You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

‘பால்வெளி’யில் ஓர் ‘ஆகாயச் சுரங்கம்

ஒரு புத்தகம் 10 கேள்விகள்

aagayachurangam

சி. ராமலிங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நழுவு படக் காட்சி உரைகள் (Slide Show Lectures) நிகழ்த்துவதில் 1989ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டிருப்பவர். துளிர் இதழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருபவர். குழந்தைகள் அறிவியல் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருபவர். குழந்தைகள் அறிவியல் மாநாடு (Children’s Science Congress)களை மத்திய அரசின் உதவியுடன் அறிவியல் கூட்டமைப்புகளின் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இதனுடைய மாநில ஒருங்கிணைப்பாளராகவும் தேசிய அளவிலான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். இவருடைய இரண்டு நூல்கள் 19.03.2016 அன்று மேன்மை பதிப்பக வெளியீடுகளாக வந்துள்ளன. பால்வெளி, ஆகாயச்சுரங்கம் இந்த இரண்டில் பால்வெளி கவிதைகளின் வழி பிரபஞ்சத்தின் புதிர்களைப் பேசும் நூல். அறிவியல் உண்மைகளை எளிய தமிழில் கவிதைகளாக்கியிருக்கிறார். இதில் ஆகாயச்சுரங்கம் கட்டுரைத் தொகுப்பு குறித்து பத்து கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். தமிழில் இது ஓர் அரிய புதிய முயற்சி.

கே: ‘ஆகாயச்சுரங்கம்‘ கட்டுரைத் தொகுப்பின் கட்டுரைகளில் விண்கற்கள் குறித்து மீண்டும் மீண்டும் பேசியிருக்கின்றன. பெண்களின் பெயர்களையே பெரும்பாலும் விண்கற்களுக்குச் சூட்டுவார்கள் என்ற குறிப்பு வியப்பளிக்கிறது. என்ன காரணம்?

ப: 1. விண் கற்கள் பட்டை என்பது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றிவரும் பாறைக் கூட்டம். இதில் சிறியதிலிருந்து பல கிலோமீட்டர் விட்டமுடைய பாறாங்கற்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் இருந்துதான் பல குள்ளக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சிரஸ் என்பது ஒரு குள்ளக்கோள். இதை 1801 ஆம் ஆண்டு ஜியுசெப்பி பியாசி என்ற வானவியலாளர் கண்டு பிடித்தார். இதற்கு அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள சிரஸ் என்ற பெண் தெய்வத்தின் பெயரை வைத்தார். அந்தப் பெண் தெய்வம் கருத்தரிப்பு மற்றும் அறுவடைக்குத் தெய்வமாக இருந்தது. இந்தப் பெயர் சூட்டப்பட்ட பிறகு பாரம்பரிய நிகழ்வாக மாறி புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் விண் கற்களுக்கு பெண்கள் பெயரையே வைத்தார்கள். இந்தக் காரணத்தைத் தவிர வேறு ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

முக்கியமாக சிரஸ், வெஸ்டா, பல்லாஸ் மற்றும் ஜினோ இவைகள் எல்லாம் விண்கற்கள் பட்டையில் உள்ளக் குள்ளக் கோள்கள். அந்த பெயர்கள் எல்லாம் பெண் தெய்வங்களின் பெயர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வருடங்களுக்கு முன் நாசா விஞ்ஞானி சுமி மெயின்சர் 2010 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கும்

வியாழனுக்கும் இடையில் சுற்றி வரும் ஒரு விண்கல்லைக் கண்டு பிடித்தார். அவர் கண்டு பிடித்த அந்த விண்கல்லுக்கு ஏப்ரல் 11, 2015ஆம் ஆண்டு 17வது நிரம்பிய நோபல் பரிசு பெற்ற பெண் மலாலா யூசப் சாய் பெயரை வைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். விண்கற்களுக்கு பெண்கள் பெயர் வைப்பது இன்றும் தொடர்கிறது.

இவர் கண்டு பிடித்த இந்தக் கல் ஒரு கரும்பாறை. நான்கு கிலோ மீட்டர் அகலமுள்ளது. இது செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள விண்கற்கள் பட்டையில் ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது

கே: 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் மிகப் பெரிய விண்கல் தாக்குதல் பற்றிய பகுதி ஊகத்தின் அடிப்படையிலா? அல்லது நிரூபணமான சான்றுகள் உள்ளனவா?

