You are here
நேர்காணல் 

வாசிப்பில் அமெரிக்க ஐந்தாம் வகுப்பும் தமிழக பத்தாம் வகுப்பும் …

எஸ்.எஸ். ராஜகோபாலன்

சந்திப்பு : ஜி. செல்வா

நேற்றைய பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது. நாளைய பேட்டியின் போது  கீழ்க்காண்பவற்றை விவரிக்க விரும்புகிறேன்…   – SSR                              22 அக்டோபர் 2015  –  7:26 am
மிக்க மகிழ்ச்சி, உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.           22 அக்டோபர் 2015  –  8:47 am
‘புத்தகம் பேசுது’ இதழுக்கான பேட்டி என்பதை மறந்து கல்வி பற்றியே அதிகம் பேசினேன். நாளை  நூல்களோடு எனது உறவுபற்றி ஒரு சிறு விளக்க கட்டுரை அனுப்புகிறேன். அதன்மீது அதிகம் தெரிய விரும்பினால் கேட்கவும். இரண்டு நாட்களை வீணடித்ததற்கு வருந்துகிறேன். – SSR                                                                                                                23 அக்டோபர் 2015  –  6:12 pm
இரண்டு நாட்களை வீணடித்துவிட்டீர்களா…? உங்களது வாழ்க்கைப் பயணம் மதிப்பீடுகளும், விழுமியங்களும் கொண்டவை. இந்த தலைமுறையினரால் இவ்வாறு வாழ சாத்தியப்படுமா?  பிரெக்ட் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. “எளிமையான விஷயந்தான் செய்யக் கடினமானது.”                                                                                                  24 அக்டோபர் 2015  –  9:20 am
‘புத்தகம் பேசுது’ இதழுக்காக எஸ்.எஸ்.ஆர். உடன் நேரடியாக  சந்தித்து இரண்டு நாட்கள் உரையாடிக் கொண்டிருந்த நாட்களில்  எங்களுக்கிடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள்தான் மேற்கண்டவை.
ழ்க்கை குறித்து மிகத் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுபவர். தனது இலக்கு, லட்சியத்திற்காக யாதொரு சமரசத்திற்கும் இடம்கொடுக்காதவர், துதிபாடாதவர். தன்னால், தனது செயல்பாடுகளினால் அடுத்தவருக்கு துயரம் அளிக்கக்கூடாது என கூர்மையாக கவனித்து வாழ்பவர். இன்று இவ்வாறு வாழ முடியுமா? அதற்கான சூழல் இருக்கிறதா? அல்லது இவ்வாறு வாழ்பவர்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறோமா?
எஸ்.எஸ்.ஆர். உடன் உரையாடிய தருணங்களிலிருந்து இப்படியான கேள்விகள் உருக்கொண்டே இருக்கின்றன.
சமரசங்களோடு, அண்டிப்பிழைத்து, ஒட்டுண்ணியாய் வாழ்வது ‘நவீன சமூகத்தின் நியதி என கோட்பாட்டை உருவாக்கி, உருண்டோடிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரது வாழ்க்கைப் பயணம் அபூர்வமானதாய் இருக்கும். எந்தப் பணியாக இருந்தாலும் வாழ்க்கையில், நேர்மையும் உறுதியும் கொண்டு வாழப்போராடுபவர்களுக்கு இவரது வாழ்வு உந்துசக்தியாய் இருக்கும்.
85 வயது நிரம்பியவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன். கடந்த 15 மாதங்களாக ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவதில்லை. அந்த மாத்திரை அவருக்கு இனி தேவையில்லை. வயது கூடக் கூட மாத்திரைகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூட இவரோ அதற்கு நேர்மாறாக, அதற்கான காரணங்களை உற்சாகமாய் பேசுகிறார். தமிழகத்தில் மிக இளம்வயதில் (24) தலைமையாசிரியானவர். இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. முறியடிக்க சாத்தியமா?
‘எழுத்தாளர் பெருமாள் முருகனை (எழுத்தை)’ சாகடித்தது குறித்து கோபத்தோடு பேசுகிறார். அச்சமூகத்திலிருந்து உருவான 6 துணைவேந்தர்கள் எதிர்வினையாற்றாமல் அமைதிகாப்பது ஏன்?  பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் படுகொலைக்கெதிராக  மாணவர் சமூகம் வெகுண்டெழாதது ஏன்? தலித் குழந்தைகளின் கொலைமரணத்தை நாயோடு ஒப்பிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் முன்னாள் ராணுவத் தளபதி விகே சிங் மீது வார்த்தைகளால் காரிஉமிழ்கிறார்.
நாளிதழ்கள், நவீன இலக்கியங்கள், சிற்றிதழ்கள்,  இயக்கப் பத்திரிகைகள் ஃபேஸ் புக்  முதல் போத்தீஸ் விளம்பரம் வரை தன்னை Update ஆக வைத்துக் கொள்கிறார்.
அநீதி கண்டு கொந்தளிக்கிறார். எழுத்துகளின் வழியும், இயக்கங்களோடு கைகோர்த்து நின்றும் எதிர்ப்பினை ஆற்றுகிறார்.
வலுவான குடும்பம் மற்றும் சமூகப் பின்னணி.அப்பா சீனிவாச ஐயங்கார் காந்தியை சந்தித்து பேசியதன் விளைவாக, தாய்மொழிவழிக் கல்வியை சென்னை மாகாணத்தில் முதன்முதலாக 1922ல் கொண்டு வருகிறார். நீதிக்கட்சியைச் சார்ந்த கல்வி அமைச்சர் ஏ.பி.பாத்ரோ கொடுத்த அறிவிப்பைக் கொண்டு தனது தந்தை தஞ்சை ஜில்லா பாபநாசம் தாலுக்காவில் உள்ள “விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில்” தாய்மொழிவழிக் கல்வியை கொண்டுவந்ததை பூரிப்போடு சொல்கிறார்.
இவரது தந்தையார் பள்ளியின் தேர்வுமுடிவுகளை அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய ‘நியூ இந்தியா’ பத்திரிகைக்கு அனுப்புகிறார். தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதாரமாக தேர்வு முடிவுகள் இருப்பதை சுட்டிக்காட்டி அவரது பத்திரிகையில் அன்னிபெசன்ட் அம்மையார் அரைப்பக்கம் கட்டுரை எழுதியுள்ளார்.
