You are here
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது 50க்கு ஐம்பது

1. எழுச்சி தீபங்கள்
(இந்திய ஆற்றலின் ஊற்றுக் கண்)
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (கண்ணதாசன்)
அப்துல் கலாமின் குறிப்பிடத் தகுந்த புத்தகங்களில் ஒன்று. நாட்டின் ஜனாதிபதியாய் லட்சக் கணக்கான குழந்தைகளை சந்தித்த கலாம் அதன் பதிவாக இந்த நூலை முன் வைக்கிறார். நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளார் மு.சிவலிங்கம்.

11491

2.விந்தைமிகு பேரண்டம்

டாக்டர் ப.ஐயம் பெருமாள் – கிரேஸ் பப்ளிகேஷன்ஸ், குடந்தை
இந்த அற்புதமான அறிவியல் நூலில் பதினைந்தாவது அத்தியாயமாக-இந்திய ஜோதிடவியல் எனும் கட்டுரை உள்ளது. ஜோதிடம் பொய் அறிவியல். ஒரு மனிதனின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது நட்சத்திரக் கூட்டமல்ல…. அவனது அறிவு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிதான் என எழுதும் இடத்தில் தோழர் ஐயம் பெருமாள் வெற்றி அடைகிறார்.

3. இனி இவர்களே

வே. சண்முகசுந்தரம் – இளைஞர் முழக்கம்
கேஃபார் கில்… ஆர்ஃபார் ரேப் எனத் தொடங்கும் இந்த அதிர்ச்சிப் புத்தகம்… மத்திய அரசின் அடிப்பொடிகள் அறிவியலுக்கு எதிராக நிகழ்த்தும் அராஜகங்களை பட்டியல் இட்டு பதற வைக்கிறது. அறிவியல் எழுச்சிக்கு காவிஅடித்து ரத்த ஆறுகள் ஓட வைக்கும் ஒரு அநீதிக்கு எதிரானபோர் ஆயுதம் இந்தப்புத்தகம்.

4.செய்துபாருங்கள் விஞ்ஞானி ஆகலாம்
வைத்தண்ணா – என்.சி.பி.ஹெச்.
அறிவியல் சோதனைகளை குழந்தைகளே செய்து பார்க்கத்தூண்டும் புத்தகம். நீர்ம இயக்கவியல், வெப்பம் ஒளிர, ஒலி, மின்சாரம், இரசாயனம், தாவரஇயல் என நூற்றுக் கணக்கான ஆய்வுகள்… அற்புதசோதனைகள்… அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பக்கங்கள்.

1703

5. போர்த்தொழில் பழகு
வெ.இறையன்பு – புதிய தலைமுறை
ஒரு போரின் அறிவியல் நுணுக்கங்கள் அலாதியானவை. போர்க்குணம் பழகு எனும் வாக்கியத்தின் விரிவாக்கம் மிக நேர்த்தியாக முன்வைக்கப்படுகிறது. எதிரிகளை நேசி, நீராய் நிரம்பு, முதலில் முஷ்டியை உயர்த்து, என ஒவ்வொரு அத்தியாயமும் வலை விரிக்கவும் பதுங்கிப் பாயவும் கற்பிக்கிறது. ஹோசிமின் முதல் மாவோ வரை அணிவகுக்கும் தலைமையின் அற்புத வெளிப்பாடு இந்த விநோத அறிவியல் பொக்கிஷம்.

6. அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு
பில்ஃபிரைசன் – பாரதி புத்தகாலயம்
தமிழில் – ப்ரவாஹன்
தனக்கே உரிய நகைப்பு மொழியில் உலகம் தோன்றி உருவான இன்று வரையான கதையை எழுதிச் செல்கிறார் பில்பிரைசன்.இந்தப் புத்தகம் உலகஅளவில் 17 விருதுகளை வென்றது. தமிழின் பிரமாண்ட வெற்றி இந்த அறிவியல் நூல்.100-00-0001-166-8_b-01

7. ஹென்ரிட்டா லேக்ஸ்
தமிழில் சா.சுரேஷ் – எதிர் வெளியீடு
போலியோ சொட்டு மருந்து கிடைத்த கதை இது. கருப்பின ஏழ்மைக் குடும்பச் சிறுமியான ஹேன்ரிட்டா எப்படி செல் ஆராய்ச்சியாளராக, 60,000 ஆய்வுகளை நடத்தி 1600 ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார் என வாசிக்கும் போது நவீன மருத்துவ உலகம் அவரது பெயரை மறந்தது கண்டு நெஞ்சு கொதிக்கிறது.

8. நிலவுக்குள் பயணம்
த.வி.வெங்கடேஸ்வரன் – புக்ஸ் ஃபார் சில்ரன்
நீல் ஆம்ஸ்ட்ராங் வெறும் தொடக்கம் தான். மனிதனின் நிலாக்கனவு எவ்வளவு அற்புதமானது. அது நிறைவேற்றப்பட்டது என்பது அறிவியலில் எவ்வளவு பிரமாண்ட எழுச்சி…. அதன் பின்னே இன்றைய சந்திராயன் வரை நீளும் அரசியல் என யாவற்றையும் பேசுகிறது இந்த ஆவண நூல்.

26907

9. வானியல் வினா வங்கி
புதுவை அறிவியல் இயக்கம்
இது வித்தியாசமான அறிவியல் முயற்சி. விதவிதமான வினா வடிவங்கள் வழியாக வானியல் குழந்தைகளின் மனதில் பதிகிறது. அறிமுக கட்டுரை சாளரம் உண்டு… வானியல் ஆய்வாளர்களின் கருத்துத் தொகுப்பு உண்டு. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள புத்தகம்.

10.வேதியியல் கதைகள்
பேரா. சோ. மோகனா – புக்ஸ் ஃபார் சில்ரன்
வேதியியல் தான் உயிரின வாழ்வின் ஆதாரம். துரதிர்ஷ்டவசமாக வேதியியல் பள்ளியில் கடின பாடமாக உணரப்படுகிறது. அது உண்மையல்ல. அது அவ்வளவு சுவையாக இருக்கமுடியும் என்பதற்கு இந்த சிறப்பான நூல் சாட்சி. அறிவியல் ஆசிரியர்கள் கையில் இருந்தால் நம் கல்வியே இனிக்கும்.

11. சோதிடமும் வானவியலும்
பேரா.ரமணி – அறிவியல் வெளியீடு
மனிதனே சந்திரனில் இறங்கிய பிறகும் ராசி – நட்சத்திரம் பார்க்கும் கூட்டம் குறைய வில்லை. இவ்வளவு ஆழமாக யாரும் இந்த விஷயத்தில் ஆய்வு நடத்தியதில்லை என வியக்கும் அளவுக்கு ஏராளமான ஒப்பீடுகள், தகவல்கள் கொட்டிக் இடக்கின்றன.

12. கனவுகளின் விளக்கம்
சிக்மண்ட் ஃபிராய்டு – புக்ஸ் ஃபார் சில்ரன்
(த-நாகூர்ரூமி)
உலகின் எண்ணப் போக்கை மாற்றிய புத்தகங்களில் ஒன்று. சிக்மண்ட் ஃபிராய்டின் இடி(id) ஈகோ (eg) சூப்பர் ஈகோ (super ego) அறிவியல் தத்துவத்தை எளிய தமிழில் சாதாரணமாக எழுதிச்செல்கிறார் ரூமி.கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

kanavukali_vilakkam_copy

13. விக்ரம் சாராபாய்
எம்.ஏ.பழனியப்பன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இந்திய அறிவியலின் தூண்களில் முதன்மையானவர் விக்ரம் சாராபாய். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட கதையை இந்தப் புத்தகம் சுவையாக சொல்கிறது. அகமதாபாத் பஞ்சாலை தொழில் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு அவர் நிறுவியதாமே – எனக்கு இப்போதுதான் தெரியும்.

