You are here
Uncategorized 

படித்ததில் பிடித்தது

1.மாவீரன் சிவாஜி கோவிந்த பன்சாரே தமிழில்: செ.நடேசன் பாரதி புத்தகாலயம் கோவிந்த பன்சாரேவின் சிவாஜி கோன் ஹே – புத்தகம், சிவாஜி ஒரு காவித் தலைவன் அல்ல. காவியத் தலைவன் என்பதை நிறுவுகிறது. சிவாஜியின் அரசியல் அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களையும் எப்படி ஒருங்கிணைத்தது என்பது இன்றைய மாட்டிறைச்சி – படுகொலைச் சூழலில் வாசிக்கும் நமக்கு, ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான தோழர் பன்சாரேவின் சிகப்பு அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது. எளிய, கையடக்க விலை. மலிவுப் பதிப்பு இது.

2.வைரமுத்து சிறுகதைகள் வைரமுத்து / சூர்யா லிட்ரேச்சர், சென்னை
கவிப் பேரரசு வைரமுத்துவின் முத்தான நாற்பது கதைகளின் தொகுப்பு இது. தூரத்து உறவு எனும் முதல் கதை ஏற்படுத்தும் பாதிப்புபற்றிக் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான கதைகள் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. யதார்த்தவாதக் கதைகளே. மண்வாசனை ததும்பும் எழுத்து – கவிதை நடை. அவரோடு பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றும் தொனி. பேசப்படும்.

3.த (நாவல்) கோணங்கி
த இசை, த அணங்கு, த ஆறு, த விருட்சம், த நாயனம், த ஆமை, த நடனம்…. கோணங்கி எனும் பிசாசு தனது கூடாரத்தில் அகப்படும் அற்பப் பூச்சிகளான நம்மை த வாசகர் ஆக்கி, கதைகளின் அகதிகளாக திரிய வைத்து…. கபாலங்கள் சேகரிப்பதை பொழுதுபோக்காக்கி, மூழ்கிய நகரம், மிதக்கும் நகரம், இருக்கும் நகரம் என அலையாய் அடித்து இன்னும் ஓயமுடியாது தவிக்க வைக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி முதல் மார்க்வெஸ் வரை பலரோடு நெருக்கி அடித்து இடிபட்ட ஒரு ரயில் பயணம் அந்த அனுபவம்.

4.நேரு நயன்தாராசெகல் / தமிழில்: த.ஜெயநடராஜன் / கிழக்கு பதிப்பகம்
ஜவஹர்லால் நேருவின் அரசியல் வாழ்க்கையை தனது பார்வையில் விவரிக்கிறார் நயன்தாராசெகல். ஒரு கல்லூரி விரிவுரையாளராக ஆகவேண்டிய கல்வியாளர், சோஷலிஸ சிந்தனையாளராகி, இந்தியாவின் இதயமாய் ஆசியாவின் ஜோதியாய், பின் உலகின் ஆளுமையாய் உருவெடுத்த கதை. 13 வருடம் சிறைவைக்கப்பட்டவர் என்பதை வாசிக்கும்போது மனம் ஒருவித பிரமிப்போடு பறிதவிக்கிறது.

5.பாரதி கவிதைகள் பதிப்பாசிரியர் : பழ. அதியமான் / காலச்சுவடு
வெறுமனே கவிதைகளைத் தொகுத்து பாரதியின் முதல் பதிப்பை மறுஅச்சு செய்து பலரும் அதை விற்பனைச் சரக்காக்கிய நிலையில், பழ.அதியமான் எளிமைப்படுத்தி சந்தம் பிரித்து, பாரதியின் அதீத சமஸ்கிருத சொற்களுக்கு அகராதி எழுதி மெனக்கெட்டிருக்கிறார். வேலைப்பாடு அருமை. விலைதான் கையைக் கடிக்கிறது.

6. சட்ட மேலவையில் ப.மாணிக்கம் / ஜீவா பதிப்பகம்
கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த தோழர் ப.மாணிக்கம் நிகழ்த்திய எழுச்சி உரைகளின் தொகுப்பு . இன்று மேலவை இல்லை. சட்டமன்றம் பெஞ்சு தட்டும் மட்ட மன்றமாகிவிட்டது என்று நினைக்கும்போது மனம் கொதிக்கிறது. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, வட்டம் மாவட்டம் என அரசியல் ‘தலை’ யாவரும் வாசிக்கவேண்டிய பாடநூல் இது.

7. சொல்லில் அடங்காத உலகம் பா. ராமமூர்த்தி / பாவை பப்ளிகேஷன்ஸ்
பராக்கா ஆவணப்படம். உலக சினிமாவின் இன்னொரு முகம். ஆறு கண்டங்கள், 24 நாடுகள் என விரியும் ஆழமான பதிவு… அதனை காட்சி காட்சியாய் நம்முன் நிறுத்தும் அழகான புத்தகம் இது.

8. தொடக்கக் கல்வியில் நாடகியம் வேலு சரவணன் / புக்ஸ் ஃபார் சில்ரன்
எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு… ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்டு (மந்திர பூனைகள்) அசத்துகிறார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக நாடகம்… என வேலு சரவணன் கல்வி தொடர்பான மிக முக்கிய புத்தகத்தை தந்திருக்கிறார்.

9. எம்.எஸ். சுவாமிநாதன் (வளங்குன்றா வேளாண் தலைவர்) முனைவர் எஸ்.பரசுராமன் / மதி நிலையம்
நமது இளைஞர்கள் விவசாயத்தை மதிக்கவில்லை. அரசு அதை ஆதரித்துப் போற்றவில்லை. விவசாயிகள் தற்கொலையை ஒரு பாதையாக்கி விட்ட அவலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை…. இதற்கிடையே நமது வேளாண் மரபை நவீனத்துவமாக்கிய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குறித்த இந்த வரலாற்று நூல் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாகும் வாய்ப்பிருந்தும் விவசாயமே வாழ்க்கை என அவர் தேர்வு செய்யும் இடம் நெகிழ வைக்கிறது.

10. படித்துப் பழகு மு.முருகேஷ் / அகநி, வந்தவாசி
குழந்தைகளுக்கான புத்தகம் என்ற அடைமொழி இல்லாமல் குட்டியான கதைகளை வழங்கி இருக்கிறார் தோழர் முருகேஷ். சிறுவர் இலக்கிய உலகின் புதிய நம்பிக்கை என்பதில் சந்தேகமில்லை. பள்ளி வாழ்க்கை எனும் பல்சக்கரத்திலிருந்து விடுபட்டு பிள்ளைகள் படித்துப் பழக அழகான புத்தகம்.

11. வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை முனைவர் ப.செந்தில்நாயகம் / மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வெளியீடு
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மலின் வீர வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் அணுகிய நூல். குறிப்பாக அவரது தொழிற்சங்க பங்களிப்பு. இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது. வறுமையில் வாடிய இறுதி நாட்களில் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண பதிப்புத்துறை சார்ந்த அவரது உழைப்பு சிலிர்க்க வைக்கும் பங்களிப்பாகும்.

12. கை சொல்லும் கதை த.வி.வெங்கடேஸ்வரன் புக்ஸ் ஃபார் சில்ரன்
கைகளின் கதை இது. மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவான இடை நிலைப்படியில் கைகள் விடுவிக்கப்பட்டதே முக்கிய திருப்பம் என்பார் எங்கெல்ஸ்…. கையே தன் கதை கூறுகிறது. உடலின் மொத்த எலும்புகளில் சுமார் கால் பங்கு கைகளில் உள்ளது என்பதில் துவங்கி குட்டி குட்டியான பால்ரஸ் மாதிரி செயல்படும் மணிக்கட்டு எலும்புகள் மற்றும் விலங்குகளோடு ஒப்பீடு என இந்த குட்டிப் புத்தகம்… அதாவது ‘கை’ யடக்க புத்தகம் கூறும் செய்திகள் பற்பல.

13. போர்த் தொழில் பழகு வெ. இறையன்பு / புதிய தலைமுறை
வரலாறு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்வதில்லை. தோல்விகளின் தொகுப்புகளை ஆராய்ந்தால் அவை மக்களிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்து ஒரு ஆயிரம் பாடங்களை கற்பிக்கத் தவறுவது இல்லை. இறையன்பு காட்டும் வெற்றிப் போருக்கான இருபத்தி மூன்று உத்திகளில் தோல்விகளின் விலாசங்களும் விளக்கம் பெறுவதே சிறப்பு. நூலின் இறுதியில் ஐசக் அசிமவின் புக்ஸ் ஆஃப் ஃபாக்ட்ஸ் உட்பட 75 உண்மை வழிகாட்டி நூல்களை தொகுத்துள்ளது அதனினும் சிறப்பு.

