You are here
நூல் அறிமுகம் 

மனிதம் தொடங்கிய இடம்

ஹேமபிரபா

ஒரு நாவலைப் படிக்கும்போது, பாதியிலேயே கதையின் முடிவை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அதற்காகவே விடாமல் வேகமாகப் படித்து முடிப்போம். ஆனால், அ. முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம் நாவலைப் படித்தபோது அந்த அவசரம் என் வாசிப்பில் இல்லை. இலங்கையில் இருந்து அகதியாய் புறப்பட்ட இளைஞன் தான் நினைத்த இடத்திற்குச் சென்றடைந்தானா என்ற ஆவல் எல்லாம் ஏற்படவில்லை. மாறாக, அந்த இளைஞனின் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லிப்போனது.

பசிக்கு எதிர்ப்பதம் இருக்கிறதா? ருசியை மட்டுமே அறிந்து வளர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பசிக்கு என்ன எதிர்ப்பதம் என்றெல்லாம் சிந்தனை செய்துபார்த்ததுகூட இல்லை. எதிர்க்க ஆளில்லாமல் ஆணவத்தில் கோரத்தாண்டவம் ஆடும் அரக்கன்தானே பசி! பயணம் போகும்போது, ஓரிரு ரொட்டிகளையும், பழங்களையும் கொடுத்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இவ்வளவுதான் என்றால் எப்படி இருக்கும்? இலங்கையில் இருந்து வேறொரு நாடு கிடைத்துவிடாதா என்று அகதிகளாக வெளியேறும் எல்லோரும் இந்த சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு மார்க்கில் உங்கள் தலையெழுத்தே மாறும். நாமக்கல் பள்ளி வட்டாரங்களில் எல்லா மாணவரிடத்திலும் சொல்லப்பட்டிருக்கும், சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொதுவான வாக்கியம். அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காமல் வேறொரு இடத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் படிப்போம் என்பதுதான் அவர்களின்படி தலையெழுத்து மாற்றம். மருத்துவம் படிக்கும் அளவு தகுதியிருக்கும் ஒருவன் எச்சில் கோப்பைகளைக் கழுவும் நிலை வந்துவிடும் – இதுதான் அகதியின் தலையெழுத்து மாற்றம்.

பணம் வாங்கிக்கொண்டு எல்லை தாண்ட உதவும் ஏஜெண்டுகள் எல்லாம் நேர்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர்களோ கரணம் போட்டாவது தங்கள் வேலையை முடிப்பவர்களாக இருக்கிறார்கள். தப்பித்து கடல் கடந்து கனடா செல்பவர்களுக்கென்றே எச்சில் கோப்பைகள் எங்களைக் கழுவிவை என்பதைப் போலக் காத்திருக்கின்றன. அதைத் தவிர பெரிய வேலை செய்பவர்கள் எல்லாம் எங்கோ ஓரிருவர்தான்.

இந்தியாவில் இருந்து தைவானுக்குப் படிப்புக்காக செல்ல வேண்டியிருந்தது. சீனாவில் இறங்கி ஒரு மணி நேரத்திற்குப்பின் தைவான் செல்லும் விமானம் புறப்படும். ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு கடவுச்சீட்டில் ஹாங்காங் முத்திரை குத்தப்பட வேண்டும் என்று நினைத்து, விமான நிலையப் பணியாளரை அணுகினேன். அதற்கு அவசியமில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால், அவர்கள் பேசின ஆங்கிலத்திற்கும், நான் பேசிய ஆங்கிலத்திற்கும் அவ்வளவு பெரிய வேறுபாடு இருந்தது. நான் கேட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்னும் சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. கொஞ்ச தூரம் நடந்துபோய் மற்றொரு பணியாளரிடம் விசாரித்தேன். அவரும் அதையே சொன்னார். முதல்முறை வெளிநாட்டுப்பயணம். தனியாய். அடுத்த அரைமணிநேரம் என்னை விமானத்தில் ஏற்றுவார்களா என்னும் பயத்திலேயே அமர்ந்திருந்தேன். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வேலை முடிந்தது. என்னுடைய கடவுச்சீட்டு, பயண விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்போதே அவ்வளவு சந்தேகம் இருந்தது எனக்கு. ஆனால், கள்ளக் கடவுச்சீட்டில் இவர்கள் நாடு கடக்கிறார்கள். போலீஸிடம் பிடிபட்டாலும் மீண்டும் முயற்சிக்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளைப் பார்த்துவிட்டோம், இனி எங்களுக்கு எல்லாம் துச்சம் என்பதை அழுத்தமாகக் காண்பிக்கின்றன அவர்களின் செயல்கள்.

யாரென்று தெரியாத ஒருவருக்குக் காதலியாக நடிக்கத் துணியும் பெண்; உண்மைக் காதலன் காவலர்களிடம் மாட்டும்போது யாரென்றே தெரியாமல் நடந்துகொள்ளும் பெண்; மீனுக்காக கொலை செய்யும் ஒரு ஆள்; முகத்தைப் பார்த்தே பசி என்று புரிந்துகொண்டு ரொட்டிகளைக் கொடுக்கும் யாரோவொரு வெளிநாட்டுப் பெண்; நம்மவர் என்னும் எண்ணமே இல்லாமல், போலீஸில் போட்டுக்கொடுக்கும் நண்பர்; என்ன நடந்தாலும் உறுதியுடனும் அமைதியுடனும் வழிநடத்தும் ஆசிரியர் என்று வழிநெடுக விதவிதமான மனித கணங்கள் நாவலை ஆக்கிரமிக்கின்றன.

என் உறவினர் ஒருவர் என்னிடம் அடிக்கடி இப்படிச் சொல்வார். கதைகளைப் படிப்பதால் என்ன பயன்? அதைக் காட்டிலும், தகவல் நிறைந்த கட்டுரைகள் மற்றும் செய்திகளை வாசித்தாலாவது நிறைய விஷயம் தெரிந்துகொள்ளலாம் என்பார். அதுவென்னவோ உண்மைதான். ஆனால், மனித வாழ்வைப் படிப்பது எப்போது? சொல்லப்போனால், தகவல்களைப் படிக்கலாம் என்றாலும், அதுவும் மனிதர்களின் வாழ்வாகத்தான் இருக்கிறது, இல்லையெனில் மனிதர்கள் செய்துவைத்த காரியங்களாகத்தான் இருக்கின்றன.மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நினைக்கும் மனிதர்களுக்கு இந்த நாவல் கண்டிப்பாக உதவும்.

Related posts

Leave a Comment