14. புவியியலைப் புரிந்துகொள்வோம்
கேதரீன் – புக்ஸ் ஃபார் சில்ரன்

தோழர் கேதரீன் இப்புவியின் ஆழமான ரகசியவெளிகளை நமது இருப்பிடத்திலிருந்து தொடங்கி வானைநோக்கி ஒரு பாதை என வலி தெரியாமல் அழைத்துச் செல்கிறார். எரிமலைகள் குறித்த விளக்கம் படுஜோர்.

15. ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வாழ்வும் பணியும்
இட்டிஃபெர்கூசன்/தமிழில் வின்சென்ட்
எதிர்வெளியீடு
ஒரு பேரறிஞரின் வாழ்க்கைச் சரிதை இது. als எனும் கொடிய நரம்பியல் நோயினால் பீடிக்கப்பட்ட இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ், சக்கர நாற்காலி வாசி ஆகிவிடுகிறார். பேசவும் வாய்ப்பிழந்தவர் வானவியல் மேதை ஆன கதையை மிக அழகாக எழுதி உள்ளவர்கள். அவரது இணையான உழைப்பாளி ஜேன் ஒதுக்கப்பட்டது குறித்த பகுதிகள் நெகிழ்ச்சியானைவை நேர்த்தியான மொழிபெயர்ப்பு.

16.நம்மைச்சுற்றி காட்டுயிர்
ஆதி.வள்ளியப்பன் – புக்ஸ் ஃபார் சில்ரன்
நமக்கு காட்டுயிர்கள் என்றால் அவை எங்கோ காட்டில் தான் இருக்கும் என்ற நினைப்புண்டு. ஆனால் நம் இருப்பிடத்தை தேடி வரும் அந்த நேசமிக்க தோழமை நம்மை சுற்றி ஏற்படுத்தும் அற்புத உலகை அழகாகப் புரியவைக்கும் நேர்த்தி வள்ளியப்பனின் தனிப் பாதை. நாம் வன உயிர்களை காக்கத் தவறினால் நம்மையே அழித்துக் கொள்வது உறுதி.

17. அறிவியல் களஞ்சியம் 365/365
ஆத்மா கே.ரவி – புக்ஸ் ஃபார் சில்ரன்
365 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் வீதம் அறிவியல் அதிசயத்தை எளிய தமிழில் வழங்கிச் செல்கிறார். நமது அலுவலகத்தில், பள்ளியில் தகவல் பலகையில் பயன்படுத்தலாம். நல்லமுயற்சி இது.

18. மனிதக்கதை
பி.பி.சான்ஸ்கிரி-(த-க.மாதவ்)-புக்ஸ் ஃபார் சில்ரன்
மனிதக்கதை மிகவும் சுவாரசியமானது. அதன் சமூக பொருளாதார கலாச்சார வளர்ச்சி மிகவும் சொல்நேர்த்தி கொண்ட அறிவியலாளர்களுக்கே எழுத படியும் நுணுக்கங்கள் கொண்டது. இந்த நூல் மிக அழகான வார்ப்பு மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் என்பதை சுவாரசியமாய் சொல்கிறது.

2300-manitha kadhai

19. கடவுள் உருவான கதை
டாக்டர் அஜெய்கன்சால்
தமிழில் – கி.ரமேஷ் – பாரதி புத்தகாலயம்
ரிச்சர்ட் டாக்கின்ஸின் கடவுள் ஒரு கற்பிதம் நூலுக்கு இணையான அற்புத அறிவியல் வார்ப்பு இந்த புத்தகம். அனைத்துக் கடவுளர்களும் மனித உருவாக்கமே. புனித மதங்கள் எல்லாம் கலாச்சார உருவாக்கத்தில் ஒரு பகுதியில் இருந்தவையே. மத சம்பிரதாயங்கள் இனக் குழந்தைகளின் வாழ்வியல்முறை வழியேவந்த எச்சங்கள் என இவைபோல 1000 வழிகளில் நூல் உண்மையை உடைத்தெறிகிறது.