14. ரா.பி. சேதுப்பிள்ளை ச.கணபதி ராமன் / சாகித்ய அகாடமி
தனது ‘தமிழின்பம்’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பற்றிய முழு வரலாறு இது. மிக சுவைபட கணபதிராமன் பல்வேறு ஆதாரங்களுடன் சொல்லிச் செல்கிறார். சேதுப்பிள்ளை அவர்களின் தன்னலம் கருதாத அருட்கொடை மூலம் உருவான மருத்துவமனைகள் அறக்கட்டளைகளை வாசிக்கும்போது ஆச்சரியம் தருபவை.

15. நாமசூத்திரர்கள் இயக்கம் சேகர் பந்தோபாத்யாய தமிழில்: அப்பணசாமி / புலம் வெளியீடு
நவீன இந்திய தேசியவாதம் என்பது பார்ப்பன வாதமே ஆகும். எப்படி உலகின் ஐரோப்பியமே பெரிது என வெள்ளையன் மீதம் அனைத்தும் காட்டுமிராண்டி கலாச்சாரம் என்கிறானோ அதுபோல ஏனைய மரபுகளை பழித்துப் புறந்தள்ளி, குரல்களை எழவிடாமல் செய்யும் தந்திரம்… அதை மீறி 150 ஆண்டு போராட்டத்தில் சமூகநீதியை தேடி எழும் கிழக்கு வங்காள ஆதிப்பழங்குடிகளின் வீர வரலாறு இது…. உண்மையான வரலாறு வாசிக்கும்போது இதயம் வலிக்கும் எனும் எங்கெல்ஸ் வாசகம் மெய்ப்பிக்கக் காணலாம். அப்பணசாமி மொழியாக்கம் சிறப்பு.

16. எரிக் ஹாப்ஸ்பாம் கா.அ.மணிக்குமார் / பாரதி புத்தகாலயம்
தனது வாழ்வில் இறுதிவரை மார்க்ஸை ஆதரித்து வாதாடிய வரலாற்றாளர் எரிக் ஹாப்ஸ்பாமை இதைவிட சிறப்பாக தமிழில் அறிமுகம் செய்ய முடியாது. வரலாற்றை மார்க்சிய பொருள் முதல் வாதப்படி துய்த்துணர்ந்த வரலாற்றாளர்கள் சிலரே. ஹாப்ஸ்பாமின் ‘ஹவ் டு சேஞ்ச் த வேர்ல்டு’ (How to change the world) நூலை மொழிபெயர்க்க முயன்று கைவிட்டேன். இப்போது அந்த வேலையை தொடங்க மணிக்குமாரின் இந்தப் புத்தகம் தூண்டுவதாய் உள்ளது. தற்போதைய முதலாளிய பேரழிவுப் பாதை நிரந்தரமானதல்ல. அதைவிட சிறந்த அமைப்பு முறையால் அது அகற்றப்படும் என இறுதிவரை முழங்கிய குரல் இது.

17. அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே எம்.ஜி.சுரேஷ் / பொக்கிஷம் புத்தக அங்காடி
சாக்ரடீஸ் முதல் சார்த்தர் வரையிலான முக்கிய தத்துவ கோட்பாடுகளை சுருங்கக் கூறுகின்றார். வித்தகர் சுரேஷ் மையம் X விளிம்பு என விளையாடும் அவர் மார்க்சிய உரையாடலை இன்னும் ஆழமாக பரிசீலித்திருக்கலாமே என்று தோன்றினாலும், ‘வாழ்க்கை ஒரு அபத்தம்’ என்று சொல்லிய இருத்தலியத்தை விசாரணைக்காக எடுத்து கட்டவிழ்த்து பிரிக்கும் இடம் புது அனுபவம்.

18. கம்யூனிசப் புரட்சி ப.கோதண்டராமன் / வ.உ.சி. நூலகம்
புரட்சி என்கிற சொல் இன்று ஜவுளிக் கடை விலை வீழ்ச்சி முதல் ஆளும் கட்சி பேனர்கள் வரை சீழ்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சொல்லை உண்மைப் பொருளில் முன்னெடுத்த கோடிகோடி உலக தொழிலாளர்களின் நம்பிக்கையாளர் காரல் மார்க்ஸ். அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு அவரது சித்தாந்தம் குறித்த விவரணை என இந்த சிறு நூல் பெரிய செய்திகளைத் தாங்கி உள்ளது.

