You are here
நூல் அறிமுகம் 

மார்க்ஸின் “டுசி”

எஸ். கார்த்திகேயன்

 மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் இருவரும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டனர். அதன் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1850 இல் வெளியிடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் விஞ்ஞான சோசலிசத்தின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல உருவாக்கப்பட்டு வந்தன. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸால் அன்புடன் டுசி (Tussy) என அழைக்கப்படும், அந்த காலகட்டத்தின் மிகச்சிறந்த புரட்சிகரத் தலைவர்களில் ஒருவரான மார்க்ஸின் மகள் எலினார் மார்க்ஸ், அக்கால கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைப்பதில், குறிப்பாக உழைப்பாளிப் பெண்களை ஒன்றிணைப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர் 19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகர தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி மற்றும் எழுத்தாளர். எலினார் மார்க்ஸ் அவர்களின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையை, ரேச்சல் ஹோம்ஸ், ‘எலினார் மார்க்ஸ்: ஒரு வாழ்க்கை’, (Eleanor Marx- A Life) எனும் புத்தகத்தில் மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.
அனைத்துமட்ட உழைக்கும் மக்களை, குறைந்த ஊதியம் பெறும் உழைக்கும் மக்கள் முதல் அதிக ஊதியம் பெறும் உழைக்கும் மக்கள்வரை, ஒருங்கிணைப்பதில் எலினாரின் பங்களிப்பு குறித்த ஆழமான விவரங்கள் பலவற்றை இப்புத்தகம் அளிக்கிறது. பெண் தொழிலாளர்கள் தங்களை ஸ்தாபனப்படுத்துவது நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலைமையில், எலினார், நூற்புத்துறையில் உழைக்கும் மகளிரை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். 1870களில் அமெரிக்காவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட தட்டச்சு எந்திரங்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் சந்தையை ஊடுருவின. இத்தகைய ஊடுருவல் புதிய தொழிலாளர் வர்க்கமான தட்டச்சர்களை உருவாக்கியது.  திறமையான வர்க்கப்பிரிவைச் சேர்ந்த தட்டச்சர்கள் குறைந்த ஊதியத்துக்கு மிக அதிகமான வேலை வாங்கப்பட்டார்கள். அத்தகைய தட்டச்சர்கள் தங்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை எலினார் வலியுறுத்தினார். எலினாரின் ஒரு பகுதி வாழ்வாதாரம் தட்டச்சைச் சார்ந்திருந்தது, எலினார் ஒரு தட்டச்சராகவும் வேலை செய்தார்!
பிரடெரிக் டெமுத் தீவிர உறுப்பினராக மற்றும் தலைவராக இருந்த அமால்கமெட்டேடு  (Amalgamated) பொறியியலாளர்கள் சங்கத்துடன் எலினார் நெருக்கமாகப் பணிபுரிந்தார். மேலும் அவர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு வகுப்புகளும் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் பல நடத்தினார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் எரிவாயு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டார். அத்தகைய போராட்டங்களின்போது பலமுறை போலீசாரின் தாக்குதல்களை மிகவும் துணிவுடன் எதிர்கொண்டார். ஒரு முறை அப்படிப்பட்ட போராட்டங்களில் தொழிலாளர்களைத் தாக்கிய போலீஸைத் திரும்பித் தாக்கிவிட்டு குறுக்குப் தெருக்களின் வழியாகத் தப்பி எங்கெல்ஸின் வீட்டை அடைந்தார். இந்தச் சம்பவத்தை எங்கெல்ஸ் பெருமையுடன் ஹெலன் டெமுத்துடன் பகிர்ந்து கொண்டார்.
