You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

வில்லனும் நல்லவன்தான்!

வில்லனும் நல்லவன்தான்!
ச.சுப்பாராவ்

ஜெயித்தவர்களின் கதைகள் புகழ்ந்து பாடப்படும் போது கூடவே தோற்றவர்களின் கதை, அவர்கள் தரப்பு நியாயங்கள் சொல்லப்படாமல் நாசூக்காக விடப்பட்டு விடுகின்றன. தோற்றவனே வந்து ஐயா, இது இது இந்த மாதிரி நடந்தது. நான் தோற்றுப் போய்விட்டதால் இது சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்று சொன்னால்தான் உண்டு. அப்படியான ஓர் அற்புதமான நாவலைப் படிக்க நேர்ந்தது. யான் பெற்ற இன்பம் உங்களுக்கும் இங்கே.

வி.ரகுநாதன் எழுதிய துர்யோதனா என்ற ஆங்கில நாவல், பாரதக் கதையின் வில்லனும் நல்லவனே என்று நம்மை நினைக்க வைக்கும்படியாக மிக அற்புதமாக எழுதப்பட்ட நாவல். ஆரம்பமே மிகவும் கலக்கலாக இருக்கிறது. துரியோதனன் அடிபட்டு உயிர் பிரியும் நிலையில் வாசகரோடு பேசுவதாக எழுதப்பட்ட இந்த நாவலில், துரியோதனன் வியாசர் கூறியதை அப்படியே நம்பிவிட்டீர்களே என்று நம்மைத் தாக்கிவிட்டு, அடுத்ததாக ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள், பிள்ளையார் பால் குடித்ததை நம்பும் அப்பாவிகள் தானே நீங்கள், என்கிறான். அதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் பற்றிய துரியோதனனின் பக்கத்து நியாயம், ஒருவகையில் பாரதப்பிரதியைப் படித்த நம் போன்றவர்கள் பார்க்கத் தவறிய நியாயம் வரிசையாகச் சொல்லப்படுகிறது. நாவலாசிரியரின் நக்கலும், நையாண்டியுமான பிரமாதமான நடையில் துரியோதனன் இயல்பான குணநலன்கள் கொண்ட, தனக்கு உரிமையானது என்று தான் நியாயமாகக் கருதும் ஒரு ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற, காப்பாற்றிக் கொள்ள முயலும் யதார்த்தமான அரசனாக நம்முன் நிற்கிறான்.

ரகுநாதன் தனது நாவலில் வியாசரை அல்லது இது போன்ற புராணக்கதைகளைப் புனைந்தோரை எக்கச்சக்கமாக கேலி செய்கிறார். வியாசர் போன்றோர் புராண வில்லன்களைச் சித்தரிக்கும் விதம் பற்றிய துரியோதனனின் கிண்டல் பிரமாதம். எல்லாவற்றையும் ஓரளவு நியாயமாக எழுதும் இந்த புராண ஆசிரியர்கள் வில்லன்கள் விஷயத்தில் கோட்டை விடுவதைப் பற்றிச் சொல்லும் துரியோதனன் கம்சனைப் பற்றி நான் நன்கு அறிவேன். தங்கையின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் என்று அறிந்தபின், தங்கையையும், மாப்பிள்ளையையும் ஒரே அறையில் சிறை வைக்குமளவு அவன் முட்டாளல்ல. எப்படியோ கிருஷணன் அவனைக் கொன்றுவிட்டான். இப்போது அவன் சொல்வதுதான் வரலாறு என்றாகிவிட்டது என்கிறான். அதே போல பாரதக் கதை வெண்மைக்கும் கருமைக்குமான போராட்டமல்ல. மனிதர்கள் எல்லோருமே வெண்மையும் கருப்பும் சரிசமமாகக் கலந்த பழுப்புதான். எங்கள் கதை பழுப்புக்கும் பழுப்புக்குமான போராட்டம்தான். அதில் ஜெயித்த பழுப்பு வெண்மையாகப் பளிச்சிட, தோற்ற பழுப்புகள் கருத்துப் போனோம் என்கிறான்.

துரோணருக்கு கௌரவர்களைப் பிடிக்காமல் போனதற்கான ஆரம்பக் காரணத்தை நாவல் மிக அற்புதமாகக் கூறுகிறது. பிரச்னை நம் எல்லாருக்கும் தெரிந்த, கிளியைக் குறிபார்த்து அம்பு விடும் போது மற்றவர்கள் கண்களுக்கு கிளியைச் சுற்றி உள்ள அனைத்தும் தெரிய, அர்ச்சுனன் கண்களுக்கு கிளியின் கண்கள் மட்டும் தெரியுமே! அந்தக் கதையில்தான் ஆரம்பிக்கிறது. துரோணர் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தும் அர்ச்சுனனின் கவனக்குவிப்பைப் பாராட்டுகிறார். துரியோதனன் குருகுலத்தின் நோக்கம் வருங்கால அரசர்களை சகலவித்தைகளிலும் வல்லவர்களாக்குவதுதான், ஒரு குறிப்பிட்ட வித்தையில் மட்டும் நிபுணனாக்குவது அல்ல, என்கிறான். அரசனின் கவனம் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு துறை பற்றியும் அவன் ஓரளவு அறிந்திருந்தால் போதும். தனக்கு வேண்டிய நிபுணர்களை அவன் எப்போது வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாமே! என்கிறான். மேலும். போர்க்களத்தில் சுற்றி நடப்பதைக் கவனிக்காமல் எதிரியின் மார்பையோ. தலையையோ மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் போது. பக்கவாட்டிலிருந்து ஒருவன் ஒரு ஈட்டியை எறிந்து விட்டால் அர்ச்சுனன் கதி என்ன என்கிறான். துரோணருக்கு அன்று அவன் மேல் ஏற்பட்ட கோபம் கடைசி வரை தீரவேயில்லை!

குரு வம்சம், குரு வம்சம் என்று ஏகத்திற்கும் அனைவரும் பில்டப் தரும் ஒரு விஷயத்தை துரியோதனன் மிக எளிமையாகக் கேவலப்படுத்தி, ஒதுக்கித் தள்ளுகிறான். உண்மையில் குரு வம்சம் என்ற கலப்பற்ற சுத்த வம்சம் என்ற ஒன்றே கிடையாது என்பது அவன் வாதம். வாரிசு இல்லாமல் வம்சம் அழிந்து போகக்கூடிய நிலையில் சத்யவதி, அழைத்து வரும் வியாசன், சத்யவதிக்கு கள்ளத் தொடர்பில் பிறந்தவன் எனும்போது ஏன் இந்த குருவம்சம் என்ற தேவையற்ற ஆர்ப்பாட்டம் என்ற அவனது கேள்வி நியாயமானது என்றாலும், குடும்பத்தின் பெரியவர்களின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது என்பதால் அவன் கெட்டவனாகிப் போய்விடுகிறான்.

