என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

உணவும் கனவுதான்…

பேரா. சோ. மோகனா

Kaveri_Bridge_Mayiladuthurai Library1

” மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. ! அவன் வார்த்தைகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். ” -பாவ்லோ பிரையர்
மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாகத் தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது – பெரியார் 
“வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”. -ஹென்றி வார்ட் பீச்சர்.
Education  is the fundamental method of social progress and reform”.. – JohnDeway
———————————————-

 நான் சமீபத்தில் அதாவது  ஒரு வாரத்துக்கு முன் படித்து முடித்த புத்தகம் தோழர் ஷாஜஹான் டிசம்பர் 2015 ல் எழுதிய சக்கரக் காலன் – பயணக் காதலன் .அவரது இல்லத்தில் எனக்கு அன்புப் பரிசாகத் தந்த பயண நூல் அது. இதனை எழுதிய .முக நூல் நண்பரும், நான் பணிபுரிந்த அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில்   1971 ல் PUC படிக்கத்துவங்கி , கல்லூரியை விட்டு ஓடியே போய் விட்ட, ,இப்போது டில்லியில் வாழும் படைப்பாளியும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளரும், கவிஞருமாகிய தோழர் ஷாஜஹான் மக்களின் மனங்களை, செயல்களைப் படிப்பவர். அவரது பயணங்களின் தடங்களை , அந்தக்கால  உணர்வுகளை, சந்தித்த மனிதநேயங்களை, மிகுந்த நகைச்சுவையுடன்,  வலியுடன், கோபத்துடனும் கூட இயல்பாக  அதன்  முரண் நகைகளை  அற்புதமாய் பதிவிட்டுள்ளார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நாம் ஏராளமாய்ப் பயணிக்கிறோம்..தினமும் உள்ளூரில் கூட. அதனையும், அத்தனை பயண அனுபவங்களையும் பதிவு பண்ணலாம். ஒருமனிதனைப்  புனரமைப்பது, உருவாக்குவது, கல்வியும், பரந்த வாசிப்பும், வாசிப்புக்கு இணையான  அனுபவங்களுமே.  

  எப்போதும் மார்ச், ஏப்ரல்  மாதங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், மாணவர்கள் , பெரியோர்கள் மத்தியில் பரபரப்பானவை. அவரவர் தன்மைக்கேற்ப… எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இந்த மாதங்கள் கோடை வெயிலின் வெப்பம் மற்றும் மாணவர்களுக்குத் தேர்வு என்பதை விட, எனக்கு  கல்வியை, படிப்பை , நிர்ணயிக்கும் எதிர்காலத்தை, அதன் இலக்கை நோக்கி நகர்த்தும்  மாதங்களாகவே, நோக்கும் நிலைக்குச் சிறுவயதிலிருந்து மோகனாவாகிய நான் தள்ளப்பட்டிருக்கிறேன். ஏனெனில், படிக்கும்போது, வாழ்வியலில் தன்னிறைவு இல்லாத குடும்பச் சூழலில், இனி அடுத்த கட்டம் என்ன ஆகுமோ, படிப்பு தொடருமோ,,அதனை எப்படி இன்னும் சக்தியாக, விடுபடாமல், ஏழ்மை மிகுந்த சிக்கலில்  கொண்டு செல்வது என்பதே..என் முழுக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. வேலைக்கு வரும் வரை அதன் இடைநிலைதான் அண்ணாமலை பல்கலைக் கழகம். 

  அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நினைத்தால், எண்ணங்கள் இன்னும் பசுமை மாறாமல், அப்படியே சுமார்  50 ஆண்டுகளுக்குமுன் நின்று சுழன்று சுழன்று  அப்படியே நெஞ்சுக்குள் நிழலாடுகின்றன. எனது வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் மாற்றம் உருவாக்கிய ஆசிரியர்கள், நண்பர்கள், பல்கலைக்கழகச் சூழல், கல்வியின் மீதிருந்த மீளாக் காதல், என் திறமைகளைப் பாராட்டிய , என்னை வளர்த்தெடுத்த ஆசான்கள், நான்  தடம் மாறாமல், உடன் இட்டுச் சென்ற என் நண்பர் சாவித்திரி, பர்வத வர்த்தினி, என் வகுப்புத் தோழி சகுந்தலா(இன்று இவர் இல்லை.புற்றுநோய்க்குப் பலியானார்.ஜுன் 2015),.எங்களின் ஜூனியர் தனபாக்கியம்.  இவர்கள் இல்லை என்றாலும் படித்திருப்பேன் என்றாலும், என்னை மெருகுறச் செய்த தங்கங்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கம், சாதி, பணம், படிப்பு எல்லாவற்றிலும்… இருப்பினும் எவ்வித வர்க்கப் பேதமின்றி என்னிடம் பழகிய என்னை மேன்மைப்படுத்திய மனித நேயங்கள்.

