என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

நூலகமே இருப்பிடமாக…

சோ. மோகனா

“மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாக தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது”
– பெரியார்.
“The only thing that interferes with my learning is my education” – Albert Einstein
கல்விதான் உலகின் மிகப் பெரிய கருவி. அதன் மூலமே நீ உலகை மாற்ற முடியும்.”
-நெல்சன் மண்டேலா.
“Literacy is not end of education, nor it is the beginning .” – Gandhi
மோகனா என்ற சின்னப்பெண்ணின் வாழ்விலும், அவளின் உலகிலும் ..1965 ம் ஆண்டு என்பது மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்கிய ஆண்டு என்பதுதான். அவளுள் புதிய உலகை பெரிய பிரபஞ்சத்தைக் கொண்டு வந்த ஆண்டு அது. அதுவரை உலகம் தெரியாத பெண்ணாக இருந்தவள், கல்லூரிக்கு வந்ததும், உலகின் பார்வைகளும், கோணங்களும் புலப்படலாயின. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, அவளின் வாழ்விலும் கூட , போராட்ட உணர்வைத் தூண்டியது. தாக்கத்தை உண்டுபண்ணியது. இருப்பினும்கூட மோகனா என்ற பெண் அப்போதிருந்த தி.மு.க பக்கம் சாயவோ, சார்புநிலை எடுக்கவோ, இணையவோ இல்லை.இருந்தாலும் வீட்டில் அனைவரும் மோகனாவை, தி.மு.க கட்சியின் சார்பாளர் என்றே கருதினர். அதனையும் மறுத்துப் பேசாமல் மௌனம் சாதித்தேன். தி.மு.க பேச்சாளர்களில் நெடுஞ்செழியன் பேச்சு ரொம்பவே இஷ்டம். கலைஞர் கருணாநிதி அவர்கள் சித்தப்பாவின் நண்பர். எங்கள் வீட்டில் சித்தப்பாவும் தெரு நாடகங்களில் நடிக்கப்போவார் என்பதால், இருவரும் மாயவரம் தெருக்களில், இரவு நேரங்களில் சைக்கிளில் ஒன்றாக சுற்றியவர்கள். அப்போதெல்லாம் எனக்கு பெரிதாக அரசியல் பற்றிய ஞானம் என்பதும் ஏற்படவில்லை. ஏராளமான வாசிப்பை நேசிப்பதைத் தவிர.

1965 பிறந்து, PUC தேர்வுகள் முடிந்தன. ரிசல்ட் பற்றிக் கவலையோ /சந்தோஷமோ இல்லாத மோகனா நிலை அது. எப்படியும் பாஸ் பண்ணிவிடுவோம் என்ற நம்பிக்கை. இல்லையென்றால் படிப்புக்கு ஆப்புதான். அந்த வாழ்வாதார பயம் ஒன்று போதாதா, யாருடைய தூண்டுதலும் இன்றி என்னைப் படிக்க வைக்க மேலும் 1964 -1965 என்பது ஒரு transitional period தான். அதுவரை முழுக்க முழுக்க தமிழ்வழிக் கல்விதான். PUC வந்ததும், அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்றுமொழி ஆங்கிலம்தான். தமிழ் தவிர. physics, chemistry, Biology எடுக்கும் பேராசிரியப் பெருந்தகைகள் மறந்தும் கூட வகுப்பில் தமிழ்பேச மாட்டார்கள் புண்ணியவதிகள்.அவர்களுக்கே தமிழ் சொற்கள் தெரிந்தால்தானே. எனவே நாங்களே எந்த வித tution னும் இன்றியும், எந்த notes இன்றியும் கூட கல்லூரிப் பாடம் படித்தோம். வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தருவது மட்டுமே. ஆனாலும்கூட கல்லூரி விடுதியில் நட்புவட்டம் அதிகம். அங்குதான் அவர்களுடன் இணைந்து முதன் முதலாக joint sitting படிப்பது என்பது உருவானது. அது மிக மிக நல்ல பழக்கம்தான். அதுவே நான் கல்லூரி படித்து முடிக்கும்வரை தொடர்ந்தது. அத்துடன் எப்போது கல்வி பயின்றாலும் அதுவே இருந்தது.

