You are here

சென்னை- பொங்கல் புத்தகத் திருவிழா

பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி
மே.வங்க மாநில மேநாள் ஆளுநர், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி, வெளிநாட்டு தூதரகப் பணி உயர் அலுவலர் பேராசிரியர் கோபால் கிருஷ்ண காந்தி – (மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்) அவர்கள் ஆற்றிய துவக்க உரையின் சிறு பகுதி.
‘அறிவாற்றல் சிந்தனையை மழுங்கடிக்கும் போக்குக்கு எதிராக விழிப்புணர்வு மிகவும் அவசியம்’ என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேதனை தெரிவித்தார்.சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா ஜனவரி 13 துவங்கி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெறுகிறது. அதன் துவக்கவிழா புதனன்று (ஜன.13) நடைபெற்றது. இதில் பேசிய அவர், “தமிழ்நாடு இயற்கை வளம் மட்டுமல்லாமல் ஆற்றல் வளமும் கொண்ட மாநிலமாகும். திறந்த மனதுடன் பேசும் மரபுக்குச் சொந்தக்காரர்கள். இடதுசாரி, பெரியார் சிந்தனைகள் சமூக-அரசியல் அம்சங்களில் ஏற்படுத்திய தாக்கம்தான் இதற்குக் காரணம். தில்லியின் லெப்ட்வோர்ல்டு பதிப்பகம் போன்று இடதுசாரி பதிப்பகங்களும் இங்கு உண்டு. அதே நேரத்தில் பல கடவுளர்களை வழிபடும் பக்திமான்களும் இங்கேதான் அதிகம். இயல்பாக இயங்கும் இந்தப் பக்திமான்களை வர்த்தக ரீதியாக சுரண்டுவதும் இங்கேதான் நடக்கிறது.
எல்லா மதங்களின் தீவிர வலதுசாரிகளும் ஒன்றிணைந்து அறிவாற்றல் சிந்தனை மரபுக்கு எதிராக அச்சுறுத்தலாக வளர்வதையும் காண்கிறோம். பெரியார், அண்ணா, இடதுசாரி சிந்தனைகளுக்கும் இவர்கள் இடையூறாக இருக்கிறார்கள். தமிழ் அறிவுசால் உலகில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இலக்கியரீதியான தற்கொலையை அறிவிப்பதும் இங்கேதான்… சகிப்புத் தன்மைக்கு எதிராக நாடு சென்று கொண்டிருப்பதற்கு இது ஒரு உதாரணம், பாடகர் கோவனுக்கும் இது நிகழ்ந்தது. வாசகர்கள், படைப்பாளிகள், பதிப்பகத்தார் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் சகிப்புத்தன்மைக்கு எதிராகக் குரல் கொடுத்த மூன்று தனிநபர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. எனவே, சகிப்புத்தன்மையற்ற போக்கு வளர்ந்துவருவது கவலையளிப்பதோடு, இதுகுறித்து அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீதிநாயகம் சந்துரு
சென்னை உயர்நீதி மன்றத்தின் மேநாள் நீதிபதி, நீதிநாயகம். சந்துரு அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய தலைமை உரையின் சிறு பகுதி.
“ஜல்லிக்கட்டு நடைபெறாததற்கு என்ன காரணம் என்று 3 தொலைக்காட்சி ஊடகங்களும், 5 அச்சு ஊடகங்களும் நான் இங்கு வரும் முன் என்னிடம் கேட்டுக் கொண்டன. ஆனால், யாருமே ஏன் சென்னை புத்தகக் காட்சி நடைபெறவில்லை எனக்கேட்காதது வேதனை அளிக்கிறது.இதர மாவட்டங்களில் சென்னையைவிட உற்சாகமாக புத்தகக் காட்சிகளில் திருவிழா போன்று மக்கள் கலந்துகொள்கிறார்கள். ஆனால்,சென்னையில் அவ்வாறு நடைபெறாமல் திசை திருப்பும் தடைக்கற்களையும் செயல்பாடுகளையும் கண்டறியவேண்டும். சிந்தனாவாதிகள் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே உயிரைக்குடித்த சகிப்புத்தன்மையற்ற ஆண்டாக 2015-ல் இருந்தது. ஐ.