அக்கா பத்மாதான், அதுவும் திருமணமாகிவிட்டு கல்லூரிப் படிப்புக்கு முதலில் சென்ற மாணவி. கோயம்புத்தூர் கல்லூரியில் முதல்வராக இருந்த T.S.கிருஷ்ணமூர்த்தி I.E.S. “புலிக்குட்டிக்கு மத்தியில் மான்குட்டியை விடுகிறீர்களே ஐயங்கார்” என தன் தந்தையிடம் சொல்லியதை நினைவு கூர்கிறார். மறைந்த எழுத்தாளர் சூடாமணியின் சித்தப்பாதான் அக்காவின் கணவர். சூடாமணிக்கு கதைகளை படித்துச் சொல்வார் அக்கா. பார்வையற்ற மாணவர்களுக்கு பாடங்களை படித்துக் காண்பிப்பார். ஒரு பார்வையற்ற மாணவருக்காக சமஸ்கிருதம் படிக்க கற்றுக்கொண்டு சொல்லிக் கொடுத்தார் என பெருமையோடு சொல்கிறார்.
அண்ணன் எஸ்.எஸ்.கண்ணன் 93 வயதில் துடிப்போடு சென்னையில் காரல்மார்கஸ் நூலகம் நடத்தி வருகிறார். இது பல ஆளுமைகள் உருவாகிய இடம். “பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு காந்தியவாதியாகப் படிக்கச் சென்றார், கம்யூனிஸ்டாகத் திரும்பி வந்தார்” என சிரித்துக்கொண்டே சொல்கிறார். மதுரையில் மின்வாரியத்தில் பணியாற்றிய பொழுது கம்யூனிஸ்ட் தலைவர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சங்கரநாராயணன் ஆகியோருடன் மார்க்ஸியத்தை விவாதித்து தெளிவு பெறுவார். ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் காரல் மார்க்ஸ் நூலகம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்கிறார். தர்மபுரியில் நக்சலைட்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தேவாரம், சென்னைக்கு வந்தவுடன் ‘காரல்மார்க்ஸ் நூலகம்” என்பதைப் பார்த்து, நூலகத்தின் மீதேறி பலகையை அடித்து நொறுக்கினார். பலகையைத்தான் அவரால் அடித்து நொறுக்க முடிந்தது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை மூடவைத்து பொதுத்துறையாக மாற்ற முன்நின்றவர் எனது தம்பி விஜயராகவன். சிம்லாவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய “இன்சூரன்ஸ் அரசு இயக்குனரகத்தில்” (Controller of Insurance) பணிபுரிந்தார். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் நடைபெறும் மோசடிகளை ஆய்வு செய்வதுதான் இவரது பணி. தனக்குக் கிடைத்த விபரங்களை  H.D.மாளவியாவை ஆசிரியராக கொண்டு இயங்கிய Economist பத்திரிக்கைக்கு leak செய்தார். இதன்மூலம் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கொள்ளை வெளியுலகத்திற்கு வந்தது. அப்போதைய ரிசர்வ் வங்கிக் கவர்னர் தேஷ்முக் I.E.S, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உடன் பேசி முன்தேதியிட்டு சட்டம் கொண்டுவந்து இன்சூரன்ஸ் துறையை பொதுத்துறையாக மாற்றினார். பாரத் இன்சூரன்ஸ் என்ற பெயரில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் நிறுவனர் சேத் ராமகிருஷ்ணா டால்மியா செய்த மோசடியை வெளிப்படுத்தி 7 வருடம் சிறைத் தண்டனை பெறக் காரணமானார், தம்பி விஜயராகவன்”. இதைச் சொல்லும்போது எஸ்.எஸ். ராஜகோபாலன் கண்கள் மிளிர்கின்றன. தனது பணி நிமித்தம் ஆக்ராவிலிருக்கும்போது விஜயராகவனைப் பாம்பு கடித்துவிடுகிறது. இரவு முழுதும் தூங்கக் கூடாது என்பதற்காக தனக்கு பிடித்த மார்க்ஸ் நூலைப் படித்துக்கொண்டே மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கிருந்த முட்டாள் டாக்டர் பாம்பு கடித்தது என்பதை நம்பாமல் தம்பிக்கு தூக்க மருந்தை ஊசியாகப் போட்டதால் இறந்து போய்விட்டார்.”
பிரம்படியும், கால்பந்தாட்டமும்
“நானே கல்வி மறுக்கப்பட்டவன் தான்” ஆச்சரியமாக அவரைப் பார்க்கிறோம். “ஒன்றாம் வகுப்பில் என்னைச் சேர்க்க பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மாணவர் ஒருவரை ஆசிரியர் பிரம்பால் அடிப்பதைப் பார்த்து வீட்டுக்கு ஓடியே வந்துவிட்டேன். மூன்று வருடங்கள் வீட்டிலேயே அக்காதான் பாடம் சொல்லிக் கொடுத்தார். நான்காம் வகுப்பில் இருந்துதான் பள்ளிக்கு சென்று படிக்க ஆரம்பித்தேன்.
எனக்கு படிப்பை விட விளையாட்டில்தான் ஆர்வம். அதுவும் கால்பந்தாட்டம்தான். நாயர் கடையில் இரண்டு பழங்களை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே கிரவுண்டுக்கு ஓடுவேன். ‘லேட்டா போனால் டீமில் இடம் கிடைக்காது. இப்பவெல்லாம் என்ன Foot Ball விளையாடுகிறார்கள். நானும் டி.வி.யில் தொடர்ந்து மேட்ச் பார்த்து வருகிறேன். கால்பந்தாட்டத்தில் “dribbling” என்பார்கள். நீங்கள் Foot Ball விளையாடி இருக்கிறீர்களா?” கேள்வி கேட்டுவிட்டு சொல்கிறார். “இரண்டு கால்களுக்கு இடையில் பந்தைத் தட்டிக்கொண்டு முன்னேறுவதைதான் dribbling. Center Forwardல் இருப்பவர்தான் அதை செய்ய வேண்டும். இப்போது அப்படி யாரும் விளையாடுவது இல்லை. Left side half back-ல் இருந்து பந்தை forward செய்வதுதான் கால்பந்தாட்டத்தில் தனது இடம், என்கிறார். கால்பந்தாட்டத்தில் மட்டுமா? தனது வாழ்க்கைப் பயணத்திலும் இடதுபக்கமாக நின்று, முகம் காட்டாமல், விசயங்களை முன்னோக்கி நகர்த்துகிறீர்களே!, என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
படிக்கும்போது அண்ணன் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விட்டார். தான் படித்த கல்வி நிலையத்தில் “Conduct Cup” ஒழுக்கசீலர் என்ற விருதை மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கொடுப்பார்கள். இது மாணவர்களை அடக்கி வைக்க நிர்வாகம் செய்யும் தந்திரம், இதை எதிர்க்க வேண்டும் என மாணவர் அமைப்பு திட்டமிடுகிறது. அந்த வருடம் Conduct Cup வழங்க வருபவர் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம். அவர் மாணவருக்கு விருது வழங்கும்போது, மேடையில் ஏறி கோப்பையை அமைச்சர் கையிலிருந்து பிடுங்கி “இந்த ஒரு மாணவர்தான் ஒழுக்கமுள்ளவர். மற்றவர்கள் ஒழுக்கம் இல்லை எனில் கல்லூரியை மூடிவிடுங்கள்” என சொல்லியதை, தன் மாணவர் சங்கச் செயல்களில் ஒன்றாக நினைவுகூர்கிறார் ராஜகோபாலன்.
