You are here

வாசித்ததில் யோசித்தது

1. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்
பிரியசகி ஜோசப் ஜெயராஜ் – அரும்பு பதிப்பகம்
ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை, கல்வியை புரிந்துகொள்வதைவிட குழந்தைகளை புரிந்துகொண்டால் பெரும்பான்மை பிரச்சனை தீர்த்து விடும். கற்றல் குறைபாடுகள் பல டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராபியா, டிஸ்கால் குலியா, உட்பட ஏறக்குறைய பன்னிரண்டு வகை பிரச்சனைகளை விரிவாக ஆராயும் நூல் இது. கல்வியின் பல்வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்லும் ஆசிரியர்களின் அவசியமான வழிகாட்டி.

kalvi

2. தமிழின் பெருமை
மூ. ராஜாராம் அல்லயன்ஸ் ஆம்பேனி
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் தமிழ்மொழி இனம் வளர்ச்சியுற்ற கதையை 71 தலைப்புகளில் அடுக்கிச் சொல்கிறார். ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை நம்முன் வைக்கிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவற்றோடு விவிலியம், குரான் என ஆதாரங்கள் அதிசயிக்க வைக்கின்றன. படங்கள் நம்மை வீழ்த்துகின்றன. பிறமொழிகளில் வெளிவந்தால் நம்பெருமை இன்றும் எட்டுத்திக்கும் போய்ச் சேருமே என மனம் துடித்துவிடுகிறது.
இந்து நூலுக்கு அப்துல்கலாம் முன்னுரை எழுதி இருக்கிறார் என்பதும் சிறப்பு.

3. லட்சுமி எனும் பயணி
லட்சுமி அம்மா – மைத்தி புக்ஸ்
இந்திய மாதர் சங்கம் என்றாலே நினைவுக்கு வருபவர்களில் தோழர் லட்சுமி அம்மா ஒருவர் தொழிற்சங்க வாழ்வுக்குள் தன் பதின்ம வயதிலேயே நுழைந்துவிட்ட போராளி. அவரது வாழ்க்கை வரலாறு இது. சிறுவயதிலேயே தன் குடும்பத்தால் புறக்கணிப்பிற்கு ஆளாகி வேதனைகளையே சாதனைகளாக்கி, போராட்டமே வாழ்வாக தொடரும் ஒரு பயணத்தை வாசிக்கும் போது மனம் நெகிழ்கிறது. பொதுவாழ்வுக்குள் வரும் பெண்கள் சந்திக்கும். சமூக அவலங்களை எடுத்துரைக்கும் இடங்கள் மிகவும் அற்புதமானவை. உழைப்பும் உழைப்பாளர் வாழ்க்கை போராட்டமும் தன் பாதை என தெளிவாக்கும் சிறப்புக்கு ஒரு சல்யூட்.

Ladchumi_enum_payani__51910_zoom

4. நாட்டுக்கு சேதி சொல்லி
வீதி நாடங்கள்
இரா. காளீஸ்வரன் – மாற்று ஊடகமையம்
இதிலுள்ள ‘கப்பி’ நாடகத்தை படித்து அசந்து போனேன். டெங்கு காய்ச்சலுக்கான மக்கள் விழிப்புணர்வு அது. அழகான பூமியில் நாடகத்தின் சொல்லோடைகள் பெண்ணியம் பேசி நம்மை நோக்கி இடியாய் இறங்குகின்றன. சாட்டையடியிலிருந்து நந்தவனம்வரை 17 வீதி நாடகங்களும் யார் வேண்டுமானாலும் போடலாம். தோழர் குமரேசனின் முன்னுரை, ஊடக அரசியலை அவருக்கே உரிய தொனியில் முன் வைக்கிறது.

5. டெங்-ஷியோ-பிங் (கட்டுரைகள்)
மிலிட்டரி பொன்னுசாமி – பாரதி புத்தகாலயம்
மாசேதுங் சிந்தனையை ஓர் ஒருங்கினைந்த முழுமையான பார்வையில் மிகச் சரியான புரிதலுடன் முன்வைக்கிறார். சீனக் கம்யூனிசத்தின் மகத்தான தலைவர் டெங் ஷியோ பிங் சாதாரண மக்களின் பாட்டாளி வர்க்க மக்களின் கருத்துக்களுக்கும் யோசனைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்த பாடநூலாக இது மிளிர்கிறது. மனதை விடுதலை செய்யுங்கள் கட்டுரை தனிச் சிறப்பு வாய்ந்தது.

