You are here
அஞ்சலி 

பிலிம் நியூஸ் ஆனந்தன்  (1928- 2016)

அஜயன்பாலா

பத்து வருடங்களுக்குமுன் பி சி ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய வானம் வசப்படும் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து அதற்கு முன்பாக சொல்ல மறந்த கதையில் வெறுமனே தலை காட்டியிருந்தாலும் . ஒரு கதாபாத்திரம் என்ற அளவில் எனக்கு அது முதல் படம் .படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது அதுகுறித்து தினத்தந்தி வெள்ளித்திரையில் ஒரு செய்தி வெளியானது . நடிகர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்த்து.

அன்று மாலையே ஒரு அழைப்பு
தம்பி! நான் பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசறேன்
எனக்கு சட்டென, ஒரு வரலாறு என்னோடு கலப்பதுபோல் ஒரு பெருமை. எத்தனை முறை அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்
சொல்லுங்க சார்
தம்பி! நீங்க வானம் வசப்படும் படத்துல நடிச்சிருக்கீங்கறத பேப்பர்ல படிச்சேன் ..புதுப் பேரா இருக்கு. உங்களைப் பத்தி விவரம் சொல்ல முடியுமா உங்க ஊர்? வயசு .. இதுக்கு முன்னாடி எதாவது படத்துல நடிச்சிருக்கீங்கன்ற விவரம்லாம் எனக்குச் சொன்னீங்கன்னா சௌகரியமா இருக்கும்
அன்று மாலையே அவரை வீட்டில் சந்தித்து புகைப்படத்துடன் தகவல்களைக் கொடுத்தேன் .

என்னைப் போல ஒவ்வொரு வாரமும் பல புதுமுகங்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். இப்படி அவர்கள் ஒவ்வொருவரிடமும் தொடர்பு கொண்டு .. நான் பேசும்போது அவருக்கு எப்படியும் 80 வயது இருக்கும் .அறுபது வய்திலேயே ஆடி அடங்கியாகிவிட்டது என வீட்டில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்க்கும் இந்தக் காலத்தில், இந்தவயதில், தொடர்ந்து அவர் தகவல்களைத் திரட்டுவதும் விடாமல் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து கொள்வதும் ஆச்சர்யப்படத்தக்க விஷயம்.

ஆங்கிலப் படங்கள் பற்றிய விவரங்களைக்கொண்ட புகழ்பெற்ற வலைத்தளம் IMDP. இதில் தினசரி தகவல்களை சேகரிக்கவும் பகுக்கவும் தொகுக்கவும்  அச்சுக்கோர்க்கவும் உலகம்முழுக்க பல  நூறு ஊழியர்கள் நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக  24×7 பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான நிறுவனம் செய்யும் காரியத்தை ஒரே ஒரு ஆள்; அதுவும் கம்ப்யூட்டர் உபயோகத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தன் வாழ்நாளையே அர்ப்பணித்து தமிழ் சினிமாவுக்காக செய்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட காரியம்! அவரை இந்த சமூகம் தலையில் வைத்தல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்

ஆவணப்படுத்துவதும் தகவலை சேகரிப்பதும் சமூகத்துக்கு அத்தனை அவசியமா என பலரும் கேட்கலாம் . வரலாறு ஆவணப்படுத்துதலிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது.
உல்க சினிமா வரலாற்றை எழுதும்போது அதன் ஒவ்வொரு மாற்றங்களையும் நுணுக்கி ஆய்ந்தறிந்து எழுதிய காலத்தில் எனக்குத் தேவைப்பட்ட ஆதாரப்பூர்வமான் தகவல்களுக்கு ஆங்கிலத்தில் பல நூல்கள் கிடைத்தன. அதே தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆசைப்பட்டபோது எனக்கு போதிய தரவுகளுக்கான நூல்களே இல்லை. அறந்தை நாராயணன் எழுதிய தமிழ் சினிமாவின் கதை தாண்டி வேறு நூல்களேயில்லை. அதுவும் கூட முக்கியமான படங்களைக் குறிப்பிடும் நூலே தவி,ர 1917-ல் நடராஜ முதலியாரின் கீசக வதம் முதல் படம் என அனைவருக்கும் தெரியுமேதவிர அக்காலத்தில் வந்த தமிழ் மவுனப்படங்களின் வரலாறு இன்றுவரை யாருக்கும் தெரியாது என்பது மிகவும் துர்ப்பாக்கிய நிலை.

பி.கே. ஞானசாகரம் என்பவர் தன் மகன் மணி எனும் ஆறுவயது சிறுவனைப் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றிருக்கிறார். தலைமை ஆசிரியருக்கு மணி என்ற பெயர் பிடிக்கவில்லை. அனந்த கிருஷ்ணன் என புதுப் பெயரைச் சூட்டினார் . அனந்தகிருஷணன் ஆனந்தன் ஆனார்.

பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார் ஆனந்தன். உடன் சிறுவயது முதல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர். பின் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை தொடர்ந்தாலும் அங்கு உடன் படித்த

ஒய்.ஜி. பார்த்த சாரதியுடன் இணைந்து நாடகங்கள் போடத் துவங்கினார். ஆனாலும் காமிராவின்மீதான மோகம்தான் அவரை அதிகம் அலைக்கழித்தது. பாக்ஸ் கேமராவில் தனது யுக்தியால் இரட்டைவேடப் படம் எடுத்தார். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை அவருக்கு முறைப்படி இன்னும் நேர்த்தியாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி, விலையுயர்ந்த ஸ்டில் கேமராவை வாங்கிப் படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பைப் பற்றிச் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தார். அவரது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் அவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் வெறும் ஆனந்தனாக இருந்தவர் பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார். பின் ஒருநாள் நாடோடி மன்னன் அலுவலகத்தில் ஆர் எம் வியை சந்திக்கப் போக, அன்றுமுதல் மக்கள் தொடர்பு பணியும் அவருக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து வெறும் பத்திரிகையாளனாக இல்லாமல் போலீஸ்காரன் மகள் (1962) பொம்மை (1964) ஊமை விழிகள் (1986) சுகமான சுமைகள் (1992) ஆசை (1995) இந்தியன் (1996) ஆகிய படங்களில் சிறியதும் பெரியதாகவும் நடிக்கவும் செய்தார். இதில் கடைசி இரு படங்கள் கத்தரியில் காணாமல் போனாலும், டைட்டில்களில் நன்றி என அவர் பெயரைத் தாங்கியே வெளியாகின.

தொடர்ந்து 70 ஆண்டுகள் அவர் இடைவிடாமல் அனைத்துப் படங்கள் குறித்தும் சேர்த்து வைத்த தகவல்கள் சாதனை செய்த தமிழ் சினிமா எனும் பெயரில் நூலாக வெளிவந்து பொக்கிஷமாக நமக்கு பயன்படுகிறது. அரசாங்கம் இதற்காக பத்துலட்ச ரூபாய் செலவுசெய்து தன் குற்றவுணர்ச்சிக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த அவரது பணிக்காக கண்டிப்பாக ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துக் கவுரவப்படுத்தலாம் . அப்போது தன் வருங்காலத்தில் ஆவணப்படுத்துதல் பணியின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவரும்.

Related posts

Leave a Comment