You are here
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

ஆயிஷா இரா.நடராசன்
1. கல்வியும் கற்கண்டாகும் கவி.பிரியசகி மற்றும் அருட்பணி ஜோசப் அரும்பு வெளியீடு |ரூ 250.
கற்றல்குறைபாடான டிக்லெக்சியா பாதிப்பு குறித்த பாடப்புத்தகம் இது. ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய நூல். குழந்தைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக் கொணரவே கல்வி, கல்வி; அவர்களது பலவீனங்களையே சொல்லிக்காட்டி பரிகசிக்கவல்ல… எப்போதாவது வெளிவரும் கல்வி குறித்த நல்ல புத்தகம் இது.151142422

2. எளிமையான சிகரம் எங்கள் நல்லக்கண்ணு
கே. ஜீவபாரதி – ஜீவா பதிப்பகம் | ரூ 180
விடுதலைப் போராட்டவீரர், விவசாய சங்கத் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாய தோழர்…. நல்லக்கண்ணு பற்றிய அபூர்வப் பதிவு. கவிஞர்கள், கலைஞர்கள், அமைப்பு, தோழமை உள்ளங்கள், தலைவர்கள் பலரும் அவரைப்பற்றிப் பகிர்ந்துள்ளார்கள்… இன்றும் தன்னை அடித்தள பணிக் குழுவில் ஒருவராக கருதும் மனிதநிலையின் பாடம்… இடது சாரித் தத்துவமாய் வாழும் ஒருவரது எழுத்து சாட்சியமாய் இந்நூல் மின்னுகிறது. இந்த சிகப்பு அதிசயத்திற்கு வயது தொன்னூறா!nalakannu_350

3. அகிலன் சிறுகதைகள் (இரு தொகுதிகள்)
தாகம் வெளியீடு | ரூ 1300
அகிலன் சற்றேறக் குறைய 200 கதைகள் எழுதினார். பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி கலைமகள் என அவை வெளிவந்தன. பல கதைகள் யதார்த்த சித்தரிப்புகள் வாழ்வின் பகடையாகி சாதாரண மனிதர்கள் வதை படுவதே என்றாலும் இதமான எழுத்து …. அதிகம் சாடாத சரக்கு… எனினும் வாசிப்புக்கு இனிமை சேர்க்கின்றன.akilan-sirugathai-1

4. போர்க்குதிரை
லாரி மேக்மர்தரி |எஸ். பாலச்சந்திரன் | புலம் வெளியீடு
அமெரிக்க பூர்வீக இனமக்களை பழங்குடிஇன அப்பாவிகளை ஐரோப்பிவிலிருந்து சென்று குடியேறிய வெள்ளையர்கள் எப்படி எல்லாம் கொடுமைப் படுத்தினார்கள் என்பதற்கான ரத்தசாட்சியம் இந்த நாவல். லாரி மேக்மர்தரி புலிட்சர் விருதுபெற்ற எழுத்தாளர். போர்க்குதிரை வீரர் சூவின் கதையை மிக நேர்த்தியாக தமிழுக்குத் தந்திருக்கிறார். எஸ்.பா. கண்ணீர் பதிப்பு!1558590_219694681551371_514455600_n

5.கறுப்பழகன் அன்னா சிவெல் | யூமா.வாசுகி புக் ஃபார் சில்ரான்
உலகின் தலை சிறந்த கதைகளில் ஒன்று. The black – beauty. குதிரை ஒன்று தனது சொந்தக் கதையை சொந்தமொழியில் சொல்லச் சொல்ல…. குதூகலிக்கும் பொழுதுகள்… குமுறும் நாட்கள்… துயரமான காயங்கள்… துடிக்கவைக்கும் இழப்புகள்; இது கறுப்பழகனான அந்த குதிரையின் கதை மட்டுமே அல்ல… மனிதர்களின் கதைதான். யூமா. வாசுகி மிக நேர்த்தியாய் மொழிபெயர்த்திருக்கிறார்.black_beauty

6. ஜெயகாந்தன் உரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஜெ.கே உரைகளும் அவரது எழுத்தை போலவே கூர்மையானவை. இந்த நூலில் ஈரோட்டு உரைகள் இடம் பெற்றுள்ளன. புத்தகம் எனும் தலைப்பில் அவர் தரும் வைத்தியம் தனி நூலாக வரவேண்டும். உரையை வரிக்குவரி தருகிறார் ஸ்டாலின் குணசேகரன். நேரில் ஜெகே பேசுவதுபோலவே உள்ளது.Picture_429__01112_zoom