ப: 65 மில்லியன் வருடங்களுக்கு முன் சுமார் 10 கி.மீ. விட்டமுடைய ஒரு விண்கல் பூமியில் மோதி பூமியிலுள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை அழித்திருக்கிறது. டைனோசர்ஸ் போன்ற பிரமாண்ட உயிரினங்கள் இந்த நிகழ்வின் போது தான் அழிந்தொழிந்தன என்பது உண்மை. இம்மாதிரி நிகழ்வு பல மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை நடக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி விண்கற்கள் விழுந்ததற்கானத் தடயங்கள் பூமியில் இருக்கின்றன. இப்பொழுதும் அமெரிக்காவில் அரிசோனாப் பகுதியில் ஒரு விண்கல் விழுந்து ஒரு பிரமாண்ட குழியை ஏற்படுத்தியதைக் காண முடிகிறது. விண் கல் விழுந்தபோது சிதறிய சில பாறைப் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் விழுந்ததாகக் கருதப்படும் பாறை எந்தப் பகுதியில் விழுந்திருக்கும் என்ற ஆய்வுகள் தொடர்ந்தன. கடந்த 2010ஆம் ஆண்டு இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தது. இந்த இடம் மெக்சிக்கோவில் உள்ள யுகாட்டன் தீபகற்பம் (yueatan peninsula) என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். இந்த முடிவை 41 பேர் கொண்ட நிபுணர்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது.

கே: விண்கற்கள் வேறு, எரிநட்சத்திரங்கள் வேறா?

ப: விண்கற்கள் என்பது சிறியதிலிருந்து பெரிய பாறைகள் வரையிலானது. இவை சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை பாறைப் பொருட்களாலும், உலோகங்களாலும் மற்றும் சில கரிம சேர்மங்களாலும் ஆனவை. இந்தப் பாறைகள் சில மீட்டர்களிலிருந்து சில நூறு கிலோ மீட்டர்கள் அகலமுள்ளவைகள். இவற்றில் 10 மீட்டருக்குக் குறைவாய் உள்ளவைகளை பொதுவாக மீட்டியோராய்ட்ஸ்களாக கருதப்படுகின்றன.

இந்த மீட்டியோராய்ட்கள் சிறிய தூசியாகவோ பாறைத் துண்டுகளாகவோ அல்லது உலோகமாகவோ விண் வெளியில் நகர்ந்து கொண்டிருப்பவைகள். ஆனால் இவை விண் கற்களை விட சிறியவைகள். இவ்வாறு இவை நகரும்போது சில பூமியின் ஈர்ப்பு விசையில் மாட்டி வாயு மண்டலத்தில் நுழையும் போது வாயு மண்டல உராய்வினால் தீப்பற்றி எரியும். அப்பொழுது வானத்தில் ஒரு நெருப்புக் கோடு போன்று பிரகாசமாகத் தெரியும். இதை நாம் எரிநட்சத்திரம் என்கிறோம். இந்த மீட்டியோராய்டுகள் கோள்கள் உருவான காலத்தில் கோள்களோடு சேராமல் விடுபட்டுப் போன மிச்ச சொச்சங்கள் எனலாம். இவை பெரும்பாலும் விண்கற்கள் பட்டையோடு இருக்கின்றன. ஆகையால் விண்கல்லும் எரிநட்சத்திரமும் ஒரே வகை தான் என்று சொல்லலாம்.

கே: ‘நாசா’ அமைப்பின் நோக்கம் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டும் தானா? பிற நாடுகளை வேவு பார்ப்பதற்கென்றே செயற்கைக் கோள்களை ஏவும் சாத்தியக்கூறுகள் உண்டா?

ப: தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (Nationl Aeronautics and Space Administration) 1958 ஆம் வருடம் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஐஸ்நோவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. சோவியத் யூனியன் 1957ஆம் வருடம் உலகின் முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய பிறகு நாசா (NASA) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு நாசா ஏராளமான விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாசா ஆரம்பிக்கப்பட்ட பிறகு சூரியனைப் பற்றியும், பூமியைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலுள்ள விவரங்களையும் பால்வெளிமண்டலம், பேரண்டம் பற்றிய பல்வேறு விவரங்களைப் பற்றியும் தெளிவு கொள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசா எந்த அளவுக்கு இந்த நிறுவனத்தை ஆராய்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துகிறது என்பது தெரியவில்லை.

சமீபத்தில் அமெரிக்க உளவு பார்க்கும் செயற்கைக் கோள் நிறுவனம் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கியை விட அதிக சக்தி வாய்ந்த இரண்டு தொலை நோக்கிகளை நாசாவுக்கு இலவசமாக வழங்கி உள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது விபரம் முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் ஆராய்ச்சிகளோடு மற்ற விபரங்களையும் நாசா நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது.

நாசா பூமியைச் சுற்றி ஏராளமான செயற்கைக் கோள்களை சுற்ற வைத்திருக்கிறது. இதில் எவ்வளவு தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. இவைகள் பூமியின் ரகசியங்களை கண்டறிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தத் தகவல் பரிமாறாமல் இருப்பதாகவும் தெரிகிறது. ஆகையால் ஆராய்ச்சிகளோடு சில ரகசியங்களும் இருக்கும் என்று நம்பலாம்.