புள்ளியியல் படிக்க கல்கத்தா செல்ல விரும்பியதாகவும், அங்கு (1949) வகுப்புக் கலவரமாக இருந்ததால் அவரை அவரது அம்மா படிக்க அனுப்பவில்லை. சென்னைப் பல்கலையில் படிப்பு தொடர்கிறது. ஸ்ரீகாகுளம் முதல் மங்களூர் வரை தனது பரப்பைக் கொண்டிருந்தது சென்னைப் பல்கலைக்கழகம். அதில் Rank holder ஆக தேர்வு பெறுகிறார். சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இளம் வயது மாணவராக நுழைகிறார். நாலு மெஸ் இருக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, நான்கு வகையான உணவுமுறைகள் மட்டுமல்ல, பிற மாநிலத்தவரோடு தனக்கு மாணவர் பருவத்தில் ஏற்பட்ட தொடர்பு பிற்காலத்திலும் உதவியாக இருந்ததாக சொல்கிறார்.
வக்கில்லாதவனுக்கு வாத்தியார் வேலை
இன்று பல ஆசிரியர்கள் வட்டிக் கடை நடத்துகிறார்கள். அன்று ஆசிரியர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள். நான் சர்வீஸில் நுழையும்போது ஓய்வூதியம் கிடையாது. “வக்கில்லாதவனுக்கு வாத்தியார்  வேலை” என்பதுதான் அன்றைய நிலை. ஒரு பச்சை நோட்டை (ரூ.100)  பார்ப்பதே ஆச்சரியம்தான். இன்று ஆசிரியர்கள் அனுபவிக்கும் பல்வேறு உரிமைகள் தொழிற்சங்கங்களால் போராடிப் பெற்றது. இதை இப்போதைய ஆசிரியர்கள் உணரவேண்டும். ஆசிரியர் சங்கங்களும் உணர வைக்க வேண்டும் என்கிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் முதலில் தனக்கு பணி கிடைத்ததையும், “கெட்ட நாளில் கெட்ட நேரத்தில் வேலையில் சேர்ந்து விட்டதால் 13 பேருக்கு சீனியராகி விட்டேன்” சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
இளம் வயதில் பணிக்குச் சேர்ந்தும் கல்வித்துறையில் இயக்குநர்  அளவிற்கு வர வாய்ப்பிருந்தும் ஏன் முடியவில்லை? என கேட்டபோது, “குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகளோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. அப்போதைய வேலூர் – கோவை பகுதிக்கான  கல்வித்துறை அதிகாரியாக இருந்தவர் கே.வெங்கடசுப்ரமணியம். பள்ளி வளாகத்தில் சிகரெட் பிடித்தார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பள்ளியில் சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறினேன். சிகரெட்டைக் கீழே போட்டார். என் மீது அவருக்குக் கோபம் வந்தது. அதுபோல 1965-ல்  இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்திற்கு பள்ளியில் மாணவர்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டப்பட்டது. அந்தப் பணத்தை பள்ளியின் மாணவர்  தலைவர் மூலம் முதல்வர் பக்தவச்சலத்திடம் நேரடியாக கொடுக்க  வைத்தேன். உண்டியலை உடைத்து காசுகளை எண்ணி ரசீதும்  கொடுத்துவிட்டனர்.
நேரடியாக மாணவரை வைத்து முதல்வரிடம் நிதிகொடுத்ததை மாவட்டக் கல்வி அதிகாரி பொறுத்துக் கொள்ளமுடியாமல் என்னிடம் கடுமையாகப் பேசினார். நான் அவரைப் பார்த்து “Mind your words, otherwise I will neck out” என சொன்னேன்.
இக்காலக்கட்டத்தில் நான் படித்த பீளமேட்டில் உள்ள சர்வஜன உயர்நிலைப் பள்ளியில் பணியாற்ற அழைத்தார்கள். எனவே அரசுப் பள்ளியை விட்டுவிட்டு அங்கு பணிக்கு சென்றுவிட்டேன். 1966 லிருந்து 1989 வரை அங்குதான் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தேன்.
சமுதாய மையங்களாக பள்ளிக்கூடங்கள்:
“பள்ளிக்கூடங்கள் Community Center – ஆக இருக்கவேண்டும்”, நான் பள்ளித் தலைமை ஆசிரியராக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில், கோழி வளர்த்தோம், கோழிப் பண்ணை இருந்தது, விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்து கொடுத்தோம். இந்த வேலைகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கெடுத்தனர். மாணவர்களுக்கும், சமூகத்திற்குமான
இயற்கையான உறவு பேணப்பட்டது. உள்ளாட்சிகளின் கீழ் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டன. பின்னர் அரசாங்கம் நேரடியாக பள்ளிகளை நிர்வகிக்கத் தொடங்கியது. இதுவே பொதுப்பள்ளியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து விட்டதாக இராஜகோபாலன் கருதுகிறார்.
நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக :
ஒருமுறை தனது பள்ளிக்கூடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டம் நடத்த வேண்டுமென இடம் கேட்டதாகவும், தர முடியாது என  மறுத்தவுடன், மாவட்ட ஆட்சியரே தலையிட்டு இடம் கொடுங்கள் என உத்தரவிடுகிறார். அப்பள்ளியில்தான் கூட்டம் நடக்கும் என சொல்லிவிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டத்திற்கு அப்போதைய முதல்வர் காமராஜர் வருகிறார். தனது பள்ளி மாணவர்களை  பள்ளி வாயிலில் அரணாக நிற்க வைத்து உள்ளே யாரும் வராத வண்ணம் தடுத்துவிட்டார். காமராஜரிடம் “ஐயா, அரசாணைப் படி பள்ளிகளில் அரசியல்  கட்சிக் கூட்டங்கள் நடத்தக்கூடாது, என்றவுடன், காமராஜரும் வேறு இடம்  கிடைக்கவில்லையா என்று சொல்லி அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தை சொல்லிவிட்டு“ இது இப்போது நடக்குமா, ஒரு வட்டச் செயலாளரை எதிர்த்து ஒரு தலைமை ஆசிரியர் பேச  முடியுமா?” என கேள்வி கேட்கிறார். அப்போது கலெக்டராக இருந்தவர்  T.N.லட்சுமி நாராயணன். இவர் தேர்தல் ஆணையராக இருந்த T.N. சேஷனின் அண்ணன்.
கோவை ஜில்லா முழுவதும் தேர்வு நடத்துவதற்காக வினாத்தாள்களை குறிப்பிட்ட அச்சகத்தில் அடிக்கச் சொல்லி அதிகாரி உத்தரவிடுகிறார். அவருக்கு அந்த அச்சகத்திலிருந்து கமிசன் கிடைக்கும் என்பதற்காக. நான் மறுத்து தர்மபுரியில் அச்சடிக்கக் கொடுத்துவிட்டேன். என் மேல் அந்த அதிகாரிக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. பழிவாங்க தருணம் பார்த்துக் கொண்டார். காதல் தோல்வியினால் பள்ளி உதவியாளர் பள்ளி வளாகத்திற்குள்ளே தூக்குப்போட்டு இறந்துவிடுகிறார். இதைக் காரணமாக வைத்து என்னை ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது என நோட்டீஸ் அனுப்பினார். நான் விளக்கமாக பதில் கொடுத்தேன். மூத்த  தலைமையாசிரியர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கப் போனேன். அவரோ “பிராமணாள், நமக்கெல்லாம் ஒரு லிமிட்டேசன் உண்டு. அதற்கு உட்பட்டு இருக்கவேண்டும்” என அறிவுறுத்தினார். என்னைப் பொறுத்தவரை “அடிமையாய் இருக்கக்கூடாது, தன்மானத்தோடு வாழ்வதுதான் முக்கியமானது” என்றேன். இந்த பிரச்சனையை கலெக்டர்  S.மோனி I.A.S.  அவர்களிடம் எடுத்துரைத்தேன். அவர் உண்மை நிலையைப்  புரிந்துகொண்டு, செயல்பட உதவினார்.
ஓய்வு பெறுதலும்;  சென்னை வாழ்க்கையும்
1989-ல் ஓய்வு பெற்றுவிட்டாலும், நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு வருடம் அதே பள்ளியில் செயலாளராக பணிபுரிந்தேன். அந்தப் பணி எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. ஒரு நாள் விடியற்காலை லாரி பிடித்து, பொருட்களை ஏற்றி அனுப்பிவிட்டு, காரில் எனது மனைவியுடன் சென்னைக்கு வந்துவிட்டேன். 1991 மே 5 ஆம் தேதி சென்னைக்கு வந்த நாள்.
சேமிப்புப் பழக்கம் என்னிடம் இல்லாததால், ஓய்வு பெற்றதும் பணம் இல்லை. அப்போது மேத்யூ என்பவர் B.I. பப்ளிக்கேஷன்ஸ் நிறுவனத்திற்காக கணிதப் புத்தகங்களை எழுதிக் கொடுக்குமாறு கூறினார். பாடப் புத்தகங்கள் எழுதினேன். பங்களாதேஷ், மற்றும் டெல்லியில் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது, நல்ல வருமானமும் கிடைத்தது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்காக பணம் வாங்காமல் பாடங்களை எழுதிக்கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்திற்குமேல் செக் போட்டு பணத்தை அனுப்பி விடுவார்கள். இதில் பெரிய அளவு பணம் கிடைக்காவிடிலும் நான் பிரபலமாகிவிட்டேன்.
தினமணியில் ஆசிரியர் பகுதிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவேன். கல்வி குறித்து எனது பார்வைகளைப் பார்த்த அப்போதைய தினமணி ஆசிரியர் இராம.சம்பந்தம் நடுப்பக்கக் கட்டுரை எழுதுமாறு கூறினார்.  எனது மோசமான கையெழுத்தை டைப் செய்து கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த காலத்தில்தான் சமச்சீர் கல்வி குறித்த கருத்துகளை  முன் வைத்தேன். அவ்வாறு எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து “தமிழகத்தில் பள்ளிக் கல்வி’‘ என்ற புத்தகத்தை இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. இதுதான் என்  பெயரில் வந்த ஒரே புத்தகம்” என்கிறார்.
 முதலியார் கல்விக் குழு முதல் முத்துக்குமரன் கமிட்டி வரை
மிக முக்கியமான கல்விக் குழுக்களில் பங்கேற்றவராக, சாட்சியம் கொடுத்தவராக திகழ்கிறார் ராஜகோபாலன். கல்வித்துறையில் அடிப்படையான சில மாற்றங்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்.
1955-ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட டாக்டர் ஏ.எல். முதலியார்  தலைமையிலான குழுவின் முன், ஆசிரியர் சங்க பிரதிநிதியாக சாட்சியம் கொடுத்துள்ளார். இந்தக் குழுவின் பரிந்துரைகள் விடுதலை இந்தியாவின்  கல்விப் பாதையை சுட்டிக்காட்டியது.
தென்னிந்திய ஆசிரியர் யூனியன் (எஸ்.ஐ.டி.யு.) சார்பில் தமிழகத்தில் பாடத்திட்டங்களை சீரமைக்கக்கோரி அரசுக்கு முறையிட்டதும், அவ்வாறு செய்யாவிடில் ஆசிரியர் சங்கமே மாதிரிப் பாடத்திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அனுப்பும் என எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் நாவலர், அரசே செய்யும் என உறுதியளித்ததோடு, பாடத்திட்டக் குழுக்களுக்கு உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு இயக்கங்களை கேட்டுக் கொண்டார். இயக்கப் பிரதிநிதியாக நானும் இடம் பெற்றேன். மிகச் சிறந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இயக்கங்கள் பங்கேற்ற முதலும் கடைசியுமான பாடத்திட்டக் குழுக்கள் அவையே.
சிட்டிபாபு தலைமையிலான மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வுக்குழுவில் செயல்பட்டிருக்கிறார். தமிழகம் முழுதும் மெட்ரிக்  பள்ளிகளை ஆய்வு செய்துள்ளார். “ஆசிரியர் பயிற்சி வாரியத்தில் முதல் இயக்குநராக இருந்தவர் பன்னீர் செல்வம். மிக தங்கமான மனிதர். அவரோடு சேர்ந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு சென்றேன். ஒரு பள்ளியில் ஸ்டீல் பீரோ ஒன்று இருந்தது. ஒரு பக்க கதவில் நூலகம் என எழுதியிருந்தது. மற்றொரு கதவில் ஆய்வுக்கூடம் என இருந்தது, பீரோவைத் திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை. பன்னீர் செல்வம் மிக சாதுவான மனிதர். இதை பார்த்துக் கொதித்துப் போய்விட்டார்.”
பாடத்திட்ட சுமைக் குறைப்புக்காக யஷ்பால் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினை நடைமுறைப்படுத்த தமிழகத்தில் சிவஞானம் தலைமையிலான ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். “1995-ல் அனைவருக்கும் கல்வித்திட்டத்தை செயல்படுத்துவதற்காக வழிமுறைகளை தயார்படுத்திக் கொடுத்தேன். நான் செய்த பணிகளிலேயே மிக முக்கியமான வேலையாக இதைக் கருதுகிறேன்.”
முத்துக்குமரன் தலைமையிலான சமச்சீர் கல்விக் குழுவில் கலைஞர் என்னை உறுப்பினராக செயல்பட நியமித்தார். இந்த தகவலே பத்திரிகை மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். இக்குழுவின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டதும், எனக்கு இருந்த மாற்றுக் கருத்துக்களை ஒரு அறிக்கையாகக் கொடுத்தேன். எனது குறிப்பினை அறிக்கையில் இணைக்கவில்லை. ஆனால் தனியார் பள்ளிகளின் சார்பாக குழுவில் பங்கெடுத்தவர் கொடுத்த குறிப்பை மட்டும் இணைத்துக் கொண்டார்கள்.
I.C.C.W. (Indian Council for Child Welfare)ல் துணைத் தலைவராக இருந்தபோது, தெருவோரக் குழந்தைகள், குடிசைவாழ் குழந்தைகள், பிச்சை எடுத்து பிழைக்கும் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் திட்டத்தில் செயல்பட்டார். அவ்வாறு குழந்தைகளை சேர்க்கும்போது வயதிற்கேற்ற வகுப்பில் சேர குறுகிய காலப் பயிற்சி அளிக்கத் திட்டம் தீட்டினார்..
இந்தத் திட்டத்தை அமலாக்க அதிகாரிகள் தயங்கினர். அப்போது மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக இருந்த அபுல்ஹாசன் அவர்களிடம் முறையிட்டோம். அவர் அனுமதி வழங்கினார். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் எந்த பள்ளிக்கல்வியும் படிக்காமல் வயதின் அடிப்படையில் ஒரு மாணவர் நேரடியாக ஐந்தாம் வகுப்பு சேர்க்கப்பட்டால், அவருக்கான அடிப்படைக் கல்வியை 6 முதல் 8 மாதத்திற்குள்ளாக கொடுப்பதற்கு ஏற்றாற் போல் பாடத்திட்டங்களை  உருவாக்கிக் கொடுத்தோம்.
சாலிகிராமத்தில் உள்ள கரியப்பா பள்ளியில் தன்னார்வ ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் எடுத்தோம். நிறைய மாணவர்கள் சேர்ந்தனர். 30 மாணவர்கள் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. ஒரு ஆசிரியர் என்ற நிலையிலிருந்து பத்து ஆசிரியர்கள் பணியாற்ற வந்தனர். இந்த திட்டத்தை  தொடர்ந்து செயல்படுத்துமாறு கில்டு ஆப் சர்வீஸிடம் கொடுத்தேன். அவர்கள் பணம் வசூல் செய்பவர்களாக மாறிவிட்டார்கள்” என்கிறார்  வேதனையுடன்.
சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகங்களில் செனட் மற்றும் அகடாமிக் கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டுள்ளார். “ஒவ்வொரு கூட்டத்திற்குச் செல்லும்போதும் மிகுந்த தயாரிப்புகளோடு செல்வேன். அக்கூட்டங்களில் சத்தம் போட்டுப் பேசுபவனாக நான் இருந்தேன்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து படிப்பதற்கு உதவியாக  அஞ்சல் வழிக் கல்வியை கொண்டுவர வேண்டும் என பேசிக்கொண்டே இருப்பேன். அக்குழுவிலிருந்த தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பின்னர் மதுரை  காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக மாறினார். அங்கு  அஞ்சல்வழிக் கல்வியைக் கொண்டு வந்தார். இதற்கான  பாடத்திட்டங்களை எழுதிக் கொடுக்கும் பொறுப்பை எனக்குக்  கொடுத்தார்..
மற்ற மாநிலங்களில் கல்விப் பணி:
வினாத்தாள் தயாரித்தல் மற்றும் மதிப்பிடுதல் செய்வதில் நான் தனிப் பயிற்சி பெற்றிருந்தேன். இதனால் NCERT அகில இந்திய அளவில் Expert Person  ஆக அடையாளப்படுத்தினர்.
ஆந்திராவில் இளங்கல்லூரி மாணவர் தற்கொலை அதிகமாக இருந்தது. நாமக்கல் பள்ளி பாணியில் அப்போது அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்ததுதான் காரணம். NCERTயின் உதவி நாடப்பட்ட பொழுது, என்னை அக்குழுவிற்குப் பரிந்துரைத்தது. அந்தக் கூட்டத்தில் மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு பங்குகொண்டார். எனது  கருத்துகளை முழுமையாக குறிப்பெடுத்துக் கொண்டார்.
கர்நாடகாவில் ஒரு வருடம் கணக்கில் நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அந்த அரசு. NCERTயின் உதவியை நாடிய பொழுது பிரச்சனையை ஆய்வு செய்யும் பொறுப்பைக் கொடுத்தார்கள். பாடத்திட்டம் வினாத்தாள் ஆகியவற்றைப் பார்த்து எளிமைப்படுத்த வேண்டுமென்று பரிந்துரைத்தேன்.
பஞ்சாப் மாநிலத்தில் தொழிற்கல்வி பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான திட்டங்களை உருவாக்கச் சென்றிருந்தேன். ஒரு சாதாரண ஆசிரியரான என்னை விமான நிலையத்தில் வரவேற்க டெபுடி செக்ரட்டரி வந்திருந்தார். CSIR விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர்.. தனியே வாகனம் கொடுத்தனர். தங்கள் மாநிலத்துப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர எவ்வளவு ஆர்வமாக இருந்தனர் என்பதற்கு இதை உதாரணமாக சொல்கிறேன் என்கிறார் ராஜகோபாலன்.
சோவியத் யூனியனில்:
இந்தோ – சோவியத் கலாச்சாரக் குழுவின் சார்பில் 1991-ல் சோவியத் யூனியனுக்கு 21 நாள் பயணமாக சென்றுள்ளார்.
“நாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளை வித்தியாசமாக பார்த்தனர். அங்கு அனைவரும் ஒரே மாதிரி ஆடைகளை அணிந்திருந்தனர். பண்ணைகளில் விளைந்த ஆப்பிளை மேனேஜர் சாப்பிடுவார், விவசாயிகள் சாப்பிட அனுமதியில்லை. இது எத்தனை நாள் நீடிக்குமோ என அப்போது  கருதினேன்.”
“என்னை நெகிழ வைத்த சம்பவம், கிராமத்திலிருந்து நாங்கள் தலைநகர் மாஸ்கோ திரும்பிக் கொண்டிருக்கும் போது வாகனங்கள் பல மணி நேரம் சாலையில் நிறுத்தப்பட்டன. காரணம் விடுமுறை முகாமிலிருந்து வீடு திரும்பும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை சாலையில் இருபுறம் நின்று பாட்டுப்பாடி வரவேற்கின்றனர். சோவியத் ஒன்றியத்தில் 15 முதல் 45 நாட்கள் வரை அரசுச் செலவில் குழந்தைகள் விடுமுறை முகாமில் பங்கு கொள்வார்கள்.
செப்டம்பர் மாதத்தில் பள்ளியில் சேர்க்கும்போது டிரம்ஸ், ப்யூகிள் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் ஒவ்வொரு வீடாக செல்கின்றனர். பள்ளி வயது வந்த குழந்தையை வீட்டிற்கு சென்று அழைத்துக்கொண்டு பாடிக் கொண்டே பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர். பள்ளிக்குச் செல்வதையே கொண்டாட்டமாக, சமூகத்தின் வேலையாக இருந்ததை சோவியத் யூனியனில் பார்க்க முடிந்தது.
 நூலகம் மற்றும் வாசிப்பு பழக்கம் :
என் தந்தையாரின் நூலகம் மிகப்பெரியது. பலதரப்பட்ட நூல்கள் கொண்டது. புதிய நூல்களை உடனுக்குடன் வரவழைப்பார். ஜி.கே.நடேசன் நிறுவனம் வெளியிட்ட தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் தலை சிறந்த விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது வரலாறுகள் எனக்கு வாசிக்கப் பிடிக்கும்.
பள்ளியிலும், கல்லூரியிலும் நல்ல நூலகர்கள். மாணவரிடத்தில் மிக்க அன்பு கொண்டவர்கள். எனக்குப் பல கதாசிரியர்களை  அறிமுகப்படுத்துபவர்கள். ஜான் ஒஃப் லண்டன்ஸ் வீக்லி, லண்டன்  டைம்ஸ் இலக்கிய இணைப்பு ஆகியவை கல்லூரி நூலகத்திற்கு வரும். அவற்றைத் தவறாது படிப்பேன். முக்கியமாக நூல் விமர்சனங்களை  விரும்பிப் படிப்பேன். இன்று வரை விமர்சனங்கள் என்னைக் கவர்வதால் தான் ‘புத்தகம் பேசுது’வும் எனக்குப் பிடித்த இதழ்.இளங்கலைப் படிக்கும்  பொழுது மில்டன் பற்றி ஒரு புது நூல் விமர்சனத்தைப் படித்தவுடன் பேராசிரியரிடம் அதனை நூல்கத்திற்கு வாங்கிட வேண்டினேன்.  பேராசிரியரும் உடனே லண்டனிலிருந்து அந்த புத்தகத்தை  வரவழைத்தார்.
கல்லூரியில் கிருஷ்ணசாமி, ஈரோடு தமிழன்பனின் அண்ணன்  தங்கவேலு எனது நண்பர்கள். சங்க இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு  கொண்டவர்கள். அவர்கள் தூண்டுதலில் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் மூல உரைநூல்களைப் படிக்கும் விருப்பம் வந்தது. சங்க இலக்கியங்கள்  தமிழனுக்குப் பெருமை சேர்ப்பவை.
ஆசிரியனாகப் பொறுப்பேற்றவுடன் நூலகத்தை அதிகமாகப் பள்ளியில் பயன்படுத்தியவன் நான் தான். தலைமையாசிரியர் தான் படித்த அரசியல் நூல்களைப் பள்ளி நூலகதிற்குக் கொடுத்துவிட்டார். ஹெரால்ட்  லாஸ்கியின் அரசியல் இலக்கணம், சபைன், கெட்டெல் ஆகியோரது  அரசியல் சிந்தனை, வரலாற்று நூல்களை விரும்பிப்படிப்பேன். சோசலிசம், மார்க்சியம் ஆகியவற்றின் பால பாடங்கள் பெற அவை உதவின.
1948 பாடத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டில் குறைந்தது பாடநூல் அல்லாத ஆறு தமிழ் நூல்களையும், ஆறு ஆங்கில நூல்களையும் படிக்க வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு பள்ளியிலும் பொது நூலகத்தைத் தவிர ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். இதற்காக நூல் வெளியீட்டாளர்கள் 50 முதல் 90 பைசா வரை விலையுள்ள நூல்களை வெளியிட்டார்கள்.
நான் தலைமையாசிரியன் ஆனவுடன் வகுப்பு நூலகத்திற்கு எத்தகைய நூல்கள் வாங்க வேண்டும் என்று மாணவரிடம் கருத்துக் கோரினேன். பயண நூல்கள் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து வாழ்க்கை வரலாறுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. இலக்கிய நூல்கள் மாணவரது விருப்பப் பட்டியலில் இல்லை. ஆனால் வகுப்பு நூலகங்களில் அவையே அதிகம் இருந்தன. மாணவர் விருப்பப்படி நூல்களை வாங்கினேன். இச்சீரிய திட்டம் முடக்கப்பட்டது வேதனைக்குரியது. காணாமல் போகும் நூல்களின் விலையை ஆசிரியர் ஊதியத்தில் பிடிக்க முற்பட்டதால் வகுப்பு நூலகத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க விரும்பவில்லை.
பள்ளிப் பொது நூலகத்திற்கு நாளிதழ்கள், பருவ இதழ்களில் வரும் விமர்சனங்களின் அடிப்படையில் நூல்களைத் தெரிவு செய்வது நான் கடைபிடித்த முறை.
நான் கோவையிலிருந்து சென்னை வரும்பொழுது என்னுடைய சொந்த நூலகத்தில் இருந்த கணிதம், நிர்வாகவியல், அரசியல், கல்வியியல், சமூகவியல் போன்ற பல துறைகள் சார்ந்த நூல்கள் அனைத்தையும் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு அளித்துவிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் நிறைய நூல்கள் வாங்குவேன். மூன்றாண்டிற்கொரு முறை அவற்றைப் பெரும்பாலும் நூலகங்களுக்குக் கொடுத்துவிடுவேன். என்னிடம் இருந்தால் எனக்கு மட்டும்தான் பயன்படும். நூலகத்தில் இருந்தால் பலர்க்கும் பயன்படும் என்பது எனது கருத்து.
சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் விட்டவுடன் அமெரிக்கா அதிர்ச்சியுற்று சோவியத் கல்விமுறையை ஆய்ந்து பல சீர்திருத்தங்கள் செய்தது. அவற்றில் ஒரு கண்டுபிடிப்பு சோவியத் குழந்தைகளின் வாசிப்பு வேகம்  அமெரிக்கக் குழந்தையின் வாசிப்பு வேகத்தைப் போல் நான்கு மடங்காகும். அமெரிக்கக் குழந்தை ஒரு பக்கம் படிப்பதற்குள் சோவியத் குழந்தை நான்கு பக்கங்கள் படித்துவிடும். அமெரிக்காவில் வாசிப்புப் பயிற்சிக்கு இது வித்திட்டது. கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எச்.விஸ்வேஸ்வரன் மேற்கொண்ட ஆய்வில் தமிழ்நாட்டுப் பத்தாம் வகுப்பு மாணவரது தமிழ் வாசிப்பு வேகம் அமெரிக்க ஐந்தாம் வகுப்பு மாணவரது ஆங்கிலம் வாசிக்கும் வேகத்தை விடக் குறைவு எனக் கண்டார். வாசிக்கும் திறனோடு வாசிப்பு வேகத்தை அதிகரிக்கவும் இருக்கும் தேவை அறியப்பட்டது. வாசிப்பு வேகத்தை அதிகப்படுத்த கண் பயிற்சிகள் உட்பட பல உக்திகள் உண்டு. நாம் அதனில் அதிகம் கவனம்  செலுத்துவதில்லை.
சந்தித்த ஆளுமைகளும்  சந்திக்காத முதல்வரும் :
பேட்டியைத் தொடங்குவதற்கு முன்பே கலாம் பற்றி பேச்சு வந்தது. அப்துல் கலாம் பெரும்பாலும் தனியார் பல்கலைக் கழகங்களில் தான் பேசினார். ஏ.சி.சண்முகம் கல்லூரி விழாவில் பங்கேற்று, பெருமையோடு அந்த நிர்வாகத்தை பாராட்டினார் கலாம். ஆனால் அந்தக் கல்லூரியோ ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பெரும் மழையின் போது அதே கல்லூரி நிர்வாகம் தனது காம்பவுண்ட் சுவரை இடித்து மதுரவாயல் ஏரி தண்ணீரை வெளியேற்றியதால் லட்சக்கணக்கான குடிசை மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை நான் கலாமுக்குத் தெரியப்படுத்திக் கடிதம் எழுதினேன். திரும்பி அவர்  பதில் எழுதவே இல்லை. அதுபோல, இந்திய நாட்டின் ஜனாதிபதிகளாக இருந்த ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபிரசாத், ஜாகிர் உசேன் போன்றோர்கள் பணிக்கு முன்னும்பின்னும் கல்வித்துறையில் பணியாற்றியவர்கள்தான்.
ஜி.டி.நாயுடு பக்கம் விவாதம் திரும்பியபோது, “ஜெர்மனியிலிருந்து கருவிகளை வாங்கி தனது திறமையைக் காட்டியவர். ஜி.டி.நாயுடு தனது மகள் கல்யாணத்தை  சர்.சி.வி.ராமனை வைத்து நடத்தினார். மூன்றரை மணி நேரம் சர்.சி.வி.ராமன் அருமையாகப் பேசினார். அவர் பேசி முடித்தவுடன் திருமணத்திற்கு வந்தவர்களை அவங்க அவங்க வீட்டிலே போய் சாப்பிடுங்கோ” என சொல்லிவிட்டார். விசித்திரமான மனிதர் ஜி.டி.நாயுடு.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் கல்வி பரவலானதற்கு மிக முக்கியமான காரணம், அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு தான். மாதத்திற்கு 20 நாள் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்வார். பள்ளிகளை திறப்பது, மாணவர்களை சேர்ப்பது, இதற்காக ஒரு நாளைக்கு ஏழு, எட்டு கூட்டங்களில் பேசுவார். மிகச்சிறந்த பேச்சாளர், கிராமப்புறங்களில் அவரது பேச்சுக்கு மிகப் பெரும் ஈர்ப்பு இருந்தது. மக்களிடம் கல்விகுறித்து எழுச்சியை உருவாக்கினார்.
குமாரசாமி ராஜா முதற்கொண்டு கலைஞர் வரை அனைத்து முதலமைச்சர்களையும் சந்தித்து உள்ளதாகவும், தான் சந்திக்காத ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்கிறார். நான்கு இடைத்தேர்தல்களில் மூன்றில் தோல்வியடைந்த
எம்.ஜி.ஆர். துக்கம் கொண்டாட ஊட்டிக்கு வந்தார். அப்போது என்னை மதிய விருந்துக்கு அழைத்தார். சைவ சாப்பாடு  என்பதால் முறுகல் தோசையுடன் தயிர் தொட்டுச் சாப்பிடுமாறு சொன்னதை சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
1982-ல் குடியரசு தலைவர் விருது எஸ்.எஸ்.ராஜகோபாலனுக்கு வழங்கப்படுகிறது. அந்த விருதைப் பெற டில்லிக்கு செல்கிறார். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர்களுக்கு அடுத்த நாள் இந்திரா காந்தி விருந்து கொடுக்கிறார். இவர் வேட்டி சட்டையுடன் செல்கிறார். காவலாளி இவரை உள்ளே  விடுவதற்கு முன் சோதனை போட முயல்கிறார்.