பாடம் மட்டுமல்ல; நண்பர்கள் அனைவரும் இணைந்து கதைப் புத்தகங்கள, வார இதழகள். முக்கியமாக விகடன், கல்கி, குமுதம் போன்றவற்றில் வரும் தொடர்கதைகளை நண்பர்கள் 2 அல்லது 3 பேர் கூடசேர்ந்து படிப்போம். அவ்வளவு ஈடுபாடு படிப்பதில். இதனால் கற்றல் திறனும், நினைவுத் திறனும், உரையாடல் திறனும், அத்துடன் சொல்லிக்கொடுக்கும் கற்பித்தல்திறனும் என பல்வகை ஆற்றல்களை ஒருங்கே வளர்க்க, சேர்ந்து கற்றல் என்பது உருவாக்குகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

img136   img1251965, மே மாதம் , எனக்கு பூப்புநீராட்டு விழா நடந்தது. எங்க ஊரில் அதனை சடங்கு என்ற வழக்கில்தான் சொல்லுவார்கள். அங்கு மீண்டும் ஒரே களேபரம். எனக்கு திருமணம முடிக்கத்தான்.அதிலிருந்தும் தப்பிக்க போதும்போதும் என்றாகிவிட்டது. அனைத்திற்கும் ஆபத்பாந்தவனும் பாதுகாவலனும் கல்விதான். காத்திருந்தேன்..காத்திருந்தேன் காலத்துக்காக PUC தேர்வு முடிவு. வந்தே விட்டது. பேப்பரில் ரிசல்ட் எனக்கு நல்ல சேதி சொல்ல.பறந்து வந்தது. தமிழ் வழிக்கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி படித்தவர்கள் ஏராளமானோர் பெயிலாகி விட்டபோது. நான் மட்டும் எந்த arrears-ம் இல்லாமல், நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செஞ்சாச்சு. அம்மாடியோவ் எப்படியாவது இந்த ராட்சஸர்களிடமிருந்து தப்பித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கை துளிர்த்தது.

1965. ஜூன் பிறந்தது..என் வாழ்விலும் நம்பிக்கை ஒளியும் பிறந்தது.. அதுவரை. கூட்டுக்குள் அடைபட்ட சிறைப் பறவைதான். என் மதிப்பெண்ணுக்கு, மருத்துவத் துறையில் சேர இடம் கிடைத்தும்கூட. அப்பாவால் படிக்கவைக்க முடியாத நிலை. அன்றைக்கு அப்பா சோமசுந்தரத்தின் ஊதியம் என்ன தெரியுமா? ரூ.68/= மட்டுமே. எனது விடுதியின் ஒரு மாத சாப்பாட்டுப் பணம் அது. எப்படி அப்பா என்னைப் படிக்கவைக்க முடியும்? என்ன காரணத்துக்காக கணிதப் பிரிவிலிருந்து உயிரியல் துறைக்கு மாற்றிக் கொண்டு, அதீதமாகப் படித்து, சூப்பரா பிராக்டிகல் செய்து அதிக மதிப்பெண் பெற்றும், எங்கள் குடும்பத்தின் வாழ்நிலை, என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை. அது போகட்டும். அப்படி நான் மருத்துவம் படித்திருப்பின், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கும், அறிவொளி இயக்க செயல்பாடுகளுக்கும், ஒரு மக்கள் சமூகராகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத்துக்கு ஒரு போராளியாகவும் வந்திருக்கவே மாட்டேன். போராளி மோகனா உருவாகி இருக்க மாட்டாள். அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. நடந்ததும், அதனைப் பயன்படுத்தியதும் எல்லாம் நன்மைக்கே. எந்த சூழ்நிலை என்னை மருத்துவராக்கவில்லையோ, அதே சூழல்தான் என்னை ஒரு சமரசமில்லா போராளியாக உருவாக்க உதவிசெய்துள்ளது. அறிவியலோடு இணைந்த அதன் உண்மைநிலை உணர்ந்த வாழ்க்கையை வாழவும், இடதுசாரிக் கொள்கைகளுடன் வாழும் மன நிலையை உருவாக்கவும் கிரியா ஊக்கியாக அமைந்தது.

