You are here

மறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு

மறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு

ச.சுப்பாராவ்

எழுத்துலகில் வினோதங்களுக்குப் பஞ்சமேயில்லை. அடிப்படையான ஒரு இலக்கியப் பிரதியை மறுவாசிப்பு செய்வது மிகப்பெரிய ஒரு புதுமை என்று நாம் இன்றளவும் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஒருவர், ஒரு மறுவாசிப்புப் பிரதியை எடுத்து, அதில் விடுபட்டுப் போனதாக தான் நினைத்தவற்றைக் கோர்த்து புதியதாய் ஒரு நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். விகாஸ் சிங் எழுதியிருக்கும் பீமா – தி மேன் இன் தி ஷேடோஸ் ( பீமன் – நிழலாய் வாழ்ந்த மனிதன்) என்ற மிகச் சமீபத்திய நாவல்தான் இந்த வகைமையில் வெளியான முதல் நாவலாக இருக்கக் கூடும். எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ என்ற புகழ்பெற்ற நாவலின் மறுவாசிப்பு இது.

ஆசிரியர் குறிப்பில் தான் செய்துள்ளது சற்று அதிகப்பிரசங்கித்தனம் தான் என்று விகாஸ் சிங் ஒப்புக் கொண்டாலும் கூட, அந்த அதிகப் பிரசங்கித்தனம் படிக்கும்படியாக, ரசிக்கும்படியாக இருக்கிறது. கதையின் இயல்பான வரிசையில் இல்லாமல், பீமன் துச்சாதனனைக் கொல்லும்போது பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதாக ஆரம்பித்து, பீமனின் மரணத்தோடு முடிகிறது கதை. இரண்டாம் இடம் போல கதை முழுவதும் பீமன் இரண்டாவது இடத்தில் இருப்பதைக் காட்டிக் கொண்டே வந்தாலும் கதையின் அழுத்தம் திரெளபதியின் காதலைப் பெறுவதில் பீமன் இரண்டாம் இடத்தில் இருப்பதில்தான் இருக்கிறது. செளகந்திகா மலரைக் கொண்டு வருவது, கடோத்கஜனின் மரணம், பாரதப் போர் முடிந்த பிறகு தர்மன் பட்டாபிஷேகத்திற்குத் தயங்கியது போன்ற பல கட்டங்கள் இரண்டாம் இடத்தைப் படிக்கும் அதே உணர்வைத் தருகின்றன என்றாலும் கூட, இரண்டாம் இடத்தில் சொல்லப்படாத பீமனின் காதல்கள் இந்த நாவலின் தனிச்சிறப்பு.