நா.கருத்துச் சுதந்திரம் பற்றி பிரகடனம் இயற்றியபின்னும், அரசமைப்புச் சட்ட கருத்துரிமைக்கு பாதுகாப்பில்லை. தொழிலாளர் சட்டங்களில் சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. என்னுள்ளிருந்த எழுத்தாளன் தற்கொலையினால் இறந்துவிட்டான்’ என்று தமிழ்நாட்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துவிட்டு ஆசிரியர் வேலை பார்க்கப்போகும் பரிதாபத்தை என்னென்று சொல்வது! எழுதப்பட்ட விதத்தில் தவறு இருந்தாலும், மள்ளர் வரலாறு, மதுரைவீரன் ஆகிய புத்தகங்களை தமிழ்நாட்டில் தடை செய்திருப்பது கேவலமான செயல். “டாஸ்மாக்கை மூடு” என்று மதுவிலக்குப் பாடல்பாடியதற்கான கைதும் சரியல்ல. சென்னையில் உன்னதமாக அமைக்கப்பட்ட அண்ணா நினைவுநூலகம் அரசு ஆதரவின்றி மருத்துவமனையாக மாற்றப்படுவதற்கு ஒருசிலரே எதிர்ப்புத் தெரிவித்தது என்பதும் வேதனையானது. மக்களிடம் நூலக வரி வசூலிக்கும் தமிழ்நாடு அரசு அதை முறையாக செலவழிக்கிறதா என்றும் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று சந்துரு தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இரா. முத்துக்குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். செண்பகா பதிப்பகத்தின் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்புரை ஆற்ற, குமரன் பதிப்பகத்தின் எஸ்.வைரவன் நன்றி கூறினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜனவரி 14 அன்று, பேரா. அரசு தலைமையில் எழுத்தாளர் பொன்னீலன், பேரா. பா.ரா.சுப்ரமணியன், கவிஞர் செல்லகணபதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதைனயாளர் விருதினை இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவர் என். ராம் அவர்கள் வழங்கினார். க.நாகராஜன் வரவேற்புரை வழங்க அரு.வெங்கடாசலம் நன்றி கூறினார்.
குழந்தைகளும் புத்தகங்களும்
ஜனவரி 15, பொங்கல் தினத்தன்று மாலை, நிகழ்வில் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களது உரை: “குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துத் தான் பிரதி எடுக்கின்றனர். அவர்கள் பெரியவர்களது செருப்பை அணிந்து நடக்கத் துடிக்கின்றனர். குழந்தைகள் உலகில் நுழைவது மிகவும் நுட்பமானது. பல ஆண்டுகள் கழித்தே எனக்கு அந்த அறிவு கிட்டியது. இரண்டு மூன்று வயது குழந்தையிடம் புத்தகம் கொடுத்தால் என்ன செய்வார்கள் தெரியுமா, அதையும் அவர்களது விளையாட்டுப் பொருள்களாக மாற்றிக் கொள்வார்கள். புத்தகங்களை சுற்றிப் பரப்பி வைத்துக் கொண்டு இருந்த குழந்தை, தான் சமையல் செய்து கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னது. சாப்பிட வரலாமா என்றால், கொஞ்சம் பொறு என்று கையால் சைகை. அப்புறம் ஒரு புத்தகத்தைத் திறந்து சோறு எடுத்து போட்டது. அடுத்த பக்கத்தில் இருந்து சாம்பார், இன்னொரு பக்கத்தில் இருந்து பொரியல்….இப்படி தட்டையான புத்தகத்தை உருண்டையான பாத்திரமாகக் கற்பிதம் செய்யும் கற்பனை எந்த எழுத்தாளருக்கு வாய்க்கும்?
