You are here

வாசித்ததில் யோசித்தது

 ஆயிஷா. இரா. நடராசன்

1. சிங்கார வேலரின் சிந்தனைக் கட்டுரைகள்
தொ: பா. வீரமணி, சாகித்ய அகாடமி
தோழர் சிங்கார வேலரின் 42 பிரதானக் கட்டுரைகளின் புதிய தொகுதி இது. என்ன அற்புதம்!` எளிமையான மொழியாளுமை! சாதாரண மனிதர்களின் அப்பாவிப் பார்வையை விஞ்ஞானமயமாக்கும் மந்திர சக்தி இந்த தென்னக மார்க்ஸ்க்கு எப்படி கைவந்தது. கடவுள் என்றால் என்ன? பொது உடைமையைப் புரிந்து கொள்வோம்: விஞ்ஞானக் குறிப்புகள்; விஞ்ஞானமும் மூட நம்பிக்கையும்; சோவியத் ரஷ்யாவின் நீதிமுறை என ஒவ்வொன்றும் இன்றும்கூட நம் கண்களைத் திறக்கும் அரிய திறவுகோல்களாக மிளிர்கின்றன. இவற்றைப் பள்ளிகளில் போதித்தாலே போதும் என மனம் பதறுகிறது.

2. விடுதலையும் சோஷலிஸமும்
சேகுவேரா, தமிழில் – கமலாலயன், பாரதிபுத்தகாலயம்
சேவின் நன்கு அறியப்பட்ட, தனித்துவமிக்க படைப்புகள் இந்த நூலில் அறிமுகம் ஆகின்றன. அவர் கியூபா வேளாண் தேசிய சீர்திருத்த நிலைய தலைமை ஏற்றபோது எழுதிய சோஷலிஸமும் கியூபாவின் மனிதனும் கட்டுரை. அவசியம் யாவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இதைத் தவிர ஆசிய ஆப்பிரிக்க மாநாட்டு அல்ஜீரியா உரை, நவீன மார்க்ஸிய நுணுக்கங்களையும் விரிவாக நம்முன் வைக்கிறது. வியட்நாம் கட்டுரை இன்றைய அமெரிக்கா மேலாதிக்க சூழலில் மூன்றாம் உலக நாட்டு மக்களின் அவலத்தின் நடுவே அதிமுக்கியத்துவம் பெறும் கட்டுரை. கமலாலயன் மிக நேர்த்தியாக அவற்றை நமக்குத் தந்திருக்கிறார். சேவின் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

che2

3. தி.க.சி. என்றொரு மானுடன்
செ.திவான் – சுஹைனா பதிப்பகம்
தோழர் தி.க. சிவசங்கரனின் வாழ்க்கை குறித்த விரிவான ஆய்வு நூல் இது.
புரட்சிகர சிந்தனையாளர். சிறந்த மானுட விடுதலைப் போராளி. குறிப்பாக இளைஞர்களை இடதுசாரி இலக்கியக் களத்தில் பல வகையில் அடையாளம் கண்டு தக்க வைத்த மாமனிதர். திகசி பற்றி திவான் விரிவாக நம்மோடு பகிர்கிறார். வாசிக்க வாசிக்க இன்று அவர் நம்மோடு இல்லை எனும் ஏக்கம் ஊற்றெடுக்கிறது சிறந்த வரலாற்று நூல்.

4. இரண்டாம் பிறவி (சிறுகதைத் தொகுதி)
குமரித் தோழன் – முதற்சங்கு பதிப்பகம்
குமரித் தோழனின் பல கதைகள் இன்றைய கல்விக் குறித்த காட்டமான விமர்சனங்களைக் கொண்டவை. சிராவணம், ஊமத்தம் பூ, முகத்திரை போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதைத் தவிர போதை, புகை இவற்றிற்கு அடிமையாதல் குறித்த சமூக அக்கறை ஏனைய பல கதைகளில் விரிகிறது. இந்த இருபத்தைந்து கதைகளின் வழியே தனது அரசியல் எது என்பதை குமரித்தோழன் தெளிவாகவே முன் வைக்கிறார். தோழர் தமிழ்ச்செல்வனின் அணிந்துரை மேலும் வளம் சேர்க்கிறது.

5. நீர் நிலம் வனம் கடல்
சமஸ் – தி இந்து பதிப்பு
தமிழ் இந்து நாளிதழ் கண்டெடுத்த முத்துக்களில் ஒன்று சமஸ். அவர் எழுதிய சூழலியல் கட்டுரைகள் மிகப் பரவலான வாசகர்களை அடைந்தன. கடல் பற்றிய நுணுக்கமான தமிழகத் தகவல்கள் இந்த நூலில் நமக்கு ஆச்சரியம் ஊட்டி. கடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலிமையோடு மனதில் நிறுத்துகின்றன. கடலில் தமிழக ஆலைகளிலிருந்து வந்து கலக்கும் கழிவுகளைக் கடந்து அந்த விலைமதிப்பில்லா செல்வத்தை எப்படித் தக்கவைக்கப் போகிறோம் என மனம் பதறுகிறது.

Neer_Nilam_vanam_0_2283439d

6. சர். ஐசக் நியூட்டன் வாழ்க்கை வரலாறு
கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ்
எத்தனைமுறை படித்தாலும் நம்மை வசீகரிக்கும் வாழ்க்கை நியூட்டனுடையது. ஆப்பிள் சம்பவம், பள்ளியிலிருந்து வெளியேறுதல், கல்லூரியில் பணி செய்தபடியே படித்தது, இறுதி வரை திருமணம் இன்றி அறிவியல் கணிதம் என வாழ்வை அர்ப்பணித்தது கூடவே நுண்கணிதம் பற்றிய தகவல்களோடு வந்துள்ளது இந்தப் புத்தகம்.

newtan

7. இலை உதிர்வதைப் போல
இரா. நாறும்பூநாதன் – நூல்வளம்
இக்கதைகளின் சிறப்பு, அவை நம்மையும் அறியாமல் அவரது வாழ்வோடும் சூழலோடும் அழையா விருந்தாளியாய் வளைய வரவைத்து விடுவதுதான். இந்த மனநிலை எல்லா கதைகளிலும் ஏற்படுவது இல்லை. பவளமல்லிகை கதையே சாட்சி. அதில் கோணங்கி ஒரு பக்கம்; நூலாசிரியர் மறுபக்கம். நடுவில் மகள் திருமணத்தை சமாளிக்க தீனதயாளன் விற்கப்போகும் வீடு. இவற்றின் இடையே புகும் அந்த சிகரெட் புகையால் நாம் பயணித்துப் பதறும் அந்த நாழிகைகளை விட்டு விலகுதற்கு பல மணிநேரம் ஆகும். இப்படியாக 26 கதைகள் உள்ளன.

8. மனித நேயத்தை நோக்கி
தேவி சந்திரா – மணிமேகலை பிரசுரம்
தேவி சந்திராவை எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நாவல் பள்ளிக்கூட சம்பவங்களை வைத்து நகர்வதால் ஆர்வம் கொள்ளத்தக்கது. குறிப்பாக மாணவர்கள் சாதி அடிப்படையில் தங்களுக்குள் மோதல் போக்கை நாடும்போது, எத்தகைய நிதானம் விவேகம் ஆசிரியர்க்கு தேவை என்பதை வலி தெரியாமல் சொல்லிச் செல்கிறது. மாணவர்கள் படுகிற இன்னல்களை மேலும் விரிவான தளங்களில் ஆராய்ந்திருக்கலாம். நல்ல சமூக நாவல்.

9. இருளில் மறையும் நிழல்
மு.முருகேஷ், அகநி வெளியீடு.
கவிஞர்; குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்பாளி, ஹைகூ வித்தகர் என பல்பரிமாணம் கொண்ட தோழர் மு.முருகேஷ், நல்ல சிறுகதை எழுத்தாளரும்கூட என்பதைக் காட்டும் பதினோரு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஒன்பதரை பயணம், மயிரு, அற்ற பெயர் போன்றவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நேர்த்திமிக்க வாழ்வியல் கதைகள். அவரோடு உரையாடுவதுபோலவே உள்ளது. அவ்வளவுக்கு ஒப்பனையற்ற எழுத்து.

10. கூட்டத்திலிருந்து வரும் குரல்
ஜென்ராம், விகடன் பிரசுரம்
ஜூனியர் விகடனில் வரும் சிந்தனைப் பகுதியில் பத்திரிகையாளர் ஜென்ராம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசாட்சி மிகவும் அத்தியாவசியமானது. அது செம்மையாக நடக்க கண்காணிப்பு, விமர்சனம் அவசியம் என்பதை உணர்த்தும் எழுத்து. சமூகம், சேவை, ஒழுக்கம் என்றெல்லாம் பேசும் பல பிரபலங்களின் முகமூடி கிழிகிறது.

0002997--

11. கம்பதாசன் படைப்பாளுமை
இரா சம்பத், சாகித்ய அகாடமி
நம் புதுச்சேரி தந்த அற்புதக் கவிஞர் கம்பதாசனின் படைப்பு ஆளுமை மட்டுமல்ல… நண்பர் சம்பத் தொகுத்திருக்கும் பலர் படைத்த இந்தக் கட்டுரைகளின் வழியே அவரது மனித நேயம், உழைப்பாளர், பாட்டாளி வர்க்க சார்பு, பெண் விடுதலை என பன்முக வெளிப்பாடு படம் பிடிக்கப்படுகிறது. உளுத்த சோறு கூழுக்கும் வகையின்றி வாடும் மனிதனை மாடாய் உழைக்க வைத்து சுரண்டுபவருக்கு எதிராய் சாட்டையடியாய் கவிதைகள் தந்த கவியைப் பற்றிய செரிவான பதினோரு கட்டுரைகள் உள்ளன. திரைப்படப் பாடல் முதல் சிறுகதைகள்வரை இயங்கிய பன்முக ஆளுமையின் சிறப்பான பதிவு.

12. தாகூர் சிறுகதைகள்
தொ: சா.கந்தசாமி, பாரதி புத்தகாலயம்
இந்தியாவின் இலக்கிய ஆன்மாவான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதைகளில் நவீன பண்பாடு, சீர்திருத்த பார்வை, பெண் விடுதலை, விடுதலை வேட்கை, கல்வி குறித்த பார்வை என பல விஷயங்கள் உள்ளன. இரு கதைகள் ஜனநாயகம் பற்றிய அவரது பார்வையை முன்வைக்கின்றன. சா.க.வின் முன்னுரை நன்றாக அவரை அறிமுகம் செய்கிறது.

thagore kadhaikal

13. உயிரியல் பரிணாமத்தின் சில பக்கங்கள்
அறிவியல் வெளியீடு – டார்வின் பயணக்குழு
உயிரிகளின் தோற்றம் குறித்த சர்ச்சைகள் ஒன்றிரண்டல்ல, ஆனால் டார்வின் தனது பரிணாமவியல் மூலம் மிக அழகாக அதை முடிவுபெற வைத்து அறிவியல்மயமாக்கினார். இயற்கைத் தெரிவும் உயிர்த்திருத்தலின் போராட்டம் பொருந்திப் போவதால் பிழைத்திருத்தல் என விரியும் அறிவியலின் அடிப்படைகளைப் புரிய வைக்கும் புத்தகம் இது.

14. ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் பிலிப் மெடோஸ் டெய்லர்,
தமிழில்: போப்பு, சந்தியா பதிப்பகம்
Confessions of a Thug என ஆங்கிலத்தில் வந்த வரலாற்று நாவல் இது. தமிழில் போப்பு மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார். நமது நாட்டில் ஒருவர் வழிப்பறிக் கொள்ளையராக பிறக்க முடியும் என்பதை வியக்கவைக்கும் உண்மை. அந்தக் கொடூரத்தின் ஊடாக கொலைவாளாகும் கைக்குட்டையும், பிணக்காடாகும் இரவு விருந்துகளுக்கும் இடையே மிளிரும் மனிதாபிமானமும், தாய்மையும், தோழமையும், இந்து இசுலாமியன் என எல்லோருக்குமான தொழில் தெய்வமான பஹானியும் நம்மை முற்றிலும் வீழ்த்த மனதை வழிப்பறி செய்து விடுகிறார்கள். என்ன அற்புதப் படைப்பு! அமீர் அலியை நான் எப்படி மறப்பது?

15. வங்கமொழிச் சிறுகதைகள்
பெ.பானுமதி, சாகித்திய அகாடமி
வங்க மொழியில் இரண்டாவது கதை புரட்சி (நமது புதுமைப்பித்தன் காலம்) மரபு எதிர்ப்பு புரட்சி, என்கிறார்கள். செக்குமாட்டு வாழ்க்கை, விளம்பர மோகம், சாதிய வெறி, தனிமைப்பட்டு அந்நியமாதல், இயற்கைப் பேரழிவு, என இந்த 27 கதைகள் தொடாத அவலம் இல்லை. தேபேஷ் ராயின் அகதி, மதி நந்தியின் சவக்கிடங்கு, அதீன் பந்தோபாத்யாயரின் கருநாகம் போன்றவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கதைகள். மகாஸ்வேதாதேவியின் பாலூட்டியவள் கதை தரும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.

vanka_mozhi1

16. லஜ்ஜா
தஸ்லிமா நஸ்ரீன், தமிழில்: கே.ஜி. ஜவஹர்லால், கிழக்கு பதிப்பகம்
வங்காளதேசத்தில் ஒரு இந்துவாக வாழ்வது எவ்வளவு அவமானம், என எழுதும் தஸ்லிமா, நம் நாட்டின் மத அடிப்படைவாதத்தை மிக அழகாக தோலுரித்துள்ளதை உணர முடிகிறது. ஒரு இசுலாமியனாக இந்தியாவில் வாழ்வது 1992 டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு எவ்வளவு அவமானகரமானது என வரிக்கு வரி சூடு போடும் இந்த எழுத்து, வங்காளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

lajja_taslima_nasreen_book_cover

17. காலநிலை
சி. ரெங்கநாதன், பாரதி புத்தகாலயம்
இன்று உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலைமாற்ற அரசியலின் பின்னணி என்ன? சாதாரண இந்திய பருவமழை பொய்த்த சூழலை எப்படிப் புரிந்து கொள்வது? காலநிலை என்பதன் அடிப்படைக் கூறுகள் என்ன? இந்திய பாரம்பரிய விவசாயம் நமக்குப் போதித்தது என்ன? பல கேள்விகளுக்குப் பதில் இந்த நூலில் உள்ளது.

17936

18. நோர்வீஜியன் வுட் – ஹாருகி முரகாமி
த: சுப்பிரமணியம், எதிர் வெளியீடு
பீட்டில்ஸ் இசைக் குழுவின் பழைய ஆல்பம். ஆனால் அதன் இடுக்கிலிருந்து தொடங்கும் தனது அந்தக் காலத்திய நினைவுகளின் ஊடாக அப்டானின் மனவலி கொண்ட தூய காற்றின் நாகசாகி ரத்த வாடையை முகர வைக்கிறார் முரகாமி. இந்த இசை ஆல்பம் பால்ய தோழனின் மரணத்தை நினைவுபடுத்துகிறது. அது தற்கொலை, அதன் மறை பொருளாய் நம்மை உயிரோடு இருக்கும்போதே சடமாக்கும் நவீன வாழ்வெனும் வெறிநாய் அனைத்தையும் சிதைத்துப் பிய்த்து எறிகிறது. இயல்பான மொழி பெயர்ப்பு.

26083

19. மீத்தேன் எமன்
கு. ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஏற்கனவே தற்கொலைக் களஞ்சியமாக, கடனாளிக் களஞ்சியமாக, ஓட்டாண்டிக் களஞ்சியமாக அவஸ்தைப்பட்ட நிலையில் இந்த மீத்தேன் வாயு எனும் பயங்கரம் பிரமாண்ட பெட்ரோல் எடுப்புக் கனவுகளுடன், இருக்கும் உயிரையும் சூறையாட வந்துவிட்டது. ஒட்ட உறிஞ்சப்படும் நீர், வெளியே வெட்டவெளியில் கொட்டப்படும் எண்ணெய்க் கழிவு என அறிவியல் பூர்வமாக உண்மையை விவரிக்கிறார். நீதிபதிகளும் படித்தால் நல்லது.

Picture_352__92791_zoom

20. இந்தியாவும் உலகமும்
பி.ஏ. கிருஷ்ணன், தி இந்து
தமிழ் இந்து இதழில் பி.ஏ. கிருஷ்ணன், உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்புகள் குறித்து எழுதிய தொடரை நான் அவ்வப்போது படிக்காமல் விட்டது இப்போது நிறைவானது. நம் பாடப் புத்தகங்களில் இந்த ஆழமான தகவல்களை நாம் சேர்க்க வேண்டும். உலகம் நம்மிடம் நிறைய கற்றுள்ளது. சர்வதேச சதிப் பின்னலின் உரிமம் விஷயத்தில் நம்மிடம் கற்ற பல விஷயங்களுக்கு நம்மிடம் தண்டம் வசூலிக்கிறார்கள். 176 பக்க அரிய பொக்கிஷத்தை நமது பாடப்புத்தக அன்பர்கள் பயன்படுத்தலாமே.

21. சார்லி சாப்ளின்
பி.பி.கே.பொதுவால், தமிழில்: யூமா. வாசுகி
சார்லி சாப்ளின் இரண்டாம் உலக யுத்தத்தின்போது போருக்கு எதிராக உலகப் பேரழிவுக்கு எதிராக மக்களைத் திரட்டியதால் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு இங்கிலாந்திலிருந்து வெளியேறிட நிர்ப்பந்திக்கப்பட்டார். முக்கியமான இதுபோன்ற பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நல்ல வரலாற்று நூல் இது.

charli

22. காத்துக் கருப்பு
நேயம் சத்யா, விலை. 40, புலம் வெளியீடு.
சாமி வருவது, காத்து கருப்பு, ஆவி பேய் பிடிப்பது இதெல்லாம் வகைவகையான மனப்பிறழ்வு நோய் நிலை ஆகும். ஹோமியோபதி முறையின் தந்தை மருத்துவர் சாமுவேல் ஹானிமனின் பார்வையில் இந்த விஷயத்தை அணுகி அதற்கு அறிவியல் விளக்கங்கள் தருகிறார் நேயம் சத்யா. சிவகங்கை அருகே பழமலையில் எருமை பலியிட்டு நடக்கும் எல்லைத் தெய்வ வழிபாட்டை எழுதும் இடம் நூலில் முக்கியமானது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பேயோட்டும் ரத்த யாகம் இப்படி அடுத்தடுத்து மூட நம்பிக்கை நிகழ்வுகளை எடுத்து அலசுவது நமக்கு நேரடி விளக்கமாக அமைந்து அறிவியல்வாதியின் வேலை என்ன என்பதைத் தெளிவாக்குகிறது.

23. சிதைவுகள் சினுவா ஆச்சிபி
தமிழில்: என்.கே.மகாலிங்கம், காலச்சுவடு
நோபல் பரிசு பெற்ற கருப்பின எழுத்தாளர் சினுவா ஆச்சிபி எழுதிய Things Fall Apart நூலின் தமிழாக்கம் இது. ஒக்காஸ்வோ எனும் நைஜீரிய மல்யுத்த வீரனின் நினைவுகளது வழியே கருப்பின மக்களின் பிரிவினை …. குடும்பம் சடங்குகளிடமிருந்து வெறுத்து பல்வேறு நிர்பந்தங்களால் கிருத்துவமதத்தை பெரிய விடுதலையாகக் கருதும் ஒரு கால கட்டத்தை வாசிக்கும்போது நம் தலித் குடும்பங்களின் விடுதலைப் போராட்ட நாட்கள் நிழலாடுகின்றன.

sithaivugal__35640_std

24. புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்
கமலா புதுமைப்பித்தன்,
தொகுப்பு: மு.பொதியவெற்பன், பரிசல்.
புதுமைப்பித்தன் எனும் ஆளுமை தனது துணையான கமலாவை நேசித்த பாங்கு, வறுமையின் கடும் பிடியில் சிக்கி நொறுங்கிய வாழ்க்கையை போராடி இழுத்துச் சென்றவிதம், வாசிக்க வாசிக்க வலியை ஏற்படுத்தினாலும், போராளி என்பது புதுமைப்பித்தன் எனும் மனிதனுக்குப் பொருந்தும் அடைமொழி. எழுத்தின் நவீனத்துவத்தை உலக அரங்கில் தமிழில் விதைத்த அந்த மாமேதையின் அன்றாட வாழ்வு தஸ்தாவஸ்கிக்கு சற்றும் குறைவானதல்ல என நமக்கு உணர்த்தும் நூல்.

25. இளமையின் கீதம்
யாஸ்மோ, தமிழில்: மயிலை பாலு,
அலைகள் வெளியீட்டகம்
The Song of Youth சீன நாவலை தோழர் மயிலை பாலு தமிழ்ப் படுத்தித் தந்திருகிறார். மிகப் பிரமாண்ட நாவலின் நாயகி டாவோசிங் இந்த ஒரு நூலில் ஒரு நூறு எழுத்து ஆளுமைகளின் நூல்களை அறிமுகம் செய்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு. படிக்கப் படிக்க நாம் எந்த மூச்சுத் திணறலும் இன்றிப் பயணிக்கின்றோம். நூல்வெளியில் நடக்கும் வாழ்க்கை குறித்த விவாதம் மிகக் கடுமையானது. நாவலை வாசித்த பிறகு நீங்கள் அதே வாழ்க்கையில் வாழ்வது கடினம். பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் அரிய படைப்பு இது.

26. கணிதமேதை ராமானுஜம்
ரகமி, த.வி.வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்
ராமானுஜம் கடல்கடந்து பயணிக்க தனது தாயாரின் அனுமதியை எப்படிப் பெற்றார் என்பது ரகமி எழுதி சுவாரசியமாக வந்துள்ளது. அவரது கனவில் வந்து அன்னை பராசக்தியே கணித விடைகளைத் தந்ததாக கூறப்படுவது எவ்வளவு பெரிய பொய் என்பதை விளக்குவது முக்கியம். அவரது கணித உலகப் பங்களிப்புகளை தோழர் த.வி.வெங்கடேஸ்வரன் ஆழமாகவே வரிசைப்படுத்துகிறார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆவணமாக மிளிர்கிறது இந்தப் புத்தகம்.

ramanujan

27. மௌனியின் மறுபக்கம்
ஜே.வி. நாதன், விகடன் பிரசுரம்
உலகின் சிறந்த இலக்கியங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் எனும் அந்தஸ்து கொண்டவை. அதைப் போல் நிரந்தரத்தன்மை கொண்ட மௌனியின் எழுத்துகளின் பின்னே இருப்பவை வெறும் 24 கதைகள். இரண்டே கட்டுரைகள். நூறாண்டு கழித்தும் வாழும் எழுத்து அது. அதுகுறித்து விரிவாக அலசுகிறார் அவரோடு 16 வருடங்கள் நட்போடு வாழ்ந்த ஜே.வி. நாதன். அந்த மேதையின் அறியப்படாத பக்கங்கள் பலவும் மிளிர்கின்றன.