“எனக்கு நேற்று இரவு ஜனாதிபதி விருது கொடுத்து பெருமைப்படுத்தி இன்று தீவிரவாதியை சோதிப்பது போல் சோதித்துதான் உள்ளே விடுவீர்கள் என்றால் நான் வரவில்லை என சத்தமாக பேசினேன். எனது குரலைக் கேட்டு உயர் அதிகாரி சமாதானம் செய்து, சோதனையில்லாமல் உள்ளே அழைத்துச் சென்றார்”, இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போது ராஜகோபாலன் துணைவியார் இந்திராகாந்தியுடன் இவர் நிற்கும் புகைப்படத்தை எடுத்து வந்து காண்பிக்கிறார். எஸ்.எஸ்.ஆர்.வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் புகைப்படத்தில்.
இந்திரா காந்தி அனைத்து வட்டாரங்களை பற்றியும் மிக கூர்மையாக விபரங்களைத் தெரிந்து கொண்டிருப்பவர். என்னிடம் வந்து பேசும் போது, நான் கோவையிலிருந்து வருகிறேன் என்று சொன்னவுடன் “சந்திர காந்தி எப்படி இருக்கிறார்? மிக தைரியமான பெண்மணி அவர்கள்” எனக் கூறினார்.  சந்திர காந்தி, கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியை நடத்தி வந்தார். பிரதமராக இல்லாதபோது இந்திரா காந்தியை அழைத்து கல்லூரியில் பேச வைத்தவர். அதனால்தான் இந்திராகாந்தி இவ்வாறு கூறினார்.
ஆசிரியர் – மாணவர் உறவு :
“குழந்தைகள் மற்ற குழந்தைகளோடுதான் இருக்க விரும்புகிறார்கள். அப்படி எனில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது குழந்தை ஏன்  அழுகிறது?” கேள்வி எழுப்புகிறார் ராஜகோபாலன்.
ஆசிரியர் மூன்று விசயங்களை புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அனைத்து குழந்தைகளும் கற்கத் தகுதியானவர்களே. ஆனால்  ஒவ்வொருவரும் கற்கும் வேகம் மாறுபடும். இரண்டு, எல்லோரும்  நல்லவர்கள். தவறு செய்வதற்கு காரணம் சமூகம், பள்ளி, மற்றும் சூழல்கள்தான். மூன்றாவது, ஏதாவது ஒரு தனித்திறமை ஒவ்வொரு  மாணவரிடத்திலும் இருக்கும். அதைக் கண்டறிந்து வளர்ப்பதுதான்  ஆசிரியர் கடமை.
தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் 1957ல் முதல் விடுதலைப்போரின் நூற்றாண்டைக் கொண்டாட பள்ளியில் விழாக்களுக்கு ஏற்பாடு செய்தோம். ஒரு மாணவர் ஆசிரியரிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தார். நான் விபரம் கேட்டேன். அந்த மாணவர் கண்காட்சி வைப்பதற்கு தனக்கு ஒரு வகுப்பறை வேண்டும் எனக் கேட்டதாகவும், ஒரு மாணவருக்கு ஒரு அறையைத் தர முடியாது என ஆசிரியர்கள் சொன்னார்கள். நான் அந்த மாணவருக்கு ஒரு அறையைத் தருமாறு சொன்னேன். கண்காட்சி நாளின்போது அந்த மாணவரின் அறையில்தான் கிராம மக்கள் சென்று பார்த்தனர். கூட்டம் கூட்டமாக பெண்கள் உள்ளே சென்று வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே திரும்பினர். ஆச்சரியத்தோடு உள்ளே சென்று பார்த்தேன். அந்த மாணவன் Electro Magnatic Principle அடிப்படையில் ஒரு ஆய்வு செய்திருந்தார். ஒரு பெண்  தனது கணவரை அடிப்பது போல் இரண்டு பொம்மைகளை வைத்து Electro Magnatic Principleஐ விளக்கியிருந்தார். நிஜ வாழ்க்கையில் கணவரிடம்  உதை வாங்கும் பெண்கள் இதைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சென்றனர்.
சர்ச் பார்க் கான்வென்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கணிதத்தில் குறைபாடு உள்ளதைக் களைவதற்கு என்னிடம் ஆலோசனை கேட்டனர். நான் மாதாந்திர காலண்டரை எடுத்துக் கொண்டு 7ம் வாய்ப்பாட்டை ‘கிறுக்கு ராஜா’ கதை மூலம் சொல்லிக் கொடுத்தேன். மாணவர்கள் விரைவில் கற்றுக்கொண்டனர்.
ஆசிரியர் – மாணவர் உறவு கல்வித் தரத்தின் அடிப்படை. வீட்டுப் பாடம்  என்பதை  தடை செய்யவேண்டும். பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்களின் இடர்பாடுகளை தெரிந்துகொள்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.
கல்வி, சமூகம் குறித்து, தன் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து சென்ற மனிதர்கள் பற்றியெல்லாம் பேசுவதற்கு நிறைய வைத்துள்ளார் எஸ்.எஸ்.ராஜகோபாலன். மிக மிக சுருக்கமாகவே பேசுபவர், “புத்தகம் பேசுது” இதழுக்காக நிறைய பேசினார். அவருடனான உரையாடல் நிறைவாக இருந்தது என்பதைவிட செய்வேண்டிய பணிகளில் தெளிவை உருவாக்கியது எனலாம்.
“நட்சத்திரங்களைவிட நிறையவே பேசுவது                  அவற்றின் இடையுள்ள இருள்”
என்றார் கவிஞர் பிரமிள். ஆம்! தமிழகக் கல்வித்துறையில் நிகழ்ந்த பல மாறுதல்களுக்குக் காரணமானவர்கள் பலர்.  அவர்களில் ஒருவர்தான் எஸ்.எஸ். ராஜகோபாலன்.  இவர்கள் இருளாக இருப்பதால்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன.

Related posts

Leave a Comment