You are here

சீதைக்கு ராமன் சித்தப்பா…

சீதைக்கு ராமன் சித்தப்பா…ச.சுப்பாராவ்

scion coverவரவர நாட்டில் வெளிவரும் மறுவாசிப்புகள் மறுவாசிப்பு என்ற வகைமை பற்றிய நமது புரிதலையே கேள்விக்குள்ளாக்குகின்றன. மக்களால் காலம் காலமாக ஏற்கப்பட்ட ஒரு இதிகாசப்பிரதியின் மூலக்கதைளை ஆதாரமாகக் கொண்டு, அதில் விடுபட்ட அம்சங்களை இட்டு நிரப்புவதும், மூலப்பிரதி அன்றைய சமூகச் சூழலில் படைப்பாளி தன்னையறியாமலோ, அல்லது வேண்டுமென்றோ சொல்லாமல் அமைதிகாத்துவிட்ட சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவதும்தான் மறுவாசிப்பு என்பது முற்போக்காளர்களின் புரிதல். ஆனால், நாடு முழுவதும் அறிந்த ஒரு இதிகாசத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு, சொல்லப்பட்ட கதையை தன்னிஷ்டத்திற்கு மாற்றி எழுதும் போக்கும் இன்று எழுந்துள்ளது. அதற்கு ஏகப்பட்ட வரவேற்பும் இருக்கிறது என்பது அதனினும் கொடுமை.

இந்த புதிய வகையில் சமீபத்தில் வந்துள்ள மிகப் பிரபலமான நாவல் ஷயான் ஆஃப் இக்ஷ்வாகு (Scion of Ikshvaku – இக்ஷ்வாகுவின் வாரிசு) என்ற அமிஷ் திரிபாதியின் நாவல். சீதையை ராவணன் தூக்கிச் செல்லும் கட்டத்திலிருந்து பின்னோக்கு உத்தியில் ( flashback) கதை சொல்லப் படுகிறது. இலங்கை அரசன் ராவணனுக்கும், அயோத்தி அரசன் தசரதனுக்கும் மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்வது தொடர்பாக சண்டை. ராவணனுக்கும், தசரதனுக்கும் நடக்கும் போரில், தசரதன் தோற்று ஓடிவரும் சமயத்தில்தான் ராமன் பிறக்கிறான். தசரதன் இந்தக் குழந்தையின் துரதிருஷ்டத்தால்தான் தனக்கு தோல்வி நேர்ந்ததாக நினைத்து, குழந்தையையும், அதன் தாய் கோசலையையும் வெறுக்கிறான். பாயஸக் கதைகளெல்லாம் இல்லாமல், ராம, லட்சுமண, பரத சத்ருகனர்கள் நேரடியாகத்தான் பிறக்கிறார்கள். கூனி மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நடத்துகிறாள். அவள்தான் இங்கு இந்தியாவில் ராவணனின் பினாமியாக இருக்கிறாள். அவளது மகள் ராமன் சகோதரர்களிடம் அன்பாகப் பழகுகிறாள். அவளை ஒரு கும்பல் கற்பழித்துக் கொன்றுவிடுகிறது. முக்கியக் குற்றவாளி மைனர் என்று சொல்லி ராமன் அவனை விடுவித்துவிட, கூனி கடுப்பாகிறாள். இப்படியாக ராமகாதையில் நிர்பயா கதையும் நுழைகிறது. வசிஷ்டர் ஏதோ திட்டத்தோடு இருக்கிறார். அவரை யார்யாரோ அவ்வப்போது ரகசியமாகச் சந்தித்துப் பேசுகிறார்கள். ராமன்தான் நம் திட்டத்துக்கு முக்கியம் என்கிறார்கள். நடுவில் விஸ்வாமித்திரர் ஒரு கோஷ்டியோடு வருகிறார். அவரும் ஏதோ ரகசிய ஆலோசனைகள் பல செய்கிறார். அவர் கோஷ்டியும் நம் திட்டம் நிறைவேற ராமன்தான் மிகவும் முக்கியம் என்கிறது. ராமன் விஸ்வாமித்திரரின் வேள்வி காத்தல், சுயம்வரம், சீதையை மணமுடித்தல் எல்லாம் நல்லவேளையாக ஒரிஜினல் கதையில் இருப்பது போலத்தான். ஆனால், என்ன! அமிஷ் திரிபாதி இங்கு வேறொரு ட்விஸ்ட் வைக்கிறார்.