28. அக்னி சுடர்கள்
அரவிந்த குப்தா, (தமிழில்: விழியன்), பாரதிபுத்தகாலயம்
இந்திய விஞ்ஞானிகள் பலரைப் பற்றிய அரிய பதிவுகள் உள்ள நூல் இது. வேதியியல் மேதை ராய், கப்பல் கட்டுமான அறிஞர் கரம்ஜித், தாவர இயல் தந்த ஜானகி அம்மா என மறக்கப்பட்ட பலரை நினைவு கூறும் அற்புதப் புதையல் இந்த பக்கங்களில் உள்ளது. விழியன் அறிவியல் நுணுக்கங்கள் தவறாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.

akni

29. அரண்மனை
கும். வீரபத்ரப்பா, தமிழில்: இறையடியான்,
சாகித்ய அகாடமி
தாமஸ் மன்றோ தான் நமது ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்தில் உள்ள பதவிகளுக்கு பெயர் வைத்து நிர்வாகத்தை சீர்படுத்திய பிரித்தானிய அதிகாரி. சேலத்தை மையமிட்டு இயங்கிய மன்றோ, மனிதாபிமானம், மக்கள் ஆதரவு, இவற்றில் சிறந்து குடிகளின் செல்வாக்கு பெற்றவர். அரண்மனை அவரையும் சேர்த்து நமக்கு அந்தக் கால வாழ்வை ஆழமாக முன்வைக்கிறது. சாதாரண பேச்சுமொழியில் இறையடியான் அற்புதமாக மொழிபெயர்த்து இருக்கிறார்.

aranmanai_1

30. கலாம் கதை
கரூர் தமிழ் நாடன், நக்கீரன் பதிப்பகம், ரூ.70
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வாழ்வின் 100 சம்பவங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். இன்றைய இளைஞர்களின் விடிவெள்ளியான கலாம், தன் கதையைத் தானே பல வகையில் சொல்லி இருந்தாலும் சில நுணுக்கமான விஷயங்களோடும் அழகான சித்தரிப்புகளோடும் நம்மைக் கவர்கிறது இந்தப் புத்தகம். குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

31. தங்கள் பதிலை எதிர்பார்த்து
தொகுப்பு: ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ஆர்.வி பள்ளி
எஸ்ஆர்வி பள்ளி திருச்சி சமயபுரத்தில் உள்ளது. அங்கு படிக்கும் 48 குழந்தைகள் தங்களைப் பாதித்த ஆளுமைகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அப்துல்கலாம், மலாலா, தோனி, ஐ.நா. பொதுச் செயலாளர், பிரதமர் என பட்டியல் நீள்கிறது. கடிதங்கள் சமகாலப் பிரச்சனைகளைப் பேசுகின்றன. பல ஆளுமைகள், குழந்தைகளை மதித்து கடிதங்களும் எழுதி இருப்பது மேலும் சிறப்பு. நீதிஅரசர் சந்துரு, இறையன்பு ஞாநி, தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் பதில் கடிதங்கள் மிகவும் ஆச்சரியமான தகவல்களைக் கொண்டுள்ளன. மிகவும் வித்தியாசமான முயற்சி.

thangal pathil wrappe front

32. சின்ன விஷயங்களின் கடவுள்
அருந்ததிராய், காலச்சுவடு, தமிழில்: குப்புசாமி
காலம் தாழ்த்தி வாசித்தாலும் காரம் போகாத இந்தப் படைப்பு, ராஹேல் எனும் பெண் பாத்திரம் வழியாக தீராக்கோபத்தோடு நவீனத்துவ புதைகுழியைக் கிழிக்கிறது. அதிகார மையமாக எப்போதுமே செயல்படும் ஆண்மனம் கம்யூனிஸ்டாகவோ கிருஸ்த்துவ பாதிரியாகவோ, வேதாந்திரியாகவோ எதுவாகினும் விஷப் பூச்சிதான். பால் பேதமே காட்டாத மனம் என்பதைத் தேடி அலையும் இந்த எழுத்து பேசுவது சின்ன விஷயங்களை அல்ல.

33. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
காம்கேர், தமிழில் : கே. புவனேஸ்வரி, விகடன்பிரசுரம்
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கைபேசி, வங்கிமுறை ஏடிஎம் கார்டு இவையெல்லாம் கண்காணிப்பு அரசியலின் அங்கம். தனிமனித உரிமையைப் பறிக்க ஆதார் அட்டை தேவை இல்லை. இவற்றில் ஒன்றிருந்தால் போதும். இணையத்தில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒரு மூன்றாம் கண் நம்மைக் கண்காணிக்கிறது என்கிறார் புவனேஸ்வரி. அவசியம் வாசித்து அறிய வேண்டிய தகவல்கள்.

