You are here

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி

சோ. மோகனா

10709-odukkappattavarkalin viduthalaikkana“கல்வி என்பது வெறும் பாடத்தை மட்டும் படிப்பதல்ல; உலகை,மக்களை, தனது சூழலை,இயற்கையை, இருத்தலைக் கற்பித்தலும் கல்வியே.”…. பாவ்லோ ப்ரையர்

” மனித இருப்பு எப்போதும் மௌனமானதாகவே இருக்க முடியாது.உலகையும், சமூகத்தையும் மாற்றி அமைக்காத பேச்சும் கூட மௌனமே”… பெரியார்

வணக்கம். முன்னாடி SSLC தேர்வு முடிவுகள் வந்து வீட்ல துக்கம் கொண்டாடினாங்க.. எப்படியும், இந்த வேதனையிலிருந்து விடுபட கல்வி ஒன்றுதான் ஒரே வழி என்பதை முகத்தெளிவாக அறிந்திருந்தேன். ஆனால் நான், அப்போது பாவலோ ப்ரேரையரின்.. “ஒடுக்கப்பட்டவரின் விடுதலைக்கான கல்வி” பற்றி படிக்கவில்லை

“ஆனால் எப்போதுமே கல்வி ஒன்றுதான்.,ஒருவரை எத்தனை விதமான தளைகளிலிருந்தும் விடுதலை செய்யும்” என்பதே என்றைக்கும் நிலவும் உண்மை.

மனதுக்குள் எப்படியும் மேற்படிப்பு படிப்பது என்று அதாம்பா.. கல்லூரிக்கு செல்வது என மனதுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டேன். அதற்கான திட்டத்தை தீட்டுவது செயல்படுத்துவது.. இந்த படுபாவிக படிக்க விடுவாகளா. படிப்பு வாசனையே தெரியாத அப்பாவி கிராமத்து மக்கள்.

பொண்ணப் படிக்க வச்சா எவனோடவோ ஓடிப்போயிடுவான்னு,மேல்சாதி கீழ்சாதி மக்கள் அம்புட்டு பேருக்கும் சப்ஜாடா அசைக்க முடியாத நம்பிக்கை. இதில் ஒத்த பொம்பளப்புள்ளையோட அதுவும் சின்னப் பெண்ணின் வார்த்தை எப்படி எடுபடும்? மண்டைக்குள் ஏராளமான எண்ண ஓட்டங்கள். இது முடியுமா?

எப்பாடு பட்டாவது, நல்லா சண்டை போட்டாவது படிச்சே தீரணும்னு வைராக்கியம் உருவானது. இந்த நேரத்தில் பக்கத்து தெருவில் உள்ள உயர்சாதிப்பையன்கள் சிலர். பாசாகவில்லை.. மேலத்தெருவில் உள்ள மேல்சாதி புலால் உண்ணாத பிள்ளைமார்கள் எல்லாம், என் அப்பாவிடம் வீடு தேடி வந்து..” இதப்பாரு சோமு ,நமக்கெல்லாம் இது பழக்கமில்லே. நம்ம வீட்டுப்புள்ளைகளை நல்லபடியா நல்ல புருசனா பாத்து கட்டிக்கொடுத்து நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுப்போம். இது போதாதா ஒரு பொட்டப்புள்ளக்கு நீ என்னமோ ஒன் மொவ சொல்றான்னு அலையுறே. அங்க காலேஜீக்கு போன இடத்துல, எவனையாவது பாத்து லவ்வு கழுதைன்னு ஆச்சுன்னு வச்சிக்க,பிரச்சனை ஆயிடும்பா. குடும்ப மானம் கப்பலேறிடும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு ஆவாது. அப்புறம் உன் இஷடம்”

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் ஊரில் ஒரே கொண்டாட்டம் கோடையானால்.

ஊரில் மம்மு சாமி கோவில் என்ற மன்மதன் கோயில் படையல், வழிபாடு எல்லாம் தெருவுக்குத் தெரு கோடையில்தான்.

மம்மு சாமி கோவிலுக்கும் காவடி எடுப்பதும் உண்டு. (நான் கூட சின்ன பொண்ணா இருக்கும் போது,6,7 படிக்கும்போது காவடி எடுத்து ஆடி இருக்கிறேன் journeying). இதில் 10வது நாள் மன்மதனை எரித்துவிடுவார்கள் (பின்னர்தான் அம்பு விட்டு எரிக்கப்பட்ட புராணம் தெரியும்). அதன்பின் வசதியுள்ள ஊரில், வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு குழுவாக லாவணிக் கச்சேரி நடத்துவார்கள். எங்க ஊரில் இது தொடர்ந்து எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டு வாசலில் தான் இரவு நேரத்தில் நடக்கும். ராத்திரி 12 மணிவரை நடக்கும். சில சமயம், வெள்ளாளத் தெருவிலிருந்து பணம் போட்டு பெரிய பரத நாட்டிய நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்வார்கள்.

மனதுக்குள்ளும் ஒரு லாவணிக் கச்சேரி ஓடிக்கொண்டு இருந்தது. திட்டம் உருவாகியது.
வீட்டில் ஆத்தாவிடம் (அப்பாவின் அம்மா) ஒரே ரகளை சாப்பிட மாட்டேன் என்று. ஒருநாளில் ஒரு நேரம் கூட சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டம் தான். இது கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ந்தது. பாட்டிக்கு அம்மை போட்ட உடம்புக்கு (அதான் எனக்குதான்) ஏதாவது வந்துவிடும் என பயந்தார்கள். பாட்டி ஒரு நாள் அப்பாவிடம், “தம்பீ, இவ பட்டினி கெடந்தே செத்துடுவா போல இருக்குதே. என்ன படிக்கதானே கேக்குறா? போயிட்டுப் போவட்டும் உடு” என்றார்கள். அம்மா பேச்சைத் தட்டாத மகன் எங்க அப்பா. சரி, மேலே காலேஜ்ல படிச்சுக்க என்றார்கள். அதன்பின் எனக்கு கேட்கவும் வேண்டுமா? மனசு தட்டாமாலை சுத்துது.

பின்னர் நிகழ்வுகள் கடகடவென நிகழ்ந்தேறின. கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியிலிருந்து, அப்ளிகேஷன் வாங்கியாச்சு. எப்படி ஆங்கிலத்தில் உள்ள அப்ளிகேஷனை பூர்த்தி செய்வது என்பது கூட தெரியாது. குண்டக்க மண்டக்க fill up செய்து, நானே போய் கணக்கர் பிள்ளை வீட்டில் வருமானத்துக்கு கையெழுத்து வாங்கி வந்து அனுப்பியாச்சு. ஒரு வழியாக அப்பாடா என்று ஆயாசமாக இருந்தது.கிடைக்குமா இல்லையா என்ற அச்சமே இல்லை.நிச்சயம் இந்த முதலைகளிடமிருந்து தப்பித்து, காலேஜ் படிக்க வெளியில் ஓடிவிடலாம், தற்காலிகமாக கல்யாண பிடியிலிருந்தும் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அடிநாதமாய் இருந்தது. அதுவும் நிறைவேறும் தருணம் நெருங்கியது.

அட்ரா சக்கை, கல்லூரியில் இடம் கிடைத்தே விட்டது. கணிதத்தில் நிறைய மதிப்பெண் இருந்ததால், PUC(pre-university)ல், கணித பிரிவான “A” group கிடைத்தது.

அடுத்த பிரச்சினை பூதாகாரமாக எழுந்தது. அம்மாவின் அம்மா வீட்டில் வசதிதான். போய்க் கேட்டதற்கு கையை விரித்து விட்டார்கள். அப்பாவின் தங்கை அத்தைதான் கொஞ்சம் உதவுவதாக ஒத்துக் கொண்டார்கள், என்னை வளர்த்த பாசமும் உண்டு என்பதால்.

ஒரு வழியாக முதல்நாள், குடந்தை கல்லூரிக்கு, அப்பாவின் உறவினர் என்ற சித்தப்பாவுடன் கல்லூரிக்குப் புறப்பட்டுப் போயாச்சு.

கல்லூரி கும்பகோணம் மகாமக குளக்கரையில் அமைந்திருந்தது. அது பெரிய கல்கட்டிடம்..கல்யாண முற்றம் உள்ள ஏதோ பெரிய மடம். தற்காலிகமான கல்லூரி. நுழைந்தவுடன், இடது பக்கம் அலுவலகம்.. செக்க செவேல் என, குண்டாக குட்டையாக.
வெள்ளி முடிகளை இறுக கொண்டையாக்கி, சிறிது இளகிய புன்சிரிப்புடன் பிரின்சிபல் மேடம். அவரிடம் கையெழுத்து வாங்கி, காலேஜில் சேர்ந்தாச்சு.

நெசமாவே காலேஜ்லேயும் சேந்தாச்சே. இது நெசந்தானா? நினைக்கவே பிரமிப்பாக பிரம்மாண்டமாக உள்ளது.

சோழம்பேட்டை சோமு என்ற சாதாரண தபால்காரரின் மகள் மோகனா ..அந்தக் கிராமத்தில் கல்லூரியில் சேர்ந்த முதல் கல்லூரி மாணவர் என்றால் நினைக்கவே மலைப்பாக உள்ளதே.ஆனால் இதுதான் உண்மை.. அங்குள்ள மேல்சாதி மக்களும் கல்லூரியில் படிக்காத சூழலில். ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, கல்லூரிக்கும் பின் அதனையும் தாண்டிச் சென்றது ஒரு தடை தாண்டிய ஓட்டம் தான். பின்னர், உலகம் புகழ்ப்பெற்ற நூலான பாப்லோ பிரையரின் ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி படித்தபோது அது வெறும் எழுத்தாக இல்லை. எனது வாழ்வாக இருந்தது. (தொடரும்)

Related posts

Leave a Comment