ஒரு முறை என் நண்பரது பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். நான்காம் வகுப்பு குழந்தைகள் முன்பாக என்னை அறிமுகம் செய்தார். சார் யார் தெரியுமா, பெரிய எழுத்தாளர். சொல்லுங்க என்றார் குழந்தைகளிடம். உடனே அவர்கள் கோரஸாக “பெரி……..ய்ய…..எழுத்தாளர்” என்றனர். எனக்குப் பெரும் கூச்சம் ஏற்பட்டது. நண்பர் அகன்று சென்றுவிட்டார். நானும் அந்தக் குழந்தைகளும். நான் கதை சொல்லத் தொடங்கினேன். அடுத்தது என்றனர் குழந்தைகள். அப்புறம் அடுத்தது. அடுத்தது. அரை மணி நேரத்தில் என் சரக்கு தீர்ந்துவிட்டது. அவர்களோ கேட்டுக் கொண்டே இருந்தனர். அடுத்த ஆண்டு மீண்டும் சென்றேன். அதே குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிற்குச் சென்று பார்த்தேன். என்னை நினைவிருக்கா என்று கேட்டேன். சார் உங்க பாட்டை சாந்தி மாற்றிப் பாடிட்டு இருக்கிறாள் என்று ஒரு பையன் எழுந்து புகார் செய்தான். கத்திரிக்கா ராஜா தனக்குப் பெண் பார்க்க கடைத் தெரு சென்று தேடுவது போன்ற அந்தப் பாடல், காய்கறிகளின் பெயரைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப் பட்டது. நெட்டையான முருங்கைக்காய், குண்டு குண்டு பூசணிக்காய் எல்லாவற்றையும் நிராகரிப்பார் ராஜா. கடைசியில் கேரட்டைப் பார்த்ததும் ஒப்புக் கொள்வார் என்று முடியும். சாந்தியை எழுப்பி என்ன மாற்றி இருக்கிறாய் என்று கேட்டேன். அந்தப் பாட்டை அப்படியே பாடி முடித்தாள். சார் கடைசி வரியைக் கொஞ்சம் மாற்றிவிட்டேன் என்று இப்படி பாடிக் காண்பித்தாள்: “நல்ல நல்ல பெண்ணை எல்லாம் வேண்டாம் என்றாயே, உன்னை எனக்குப் பிடிக்கவில்லை போடா என்றாளாம்” என்று கேரட் பெண் பாடுவது போல சாந்தி பாடியதை மறக்க முடியாது. அந்தக் குழந்தைக்குப்[ பெண்ணியம் எல்லாம் யார் கற்றுத் தந்தார்கள்….நாட்டுப்புற வழக்கில் ஒரு பாடல் போய்க் கொண்டே இருந்தால் அது வேறொரு பதிலோடு திரும்பிவரும்….அந்த மரபு அது.
நாமோ குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது என்று நாம் நினைக்கிறோம். நாம்தான் எல்லாம் சொல்லித் தரவேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் அனைத்தையும் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்கின்றனர். நாம் தான் அவர்களை நல்லது, கெட்டது சொல்லித் தரத் தொடங்குகிறோம்…நமக்குப் பிடிக்காதது எல்லாம் கெட்டது. குழந்தைகள் நாம் எப்போதும் மலர்ச்சியோடு இருக்க நினைக்கின்றனர். நாமோ நமக்குப் பிடிக்காததைக் குழந்தைகள் சொல்லும்போது, செய்யும்போது முகத்திலேயே நமது வெறுப்பைக் காட்டிவிடுகிறோம். ஆகவே குழந்தைகள் நம்மிடம் மறைக்கத் தொடங்குகின்றனர். அதனாலேயே பல பிரச்சனைகள் வளர்கின்றன. புத்தகங்கள் கூட நாம்தான் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்…அவர்களாகத் தேர்வு செய்து வாங்க விடுவதில்லை.