எலினார் ஒரு சக்திவாய்ந்த மற்றும் எழுச்சியூட்டும் பேச்சாளர். சில நேரங்களில் தொழிற்சங்கங்களின் அமைப்பாளர்கள் மக்களை ஈர்க்க பேச்சாளர்களின் பட்டியலில் எலினார் பெயரை அவரைக் கேட்காமலேயே சேர்த்துவிடுவார்கள். முதலாளித்துவ சமூகத்தில் உழைக்கும் பெண்களின் நிலைமைபற்றிய கருத்துருவாக்கத்தில் எலினாரின் பங்கு மிக முக்கியமானது.  ஐரிஷ் போராட்டம், பாரிஸ் கம்யூன் மற்றும் முதல் அகிலத்தில் பெண்களின் பங்கு எலினாருக்கு அகத் தூண்டுதலாக இருந்தது. ஆண்-பெண் என இருபாலருக்குமான அமைப்புக்களில் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் தேவையான இடங்களில் பெண்களுக்குத் தனி அமைப்புகள் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதலாளித்துவமும் ஆணாதிக்கமும் சகோதரர்கள் மட்டும் அல்ல; அவைகள் இரட்டைப் பிறவிகள் என்று கூறினார். இத்தகைய புரிதல்தான், ‘பெண்களின் பிரச்சனை : ஒரு சோசலிச பார்வை’ என்ற மிக முக்கியமான அறிக்கை எழுதி வெளியிடக் காரணமாயிற்று. 1886 ல் இரண்டாம் அகிலம் நிறுவப்பட்ட தினத்தன்று எலினார் தனது அறிக்கையை குறித்துப் பேசினார். அதே கூட்டத்தில் பெண்களின் பிரச்சனையைக் குறித்துப் பேசிய மற்றொரு நபர் பெர்லின் நகர பெண் தொழிலாளர்களின் பிரதிநிதி, ஜெர்மானிய மார்க்சியவாதி மற்றும் எதிர்கால சர்வதேச மகளிர் தினத்தின் இணை நிறுவனரான கிளாரா ஜெட்கின் ஆவார், இவர் எலினாரைவிட 2 வயது இளையவர். கிளாராவின் பேச்சை எலினார்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நட்பு எலினாரின் மரணம்வரை தொடர்ந்தது. இன்னும் மிகக் குறிப்பாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம், ஜூலை 1896 ல் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் 4வது மாநாட்டில் அராஜகவாதிகளை அகிலத்திலிருந்து வெளியேற்றியதில் ரோசா லக்சம்பர்க், சார்லோட் டெஸ்பார்டு, கிளாரா ஜெட்கின் மற்றும் எலினார் மார்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது.
எலினார் பிரிட்டனோடு மட்டும் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவரது அமெரிக்கப் பயணம்குறித்து நாம் அறிந்துகொள்ள பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 1886-ல், அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சி (SLP) சர்வதேச சோசலிஸ்டுகள் பலரை அழைத்துச் சுமார் 4 மாத கால சொற்பொழிவுச் சுற்றுப்பயணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜெர்மனியிலிருந்து வில்ஹெல்ம் லீப்க்நெட்டும், பிரிட்டனிலிருந்து (UK) எலினாரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். SLP ன் தலைமைப் பொறுப்பில் ஜெர்மானியர்கள் கணிசமான அளவு இருந்தனர். அமெரிக்க மக்கள் மார்க்சிய தத்துவார்த்தங்களை மிகச் சிறந்த ஆங்கிலத்தில் முதல் முறையாக எலினாரிடம் இருந்துதான் கேட்டார்கள். இங்கிலாந்தில் பிறந்து மார்க்ஸின் மூலதனப் புத்தகத்தோடு வளர்ந்த எலினார், ஆங்கில இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர்.  மார்க்ஸ்-எங்கெல்ஸின் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆங்கில மூல நூல்களின் பகுதிகளைச் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு எலினார் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்துள்ளார். எலினாரின் அமெரிக்க சுற்றுப்பயணம் நைட்ஸ் ஆப் லேபரின் (Knights of Labor) வரலாற்றுச் சிறப்புமிக்க 1886 மே தினப் போராட்டத்திற்கு சற்று பிறகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது பொது உரையில் எலினார் பெண்களின் பிரச்சினைகளுக்கே முன்னுரிமை அளித்திருந்தார். 1886 ல் அமெரிக்கத் தொழிலாளர்களின் மத்தியில் தனியுடைமை சொத்து ஒழிப்பு பற்றி தவறான புரிதல் இருந்துவந்தது. தனியுடைமை சொத்து ஒழிப்புபற்றி அமெரிக்கத் தொழிலாளர்கள் ‘எனது உடை’ மற்றும் ‘எனது கைக்கடிகாரம்’ என்று உரிமை கொண்டாட இயலாதா என எலினாரிடம் கேள்வியெழுப்பினார்கள். அக்கேள்விகளுக்கு விடையளித்த எலினார் மிகவும் எளிமையாகத் தனியுடைமை சொத்து ஒழிப்பு என்பது எந்தவொரு தனிமனிதனும் இது ‘எனது நிலம்’ மற்றும் ‘எனது தொழிற்சாலை’ என உரிமை கோரமுடியாதபடியான நிலையையை உருவாக்குவது என்று பதிலளித்தார்.