மருத்துவம் படிக்க இயலா வருத்தத்துடன், நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எனது பால்ய நண்பரும், அண்ணாமலையில் அப்போது படித்துக் கொண்டிருந்த திருமிகு சோமுவின், வழிகாட்டலுடன் அங்கு நான், B.SC பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். மதிப்பெண் இருந்ததால், B.SC Zoology மற்றும் Botany இரண்டுமே கிடைத்தன. அப்போதும் கூட அப்பாவின் பணத்தில் படிக்கவில்லை படிக்க முடியா நிலைதான். அப்பாவின் தங்கையின் கணவர் (மாமாதான்) உதவியிலேயே அண்ணாமலையில் படிக்க சேர்ந்தேன். ஆனால் நான் படிக்கச் சேர்ந்த துறை தாவரவியல்தான். ஆனால் அங்கும் ஓர் மோகனா இருந்தார். அவரின் initial Sதான். அவர் சிதம்பரம் என்பதால், C,S. மோகனா, நான் சோழம்பேட்டை என்பதால் S.S. மோகனா. என்னவோ அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.எனவே ஒரு வாரம் மட்டுமே தாவரவியல் கல்வி. பின்னர் நான் ஈடுபட்டு படம் வரையும், எனக்குப் பிடித்த அட்டகாசமாய் Dissection செய்யும் விலங்கியல் துறைக்கு மாற்றிக் கொண்டு ஓடியே வந்துவிட்டேன்.அது என்னை அப்படி ஆகர்ஷித்த /ரொம்பவும் ஈர்த்த துறைதான் விலங்கியல். ஏராளமாய் நண்பர்கள் பட்டாளம் எனக்கு. அதுமட்டுமல்ல; எனக்கு ஏராளமான தைரியமும் கூட
அதைவிட, அண்ணாமலையில் ஏராளமான புதிய விஷயங்களும், புதிய உலகும், புதிய நட்புகளும், அதற்கும் மேலாக அங்கு பல்கலைக் கழகத்தின் மையத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய C.P. ராமசாமி அய்யர் நூலகமும் என்னை தலைகீழாகப் புரட்டிப் போட மிகவும் வழிவகை செயதன.அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருபால் மாணவர்கள் படிப்பது மட்டுமின்றி, மாணவர்களின் சுதந்திரமும் அதிகமாகவே இருந்தன. அது மட்டுமா, அங்குள்ள இயற்கைச் சூழல் என் நெஞ்சைக் கட்டிப் போட்டது. பல்கலைக் கழகத்தில் நுழையும்போது இரு பக்கமும் இருக்கும் நீண்ட ஓடை/குளம், அதில் நடக்கும் படகுச் சவாரி. அங்கு தினந்தோறும் அதன் கரையில் நடந்துசெல்வது எல்லாம் இன்றும்கூட உள்ளத்தில் பசுமை மாறாமல் வலம் வருகின்றன. என் வாழ்க்கையின் முக்கியமான மறக்க இயலா ஒரு மைல் கல் என்பது அண்ணாமலைப் பல்கலைக் கழகம்தான். எனக்கு அறிவுத்தேடலையும், போராளிக் குணத்தையும், கூட்டு வாழ்க்கையையும், மக்களின் மேல் சரியான புரிதலையும், அதீத துணிவையும், அறிவியல் ஞானத்தையும், தமிழ்ப் பற்றையும், நேரம் காலமின்றி எப்போதும் ஓடி ஓடி, வாசிக்க அனைத்து துறை புத்தகங்களை வழங்கியது மட்டுமின்றி, அவற்றை சரியாகப் புரிந்து படிக்கவும், அதன் உள்ளர்த்தங்கள் அறிய வாய்ப்பையும் ஏராளமாக வழங்கியது என் நெஞ்சில் என்றும் நினைத்து நினைத்து மகிழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்தான்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் நாள் என்பது இன்றும்கூட பசுமைதான். எங்கள் விலங்கியல் வகுப்பின் எண்ணிக்கை 65 மாணவர்கள் 32, மாணவிகள் 33 என் விலங்கியல் வகுப்பில், நான் சின்னப் பெண் என்பதால், எனக்கு எப்போதுமே முதல் பெஞ்சுதான். ஆனாலும் கூட எனது சேட்டை குறையாது.எனக்கு இடது பக்க பெஞ்சில் ஆண்கள். அருகில் குட்டி பாலமுருகன். அடுத்து அப்துல் ரஹீம். இருவரும் பெரிய படிப்பாளிகள். நிறைய மதிப்பெண் எடுப்பவர்கள். ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குபவர்கள். நானும் நல்ல பெயர் வாங்கினாலும் ஆமாம் சாமி போட மாட்டேன். ஆனால் நான் எல்லா வாத்தியாருக்கும் பட்டப் பெயர் வைப்பதில் கில்லாடி. அவர்களின் கண்களில் நல்ல பிள்ளை மாதிரி, ஆனால் நோட்டில் comment எழுதி ஆசிரியருக்குத் தெரியாமல் பின்னால் அனுப்புவேன். ஆனால் மாட்டியது மட்டும் இல்லை, நன்றாகப் படிப்பதாலும், நன்றாக disection செய்வதாலும்,.பாவம் ஆசிரியர்கள். என்னை நல்ல பெண் என நினைத்தார்கள்.