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஒன்றேபோல் இருந்துவிடவும் கூடாது. எழுதுபவர்கள் குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பொதுவாக எழுதுகிறோம். அது அவர்களை ஈர்க்காது. வயதுக்கு ஏற்ப, வாழ்விடங்களுக்கு ஏற்ப, சமூக பொருளாதாரப் பின்புலத்திற்கேற்ப, அவரவர் பண்பாட்டுத் தளத்திற்கேற்ப நூல்களைக் கொண்டுவந்து தந்தால்தான் வாசிப்பின் இன்பத்தை அவர்கள் அனுபவிக்க முடியும். வீட்டில் பெரியவர்கள் வாசிப்பதைப் பார்த்தால்தான் பிள்ளைகள் புத்தகத்தைப் படிக்க விரும்புவர். நாம் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கொண்டு அவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நமது கல்விமுறையிலும் மாற்றங்கள் வேண்டும். இப்போதைய கல்வி முறை புத்தக விரோதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பள்ளியை விட்டு வந்தால் புத்தகத்தை நீட்டினால் ச்சே…இங்கேயும் புத்தகமா என்று வெறுத்துப் போய் ஓடுகின்றனர்.
வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். என் பள்ளிப் பருவத்தில் ஓர் ஆசிரியர், பகத் சிங்கைத் தூக்கில் போட அழைத்துச் செல்ல காவல் துறை அதிகாரிகள் வந்து நிற்கும்போது அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் பொறுங்கள், முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாராம். மரணத்தின் வாசலில் கூட படிக்கும் பழக்கத்தை விடவில்லை என்று சொன்னது, என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது… பிறகு அந்தப் புத்தகம் எது என்று தேடினேன். லெனின் எழுதிய அரசும் புரட்சியும் வாங்கினேன். பிறகு அரசு என்றால் என்ன என்று அடுத்தது. அப்புறம் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்…..இப்படியே வாசிப்பு இன்னும் தொடர்கிறது. ஒரே ஓர் வாக்கியம், ஓர் அறிமுகம் இப்படி வாசிப்பைத் தூண்ட முடியும். குழந்தைகளுக்கு வாசிப்பைத் தூண்டும் வண்ணம் உரையாடல்கள் நடக்க வேண்டும். அவர்கள் வாசிப்புக்கு கதைகள் மட்டுமல்ல, கதையற்ற புத்தகங்களையும் அவர்கள் விரும்பிப் படிப்பதைப் பார்க்க முடியும்.”
நிகழ்வில் சீனத்தமிழ் வானொலியின் கலைமகள் என்ற ஷாவோ ஜியாங் தன்னுடைய வானொலித் தமிழ் சேவை குறித்தும், தனது சீன- தமிழ் அகராதி பணி அனுபவங்கள் குறித்தும் தனது தமிழ் உரையில் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் சகிப்புத் தன்மை குறித்து தனக்கே உரித்தான பாணியில் சிறப்புரை ஆற்றினார்.
உமா பதிப்பகம் இராம.லட்சுமணன் வரவேற்புரை நல்கினார்.
விடில்லா புத்தகம்
ஜனவரி 16 சனி மாலை 6 மணியளவில், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வீடில்லா புத்தகம் என்ற தலைப்பிலும், மருத்துவர் கு.சிவராமன், தமிழர் உணவும் இலக்கியமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். வனிதா பதிப்பகம், மயிலவேலன் வரவேற்புரை ஆற்ற, டெக்னோ புக் ஹவுஸ் நந்த்கிஷோர் நன்றியுரை ஆற்றினார்.
“வாசிப்பாயா?” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆயிஷா இரா நடராசன் அவர்கள் ஜனவரி 24 அன்று 1377589_867703159993550_8754216257083387763_n65