எலினாரின் நட்புவட்டாரம் புரட்சிகர இயக்கங்கள் மட்டுமல்லாமல், இலக்கியத் துறையிலும் சமூக சீர்திருத்த வட்டத்திலும் விரிந்திருந்தது. இப்புத்தகத்தில் எலினார், அன்னி பெசன்ட், ஜார்ஜ் பெர்னாட் ஷா, ஒலிவ் செரினெர் (தென்னாபிரிக்க எழுத்தாளர்) மற்றும் இன்னும் பலருக்கும் இடையேயான நட்பைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அன்னி பெசண்டுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேவையான, ஒத்த கருத்துடைய இடங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். “மார்க்சின் மூலதனம் எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என ஜார்ஜ் பெர்னாட் ஷா கூறியதில் எலினாருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. மார்க்ஸ் உறுப்பினராக இருந்த பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷாவும் எலினாரும் உறுப்பினர்களாக இருந்தனர். நூலகத்தின் வாசிப்பு அறையில் தொடங்கிய ஷா-எலினார் நட்பு கடைசி வரை தொடர்ந்தது. அரசியல் – இலக்கியம் என இருதுறைகளிலும் டுசி தீவிரமாக இயங்கினார். எலினாரை பொருத்தமட்டில் அரசியலும் இலக்கியமும் பின்னிப்பிணைந்த ஒன்று. பிற மொழி இலக்கியங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், டுசிக்கு முறையான பள்ளிக்கல்வி கிடையாது. டுசியை பள்ளிக்கு அனுப்பி படிக்கவைக்க மார்க்சுக்கு வசதியில்லை. தனது 20 வயதிலிருந்தே, தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி பல தலைவர்களையும் சிறந்த பேச்சாளர்களையும் உருவாக்கினார்.
மார்க்ஸ், எங்கெல்ஸ், ஜென்னி, ஹெலன் டெமுத், மார்க்சின் மற்ற மகள்கள் ஜென்னி மற்றும் லாரா மற்றும் அவர்களது குழந்தைகள், ஹெலனின் மகன் பிரெடெரிக் டெமுத் மற்றும் அவரது மகன் ஹெரி (Harry), எங்கெல்ஸின் வாழ்க்கைத் துணைவியரான மேரி மற்றும் லிடியா ஆகியோருக்கிடையே என அன்பான எளிமையான உறவை இப்புத்தகம் அழகாகப் பதிவுசெய்துள்ளது. மார்க்சின் படைப்புகளுக்கான உரிமையை எலினார் மற்றும் லாராவுக்கு எங்கெல்ஸ் பெற்றுத்தந்தது, எங்கெல்ஸின் மறைவுக்குப் பிறகு இருவரின் நிதிச்சுமையை பெருமளவு குறைத்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ், ஜென்னி, ஹெலன் டெமுத், மேரி மற்றும் லிடியாவின் மரணத்துக்குப் பின் பிரெடெரிக் டெமுத் டுசியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
மார்க்ஸ் மற்றும் ஜென்னிக்கு 16 ஜனவரி 1855 அன்று பிறந்த எலினார், தனது வாழ்க்கைத் துணைவருடனான குடும்பப்பிரச்னையின் காரணமாக மார்ச் 31, 1898 ல் தற்கொலை செய்துகொண்டார். டுசியின் வாழ்க்கைத்  துணைவரான எட்வர்டு எவிலிங் ஒரு நாடகக் கலைஞர், எழுத்தாளர், இலக்கியவாதி மற்றும் அறிவுஜீவி. அதே நேரத்தில் ஒரு பொய்யர், வெளிவேஷக்காரர் மற்றும் சுயநலவாதி. எலினார் மரணத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு எட்வர்டும் உடல் நலக்குறைவால் காலமானார். எலினார் உயிரோடு இருந்த வரை எட்வர்டின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு அவரையும் கவனித்துக் கொண்டார். எட்வர்டு மற்றொரு பெண்ணை இரகசியமாக திருமணம் செய்து கொண்டதை அறிந்து மனமுடைந்த எலினார் தற்கொலை செய்துகொண்டார். எலினாரின் இளவயது மரணம் மனித சமூகம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு பேரிழப்பாகும். “மகள் ஜென்னி என்னைப் போல இருப்பாள்; ஆனால் டுசி நானேதான்” என்று பலமுறை மார்க்ஸ் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment