You are here

“வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.!”

சோ. மோகனா                 -ஜி. ராமகிருஷ்ணன்

“நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும் கிடையாது பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’”.. பெரியார்

………..
நினைவுகள் தறிகெட்டு சுமார் 52 ஆண்டுகள் பின்னோக்கி ஓடுகின்றன. அப்போது 1964 ம் ஆண்டின், கோடை முடியும் தருணம். ஜூன் மாதம்..அன்றைக்கு எதிர்வீட்டு ஆசாரி மாமாவின் தங்கைக்கு திருமணம்,.விடியற்காலை 4 மணிக்கே மைக் செட்டில் எம்ஜி ஆர். பாட்டு ஊரே கலகலக்க,என் கடமை படத்திலிருந்து..” ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க..என்று ஏனிந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க..” என்று தூள் கட்டுகிறது. இன்றைக்குத்தான் முதன் முதலாக கல்லூரிக்கு பெட்டி படுக்கையுடன் புறப்பட வேண்டும்.மனசு முழுக்க புதுசா போகப்போற கல்லூரியைப் பற்றியே கற்பனை. ராத்திரி பூரா உறக்கம் கொள்ளவில்லை. முதல் முறையாக வீட்டை விட்டு ஹாஸ்டலில் போய் இருக்கப் போகிறோம் , எப்படி இருக்கும், கூட இருக்கப்போற பொண்ணுங்க எப்படி பழகப் போறாங்க என்ற தவிப்பும் கூடவே நாம புத்தகத்தில் படித்த ஹாஸ்டல் போல இருக்குமோ….என்ற எண்ணங்களின் குவியலில் .. விடியலிலேயே எழுந்தாயிற்று.

கோடைகாலமானதால், வீட்டிற்குப் பின்புறம் உள்ள குளத்தில் தண்ணீர் வற்றி வறண்டு விட்டது. வீட்டில் தென்னை மரங்களுக்கிடையே உள்ள கிணற்றில் தான் குளிக்க வேண்டும். அருகிலேயே மாட்டுக்கொட்டகை.. எம்ஜி ஆர் பாட்டை ரசித்தபடியே குளித்தேன். குளியலறை என்பது எல்லாம் கிராமத்தில் கிடையாது. குளிப்பது ரோட்டுக்குத் தெரியாமல் இருக்க, நாலு கீற்றை இணைத்து தட்டி கட்டி இருப்பார்கள் . கிணற்றில் நாலு வாளி தண்ணீர் மொண்டு ஊற்றி, குளித்துவிட்டு, படபடவென்று மாட்டுக்கொட்டகை வழியே ஓடி வந்து தாவணி போட்டு உடை மாற்றிக் கொண்டு கல்லூரிக்குப் போகத் தயாரானேன். ஹாஸ்டலுக்கு கொண்டு போகவேண்டிய 4 உடைகள், சோப்பு, சீப்பு,கண்ணாடி,இத்யாதி;, எல்லாம், ராத்திரியே ஒரு கிளிப் பச்சை வண்ண டிரங்க் பெட்டியில் வைத்தாயிற்று. காலையில் 5 மணிக்கு எங்க வீட்டு வழியாகவே, குத்தாலம் போற வண்டி வரும், அதில் ஏறி, குத்தாலத்தில் இறங்கி மீண்டும் கும்பகோணம் பேருந்தில் ஏறிச் செல்லவேண்டும்.கும்பகோணம் ஊர் எங்க வீட்டிலிருந்து 25 கி.மீ. தூரம்தான்.

கல்லூரிக்குப் போக ரெடியாயிற்று ..அழைத்துப் போக சித்தப்பாவும் ரெடி. அம்மா காபி போட்டுக் கொடுத்ததும், ஆத்தா(அப்பாவோட அம்மா ) சாமியை நல்லா கும்பிட்டுட்டு புறப்படுடி.. எல்லாம் நல்லபடியா நடக்கணும் , எல்லார் கிட்டயும், நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கனும்னு வேண்டிக்கோடி ..என்றார். நானும் நல்ல பிள்ளையாய் சாமி முன்னாடி நின்று கும்பிட்டதும், ஆத்தா விபூதி பூசிவிட்டார்கள். அப்பா கையில் ரூ 25/= கொடுத்து, பத்திரமா வைச்சுக்கோ. யார்கிட்டயும் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது. “எண்ணித் துணிக கருமம் துணிந்த பின், எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற குறளை மனசில் வைச்சு செயல்படு.என்று அறிவுரை தந்தார்கள் . அப்பா அன்று சொல்லிய திருக்குறள் இன்றுவரை பல இடங்களில் கூடவே வந்து உறுதுணையாய் நிற்கிறது.