சிறுசிறு சம்பவங்கள், வரிகள் மூலம் பீமனின் மனதைத் தொட்டுக் காட்டிக் கொண்டே செல்கிறது நாவல். படிப்பாளி அண்ணன், பெரிய வில்லாளனும் அழகனுமான தம்பிக்கு நடுவே பெரும்உடல் பலம் தவிர ஒன்றுமில்லாதவனாக இருக்கும் பீமனுக்கு பலராமன் கதாயுதப் போர் முறையைக் கற்றுத் தந்து பெரும் வீரனாக்குகிறான். ஒருவேளை அதீத கெட்டிக்காரத் தம்பியால் புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுக்கப்பட்டதால்தான் தன் மேல் பலராமனுக்கு அக்கறை வந்ததோ என்று தோன்றுகிறது பீமனுக்கு. ஆனால் அந்த கதாயுதம்தான் அவன் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. பாண்டவர்களது வாழ்க்கை முழுவதும் அவர்கள் எதிர்கொண்ட எதிர்பாராத ஆபத்துக்களிலிருந்து, மிக பலம்பொருந்திய, எதிரிகளிடமிருந்து அவர்களை அதுதான் காப்பாற்றுகிறது. பகாசுரன், இடும்பன், ஜயத்ரதன், கீசகன் என்று அவன் அழித்த வில்லன்களின் பட்டியல் மிகப் பெரியது. ஜராசந்தனுக்குப் பயந்து தன் சொந்த ஊரை விட்டு ஓடி எங்கோ துவாரகையில் குடியேறிவிட்ட கிருஷ்ணன் கூட தன்னால் வெல்ல முடியாத ஜராசந்தனைக் கொல்ல பீமனின் உதவியைத்தான் நாடுகிறான். எல்லாம் நடந்து கடைசியில் கிளைமாக்ஸ் யுத்தத்தில் கதாயுதப் போர் முறைக்கு மாறாக துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்துகிறான் பீமன். பலராமன் அவன் தவறு செய்துவிட்டதாகக் கடிந்து கொள்கிறான். தனது தவறுக்கு தண்டனை தந்துவிடும்படி பலராமன் காலில் விழுகிறான் பீமன். உன்னளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள என்னால் முடியாது என்று அவன் முகம் பார்க்காமல் சென்றுவிடுகிறான் பலராமன். எத்தனையோ சந்தோஷத்தைத் தந்திருக்க வேண்டிய வெற்றி, சொல்ல முடியாத துக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது. மனம் முழுக்க வெறுமை. நூறு சகோதரர்களை வரிசையாகக் கொன்றது எதனால்? ஒரு பெண்ணின் மேல் கொண்ட காதலுக்காக. அதுவும் அந்தப் பெண் தன்னைக் காதலிக்கவே இல்லை என்று நன்றாகத் தெரிந்த போதிலும் கொண்ட காதலுக்காக. கதையின் அடிநாதம் இந்த ஒருதலைக்காதல்தான்.

ஐவருக்கும் பொதுவான மனைவி என்றாலும் அர்ச்சுனன் மேல்தான் பாஞ்சாலிக்குக் காதல். பீமனோடு சேர்ந்து வாழும் காலத்திலும் கூட அவள் இவன் தன்னைத் தொடவும் அனுமதிப்பதில்லை. பேசியே பொழுதைக் கழிக்கிறாள். பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ என்று ஏங்கிச் சாகிறான் பீமன். எனினும் அவள் தொட அனுமதிப்பது மிக இயல்பாக ஒருநாள் நடக்கிறது. பீமனிடம் இடும்பி பற்றிக் கேட்கிறாள் பாஞ்சாலி. அவனுக்கும் அவளுக்குமான காதல் எப்படி வந்தது, திருமண வாழ்க்கை எப்படி இருந்தது என்பதாகப் போகும் பேச்சு ஒரு கட்டத்தில் ஒரு ராட்சசியுடன் உறவு கொள்வது எப்படி இருக்கும் என்பதாகப் போகிறது. மிக நுணுக்கமாக பீமன்- இடும்பி காதலைப் பற்றி, அவர்களது பிரிவு பற்றி அறிந்து கொள்ளும் பாஞ்சாலி, அந்தக் காதல் கதையில் உணர்ச்சிவசப்பட்டு, பீமனைத் தன்னோடு உறவு கொள்ள அனுமதிக்கிறாள். இதுவரை புராண மறுவாசிப்புகளில் நாம் பார்த்திராத அளவு ஆண்-பெண் நெருக்கம் மிக விரிவாக எழுதப்பட்டிருந்தாலும், கதையின் மாந்தர்கள் சாதாரண மனிதர்களே என்பதைக் காட்டும் காட்சியாக அவற்றை ஏற்கத்தான் வேண்டியதாக இருக்கிறது. கணவன் வேறொரு இனத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை மிக விரிவாகக் கேட்டு அறிந்து கொள்வதோடு அந்தக் கதையினால் தானும் கிளர்ச்சியுறும் பெண்ணாக திரெளபதி காட்டப் படுவது மறுவாசிப்புகளிலும்கூட இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றப் பட்டுவரும் திரெளபதியின் பிம்பத்தை உடைத்தெறிகிறது.