nengal-kankaanikkapadukirirgal

34. தமிழ் இலக்கியம் ஒரு பார்வை
கே. முத்தையா, (என். ராமகிருஷ்ணன்) பாரதி புத்தகாலயம்
தோழர் முத்தையாவின் கறார் மார்க்சியத் தடம். நம் தமிழ் இலக்கியத்தை சரியான சமூக நல நோக்கில் அணுக நம்மை செதுக்குகிறது. மிகத் தெளிவான பார்வையில் களம் கண்ட இலக்கியக் கட்டுரைகள், பல்கலைக்கழக பேராசிரியராக தனி வகுப்பு எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் வாசிக்கும்போது வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

tamil ilakkiyam copy

35. அவஸ்தை
யூ.ஆர். அனந்த மூர்த்தி, தமிழில்: நஞ்சுண்டன், காலச்சுவடு
மரத்தடியில் மாடுகளை மேய்க்கும் சிறுவன் கிருஷ்ணப்பன் தனது மாநில முதலமைச்சராகும் சாத்தியம் யு.ஆர். அனந்தமூர்த்தி முத்திரை. ஆனால் அது சினிமாவாக எடுக்கப்பட்டபோது நீதிமன்ற வழக்காகி பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. குதிரை ரேஸை விட மனைவி முக்கியமல்ல என்கிற தத்துவ ஆசான் மஹேஸ்வரன் பாத்திரம் இன்னொரு சர்ச்சையாகி புயல்மேல் புயல் கிளப்பிய நாவலை நண்பர் நஞ்சுண்டன் தமிழாக்கம் செய்துள்ளார். அரசியல் பேசும் அபூர்வப் படைப்பு.

36. மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
டெரி ஈகிள்டன் (தமிழில்: அ.குமரேசன்)- பாரதி புத்தகாலயம்
இலக்கிய விமர்சனம் என்பது வேறு; திறனாய்வு என்பது வேறு. ஆய்வுமுறையும் அதுசார்ந்த தத்துவார்த்த அணுகுமுறையும்தான் அந்த வித்தியாசத்திற்கான மெல்லிய கோடு. இலக்கியம் ஒரு அரசியல் செயல்பாடு. அது மக்கள் வாழ்வின் பிரதிபலிப்பாகவே அணுகப்பட முடியும். ஆய்வாளர் ஈகிள்டன் அந்தப் பார்வையின் அறிவியல் உட்கூறுகளை முன் வைக்கிறார்.

marsiyam

37. பாப்லோ நெருதா கவிதைகள்
தமிழில்: ஈரோடு தமிழன்பன், பாரதி புத்தகாலயம்
சிலிநாட்டின் புரட்சிகர விடியலைப் பாடிய அற்புதக் கவிஞர் பாப்லோ நெருதா. அந்த நாட்டு ராஜீய தூதுவராக இந்தியாவில் பணியாற்றிய ஆண்டுகளில் இங்கிருந்து எழுதிய கவிதைகளும்கூட நூலில் உள்ளன. அக்னி சொற்கள்.. மக்களின் ஆயுதமாய் ஆகவல்ல எழுச்சி முத்திரை ஒவ்வொரு கவிதையிலும் மிளிர்வதைக் காணலாம். நெருடலற்ற மொழிபெயர்ப்பு.

neruda

38. கரப்பான் பூச்சி நகைக்குமா?
நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன், கவிதா பப்ளிகேஷன்ஸ்
நம் சமூகத்தில் சர்வதேச பொருளாதார சட்டங்களால் பெருகிய ஏழ்மைக்கும் வசதி படைத்தவனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறித்துப் புத்தகம் பேசுகிறது. நீச்சல்குளத்தோடு கூடிய குடியிருப்புகள் ஒருபுறம்; தண்ணீர் லாரிக்காக கடுந்தவம் செய்யும் நிலை மறுபுறம் எனும் அவலத்தின் பின்னணி என்ன என்பதைத் தனது நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார் நீதி அரசர் பிரபா ஸ்ரீதேவன். தவறுகளைத் தட்டிக் கேட்கத் துணிவதே தீர்வு என்கிறார். பரிசீலிக்கலாம்.

39. எரிக் ஹாப்ஸ்பாம்
கா.அ. மணிக்குமார், பாரதி புத்தகாலயம்
வரலாற்றை மார்க்சிய முறைப்படி பார்க்கவும் சித்தரிக்கவும் சாதாரண மக்களின் இயக்கமாய் காலத்தை சுழற்றவும் எப்போதும் தயாராக இருந்த மாபெரும் அறிஞர் எரிக்ஹாப்ஸ்பாம் குறித்த தமிழின் ஏறத்தாழ ஒரே புத்தகம் இது. இந்தியாவில் 1970களில் சுற்றுப் பிரயாணம் செய்த ஹாப்ஸ்பாம் பெண்கல்வி குறித்தும் பெண் கூலியின் சம நீதி குறித்தும் ஆற்றிய இந்திய உரைகளும் முக்கியமானவை. மிக ஆழமாக அவரைப் பற்றியும் பேராசிரியர் எழுதிச் செல்கிறார். அவரது Age of Extreams நூலை ஆங்காங்கே மேற்கோள்காட்டி இருப்பது மிகச் சிறப்பாக வந்துள்ளது.

image description
image description

40. ஃபாரென் ஹீட் 541
ரே.பிராப்ரி, தமிழில்: வெ. ஸ்ரீராம், க்ரியா
இந்த அறிவியல் புனைவு நாவல் 2050ல் நடக்கிறது. ரே.பிராப்ரி அறிவியல் புனை கதைகளின் அரசன் என போற்றப்படுபவர். புத்தகங்களை எல்லாம் எரித்து அழித்துவிட அதிகாரவர்க்கம் முடிவெடுக்கிறது. அது எரியும் வெப்பநிலையே 451 ஃபாரன் ஹீட். எரியூட்ட நியமிக்கப்படும் கை மோண்டாக் நாவலின் நாயகன். அரசு வேலையாக எரியூட்டும் அவன் புத்தக வாசிப்பு வெறியனாவதே மூன்றாம் பாகம். இது ஒரு அப்பட்டமான அரசியல் நாவல். வெ. ஸ்ரீராம் மிக நேர்த்தியாக தமிழுக்குத் தந்திருக்கிறார். மனதை சுடுகிறது.