kadavul uruvana kadhai4165920. காலநிலை
சி.ரங்கநாதன் – புக்ஸ் ஃபார் சில்ரன்
கால நிலைமாற்றம் குறித்த அறிவியலே இன்றையத் தேவை. அதுகுறித்த விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம். காலம் தப்பிப் பெய்யும் மழைவெள்ளமாய் பெருகும் அவலம். பெருவெள்ளமும், கொடிய வறட்சியும் அருகருகே நிகழும் கொடுமை என யாவற்றின் காரணங்களையும் நூல் ஆராய்கிறது.

21. உலகை மாற்றிய உயிரியல் அறிஞர்கள்
ப.ரவிச்சந்திரன் | அறிவியல் வெளியீடு
அலெக்சாந்தர் பிளெம்மிஸங் முதல் ரோசலின் யாலோ வரை நீண்ட வரிசையை தத்ரூபமாய் அவர்களது கடும் உழைப்பு மற்றும் அறிவாற்றல் பின்னணியில் எழுதிஇருக்கிறார் ரவிச்சந்திரன். ஆண்ரியோ வெசாலியஸ் எழுதிய பல ஆயிரம் பக்கங்கள் தீக்கனலிலிருந்து தப்பிய வரலாறு போல பல புதிய விஷயங்கள் அடங்கிய நூல்.

22. நியூட்ரினோ நோக்குக்கூடம்
த.வி.வெங்கடேஸ்வரன் – புக்ஸ் ஃபார் சில்ரன்
தேனி மாவட்டமே அழிந்து விடும் என பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவது மிகவும், துரதிர்ஷ்டவசமானது. விவசாயம் செத்துவிடும் எனபது உட்பட அனைத்துப் புரளிகளையும் தவிடுபொடி ஆக்கும் வண்ணம் அழகாக விளக்கமளித்திருக்கிறார் அறிவியல் அறிஞர் வெங்கடேஸ்வரன்.

23. ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்
வே.மீனாட்சி சுந்தரம் – பாரதி புத்தகாலயம்
ஐன்ஸ்டீனின் சிந்தனைகள் மிகவும் வித்தியாசமானவை. உலக பேரழிவு ஆயுதங்கள் ஐ.நா சபைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும் என்றவர் அவர். விஞ்ஞான விதியாய் வாழ்ந்தவர். அறிவியலில் சிறந்த பிரச்சாரகர், பாமரர்களையும் விஞ்ஞானத்தின் பக்கம் கொண்டு வந்தவர் பற்றிய மிக வித்தியாசமான புத்தகம்.

insten

26. பி.வி.சி. பாட்டில்களிலிருந்து… நூறு கண்டு பிடிப்புகள்

ஆத்மா கே.ரவி-புக்ஸ் ஃபார் சில்ரன்
தண்ணீர் பாட்டில் இன்று நமது வாழ்வோடு கலந்து விட்டது அதனைப் பயன்படுத்தி 100 அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த குழந்தைகளுக்கு வழிகாட்டும் அரிய பொக்கிஷம் கண்டிப்பாக நம் குழந்தைகளை அறிவியலாளர் ஆக்கும் புதையல் இது.

25. காட்டின் குரல்
சு.பாரதிதாசன் – பாரதி புத்தகாலயம்
நமக்கு கானகத்தின் குரல் கேட்பதே கிடையாது. நமது வாகன ஒலி வானகத்து ஒலியை மிஞ்சிய தொழில்மயம் காடுகளோடு எதிர்மறை வாழ்வை தந்து தவிக்க விடுகிறது. மீண்டெழுந்த காடுகளை மீட்கும் அவசரகதியில் மானுடம் பரிதவிப்பதை மிக அழகாய் முன்வைக்கும் தகவல் களஞ்சியம் இந்த புத்தகம்.