குத்தாலம் பஸ் வந்தாச்சு. அதில் என்னோட கும்பகோணம் கல்லூரியில் படிக்கப்போற நயினார் பெண் அறிவுக்கொடியும் வந்தது. நாங்க ரெண்டுபேரும் நண்பர்களானோம். கும்பகோணம் போனா,முதல்லே போயி, மகாமகக் குளக்கரையில் மேற்குப் பக்கம் உள்ள விடுதியில் என்னோட பொருட்களை எல்லாம் விடுதியில் வைத்துவிட்டு, காலை உணவருந்தி, பின்னர் வடக்குக் கரையில் உள்ள கல்லூரிக்கு வரவேண்டும். வந்தால் பிரின்சிபால் ராதா மேடம் நம்மை வகுப்புக்கு பிரித்து அனுப்ப அழைக்கிறார்கள். பிரின்சிபால் மேடம், அப்படியே சிவந்த பரங்கிப்பழம் போல கட்டை குட்டையாய் பழுத்த பழமாய் இருப்பார்.அழகாகவும் கூட இருப்பார்கள். அமைதியும் கூட . ஆனால் அவருக்கு உதவியாக வைஸ் பிரின்சிபால் சாவித்திரி மேடம்தான் ஆல் இன் ஆல் . படு சுறுசுறுப்பு. அவரிடம் போய் கேட்டுக்கொண்டு வகுப்புக்குப் போயாயிற்று.

பெரிய அரசு பெண்கள் கல்லூரி. நிறைய பெண்கள்.பெரிய கல்லூரியை அப்போதுதான் பார்க்கிறேன். கல்லூரி வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. எனவே தனிக்கட்டிடம் இன்றி, ஒரு கல்யாண மண்டபத்தில் கல்லூரி.. பேராசிரியர்கள எல்லாம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மெட்ராஸ் வாசிகள். எனக்கு எதைப் பார்த்தாலும் ஒரே வியப்பு. வியப்புதான். புதிய புதிய, பெரிய பெரிய பெண்கள். நாம என்னிக்கு இப்படி ஆங்கிலம் பேசப்போகிறோம். இவங்க பேசறதே புரியல. ம்..பார்ப்போம். இது என்ன கம்ப சூத்திரமா? பழகினா படிச்சா இங்கிலிஷ் தானா வந்துட்டுப் போவுது கழுத..என்றும் ஓர் அசாத்தியத் துணிச்சல்தான் எனக்கு. Physics மிஸ், உமா, சிவப்பா ஒசரமா, ஒல்லியா ,அழகா இருப்பாங்க. ஆனா வகுப்பில் பாடம் சொல்லித்தருவது மட்டும் எதுவும் புரியாது. ஆனா அடிக்கடி Is it clear ? understand ? ன்னு மட்டும் கேப்பாங்க. Economics மிஸ் பானுமதி ரொம்ப அன்பா இருப்பாங்க. அவங்கதான் NCC மிஸ்சும் கூட. அப்பெல்லாம் மேடம்னுதான் கூப்பிடணும். கெமிஸ்ட்ரி மிஸ் சாவித்திரி ரொம்ப கறார் பேர்வழி. Biology மிஸ் வசந்தா, கே ஆர் விஜயா மாதிரி அழகா இருப்பாங்க.எப்பவும் சேலையை இழுத்துப் போத்திக்கிட்டுதான் வகுப்புக்கு வருவாங்க. தமிழ் மிஸ் சொல்லித்தருவது மட்டும் சூப்பரா புரியும்.