7. பால்கட்டு
சோலை சுந்தரபெருமாள் | பாரதி புத்தகாலயம்
சோலை சுந்தரபெருமாள் நம் கையைப் பிடித்து நலிந்த கிராமங்கள் வழியே பேரழிவுக்கு ஆட்படுத்தப்பட்ட மரபார்ந்த தொழில் செய்யும் அப்பாவி மக்களை முன்வைத்து பயணிக்க வைத்துள்ளார். நம் மனம் கொதிக்கிறது. ரத்தம் உறைந்து போகிறது… அங்கேயே தங்கி விடுகிறது வாசிப்பு… அங்கே பன்னாட்டு வணிகம், என் இந்தியாவின் இதயத்துடிப்பான விவசாயத்தை அலற அலறக் கொன்று ரத்தம் குடிக்கிறது. யதார்த்த வாதம் உச்சம் பெறும் நவீனம் இது.paalkatdu

8.வீர வாஞ்சியும் ஆஷ்கொலையும்
செ.திவான் | ரூ 200 சுஹைனா பதிப்பகம்
மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து ஆஷ் எனும் கலெக்டரை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். ஆனால் அந்த கலெக்டர் ஆஷ் செய்த அட்டூழியங்களைக் இந்த நூல் வரிசைப்படுத்துகிறது… ஏராளமான ஆதாரங்களுடன். அத்தோடு 14 வீர இளைஞர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை எதிர்த்து நீதி மன்றத்தில் வ.உ.சி, அவர்களுக்காக வாதாடினார் என வாசிக்கும் போது மெய்சிலிர்க்கிறது… ஆஷ் – வழக்கு முழுமையாக அலசப்படும் முதல் பதிப்பு இது.

9. நாடு… சுயசார்பு… உயர்கல்வி….
பிரபாத் பட்நாயக் | வ. பொன்ராஜ் |
பாரதி புத்தகாலயம்
மைய்ய அரசு உயர்கல்வி முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்கிறது. உயர்கல்வி என்றால் என்ன என்கிற இடத்தில் தொடங்கும் புத்தகம் தத்துவார்த்த கேள்விகளுக்கு விரிவான விளக்கமளித்து சுயசார்பு மனிதர்களை எப்படி எத்தகைய கல்வியில் உருவாக்கமுடியும் என்பதை நிறுவுகிறது. ஒவ்வொரு பேராசிரியரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

10.தமிழக பள்ளிக் கல்வி
ச.சீ. இராஜகோபாலன் | பாரதி புத்தகாலயம்
லட்சுமண சுவாமி கமிசன் முதல் கோத்தாரி கமிசன் மற்றும் யஷ்பால் கமிட்டி என்று பிரதான கல்வி கமிசன்களில் இடம்பெற்ற கல்வியாளர் எஸ்.எஸ்.ஆர் தமிழக கல்வி குறித்து எழுதியுள்ள ஆழமான பதிவு. தேர்வு மாற்றம், தாய் மொழி கல்வி, தொழில் கல்வி போன்றவற்றில் நாம் அவரது நிலைபாட்டை அறிந்து வியக்க முடிகிறது. அரசு கவனிக்குமா?20180_1

11. விண்வெளி 1000
ஏற்காடு இளங்கோ | ஃபுக்ஸ் பார் சில்ரன்
பிரபஞ்சம் தொடங்கி பால்வளி மண்டலம், நட்சத்திரக் கூட்டங்கள், சூரியக் குடும்பம், விண்மீண்கள் என 1000 அற்புதக் கேள்விகளுக்கு அழகான விடைகளைத் தருகிறது இந்தப் புத்தகம். விண்வெளி குறித்த ஒரு பறக்கும் கம்பளம் இந்த முயற்சி.ariviyal-kalanjiyam-vinveli-1000-vinaa-vidaikal-400x400-imadz4xptzhbtfpf

12. செம்மணி வளையல்
அலெக்சாந்தர் குப்ரின் | நா. முகமது செரிபு | புலம்
ராதுகா (மாஸ்கோ) 70 களில் வெளியிட்ட அற்புதப் புதினம் இது. புலம் அதை மீண்டும் வெளியிட்டுள்ளது. செம்மணி வளையல் மாதிரி தியாகம் ததும்பும் ஒரு துயரக் காதல் கதையை படைப்பது மிகவும் கடினமானது. காதலின் தூய்மை தாங்கமுடியாத துயரத்தால் மரணத்தின் நிழல் நமது ஆன்மாவையே உடைத்து நொறுக்கி விடுகிறது.

13. வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்
அமிர்தம் சூர்யா | அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கணபதி கோயில் காக்கைகள் போஜனத்திற்கு காஜாமொய்தினை எதிர்பார்க்கின்றன கவிதைகளில் தேடல் விரிகிறது. வெடித்த வீட்டுச்சுவர்கள் கூட வளரத் துடிக்கும் தாவரங்கள் ஆடும் யதார்த்தம்… உங்களுக்கு எது வேண்டும்? ஆனாலும் இரவின் பாவத்துளிகளாமே காக்கைகள்… கவிதை தனக்கென ஒரு வழியில் சமூகத்தை நெய்து தள்ளுகிறது.