26. நந்தியின் முதுகில் திமில்
தாமோதர் கோசாம்பி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தோழர் கோசாம்பியின் வரலாற்று ஆய்வு களின் பின் புலத்திலிருந்து அவரால் சிறுவர்களுக்காக இப்படி ஒரு நூலை வடிக்கமுடிகிறது என்றால் ஆச்சரியமாக உள்ளது. குதிரைக்கோ எருமைக்கோ இல்லாமல் ஏன் காளைக்குமட்டும் திமில் என்கிற சிறுகேள்வியின் பின் இத்தனை பெரியகதை இருப்பது மிகவும் வியப்பான விஷயம்.

27. பூவுலகின் கடைசிகாலம்
கிருஷ்ணாடா வின்சி – பாரதி புத்தகாலயம்
கிருஷ்ணா டாவின்சியின் அமரத்துவ மிக்க குரல் இந்த நூல் முழுவதும் ஒலிக்கிறது… இந்த பிரபஞ்தோடு தோழமைகொண்ட அந்த குரல் அதன் பேரழிவை பறைசாற்றி நம்மை எச்சரித்துக் கொண்டே பயணிக்கிறது… பூவுலகின் கடைசிகாலத்து பிரஜைகளா நாம் என எண்ண வைத்து பரிதவிப்பை எற்படுத்துகிறது.

232

28. உயிரின் ரகசியம்
சுஜாதா | உயிர்மை
நமக்குள்ளே என்ன இருக்கிறது? நாம் எதிலிருந்து வந்தோம். மனிதன் உயிர் மட்டுமல்ல; உயிருள்ள எல்லாவற்றிலும் உயிர் எனப்படுவது என்ன? ஏதோ தத்துவக் கேள்வி என நினைக்கவேண்டாம். சுஜாதா பாணியில் அறிவியலை (மனதுக்குள்) சிரித்தபடி (உயிருக்குள்) பயணிக்க அரிய வாய்ப்பு

UYIR_DESIGN__99185_zoom

29. அணு ஆற்றல்
ப.கு.ராஜன் – பாரதி புத்தகாலயம்
அணுவின் ஆற்றலை ஆக்கத்திற்குப் பயன்படுத்த நாம் தயங்க வேண்டியதே இல்லை. அணுவின் ஆற்றல் குறித்த நூல்கள் தமிழில் மிக குறைவு அதிலும் அழிவு நிச்சயம் என மிரட்டும் நூல்களே உள்ளன. தோழமையோடு அமரவைத்து அந்த அதிசய உலகை இந்த நூல் நமக்கு புரியவைக்கிறது.

30. கல்பனா சாவ்லா – நட்சத்திர நாயகி-
கலைமணி – க்ளாசிக் பப்ளிகேஷன்ஸ்
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்வை முழுமையாகப் பதிவுசெய்வதில் இந்த நூல் வெற்றிபெறுகிறது. சிறந்த கல்வி, சிறந்த வாழ்வு, சிறந்த ஈடுபாடு, சிறந்த மேன்மை என தனக்கென்று ஒரு கொள்கை வைத்திருந்த சிறந்த கனவு நாயகி. நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டியவர் என்பதில் சந்தேகமில்லை. ஏராளமாக வாசித்துக் கொண்டே இருப்பார் என்பது புது தகவல்.

31. உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்
ஏற்காடு இளங்கோ | அறிவியல் வெளியீடு
யூரி கேகரீனைத் தொடர்ந்து வாலன்டினா டெரஷ்கோவா உலகின் முதல்பெண் விண்வெளி பயணம் மேற்கொண்டார். இது நடந்தது சோவியத் யூனியனில் (ரஷ்யா) தான். அவரது அணுபவம், கடும்பயிற்சி, தேர்வுமுறை என புத்தகம் வளர்கிறது. 48 முறை விண்ணை வலம் வந்து 147 சோதனைகளும் நடத்தியவரின் சிறப்பான கதை.