அதேபோல, திரெளபதியின் மற்றொரு முகமும் மிக அழகாகக் காட்டப்படுகிறது. ஐந்து கணவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றாலும், அர்ச்சுனன் மட்டுமே ஸ்பெஷல் மற்றவர்கள் எல்லாம் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வதற்கான கணவர்கள் என்று வெளிப்படையாகவே நடந்து கொள்ளும் திரெளபதி அர்ச்சுனன் சுபத்திரையைக் கூட்டிக் கொண்டு வரும் போது நடந்து கொள்ளும் விதம். நான் கறுப்பி என்று ஒரு வெள்ளைக் காக்காயைக் கூட்டி வந்து விட்டான் அர்ச்சுனன் என்று கோபித்துக் கொள்கிறாள். சமாதானப்படுத்தும் பீமனிடம் நான் எப்படி உணர்கிறேன் என்று உனக்குத் தெரியாது என்கிறாள் அவள். நாம் காதலிப்பவர் நம்மைக் காதலிக்கவில்லை என்பது எத்தனை கொடுமையானது என்று எனக்குப் பல வருடங்களாகத் தெரியும் என்கிறான் பீமன். அவள் ஏதோ சொல்ல வாயெடுத்து விட்டு பிறகு நிறுத்திக் கொள்கிறாள். அர்ச்சுனனைக் கடுப்பேற்ற இவனை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள். கடைசி வரை பீமனுக்கு இப்படித்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

போர் முடிந்து ஆட்சி அமைத்து, வயதாகிப் போய் சுவர்க்கம் புகும் காலமும் வந்துவிடுகிறது. இமயமலையில் சகோதரர் ஐவரும் பாஞ்சாலியும் மெதுவாக ஏறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பனி படர்ந்த அந்த மலையில் பாஞ்சாலியால் ஒரு கட்டத்தில் ஏற முடியவில்லை. இனி நான் வரமுடியாது. நீங்கள் செல்லுங்கள் என்கிறாள். பீமன் அவளருகே நிற்கிறான். தருமன் ஏன் நின்றுவிட்டாய்? நம் பயணம் தொடர்கிறது. என்கிறான். நான் திரெளபதிக்கு துணையாக இருக்கப் போகிறேன் என்கிறான். மஹாபிரஸ்தானத்தின் விதி முறைகளின்படி இப்படி வழியில் நிற்கக்கூடாது. பயணத்தைத் தொடர வேண்டும் என்கிறான் அண்ணன். இவள் அருகில் இருப்பதுதான் எனக்கு சுவர்க்கம். நீங்கள் செல்லுங்கள் என்கிறான். எல்லோரும் இவர்களை விட்டுவிட்டுப் போகிறார்கள். வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் அண்ணன் சொன்னதை மீறாதவன் சாகும் தருவாயில் மனைவி மீது உள்ள காதலால் மீறுகிறான். அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மஹாப்பிரஸ்தானத்தின் விதிகள் என்கிறாள் மெதுவாக. இந்த நேரத்திலாவது என் மனம் சொல்வதைக் கேட்கிறேன். விதிகள் நாசமாய்ப் போகட்டும் என்கிறான். வயதாகித் தளர்ந்து போன அவர்களது உடலை இமயத்தின் கொடூரமான பனிக்காற்று தாக்கி எலும்பைத் துளைக்கிறது. இருவரும் இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார்கள். திருமணமான நாளிலிருந்து முதன்முறையாக நிஜமாகவே மனையியோடு தன்னந்தனியாக இருக்க வாய்ப்புக் கிடைக்கும் போது மரணம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால் என்ன, அவன் அந்த கடைசிக் கணங்களில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான்.

மறுவாசிப்பிலும் உன்னதமாக ஒரு காதல் கதை எழுத முடியும் என்று காட்டியிருக்கிறார் விகாஸ் சிங்.
– தொடரும்

Related posts

One thought on “மறுவாசிப்பிற்கு ஒரு மறுவாசிப்பு

  1. srikrishnan

    //பீமா – தி மேன் இன் தி ஷேடோஸ் ( பீமன் – நிழலாய் வாழ்ந்த மனிதன்)// ஆங்கில தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு விநோதமாக இருக்கிறது. அநேகமாக அது ”பீமன் – அதிகம் அறியப்படாத மனிதன்” என்பதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Leave a Comment