12507179_867224123374787_5886611892572837047_n

12509661_867226486707884_5813738017739192880_n

12512714_867226310041235_3289746334685587335_n

12523073_867703429993523_2064066193452993744_n

Book Fair Inaugural

Book Fair Inaugural2

Book Fair opening

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

Gopalkrishna Gandhi Addressஆற்றிய உரை, வழக்கம் போலவே ஏராளமான அரிய செய்திகள், பரவசமிக்க அறிமுகங்கள், அசாத்திய நினைவாற்றலோடு வந்து விழும் புத்தகப் பெயர்கள், நூலாசிரியர் பெயர்கள் இவற்றால் ததும்பியது….

இனி அவரது குரலில் கேளுங்கள் அந்தச் சொற்பொழிவை:

“……..வாசிப்பாயா என்ற இந்தத் தலைப்பில் உள்ள சொல்லை இதைப் போன்றே ஒரு புத்தகக் கண்காட்சியில் என்னைப் பார்த்து ஒருவர் கேட்டார்….ஏபிஜே அப்துல் கலாம்! குழந்தைகளுக்காக நிறைய எழுதுகிறாய், குழந்தைகள் எழுதும் நூல்களை வாசிப்பாயா என்று கேட்டார். அறிவியல் நூல்கள் தொடர்பான உரையாடல்கள் மற்றும் நேரடியான சந்திப்புகள் இவற்றால் அவரை நெருக்கமாக அறிய முடிந்திருந்த என்னை இப்படி கேட்ட அவரது புகழார்ந்த நினைவுகளோடு இந்த உரையைத் தொடங்குகிறேன்… எப்பேற்பட்ட கேள்வி அது….

குழந்தைகள் நூல் வாசிப்பதில்லை என்று அவர்கள் மீதே புகார் எழுப்புகிறோம்.. அண்மையில் ஒரு வாக்கியம் (பசங்க 2 திரைப்பட வசனத்தில் இடம் பெற்றது), ஒரே ஒரு சின்ன வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது…குழந்தைகள் கெட்ட வார்த்தையைப் பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகின்றனர்’ என்பதுதான் அது. நம்மைப் பார்த்தே குழந்தைகள் கற்கின்றனர். நாம் வாசிக்காமல், டி வி பார்த்துக் கொண்டிருக்கும் இல்லத்தில் நம் குழந்தைகள் மட்டும் எப்படி புத்தகம் படிக்க எதிர்பார்க்க முடியும்?

குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று சாதாரணமாக நாம் நினைக்கிறோம்…குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகள் என்பதை நாம் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை…குழந்தைகள் அற்புதமாக எழுதி இருக்கும் சில நூல்களைத் தான் உங்களுக்கு இந்தக் கூட்டத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறேன்.

The Book Thief என்பதைப் பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள்….நான் சொல்லப் போவது Notebook Thief எனும் புத்தகம். ஸ்டெல்லா என்ற சிறுமி எழுதி\யது. வகுப்பறையில் திடீரென்று ஒரு சிறுமியின் நோட்டுப் புத்தகம் காணாமல் போய்விடுகிறது. யாரோ திருடி எடுத்துச் சென்று விட்டனர். அது எங்கே போனது, அவள் தேடத் தொடங்குகிறாள்….இது தான் கதை. ஒவ்வோர் அத்தியாயத்திலும் வெவ்வேறு மனிதர்கள் இந்த நோட்டுப் புத்தக திருட்டு விஷயத்தை எப்படி பார்க்கின்றனர் என்பதைக் காட்சிப் படுத்துகிறது புத்தகம். பாடம் நடத்த வேண்டிய சிலபஸ் முடிப்பதை யோசிக்கவே நேரமில்லை…உன் நோட்டுப் புத்தகத்தை யார் எடுத்தார்கள் என்பது என் வேலையா என்கிறது ஆசிரியர் குரல். பள்ளி வாட்ச்மேனிடம் சென்று கேட்கும் இடம் சுவாரசியம் மிகுந்தது… அதெல்லாம் எனக்குத் தெரியாது…ஆனால் என்னை மீறி ஒரே ஒரு நோட்டுப் புத்தகம் கூட இந்த ‘கேட்’ டைத் தாண்டிப் போயிருக்க முடியாது என்கிறார் அவர். எல்லா இடங்களிலும் தேடித் பார்த்து விட்டு உட்கார்ந்தால், இந்தச் சிறுமியின் தோழி ஒருத்தி அடுத்த வகுப்பில் இருப்பவள், அவள்தான் எடுத்துப் போயிருப்பாள்….”உன் அழகுக் கையெழுத்தை பார்க்கத் தான் கொண்டு போனேன்” என்கிறாள் அவள். நீ ஏன் திருடினாய் என்கிறாள் இவள். அது எப்படி திருட்டாகும், மாலையில் திரும்பக் கொண்டு கொடுக்கலாம் என்று நினைத்தேன் என்கிறாள் அவள். புத்தகத்தைத் தொலைத்தவர் சொல்லும் பதில் இதில் முக்கியமானது: “கேக்காம ஒரு பொருளை எடுத்தா அது திருட்டு தான்.”

