You are here

குழந்தைகளும் புத்தகங்களும்

The_Fantastic_Flying_Books_of_Mr._Morris_Lessmore_posterச.தமிழ்ச்செல்வன்
மறு நிமிஷத்தில்,குழந்தைகள் எல்லாருமாகச் சேர்ந்து ஒருமிக்க,’என்ன புத்தகம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’என்று கேட்டார்கள்.

‘ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை !’
‘பொய்,பொய்.சும்மா சொல்கிறீர்கள்’
‘நிஜமாக,ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை’ ‘நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!’
‘நேற்று சொன்னேன்…’
‘அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?’
புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை.வந்திருந்தால்தான் கொண்டு வந்திருப்பேனே’

‘பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்;கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து வைத்திருப்பார்.வாருங்கள், தேடிப்பார்க்கலாம்’என்றாள் சித்ரா.

அவ்வளவுதான்.என்னுடைய அறை முழுவதும் திமிலோகப்பட்டது.ஒரே களேபரம்……
பிருந்தாவும் சுந்தரராஜனும் பீரோவைத்திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி கீழே போட்டார்கள். சின்னஞ்சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப்புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.

‘இரண்டு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்’என்று அம்மாவுக்குப் பதில் குரல் கொடுத்துவிட்டு இந்தப்பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப்பதினாறு கனமான புத்தகங்கள் ‘தட தட’வென்று அருவி மாதிரிக் கீழே விழுந்தன.ஒரு பழைய தமிழ் அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப்போய் விழுந்தது.குப்புற விழுந்த சில புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் விழுந்து அமுக்கவே,கீழே அகப்பட்ட புத்தகங்கள் வளைந்து,ஒடிந்து,உருக்குலைந்து விட்டன.

புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே விழுந்து விட்டதைக் கண்டு எல்லாக்குழந்தைகளும் பயந்து விட்டார்கள். கீழே கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப்பார்த்தார்கள்.கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும். குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்து விட்டது. நான் என்ன சொல்லப்போகிறேனோ என்று எதிர்பார்த்துக்கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே பார்த்தார்கள்.நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன்.புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன்.மௌனம் நீடித்தது.ஒரு நிமிஷம்,இரண்டு நிமிஷம்.மூன்று நிமிஷம்… குழந்தைகளுக்கு என் மௌனம் சித்ரவதையாக இருந்தது.ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப் பேச்சிழந்து விட்டது.சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது.என்னை ஒட்டி உட்கார்ந்திருந்த சாரங்கன் நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்….

எழுந்து நின்றேன்.என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ ஜாக்கிரதையுடன் கவனித்துக்கொண்டிருந்தன.புத்தகங்களின் நடுவில் பெரிய புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு திரும்பினேன்.கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு ‘தோற்றுப்போய்விட்டீர்களா? நீங்கள் தேடுதேடு என்று தேடினீர்களே?புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா? வாருங்கள்! வாருங்கள்!’ என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர் வந்துவிட்டது.

சுந்தரராஜன் என் கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு ‘விறு விறு’ என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான்.கடைசிப்புத்தகத்தின் பெயரை வாசித்ததும் ‘பளிச்சென்று எழுந்து ‘இத்தனையும் எனக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே கிளம்பி விட்டான்.
‘சுந்தர்! இதோ பார். இந்தப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஓடினால் அப்புறம் உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்’ என்றேன்.அவன் ‘கட கட’வென்று சிரித்துக்கொண்டே ‘பாவம் மாமா பயந்து விட்டார்!’என்று கூறிக்கொண்டு உள்ளே வந்தான்.