அஸ்தினாபுரத்தின் அரியணை தனக்குத்தான் சொந்தம் என்பதற்கு அவன் இன்றைய சொத்துரிமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் சமர்ப்பிக்கப்படுவது போன்ற வாதங்களை அடுக்கும் அழகை வாசகர்கள் இந்த நாவலை வாசித்துத் தான் அறிந்து கொள்ள வேண்டும். அதே போல பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்தது குறித்த துரியோதனனின் வாதங்கள் இதுவரை எந்த மறுவாசிப்பு இலக்கியமும் முன்வைக்காதவை. கிருஷ்ணன் தனது எதிரிகளை வீழ்த்த பாண்டவர்களைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ராஜசூய யாகத்தைக் கிளப்பிவிட்டான் என்பதை எல்லாம் அறிந்த தருமன் ஏன் உணரவில்லை? பெரியவர்களிடம் மிகுந்த மரியாதை காட்டும் மரியாதை ராமனான தருமன் ராஜசூய யாகம் நடத்துவது குறித்து தன் பெரியப்பா திருதராஷ்ட்ரன், சித்தப்பா விதுரன், தாத்தா பீஷ்மர் ஆகியோரை ஏன் கலந்தாலோசிக்கவில்லை? என்ற அவனது கேள்விக்கு அந்த தருமனாலேயே விடை தரமுடியாது! துரியோதனனின் மற்றொரு கேள்வியும் மிக முக்கியமானது. பாரதியின் பாஞ்சாலி தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா? என்று கேட்டது ஒருவிதம் என்றால், ரகுநாதனின் துரியோதனன் மூலமான கேள்வி மிக நுட்பமானது. தன்னை இழக்கும்முன் மனைவியை இழந்தால்கூட அது நியாயமில்லை. ஏனெனில், திரௌபதி மேல் அவனுக்கு இருபது சத உரிமைதான். மற்ற எண்பது சத உரிமையுள்ள தம்பிகளின் அனுமதியின் பேரில்தான் அவன் ஆடியிருக்க வேண்டும் என்ற அந்தப் புதுமையான வாதம் இந்த நாவலின் உச்சகட்ட சிறப்பம்சம்.

சூதாட்டத்தின் நுணுக்கங்கள். பகடையில் ஒவ்வொரு எண்ணும் விழுவதற்கான நிகழ்தகவு வாய்ப்புகள். அதை சூதாடிகள் திட்டமிட்டுப் பயன்படுத்தும் முறைகள். சூதாடிகளின் உளவியல். தோற்கும் சூதாடியின் மனநிலைக்கும், ஜெயித்து வரும் சூதாடியின் மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் என சூதாடிகள் பற்றி நாமறியாத உலகம் பற்றியும் இந்த நாவல் மிக விரிவாகப் பேசுகிறது. பாரதக் கதை முழுவதும் சத்யசந்தர்களாக, நெறி வழுவாதவர்களாகக் காட்டப்படும் பாண்டவர்களுக்கு, பாஞ்சாலி என்ற பொது மனைவி தவிரவும் தனித்தனியே வேறு பல மனைவிகள் இருந்த நிலையில், ராமனைப் போல் ஏகபத்தினி விரதனாக துரியோதனன் வாழ்ந்ததை நாம் மறந்துவிடும் விதமாக திரௌபதி வஸ்திராபரணம் நடந்து விட்டதைப் பற்றி துரியோதனன் புலம்பும்போது நமக்கே பாவமாக இருக்கிறது.

மிக அருமையான இந்த நாவலின் பெரிய பலவீனம், மிக நிதானமான போக்கில் போய்க் கொண்டிருக்கும் கதை, பாண்டவர்கள் வனவாசம் செல்வதிலிருந்து திடீர் வேகம் பிடித்து. போர், துரியோதனனின் தோல்வி என்று பொசுக்கென்று முடிந்துவிடுவதுதான். நாவலாசிரியர் ரகுநாதன் அஹமதாபாத் ஐஐஎம்மில் பேராசிரியராக இருந்தவர். பன்னாட்டு வங்கிகளில் உயர் பதவிகளில் இருந்தவர். நிர்வாக இயல் பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதியவர். ஆனாலும்கூட, இது போன்ற அறிவுஜீவிகள் பலரைப் போல பழைய புராணங்களை உயர்த்திப் பிடிக்காதவர். பார்க்கப் போனால் உயர்கல்வி கற்று, நவீனத் தொழில்துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்களின் மோசமான மூடநம்பிக்கைகள் பற்றி, விஞ்ஞான விரோத நம்பிக்கைகள் பற்றி கணேசா ஆன் தி டாஷ்போர்ட் என்று ஒரு புத்தகமே எழுதியிருப்பவர். மறுவாசிப்புப் படைப்புகளின் நோக்கம் புனிதங்கள் குறித்த மனப்பிம்பங்களைத் தகர்ப்பது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஒருவர் எழுதியிருப்பதால், இந்த நாவலில் அந்த நோக்கம் மிகச் சரியாக நிறைவேறியுள்ளது.

Related posts

Leave a Comment