32.அறிவியல் குறுக்கெழுத்துப் புதிர்கள்
வ.அம்பிகா – புக்ஸ் ஃபார் சில்ரன்
குழந்தைகளின் மனம் கவரும் வகையில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் சீரிய நூல். இப்புதிர்களின் வழியே எளிதாக ஆயிரக்கணக்கான தகவல்கள் எளிதில் புகுத்த முடியும். விளையாட்டாக விஞ்ஞானம். குழந்தைகளுக்கு அரிய பரிசு.

33. விண்வெளி 1000

| ஏற்காடு இளங்கோ – புக்ஸ் ஃபார் சில்ரன்
விண்வெளியில் பறந்த உணர்வு இந்த 1000 தகவல்களையும் வாசிக்கும்போது ஏற்படுகிறது. ஏதோ நம்ம குடும்பக்கதை மாதிரி சில இடங்களில் சுவாரசியம். நேர்த்தியான வடிவமைப்பினால் அலுப்பு தட்டவில்லை. ஆயிரமும் அசத்தல்.

34. நிலவில் ஒருவர் | ராஜ்சிவா – உயிர்மை
தொழில் நுட்பம், அறிவியல் மட்டுமல்ல. அது இன்று பணம் கொட்டும் இயந்திரம். அதில் மோசடிகள் அதிகம். சர்ச்சைகள் அதிகம். இப்படியாக தொடங்கி நிலாவுக்கு மனிதன் போனது உண்மைதானா என்கிறவரை பல சுவாரசியமான கட்டுரைகளின் தொகுப்பு.

35.நானோ டெக்னாலஜி
சுஜாதா – உயிர்மை
இந்த குட்டிப் புத்தகம் அநேகமாக தமிழில் அது பற்றி அதிகம் தெரியாத காலத்தில் நானோ யுகத்தை அறிமுகம் செய்திருக்கவேண்டும். மிகச் சிறப்பான அறிவியல் நூல். எளிய நகைச்சுவையோடு பாமர அறிவையும் பளிச்சென இழுக்கும் தகவல் மழை.

36.வீண்மீன்கள் – வகை, வடிவம், வரலாறு
த.வி.வெங்கடேஸ்வரன் – பாரதி புத்தகாலயம்
இப்படி ஒரு முழுமையான நூலை முழுக்க முழுக்க தமிழில் எழுதமுடிந்துள்ளது. நமது மொழிக்கு – வரலாறுக்கு கிடைத்த பெருமை என்றே, தோன்றுகிறது. வெறும் சாதுவாக இரவுவானில் மின்னும் நட்சத்திரத்திற்குப் பின் இவ்வளவு விசயம் இருக்கிறதா என வியக்காமல் இருக்க முடியவில்லை. கல்லூரியில் பாடமாக வைக்க ஒருநூல்.

37. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
தியடோர் பாஸ்கரன் | உயிர்மை
சூழலியலாளரான தியடோர் பாஸ்கரன் தரும் பேரழிவுத் தகவல்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. பாவம் – பிறக்காத அந்த புதிய தலைமுறை. அவர்களது வாழ்வுரிமையை தொழிற்மயமாதலின் அகோரபசி தின்று நச்சாக துப்பி அழித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக தீர்வுகளை வைக்கவும் தவறவில்லை.

38. சூரியக் குடும்பம்
ஆத்மா கே.ரவி – பாரதி புத்தகாலயம்
சூரியன் ஒன்பது கோள் சந்திரன் என நாம் ஏதோ அசால்டாய் நினைப்பதன் பின்னே அணுஅணுவாய் ஆராய்ச்சி நுணுக்கமான நூற்றுக்கணக்கான தகவல்களோடு களம் இறங்கி இருக்கிறார் ரவி.

