You are here

பள்ளி இறுதி பாஸ் செய்த பெண்ணும் துக்கம் கொண்டாடிய பெற்றோரும்

சோ. மோகனா

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது”

“எந்த ஒரு சமூகத்திலும் மனிதர்களின் அடிமைத் தளைகளை நொறுக்குவதற்கு அடிப்படையானதும், முதன்மையானதுமான ஒரே கருவி. ‘கல்வி’ தான்”… – அம்பேத்கார்.
‘முன்னுரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இயல்புடன் கல்வி இருக்கக் கூடாது` – பெட்ரன்ட் ரஸ்ஸல்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது – நேரு.
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் ஒரு பிரளயம், அதிரடி நடவடிக்கை, முதல் திருப்பம், என எல்லாம் ஒட்டுமொத்தமாக ஏற்படுவது என்பது அவள் பருவம் எய்துவிட்டாள் என்று சுற்றியுள்ள உலகம் அறியும்போதுதான். அதுவும் கிராமத்துப் பெண் என்றால் கேட்கவே வேண்டாம். இந்த உலகம் அவளைச் சுற்றி பெரிய சீனக் கோட்டைச் சுவரே எழுப்பிவிடும். அதுதான் நடந்தது மோகனா என்ற 14 வயது அப்பாவிப் பெண் வாழ்க்கையிலும். அவளுக்கு SSLC தேர்வுக்கு முன் அம்மையும் வந்து முடிந்தது. 11ம் வகுப்பு (அன்றைய S .S .L .C ) தேர்வும் எழுதி முடிச்சாச்சு.
நான் SSLC தேர்வுக்கு ஒரு மாதமாக படிக்காமல் பரீட்சை எழுதி உள்ளதால், நிச்சயம் பாஸ் பண்ணமாட்டேன் என குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும், ஒட்டு மொத்த குடும்பமும், உறுதியோடு நம்பிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் எனது பருவம் என்னை இந்த உலகுக்கு ஒரு பெரிய மனுஷியாய் அறிமுகம் செய்தது. வீட்டில் எல்லோருக்கும் ஒரே குஷிதான்.

கிராமத்தில் ஒரு பெண் பூப்பெய்துவிட்டால், அந்த குடும்பம், ஊர், சமூகம் அனைத்தும் தன்னுடைய சுய முகத்தைக் காண்பித்து, அவள் மேல் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிடும். அதுதான் என் விஷயத்திலும் நடந்தது. எங்கள் குடும்பத்தில் வயதுக்கு வந்துவிட்டால், அவள் அப்பா அண்ணனுடன் கூட பேசக்கூடாது. அவளுக்கு கொடுக்கப்படும் முதல் அட்வைஸ், பெண் என்பவள் கட்டைவிரலை மட்டுமே பார்த்து நடக்க வேண்டும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல ஆளுக்கு ஆள் நாட்டாமை செய்யப்பட்டது. சடங்கு (பூப்புநீராட்டு விழா) நடத்த நாள் பார்க்கப்பட்டது. அப்பாவுக்கு அதற்கான வசதியும் இல்லை. வீட்டில் அப்போது திடீரென சீட்டுக்கடை மூழ்கி பெரிய பொருளாதார சரிவு. அத்துடன் அப்பாவுக்கு பெரிய நோய் மற்றும் காச நோய் தாக்கி பாண்டிச்சேரியில் சிகிசசை. அவர்கள் பிழைத்து எழுந்ததே..பெரிய பாடாகிவிட்டது. எனவே.. சடங்கை கல்யாணத்தோடு சேர்த்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஒத்திப்போடப்பட்டது. இதை எல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு கோபம் கொப்பளித்தது. இதிலிருந்து, இவர்கள் பிடியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று ஒரே யோசனை. ஆனால் இதற்கிடையிலும் கூட புத்தக வாசிப்பு மட்டும் நிற்கவே இல்லை. உயிர் சுவாசமாய், அன்றாட உணவாய், தொடர்கதையாய் வாசிப்பு என்னோடு ஒட்டியே கிடந்தது.