14. மெல்ல விலகும் பனித்திரை
தொ: லிவிங்ஸ்மைல் வித்யா | பாரதிபுத்தகாலயம்
தமிழில் திருநங்கைகள் குறித்த முழுமையான தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பைத் தருகிறார் வித்யா. இறக்கப்பட வேண்டியவர்கள் அல்ல… எங்கள் வலியை உணர்ந்தவர்களின் கேலியும் அறமற்ற நடத்தைகளும்… வக்கிரமான நிகழ்வுகளையும் மீறிப் பீறிடும் மனித நேயம் மூன்றாம் பாலையும் உள்ளடக்கியே தான் என்பதை ஒவ்வொரு படைப்பும் சொல்கிறது. ஆனாலும் திருநங்கைகளே எழுதத்தொடங்கும் நாள் தொலைவில் இல்லை என்பதற்கு இத்தொகுப்பு சாட்சி.download

15. கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்
டி.வி.புருஷோத்தமன் |தமிழில் மு.ந.புகழேந்தி | புக்ஸ் ஃபார் சில்ரன்
உலகக் கல்வியை ஜனநாயகமாக ஆக்கியவர்கள், வெறும் மத சம்பிரதாயமாக இருந்ததை வளர்ச்சிக்கான பிரதான சாலையாக்கி, அதை அறிவியல் முறைப்படி செப்பனிட்டவர்கள் குறித்து நூல் பேசுகிறது. ஒரு புறம் ஜான்டுவீயையும் மறுபுறம் கல்வியை மொத்த வடிவமாக கண்ட காந்தியையும் பற்றி நூல்பேசுகிறது. கல்வி எனும் வெளியில் இயங்கும் எல்லோரும் வாசிக்கவேண்டிய நூல் இது.22360

16. மொழிப்போர்
ஆர். முத்துக்குமார் | கிழக்கு பதிப்பகம்
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்திற்கு இணையானது நம் தமிழகம் கண்ட இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம். ஏழு கட்டமாய், 1938 முதல் நடந்த போராட்டத்தின் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. படைப்பாளிகள், தலைவர்கள் சமூகப் போராளிகள் என லட்சக்கணக்கானவர் களம் புகுந்த வரலாறு இது. அயல்மொழி ஒன்றை எதிர்த்து ஆதிக்க வாதிக்கு எதிராக தமிழகம் தீட்டிய ரத்த எழுச்சியின் எழுத்து வடிவம்.978-81-8493-961-3_B-01

17. சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்
பெரியார் நாயகம் ஜேசுதாஸ் | மணிமேகலை
சினிமா எனும் பலம் வாய்ந்த ஊடகம் போல் குழந்தைகள் வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்று உண்டோ. சினிமா கற்றல் ஆயுதமா… சீரழிவின் புதைமணலா என ஒரு விவாத அரங்மே நடத்தி விட்டார் நூலாசிரியர். சாலையோர சிறுவர்களின் மாலைநேர ஆசானாய் சினிமா விளங்குவதை வாசிக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. கற்றல் சூழல் பயனளிக்கும் கற்றல் முறை என நூல் பலவற்றை அலசுவதால்… சினிமாக்காரர்களும் கல்வியாளர்களும் ஏன் பெற்றோர்களும் கூட படிக்கலாம்.

18. காலம்தோறும் கல்வி
என்.மாதவன் | பாரதிபுத்தகாலயம்
இந்தியக் கல்வி மரபின் வரலாறு மிக நீண்டது…. பிரிட்டிஷ் கால இந்திய கல்வி மெஷினரிகளின் கல்வி என அடுக்கிச் செல்லும் நண்பர் மாதவன், தமிழகத்தின் அற்புதப் பங்களிப்பான காமராஜரின் மதிய உணவு பற்றியும் விரிவாக அலசுகிறார். காலந்தோறும் கல்வி கல்வியின் வரலாறு குறித்த முக்கிய நூல்.22363

19. பிளேட்டோ தத்துவப் பயணம்
ஆர். பெரியசாமி | பாரதிபுத்தகாலயம்
உயர்குடியில் பிறந்த பிளேட்டோ தன் வர்க்கத்திற்கு விசுவாசமாக இருந்தார். ஆனால் கல்லுடைக்கும் ஒரு தொழிலாளியின் மகனான சாக்ரடீசு தனது வர்க்கத்திற்கு விசுவாசமாக இருக்கவில்லை என்பனபோன்ற தெரிப்புகள் சொல்கின்றன… இந்தப் புத்தகம் எல்லா வரலாற்று நூல்களையும் போல வெறும் தகவல் குவிப்பு அல்ல… தீர்க்கமான மார்க்சீய விமர்சனப் பாதையில் பிளேட்டோவை அணுகும் நேர்த்தியான பதிவு.plato

20. யாவும் சமீபித்திருக்கிறது (கவிதை)
கடங்கநேரியான் | நெல்லை வெளியீடு
கடங்கநேரியானின் கவிதைகள் பல, தமிழுக்கு புது முகவரி அளிப்பவை. நகரமெங்கும் நிறைந்துள்ளது -சாக்கடை நாற்றம் – விரைவாக ஊர்போய் சேரவேண்டும்- குறைந்த பட்சம் பிணமாகவாவது… என்பதுபோன்ற குத்தல்கள் ஒருபுறம் நினைவில் காடுள்ள மிருகம் போன்ற புனைவுகள் மறுபுறம். அரசின் இழப்பீட்டுத் தொகை – கோப்புகளில் சயனித்திருக்கிறது என்றும் காட்சிக்கூண்டில் – நீதி எலியாய் செத்து நாற்றமெடுத்தது என்றும் வாழ்வை நினைவு படுத்துகிறார்.

21. அக்னி நட்சத்திரம்
சி. ராமலிங்கம் | அறிவியில் வெளியீடு
சூரியன் நமது சூரிய குடும்பத்தலைவன், நமது சக்தி, ஜீவனம் எல்லாம். அதைப்பற்றி முழுமையான புத்தகம். கேள்வி – பதில் வடிவத்தில் இருப்பதால் படிக்க சுலபமாக உள்ளது. என்றாலும், ஏதோ தேர்வுக்குத் தயாராவது போன்ற எண்ணத்தைத் தருகிறது. அக்னி நட்சத்திரம் அக்னிப் பரிட்சையல்ல. ஆனால் இந்தப் புத்தகம் தரும் தகவல்கள் பிரிமிப்பு ஊட்டுகின்றன.

22. பிறை – நாவல்
சி.எஸ். சந்திரிகா | தமிழில் – குறிஞ்சிவேலன் கண்மணி சென்னை
குறிப்பிடத் தகுந்த மலையாள பெண்ணிய நாவலைத் தமிழில் தந்திருக்கிறார் குறிஞ்சிவேலன். வேலையை உதறும் இளம் பெண் சித்திரா வழியே கேரளாவின் திருச்சூர் பகுதி குக்கிராமத்துப் பெண்களின் வாழ்க்கைப்போராட்டங்களை மிக நுணுக்கமாக நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர் சந்திரிகா, வயதுக்கு வரும் சித்ரா நடத்தப்படும் விதத்தை எழுதும்போது எல்லா பெண்களின் கதையாக அது பொது அவதிக் கடலில் கரைந்தோடுகிறது.

23. இந்துத்வாவின் பன்முகங்கள்
அ.மார்க்ஸ் | உயிர்மை
இன்றைய வகுப்புவாத அரசியலின் முகமுடியைக் கிழிக்கும் அற்புத நூல். சிறுபான்மையாளர் பாதுகாப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதோர் மதசார்பின்மை அரசியலின் அடிப்படைகள் …. பெண்கள் உரிமை மாற்று கருத்துக்கு எதிரான சகிப்பின்மை என பல்வேறு அம்சங்களை அலசும் ஆவணம்.28810

24. கவிஞர் தாகூர் காஞ்சி அண்ணல் | மணிவாசகர் பதிப்பகம் |
கவியோகி தாகூர் குறித்து எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டுள்ளன. நோபல் பரிசு பெற்ற இந்த வங்காள ஜீவநதியை கொஞ்சமாய் காசிச் சொம்பில் அடைத்த கங்கைபோல உலாவ விட்டிருக்கும் காஞ்சி அண்ணல் தமிழக இலக்கியச் சிற்பிகளுடன் ஒப்பிட்டு எழுத முயற்சித்திருப்பது நல்ல சகுணம்.

25 முடிவற்ற நண்பகல் தேவேந்திர பூபதி | உயிர் எழுத்து
முறியும் உறவுகள், தவிக்கும் இதயங்கள்; தேவேந்திர பூபிதியின் கவிதைகளில் நெருங்கிய மனதிற்கு அலைந்து அலைந்து சொற்கள் அருமருந்தைத் தேடுகின்றன. முன்நீர் கடல் தாண்டிய வரலாற்றை எம் பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லை. என்றும் மீத மிருக்கும் ஒரு கனவு – பிறக்காத நிலத்தில் – உன்னை அடைவேன் என்றும் கவிதைகள் நெஞ்சைத் தேடுகின்றன. ஜென் தத்துவமரபை மிக அருகே நெருங்கிய சொல்வனம் அவருடையது.mudivaRra

26. கல்விச் சிந்தனைகள் லெனின் தொ. ஏ.ஜெ.பெனடிக்ட் | புக்ஸ் ஃபார் சில்ரான்
சோவியத் ஒன்றியத்தைப் போல கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு உலகில் வேறெதுவுமில்லை என்பது உலகக் கல்வியாளர் கருத்து. கல்வி – உற்பத்தி உழைப்பு திட்டமிட்டு இணைக்கப்பட வேண்டும். பண்பாட்டைக் கட்டமைத்தமைக்காக கல்வி மட்டுமே வலுமிக்க தொரு ஊடகம். கல்வி எந்த வர்க்கத்திற்கு சார்பானது என்பதில் அரசு – கொள்கைப் பிடிப்போடு இருக்க வேண்டும் – இவை தலைவர் லெனினின் நிலைப்பாடுகள். உலகிலேயே மக்கள் யாவருக்கும் விலையின்றி கல்வி அளித்த முதல் நாட்டின் எழுச்சியை பக்கத்திற்கு பக்கம் விளங்கவைக்கும் புத்தம் இது.