கே: ‘யுரேனசின் வளையங்கள்’ பற்றிய கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் காவலூர் வான் ஆய்வுக் கூடத்தில்தான் நிகழ்ந்தது என்ற தகவல் பிரமிக்க வைக்கிறது. உலகம் இதை அங்கீகரித்து, பதிவு செய்திருக்கிறதா?

ப: யுரேனசின் வளையங்கள் பற்றிய கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் காவலூர் ஆய்வுக் கூடத்தில் நிகழ்த்தப்பட்டது என்று பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறியப்படுகிறது. ஆனால் உலகத்தில் யுரேனசின் வளையங்கள் கண்டுபிடிப்பு சம்மந்தமாக வேறு தகவல்களும் இருக்கின்றன. முடிவாக 1977ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஜேம்ஸ் L. எலியட், எட்வர்டு W. டுன்ஹாம் மற்றும் ஜெசிகாமின்ங் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் இம்மாதிரி குழப்பங்கள், சர்ச்சைகள் எப்பொழுதாவது வருவதுண்டு. எது எப்படியிருந்தாலும் நமது வானவியலாளர்கள் வைனுபப்பு, பட்டாச்சாரியா, குப்புசாமி ஆகியவர்களின் கண்டுபிடிப்புகளும் கொண்டாடப்பட வேண்டியவைகளே.

இந்தியாவில் வாழ்ந்த சிறந்த வானவியலாளர் வைனுபப்பு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் சர்வதேசிய வானவியலாளர்கள் அமைப்புக்கு 1979ல் தலைவராக இருந்தார். வானவியலில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார். உலக அளவில் உள்ள அமைப்புகளிடம் விருதுகள் பல பெற்றிருக்கிறார். இவர் இந்தியாவின் நவீன வானவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

கே: நியூட்ரினோ பற்றிய கட்டுரையில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அமையப் போகும் ஆய்வுக்கூடம் பற்றிய குறிப்பேதும் இடம்பெறவில்லையே?

ப: நியூட்ரினோ கண்டுபிடிப்பு பற்றிய ஒரு சிறு குறிப்பு மட்டுமே ஆகாயச் சுரங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாக எழுதவில்லை. அந்தக் கட்டுரையை ஒட்டி தேனி மாவட்டத்தில் அமையப்போகும் ஆராய்ச்சிக் கூடத்தின் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது உண்மை. காரணம் இந்த பிரபஞ்சம் உருவான விபரங்களுக்கு அங்கு நடக்கப் போகும் ஆராய்ச்சிகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இங்கு கேட்ட கேள்விக்குப் பிறகு தான் இந்த ஆய்வுக்கூடம் பற்றியும் அங்கு நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. நிச்சயம் மறுமதிப்பின் போது சேர்த்துக் கொள்ளலாம்.

கே: பேராசிரியர் தேவதாசுக்கு நூலை சமர்ப்பணம் செய்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஒரு தனி மனிதராக அவர் மலிவு விலையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொலை நோக்கிகளை உருவாக்க முடிந்திருக்கிறது. மத்திய அரசின் ‘விக்யான் பிரசார்’ போன்ற துறைகளின் பங்களிப்பு இதில் உண்டா?

ப: வானவியலாளர் தேவதாஸ் இந்தியாவில் சிறந்து விளங்கிய அமைச்சூர் வானவியலாளர். வானவியலை சாதாரண மக்களுக்கு புரியக் கூடிய வகையில் எளிமைப் படுத்தி சொன்னவர். வான ஆராய்சிகளில் ஈடுப்பட்டதோடு மட்டுமல்லாமல் தொலைநோக்கியை உருவாக்குவதிலும் வெற்றி கண்டார். பிறகு அவர் அதற்காக ஒரு பட்டரையை நிறுவி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தொலை நோக்கிகளை உற்பத்தி செய்து மலிவு விலையில் ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுத்து வந்தார். அவருடைய தொலை நோக்கிகள் பல இடங்களில் ஆராய்ச்சிக்காகப் பயன்பட்டு வருகின்றன. ஆனால் அவர் எந்த ஒரு நிறுவனத்திடமும் உதவி கோரவில்லை. விஞ்ஞான் பிரச்சார் போன்ற நிறுவனங்களிடம் உதவி கேட்டிருந்தால் கிடைத்திருக்கும்.

கே: நழுவு படக் காட்சி உரைகளில் விற்பன்னராக அறியப்பட்டிருப்பவர் நீங்கள். சமீபகாலமாக வளர்ந்து விட்ட மின்னணுவியல் சாதனங்களையும் பயன்படுத்தி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வதற்கு வாய்ப்புண்டா?