சுயம்வரத்திற்கு ராவணனும் வந்து தோற்றுப் போகிறான். தோற்ற ஆத்திரத்தில், மிதிலையை முற்றுகை இடுகிறான். ஜனகரின் படை மிக பலவீனமானது. வேறு வழியில்லாமல், ராமன் விஸ்வாமித்திரரின் அறிவுரைப்படி ஒரு பயோலாஜிகல் வெப்பனை ஏவி (!) எந்த சேதமும் இல்லாமல், ராவணன் படையை மட்டும் அழித்துவிட, ராவணனும், கும்பகர்ணனும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள். ஆனால், வெகுகாலம் முன்பே அந்த பயோலாஜிகல் வெப்பன் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அதை பயன்படுத்த பல்வேறுவித நிபந்தனைகளை பரமசிவன் விதித்து வைத்திருக்கிறார். இப்போது ராமன் அந்த நிபந்தனைகளை மீறி மாமனாரைக் காப்பாற்ற அந்த அஸ்திரத்தைப் பயன்படுத்திவிட்டான். எனவே அவன் தான் கானகம் செல்லப் போவதாகச் சொல்கிறான். ஏற்கனவே ராமன் மேல் கோபத்தில் இருக்கும் கூனி, பரதனை அரசனாக்கி, ராமன் மீண்டும் வராதவாறு செய்துவிடு என்று கைகேயியை உசுப்பேற்றிவிட, அப்படியே நடக்கிறது. சீதைக்கு ஜடாயு தலைமையிலான ஆதிவாசிகள் கூட்டத்தோடு ஏதோ தொடர்பு இருக்கிறது. அவள் ஜடாயுவைக் கூப்பிட்டு, எல்லாம் நம் திட்டப்படிதான் நடக்கிறது. ராமனுடன் நான் காட்டிற்கு வருகிறேன். பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய் என்று சொல்ல, அதன்படியே ஜடாயு தலைமையில் ஆயுதமேந்திய 15 பேர் கொண்ட குழுவின் பாதுகாப்புடன் ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் காடு செல்கிறார்கள். தாடகை போன்ற அரக்கர் கூட்டமும் ராமன்தான் தம்மை உய்விக்க வந்தவன் என்கிறார்கள். விபீஷணனும் சூர்ப்பனகையும் ராவணனுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்ததாகச் சொல்லி ராமனிடம் அடைக்கலம் கேட்டு வருகிறார்கள். ஒரிஜினல் கதையில் வந்தது போல சூர்ப்பனகை ராமன் மீது காதல் கொள்ளுதல், மூக்கறுத்தல் எல்லாம் உண்டு. தங்கை மானத்திற்கு பழி வாங்க, ராவணன் சீதையைக் கடத்திச் செல்வதுடன் இந்த பாகம் திடீரென்று முடிந்துவிடுகிறது. இன்னும் 5 அல்லது 6 பாகங்களில் பாக்கிக் கதை வருவதாக இணையச் செய்திகள் கூறுகின்றன.