நாங்க ஹாஸ்டல்லே எல்லாரும் தமிழ் மீடியம் படிச்சவங்கதான் . அதனாலே..எப்படி இங்கிலீஷ் கத்துக்கன்னு ஒரு முடிவு எடுத்தோம். எல்லோரும் விடுதி அறைக்குள் பேசுவது எல்லாம் இங்கிலீஷ்ல தான் இருக்கணும்.மறந்து தமிழ் பேசிட்டா..5காசு பைன் போட்டோம்.. அறையிஙல கஸ்தூரி, மனோகரி, ஜெயலக்ஷ்மி, அறிவுக்கொடி,அம்சவல்லி என 11 பேர். இதில் அம்சாதான் இங்கிலீஷ் பேசணும்னு அடம்பிடிக்கும்.ஆனால் இது ஒண்ணும் பெரிசா நடைமுறைக்கு வரல. யாருக்காவது முழுசா இங்கிலிஷ் பேசத் தெரிஞ்சாத்தானே. எனக்கு ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப பிடிச்சது. நெறைய பேருக்கு பிடிக்கவே இல்லை. ஹாஸ்டலுக்கு எதிரில் மகாமகக் குளம் இருந்ததால், நான் , ஹாஸ்டல் வார்டன் மிஸ். திலகவதியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, தினமும் விடிகாலை 4 மணிக்கே எழுந்து , குளத்தைச் சுற்றி சுமார் ஒரு மணி நேரம் நடப்பேன், ஓடுவேன்.(இது இன்னமும், இன்றும் தொடருகிறது.) என்னுடன், குளக்கரையில் இருக்கும் இன்னொரு மோகனாவும் நடக்க வருவார்கள். அதிகாலை காற்று மனசுக்கு இதமா இருக்கும். இதெல்லாம் கிராமத்தில் முடியாத ஒன்று. மாலை 6 மணிக்கு, வருகைப்பதிவேடு எடுத்த பின்னர் study time. ஆனால் நான் படித்தவை கதைப் புத்தகங்கள்தான். யவனராணி, உடல் பொருள் ஆனந்தி எல்லாம் அப்போது படித்தவைகள் தான். வார்டன் திலகவதி மேடம் சொல்லும் ஆங்கில நாவல்களைப் படிக்க முயற்சி செய்தது உண்டு. வெற்றி கிட்டியது என்னவோ பட்டப்படிப்பின் போதுதான்.

கும்பகோணம் கல்லூரிக்குப் போனபின்தான் Biology எடுத்தால் தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் என தெரிந்து கொண்டேன். பின்னர் தினமும் பிரின்சிபால் மேடத்திடம் போய்க்கேட்டு நச்சு பண்ணி, ஒரு மாதத்திற்குப் பின், நான் கணித வகுப்பிலிருந்து Biology க்கு மாற்றி வாங்கிக் கொண்டேன். என் இன்றைய நிலைக்கு அதுவே காரணி. இல்லை என்றால் நான் கணக்கு படித்து எங்கோ ஒரு அரசுக் கல்லூரியில் வாழ்க்கையை ஓட்டி Principal ,RD ஆகியிருப்பேன். என் வாழ்க்கை இப்படி பொதுவாழ்க்கையோடு இணையாமல் போயிருக்கும்.

கல்லூரி வாழ்க்கையும், ஹாஸ்டல் வாழ்க்கையும் ரொம்ப ரொம்ப சுகமானதாக, எனது வாழ்க்கையைப் பெரிதும் புரட்டிப் போட்டதாகவே அமைந்து விட்டது.கல்லூரி புதியதாக துவங்கியதாக இருந்ததால், அங்கே அறிவியல் சோதனைக் கூடங்கள் இல்லை. Physics, Chemistry , Biology, NCC parade, என எதுக்கெடுத்தாலும், அருகிலுள்ள தென்னிந்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் என்று பட்டப் பெயர் பெற்ற, காவிரிக் கரையில் அற்புதமாய் அமைந்துள்ள அரசு ஆண்கள் கலைக்கல்லூரிக்குத்தான், நாங்கள் அனைவரும் பேருந்தில் படையெடுப்போம். . ஆஹா, அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஆற்றைக் கடந்து செல்வதாகட்டும்,ஆற்றில் செல்லும் ஓடத்தை ரசிப்பதாகட்டும், வகுப்பு துவங்கு முன், புல்தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதாகட்டும்,,எல்லாம் சொர்க்கம் தான் அங்கே.. எனக்கு அந்தக் கல்லூரியை ரொம்பவே பிடிக்கும்.மேலும் அந்தக் கல்லூரியில்தான் கணித மேதை இராமானுஜமும் படித்தார் தெரியுமா?