41. மனோதத்துவம்
டாக்டர் அபிலாஷா, விகடன் பிரசுரம்
மனம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்குப் பதில்சொல்லும் நூல். வசியம் செய்வது சாத்தியமா? ஹிப்னாடிசம் உண்மையா? மனநிலை பாதிக்கப்பட்டதாக நாம் எப்படி உணர்வது? நம் மனதைக் கட்டுப்படுத்த தியானம் உண்மையாலேயே வேலை செய்யுமா? இவற்றை தான் அளித்த மருத்துவ சிகிச்சைமுறை வாயிலாகவே விளக்குகிறார். மனதைத் தொடுகிறது.

42. சோஷலிசமும் மதபீடங்களும்
ரோசா லக்சம்பர்க், பாரதி புத்தகாலயம்
ரோசா லக்சம்பர்க்கின் அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மார்க்சிய லெனினிய உட்கூறுகளை சமூக மாற்றத்திற்கு எப்படி பயன்கொள்ள வைக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. சோசலிச சமுதாயம் பிறந்தபோது மதபீடங்களும் பொய்ப்பிரச்சாரங்களும் எப்படி வீழ்த்தப்பட்டன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வரலாற்றின் பின்னணியில் விளக்கமாய் ஆராய்கிறது. இன்றைய காவி அரசியல் சூழலில் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

6906

43. கரமசோவ் சகோதரர்கள்
தஸ்தயெவ்ஸ்கி, என்சிபிஹெச், தமிழில்: கவிஞர் புவியரசு
உலகின் தலைசிறந்த படைப்பை தலைசிறந்த ஒரு படைப்பாளி தமிழில் தருகிறபோது நமக்கு ஜாக்பாட் அடித்ததுபோல… ஒரு கலகக்காரன் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும் அலெக்சேய் ஃபியாதரவிச் கரமசோவ் எனும் முதல் சொல்லுடன் நாம் இந்த பிசாசின் கையில் அகப்பட்டு அந்த ஈர்ப்பின் விஷத்தன்மை தலைக்கேறி உணவு உறக்கம் மறந்து வாழ்ந்து தந்தையைக் கொன்ற வழக்கை விசாரித்து குழந்தை மரணப் பேரணியில் கலக்கிறோம். இதோ அந்தக் கல்லறை. அதன்மேல் இறுதியாய் வைத்த பூங்கொத்தின் ரோஜாக்களில் ஒன்றாக நானும் கிடக்கிறேன். இந்த சிகிச்சைக்கு இணை இல்லை.

44. அழகான அம்மா
ரஷ்ய சிறார் கதைகள், மொழிபெயர்ப்பாளர்: யூமா வாசுகி என்சிபிஹெச்.
குழந்தைகளின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அற்புதக் கதைகள் இத்தொகுப்பு முழுவதும் உள்ளன. 50 கதைகள். பல ரஷ்ய எழுத்தாளர்களின் பங்களிப்பு. குழந்தைகளுக்கு கதை எழுதும் அற்புத உத்தியை நாம் ரஷ்ய எழுத்தாளர்களிடம் கற்க வேண்டும். குழந்தைகளால் எளிதில் கடக்க முடிந்த குட்டிக் கதைகள். விலங்குகள் பறவைகள் வழியே நல்வழிக் கதைகளைப் படைக்க முயன்று அவர்கள் வெற்றி அடைகிறார்கள்.

45. விடுதலை
சமன் நாஹல், தமிழில் :பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி
1977ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆங்கில நாவல் அஸாடி, பிரேமா நந்தகுமாரின் மொழி பெயர்ப்பில் விடுதலை பெற்றுள்ளது. 1945ல் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் தொடங்கும் இந்த பிரமாண்ட நாவல் பஞ்சாப் மாநில மக்களின் அவலங்களை, பஞ்சம் தலைவிரித்தாடிய நாட்களின் பின்னணியில் பிரிவினையின் கொலைத் தாக்குதலின் அடிநாதமாய் நம்மைப் பிழிந்தெடுக்கிறது. மூன்று பாகங்களில் இறுதி சக்தியான …. கன்ஷிராமின் அவலத்தில் பிறக்கும் விடுதலை பற்றியது. அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

vitothalai

46. ஆறாவது வார்டு
அந்தோன் செக்காவ், பாரதி புத்தகாலயம்
மத்திய தர வர்க்கத்தின் அன்றாட அவலங்களை இத்தனை உக்கிரமாக எழுத்தில் வடிப்பது அந்தோன் செக்காவுக்கே உரிய பாணி. என்ன அற்புத அனுபவம். நெக்குருக வைக்கும் சம்பவ அடுக்குகள். பணப்பற்றாகுறை எனும் பிசாசு பலியிடும் உறவுகள்தான் எத்தனை. திணற வைக்கும் அவலங்களின் ஊற்றாய் பரிதவிக்கும் வாழ்வின் இருள் கவ்விய பிரதேசங்களை கதை அவிழ்த்துவிடுகிறது.