இன்னொரு விஷயம் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன், ADMK வில் இருந்த மணப்பாறை
பேரா. பொன்னுசாமி. என் விலங்கியல் வகுப்பு ஆசிரியர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில். ஆனால் பொன்னுசாமி சார் அற்புதமாய் பாடம் நடத்துவார்.அவரின் பாடம் நடத்தும் திறனுக்கு மயங்கியே அவர் வகுப்பில் நான் முதல் மதிப்பெண் வாங்குவேன். அவரிடம் பாராட்டுப் பெறுவதற்கு. அன்று விலங்கியல் துறை ஆசிரியர்கள் பாலுசார்,
Dr. பொன்னம்மாள் சங்கரமூர்த்தி மேடம்,

Dr. ஸ்ரீராமுலு சார்,சுப்பையா சார் (இவர்கள் இப்போது உலகில் இல்லை), கற்பகம் கணபதி சார், பொன்னுசாமி சார்,ரங்க நாதன் சார். சாயி சார், ஸ்ரீநிவாசன் சார் என 13 ஆசிரியர்கள் கொண்ட விலங்கியல் துறை. அங்கு துறைத் தலைவர் பேரா. கோவிந்தன். அவரைக் கண்டால் துறையே நடுங்கும். மரபணு பாடத்தில், அதன் கணக்கில் புள்ளியியலில் அவர் பிஸ்து. (ஆனா என்ன காதுதான் கொஞ்சம் கேட்காது) அவரின் வீட்டுக்கு அருகிலேயேதான் எங்களின் விடுதியும். இது எப்படி ? எப்படி அவர் கண்ணில் படாமல் தப்பிக்க. ஆனாலும்கூட அவரின் வகுப்பில் பயப்படாமல் துணிந்து கரும்பலகையில் கணக்கு போடும் ஒரு சிலரில் மோகனாவும் அடக்கம்.
இதெல்லாம் ஒரு புறம். அப்புறம் எனது வறுமை நிலை இன்னொரு புறம்.ஆனால் இதற்கெல்லாம் மோகனா துளியளவும் வருந்தியதே இல்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றபோது என்னிடம் இருந்த உடைகளின் எண்ணிக்கை 5 மட்டுமே. இன்னும் நினைவில் உள்ளன அவற்றின் நிறங்கள். ஆனால் எப்போதும் அடுத்தவர் உடையை அணியமாட்டேன். இன்று வரை அப்பா சொல்லிக் கொடுத்ததை பின்பற்றல் தான். மேலும் என்னிடம் பணம் இல்லைஎன்று மற்றவர்கள் எனக்கு செலவுசெய்வதையும் அனுமதிப்பதில்லை.