39. அறிவியல் ஏன்? என்ன? எதற்கு?
சலாவுதீன் சம் ஷாத் – திருமலா பப்ளிகேஷன்ஸ்
‘ஆஸ்ப்ரின் மாத்திரை நிஜமாகவே அதிசய நெல்லிக்கனி மாதிரியா. கான்டாக்ட் லென்சு எதனால் ஆனது. எரிமலையிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கக்கூடாது? என்பன போன்ற ரொம்ப சுவையான கேள்விகளுக்கு அழகு தமிழில் பதில் அளிக்கிறார் ஆசிரியர். கான்டாக்ட் லென்சை ‘தொடு-வில்லை’ என்று அழைப்பது சுவாரசியமான விஷயம்.

40.மாத்தான் மண்புழுவின் வழக்கு
எஸ்.சிவதாஸ் யூமா.வாசுகி-புக்ஸ் ஃபார் சில்ரன்
விகடன் விருது பெற்ற அறிவியல்நூல். மண்புழுக்களின் அபார உழைப்பை அழகாக வெளிக்கொண்டு வரும் கதைப் போக்கில் நடக்கும் வகுப்பு என்றே சொல்லலாம். வழக்குமன்றத்தில் மண்புழுவின் வழக்குரைஞர் சியாம்குமார் முன்வைக்கும் வாதங்கள் விவசாயிகளையும் விட்டுக்கொடுக்காமல் கொடுக்கும் சாட்டை.

41. அறிவியல்புரட்சியாளர் டார்வின்
ஆர்.பெரியசாமி-பாரதிபுத்தகாலயம்
சார்லஸ் டார்வின் உலக அறிவை (சாரி..அறியாமையை) புரட்டிப்போட்டவர். அவரது முழுவாழ்வையும் பதிவு செய்கிற முழுநீள தமிழ்ப் புத்தகம் இதுவாகவே இருக்கும். அத்தோடு அமெரிக்க பிற்போக்கு சக்திகளை எதிர்த்து நீதிமன்றத்தில் டார்வின் தத்துவத்திற்கு கிடைத்த போராட்ட வெற்றிகளை தோழர் பெரியசாமி விரிவாக விவரிக்கிறார்.

42. சூடாகும் பூமி
பேரா. பொ. ராஜமாணிக்கம்
புவிவெப்பமடைதலின் விளைவுகளை சென்னை காட்டு வெள்ளம் வரை அனுபவித்து பரிதவித்த நமக்கு இப்போது இந்தப் புத்தகம் தரும் மனநிலையை விளக்குவது கடினம். பள்ளிக்கூடம் முதல் ஆசிரியர் பயிற்சிவரை கண்டிப்பாக பாடமாய் வைக்க ஒரு புத்தகம். முதலில் மாநகராட்சி நிர்வாகிகளுக்கு யாராவது (ஸ்டிக்கர் ஒட்டியாவது) நிவாரணமாகத் தருவதற்கு ஏற்ற நூல்.

43. வாடகைத் தொட்டில்
ஜி.பிரஜேஷஸென் (யூமா.வாசுகி) நல்லநிலம் பதிப்பகம்
இன்று குழந்தைப்பேறு இல்லாமல் பல தாய்மார்கள் நவீன செயற்கை கருஊட்டல் முறைகளைநோக்கி வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். இது ஒருவகை கொள்ளை. இதனை ஆழமாக விவரிக்கும் சிறப்பான புத்தகம் இது. அழகான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.

44. கணித மேதை ராமானுஜன்
ரகமி (த.வி.வி) பாரதிபுத்தகாலயம்
ராமானுஜன் பற்றி தமிழின் மிகவும் ஆழமான ஆய்வு நூல் என்றால் ரகமி செய்ததுதான். அதனை பலபோராட்டங்களுக்கு நடுவில் த.வி.வெங்கடேஸ்வரன் வெளிக் கொணர்ந்தார் ராமானுஜனின் துணைவியாரோடான நேர்காணல் அந்தகுடும்பத்தோடு கொண்டிருந்த உறவுகள் யாவும் உழைப்பின் உலைக்களமாய் இந்த நூலை வார்க்கிறது.