large_amish_tripathiஇந்தக் கதையில் அமிஷ் சுற்றும் ரீலுக்கு அளவேயில்லை. ஓரிடத்தில் சத்ருகனன் ஈசாவாஸ்ய உபநிஷத்தைப் படிப்பதாக வருகிறது. உண்மையில் ராமன் காலத்தில் உபநிஷதங்கள் கிடையாது. அடுத்ததாக சுக்ராச்சாரியார் பற்றி அமிஷ் சொல்லும் ஒரு திடுக்கிடும் தகவல். சுக்ராச்சாரியார் எகிப்தில் பிறந்தவர். ஆம்! நான் தவறாக தட்டச்சு செய்துவிடவில்லை. புத்தகத்தின் 89 ம் பக்கத்தில் இருப்பதைத்தான் சொல்கிறேன். நிச்சயமாக எகிப்துதான். பெற்றோரால் கைவிடப்பட்ட அவரை அங்கு சென்ற ஒரு அரக்கர் குல இளவரசி ( அவள் ஏன் தேவையில்லாமல் எகிப்து சென்றாள் என்ற என் சந்தேகத்திற்கு நாவலில் விளக்கம் இல்லை!) அவரை இந்தியா எடுத்து வந்து வளர்த்து அசுரகுலத்தின் குருவாக உயர்த்துகிறாள். அயோத்தியில் ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறார்கள். கூனியின் மகள் ராம சகோதரர்களுக்கு ராக்கி கட்டுகிறாள். அசுரர்களின் பூர்வீக ஊர் அயோத்தி. எனவே ராமன்தான் அசுரகுலத்திற்கு இயல்பான தலைவன். ஆனாலும் அவன் விஷ்ணுவின் அடுத்த அவதாரம் என்ற வகையில் மொத்த இந்தியாவிற்கும் தலைவனாக மாறுகிறான். சீதைதான் ஜனக மஹாராஜாவின் பிரதம மந்திரி. மிதிலையில் நீராலைகளின் மூலம் ஏரியிலிருந்து நீரை இறைத்து நகர் முழுவதும் குழாய்களின் மூலம் விநியோகித்தார்கள். அதுபோக, பாதாளச் சாக்கடை வசதியும் உண்டு. சீதை ராமனைவிட வயதில் மூத்தவள். கதையின் நடுவே வரும் மிக முக்கியமான வரிகள் – ஆன்மீக அளவில்தான் சமத்துவம் இருக்க முடியும். நடைமுறை உலகில் மக்கள் எப்படி சமமானவர்களாக இருக்க முடியும்? கடவுள் எந்த இரு உயிர்களையும் சமமாகப் படைப்பதில்லை. சிலர் அறிவில் சிறந்தவர்கள். சிலர் போர்க்கலையில். சிலர் வியாபாரத்தில். சிலருக்கு எடுபிடி வேலைதான் செய்ய முடியும். அமிஷ், சுற்றி வளைத்து நீர் எங்கே வருகிறீர் என்று எமக்குப் புரிகிறது!

இந்த நாவல் குறித்து இத்தனை விரிவாக எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. வெளியான 4-5 மாதங்களிலேயே இந்த நாவல் 40 கோடி ரூபாய்க்கு 17 லட்சம் பிரதிகள் விற்றுவிட்டது. அமிஷ்தான் இந்தியாவின் டோல்கியன் என்கிறது பிஸினஸ் ஸ்டாண்டர்ட். அவர்தான் கிழக்கத்திய நாடுகளின் பாலோ கொலோ என்கிறது பிசினஸ் வேர்ல்ட். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நம் இதிகாசங்களை நல்லபடியாக அறிமுகப்படுத்தியதற்கு நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்கிறது மற்றொரு பத்திரிகை. அனைத்திற்கும் மேலாக, அமேஸான் தனது கிண்டில் பேப்பர் வொயிட் விளம்பரத்திற்கு அமிஷைத்தான் பயன்படுத்துகிறது. வாசக அன்பர்கள் டிவியில் பார்த்திருக்கக்கூடும். இன்னும் பாக்கி இருக்கும் 4-5 பாகங்களை நினைத்தால் எனக்குத் தலைசுற்றுகிறது.

இராமாயணத்தைத் தன் இஷ்டத்திற்கு மறுவாசிப்பு செய்து, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு அதை நல்லபடியாக அறிமுகம் செய்யும் முயற்சியில் அமிஷ் ஒன்றை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார். அதை நான் தலைப்பாக வைத்து விட்டேன்!!!

Related posts

Leave a Comment