6th vardu

47. லால்பகதூர் சாஸ்திரி
அனில்சாஸ்திரி, தமிழில்: பொன் சின்னதம்பி. விஸ்டம் வில்லேஜ்,
காந்தி பிறந்த அதே நாளில் பிறந்தவரான லால் பகதூர் எளிமையின் சின்னமாக வாழ்ந்தவர். நேருவுக்குப் பிறகு பிரதமரான சாஸ்திரி மெய்காவலர்களை வைத்துக் கொள்ளாதவர். ஏதோ சாதாரணமாக ஆபீஸ் போவதுபோல பொதுப் பேருந்தில் அவர் பிரதமர் அலுவலகத்திற்கு கையில் ஒரு மதிய உணவு டப்பாவுடன் பயணித்ததை வாசிக்கும்போது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த பேச்சாளர். தலைமை பண்புகளின் பேராசான் என்பதில் சந்தேகமே இல்லை.

48. இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
எம்.என்.ராய், தமிழில்: வெ.கோவிந்தசாமி,
பாரதி புத்தகாலயம்
உலகின் ஏகாதிபத்தியமான அமெரிக்கா இன்று தனது ஒரே எதிரியாக இசுலாமிய மதத்தையே கருதுகிறது. ஒரு கால கட்டத்தில் இசுலாம் வகித்த வரலாற்றுப் பாத்திரத்தை இந்த பொதுவுடைமை சிந்தனையின் தந்தை எம்.என்.ராய் அழகாக விளக்கி நம் நாட்டின் மத நல்லிணக்கப் பாரம்பரியத்தை விதைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகம். இப்போது தமிழில்.

49. மனிதக் குரங்கிலிருந்து
மனிதனாக மாறிய படியில் உழைப்பின் பாத்திரம்
பிரெடரிக் ஏங்கெல்ஸ், பாரதி புத்தகாலயம்
டார்வின் தத்துவத்தை அவர் வாழ்ந்த காலத்திலேயே உள்வாங்கிக் கொண்டாடியவர்கள் சிலரே. மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். ஏங்கெல்ஸ் டார்வினியத்தை மேலும் ஆழமாக்கிய கட்டுரை இது. இதனை வரவழைத்து வாசித்து ஆச்சரியப்பட்டாராம் டார்வின். உழைப்பின் பாத்திரமே மனிதக் குரங்கை மனிதனாக்கியது என்பதை இந்தக் கட்டுரை சிறப்பாக நிரூபிக்கிறது. அறிவியல் கட்டுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு சாட்சியாகவும் உள்ளது.

50. பாரதியார் சரித்திரம்
செல்லம்மா பாரதி, அழகு பதிப்பகம்
பாரதியின் துணைவியார் பார்வையில் பாரதியின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு மறுபதிப்பு கண்டுள்ளது. நேர்த்தியாகப் பேசுவது போலவே நடை. மத யானை அவரை வீசியதையும் பிறகான அவரது வாழ்வையும் சிங்காரவேலர் மடியில் அவர் உயிர் பிரிந்ததையும் வாசிக்கும்போது மனம் ஜில்லிடுகிறது. அவரோடு வாழ்ந்த அனுபவம் பற்றிய புதுவை வாழ்வு பற்றிய போராட்டங்களை உள்ளது உள்ளதுபடியே சொல்வது வலி தரும் அனுபவம், பாரதி பாரதிதான்.

Related posts

One thought on “வாசித்ததில் யோசித்தது

 1. முரளி

  20ஆவதாக தாங்கள் “இந்தியாவும் உலகமும்” என்ற புத்தகத்தை குறிப்பிட்டு இருக்கிறிர்கள்.
  அதை பற்றிய என் கருத்து, “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பு புத்தகத்திற்கு சுத்தமாக பொருந்தாத தலைப்பு.
  “மோடியை தூற்றுவோம்” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். “காங்கிரஸை போற்றுவோம்” என்பது துணை தலைப்பாக இருந்தால் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும்.
  உண்மையாக நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். ஆனால் படித்து முடிக்கும் பொழுது, மோடியை கரித்து கொட்டுவதும் காங்கிரசை தூக்கி பிடிப்பதுவே புத்தகத்தை பற்றிய கருத்தாக என் நினைவில் இருப்பது.
  அதுமட்டுமின்றி முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை புதுமையை புகழ்ந்து, பழைமையை இகழ்ந்துதள்ளி இருக்கிறார் ஆசிரியர்.
  புத்தகம் முழுவதும் இவை இரண்டை தவிர வேறு எதுவும் இல்லை.
  அதிலும் உச்சகட்டமாக “Genetically Modified” பயிர்களை ஆதரித்து துக்கிப்பிடித்து பிரச்சாரம் செய்திருக்கிறார் இந்த மனிதர்.
  இந்தியாவையும் உலகத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தயவுசெய்து இதை வாங்கி தங்கள் நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்யவேண்டாம்.
  வேறு புத்தகம் தேடுவது உசித்தம். புத்தகம் முழுவதும் தன் சொந்த கருத்துக்களே தவிர வேறு எதுவும் இல்லை.
  சந்திக்கும் மனிதர்கள் அனைவரிடமும் மோடியை விசாரித்து விமர்சனம் பெற்றாரே தவிர, சோனியாவை, ராகுலை, 2G, போன்ற இமாலய ஊழல்களை பற்றி விசாரிக்க தோன்றவே இல்லை ஆசிரியருக்கு பாவம்.
  நான் படித்த பி.ஏ.கிருஷ்ணனின் முதல் நூல் இது, கண்டிப்பாக கடைசியும் இதுவே.
  தனக்குள் ஒரு எழுத்தாளன் இருக்கிறான் என்று தன்னை தானே ஏமாற்றிகொண்டு வாழ்கிறார் ஆசிரியர்.
  நாட்டில் எழுத்தாளர்களுக்கா பஞ்சம், ஏன் இது போன்ற “amateur writters”யை நம்பி இருக்கும் சூழ்நிலை பாரம்பரியமான ஹிந்து’விற்கு வந்ததோ தெரியவில்லை.

Leave a Comment