6. மு.வ. வாசகம்
முனைவர்.இரா.மோகன் – சாகித்ய அகாதமி
மு.வ.எனும் இந்த இரண்டு எழுத்துக்கு இருந்த ஈர்ப்பை யாருமே மறக்கமாட்டார்கள். மிக பரந்துபட்டு தமிழ் இலக்கிய உலகில் இயங்கிய மாமனிதர். 1939 – ல் குழந்தைப் பாட்டுகள் நூலில் தொடங்கிய பயணம். நல்வாழ்வு எனும் 1973 நூலில் முடிகிறதாம் மு.வ.கடிதங்கள், திருக்குறள் வரை என பேரா. மோகன் எதையும் மிச்சம் வைக்கவில்லை. அவரது பயணஇலக்கியம், கடித இலக்கியம் நாடக இலக்கியம் இவற்றை இன்று எடுத்துச் செல்ல யாருமில்லை என நமக்கு வியர்க்கிறது.

7. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா
பேரா. ச. மாடசாமி – புக்ஸ் பார் சில்ரன்
இந்த நூலில்லுள்ள சீனக் கலாச்சார புரட்சி குறித்த (ஏழாவது) கட்டுரையை தோழர் மாடசாமி தவிர வேறு யாராலும் இத்தனை தெளிந்த சொற்களில் விவரிக்கமுடியாது. சாதாரண மக்களைவிட தான். அறிவாளி உயர்ந்தவன் என கருதிக்கொள்ளும் படித்த அறிவாளிகள் கையிலிருந்து குழந்தைகளின் பாடப் புத்தக சிலுவைகளைப் பறித்திட நமது கல்வி முயல்வது எப்போது என தவிக்கவிடும் எழுத்து. நமக்கு இன்று அரசுப் பள்ளிகளை மீட்க ‘நண்பன்’ ஆசிரியர்கள் தேவை. தொழில்கள், விவசாயம் இவற்றோடு தொடர்பற்ற கல்வியை முடித்து வைக்க பாதை அமைக்கும் நூல்.

சிவப்பு பால்பாயிண்ட் பேனா

8. சே குவேரா
கனல் மணக்கும் வாழ்க்கை
சு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்
யுகங்களின் மாயப் புழுதியில் தான் வென்று சேர்த்த மக்கள் யுத்தங்களின் என்றும் தணியா நாயகன் சே பற்றி எவ்வளவு வாசித்தாலும் முடிவில்லை. எந்தத் தளபதியும் எந்த இராணுவமும் மக்களைவிட அதிகமாக செயல்படமுடியாது எனும் ஒருவரியை நமக்களிக்க சே எவ்வளவுக்கு அனுபவித்திருக்க வேண்டும்… பறக்கத் துடித்த தோழமைச் சிறகுகளின் பயணக்குறிப்புகளை தனக்கேஉரிய நெருப்புவரிகளில் தோழர் அகத்தியலிங்கம் விவரிக்கிறார். சேவோடு வாழ்ந்த தோழமை அனுபவம் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்குக் கிடைக்கிறது.