27. தமிழர் நெல் (பாரம்பரிய அரிசி – சமையல் முறை)
நா. நாச்சாள் ரூ 60 ஓம் பதிப்பகம்
நமது பாரம்பரிய நெல்வகைகள் வேறு. இப்போது (ரேஷனை விட்டு விடுங்கள்) நாம் வாங்கும் நெல் அரிசி எதுவுமே 40 சதவிகிதமாவது அரிசி நஞ்சாக்கப்பட்ட உற்பத்தி முறையில் வருவது. தமிழர் நெல் – அதன் வழி வரும் உமி, உரலில் படியும் கண் முனை ரவை என எல்லாவற்றிலும் உணர்வு திகட்டாமல் தீயவிளைவின்றி விளைந்த நாட்களை புத்தகம் அலசுகிறது.

28 போயிட்டு வாங்க சார்
பேரா. ச.மாடசாமி | பாரதிபுத்தகாலயம்
1933ல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கில இதழில் வந்த good – bye mr chips – ஜேம்ஸ் ஹில்டன் எழுதியதை…. அதை வாசித்து உள்வாங்கி தமிழில் தனது பார்வையோடு குழைத்துத் தருகிறார், பேராசிரியர். கல்வி குறித்து அற்புதமான நூல் நமக்கு வாய்க்கிறது. பணி ஓய்வு என்பதே ஆசிரியர் வேலை. ஒரு சிறந்த ஆசிரியன் தன் பணியை ஒரு போதும் முடிந்தது என அறிவிக்க முடியாது. ஆசிரியன் ஒரு சமூக மருத்துவன்.gud_bye_mr_chips_copy

29. காஃப்கா எழுதாத கடிதம்
எஸ்.ராமகிருஷ்ணன் | உயிர்மை
மாபெரும் எழுத்தாளர்களை தான் நுணுக்கமாய் வாசித்த அனுபவங்களை அழகாக பிழிந்து தருவது எஸ்ரா வுக்கே உண்டான பலம். காஃப்கா, மார்க்வெஸ், லாகர்லேப், கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்து என இந்த நூலின் ஆளுமை வரிசை நீள்கிறது. ஹென்றி தோரோ உட்பட பலரது சர்ச்சைக்குரிய மறுபக்கம் விரிவாக அலசப்படுகிறது. எஸ்ராவின் எழுத்து வடிவில்…..kafka-ezhuthatha-kaditham-276x400

30.விந்தை வெள்ளி
த.வி.வெங்கடேஸ்வரன் | அறிவியல் வெளியீடு
சூரியக் குடும்பத்தில் நம் புவிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள கோள் வெள்ளி. வரலாற்றில் அது துருவ நட்சத்திரம் என அறியப்பட்ட வழிகாட்டி. ஆனால், புவியிலிருந்து சூரியன் எவ்வளவு தூரம் என அளக்கப் பயன்பட்ட கோள் வெள்ளி என்பதிலிருந்து வெள்ளிக் கோள் குறித்த பல புராண, வரலாற்று, அறிவியல் வானியல் தகவல்களை சுவையாக அடுக்கும் நூல் இது.

31.செல்வச்செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்
சி.டி. குரியன் | பாரதி புத்தகாலயம்
சர்வேதேச பொருளாதார சீர்கேடு இந்தியர்களை வதைத்து வாழ்வை மேலும் சிதைக்கிறது. பெரிய சீர்திருத்தச் சட்டங்கள் என்ற முழக்கத்தோடு வந்த உலகமயமாதல் எனும் தந்திரம், புதிய சுரண்டல் ஆயுதமாய் கார்பரேட் நிறுவன எஜமானர்களுக்கு எப்படி பயன்படுகிறது. இருவேறு உலகுகளுக்கு இடையேயான வேற்றுமையை, விரிசலை மேலும் ஆழமாக்கி மீளாத் துயரில் தள்ளியது என்பதை இதைவிட சரியாக விளக்க முடியாது.makkalin_nala_olippum

32. காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்
கவிபாஸ்கர் | புல்லாங்குழல் சென்னை
பாட்டில் எளிமை, கவிதையில் புலமை, மெட்டில் இனிமை கண்ட ஆயிரக்கணக்கான கவியரசு கண்ணதாசன் பாடல்கள் உருவான பின்னணியை சுவையாக கோர்வையாக வாசிக்கும் போது.. பாடல் வரிகள் நம்மை அறியாமல் இசைவேள்வி ஒன்றை இதயத்துள் நிகழ்த்துகின்றன. இன்றைய பட உலகம் வாசிக்கக் கூடாதா என மனம் ஏங்குகிறது.

