You are here

வாசித்ததில் யோசித்தது

கலிலீயோ: அறிவியலின் ஒரு புரட்சி -பேராசிரியர் முருகன்
பாரதிபுத்தகாலயம்

கலிலீயோவின் வாழ்க்கை அதிலும் முக்கியமாக அறிவியல் சாராத அவரின் வாழ்க்கையை துல்லியமாக தமிழில் படம் பிடித்து காட்டுகிற புத்தகம் கலிலீயோ. இதை எழுதிய பேராசிரியர் முருகன் கலீலியோவின் வாழ்க்கையில் தனிக்கவனம் எடுத்து அதன் பின்புலத்தை ஆராய்ந்து எழுதியுள்ளது பாராட்டுற்குரியது. அதிலும் மிகத்துல்லியமாகவும், ஸ்தூலமாகவும் எழுதியுள்ளது வாசகர்களை அக்காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மை. கலிலீயோவின் வாழ்க்கை வரலாற்றில் கவனம் செலுத்தியதால் அவரின் விஞ்ஞான வாழ்க்கை ஒன்றும் ஆசிரியர் கண்டுகொள்ளாமல் விடவில்லை. அதையும் செவ்வனே செய்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஆனால் அறிவியல் பின்புலத்தைவிட அவரது வாழ்க்கை வரலாற்றின் மீதுதான் கவனம் செலுத்தியதாக ஆசிரியர் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். கலிலீயோ போப்புடன் உரையாடும் நிகழ்ச்சி மற்றும் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல் முதலிய உண்மையில் நம் கண்முன் நிகழ்வதைப் போல் எழுதியிருப்பது பாராட்டிற்குரியது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – வாழ்வும் சிந்தனையும்
இருபதாம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற விஞ்ஞானியின் வாழ்வை அறிந்துகொள்ள வேண்டுமாயின், இதுதான் எளிமையான மற்றும் அருமையான புத்தகம். என்ன காரணத்தினாலோ இப்புத்தகத்தை திரு. மீனாட்சி சுந்தரம் ஐன்ஸ்டீனின் அரசியல் பின்புலத்தில் எழுதியதாக கூறப்பட்டாலும், ஐன்ஸ்டீனின் வாழ்க்கையை அதன் ஒவ்வொரு பகுதியாக அறிந்துகொள்ள இதுவே சிறந்த புத்தகம். ஐன்ஸ்டீனின் அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இப்புத்தகம் ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்றாலும், அவரது வாழ்க்கையைப் பற்றியும் அறிந்துகொள்ள இதைவிட சிறந்த புத்தகம் இருக்கமுடியாது. ஐன்ஸ்டீனும் அவருடைய ஆசிரியர்கள் வெப்பர் மற்றும் மின்கோஸ்கியுக்குமான சண்டை, ஐன்ஸ்டீன் மற்றும் அவருடைய நண்பர் கிராஸ்மேனுக்கான நட்புறவு, முதல் மனைவி பிலேவாவுடனான பிரச்சனை மற்றும் விவாகரத்து, இரண்டாவது மனைவி எல்சாவுடனான நெருக்கம் என அனைத்தும் இப்புத்கத்தில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிலா நியூட்டன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
-வினோத்குமார்
நியூட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றி தமிழில் கிடைக்கும் புத்தகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். முன்னர் சாமிநாத சர்மா எழுதிய சர் ஐசக் நியூட்டன் என்ற இந்தப் புத்தகம். அதற்கடுத்து ஆப்பிள் நிலா நியூட்டன் என்ற இந்தப் புத்தகம். எழுதியவர் வினோத் குமார் எனும் இளைஞர். சாமிநாத சர்மாவின் புத்தகம் நியூட்டனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டது. ஆனால் ஆப்பிள் நிலா நியூட்டன், நியூட்டனின் வானியலைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இது ஒரு அரிய புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும்.நியூட்டனின் இளமைப்பருவம், கல்லூரி வாழ்க்கை, கண்டுபிடிப்புகள், புத்தகங்கள் என தொடங்கி வகை நுண்கணிதத்திற்கு லைப்பனிட்ஸிடன் சண்டை, ராபர்ட் ஹுக்குடன் சச்சரவு, விஞ்ஞானி ஹாலி நியூட்டனுக்கு உதவுதல், விஞ்ஞானத்தைத் தவிர்த்து பிற விஷயங்களில் நியூட்டனின் ஈடுபாடு மற்றும் மிக முக்கியமாக என்னதான் நியூட்டன் மிகப்பெரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்தாலும் அவரின் கருப்பு முகம் என அனைத்தையும் கூறும் இப்புத்தகம் அறிவியல் தெரியாத வாசகர்களுக்கும் புரியும் உண்மை எளிமையாக வெளிவந்திருப்பது கூடுதல் சிறப்பு.

வானியலின் வரலாறு – பாவை பப்ளிகேஷன்ஸ் – வினோத் குமார்

வானியல் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் இப்புத்தகத்தைப் படிக்கவேண்டும். கிரேக்கத் தத்துவஞானிகளில் துவங்கி இன்று ஹப்பிள் தொலைநோக்கி வரை அனைத்திற்குமான பயணம் தான் இப்புத்தகம். தட்டை உலக சித்தாந்தத்திலிருந்து ஆரம்பித்து பிரபஞ்சம் விரிவடைவதுவரை, அரிஸ்டாட்டிலுக்குமுன் வாழ்ந்தவர்களிலிருந்து, தாலமி, புரூனோ, கலிலீயோ, நியூட்டன், ஐன்ஸ்டீன் என சகல விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் வானியல் சாகசங்களை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம், வானியல்பற்றி அறிந்து கொள்ள நினைக்கும் அனைத்து வாசகர்களுக்குமான புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதிய வினோத்குமார் வானியல் கழக உறுப்பினர் என்பதாலோ என்னவோ இதை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளார்.

Related posts

Leave a Comment