Untitled-1

9. அலையும் நினைவுகள் (நேர்காணல்கள்)
பவுத்த அய்யனார் – மீனாள்
இந்தப் புத்தகத்தில் கோவை ஞானி தனது பேட்டியில் கைலாசபதி பற்றியும் வானம்பாடி கவிதை இயக்கம் பற்றியும் குறிப்பிடும் தகவல்கள் நெருக்கடி நிலை நிகழ்வு பதிவுகள் அவசியம் வாசிக்க வேண்டியவை. பொ.வேல்சாமி, தஞ்சாவூரில் உள்ள ராஜா கோரி எனும் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடம் பற்றிய அரியதகவல்களை பகிர்கிறார். ஆனால் பசுமைப் புரட்சி பற்றி பேரா. நீலகண்டனின் கருத்துகளை ஏற்கமுடியவில்லை. அமெரிக்கா சொர்க்கம் எனும் உடோப்பியவாதிகள் முற்றிலும் மக்களின் மனங்களை தான் முற்றிலும் அறிந்தவர்கள்போல பேசுவது தமிழில்மட்டுமே நடக்கும் கூத்து.
10. கானகப் பள்ளிக் கடிதங்கள்
சித்தரஞ்சன் தாஸ்
(தமிழில்: சு. இளங்கோவன்) – NBT
1950களில் சித்தரஞ்சன்தாஸ் ஒரிசாவின் அடர்ந்த காட்டில் ஒரு மேனிலைப் பள்ளியை தொடங்கினார் பழங்குடி இன மக்கள், மிகவும் பின்தங்கிய சமுதாய குழந்தைகள் கற்க வந்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், போராட்டங்களை அவர் கடிதமாய் சஞ்சிகைகளில் எழுதினார். இன்று படைப்பாக்கக் கல்வியின் பெரிய பங்களிப்பாக அவை மிளிர்கின்றன. டென்மார்க் கல்வியாளர் கிறிஸ்டன்கோல்டு பற்றிய பதிவு எல்லா ஆசிரியர்களுக்கும் மிக அவசியமான வழிகாட்டி. இதுபோல நூற்றுக்கணக்கான பதிவுகள். இந்தியாவில் கல்விஎப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன் உதாரணங்களை அடுக்கும் புத்தகம் இது.
11. பாலம்
யூமா வாசுகி – SRV
குழந்தைகளுக்கு யூமா வாசுகியின் மற்றுமொரு இனிய படைப்பு. 33 பிற மொழிக்கதைகள், கிரேக்கம் மலையாளம், அரபி என பரந்து விரிந்ததளம். அழகான கதைகள் இவை. கற்பனாவாத உலகம். அறிவியல் அறவியல் வரலாறு சமூகம் என தொடாததே இல்லை. எஸ்.ஆர்.வி. பதிப்பத்தின் நேர்த்தியான முயற்சி. பசிக்கிறது என தவிக்கும் முதியவருக்கு குரங்கு பழமும், நரி மீனும் கொடுத்து நிலாவின் கதையும் முயல் கதை படுஜோர். செம கதைவேட்டை. படைப்பாக்கக் கல்விக்கு உதவும் அற்புதப் படைப்பு.
12. பகவத் கீதை பற்றி டாக்டர் அம்பேத்கார்
NCBH
பகவத் கீதை பற்றிய உண்மையான அறிவியல் ஆய்வுநூல் இது. அது வேதமல்ல, தத்துவ ஏடும் அல்ல. சில சமயக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தொகுப்பு. கதை எப்படி வேண்டுமோ வளைத்து எதற்காகவும் தத்துவமாக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். புத்த மதத்திற்கு எதிராக அதன் பரவலைத் தடுக்கப் போடப்பட்ட சதிப் பின்னல் அந்தப் புத்தகம் முழுவதும் பரவிஉள்ளது. டாக்டர் அம்பேத்காரின் எழுத்துக்களில் மிகவும் முக்கிய ஆவணம் இது.
13. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
சு. நாராயனி – புக்ஸ் பார் சில்ரான்
சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம். நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம். நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள்க குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது. கூடவே ஆங்காங்கே உலகின் மிக கொடூரமான மிருகம் மனிதன் – நீட்சே போன்ற அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார். உள்ளதிலேயே அறிவுள்ள பிராணிகள் குறித்த விஞ்ஞானி வில்சனின் டாப் டென்னில் முதலிடம் சிம்பன்சி. பத்தாமிடம் பன்றிக்கு முன்னால் ஒன்பதாவது இடம் யானை. உண்மை. நாராயணி போன்றவர்களுக்கு உலகமே பரிசோதனைக் கூடம்தான்.
14. பெண்ணெழுத்து
விசயலட்சுமி – பாரதி புத்தகாலயம்
காலங்காலமாக சொத்தாக அலங்காரப்பொருளாக ஆபாச வக்கிர வஸ்துவாகவே பயண்படுத்தித் தூக்கி எறியப்படும் பெண்கள் படைப்பாளிகளாக, அரசியல் உந்துசக்தியாக, களப் போராளியாக, தத்துவ விவரிப்பாளர்களாக நம் முன்னிறுத்தப்படுவது உரிமையை உயர்த்தி கீழ்மையை துரத்துவோம் என ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது. பெண் படைப்பாளிகள் எழுதுவது வெறுங் கவிதைகளல்ல. அவர்களது எழுத்து ஒவ்வொன்றுமே அரசியல் செயல்பாடுதான் என்பதை இத்தனை கவிஞர்களையும் பற்றி அறியும் போது நமக்குப் பிடிபடுகிறது. பெண் வாழ்வதும் பெண் சிந்திப்பதும் பெண் எழுதுவதும்… எல்லாம் எதிர் அரசியல் என மனம் துள்ளுகிறது.
15. பாரதியும் யுகப்புரட்சியும்
தா. பாண்டியன் – NCBH
ரஷ்யப் புரட்சி வெல்லும் என 1906லேயே பாரதி முன்அறிப்பு செய்கிறார். புரட்சி பூத்தது 1917ல் தான். அதனால் பாரதி நூற்றாண்டை சோவியத்தில் நம்மைவிட சிறப்பாகத் கொண்டாடினார்கள் என்பது உட்பட பல அரிய விஷயங்கள் நூலில் கொட்டிக்கிடக்கின்றன. ரஷ்யா பற்றிய பாரதியின் பதிவுகளில் பல முதல்முறையாகவும் இந்நூலில் இடம் பெறுகின்றன. பாரதியின் கடைசிக் கவிதையை வாசிக்கும்போது மனம்சிலிர்க்கிறது.
16. கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தொ: ச.தமிழ்ச்செல்வன் – பாரதிபுத்தகாலயம்
அற்புதமான யதார்த்தவாத படைப்பாளி. சிந்தனை அறிஞர். முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வனின் சிறந்த பத்து கதைகளைத் தொகுத்துள்ளார் தமிழ்ச்செல்வன். அதிலும் ரொம்பநாள் கழித்து அந்த பூவுக்கு கீழே கதையை ‘என்ன அடுத்த விருந்தாளி வந்தாச்சா’ என்பதுவரை படித்து மனம் துள்ளியது. இதைத் தவிர ஒவ்வொரு கதையுமே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதை. மைதானத்து மரங்கள், சாசனம் ஆகியவை கந்தர்வன் நக்கலுக்கே பெயர்பெற்றவை. பலரும் கந்தர்வனைப்பற்றி அறிய நல்ல அறிமுக நூல் இது.
17. தங்கம்: வரமா சாபமா?
வே.மீனாட்சி சுந்தரம் – பாரதி புத்தகாலயம்
காதலுக்காக உயிரைவிடுபவர்களைவிட தங்கத்திற்காக உயிரை விடுபவர் அதிகம். தங்கம் எனும் வேதிமூலகத்திற்கு ஏன் இத்தனை செல்வாக்கு என கேள்வி எழுப்பும் இந்த நூல் பழங்கால அரசபரம்பரை, அடிமைமுறை, கடல்கொள்ளை, ஆட்சி அதிகாரம், ஆக்கிரமிப்பு என யாவற்றிற்கும் பின்னே தங்கவேட்டை ‘யே’ அடித்தளமாயிருப்பதை விலக்குகிறது. தங்கமான முயற்சி.
18. பிக்சல்
சி.ஜே.ராஜ்குமார் – டிஸ்கவரி