இதுவரை நான் என் உடன் பிறந்தவர்களைப் பற்றி எழுதவே இல்லை. காரணம் தொடர்கிறது.என்னுடன் பிறந்தவர்கள் நால்வர். முதல் தம்பி லோகநாதன், என்னைவிட 5 வயது சின்னவர். தங்கை பிரேமா. எனக்குப் பின் 11ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்தவர்.அடுத்து ரவீந்திரன். நான் PUC படிக்கும்போது, பிறந்தவர். என்னைவிட 15 வயது சின்னவர். நான் எப்படி இவர்களுடன் பேசி ,பழகி விளையாண்டிருப்பேன் என எண்ணுகிறீர்கள். விளையாட்டே  வீட்டில் கிடையாது. ரொம்ப கட்டுப்பெட்டியான குடும்பம். பெண்பிள்ளைக்கு விளையாடக் கூட அனுமதி இல்லை..அப்புறம் எப்படி பிறந்தவர்களுடன் விளையாட. பெரியவளாகிக் கல்லூரியில் பணிபுரியும்போதுதான், பிறந்தவர்களுடன், சாதாரணமாய்ப் பேசும் நிலை உண்டானது. வீட்டுச் சூழலில் யாருடனும் பேசுவதே இல்லை. என்றும் , எப்போதும், இப்போதும் துணை வாசிப்பும் அதன் ரசனையும், ருசியும், நேசமும்தான். இது எந்தக் காலத்திலும் மாறியதே இல்லை. எந்த நேரத்திலும், மோகனா என்ற சிறுமிக்கு, பெண்ணுக்கு, பெண்மணிக்குத் தனிமை என்ற உணர்வு வந்ததே இல்லை. ஐயோ தனிமையா..போர் அடிக்குதே என்ற சொற்கள் என் வாழ்வில் இல்லை; அர்த்தமற்றவையும் கூட.

   மோகனா சின்ன வயசிலிருந்தே புத்தகப் பிசாசுதான். கிடைத்ததைப் படிக்கும் பிடிப்பு உள்ளவள்.அதுவே அவளின் கல்வியைக் காப்பாற்ற வழிகோலியதும். வாழ்க்கையைப் பற்றிக்கொள்ள உதவியதும், இன்று வாழ்க்கையை ஓட்ட உதவுவதும் கூட. 

   நாங்கள் படித்த அண்ணாமலை பல்கலைக் கழகம். எனது வீட்டிலிருந்து சுமார் 40 கி.மீ தூரம்தான். என் பள்ளித தோழி ஜூலியட்  தினமும் ரயிலில்தான் பல்கலைக் கழகத்துக்கு மாயூரத்திலிருந்து தினமும் வந்து போவாள். ஆனால் நான் பல்கலைக் கழக விடுதியில்தான்.  என் பால்ய நண்பர் சாவித்திரியும், நானும் மூன்றாண்டு காலமும் சேர்ந்தே ஒரே அறையில் இருந்தோம். 

  அண்ணாமலை பல்கலைக் கழகம், ஏராளமான பேருக்குச் சொர்க்கமாகவே   இருந்தது.அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆசியாவின் மிகப்பெரிய தங்கிப் படிக்கும் பல்கலைக் கழகங்களில் ஒன்று. அதன் பரப்பு இன்று 1,500 ஏக்கர். (6.1 ச.கி.மீ.). இன்று 500 துறைகள் உள்ளன.  அன்று அங்குதான் ஏராளமான கல்வித் துறைகள் இருந்தன. கலை மற்றும் அறிவியல் பகுதிகளில்.மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அடுத்தபடியான, தரமான பலகலைக் கழகம் இதுதான். எனவே தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும், முக்கியமாக நாகர்கோவில் மக்கள், அப்புறம் கேரளா, ஆந்திராவிலிருந்தும், இசை படிக்க இலங்கையிலிருந்தும் மாணவர்கள் வந்து படித்தனர். (எங்கள் விலங்கியல் துறைக்கு எதிரில்தான் இசைக்கல்லூரி)  அதுமட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர். பிரான்சிலிருந்தும் கூட மாணவர்கள் அங்கு வந்து படித்தனர். எக்கச்சக்கமான ஏழை மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் படிக்க வைத்த கல்விச் சாலை அது. ஏனெனில், அங்கு மிகக் குறைந்த கட்டணம்தான். நான்  B.Sc படிப்புக்குச் சேரும்போது   விடுதிக்கும் சேர்த்து ரூ 200/= தான்  கட்டினேன்.மேலும் அங்கு படித்துக் கொண்டே, மாலை நேர வகுப்புகளில்  சேர்ந்து தனியாகப் பட்டய வகுப்புகளும் (Certificate course) படிக்க வாய்ப்பு உண்டு. அத்துடன், மொழியியல் துறையில் சேர்ந்து பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், மலையாளம்,கன்னடம்,இந்தி, சமஸ்கிருதம்  போன்ற பிற மொழிகளும் படிக்கலாம். உள்ளதைப் படிக்கவே காசில்லாத போது, ரெகுலர் படிப்பே, மாமா காசில் படிக்கும்போது, இதற்கும் அவர்களிடம் பணம் கேட்பது எப்படி என்ற எண்ணம்தான். முடியுள்ள சீமாட்டிதானே அள்ளி முடியணும்? பெரிசா பணம் கட்ட வேண்டாம். சும்மா ரூ. 50-75 தான். யார் தருவார்கள்? இன்றும் கூட வாய்ப்பு இருந்தும் அதனைப் படிக்காமல் விட்ட வேதனை நெஞ்சைக் கவ்வுகிறது. 

 அண்ணாமலை பல்கலைக் கழகப் பெண்கள் விடுதிக்கு அப்போதைய உணவுக் கட்டணம் மாதம் ரூ.45-55 தான். ஆனால் வாழை இலையில்தான் தினமும் தடபுடல் சாப்பாடு. அத்தோடு வடை பாயசமும் உண்டு.மிகப் பிரமாதமாய் இருக்கும். காலை மாலை, காபி, டீ எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். பால், காபி டிகாக்ஷன், தேநீர் தனித்தனியே இருக்கும்.தினமும் மாலை வேளையில் டிபன் உண்டு.  அங்கு வாரம் ஒருமுறை, ஞாயிறன்று, காலை பிரட் +டால்/ஜாம். (நம்ம பருப்புதான் ஆனா, செமையா இருக்கும்.).ஆனால் இந்தப் பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு இது பிடிக்கவே பிடிக்காது. நான் வெட்டுவேன். மதியம் மோர்க்குழம்பு,+பருப்பு உசிலி. (சுவை பட்டையைக் கிளப்பும். இன்னும் என் வாயில் அதன் ருசி நிற்கிறது.) இரவு பூண்டு ரசம் + சேனை வறுவல்.என் வாழ்நாளில் அதுபோல ஒரு  பூண்டு ரசம் இதுவரை சுவைத்தது இல்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் அதுபோலத் தயாரிக்க முடியவில்லை.அங்கு சாப்பிட்ட எந்த உணவும் என் வீட்டுப் பட்ஜெட்டில்  அப்போது கிடையவே கிடையாது. பின்  விடுதி வாழ்க்கை கசக்கவா செய்யும்?  அத்துடன் அசைவக்காரர்களின் உணவு ஆண்கள் விடுதியில் தயாரிக்கப்பட்டு எங்கள் விடுதிக்கு வரும்.ஆனால் அசைவம் அப்போது சாப்பிடுவது இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் முதன்முதலில் நான் பூரி சாப்பிட்டது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்தான். உசிலி என்ற பெயரை அப்போதுதான் முதலில் கேள்விப்படுகிறேன். என் வீட்டின் சூழல், பொருளாதாரம் இதிலிருந்து தெரிந்து இருக்குமே.  

 அண்ணாமலை பல்கலைக் கழக ஆண்கள் விடுதி உணவு தமிழகம் முழுவதும் பிரசித்தம். அந்த விடுதியில் உணவு நன்றாக இருப்பதாலேயே,அதனை விட்டுவிட்டுப் போக மனமின்றி,  நிறைய மாணவர்கள் மீண்டும் மீண்டும் அரியர்ஸ் வைப்பார்கள் என்ற கதையை வேறு எங்களின் வகுப்பாசிரியர்கள் எங்களிடம் கதைப்பார்கள். அனைத்துக்கும் அற்புதமான களம் அண்ணாமலை பல்கலைக் கழகம். தமிழகத்தின் ஏராளமான ஆளுமைகளை உற்பத்தி செய்துதந்தது அண்ணாமலைதான்.

  அங்கு எங்கள் பெண்கள்  விடுதிக்கு அருகில் உள்ள திறந்தவெளி அரங்கில், குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை என  எக்கச்சக்கமான திரைப்படங்கள், தமிழ், ஆங்கிலம், என விருதுகளை அள்ளிய The Sound of Music உட்படப் பார்த்திருக்கிறோம். அங்கு M.G.R, வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற திரைக்கலைஞர்களும் வந்திருக்கின்றனர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தது மட்டுமல்ல, நல்லா தினமும் மாலை நேரத்தில் சில நாட்கள் ஊர் சுற்றலும், நிறைய நாட்கள் நூலகமும்தான். . மாலை டீ +டிபன் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டால்  இரவு 7 மணிக்கு வருவோம்..அதற்குள் விடுதிக்கு வரவேண்டும் என்பதால் மட்டுமே. நூலகத்தில் இரவிலும் படிக்கலாம். அத்துடன், வீட்டில் இருந்து சித்தப்பா பார்க்க வந்தால், தீர்ந்தது..என்ன தெரியுமா? எனக்கு ரெட்டைச் சடை போடுவதில் படு இஷ்டம். என்னைப் பார்க்க வரும்  சித்தப்பா, மாமா கண்ணில் என் ரெட்டைச் சடை பட்டதோ..என் பாடு அம்புட்டுதான். திட்டு சொல்லி மாளாது. எப்படி இருக்கு குடும்பச் சூழல் ? அப்பா என்னைப்பார்க்க வரவே மாட்டார்கள். யார் வந்தாலும், வராவிட்டாலும் கவலைப் படுவதும் இல்லை. மற்ற என் நண்பர்கள சனி, ஞாயிறு வீட்டுக்குச் சென்றாலும் கூட, நான் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுப்பில் மட்டுமே வீட்டுக்குப் போனேன். அவ்வளவு பிரியம் இல்லத்தின்மேல். 

 எங்கே போனாலும், எது செய்தாலும், என்ன சேட்டை செய்தாலும், படிப்பில் மட்டும் கெட்டி; தினந்தோறும் அன்றைய பாடங்களும் படித்து, நூலகத்திலிருந்து கொண்டுவந்த புத்தகங்களும் படித்து முடித்துவிடுவேன். எப்போதும் என் வாசிப்பு என்பது  இரவு 9 மணியிலிருந்து காலை 6 க்குள் தான். மற்ற நேரம் ஊர் சுற்றல், அரட்டை , இத்யாதி. அத்துடன், தமிழ், ஆங்கிலம்,எதற்கும் நோட்ஸ் வாங்கியதே இல்லை. வகுப்பில் ஆசிரியர் நடத்தும்போது எடுக்கும் குறிப்புதான். (அந்தக் குறிப்பு எடுத்தல் , இன்றுவரை கூட்டத்தில் இருந்தாலும் தொடர்கிறது). ஆசிரியர்கள் அதுபோல முன்மாதிரியாகப் பாடம் போதித்தனர். தமிழ், ஆங்கிலம், அதன் துணைப் பாடங்கள், சேக்ஸ்பியர், poem, Paradise lost எல்லாம், நான் , மங்கையர்க்கரசி, கஸ்தூரி எல்லோரும் ஒன்றாக  அமர்ந்து கூட்டுப் படிப்பு (Joint reading). அது எவ்வளவோ பாடத்தைப் புரிய வைக்க, நினைவில் நிறுத்த உதவியது. மேலும் என் விலங்கியல் பாடங்களைச் சகுந்தலாவுடன் சேர்ந்து படித்தல், அதனை விட முக்கியமாக, படித்ததை மனதில் கொண்டுவந்து நினைத்துப் பார்ப்பது. அதன் பின்னர் அதனை ஒரு பேப்பரின் நாலில் ஒரு பகுதியில் எழுதி வைப்பது. பரீட்சைக்குச் செல்லும்போது, நான் எழுதி வைத்த பிட்ஸ்களைக் கையில் எடுத்துச் சென்று, தேர்வு அறைக்கு முன் வரை சென்ற பின்னர், அதனைக் கிழித்து வாசலில் போட்டுவிட்டு, தேர்வு அறைக்குள் நுழைந்து சந்தோஷமாய், எந்தவிதப் பிரச்சினையும் இன்றி தேர்வு எழுதி முடித்துவிட்டு வருவது. இதுதான் என் படிப்பின் நியதியாக இருந்தது.யாரைப் பார்த்தும் எழுதவோ, பார்ப்பதோ கிடையாது. தெரியாமல் இருந்தால்தானே. அத்துடன் படிக்கும்போது, பாடத்தில் விடுபடும் பாடமே இருக்காது. மேலும் தேர்வுநேரம் வந்துவிட்டால், யாருடனும் பேசவே மாட்டேன். இரவு முழுவதும் உட்கார்ந்து படிப்பேன். இடையில் கொஞ்சம் கொஞ்சம் தூக்க இடைவேளை விட்டு. 

  அண்ணாமலையில் படித்த காலக் கட்டத்தில்தான், அரசியல் மாற்றங்களும், கொள்கை செயல்பாடு மாற்றங்களும் இந்திய மற்றும் உலக அரசியலும் நடந்தன. கம்யூனிஸ்ட் என்ற பொதுவுடைமைக் கட்சி 1964 ல். பிரிந்து இரண்டாகி, இடது, வலது எனப் பிரிந்து, இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற கட்சியைத் தனியாகத் துவக்கினர். வலதுசாரிகளை இந்தியகம்யூனிஸ்ட்கள் என்று அழைத்தனர்.அப்போது, 1964 இல், ஜவஹர்லால் நேரு இறந்தவுடன், காமராசர், அப்போதிருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தலைமை அமைச்சர் ஆக்குகிறார். அதன்பின்  1966-ல்,ரஷ்யாவின் தாஷ்கண்ட் ஒப்பந்தத்துக்குச் சென்ற லால்பகதூர் சாஸ்திரி, அங்கேயே இயற்கை எய்துகிறார். அன்றைய இந்தியாவின் அசாதாரணச் சூழலில், கிங் மேக்கர் எனப்பட்ட காமராஜர், திருமிகு இந்திரா காந்தியைப் பிரதம மந்திரி ஆக்குகிறார். இந்தியாவின் முகம் மாறத் துவங்கியது.

அன்றைய தமிழக அரசியல்  சூழல் என்பது , தமிழகத்தைப் பெரிதும் புரட்டிப் போட்ட ஒன்றாகும். 1965 மற்றும் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அத்துடன் 1964 -ல் தமிழகத்தில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காங்கிரசு அரசு மக்களின் நம்பிக்கையை இழந்தது. . உணவுப் பற்றாக்குறையைப் போக்க இயலாத அரசைக் கண்டித்து திமுக போராட்டங்களை நடத்தியது

அரிசிப் பஞ்சத்தினை திமுக சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்கப்படும் என்றும், ரூபாய்க்கு மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’ என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது

 தேர்தல் பிரச்சாரத்தின்போது உணவுப்பற்றாக்குறையை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், காமராஜர் அண்ணாச்சி, கடலைப்பருப்பு விலை என்னாச்சு?, பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு? என்றும் கேட்டனர். 

  முதல்வரான பக்தவத்சலம் ஆட்சியின் மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு, கடுமையான அரிசிப் பஞ்சம், மத்திய அரசின் இந்தித் திணிப்பு, நேரு (1964), லால் பகதூர் சாஸ்திரி (1966) என இரண்டு பிரதமர்களின் அடுத்தடுத்த மறைவு, இந்திரா காந்தி பதவியேற்பு, காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற 1967ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், தமிழகத் தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

காமராஜர், பெரியார், பக்தவத்சலம், ராஜாஜி,
சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி., அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என என்றென்றும் தமிழகத்தின் முகங்களாகத் திகழும் அனைத்து முக்கியத் தலைவர்களும் பங்கெடுத்த தேர்தல் அது. சென்னை மாகாணம் என்ற பெயரில் நடைபெற்ற கடைசி சட்டப்பேரவைத் தேர்தலும் இதுதான். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டிருந்ததால் இரண்டு கட்சிகளாகக் கம்யூனிஸ்ட் களமிறங்கிய முதல் தேர்தல் இது. திமுகவுக்கு எதிராக சிவாஜி கணேசன், பத்மினி இருவரையும் பிரச்சாரக் களத்தில் காங்கிரஸ் இறக்கியது.

  1967, பிப்ரவரி, தமிழகத்தின் 4வது சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக முதன்முதல் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு, நடிகவேள், M.R. ராதா, M.G.R ஐக் கழுத்தில் சுட்டார். ஆனாலும் எம். ஜி. ஆர்  பிழைத்துக்கொண்டார்.அப்போது திமுக, 174  இடங்களில் போட்டியிட்டு 87 இடங்களிலும்,  மார்க்சிஸ்ட்,22ல்  11 இடங்களிலும் வெற்றி. காங்கிரஸ் எதிர்கட்சியானது. பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். அவரின் அமைச்சரவையில், திருமிகு சத்தியவாணி முத்து என்ற பெண் அமைச்சர் இருந்தார். அன்றைக்குத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற அன்று மதியம் எங்கள் விடுதிக் காப்பாளர் திருமிகு கெளரி, விடுதி மாணவிகள் எல்லோருக்கும் கேக் செய்து தரச்சொல்லிக் கொடுத்து மகிழ்ந்தார்கள். எனக்குப் பிடிக்கவே இல்லை.

1967 நான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், டாக்டர் ஜாகிர் உசேன், குடியரசுத் தலைவர் ஆனார். 

அன்றைய காலக் கட்டத்தில், 1965-70 தமிழக நாவல்களிலும், திரைப்படத் துறையிலும் ஏராளமான நவீன மாற்றங்கள் ஏற்பட்டன. . நிறையப் படங்களைப் பார்த்ததும், அண்ணாமலை பல்கலைக் கழகக் கல்விக்காலம் தான். நிறையப் புத்தகங்கள் வாசித்ததும் அப்போதுதான். தீபம் நா. பார்த்தசாரதியின், பொன்விலங்கு நாவல் படு பேமஸ். அதனைப் படித்தவர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு, தங்கள் மகள்/ மகனுக்குப் பூரணி, அரவிந்தன் எனப் பெயர் வைத்தனர். அப்படி மனிதமனங்களைப் பிழிந்து போட்ட நாவல் அது. அந்தக் காலத்தில்தான், எப்போதோ வந்த பொன்னியின் செல்வனை மாய்ந்து மாய்ந்து படித்தேன். அதில் வரும் சேந்தன் அமுதன்-ஆழ்வார்க்கடியான், சிவன் வைஷ்ணவச் சண்டையை மறக்க முடியுமா? அழகி நந்தினியின் அழகையும் சூழ்ச்சியையும் மறக்க முடியுமா? அப்போதுதான், வேதாரண்யம் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் கடலோரத் தீச்சுவாலைகளை மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு என்று கூறியதை மறக்கவா? அற்புதமான நாவல் அது. கல்கி, அந்த ஊருக்கெல்லாம்.  சென்று பார்த்துவிட்டு வந்து பொன்னியின் செல்வனை எழுதியதாகத் தகவல், சோழ சாம்ராஜ்யத்தை, அரிசிலாறு என்று அன்று அழைத்த, இன்றைய  அரசலாறு,  நான் பிறந்த பழையாறைக்கு அருகில் ஓடும்‘ஆறுதான். அந்த ஆற்றை நினைத்து எனக்குப் பெருமையே. மேலும் பொன்னியின் செல்வன் கதைக் களம், வந்தியத்தேவன் குதிரையில் ஏறித் துவங்குவதும் கூட நான் திருமணம் முடித்த காட்டுமன்னார் கோயிலின் வாசலில்தான், அங்குள்ள வீராணம் ஏரிக்கரையில்தான். 
“Education is what remains after one has forgotten what one has learned in school” Albert Einstein

Related posts

Leave a Comment