இரண்டாவது புத்தகம் journal of Helen Bee என்பது. ஒரு பத்திரிகையாளர் சொல்வது போன்ற கதை. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் என்னென்ன இருக்கும், என்னென்ன அடிப்படை விஷயம் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் இருப்பதைக் காண முடியும்….வீட்டில் இருக்கும் எல்லாரையும் பற்றிய செய்திகள் அந்த பத்திரிகையில் இருக்கும். அதன் ஆசிரியர் யோசிக்கிறார்… வீட்டின் நாய், பூனை குறித்தும் செய்தி போட இருக்கிறோம்…அவற்றுக்கோ படிக்கத் தெரியாது…தன்னைப் பற்றி என்ன செய்தி வந்திருக்கும் தெரியாது…என்ன செய்வது? எத்தனை அறம் சார்ந்த அம்சம் பாருங்கள்…சம்பந்தப் பட்டவருக்கும் தெரிய வேண்டும் என்று நினைப்பது…பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்: சரி, எழுதி முடித்ததும் இரண்டையும் வரவழைத்து, உன்னைப் பற்றி எழுதி இருக்கிறேன்..அது இது தான் என்று இரண்டுக்கும் வாசித்துக் காட்டி விடுவது என்று முடிவெடுக்கிறார். என்ன உன்னதமான விஷயம்.

மூன்றாவது புத்தகம், Deliberations .ஒரு ரஷ்ய புத்தகம். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் எழுதி இருக்கும் 62 பக்கங்கள் கொண்ட புத்தகம். அவர் ஒரு வேலைக்காக தொழிற்சாலை ஒன்றுக்குச் சென்று வருகிறார்…அப்படி என்றால் படிக்கவே இல்லையா, பள்ளி முடித்ததும் போகிறாரா என்பது நமக்குத் தெரிவதில்லை. அது ஒரு கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை. வண்டியைப் பிரித்துப் பார்க்கும் போது, வேக வேகமாக ஸ்க்ரூ எல்லாம் கழற்றிப் போடுவார்கள், தொழிலாளர்கள். அவற்றை சைஸ் வாரியாக தனித்தனியாக அடுக்கி வைக்கவேண்டிய வேலையை இந்தச் சிறுவன் செய்கிறான். பிறகு வண்டியின் பாகங்களைப் பொருத்தும்போது வசதியாக இருக்கும் என்பதற்காக இந்த வேலை. அதற்கு அவனுக்குக் கூலி கிடைக்கிறது. அவன் ஏன் அங்கே வேலைக்குச் செல்கிறான் என்பது பிறகு சொல்லப்படுகிறது. பள்ளியில் ஆசிரியர் அவனை மிகவும் கோபமாக திட்டி விடுகிறார்…எப்படியாவது அவரை தாஜா செய்து அவர் மனத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பது சிறுவனின் ஏக்கம். அதற்குப் பிறகு அவன் பள்ளிக்கு மட்டம் போட்டுவிடுகிறான்…அவன் வேலைக்குப் போவதை அவன் தாய் ஊகித்து விடுகிறாள்..அதுவும் சுவாரசியமாக! வீட்டில் காய்கறிகளை நறுக்கும்போது சைஸ் வாரியாக அவன் அடுக்கி வைப்பதைப் பார்த்து அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது…பள்ளிக்குச் சென்று பார்த்தால் அவன் அங்கே செல்வதில்லை என்று அறிகிறாள்…அப்புறம் அவனை அழைத்துக் கேட்டதும் அவன் ஒரு குறிப்பிட்ட நாள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிறான்…ஆசிரியர், ஓ மீண்டும் வந்துவிட்டாயா என்று கேட்கிறார். இவனோ கைகளைப் பின்புறமாக மறைத்துக் கொண்டு தலையாட்டுகிறான். கையில் என்ன என்று அவர் கேட்கும்போது கைகளில் இருக்கும் இரண்டு புத்தகங்களைக் காட்டுகிறான்…அவர் அசந்து போய்விடுகிறார்..தமது தேர்வு ஒன்றிற்காக அவருக்குத் தேவைப்படும் புத்தகங்கள் அவை…எங்கிருந்து கிடைத்தது, எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்..அந்தப் புத்த்கங்களுக்கான விலையைத் தானே ஈட்ட வேண்டும் என்றே சிறுவன் வேலைக்குச் செல்கிறான். அதை விளக்கும் இடம் தான் deliberations. அடுத்தது, உலகை மாற்றிய 10 பேர். மாதுரி என்ற சிறுமி எழுதியது. பெயரைப் பார்த்ததும், அந்த பத்து பெயர் யார் யாராக இருக்கும் என்று நான் எத்தனையோ பெயர்களை மனத்தில் கொண்டு வந்தேன்…அரிஸ்டாடில் தொடங்கி, மலாலா வரை. பெரிய அதிர்ச்சி. அவர்கள் பெயர்கள் எதுவுமே உள்ளே இல்லை…அப்படியானால் யார் யார் பெயர்கள் அவை? டிம் பெர்னர்ஸ் லீ என்று ஒரு பெயர். யார் அவர்…இணையதளத்தைக் கண்டு பிடித்தவர். இப்படியாக பல நவீன உருவாக்கங்களை செய்தவர்கள் பெயர். முக்கியமான ஒரு வரலாறு இருக்கிறது அதில், சபீர் பாட்டியா என்பது பத்தாவது பெயர். அவர்தான் ஹாட்மெயில் உருவாக்கியவர். இந்தியாவைச் சார்ந்த அவர் அப்போது சிலிகன் வேலியில் இருந்தார். அந்தக் கண்டுபிடிப்பைத் தமக்கு விற்றுவிடுமாறு கேட்டு பில் கேட்ஸ் அவரைத் தேடி அவர் இல்லத்திற்குச் செல்கிறார். ஆனால் பாட்டியா மறுத்துவிடுகிறார். என்ன விஷயம் என்று பெற்றோர் கேட்கும்போது தமது படிப்பு தொடர்பான ப்ராஜெக்ட் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் பின்னர் பல மடங்கு அதிக தொகைக்கு அதை விற்கிறார் பாட்டியா போன்ற நுணுக்கமான செய்திகளை இந்த நூல் பேசுகிறது.