மேலே தரப்பட்டுள்ள(ஆங்காங்கே சுருக்கப்பட்ட) பகுதி, மறைந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் மகத்தான காவியமான ‘அன்பளிப்பு’ சிறுகதையில் வரும் ஒரு காட்சியாகும். இக்கதை குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான திறப்பாக என்றென்றும் கொண்டாடப்பட்டுவரும் கதையாகும். ஆனால் நான் சமீப காலமாக புத்தக வாசிப்பு,வாசிப்புப் பண்பாடு, வாசிப்பு இயக்கம் என்று பேசிக்கொண்டு திரிய நேர்ந்த பிறகு இக்கதை வேறொரு கோணத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது.

புத்தகங்களைக் கொண்டாடும் ஒரு காட்சியாக இப்பகுதியை நாம் வாசிக்கலாம். இக்காட்சியை மட்டும் நுட்பமான கலைஞர்கள் யாரேனும் ஒரு சிறிய குறும்படமாக எடுத்து எல்லாப் புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிகளிலும் திரையிட்டால் மிகுந்த எழுச்சியூட்டும் என்கிற ஆவல் மிகுகின்றது.The fantastic flying books of Morris Le Moris என்கிற ஒரு படத்தையே எத்தனை முறை திரையிட்டு உரை நிகழ்த்துவது?

குழந்தைகளுக்கும் புத்தகங்களுக்கும் இடையிலான உறவை வளர்க்க இதுபோன்ற படக்காட்சிகள் பெருந்துணை செய்யும் என நம்புகிறேன்.புத்தகங்களோடு கட்டிப்புரளட்டும் நம் குழந்தைகள்.புத்தகம் என்றால் அதைக் கையில் எடுத்து பதமாகப் பிரித்து வாசிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ‘பெரியவர்கள்’ உலகத்தின் எதிர்பார்ப்பாகும்.புத்தகங்களின் வழவழப்பைத் தடவி மகிழ்வது,புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையை நுகர்ந்து அனுபவிப்பது, உள்ளே பக்கங்களைத் திறந்து கையால் நீவி விட்டுப் பரிவாகப் பார்ப்பது, வாசித்து முடித்த புத்தகத்தை நன்றியுணர்வுடன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருப்பது,புத்தகத்துக்கு அட்டை போட்டு அதன் மீது படம் வரைந்து அழகு சேர்ப்பது என வாசிப்புத் தாண்டி புத்தகத்தோடு நாம் கைக்கொள்ளத்தக்க நேசமிகு செயல்பாடுகள் அநேகமுண்டு,இவையெல்லாம் சேர்ந்துதான் புத்தகங்களின் மீது காதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் புத்தகத்தையும் ஒரு விளையாட்டுப்பொருளாக மாற்றிவிடுவதை நாம் பார்க்கலாம். என் தம்பி மகள் கீர்த்திகா ஒருமுறை புத்தகத்தை ஒரு பானையாகக் கற்பனை செய்து அதை அடுப்பில் ஏற்றிச் சமையல் செய்துகொண்டிருந்தாள்.மூன்று கல் மீது புத்தகத்தை வைத்து குனிந்து ஃப்பூ..ஃபூ.. என்று புகையை ஊதி நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தாள்.சமையல் முடிந்து அப்புத்தகத்தை துணியால் பிடித்து (சுடுமே!) இறக்கி வைத்தாள். நான் அப்போது உள்ளே புகுந்து ‘பாப்பா..பெரியப்பாவுக்கு வயிறு பசிக்கு..சாப்பாடு போடு’ என்று சப்பணம் கூட்டி உட்கார்ந்தேன். சிரித்துக்கொண்டு அவள் பக்கத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து என் முன்னால் வைத்தாள்.இதுதான் சாப்பாட்டுத் தட்டா என்று கேட்டேன். தலையில் அடித்துக்கொண்டு ‘இது இலை.. அதுகூடத் தெரியலியே’ என்று சொல்லிவிட்டு இலையில் தன்ணீர் தெளித்தாள். பிறகு சமைத்த பாத்திரமான புத்தகத்தைப் பக்கத்தில் கொண்டு வந்து அட்டையைத் திறந்து சாதத்தை எடுத்துப் போட்டாள்.சாம்பார் விடுங்க..என்று நான் கேட்க, அவள் இன்னொரு பக்கத்தைத் திறந்து கரண்டியை உள்ளே விட்டு சாம்பார் ஊற்றினாள்.இன்னொரு பக்கத்திலிருந்து ரசம்,இன்னொரு பக்கத்திலிருந்து காய்கறி என்று கலக்கி விட்டாள்.

