You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

புரட்சி இலக்கியங்கள்:ஒரு மீள்வாசிப்பு-3: புரட்சி வரலாற்றுக்கு ஒரு முன்னோடி நூல்

   என்.குணசேகரன்

உலக வரலாற்றில்,சமூகத்தை அடியோடு மாற்றிய வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். மக்கள் எழுச்சியினால், அதிகார மாற்றங்கள், சமூகப் புரட்சிகள் நிகழ்ந்திடாத நாடுகளே இல்லை.
ஆனால், அவற்றைப் பதிவு செய்துள்ள  பல வரலாற்றாசிரியர்கள், இந்த நிகழ்வுகளில் சாதாரண மனிதர்கள் ஆற்றிய  பங்கினை சரியாக  சித்தரிப்பதில்லை.‘வரலாற்றைப் படைப்பவர்கள் சில தனிநபர்கள்தான்; வரலாற்று நிகழ்வுகள்  தற்செயலானவை’ போன்ற பார்வைகளுடன்  நீடித்துவரும்  வரலாற்று நோக்குகளாக உள்ளன.
சாதாரண மனிதர்களின் இயக்கம் வரலாற்று நிகழ்வுக்கு அடிப்படையானது. இந்தப் பார்வையை நிலைநிறுத்த, மார்க்சிய வரலாற்று ஆசிரியர்கள் இன்றும் போராடி வருகின்றனர்.
“கீழ் மட்டத்திலிருந்து வரலாறு” எனும் வரலாற்று நோக்குடன் வரலாறுகளை எழுதிய இ.பி.தாம்சன், எரிக் ஹப்ஸ்வம் போன்றோருக்கும் முன்னோடித்    தலைமுறையைச் சார்ந்தவர், ஜார்ஜ் லெபிவர்.
அவர் எழுதிய “பிரெஞ்ச் புரட்சி” எனும் நூல், ஐரோப்பிய சமூகத்தை முற்றாக மாற்றி, மன்னராட்சிகளையும், பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வை விளக்குகிறது.  (The French Revolution:From its origins to 1793, Georges Lefebvre).
புரட்சியின் தருணங்கள்
பிரான்சில் 1787 முதல் 1789 வரை நான்கு புரட்சிகர மாற்றங்கள் எழுந்ததை லெபிவர் விளக்குகிறார்.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னணியில் பிரான்சு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வந்த சமூக பொருளாதார மாற்றங்கள் அடிப்படையாக அமைந்தன.
நீண்ட காலமாக நிலம் முக்கிய உற்பத்தித் தளமாக இருந்தது. நிலவுடைமை பரவலாக பலரிடம் இருந்த நிலையை மாற்றி, மன்னரின் தனிப் பெரும் உடைமையாக மாற்றப்பட்டது. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் மன்னர் குடும்பத்தின் நிலத்தின் மீதான அதிகாரம் நிலைபெற்றது. அவரது கூட்டாளியாக பிரபுத்துவக் கூட்டம் இருந்தது.
முன்னதாக,14-ஆம் நூற்றாண்டிலிருந்தே வணிக, கைவினைஞர் கூட்டம் வளரத் துவங்கியது. இதுவே படிப்படியாக, 15, 16 – ஆம் நூற்றாண்டுகளில் வலிமையான பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமாக உருப்பெற்றது.
இந்த மாற்றங்கள்தான் கீழ்க்கண்ட புரட்சிகர நிகழ்வுகளை ஏற்படுத்தின.
14-ஆம் லூயி மன்னர் தலைைமையிலான முடியாட்சியின் வீழ்ச்சி;
1789-ல் முதலாளித்துவப் புரட்சி வெற்றி பெற்று தேசிய சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1789 ஜூலை மாதம் பிரபுத்துவ சக்திகள் தேசிய சட்ட சபையைக் கலைத்து, புரட்சியை வீழ்த்த நடந்த முயற்சி;
அந்த எதிர்ப்புரட்சியை பாரீஸ் மக்கள் முறியடித்தது. (பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட வரலாற்று நிகழ்வு இக்கட்டத்தில் நிகழ்ந்தது.)
இதில்,புரட்சியால் புதிய சமூகம் உருவாக வேண்டுமென்ற நம்பிக்கையுடன் நகர்ப்புற தொழிலாளி வர்க்கமும், சாதாரண மக்களும்் பங்கேற்றனர்..
பொருளாதார நெருக்கடியும், பிரபுத்துவக் கூட்டத்தினால் நிலம் பறிபோகுமோ என்ற அச்சமும் சூழ்ந்திட விவசாயிகள் மேற்கொண்ட எழுச்சியும் இணைந்தது.
இது, நிலப்பிரபுத்துவம் முழுமையாக அழிந்திட வழிவகுத்தது.
ஆக,பழைய சமூக ஒழுங்கு, சரிந்து வீழுகிற நிகழ்வை, அது சார்ந்த சம்பவங்களுடன் லெபிவர் துல்லியமாக விவரித்துள்ளார். வலுவான ஆதாரங்களையும், உண்மைகளையும் அடுக்கடுக்காக விளக்கி,பிரெஞ்ச் புரட்சியின்  துவக்கம் முதல்,  1793-நிறைவு வரை பதிவு  செய்துள்ளார், ஜார்ஜ் லெபிவர்.
அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவம் தன்னோடு புரட்சியில் இணைந்த தொழிலாளி வர்க்கத்திற்குத் துரோகம் இழைத்தது என்பது வேறு கதை.
மார்க்சிய வரலாற்றாசிரியர்களின் மகத்துவம்.
பிரெஞ்ச் புரட்சி பற்றி பல ஆயிரம் நூல்கள் வந்த போதும், ஜார்ஜ் லெபிவரின் அடிப்படைக் கருத்தோட்டத்தை யாராலும் மறுக்க இயலவில்லை. அதாவது, பிரெஞ்ச் புரட்சி முதலாளித்துவ வர்க்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்த புரட்சி; இதற்காக நிலப்பிரபுத்துவ அரசியல் அமைப்புக்கள் அழிக்கப்பட்டன. இந்த மாற்றத்திற்கு வர்க்கப் போராட்டமே காரணம் ஆகிய உண்மைகளை நிறுவிய பெருமை லெபிவர் உள்ளிட்ட மார்க்சிய வரலாற்றாசிரியர்களையே சாரும்.
பிரெஞ்ச்  சமூகத்தில் நிகழ்ந்துவந்த வர்க்கப் போராட்டம், அரசியல் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. இதனை மறுக்க முடியாமல் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களாலும் முன்பு ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது, மன்னர்களின் தவறுகளால்தான் புரட்சி நிகழ்ந்தது என்று வரலாற்றைத் திரித்து பலர் எழுதி வருகின்றனர், ஏனெனில், நவீன தாராளமய யுகத்தில்  புரட்சி,வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கங்களை அழிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. உலக நிதி மூலதனக் குவியலுக்கு வர்க்க சித்தாந்தம் பொருந்தி வராது.
நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற மனிதர்கள் நிகழ்த்திய அந்த வரலாறு இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
லெபிவர் குறிப்பிடுகிறார்:
“அந்த(புரட்சி)நெருப்பு அலைகளை  மனித சமூகத்தின் பெரும்பான்மை இன்னமும் அறியாமல்தான் இருக்கின்றது. உலகின் ஒரு சிறு பகுதியில் ஏற்பட்ட அந்தக் கனலின் வெப்பத்தை இன்னமும் மனிதர்கள் உணரவில்லை”
உள்ளூர் அமைப்புக்கள்
இந்த வர்க்கப் போராட்டத்தில் முதலாளிகள் தலைமையேற்றாலும்,சாதாரண மக்களின் போராட்டமும், உள்ளூர் மட்டத்திலான ஜாகோபின் கிளப்புகள் ஆற்றிய பங்கும் முக்கியமானது.
“அமைப்புச் சட்ட நண்பர்கள் சமூகம்” எனும் பெயரில், இயங்கிய அந்த அமைப்புக்கள் சுருக்கமாக ஜாக்கொபின்ஸ் (jacobins clubs) என்று அழைக்கப்பட்டன. அதன் உறுப்பினர்கள் உள்ளூர் மட்டத்தில் செயல்பட்டு மன்னராட்சியை வீழ்த்தி ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்துவதற்கு  உறுதியாக செயல்பட்டனர்.
ஜாக்கொபின்ஸ் அமைப்பினர் பல பிரசுரங்களையும் வெளியிட்டனர். பிரெஞ்ச் புரட்சியில் எழுத்து செயல்பாடு முக்கியப் பங்கினை ஆற்றியது.
மைக்கேல் கென்னடி  என்ற வரலாற்றாசிரியர்  ஜகோபின்ஸ்  அமைப்புக்கள் பற்றி ஆழமாக  ஆய்வு செய்தவர். பிரெஞ்ச் புரட்சியின் இதயம் போன்று அவை செயல்பட்டது என்பதை அவரது எழுத்து விவரிக்கிறது. ஆய்வு முடிவாக, அவர் எழுதும்போது குறிப்பிடுகிறார்:
“….பிரெஞ்ச் புரட்சியைப் பற்றி மார்க்சியர்களின் பார்வையில் உண்மை இருக்கிறது. புரட்சிக்கு வர்க்கப் போராட்டம்தான் நிர்ணயிக்கும் பாத்திரத்தை வகித்தது.”
எல்லாக் காலங்களிலும் உள்ளுர், கீழ் மட்ட அமைப்புக்கள் புரட்சிகர மாற்றத்தில் முக்கிய பங்கினை வகித்தன.
சோவியத் எனும் தொழிலாளர், படை வீரர்கள், விவசாயிகள் அமைப்புக்கள் ரஷியப் புரட்சியின் வெற்றிக்குப் பங்காற்றின.
பிரெஞ்சுப் புரட்சியில் இத்தகைய பங்கினை ஜாக்கோபின்களின் கிளப்புக்கள் ஆற்றின. எனினும், சோவியத் போன்று சுரண்டப்பட்ட உழைக்கும் வர்க்கங்களை மட்டும் கொண்டதாக இவை அமையவில்லை. மேல்தட்டு வர்க்கப்பிரிவினரோடு, சாதாரண தொழிலாளர்களும் இதில் அங்கம் வகித்தனர்.
பிரெஞ்ச் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் இருந்தது. ராஜாராம் மோகன்ராய் ஒரு  சமூக சீர்திருத்த இயக்கத்தினை வங்கத்தில் உருவாக்கிட,  பிரெஞ்ச் புரட்சியின் கருத்தியல் தாக்கமும் முக்கியக் காரணம்.
1939-ல் இரண்டாம் உலகப் போர் துவங்கிய சூழலில் அன்றைய பிரான்சு அரசாங்கம் இந்நூலை வேட்டையாடியது. அதனைத்  தடை செய்தது மட்டுமல்லாது, நூலை அழிக்கவும் முனைந்தனர். ஆனால், 1959-ல் லெபிவர் இறந்தபோது அவரது நூல் ஆங்கில வாசகர் பரப்பில் முக்கிய இடம் பெற்றது. இன்று வரை செவ்வியல் நூலாக அது திகழ்கிறது.
தனிநபர் துதிபாடும் வரலாறுகள், குப்பைகளாய் மலிந்துள்ள தற்போதைய சூழலில், லெபிவரின் “பிரெஞ்ச் புரட்சி’’ நூலினை மறுவாசிப்பு செய்வது அவசியம்.
(தொடரும்)

Related posts

Leave a Comment