33. வண்ணநிலவன் கவிதைகள்
மீனாள் வெளியீடு சென்னை
ஜயபாஸ்கரன் முன்னுரையில் சொல்வதைப்போல வண்ணநிலவன் கவிதையில் இருப்பதும் புரிவதும் சமகாலத்தில் நடக்கின்றன. சோறுதேடிச்சென்ற குழந்தைகள் – தீபாவளி வெடிச் சாம்பலில் உறங்கும் என்பதும் அவரவர் வானம் அவரவர்க்கேயானாலும்- அடியான் பிடியாமல் வசப்பட வழியில்லை எனும்போது யதார்த்தம் பளிச்சிடுகிறது. எனினும், நாலுவரிக்கு ஒருமுழுபக்கம் என்று அச்சாகி உள்ளது. கொஞ்சம் நெருடுகிறது.

34. 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்
வி. கனகசபை | கா. அப்பாத்துரையார் ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழரின் பழைய வாழ்க்கை முறையை மிக அற்புதமாக ஆங்கிலத்தில் ஆவணமாய் எழுதியவர் வி.கனகசபை அதைத் தமிழுக்குத் தந்திருக்கிறார் பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார். ஆச்சரியமாக இருக்கிறது. வேதாந்தம் சீவகம், நிகண்டவாதம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம், பவுத்தம் என ஆறு மெய்விளக்க தமிழர் கோட்பாடுகளை விளக்கும் பகுதி – நம் பாடப் புத்தங்களில் இடம்பெற மனம் துடிக்கிறது.

35. மௌனத்தின் சாட்சியங்கள்
சம்சுதின் ஹீரா | பொன்னுலகம்
சமீபத்தில் வாசித்த நாவல்களில் குறிப்பிடத்தகுந்த இது. இசுலாமிய இளைஞர்கள் தமிழகச் சூழலில் அனுபவிக்கும் காழ்ப்புணர்ச்சி, எதிர் கொள்ளும் வெறுப்புணர்ச்சி, சமூக முரண் இவற்றிடையே அவர்களது கடும் உழைப்பு, சமூக பொறுப்புணர்வை மற்றும் இடையறாது குழப்பும் சர்வேதேச சூழல் இவை யாவற்றையும் ஒருசேர பிழிந்து தர ஹீராவால் முடிந்திருக்கிறது. அப்பாவி மக்களின் அலறல் இந்த நாவல் முழுவதும் கேட்கிறது.samsudeen heera

36. பூமியின் பாடல்கள்
(வடகிழக்கு இந்தியக் கதைகள்)
தமிழில் – சுப்ரபாரதி மணியன் – சாகித்ய அகாடமி
வடகிழக்குஇந்தியாவின் அழகான கதைகளை தமிழில் தந்திருக்கிறார் சுப்ரபாரதி மணியன். ஒவ்வொரு கதையும் அருமை. கிறித்துவமும், மலையக மதமும், நேபாள நெடியும் வீசும் இந்தக் காற்றில் அப்போது துளிர்க்கும் – மூங்கில் கிராமிய நடனத்தின் பாரம்பரிய கலையுமாய் நாம் சிலிர்க்கிறோம்.

37.தலித் மக்கள் மீதான வன்முறை
எஸ்.விஸ்வநான் | சவுத்விஷன் புக்ஸ்
ஃபிரண்ட் லைன் தொடர்ந்து வாசிப்பவர்கள்
எஸ்.விஸ்வநாதனை உடனே அடையாளம் காணமுடியும். தலித் மக்கள் மீதான வன்முறைக்கும் அதன் ஒவ்வொரு படிநிலை கோரத்தாண்டவத்திற்கும் பின்னே இருக்கும் காரணிகளை விவரிக்கும் எழுத்து. இது குறிப்பாக அம்பேத்கர் நூற்றாண்டு எனும் அந்த ஒரு வருடத்தில் தமிழக தலித் மக்கள் எதிர்கொண்ட சூழலை அவர் எடுத்துச் சொல்லும்போது மனது வலிக்கிறது.VANMURAI_2671825f

38.ஆளற்ற பாலம்
கொண்டள்ளி கோடேஸ்வரம்மா
தமிழில்: கௌரி கிருபானந்தன், காலச்சுவடு
ஆந்திர எழுச்சி கம்யூனிசத்தின் பதிவுகள் நம்மை அதிரவைக்கின்றன. இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை முழுமையாய் அறியவைக்கும் நூல்களில் பலராலும் முதன்மையானதாக முன்மொழிய்ப்படும் நூல். கம்யூனிஸ்ட் கட்சி ஏழாக உடைந்து விட்டதே யார் கொண்டுவரப் போகிறார்கள் புரட்சியை? என இந்த வீராங்கனை கேட்கும் போது, மனம் விம்முகிறது. தெலுங்கானா போராட்டம் குறித்த பாடநூல் இது.12063593.img

39. பல்லி – ஓர் அறிவியல் பார்வை
கோவை சதாசிவம், வெளிச்சம்
நம் வீட்டுக்குள் நுழைந்த நம் சுவரின் அங்கமாகிவிட்ட பல்லிகளின் வாழ்க்கை பற்றி அறியத் தூண்டும் நூல் இது. அவை எங்கே முட்டையிடுகின்றன… பொரிக்கின்றன… டைனசார்களின் முன் வடிவமாகிய அவற்றின் ஆயுள்காலம் எவ்வளவு? அவை தண்ணீர் குடிக்குமா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தரும் நூலாசிரியர், வித விதமான பல்லிகளை அறிமுகம் செய்யும் அறிவியல் நூல்.

40. தனித்திருத்தல்
தி. திருக்குமரன் | உயிர்எழுத்து
ஈழத்துக் கவிதைகளுக்கே உரிய வலியும் குமுறும் சொற்களுமாக திருக்குமரன் வெடித்துச் சிதறுகிறார். ஊரான ஊர் இழந்தேன் – ஒத்தபனை தோப்பிழந்தேன் என ஒருதாய் பாடுவதும்… கைகள் பின்புறமாகவும் கண்கள் துணியினாலும் – இறுக்க கட்டியபடி – கடைசி வரை – அவனது ஆசைகள் எதுவும் – நடக்கவே இல்லை…. என்பன கவிதைகள் அல்ல… வரலாறு. நம்மை உறங்க விடாத கண்ணீர் வரலாறு.

41. கல்விச்சிந்தனைகள் – அம்பேத்கர்
தொ – ரவிக்குமார் | புக்ஸ் ஃபார் சில்ரன்
ஒரு சமுதாயத்தின் அடித்தட்டு மனிதர்களின் அடிமைத் தன்மைகளை நொறுக்குவதற்கு அடிப்படையான கருவி – கல்வி என்பது அண்ணல் அம்பேத்காரின் அசைக்கமுடியாத வாதம். விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த கல்விதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான விடியலை வழங்முடியும்… அதை அரசு (சர்க்கார்) மட்டுமே நேர்மையாகத் தர முடியும் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழக சீர்த்திருத்தம்வரை அம்பேத்கரின் கல்விச் சிந்தனைகளை விரிவாக அலசுகிறார் எழுத்தாளர் ரவிக்குமார்.ambethkar_copy

42. இலக்கியச் சிற்பி மீரா
இரா. மோகன் | சாகித்ய அகாடமி | ரூ 50
கவிஞர் மீரா தமிழின் ஆளுமைகளில் ஒருவர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அவரது கவிதைப் பயணம் ஊசிகள், குக்கூ, கணவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் போன்ற கவிதைத் தொகுப்புகள் மூலம் வீட்டுக்கு வீடு கவிஞர்களை உருவாக்கியதில் பல கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்த பதிப்பாளர், கவிதை இதழாசிரியர் என பல பரிமாணம் கண்ட பேராசிரியர்… பாவேந்தரின் வாரிசு என்று ஏன் அழைக்கப்படுகிறார் என்று இரா.மோகன் விவரிக்கும் இடம் மிக நேர்த்தி.

43. தமிழ்ப்பேரரசன் ராஜேந்திரன்
வெ. நீலக்கண்டன் | சூரியன் பதிப்பகம்
சோழமன்னர்களில் தனது தந்தை ராஜராஜனை விடவும் கூடுதல் வெற்றிகளைக் குவித்து தென்னிந்தியாவின் பிரமாண்ட அரசாக சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கியவன் ஒன்பது லட்சம் போர் வீரர்களைக் கொண்ட கடற்படை அமைத்து ஜாவா, சுமித்ரா, பினாங்கு என எப்படி வென்றான் என்பதை சுவாரசியமாக சொல்கிறார். சோழகங்கம் ஏரி உருவான விதம் வாசிக்க வாசிக்க யோசிக்க வைக்கிறது.

44. மக்களின் மார்க்ஸ்
ஜூலியன் போச்சார்ட் | கி.இலக்குவன் பாரதிபுத்தகாலயம்
மார்க்ஸின் மூலதன நூலை மக்கள்மொழியில், மிக லாவகமாகய் புரியவைக்கும் அரிய முயற்சியில் போர்ச்சாரட் வெற்றிபெறுகிறார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் செய்ய முயன்ற வேலையை இன்று தோழர் இலக்குவன் முடித்துவைத்திருக்கிறார். அழகான கையடக்கப் பதிப்பு. ஜெர்மன் மண்ணிலிருந்தே அந்த முயற்சியின் வெற்றி அமைந்தது வியப்பூட்டுகிறது.marx

45. நம்மை மீட்டும் வீணை
சி. விநாயகமூர்த்தி கண்ணன் |
ராஜேஸ்வரி பதிப்பகம் ரூ 50
விநாயக மூர்த்தியின் ஹைக்கூ வழுக்கும் தரையின் கூர்சல்லிகள் போல நம்மை, சுரீர் என்று நிறுத்தி துள்ளவைக்கும் மீண்டும்… ஆனாலும் வாசிப்பதை நிறுத்த முடிவதும் இல்லை.

46. அன்புள்ள அய்யனார்
சுந்தர ராமசாமி 200 கடிதங்கள் |
மீனாட்சி வெளியீடு
நண்பர் பவுத்த அய்யனாருக்கு சுந்தர ராமசாமி எழுதிய – அல்லது தட்டச்சு செய்த – 200 கடிதங்களை வாசிக்கும்போது உறவுகளின் பிரியத்தை கூர்மைமிகு எழுத்தில் கட்டமைத்த விதம் அவரது புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. இடை இடையே அவர் கடந்து சென்ற காலகட்டத்தின் இலக்கியத் தடங்களை வருடிச் செல்லும்படி முடிவதால் எளிதில் ஒன்றிப்போவதாக முடிகிறது… அரசியலையும் சேர்த்து. Hemaing way died young போன்ற சிலாகிப்புகள் சொக்கவைக்கின்றன.2013-02-13 08.35.11_thumb

47. சொல்வனம்
விகடன் தொகுப்பு | ஆனந்தவிகடன் | ரூ 495
ஆனந்த விகடனில் சொல்வனம் எனும் பகுதியில் வாசகர்கள் வழங்கிய பல்வேறு கவிதைகள் இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. பல கார்கள்/தன்னிடம் வைத்திருந்தும் – நடந்து சென்றான் – பொம்மை வியாபாரி என்பதிலிருந்து. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் – ஆயிரம் மாணவிகளுக்கு – மூன்றே கழிவறை – முன்னூறு லேப்டாப்… என்பன வெறும் கவிதைகள் அல்ல. விளாசல்கள்!

48. காதலெனும் உயிர் விசை
சு.பொ. அகத்தியலிங்கம் | இளைஞர் முழக்கம்
“ஆதலினால் காதல் செய்வீர் ஜெகத்தீரே” என்றான் பாரதி. இந்த சிறு நூலில் தோழர் அகத்தியலிங்கம் சமூகத்தைப்பிடித்த எல்லாப் பிரிவினை நோய்களுக்கும் ஒரே மருந்து, காதல் என நிறுவுவது மனதில் புதிய அரசியலை விதைக்கிறது. வாழ்க்கையை, சமூகத்தை அறிவியலாய் புரிந்துகொள்ளவும் அன்பில் அனைத்துக்கொள்வதற்கும் முடிகிறதோ அவர்கள் மட்டுமே உண்மையான காதலர்கள்…. எப்படிப்பட்ட சாட்டையடி!

49. மென்காற்றின் விலைசுகமே
வெ. இறையன்பு | NCBH
இறையன்பு சொல்லச்சொல்ல விரியும் நமது வானம்… மனதில் நதியாய்ப் பாய்ந்து ரத்தத்தில் கலப்பது புதிதல்ல… உணர்வே மருந்து, கூர்மையான நேர்மை, இறுதி, பாரதி ஆகியன உட்பட 55 கட்டுரைகள். தலைமை என்பது மகுடங்களைத் தருவது அல்ல… தழும்புகளை வாங்குவது….ம் போன்ற வரிகள் இதமாய்ப் பாடம் நடத்துகின்றன.

50. வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷ விருட்சம்
செ. கவாஸ்கர் | இளைஞர் முழக்கம்
அனைத்து அரசியலையும் இந்து மயமாக்கு; இந்துக்கள் அனைவரையும் ராணுவமயமாக்கு என்பதையும் ஒரே மொழி (ஹிந்தி) ஒரே மதம் (ஹிந்து) ஒரு நாடு (ஹிந்துஸ்தான்) என்பதையும் முன்வைத்து இன்று நம் நாட்டை சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ் பற்றி இத்தனை உக்கிரமாய் தோலுரித்துக்காட்ட ஒரு புத்தகம் இல்லை. மூன்றுமுறை தடை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் இந்த விஷச் – செடி இன்று நம் முன் ஆட்சி அதிகாரம் எனும் பலத்தோடு விரிகிறது. மதச்சார்பின்மைக்காக போரிடும் யாவரும் வசிக்கவேண்டிய ஆவணம் இது.

Related posts

Leave a Comment