அதற்குள் வீட்டில் என் மாமா பையனுக்கு, உடனடியாக என்னைத் திருமணம் முடிக்க திட்டமும் தீட்டப்பட்டது. என்னை எல்லாரும் கேட்டனர். நான் முடியாது என்றே ஒரேயடியாக மறுத்து விட்டேன். என் அத்தை, என்னிடம் பாசம் மிக்கவர், என்னை வளர்த்தவர் (அப்பாவின் தங்கை) என்னிடம் ” பாப்பாத்தி, பேசாம பெரிய மாமா மவன கல்யாணம் கட்டிக்கோடி, அவ்வளவு பணமும், நாலு வேலி சொத்தும் உனக்குத்தான் வரும். அங்க நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம், அப்பாவுக்கும் சொமை குறையும். இல்லாட்டி அவ்வளவு சொத்துக்கும் யாரோ ராசா ஆயிடுவாங்க, என்று எனக்கு பணத்தாசை காட்டினார். நான் யாருடைய பேச்சுக்கும். மசியவே இல்லை. 1963ம் ஆண்டு கோடைகாலம், என்பது எனக்கு, வீட்டுக்குள் ஒரு குருஷேத்திர யுத்தமாகவே இருந்தது. வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர் எல்லாம் ஒரு பக்கம். மோகனா என்ற சின்னப்பெண், நான் மட்டும் ஒரு பக்கம். இதில் நான் ஒற்றை ஆளாய் போர்கால தந்திரம் போல, வீட்டுக்குள்ளேயே இருந்து யுத்த வியூகம் உருவாக்கத் தொடங்கினேன். இதற்கெல்லாம் உரம் போட்டது எனது வாசிப்பு தான் என்றால் நீங்கள் எத்தனை தூரம் நம்புவீர்களோ. இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் பார்த்த படங்களும் கூட எனது யோசனைக்கும், போராடும் குணத்துக்கும், படிப்புக்கும் வீட்டின் கட்டுத் தளையிலிருந்து விடுபடவும் உதவின. ஆலோசனைக் களங்களாயின. முக்கியமாக அதற்கு கொஞ்ச காலத்திற்கு முன் பார்த்த பதிபக்தியில் சிவாஜி பாடுவதாக வரும் வீடு நோக்கி ஓடி வந்த என்னையே பாடல், தைபிறந்தால் வழி பிறக்கும், பாகப்பிரிவினை போன்ற படங்கள் என் உள்மனத்துள், ஒருவருக்கு படிப்பு, என்பது எவ்வளவு தேவை, அதனால் அவர்கள் எவ்வளவு உயர முடியும் என்ற கற்பனை சிறகையும், எதிர்கால வாழ்க்கையையும், கண்ணின் வானில் விரித்து பறக்க விட்டன. அந்த காலத்துப் படங்கள் எல்லாம், என் மனத்துள் positive எண்ணங்களையே விதைத்தன.

என்னை, மோகனா என்ற பெண்ணை. பெண்ணின் மீது அடக்குமுறை இருந்த அந்த கால கட்டத்திலேயே, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், சோர்வின்றி செயல்பட வைத்ததும், தைரியமாய் நினைத்த் காரியத்தை சாதிக்க வைத்ததும் வாசிப்பின் இறக்கைகள் தான். அப்போது 9,10 & 11 வகுப்பு படிக்கும்போது படித்த புத்தகங்கள், பத்திரிக்கைகள் சொல்லி மாளாது. பள்ளியில் நூலகர் நான் செல்வதற்கு முன்பே, எனக்காக புத்தகங்கள் எடுத்து வைத்துவிடுவார். இல்லையெனில் நச்சி உயிரை வாங்கி விடுவேன். அப்போது கல்கண்டு இதழில், வந்த தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் படு பிரபலம். அவரின் அப்போதைய “மணி மொழி என்னை மறந்து விடு” படு த்ரில்லராக இருக்கும். கதையில் வரும் கவுனில் உள்ள துப்பாக்கி படம். அந்த கவுன் யாருக்கு போய் சேர வேண்டுமோ. அவரின் உயிரைக் குடிப்பதற்காகவே. குமுதத்தில் ஜாவர் சீதாராமன் எழுதிய, உடல், பொருள், ஆனந்தி மற்றும் மின்னல், மழை, மோகினி போன்றவை துப்பறியும் தொடர்களாக வெளிவந்தன. அத்துடன் குமுதம் பத்திரிகையில் வந்த சாண்டில்யனின் “யவனராணி ” அனைவருக்கும் ஈர்ப்பான ஒன்றாகவே இருந்தது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களான, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோரை நாம் எளிதில் மறக்க முடியாது. இதில் எழுதப்படும் வர்ணனைகள் எல்லாம் அதீதமாகவே இருக்கும். குமுதம் இதழின் விற்பனை சாண்டில்யன் எழுத்தால் அப்போது அதிகரித்தது. பின்னர் அவரின் கடல்புறா வந்தது. அப்போது, சாண்டில்யன் கூறிய கருத்து “ஒரு சினிமா படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்”.

அந்த காலத்தில் நான் படித்த வார இதழ்களில் கல்கண்டு. “ஆனந்த விகடன்”, “கல்கி”, “குமுதம்” போன்றவைகளே, கிராமமான எங்கள் ஊரிலும் அறியப்பட்டிருந்தன. அப்போது எங்கள் வீட்டில் மளிகை கடை, சைக்கிள் கடை, பிஸ்கட் தயாரிக்கும் கடை, சீட்டு கம்பெனி என்று இருந்ததால், ஏராளமான புத்தகங்கள், பத்திரிக்கைகள அப்பா வாங்கிப் போட்டார். அவரும் அனைத்தையும் படிப்பார்கள், நானும் ஏராளமாக சகட்டு மேனிக்குப் படிப்பேன். அப்போதைய ஆனந்த விகடனின் அமைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். அட்டைப் படத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு படமாக வரையப் பட்டிருக்கும், கீழே அந்த படத்தின் வசனங்கள் காணப்படும். பொதுவாக அப்போதெல்லாம் அட்டைப் படங்களை ஓவியர் கோபுலு வரைந்திருப்பார். அவருடைய படங்கள் எப்போதுமே தனி முத்திரை பதித்தவை. ஒவ்வொரு பாத்திரப் படைப்பின் சிறப்புகளை அவர் வரையும் படங்கள் அழகாக வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும். அவருக்குப் பின் நகைச்சுவைப் படங்களை அவர் போல அற்புதமாய் வரைந்தவர் வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை

ஆனந்த விகடனின் முகப்பிலும், தலையங்கப் பகுதியிலும் ‘விகடனின்’ விசித்திரமான உருவம் காணப்படும். தலை உச்சியில் உச்சிக் குடுமி போல சிறிது உயர்ந்து இருக்கும், தோளில் கழுத்தைச் சுற்றி ஒரு பட்டைக் கரைப் போட்ட அங்கவஸ்த்திரம் இருக்கும். இவர்தான் விகடனார். விகடனின் தலையங்கங்கள் நச்சென்று சுருக்கமாகவும், உறைக்கும்படியாகவும் இருக்கும். தலையங்கத்துக்கு எதிர்ப்புறம் ஒரு முழுப் பக்க கார்ட்டூன். பொதுவாக அன்றைய நாட்டு நடப்பை விளக்கும் கருத்துப் படங்கள்வரும். லட்சுமி எழுதிய தொடர்கதைகள் குடும்பப் பெண்களின் கதைகளாக இருக்கும்., அறுபதுகளில் ஜெயகாந்தன் அவர்களுடைய முத்திரைக் கதைகள் வரத் தொடங்கிய பிறகுதான் அதன் மவுசு ஏறியது.

அப்போதுதான் பத்திரிக்கைத் துறையில் உள்ளே நுழைந்து, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் (அட நம்ம சுஜாதா தான்) என்ற பெயரில் எழுதினார். பின்னர் குமுதத்தில் உள்ள ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்ப மானதால், ஸ்ரீரங்கம் ரங்கராஜன், மனைவியின் பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். சுஜாதா. அவரின் கதைகளில் வசந்த் – கணேஷ் என்ற பெயர்களை அறிமுகப் படுத்தினார். பின்னர் யார் எழுதியது என்றே தெரியாமல், வயிறுவலிக்க சிரிக்க வைத்து ஆனந்த விகடனையும், கலக்கிய வாஷிங்டனில் திருமணம், என்ற நகைச்சுவை தொடர் ஆசிரியர் சாவி.

அப்போது சுதேசமித்திரன் எனற பத்திரிக்கையும் கதிர் என்ற வார இதழும் கூட வந்தன. துப்பறியும் புதினம் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் கோதை நாயகியின் கிழக்கு வெளுத்தது, சுதந்திரப் பறவை, தைரிய லட்சுமி, ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன், கரிப்பு மணிகள் போன்றவற்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த பெண் நான். பெண் எழுத்தாளர்கள் வரத் துவங்கிய கால கட்டம் அது. இப்படி தேடித்தேடி படித்து முடித்தவை சொல்லி மாளாது.

இந்த வாசிப்பும் தேடலால், எனக்கு நடந்த திருமண ஏற்பாடு, பேச்சு வார்த்தை, அது தொடர்பான சண்டைகள், இத்தனையும் என் வாசிப்பை கொஞ்சம் கூட கிட்ட நெருங்க முடியல்லை, சலனப்படுத்தவில்லை. நடந்த அனைத்தும் நான் பெரிய பெண்ணாய் ஆன காலகட்டத்தில் தான்.இருப்பினும், அத்தனையும் படித்தது, இத்தனை களேபரங்களுக்கு இடையேதான்.நான் எதற்கும் சளைக்க வில்லை. அசரவில்லை. துணிந்து நின்றேன். என்னுள் எப்படியும் SSLC ல் தேர்ச்சி பெற்று விடுவேன் என்று அசாத்தியமான நம்பிக்கை என்னுள்ளே இருந்து என்னை இயக்கியது. கல்யாண பேச்சுக்கு வெகுண்டெழுந்து சிவப்புக் கொடி காட்டினேன்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து, எதிர்பார்த்து, நான் எப்ப பெயிலாவேன் என்ற காத்துக் கிடந்த தருணமும் வந்தது. வீட்டுக்கு வந்த தினத்தந்தி பேப்பர் எனது எதிர்காலத்தை அப்படியே. கொள்ளை யிடாமல், எனக்காகவே என் உலகை அள்ளி வந்து என் முன் போட்டது.. (அப்போதெல்லாம் SSLC பேப்பரில் தான் தேர்வு முடிவுகள் வரும்) நான் பாசாயிட்டேன். பாசாசியிட்டேன்..யாரிடம் சொல்ல. எல்லோருக்கும் ஏகமாய் வருத்தம். வீட்டில் இழவு விழுந்தது போல துயரத்துடன் உட்கார்ந்து இருந்தனர். எனக்கு ஏற்பட்ட சோதனை? பாஸ் பண்ணிய மகிழ்ச்சியை வெளிப்படையாய், சந்தோஷமாய் கொண்டாடக் கூட முடியவில்லை. அடுத்து ஒரு வாரத்திற்குள் பள்ளிக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் அறியச் சென்றால்..அங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது.எனது தலைமை ஆசிரியர் திருமிகு. தேவசகாயம் சார் அவர்கள் ..”ஏ டெவில் குட்டி..வா வா..எனக்கு முன்பே தெரியும். நீ பாஸ் பண்ணிடுவேன்னு.

அதான் உனக்கு நீ revision டெஸ்ட் எழுதாத போதும், உன்னை பப்ளிக் பரீட்சை எழுத அனுப்பினேன். அப்புறமா இன்னொரு ஸ்வீட் நியூஸ் டெவில் குட்டி. நம்ம பள்ளியில் முதல் மதிப்பெண் 414/600. நீயும் படிக்காமலேயே பத்து ரேங்குக்குள் வருகிறாய் என்றார். என் மதிப்பெண் 364./600. composite maths ல் படிக்காமலேயே 75%. ஆஹா…! நான் வானில் பறந்தேன்.. உயர உயரப் பறந்தேன். என்னுள்.. ஆனால் எனது அடுத்த கட்ட எல்லையை, வரப்பை எட்ட முடியுமா? பார்ப்போம்..

“ஒருவர் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்” – ஜேம்ஸ்

துன்பம் என்பது இல்லாவிட்டால்..உலகில் புரட்சி என்ற வார்த்தையே தோன்றியிருக்காது. – பிடல் காஸ்ட்ரோ.

“சமூக அறிவுஜீவிகளை உருவாக்குவதே உயர்கல்வியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். உயர்கல்வி, சுய சிந்தனையை வளர்த்தெடுக்கும் ஒரு தொட்டில்” – பிரபாத் பட்நாயக்

Related posts

Leave a Comment