ப: இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நழுவுப்படக் காட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாக விளங்கின. அன்றைக்கு நழுவுப்படக் காட்சிகளை காண்பிப்பதற்கான புரஜெக்டர்கள் அதிக விலையுள்ளதாக இருந்தன. எல்லோராலும் வாங்க முடியவில்லை. மேலும் படச்சுருள் தயார் செய்து அவைகளை சிலைடுகளாக மாற்றும் வேலை வேறு. இதைத் தயாரித்துத் தர ஒரு சில ஸ்டுடியோக்களே இருந்தன. ஒரு சிலைடு தயாரிக்க ரூ.25/- வரை செலவாகும். தேவைப்படும் படங்களுக்கு புத்தகங்களையே நம்பியிருந்தோம். இவ்வளவையும் தாண்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நழுவுபடக் காட்சிகளை ஆயிரக்கணக்கில் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துச் சென்றது. இந்த நழுவுப்படக் காட்சிகளை நடத்துவதற்கும், தயாரிப்பதற்கும் தனியாக பயிற்சிப் பட்டரைகள் ஏராளம் நடத்தப்பட்டன.

ஆனால் இந்தப் படக் காட்சிகளை நடத்துவதற்கு இப்பொழுது எந்தவித சிரமும் இல்லை. இந்த கம்யூட்டர் யுகத்தில் அனைத்தும் எளிதில் கிடைக்கின்றன. ஒரு தலைப்பில் பவர் பாயின்ட் காட்சிகள் தயாரிப்பது ஒரு நாளிலேயே முடிந்துவிடும். இதற்கான பவர்பாயின்ட் புரஜெக்டர்கள் எல்லா பள்ளிகளிலும் கூட இருக்கின்றன. சென்று நடத்தப் போதுமான பயிற்சியும், தயாரிப்பும், தன்னார்வலர்களும் குறைந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருந்தாலும் அவ்வப்போது இப்படிப்பட்ட பவர் பாயின்ட் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது கிடைத்திருக்கும் தொழில் நுட்ப மற்றும் கணினி வசதிகளைப் பயன்படுத்தி பரந்து பட்ட அளவில் இக்கட்சிகளை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் பின் தங்கியிருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது.

கே: இந்நூலில் உள்ள கட்டுரைகளில் ‘கருந்துளைகள்’ பற்றி விளக்கமோ, குறிப்போ இடம் பெறாதது போல் தோன்றுகிறது. பிரபஞ்ச வெளியில் அதற்கு ஒரு முக்கியப் பங்கு உண்டா?

ப: ஆகாயச் சுரங்கத்தில் கருந்துளை என்பது மிகவும் முக்கியமான ஒன்றுதான். இதைப் பற்றி பால்வெளி பேரண்ட கவிதைத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது போதுமானது அல்ல. கண்டிப்பாக மறுபதிப்பின் போது கருந்துளை பற்றியும் இன்னும் அண்டவெளியில் உள்ள சில விபரங்களைக் குறித்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட கேள்விகள் எழுதக் கூடியவர்களை உற்சாகப்படுத்துகின்றன.

‘கே: பால்வெளி’யைப் பற்றி பேரண்டக் கவிதைகளையும் எழுதி நூலாக்கியிருக்கிறீர்கள். கவிதை வடிவில் இந்த அறிவியல் உண்மைகளைத் தருவதில் உங்களின் அனுபவம் எப்படி அமைந்தது?

ப: அறிவியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அவைகளில் பிரதானமாக அறிவியல் கட்டுரைகள், கதைகள், இடம் பெறுகின்றன. அறிவியல் கதைகளும், கவிதைகளும் குறைவாகவே வருகின்றன. கட்டுரைகள், கதைகளை விட கவிதைகளில் அறிவியல் விவரங்களை கூர்மையாகவும், மனதில் தைக்கும் படி சொல்ல முடியும் என்று நினைத்தேன். பால்வெளி புத்தகத்தில் உள்ள பேரண்டக் கவிதைகள் எளிமையாக புதுக்கவிதை வடிவில் பிரபஞ்சத்தில் உள்ளவற்றை சொல்ல முயற்சிக்கலாம் என்று பல நாட்கள் யோசித்தது உண்டு. பெரும்பாலும் அறிவியல் விவரங்களை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு வந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு முயற்சித் தேவை என்பதற்காகவே இந்த கவிதைத் தொகுப்பை வெளியிட எண்ணினேன். புத்தகத்தைப் படித்தவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது. என்றாலும் இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பிறகுதான் வரவேற்பு எப்படியிருக்கின்றது என்பது தெரியும். 

Related posts

Leave a Comment