நெசமாகவே அண்ணாமலைப் பல்கலைக் கழக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்தான் மனதிற்கு உள்ளேயும், வெளியேயும். பல்வேறு வகைகளில் கூட.ஆனால் முதலாண்டு எனக்குப் போதித்த எனது தமிழ் ஆசிரியர்கள் குறிப்பாக முனைவர்.கந்தசாமி ஐயா, சாமி ஐயா இவர்களின் மூலம்தான் தமிழ்ப் புத்தகங்களை வெறிகொண்டு அனைத்தையும், பாகுபாடின்றி, படிக்க ஆர்வமும், தொடர்ந்து இரவு பகலாக நூலகம் சென்று படிக்கும் தூண்டுதலும் ஏற்பட்டன. இதனால் எனக்கு mobile library என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது.. பல்கலைக் கழத்தில் லீவு விட்டால் எல்லாரும் வீட்டுக்கு ஓடுவார்கள் நான் காலையில் 9 மணிக்கு நூலகம் சென்றால், மதிய உணவு முடிந்ததும், உடனே நூலகம், இரவு 7 மணி வரை நூலகம் உண்டு என்பதால் நூலகர் துரத்தும் வரை நூலகம்தான். வரும்போது ஏராளமாய் புத்தகம் கொண்டு வந்து விடுதியிலும் இரவு நெடுநேரம் வரை, அறைத் தோழிகள் சாவித்திரி, மற்றும் ராஜேஸ்வரியிடம் செம திட்டு வாங்குவேன்.(இப்போது மருத்துவர் ராஜேஸ்வரி- முதலாண்டுக்குப்பின் மருத்துவத் துறைக்குப் போனவர்) பின் வராந்தாவில் அமர்ந்து படிப்பேன். இப்படித்தான் நூலகப் படிப்பும். புத்தக வாசிப்பும், பாடப் புத்தக வாசிப்பும் கூட என்னுள் இணைபிரியாமல் பின்னிப் பிணைந்தே கிடந்தன.

இடையிடையே, நண்பர்களின் பெரியார் பற்றிய மற்றும் அம்பேத்கர் பற்றிய வாசிப்பும் அதன் இயக்கங்களும் அறிமுகம் ஆகின. ஆயினும் அவர்களோடு இணையவில்லை. இன்னும் கூட என் நண்பரும், பால்யகால சிநேகிதியும், என் அறைத்தோழியுமான, இன்றைய முனைவர்

பேரா. சாவித்திரி அப்போது B.A தமிழ் படித்தார். அவரோடு சேர்ந்து, அவர் படிக்கும் தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, குற்றாலக் குறவஞ்சி, புறநானூறு, அக நானூறு என தமிழ்ப் பாடங்களும் படிப்பதுண்டு. அது மட்டுமா, கம்பராமாயணம் முழுமையும், சிலப்பதிகாரம் முழுமையும், ராமசாமி ஐயர் நூலகத்தில் வாங்கி வந்து அப்பவே படிச்சாச்சு. அப்படி ஒரு பேய் படிப்பு. தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் சூப்பர் படிப்பு. சேக்ஸ்பியரின் 12 நாடகங்களும், அத்துபடியா படிச்சாச்சு. மேலும் முக்கியமாக அதன் சோகத்தின் உச்சமான The King Lear உம், சிரிப்பின் சிகரமான “Much ado about Nothing” உம் எனக்கு பாடப் புத்தகங்கள். எனக்கு சேக்ஸ்பியர் நடத்திய ஆசிரியர் ராமசாமி சார் அப்படியே நாடகத்தை நடித்துக் காட்டுவார். அற்புதமான வாசிப்பும், அர்த்தங்களும்..கொண்டு வந்து இறக்குவார் மாணவர்களிடையே. நினைக்க நினைக்க நெகிழும் தருணங்கள் அவை. நாங்க நோட்ஸ் இன்றிப் படித்ததிற்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திய முறையின் அர்ப்பணிப்புத்தான். poetry நடத்திய பேராசிரியர் Lyord லண்டனுக்கு மேற்படிப்புக்காக சென்றபோதும் அவர் நடத்திய Wordsworth மற்றும் Byronனின் கவிதைகள், நினைவில் ஊஞ்சலாடுகின்றன…இன்றும் கூட. அன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்குமுன் மாதிரியாக, மாடலாக, பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

பல்கலைக் கழகத்தின் முதலாண்டு முடிவில் மீண்டும் இந்தி எதிர்ப்புப் பிரச்சினை தலைதூக்கியது. மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். மாணவிகளும், நாங்களும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் குதித்தோம். அவர்களுடன் எல்லா களத்திலும் நின்றோம். ஆனால் அப்போது arrest பல்கலைக் கழகத்தில் இல்லை. ஆனால் நீண்ட விடுமுறை விடப்பட்டது. தேர்வுகள் தள்ளிப் போயின. அப்போது தமிழக காங்கிரஸ் அரசில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழிக் கொள்கை கொண்டுவர முயற்சி செய்தபோது மீண்டும் இந்திஎதிர்ப்புப் பிரச்சினை தீவிரமாகியது. ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்தன. மக்களும் ஆட்சியை விமர்சித்தனர். அவ்வாட்சியை மாணவர்கள் எதிர்த்தனர். பெரும்பாலோர் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கவுக்கும், அண்ணாதுரைக்கும் ஆதரவாக இருந்தனர். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மிகத்தீவிரமானதால். இந்திஎதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக அண்ணாதுரையும் அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் மக்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவை அபரிமிதமாக பெற்றன.

இந்த காலக் கட்டத்தில், அண்ணாமலையில் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு மிகத் தீவிரமாகி, மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்று, மாணவர்களை அடக்க முடியாமல்,போனது. எனவே அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துவக்கத்தில் உள்ள, அதன் நுழைவாயிலான பொறியியல் கல்லூரியின் அருகில் மாணவர்கள்மேல் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் அன்றைய விவசாயக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் தியானேஸ்வரன் மேல் பாய வேண்டிய துப்பாக்கிக் குண்டு, அவரின் குறுக்கே அருகில் இருந்த இராஜேந்திரன் என்ற முதலாண்டு கணிதம் படிக்கும் பையன்மேல் பாய்ந்து, அவரின் உயிரைக் குடித்தது. அவன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தான். (இன்று அந்த இடத்தில் இராசேந்திரனின் சிலை ஒன்று உள்ளது.)..அதன் பின்னணியில் பல்கலைக் கழக சூழல் ரணகளமாகி விட்டது. பல்கலைக் கழகம் காலவரையின்றி மூடப்பட்டது. நேரடியாக தேர்வுக்கு மட்டுமே திறக்கப்பட்டது. முதலாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லாததால் நாங்கள் தப்பித்தோம் என்றே சொல்ல வேண்டும். அன்றைய போராட்டமும், மற்றவர்களின் அறிவுசார் விவாதங்களும், தேடலைநோக்கிய வாசிப்பும், உரையாடல்களும்தான் இன்றைய வாழ்நிலையின் வழிகாட்டிகள். மற்றும் கலங்கரை விளக்கங்கள.
“Education is the key to unlock the golden door of freedom” …george washingdon
“The greatest humanistic and historical task of the oppressed: to liberate themselves…”
“Paulo Freire”
“கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான்.” – டாக்டர். ஆர். ராமானுஜம் (கணிதவியலாளர் IMSc)

Related posts

Leave a Comment