ஓமகுச்சி என்னும் ஜப்பானிய புத்தகம் அடுத்தது. இதை எழுதியவர் 1968ல் இறந்துவிட்டார் என்று எழுதப் பட்டிருக்கிறது. 12 வயது சிறுவன் எழுதியது. முதல் வரியே, எங்கள் ஆசிரியர் தாமதமாக வந்தார் என்று தொடங்குகிறது. அடுத்த பத்தி, எப்போதும் போலவே அவர் தாமதமாகத் தான் வந்தார் என்கிறது. இப்படி தனது ஆசிரியரைப் பற்றி இப்படி எழுதும் ஒரு வித்தியாசமான நூல். விஷயம் என்னவெனில், அந்த ஆசிரியர் ஓரிடத்திற்குத் தாமதமாகச் சென்று இறங்குகிறார்..அங்கே அப்போதுதான் குண்டு வெடித்திருந்தது. ஹிரோஷிமா! அவர் உடலில் ஏற்படும் பாதிப்புகளோடு புறப்பட்டு தமது ஊருக்குத் திரும்புகிறார். அங்கும் தாமதமாகப் போய்ச் சேருகிறார். அந்த ஊர், நாகசாகி. அங்கேயும் அப்போது குண்டு வெடித்து விட்டிருக்கிறது. அப்படியும் கடுமையான பாதிப்புகளோடு உயிர் தரித்திருக்கிறார். அவரால் தேடி அடையாளம் கண்டு பிடிக்கக் கூடியதாக ஒரு பள்ளிக்கூடம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. உயிர் பிழைத்த சிறுவர்கள் மிகச் சிலர் அங்கே வந்து பார்க்கையில், தாமாக ஆசிரியராகத் தம்மை நிறுவிக் கொண்டு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறார். இந்தச் சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக கதிர் வீச்சின் பாதிப்புகளால் மரித்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். அவர் மட்டும் இப்போதும் மிஞ்சி வாழ்கிறார்…ஏனெனில் அவர் எப்போதும் தாமதமானவர் என்கிறது நூல். இந்த நூலை எழுதியவரும் இறந்து போனபின்னும் அந்த ஆசிரியர் சில காலம் வாழ்ந்திருந்தார் என்பது ஒரு குறிப்பு.

