You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

சாம்ராஜ்யங்கள் பற்றிய ஆய்வு

என்.குணசேகரன்

2077கடந்த ஜனவரி 14 அன்று மறைந்த மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்க்ஸின்ஸ் வுட் (Ellen Meiksins Wood) மிகச்சிறந்த மார்க்சிய படைப்புக்களை உருவாக்கியவர்.

‘கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகள் புகழ்பெற்ற சோஷலிசப் பத்திரிக்கையான மன்த்லி ரெவியூவின் ஆசிரியராகப் பணியாற்றினார். இடது சாரி தத்துவார்த்த ஏடான நியூ லெப்ட் ரெவியூவின் ஆசிரியர் குழுவிலும் அவர் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார்.’

தொடர்ந்து அரை நூற்றாண்டாக மார்க்சிய ஆய்வு நூல்களை எழுதி வந்துள்ளார். மார்க்சிய தத்துவ விவாதங்களில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘புதிய இடது சாரிகள்’(NewLeft) எனும் பெயரில் எழுந்த ‘பிந்தைய மார்க்சியம்’ போன்ற கருத்தோட்டங்களையும், பின் நவீனத்துவம் எனும் பெயரில் உருவான அடையாள அரசியல் போக்குகளையும் எதிர்த்து தரமான கருத்தியல் போராட்டத்தை அவர் நடத்தினார்.வர்க்க அணுகுமுறை,வரலாற்றுப் பொருள்வாத அடிப்படைகளில் உறுதியாக நின்று இந்த வாதப்போர்களை அவர் நடத்தினார்.

1990-ஆம் ஆண்டுகளில் உருவான உலகமய, தாராளமய சூழலின் பல பரிமாணங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அதில் ஒரு நூல் 2003-ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘’மூலதனத்தின் சாம்ராஜ்யம்’’ (Empire of Capital).

இன்றைய மூலதன சாம்ராஜ்யத்தின் மையமாக உள்ள அமெரிக்க கார்ப்பரேட் ஏகாதிபத்தியத்தைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடந்த கால உலக சாம்ராஜ்யங்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நூலைத் துவக்குகின்றார் உட்.

கிரேக்கப் பேரரசு,ரோமானியப் பேரரசு, சீன, ஸ்பெயின், அராபிய இஸ்லாமியப் பேரரசுகள், வெனிஸ், டச்சு, பிரிட்டிஷ் பேரரசுகளின் வரலாற்றைத் தெளிந்தநடையில் அவர் விளக்குகிறார். இவை பேரரசுகளாக உருவானதின் பொருளாதாரக் காரணங்களை ஆழமாக விளக்குகிறார். ஒவ்வொரு பேரரசின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்த விசேஷக் காரணங்களையும், ஒவ்வொன்றின் தனித்த தன்மைகளையும் அவர் விளக்குகிறார்.

மார்க்சியர்களால் பேசப்படுகிற,லெனினால் வரையறுக்கப்பட்ட ‘ஏகாதிபத்தியம்’என்பது ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போன்று, அல்லது அதற்கு முந்தைய சாம்ராஜ்யங்கள் போன்று வேறு நாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றி, தங்களது நிரந்தரக் காலனிகளாக மாற்றும் வேலையை அது செய்வதில்லை.

பேரரசுகளின் வரலாற்றுப் போக்குளை உட் அவர்கள் ஆராய்வதன் அடிப்படைநோக்கம் என்ன? இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்மைகளை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிப்படையில் ஒரு பொருளாதார சாம்ராஜ்யம்.அது நாடுகளை ஆக்கிரமிப்பதைவிட முக்கியமாக நாடுகளின் பொருளாதாரத்தை ஆக்கிரமிக்கிறது.இந்தப் பொருளாதார ஆக்கிரமிப்பு நிகழ்த்த சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புக்கள் நிறுவன ரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றன. 

இந்த உலகளாவிய மூலதன சாம்ராஜ்யத்தின் இராணுவப் பொருளாதார ஆதிக்க வல்லமையை விளக்க முனைகின்றபோது சிலர் ஒரு முடிவுக்குச் சென்று விடுகின்றனர். இந்த மூலதன சாம்ராஜ்யத்தின் வல்லமை, நாடுகளின் சுயாதிபத்தியத்தைப் பறித்து விடுகிறது என்றும், தேசிய அரசு என்ற ஒன்றே இல்லாமல்போகிற நிலை உருவாகிவிட்டதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
இதனை மறுத்து வாதிடுகிறார் உட். உண்மையில் இன்றைய உலகம் கடந்த சகாப்தங்களைவிட தேசிய அரசுகள் இயங்கும் உலகமாக மாறி இருக்கிறது என்கிறார் உட்.

‘இறையாண்மைகொண்ட பல உள்ளூர் அரசுகள்,சேர்ந்து நிர்வகிப்பதாக உலகப் பொருளாதாரம் இன்று இயங்குகிறது.இதுவே உலகமயம் என்பதன் சாராம்சம்..:’ என்கிறார் வுட்.

ஆனால் இந்த அரசுகள் சமநிலையில் நின்று உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.ஒருபுறம் ஆதிக்கத்தையும், மறுபுறம் அடிபணிவதையும் அடிப்படையாகக் கொண்டு சிக்கலான உறவுகள் கொண்டதாக உலகப் பொருளாதார இயக்கம் உள்ளது.

இந்தவகையான உலகமயம்தான் மூலதன சாம்ராஜ்யமாக உலகை உருமாற்றி வருகிறது.உண்மையில் இது புது வகையிலான ஏகாதிபத்தியம்.இது உலகஅளவில் மனித வாழ்க்கை மீதும், இயற்கையின்மீதும் தனது சுரண்டல் அதிகாரத்தைச் செலுத்துகிறது.

அதன் இயக்கத்தின் தாரக மந்திரங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.:
1) இடையறாத மூலதனக் குவியல்,

2) சுகாதாரம், பண்பாடு உள்ளிட்டு எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் சந்தைக்கான சரக்காக மாற்றுவது,

3) இலாபத்தைப் பன்மடங்காக்குவது

4) உலக வர்த்தகம் உள்ளிட்ட அனைத்திலும் கடும் போட்டி

இவ்வாறு இயங்கிடும் இன்றைய ஏகாதிபத்தியம் கடந்த பேரரசுகள் போன்று நாடுகளை அடிமைப்படுத்தி அரசியல் ஆதிக்கம் செலுத்தாமல் பொருளாதார மேலாதிக்கத்தைச் செலுத்துகிறது.இந்தப் பொருளாதார மேலாதிக்கத்திற்குத் தடை ஏற்படும்போது, இராணுவ வலிமையைப் பிரயோகிக்க அது தயங்குவதில்லை. இதற்கு இலத்தின் அமெரிக்க வரலாறும், இராக், ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்களும், என ஏராளமான சான்றுகள் உண்டு.

நூலின் ஏழு அத்தியாயங்களும் இன்றைய உலகின் நிலைமைகள் குறித்த ஒரு பருந்துப் பார்வையாக அமைந்துள்ளன. ஏகாதிபத்தியக் கட்டத்திற்கு வந்துள்ள இன்றைய முதலாளித்துவத்தை வரலாற்று நோக்குடன் ஆராய்ந்துள்ளார் உட். உலக மக்களைப் பற்றியோ, இந்த பூமிப் பந்தின் எதிர்கால இருப்பைப் பற்றியோ கவலைப்படாமல் மூலதனக் குவியலையும், இலாப வேட்டையையும் கண்மூடித்தனமாக நிகழ்த்திடும் இன்றைய முதலாளித்துவம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டது.இந்த குரூரமான முதலாளித்துவத்திலிருந்து உலகைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியத்தையும். அவசரத்தையும் இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது,

எல்லென் மெய்க்சின்ஸ் உட் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் மட்டுமல்ல. இன்றைய முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்குத்தான் இந்த நுண்ணிய ஆய்வினை அவர் மேற்கொண்டார். செயல் அவருக்கு முக்கியம். இன்றைய உலகப் பொருளாதாரம் பல அரசுகளால் தேசிய மட்டத்தில் இயங்குகிறது என்று கூறும்போது, இதற்கான எதிர்வினை என்பது உலகளாவிய உலகமய எதிர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல; உள்நாட்டில் தேசிய அரசுகளை எதிர்த்த போராட்டமும் முக்கியமானது என்பதை அவர் நமக்கு உணர்த்துகிறார். இந்த உள்ளூர் போராட்டங்களோடு உலகளாவிய போராட்டங்களும் இணைந்து வலுப்படுகிறபோது, மூலதன சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டு சோசலிசம்நோக்கிய பாதை புலப்படும்.

மூலதனம்பற்றிய சரியான புரிதல்தான், புரட்சிக்கான அடிப்படை. அந்தப் புரிதல் இருந்தால்தான், புரட்சியின் இலட்சியம் தெளிவானதாக இருக்கும். அந்தத் தெளிவு, புரட்சி இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்றிடும்.

உட் அவர்களின் அரை நூற்றாண்டுப் பங்களிப்பு, புரட்சிகர சக்திகளுக்கு உதவிடும்.

Related posts

Leave a Comment