45. அறிவியல் அறிவோம்.
மேலூர் இரா.சுப்பிரமணிய சிவம்
கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
ஆக்டோபஸ்கள், ஏன் கடலின் ஆழத்தையே விரும்புகின்றன. ஒரே சமயத்தில் 4000 குட்டிகள் போடும் கடல் குதிரை என பல அதிர்ச்சி, அரிய தகவல்கள் நிறைந்த அபூர்வ தொகுதி. உலோக ரப்பர் எப்படி ஸ்மார்ட் ஸ்கின் ஆகிறது எனும் கட்டுரை அருமை.

46. வாழ்வே அறிவியல்
கே.கே.கிருஷ்ணகுமார் அறிவியல் வெளியீடு
வாழ்வின் ஒவ்வொரு படி நிலையும் அறிவியல். அன்றாட வாழ்வின் நமது செயல்பாடுகளில் தொடங்கி நம் வாழ்வின் அங்கமாய் நம்மை பின் தொடரும் அறிவியலைப் படம் பிடிப்பது சுவையாக உள்ளது. அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கை குழந்தைகள் அறியச் செய்ய ஒரு நல்ல புத்தகம்.

47. அக்னி நட்சத்திரம்
சி.ராமலிங்கம்-அறிவியல் வெளியீடு
நமது சூரியன்தான். அதன் பிரமாண்ட ஆற்றலை இவ்வளவு விரிவாக விவரிப்பது நல்ல பல தகவல்களை நமக்குத் தருகிறது. தோழர் ராமலிங்கத்தின் சரளமான நடை அவரோடு பேசுவது போலவே – அவர் நம்முன் அது பற்றி வகுப்பெடுப்பது போலவே வந்துள்ளது. அக்னிநட்சத்திரம் நல் அறிவியல் நூலுக்குச் சான்று.

48. எளிய முறை அறிவியல் சோதனைகள்
தமிழ்ப்பிரியன் – மினர்வா பப்ளிகேஷன்ஸ்
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் முதல் ஒலி அதிர்வு வரை ஐம்பது அழகான அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய நூல் இது. ஒரு அறிவியல் ரெக்கார்டு நோட் போலவே நோக்கம், தேவை, செய்முறை, முடிவு என வரிசைப்படுத்தி வகுப்பு ஆய்வுக் கூடத்தை ஞாபகமூட்டினாலும் எளிமை கவர்கிறது.

49. விஞ்ஞானிகளின் வரிசை… தேலீஸ் முதல் ராமகிருஷ்ணன் வரை
பேரா.கே.ராஜூ – மதுரை திருமாறன்
விஞ்ஞான உலகைப்பற்றி இணையத்தில் கொட்டித்தீர்க்கும் தீரர்களில் ஒருவரான தோழர் ராஜூவின் முத்தாய்ப்பான படைப்பு. வெங்கிராம கிருஷ்ணன் வரை நீண்ட வரலாற்று வரிசை நிறைய தகவல்கள், சுவையான வருணனை. நேர்த்தியான தயாரிப்பு.

50. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்
இரா.முருகவேள் – பாரதி புத்தகாலயம்
காடுகளை அழித்தொழித்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு… புலிகளை ஒழித்துக் கட்டிய காப்பகம், மலைவாழ் மக்களைக் கொன்று குவித்து வாழ்வாதாரம் என இந்த கார்பரேட் புலிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. பேரழிவு நமக்கு பெரியலாபம் – அவர்களுக்கு கமிசன் கலாச்சாரத்திற்கு பெயர் அறிவியல் முறைப்படியான வளர்ச்சி. தேவை வன உரிமைச் சட்டம். அறிவியல் நூல் இப்படித்தான் உண்மைகளைக் கிழிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment