான செறிவான படங்களைத் தந்தவர்கள். ஒரு திரைப்பட மாணவனுக்கு இவர்கள் படம் பாடம்.
சாருநிவேதா தான் உங்களது எழுத்திற்கு ஆதர்ஷமா?
ஆமாம். அவரது எழுத்தில் இருக்கும் சரளம், மிகவும் சுலபமாக, திருகல் மொழிநடை இல்லாமல், வேகவேகமாக சொல்லிக்கொண்டே போகும் விதம், நுணுக்கங்கள், பகடி, தீர்க்கம், ஆய்வு அனைத்தும் கொண்டு, ஒரு காடு பற்றி எறிவது போல் உக்கிரம் அவர் எழுத்தில் இருப்பதால் அவர்தான் என் ஆதர்ஷம். என் ஆசான். அவரைப் போல ஒரு விஷயத்தைச் சுலபமாகச் சொல்வதே என் ஆசை.

Related posts

Leave a Comment