You are here
கடந்து சென்ற காற்று 

நீர்வழிப் பயணம்

ச.தமிழ்ச்செல்வன்

DSC_0053வறட்சியும் வெள்ளமும் ஏற்படுவதற்கு, வரலாற்றுப் பிழைகளோ அல்லது மனிதத் தவறுகளோ எந்த அளவிற்குக் காரணமாக இருக்கின்றன?
அரசால் பின்பற்றப்படும் வழக்கமான வழிமுறைகளும் நுணுக்கங்களும் வெள்ளத்தையும் வறட்சியையும் குறைக்க எந்த அளவிற்குப் பயனளிக்கின்றன? கடந்தகாலங்களில் ஏற்பட்ட தீவிரமான இயற்கைநிகழ்வுகளின் மூலம் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் என்ன?
மீண்டெழுவதற்கான சக்தியை மேம்படுத்துவதற்கு உடனடியாக செய்யவேண்டியவை என்ன?
இந்தக்கேள்விகளோடு “நீர்வழி” என்கிற பொறுப்புள்ள குடிமக்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டியக்கம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இயங்கும் கனவுகளோடு துவக்கப்பட்டுள்ள இவ்வியக்கம் தன் முதல் நடவடிக்கையாகச் சென்னையை மீட்போம் என்கிற கருத்தரங்கை
பிப் 20,21 ஆகிய இருநாட்கள் அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி வளாகத்தில் நடத்தியது. கருத்தாலும் கரத்தாலும் போராடும் அமைப்புகளும் அறிவுத்துறையில் இயங்கும் துறைசார் அறிஞர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் ஒரே மேடையில் தம் கரம் இணைத்துள்ளது ஒரு நம்பிக்கையைத் தருகிறது.
வெள்ளத்துக்குப் பிறகு சென்னையில் நடந்த பல்வேறு கூட்டங்களுக்கு நான் போய்க்கொண்டிருந்தேன். 2016 நவம்பரில் மீண்டும் மழை வருவதற்கு முன்னால் ஏதாவது செய்து மக்கள் பாதிப்படையாமல் காக்க வேண்டுமே என்கிற பதட்டமும் துடிப்பும் எல்லாக்கூட்டங்களிலும் ததும்பிநின்றதைப் பார்த்தேன்.நீர்வழிகளும் நீர் நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் இந்தப் பேரழிவு ஏற்பட்டது என்பது எல்லோருக்குமே தெளிவாகத் தெரிகிறது.ஆனாலும் அதை ஒரு முறையான புள்ளிவிவரங்களோடு கூடிய அறிக்கையாகத் தயாரித்து மக்களிடம் எடுத்துச்செல்லும் முயற்சி இந்த நீர்வழிக் கருத்தரங்கில்தான் துவங்கியுள்ளது.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஜனகராஜனும் பூவுலகின் நண்பர்கள் குழுவும் இணைந்து தயாரித்த “மக்கள் சாசனம்” நீர்வழிக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.இதன் அடிப்படையில் மக்களைத் திரட்டி கோட்டை நோக்கிச் செல்வதும் உடனடியாகச் செயல்பட அரசை வற்புறுத்துவதும் எனது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2015ல் பெய்த மழைப் பொழிவானது இந்த நூற்றாண்டிலேயே அதிக மழை எனக் கருதப்படுகிறது. 2015ல், வடகிழக்குப் பருவ மழையானது நகரத்தின் சாதாரண மழைப் பொழிவான 780 மி.மீயை விட, சராசரியாக சுமார் இரு மடங்காகவும், அசாதாரணமாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை
ஆனால்,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கூறியதைப்போல, இது”அரிதினும் அரிதான நிகழ்வா”? இதுபோன்ற அதிக மழை ஏன் வியப்பான ஒன்றாக இருக்கவேண்டும்? வடகிழக்குப் பருவ மழையானது எப்போதும் சூறாவளிகள், குறைந்த அழுத்தம் போன்றவற்றின் வழியாக கடும் மழைப் பொழிவை சில நாட்களுக்குள் ஏற்படுத்தும் என்பதை நமது முந்தைய அனுபவத்தைக் கொண்டு நாம் அறிவோம். பிறகு ஏன் வடகிழக்குப் பருவ மழையை குறைகூற வேண்டும்? வடகிழக்குப் பருவமழை மாதங்களில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின், கடும் மழையும், புயலும் அறிமுகமில்லாதவை அல்ல. நவம்பர் மாதத்தில் அதிக மழை என்பது குறிப்பாக தமிழகக் கடலோர மாவட்ட மக்களுக்கு வாழ்வின் ஒரு பகுதி ஆகும். இப்படிப்பட்ட தீவிர நிகழ்வுகளில், நிர்வாகம், என்ன மாதிரியான தயார் நிலையைக் கையாளவேண்டும் என்பதே முக்கியமான கேள்வியாகும். நமது மாநிலத்தில் ஏற்படும் தொடர் சூறாவளிகள் மற்றும் சுனாமிபோன்ற கடந்த தீவிர நிகழ்வுகளின் அனுபவத்தால் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?
இப்படியான கேள்விகளை எழுப்பும் மக்கள் சாசனம் முக்கியமான ஒரு உண்மையைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
“எந்த ஒரு மாநகரமாக இருந்தாலும், தற்போது ஏற்பட்டதுபோன்ற பேரழிவுச் சம்பவங்களின்போது, தம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் அடிப்படை என்பது சரியானதாக இருக்கவேண்டும். சென்னை மாநகரத்தைப்பொருத்தவரை, மிகவும் தேவையான அடிப்படைகளில் பலவாறான விலகல்கள் உள்ளன. அடிப்படைகள் என்று சொல்லும்போது, அடிப்படைக் கட்டமைப்பு என்பதையே நாம் குறிப்பிடுகிறோம். அதில் மிகவும் முக்கியமான அம்சம், வடிகால் ஆகும். இந்த ஒரு அம்சம் சரியானபடி கவனிக்கப்பட்டு இருந்தால், இத்தகைய பெரும், ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்காது. ஒவ்வொருவரும் தமது விரக்தியையும், நமது அரசமைப்பின் திறமையின்மையையும் கட்டாயமாகப் பகிர்ந்துகொள்ள தள்ளப்பட்டு இருக்கிறோம். இது அநியாயமானது இல்லையா?”
என்னைப்போன்ற சென்னைவாசி அல்லாத பலருக்கும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டும் சில தகவல்களேகூட அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.உலகத்திலேயே மூன்று நதிகளும் ஒரு நீண்ட பக்கிங்காம் கால்வாயும் அமைந்த பெருநகரம் வேறேதும் இல்லை என்கிறார்கள்.
“சென்னை புவியியல்ரீதியாக மிகவும் தனித்தன்மையான முறையில் அமைந்துள்ளது. இது ஒரு ஆசீர்வாதம்தான். மாநகரத்தின் வழியாக மூன்று நீர்வழிகள் செல்கின்றன. வடசென்னைப் பகுதியின் வழியாக கொசஸ்த்தலை ஆறு செல்கிறது. கூவம் ஆறு மத்திய சென்னையையும், அடையாறு தென் சென்னையையும் பார்த்துக் கொள்கிறது. சென்னை பாலாறு என்ற ஆறாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு ஆறுகளின் குறுக்கே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. நாட்டின் வேறெந்த ஒரு மாநகரத்திலும் இப்படிப்பட்டதொரு பரந்த வடிகால் அமைப்பு இல்லை. துரதிருஷ்டவசமாக, அதிகபட்ச ஆக்கிரமிப்புகளால் இந்த முக்கிய வடிகால் அமைப்புகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றின் அகலம், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான அளவில் குறைந்து, அதிகப்படியான வண்டலும் சேறும் சேர்ந்து, ஆறுகளின் நுழைவாயிலில் கனமான மணல் திட்டுகள் உருவாகியுள்ளன.
இந்த முக்கிய வடிகால் அமைப்புகள் தவிர, கூடுதலாக, நடுத்தர வடிகால் அமைப்புகளான மாம்பலம் கால்வாய், வேளச்சேரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய், வீராங்கல் ஓடை, கேப்டன் காட்டன் கால்வாய், வில்லிவாக்கம் கால்வாய், ஒக்கியம் மடுவு போன்றவை உள்ளன.
இந்த நேரத்தில், இந்த நடுத்தரக் கால்வாய்களின் சுவடுகளைக் கண்டறிவது சிரமமானதாக உள்ளது. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (இது முதலில் சுமார் 7,000 ஏக்கர் அளவில் பரந்திருந்தது) தற்போது 500 ஏக்கருக்கும் குறைந்த அளவில் சுருங்கிவிட்டது. உண்மையில், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சென்னையின் பெருமை வாய்ந்த ஐ.டி. கம்பெனிகள் பலவும், இந்த பள்ளிக்கரணை சதுப்பு சமவெளி நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, அரசால் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் அனைத்தும் பெரும்பாலும் பழைய சென்னையிலேயே காணப்படுவதால், இன்றைக்கு அவையனைத்தையும், குப்பைகள் அடைத்துக்கொண்டு உள்ளன. அவை மிகக் குறுகியதாக இருப்பதால், தொடர்ந்து ஒரு சென்டிமீட்டர் அளவு மழை பெய்தாலும், வெள்ளநீரைக் கொண்டுசெல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக, இந்த எல்லா இணைப்புகளும் சமீபத்திய மழைநீரை எடுத்துச் செல்வதில் தோல்வியடைந்தன. எனவேதான், மாநகரத்தின் அத்தியாவசியமான, முக்கியமான அடிப்படைக் கட்டமைப்புகள் தோல்வியடைந்துள்ளன என்ற முடிவுக்கு ஒருவரால் வரமுடிகிறது.
இவ்வாறான பேரிடர்களும் பேரழிவுகளும் ஏற்படுவதற்கு மிக அதிகமான அல்லது மிகக் குறைவான தண்ணீரே காரணமாகிறது. இது முழுக்க முழுக்க நிர்வாகக் கோளாறாகும். இந்நிகழ்வுகளைச் சிறு ஆய்வுக்கு உட்படுத்தினால், பல்வேறு மனிதத் தவறுகளே இப்பேரழிவுகளுக்கு காரணமாக இருப்பது வெளிப்படும். அவை;
• அக்கறையற்ற நகர விரிவாக்கமும், விஞ்ஞான அறிவற்ற நகர நிலப் பயன்பாடும்
• ஆறு, சதுப்புநிலம், வெள்ளச் சமவெளி, வடிகால் அமைப்புகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள்
• விரிவான இடர் மதிப்பீடுகள், பாதிப்பு ஆய்வுகள், இடர் தணித்தல் கொள்கைகள், மக்கள் மற்றும் நகரத்துக்கான மீட்புத் திட்டங்கள் இல்லாமை
• தொலைநோக்கற்ற வளர்ச்சித் திட்டங்கள்
IMD, WMO, (NOAA) USA, BBC போன்ற வானிலை ஆய்வகங்களின் அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளை அறிந்து, அலட்சியம் செய்யாமல் மதித்து, அவற்றைத் துரிதமாக செயல்படுத்தாமை
அனைத்துக்கும் மேலாக, இவ்வெள்ளத்தைப் புரிந்துகொள்வதற்கு, நீர்வழித் தடங்களின் அமைப்பும் அதன் பாதைகளும் உயிர்ச்சூழல் அறிவும் மழைப்பொழிவு வரலாறும் பருவமழையின் தன்மைகள் குறித்த விரிவான அறிவும் அவசியமானதாகும்.”
இந்தப் பார்வையோடு நாம் மக்களிடம் இந்த உண்மைகளை எடுத்துச்சென்றால் மக்களின் கோபத்தைக் கிளர்த்த முடியும்.உண்மையில் நீர்வழிக் கூட்டங்களில் பலரும் குறிப்பிட்ட உண்மை என்னவெனில் தன்னார்வத் தொண்டர்களின் தியாகமிக்க உழைப்பாலும் பங்களிப்பாலும் வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டது உண்மை. ஆனால் கஷ்ட நேரத்தில் காணாமல் போன அரசின் மீது மக்கள் கொள்ள வேண்டிய கோபத்தை அது தணித்துவிட்டது.
சரியான கல்வியின்மூலம் கோபத்தைக் கிளர்த்த முடியும்.புரட்சி என்பதே மாபெரும் கல்வி இயக்கம்தான் என்று லெனின் கூறியதை நினைவிற் கொள்வோம்.உடனடியாகச் செய்ய வேண்டியவை என மக்கள்சாசனம் முன் வைக்கும் 11 அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்.இப்போதே மார்ச் மாதமாகிவிட்டது. இன்னும் சில மாதங்களே நம் கையில் உள்ளன. அதற்குள் முழுமையாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட முடியாது.அவ்வளவு அழிவை நாம் செய்து வைத்திருக்கிறோம். எனினும் சில துவக்கங்களாவது மேற்கொள்ளப்பட வேண்டுமல்லவா?
அந்த பதினோரு அம்ச கோரிக்கைகள்:
1. சென்னை, சென்னைப் பெருநகரம் (CMA) மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோவில் குளங்கள் மற்றும் 3,600 பாசன ஏரிகளையும் முழுமையாகக் கணக்கெடுத்து அவற்றின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பின் அளவு, வண்டலின் அளவு போன்றவற்றையும் கணக்கிட்டு அனைத்து நீர்நிலைகளையும் மீட்டு எடுத்து புனரமைக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.
2. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த மண்டலமாக பாவித்து, இந்த நிலப்பரப்பின் மேடு-பள்ளம் ஆகியவற்றைக் கணக்கீடு (elevation mapping) செய்வது அவசியமாகும்.
3. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வடிகால் அமைப்புகள், ஓடைகள் மற்றும் ஆறுகளை முழுமையான வரைபடமாக்க (drainage mapping)வேண்டும். வடிகால்களையும் முக்கிய வழித் தடங்களையும் உடனடியாக ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு எடுத்து பராமரிக்க வேண்டும்.
4. சென்னையின் முக்கிய ஆறுகள், ஓடைகள் அவற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு எடுத்துப் பராமரிக்க வேண்டும். பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
5 சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய இடங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த(ecological hotspots) இடங்களை ஆய்வுசெய்து வரைபடமாக்கி கவனத்தோடு கண்காணிக்க வேண்டும்.
6. பருவமழைக் காலங்களில் வெள்ள வடிகால் என்பது ஆக்கிரமிப்புகள் இருந்தால் எப்படி இருக்கும் ஆக்கிரமிப்பு இல்லாமல் எப்படி இருக்கும் என (flood carrying capacity) சென்னையின் நீர்வழித் தடங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.
7. மக்கள்தொகை அடர்த்தி விகிதம், மாநகரின் ஏற்றத்தாழ்வுகள் (தென்சென்னை vs வட சென்னை) மற்றும் தொழில், பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றைக் கணக்கீட்டு முறைப்படுத்த வேண்டும்.
8. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் போதும், வெள்ளம் இல்லாத நிலையிலும், வறட்சியின்போதும், வறட்சியற்ற நிலையிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு மக்கள் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாவார்கள் (vulnerability analysis) என்பதை ஆராயவேண்டும்.
9. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மற்ற பிற பேரிடர்களினால் உண்டாகும் risk & uncertainty analysis மேற்கொள்ளவேண்டும்.
10. நீரியல் மற்றும் சுற்றுச்சூழலியல் அடிப்படையில் வெள்ளச் சமவெளிகள் மிக முக்கியமானவை. மேலும் உற்பத்தித் திறன் உள்ளவை என்பதால், மனித ஆக்கிரமிப்புகளின் கணக்கெடுப்பை இத்தகைய இடங்களில் மேற்கொள்ளவேண்டும். அனைத்துவகையான ஆக்கிரமிப்புகளும் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.
ஆனால், வெளியேற்றப்பட்ட ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் அவர்களின் முந்தைய வசிப்பிடத்தில் இருந்து 3 கிலோமீட்டருக்குள் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும்.
11. மிக முக்கியமாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளாக அறிவித்து, இவை அனைத்தையும் ஒரே நீர்பிடிப்புப் (mega water shed) பகுதியாக வகுக்கவேண்டும்
கரம் இணைப்போம்.களம் காண்போம்.
இதேபோன்ற கருத்தரங்கு ஒன்றை கடலூரில் கூட்டி வெள்ளம் பாதித்த இதர மாவட்டங்களுக்கான மக்கள் சாசனம் வெளியிட நீர்வழி தீர்மானித்திருப்பது இன்னும் நம்பிக்கையூட்டும் செய்தியாகும்.
தொடரும்…..

Related posts

Leave a Comment