நிறைவாகச் சொல்ல வேண்டிய புத்தகம், I am not in the list என்பது. இது மதுரைச் சார்ந்த மாணவர் எழுதிய ஒரு கட்டுரையின் நூல் வடிவம். நூல் முழுக்க ஆங்கிலத்தில் இருந்தாலும், அடிக் குறிப்புகள் முழுவதும் தமிழில் தரப்பட்டுள்ளன. 2004ல் டாக்டர் அப்துல் கலாம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் பங்கேற்க வருகிறார். அப்போது நானும் அங்கிருந்தேன். விழா முடிந்ததும், கீரைப்பாளையம் எங்கே இருக்கிறது என்று கேட்டார். சிதம்பரத்தில் இருந்து மிகவும் அருகே இருக்கிறது என்றேன். அங்கே போகவேண்டும் என்ற அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது. ஆனந்தி என்ற சிறுமி அவருக்கு எழுதிய கடிதம் அது. எங்கள் ஊர், உள்ளபடியே ஒரு சேரிப் பகுதி. ஆனாலும் இங்குள்ள 140 வீடுகளிலும் கழிப்பறை வசதி செய்யப்பட்டு விட்டது. எங்கள் ஊர்த் தலைவர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். உங்களது அறிவுரையை வற்புறுத்தி ஊர்க்கார்கள் கேட்டுக் கொள்ளவே நடந்திருக்கிறது…..நீங்கள் அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கும் அந்தக் கடிதத்தின் கடைசி வரி, ஆனால் எங்கள் ஊருக்கெல்லாம் நீங்கள் எங்கே வரப் போகிறீர்கள்? என்று முடிந்திருந்தது.

கலாமின் மெய்க்காவலர்கள் அனைவரும் அதற்கு வழி இல்லை. இடமில்லை என்று மறுத்துவிட்டனர். ஆகிருதி மிகுந்த சர்தார்ஜி ஒருவர், அய்யா நீங்கள் தேசத்தின் தலைவர், President. உங்களைப் போன்ற வேறு நாட்டுத் தலைவர்களை வேண்டுமானால் போய்ப் பார்க்கலாம். அல்லது விழாக்களுக்குச் செல்லலாம். மற்றபடி வேறு யாரையும் சென்று சந்திக்க அரசியல் அமைப்பில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்.

அன்று இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் மெய்க்காவலர்களோடு சேர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில், கலாம் மெதுவாக இப்படி சொல்கிறார்: சர்தார்ஜி, நான் பிரசிடெண்ட். வேறு ஒரு பிரசிடெண்டைத் தான் பார்க்க வேண்டும் என்றீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஊர்த் தலைவரும் ப்ரெசிடெண்ட் தானே…அவரைப் பார்க்க என்ன தடை ? அவ்வளவுதான் பதிலே இல்லை..மறுநாள் கீரப்பாளையம் சென்று மக்களைச் சந்தித்துச் செல்கிறார் கலாம்.

இந்த மாணவன் கட்டுரையில், எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே…நான் கை உயர்த்தியும், கேள்வி கேட்க விரும்பியும், அவரைப் பார்க்கத் துடித்தும் என் பெயர் பட்டியலில் இல்லாமலே போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் எழுதிய கட்டுரையின் புத்தக வடிவம்தான் அது.

வாசியுங்கள்…குழந்தைகளின் நூல்களையும், குழந்தைகளையும் வாசியுங்கள்……

இரா நடராசன் அவர்களது பேச்சு இது….
தொகுப்பு : செ.கவாஸ்கர், எஸ்.வி.வேணுகோபால்

Related posts

Leave a Comment