திரைப்பட ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் எழுதி உள்ள அபூர்வமான அறிவியல் நூல் சினிமாவின் நுணுக்கமான அறிவியல் குறித்து நம்மிடம் புத்தங்கங்கள் இல்லை. காமராவின் சகல உபகரணங்களையும் அவர் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். இன்றைய 5D தொழில் நுட்பத்தை விவரிக்கும் இடம் மிக நேர்த்தி. போட்டோ, வீடியோ, எடுப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? பள்ளிப் பாடத்தில் வைத்தால் சினிமாவின் கவர்ச்சி கேமிரா கையில் என்பதை குழந்தைகள் உணர்வார்கள்.
19. அப்பா சிறுவனாக இருந்தபோது
அலேக்சாந்தர் ரஸ்கின் – புக்ஸ் பார் சில்ரன்
மிக பிரபலமான ரஷ்யக் கதைகள் இன்று மறுவடிவம் எடுத்துள்ளன. ரஸ்கினின் நகைசுவை மிக பிரபலமானது. அது குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் போல பரவசம் தருவது. அவரது அப்பாகதைகள் வண்ணபலூன்கள் போல கவரக்கூடியவை. அப்பா பாம்பைக் கொன்றது எப்படி? படியுங்கள்… உடனே குழந்தையாகி விடலாம்.
20. நிலாவை பருகிய நாட்கள்
பூங்கனல் – அகரம்
கவிஞர் இலக்குமிகுமாரன் ஞான திரவியத்தின் மகள் பொறியியலாளர் பூங்கனலின் கவிதைகள். அருகில் நீ/எதிரில் மழை/யார் பேசுவதை கேட்க என ஆச்சரியவரிகளும் உண்டு. விவசாயக்குடும்பத்தின் அடையாளங்கள் தலைமுறை இடைவெளி, கல்வியின் போதாமை என கவிதையில் நிறைய விளாசல்கள். புது உதிரம் பாய்ச்சிய சொற்கள் நம்பிக்கை தருகின்றன.
21. சொல்லித் தீராதது
ம.மணிமாறன் – எதிர்வெளியீடு
தோழர் மணிமாறனின் சிறந்த விமர்சன நூல் இது. இலக்கிய விமர்சனம் என்பதற்கும் திறனாய்வு என்பதற்குமான மையப்புள்ளியை லேசாக அசைத்தால் இவரது ஒவ்வொரு கட்டுரையும் முனைவர்பட்டத் தகுதிபெறும். நாவல் விமர்சனம் படித்தால் நாவலை மறுவாசிப்பு செய்த அனுபவத்தைத் தரமுடியும் என மணிமாறன் காட்டி இருக்கிறார்.
22. பஷீர் தனி வழியிலோர் ஞானி
யூமா. வாசுகி | பாரதிபுத்தகாலயம்
முகம்மது பஷீர் பற்றி எவ்வளவு எழுதினாலும் தீராது. அவரோடு நெருங்கி வாழும் வாய்ப்பு பெற்ற ஸாது தொகுக்கும் அவரது வாழ்க்கை எழுத்து, குறித்த அருமையான பதிவை தமிழுக்குத் தந்திருக்கிறார் யூமா. வாசுகி. நாம் திரும்ப அவரோடு அருகில் இருப்பதுபோல உணரமுடிகிறது.
23. பொருளாதாரம் ஒரு கையேடு
இ.எம்.ஜோசப் – பாரதி
இந்த நூல் நம் நாட்டின் பொளாதார நிலை பற்றி எனக்கு பல விஷயங்களை புரியவைத்தது. இன்றைய நம் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கிறது. நிதிப்பற்றாகுறை செலாவணி, மதிப்பிறக்கம், கடன் விகிதம் மிகபணக்காரர்களே அனுபவிக்கும் வரிஏய்ப்பு சலுகை, பன்னாட்டுக் கொள்ளை என்று ஜோசப் விவரிக்கும்போது எளிதில் புரிகிறது. விவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
24. அமேசான் காடுகளும் சஹாராபாலைவனமும்
பெ. கருணாகரன் – மழலைசொல்
ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் எழுதப்பட்டுள்ள சிறுவர் நூல். காடுகளின் தோற்றம்… சஹாரா உட்படபாலைவனங்கள் எப்படி உருவாகின என்று மரங்கள் உரையாடுகின்றன. அணைகட்ட வரும் அதிகாரிகள் தரும் கலக்கத்தால் மரம், காற்று என எல்லாரும் மாயமாகிறார்கள் கார்டூனிஸ்ட் பாலாவின் கை வண்ணம் மிளிர்கிறது.
25. எரிக்கும் பூ….
க. பாலபாரதி – குமுதம்
தோழர் பாலபாரதியின் சாட்டை எழுத்தை ருசிக்கும் ஒருவர் அதன்பின் அமைதியாக இருக்க முடியாது. இது எரிக்கும் பூ… அக்னிக்குஞ்சாய் காட்டில் மிளிரும் அரசியல் காட்டியது. வாரிசு அரசியல் முதல் போபால் வழக்கு வரை, எரிவாயு ஊழல், கிரிக்கெட், அரிசி ஊழல், மும்பை தொடர் குண்டுவெடுப்பு என எதையும் பாக்கிவைக்காமல் சரளமாக விமர்சனங்களை வீசும் தோழர், பாஜகவின் மதவெறிமுகத்தைத் தோலுரிக்கும் சூழலில் வாசிக்கவேண்டிய புத்தகம்.
26. தி சில்ரன் ஆஃப் ஹெவன்
அஜயன்பாலா – மழலைசொல்
உலகப் பிரசித்தி பெற்ற சிறுவர் படங்களான தி சில்ரன் அஃப் ஹெவன் மற்றும் வெயிட் பலூன் இரண்டின் கதைகளை தன் திரைக்கதை பாணியில் அஜயன்பாலா சொல்கிறார். குட்டி புகைப்படங்கள் அழகான அச்சு, ஆச்சரியமான தரம்… நம்ம தமிழ் பதிப்புகள் இவ்வளவு நேர்த்தி ஆகிவிட்டதா என வியந்தேன்.
27. டாம்மாமாவின் குடிசை
எலிசபத் (தமிழில்: அம்பிகாநடராஜன்)
புக்ஸ் பார் சில்ரன்
எலிசபத் பிரீச்சர்ஸ்டவ் எழுதிய கருப்பின அடிமை டாம் குறித்த மிகப் பிரபலமான நாவல். அமெரிக்கர் மனசாட்சியை உலுக்கிய படைப்பு. குழந்தைகளுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் அம்பிகா நடராஜன். சிறப்பான அறிமுகப் படைப்பு. பாடத்தில் வைக்கவேண்டும்.
28. கல்வி காவியமாகும் அபாயம்
அப்பணசாமி – பாரதி புத்தகாலயம்
இன்று இந்தியக் கல்வியை பாரத புராதன இதிகாச பார்ப்பனக் கல்வி ஆக்கிவிட நடக்கும் பெரிய திப்பின்னலை விவரிக்கும் சிறுபிரசுரம். நடக்கும் தீவிர சகிப்பின்மை அரசியல், பல்கலைகழகமாணவர் களைச் தேசத் துரோகிகளாக சித்தரித்தல் என யாவுமே காவிமயம் என்ற ஒரு மையப்புள்ளி நோக்கி நகர்வதை நம்மால் உணரமுடியும். அதற்கு சிறந்த அரசியல் புரிதல் இந்த நூலில் உள்ளது.
29. அரசு
வி.இ. லெனின் – NCBH
தோழர் லெனினின் மார்க்சிய அடிப்படை நூல் தொகுதியின் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது. அழகாக தனியாக வெளியிட்டு இருக்கிறார்கள். பண்ணை அடிமை முறை நவீன தரகாக நீட்சி அடைந்ததை ஆழமாக விளக்கும் தோழர் லெனினின் வர்க்கங்களின் பிரதிநிதித்துவத்தை அரசுகள் எப்படி காலாவதியாக்கும் என்பதை விளக்கும் இடம் இன்று புரிந்துகொள்ளப் பட வேண்டிய விஷயம்.
30. புளூட்டோவின் புதிய முகம்
த.வி.வெங்கடேஸ்வரன் – அறிவியல் வெளியீடு
இனி கோளல்ல என ஒதுக்கப்பட்ட நம் சூரியக்குடும்பத்தின் கடைக்கோடி அங்கத்தினனான புளூட்டோ பற்றிய பல ருசிகரமான அறிவியல் ஆய்வுகளைத் தகவல்களைத் தமிழுக்கு வழங்கி இருக்கிறார். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். ஆழமான ஒரு அறிவியல் நூலை இத்தனை சுருக்கமாக எழுதமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கும் முயற்சி.

Related posts

Leave a Comment