You are here
நூல் அறிமுகம் 

மிக மிக பிற்படுத்தப்பட்டோருக்கான குரல்!!

சாதி – அரசியல் அதிகாரம் நூலை முன்வைத்து ஓர் விவாதம்

அ.பகத்சிங்

    சாதியம்குறித்த விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சாதியின் தோற்றம், வரலாறு குறித்து அறுதியிட்ட பொது ஆய்வு முடிவுகள் ஏதும் எட்டப்படாத சூழலில்தான் சாதியத்திற்கு எதிரான கருத்தியல்களும், கள செயல்பாடுகளும் பல்வேறு சித்தாந்த பின்புலத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. சாதி ஒழிப்பு என்ற நெடிய இலக்கை அடைவதற்கு முன்னால் சாதியத்தால் வீழ்ச்சியுற்ற பல்வேறு சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மேம்பாட்டிற்காகவும் பலவேறு கருத்தியல்களும், போராட்டவடிவங்களும் முன்வைக்கப்படுகிறது. ஒடுக்குமுறைக்கு உட்பட்ட பல்வேறு சாதிய சமூகங்களின் மேம்பாட்டிற்கான கருத்தியலை முன்வைத்து பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் சமூக-பொருளாதார-அரசியல் ரீதியில் பின்னடைவில் உள்ள சில சாதிகளை முன்வைத்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள நூல் ”சாதி- அரசியல், அதிகாரம்”. இந்நூல் முன்வைக்கும் சில முக்கிய விவாத புள்ளிகளாவன:-
•    மனு தர்மம் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் நால்வர்ணத் தொகுப்புகளை உண்டாக்கியது. செங்குத்தாக அடுக்கப்பட்ட சாதிய அடுக்கு ஒருபுறம் செயல்பாட்டில் இருக்க, அரசு நிர்வாகரீதியாகக் கொண்டுவந்த சமூகநீதிக் கொள்கைகள் இந்தத் தொகுப்பை வேறுவகையாக சற்றே மாற்றியமைத்தது. பட்டியல் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முற்பட்டோர் அல்லது பொதுப்பிரிவினர் என்ற புதிய தொகுப்பை உண்டாக்கியது. மண்டல் கமிஷன் எதிர்ப்புப் பின்னணியில் உயர்சாதியினர் உரிமைகளுக்கான இயக்கங்களும் மேலெழுந்தன. இவை ஒருவகையில் அரசியல் அணிதிரட்சியாக மாறி ஒவ்வொரு வகுப்பினரையும் முன்னிலைப்படுத்தும் அரசியல் செயல்பாடுகள் மேலெழுந்துள்ளன.
•    தமிழகத்தில் பிராமணரல்லாதோர் இயக்கம் பிற்படுத்தப்பட்டோருக்குள் சில சாதிய குழுக்களின் எழுச்சிக்கு அடித்தளமிட்டுச் சமூகம் மற்றும் அரசியல் அதிகாரத்தை நோக்கிப் பயணிக்க வைத்தது. பின் பிற்படுத்தப்பட்டோருக்குள்ளே மேலும் சில சாதிகள் தங்களின் எண்ணிக்கை ஆதிக்கத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி  அரசியல் தளத்தில் தங்களுக்காக உரிமைகளை மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவின் மூலம் உத்திரவாதப்படுத்திக்கொண்டனர். தலித்துகளுக்கான கோரிக்கைகளை, மேம்பாட்டை வலியுறுத்தி அவர்களுக்கான அணிதிரட்டலும் நடந்துவருகிறது.
•    இப்படி ஒவ்வொரு சமூகத்தவருக்குமான கோரிக்கைகளுக்காக குரல்கொடுக்கவும் மேலெழுந்து போராடவும் அரசியல் இயக்கங்கள்  களத்தில் உள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே சமூக பொருளாதாரம், மக்கள் தொகை எண்ணிக்கை, அரசியல் திரட்சி ஆகியவற்றில் கீழ்நிலையில் உள்ளவர்களாகவும், தலித்துகளைப் போல் தீண்டாமையை அனுபவிப்பவர்களாகவும் சில சாதிகள் உள்ளனர். அவர்களுக்கென்று குரல்கொடுக்கவோ, போராடவோ இயக்கங்கள் ஏதும் இல்லை. இப்படிப்  புறக்கணிக்கப்பட்டுள்ள சில சாதிகளைப் பிரதிநிதிதுவப்படுத்தி, அவர்களைப் பிற்படுத்தப்பட்டோரில் பிற்படுத்தப்பட்டோர் என்ற உட்பிரிவை முன்மொழிந்து, அவர்களின் சமூக அரசியல் மேம்பாட்டிற்கான பாதை குறித்த விவாதத்தைப் பேசுவதையே இந்நூலின் நோக்கமாகச் கௌதம சித்தார்த்தன் கொண்டுள்ளார்.
அவர் முன்வைக்கும் புதிய உட்பிரிவிற்கான நியாயங்களைச் சில சாதிகளை முன்வைத்து. அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் விளக்கியுள்ளார்.