அன்றைய நாளின் ஓர் அருமையான காட்சிப் பதிவு. அன்றுதான் நான் முதன்முதல் விலங்கியல் சோதனைக்கூடம் செல்கிறேன். அன்று அறுவை வகுப்பு.(Dissection class). வசந்தா மேடம் எல்லோருக்கும் கரப்பான் பூச்சியின் வெளிப்பகுதி பற்றி சொல்லித் தருகிறார். அதன் பின் அதன் ரெக்கைகள் வெட்டியபின் , அதனை மரச்சட்டத்தில், குண்டூசி கொண்டு குத்தி, அதன் முதுகுப் புறம் மிகச் சரியாக இரண்டாக வெட்டி, அதன உடம்பை, அலாக்காக பிரித்து குண்டூசி குத்தி வைத்து, அதன் உடலின் உட்பகுதியை (Viscera ) காண்பித்து, அது போலவே செய்யச் சொல்லுகிறார்.நிறைய பெண்களுக்கு கரப்பானைத் தொடவே அருவருப்பு. நான் எதற்கும் கவலைப்படாமல், கரப்பானை மேடம் சொன்னபடி, வெட்டி, குண்டூசி குத்தி , மேடத்தைக் கூப்பிட்டுக் காண்பிக்கிறேன்.

மேடத்திற்கு ஒரே சந்தோசம். எல்லோரையும் அழைத்து, மோகனாவின் dissection ஐ எல்லோரும் வந்து பாருங்கள் பாருங்கள் என்கிறார். நானோ மகிழ்ச்சியின் எல்லையில் கொடிகட்டிப் பறந்தேன். பின்னர் கல்லூரி முடிக்கும்வரை மட்டுமல்ல, கல்லூரிப் பேராசியரான பின்னரும், நான் dissection னில் திறமைசாலிதான். ஆசிரியரின் சின்ன உந்துதல் மற்றும் பாராட்டுதான், குழந்தைகளின், படிப்புக்கு ஊற்றுக்கண். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களை சமயம் கிடைக்கும்போது பாராட்ட வேண்டும். அதன் பின் எப்படியாவது மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி,MBBS படிப்பது என்று மற்ற நண்பர்களுடன் இணைந்து கூட்டுப் படிப்பு படித்த காலங்கள் அவை.

பாடம் மட்டுமல்ல, கதைகள், வரலாறு என அனைத்தையும் கூட்டுப் படிப்பாகப் படித்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர், தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராய் இருந்த முனைவர் சாவித்திரியும் ஒருவர். விடுதியில் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்,கும்பகோணத்தின் புகழ்பெற்ற கோவில்களான, கும்பேஸ்வரர், நாகேஸ்வரர்,மற்றும் அருகிலுள்ள கபிஸ்தலம், சுவாமிமலை, திருவிடைமருதூர் கோவில்களுக்கு செல்வார்கள். நான் ஒரு நாள் கூட குடந்தையில் படிக்கும்போது, எந்தக் கோவிலுக்கும் சென்றது இல்லை. அன்று பெரிதாக நாத்திக உணர்வுஇல்லை என்றாலும் கூட அன்றைக்கு , கடவுள் என்ற கருத்திலும் நம்பிக்கை இல்லாததுதான்.

கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றால், வழி எங்கும் பேருந்தில் படித்துக் கொண்டேதான் பயணிப்பது வழக்கம். அந்தப் பழக்கமும் இன்றுவரை தொடர்கதையாகவே தொடருகின்றது. அது மட்டுமா? குத்தாலம் பேருந்து நிலையம் சென்றதும், எங்க ஊர் சோழம்பேட்டைக்குச் செல்லும் பேருந்து வர தாமதமாகும். அப்போது, துப்பறியும் பாக்கெட் நாவல், பேய் நாவல்கள், ஆவி பற்றிய கதைகள் எல்லாம், இரவு 8 மணிக்கு அரக்க பரக்க , பயந்து கொண்டே படித்த காலங்கள் அவை. அவற்றை வீட்டிற்கும் எடுத்துச் சென்று, நடுஇரவில் பயந்துபயந்து படித்ததும் உண்டு. அப்படிப் படித்ததனால்தான் இன்றும் கூட புத்தகங்களை விடாமல் தொடர்ந்து படிக்க இயலுகிறது.