அடுத்த கட்டமாகக் குழந்தைகள் சற்றுப் பெரியவர்களாகும்போது நாம் சொல்வதைக் கேட்பதை விட நாம் செய்வதையே அவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள். நடுவீட்டில் நாயகமாகத் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்துவிட்டு புத்தகங்களை பரண்மீது வைத்தால், குழந்தைகள் நம்மிடமிருந்து எதைக் கற்றுக் கொள்வார்கள்? நம்முடைய பொருளாதார நிலை நம் ஒவ்வொருவரையும் வீட்டில் நூலகம் வைக்க அனுமதிக்கவில்லை என்பது நம் பிரச்னை.ஆனால் புத்தகங்களை எப்படி மதிக்கிறோம் என்பதை நம் செயல்பாடுகளின் மூலம் அவர்களுக்கு உணர்த்துகிறோம்.

நாம் எவ்விதம் புத்தகங்களைக் கையாளுகிறோம் என்பதைக் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இந்தத் தன்னுணர்வு நமக்கு இருப்பதில்லை. பெரியவர்களின் கால் செருப்பை அணிய விரும்பும் குழந்தைகளின் உளவியல், பெரியவர்களின் உலகத்துக்குள் தம் கால்களை நுழைக்க விரும்பும் விருப்பத்தின் வெளிப்பாடாகும்.

சமயபுரம் எஸ்.ஆர்.வி.பள்ளியிலும் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஊழியர் சங்கப்பள்ளியிலும் குழந்தைகளோடு பழகியதில் கிடைக்கும் அனுபவம் புத்தகங்களை அவர்கள் எவ்விதம் பார்க்கிறார்கள் என்பதை அறிய உதவுகிறது. துவக்கத்தில் நாம் தேர்வு செய்து தரும் புத்தகங்களை அவர்கள் வாசித்தாலும், மொத்த நூலகத்தையுமே அவர்களின் ஆளுகைக்குள் திறந்து விட்டால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.புத்தகத்தின் விலை என்று நாம் போட்டிருப்பது சில குழந்தைகள் வாங்க முடியாமல் திரும்பிப் போக வைக்கிறது.பள்ளிகளில் அபூர்வமாக நடக்கும் சில புத்தகக்கண்காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைக் குறி வைத்து வாங்கத் துடிக்கும் குழந்தைகள் காசில்லாததால் அல்லது காசு பற்றாக்குறை காரணமாக வந்து வந்து அப்புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுப் போவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.விலை என்று போடும் இடத்தில் குழந்தைகளுக்கு இது பொருந்தாது என்று அடைப்புக்குறிக்குள் போடும் சமூகமாக நாம் எப்போது மாறப்போகிறோம் என்கிற ஏக்கம் மிகுகின்றது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் தயாரிப்பு என்பதிலும் பேசவும் விவாதிக்கவும் நிறைய இருக்கிறது,வயதுவாரியாக புத்தகத்தேவை மாறுபடுகிறது என்கிற புரிதல் பொதுவாக நம் பதிப்பாளர்களுக்கும் குழந்தைகள் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. ஆனால் நகர்ப்புறக்குழந்தைகள் -கிராமப்புறக் குழந்தைகளின் தேவை வேறுபாடுகள் குறித்துப் போதிய கவனம் நமக்கு இல்லை.அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்ஸி பள்ளி மாணவர்கள் என நுட்பமான வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கின்றன.ஒவ்வொரு பிரிவுக்குமான தனித் தயாரிப்புகள் தேவை.நம் விவாதங்களை இப்புள்ளிகளை நோக்கி நகர்த்துவது அவசியம்.
(தொடரும்)

Related posts

Leave a Comment