•    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், சாதி அடிப்படையிலான தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள போயர், குலாலர், மீனவர், வண்ணார், மருத்துவர், மற்றும் விஸ்வகர்மா ஆகிய  ஆறு சாதிகளின் வாழ்வியல், தொழில், தோற்றத் தொன்மங்கள், நம்பிக்கைகள் மற்றும் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் குறித்துச் சுருக்கமாக விவரித்துள்ளார்.
•    சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக வளர்ச்சியற்று, சமூக அங்கீகாரமற்றுக் கிடக்கும் இச்சாதிகளின் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறையை, உழைப்புச் சுரண்டலை அவர்களையே நியாயமென்று வைதீக மதங்கள் ஏற்கச் செய்தது என்பதையும், இவர்கள்மீதான பண்பாட்டு மேலாதிக்கத்தை இதிகாசங்கள், புராணங்களின் வழியாக எவ்வாறு திணித்தது என்பதையும் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.
முன்னெழும் விவாதங்கள்
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கிரீமி லேயர் (Creamy layer) முறைகூட ஒருவகையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குள் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்புகளை வழங்கும் முயற்சியே ஆகும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முற்பட்டோரை தவிர்த்துவிட்டு நலிந்த நிலையில் உள்ளவர்களுக்குக் கல்வி-வேலை வாய்பில்  உரிய பங்கை உத்திரவாதம் செய்வதே கிரீமி லேயர் முறையின் நோக்கமாகும். இடஒதுக்கீட்டின் பலனை குறிப்பிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க இவ்வாறான அடுக்குகளை உருவாக்குவது தேவைதான். ஆனால் இதற்குப் பொருளாதார நிலையை மட்டுமே வரம்பாக வைப்பது போதுமானதா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. சாதிய  ஏற்றத்தாழ்வுகளும், அதனை சமன்படுத்த உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடும் ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதில்லை என்ற நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்குள் மட்டும் சமநிலை ஏற்படுத்த பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக வைப்பது முரணாக உள்ளது.
இந்நூலில் விவாதிக்கப்படும் ஆறு சாதிகள் மட்டுமல்லாது, பண்டாரம், நரிக்குறவர், ஏனாதி, ஒட்டர் உள்ளிட்ட ஏதேனும் பிற்பட்ட சாதியை சார்ந்த ஒருவர் ஆண்டிற்கு ஆறு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவராக இருப்பதனால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (எ.கா: நாடார், கவுண்டர், தேவர், வன்னியர்) இணையாக மாறிவிட முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இந்நூல் முன்வைக்கும் மையக்கருத்தின் அடிப்படையில் கிரீமி லேயர் (Creamy layer) முறை குறித்து மறுபரிசீலனை செய்வோமானால் ஒரு சமூகப்பிரிவின் பொருளாதார நிலையை மட்டுமே வரம்பாகக் கொள்ளாமல் அதன் சமூக, பண்பாட்டு அரசியல் மேம்பாட்டு நிலையையும் அடிப்படைக் காரணியாகக் கொள்ளவேண்டும் என்பதை நோக்கிய புரிதலுக்கு இந்நூல் இட்டுச்செல்கிறது.
இன்று தலித்தல்லாதவர்கள் கூட்டமைப்பு என்ற போர்வையில் தலித்துகளுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அனைவரையும் அணிதிரட்டும் சதிவேலை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஆதிக்கச் சாதிகளே செய்கின்றனர். இச்சூழலில் பிற்படுத்தப்பட்டோருக்குள் இருக்கும் உள் முரண்பாடுகள், ஒடுக்குமுறைகள் குறித்துப் பேச வேண்டிய கட்டாயம் உள்ளதால், சித்தார்த்தன் முன்வைக்கும் ”பிற்படுத்தப்பட்டவர்களில் பிற்பட்டவர்கள்” குறித்த விவாதம் தேவையானதாகவே படுகிறது.
இவ்வாறான புதிய வகைமை ஒருசில குறிப்பிட்ட சாதிய குழுக்களை மட்டும் தனியாக அணிதிரட்டுவதை ஊக்குவிப்பதாகவும், ஒருவகையில் அடையாள அரசியல் போன்றும் தோன்றலாம். ஆனால் இந்த வகைமைக்குச் சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும் அரசியல் காரணிகள் வலுவாக உள்ளது. அனைத்து உழைப்பாளி மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய சக்திகள் ஒவ்வொரு சாதியின் தனித்த பிரச்சனைகளைக் கோரிக்கைகளை முன்னெடுக்காதவரை, ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒன்றிணைக்காத வரை அது சாதியத் திரட்டலுக்கு இட்டுச் செல்வதைத் தவிர்க்க முடியாது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடையாள அரசியலின் அடையாளம்?!
தமிழ்ச் சூழலில் சாதி, இனக்குழுகுறித்து பேசினாலேயே அதனைப் பின்நவீனத்துவம் என்று அடையாளப்படுத்தும் போக்குள்ளது. இந்நூலின் ஆசிரியர்கூட தான் பின்நவீனத்துவத்தின் கண்கொண்டு நுண்ணரசியல் பார்வையோடு பிற்படுத்தப்பட்டோரில் பிற்படுத்தப்பட்டோர் குறித்துத் தான் அணுகுவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் உண்மையில் இந்த உணர்வினையும், மேல் குறிப்பிட்ட ஆறு சாதிகளின் வாழ்வியல் பிரச்சனைகளையும் ஆராய்வதில் பின்நவீனத்துவம் எங்கே பங்கு வகிக்கிறது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒடுக்கப்பட்ட சாதிகள், இனக்குழுக்கள் குறித்துத் தனிப்பட்ட கவனத்தை, கோரிக்கைகளை முன்வைத்ததில் பின்நவீனத்துவத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே வேலையில் சாதி-இனக்குழுக்கள் குறித்த புரிதலுக்குப் பின்நவீனத்துவம் மட்டுமே  அடைப்படை என்று சொல்வதும் மூடநம்பிக்கையாகவே தெரிகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் மீட்சிக்கான சர்வலோக நிவாரணி எனப் பின்நவீனத்துவத்தின் மீதான வெற்று பிம்பம் எல்லாம் தருமபுரி வன்கொடுமைச் சம்பவத்தோடு எரிந்து சாம்பலானது. பின்நவீனத்துவத்திற்கு,  ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே சார்ந்து நிற்கும் சார்புநிலை கிடையாது என்பதும், ஒரே நேரத்தில் ஒடுக்குபவனுக்கும், ஒடுக்கப்படுபவனுக்குமான செயல்பாட்டு கருத்தியலை தரவல்லதுதான் அடையாள அரசியல் என்பது பட்டவர்த்தனமானது.
தனிப்பட்ட சாதிகளின், இனக்குழுக்களின் வாழ்வியல் கூறுகள், ஒடுக்குமுறைகள், சிக்கல்கள் குறித்துப் பேசினால் அது பின்நவீனத்துவத்தின் குரலாகத்தான் இருக்க வேண்டுமென்ற மூட நம்பிக்கை, வர்க்க அரசியல் பேசுபவர்கள் மத்தியில் கூட ஆழமாக உள்ளது. பின்நனவீனத்துவம் என்ற இடியாப்பச் சிக்கல் இந்திய சூழலுக்கு அறிமுகமாவதற்கு முன்பாகவே மார்க்சியக் கண்கொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின் எழுச்சியை, சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தியலை மிக நுணுக்கமான பார்வையுடன் வானமாமலை அவர்கள் ஆராய்ந்துள்ளார். (பார்க்க: தமிழகத்தில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டக் கருத்துக்களும் 1980). தமிழ்ச் சூழலில் மார்க்சிய கண்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் குறித்து நா.வா, தொ.பரமசிவம், ஆ.சிவசுப்பிரமணியம் போன்றவர்கள் செய்திடாத எதனை அடையாள அரசியலை முன்வைப்பவர்கள் செய்துவிட்டார்கள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக முன்வைக்க வேண்டியுள்ளது.
இந்நூலின்மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் விளிம்புநிலையில் உள்ள சாதிகளின் மேல் எழுச்சிக்கான விவாதத்தை, புதிய அரசியலை கவுதம சித்தார்த்தன் முன்வைத்துள்ளார். அதற்கு, மேல்குறிப்பிட்டுள்ள சாதிகள் குறித்து இனவரைவியல் அடிப்படையில், கள ஆய்வுகள் மூலமும், தமிழ் இலக்கியத் தரவுகளின் துணைக் கொண்டும் நிறுவியுள்ளார். மேலும், இச் சாதிகளின் தற்கால வாழ்வியல், சமூக பிரச்சனைகள், பொருளாதார நிலை குறித்து கூடுதலாகத் தகவல்களைத் தொகுக்கும் பட்சத்தில், ஆசிரியர் முன்வைக்கும் கருத்து கூடுதல் அழுத்தம் பெறும்.

 சாதி அரசியல் அதிகாரம்          கௌதம சித்தார்தன்        எதிர் வெளியீடு, ரூ.100/-

Related posts

Leave a Comment