நான் கல்லூரியில், PUC படித்துக் கொண்டிருக்கும்போது,1965, ஜனவரி 26ம் நாள், இந்திமொழியை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்பட இருந்தது. ஜவஹர்லால் நேரு மே மாதம் 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை மட்டுமே ஒரே அரசு மொழியாக ஆக்குவது என முடிவு எடுத்தனர். இவர்கள் இந்தியின் தீவிர ஆதரவாளர்கள்.

1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது.அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் திருமிகு பக்தவசலம் அவர்கள். இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா. காமராசன் என்பவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்திற்குத் தலைவராக சென்னை சட்டக் கல்லூரி மாணவர் ரவிச் சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்.கணேசன், கா.காளிமுத்து, நா.காமராசன், ம.நடராசன் போன்றோர் , இந்த மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். இது ஐந்தாவது மொழிப் போர் ஆகும்.

1965,சனவரி 26ல்,சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் அமைச்சர் பக்தவத்சலத்திடம் மனு கொடுக்க பேரணியாக வந்த போது, லால் பகதூர் சாஸ்தரி அரசின் துணை ராணுவப் படை மாணவர்களைத் தாக்கியது. மாணவர்கள் கூவம் நதியில் குதித்து தப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.மதுரை வடக்கு மாசி வீதியில் நா.காமராசன், கா.காளிமுத்து தலைமையில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.என்.சேஷன், காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து, மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு, துப்பாக்கிச் சூடு, என அனைத்து வெறியாட்டங்களையும் நடத்தி பல மாணவர்களை கொலை செய்து முடித்தது.1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 100 மாணவர்களுக்கும் மேல் லால் பகதூர் சாஸ்திரி தலைமையில் இருந்த இந்திய அரசு மற்றும் பக்தவத்சலம் தலைமையில் இருந்த சென்னை தமிழக அரசால் கொல்லப்பட்டனர்.இந்தப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் தமிழகத்தின் அனைத்துச் சிறைகளையும் நிறைத்து இருந்தனர். 1965,சனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்கு தன் உடலில் தீயை வைத்துக்கொண்டு “தமிழ் வாழ்க, இந்தி ஒழிக” என்று கத்திக்கொண்டே கருகிப்போனார் கீழப்பழுவூர் சின்னசாமி.1965 மொழிப்போராட்டத்தின் முதல் மொழிப்போராளி அவர்தான்.

அப்போது எங்கள் கல்லூரி பெண்கள் கல்லூரி என்பதால் விடுமுறை விடப்பட்டது.நாங்கள் எல்லோரும் விடுதியில் இருந்த படியே.. மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பை , மாணவர்கள் தீக்குளித்ததை ஜன்னல் வழியே பார்த்தோம். எல்லா இந்தி எழுத்துக்களையும் எரித்தனர். கல்லூரிக்கு நிறைய நாட்கள் விடுமுறை விடப்பட்டது. உடனே..தேர்வும் எட்டிப்பார்த்தது. PUCன் ஓராண்டு ஓடியே போனது.தேர்வு முடிந்து சோதனைத் தேர்வுகள் வந்தன.. இயற்பியல் சோதனைத் தேர்வின் முதல் நாள் இன்றைய முதல்வர் ஜெயலலிதா முதல் முதல் நடித்த வெண்ணிற ஆடை படம் பார்த்தோம். மறுநாள் சாந்தி மற்றும் வாழ்க்கைப் படகு பார்த்தோம். தேர்வு காலத்தில் கூட அதனையும் எளிதாக எடுத்துக் கொண்ட மனநிலை தான்.. இன்றைக்கும் வாழ்க்கைச் சக்கரத்தை சகஜமாக உருட்ட உதவி செய்கிறது.

Related posts

Leave a Comment