19. இயற்கை சமுதாயம் விஞ்ஞானம் கே.கே. கிருஷ்ணகுமார் / அறிவியல் வெளியீடு
பூமியே ஒரு பாடப்புத்தகம் என கே.கே.கிருஷ்ணகுமார் சொல்லும் இடம்…. புதை படிவ அறிவியல் நம்முன் மிக எளிய மொழியில் ஆச்சரியமாக சில சொற்களே கொண்டு கடை விரிக்கிறது. அறிவியலின் அனைத்தையும் பற்றிய சுருக்கமான விவரணை இந்த புத்தகம். விவசாயத்தின் ஆரம்பம் எனும் 15வது கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

20. கல்வி உரிமையும் மறுப்பும் ஜோ.ராஜ்மோகன் / பாரதி புத்தகாலயம்
இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ராஜ்மோகன் குழந்தைகள் கல்வி உரிமை சட்டம் சரியாக அமுலாக்கம் பெற நாம் நடத்தவேண்டிய போராட்டங்களை வரிசைப்படுத்துகிறார். நரேந்திர மோடி அரசு கொண்டுவரத் துடிக்கும் வர்ணாசிரம கல்வியை உடைத்து ஜனநாயக கல்வி தழைக்க நாம் ஒன்றுபட்டு களத்தில் நிற்க அறைகூவல் விடுக்கிறார். இந்த நூல் கல்வி உரிமைச் சட்டம் எப்படி அமுலாக்கப்பட வேண்டும் என்பதற்கான சரியான வழிகாட்டி நூல்.

21. பேரா. ஜான்சி ஜேக்கப் (என் வாழ்க்கை தரிசனம்) டி.எஸ். ரவீந்திரன் / தமிழில்: யூமா வாசுகி புலம் வெளியீடு
பேராசிரியர் ஜான்சி ஜேக்கப் எனும் கேரள இயற்கையாளரை அவரது மைனா சிறுவர்-சுற்றுச்சூழல் இதழ்மூலம் அறிவேன். ஆனால் அவர் கேரளத்தின் ‘நம்மாழ்வார்’ என்பதை அறியவில்லை. இந்த நொடி என்று சொல்லும் போதே இந்த நொடி கடந்து போய்விட்டது… இயற்கைப் பாதுகாப்பின் சிக்கல் இதுதான். ’ எவ்வளவு எளிமையாக நமது கையாலாகாத்தனத்தை விளக்குகிறார். இயற்கை குறித்த மிக அவசியமான பாடப்புத்தகம் இது.

22. பாலஸ்தீன் எட்வர்ட் செய்த் / எதிர் வெளியீடு
பாலஸ்தீன வரலாறு என்பது, உலக தேசிய இன சிக்கலின் முக்கிய முகம். மதவெறி அரசியலாக்கிய வன்மம் எட்வர்ட் செய்த் எனும் இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளரால் இந்த நூலில் சிறப்பாக முன் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவு அடக்குமுறைக்கு எதிராக… பாலஸ்தீன மக்களின் நெடுந்துயர்…. விடுதலை என கடுமையாய் போராடியவரின் டைரி குறிப்பு போலவே இருக்கிறது புத்தகம்…

23. தடித்த கண்ணாடி போட்ட பூனை (கவிதை) போகன் சங்கர் / உயிர்மை
கவிதைகளை இப்போதும் புளிக்காத திராட்சையாக சுவைக்க முடிகிறது. ஆங்கங்கே கடிபடும் விதைகள் கூட ஒரு விதமான சுவை. தனிமை, அவலம், ஆழ்மன உளைச்சல், தத்துவ விசாரணை, அழகியல் சிதைவு என இவரது கவிதைகளும் பரந்து விரிந்த நவீன வானம்.

24. பழங்குடி மக்களின் வீரப் போராட்டங்கள் எஸ்.ஏ.பெருமாள் / பாரதி புத்தகாலயம்
பழங்குடி இன மலைவாழ் மக்களோடு மக்களாக எழுச்சிமிக்க போராட்டங்களை பிரித்தானியரை எதிர்த்து நடத்தி வீரமரணமடைந்த சீத்தாராம ராஜு எனும் புரட்சியாளரை நாடு மறக்காது… அதனைக் குறித்த விரிவான புத்தகம் இல்லை. கய்யூர் விவசாயிகள் போராட்டம், 1940களில் சங்கம் அமைத்து நடந்த விவசாய பேரெழுச்சி குறித்தும் பதிவில்லை. ஆனால் அக்குறைகளை தோழர் எஸ்.ஏ.பி. தீர்த்து வைத்திருக்கிறார். முக்கிய ஆவணமாக்கல் இந்த நூல்.

25. பற்றி எரியும் பாலஸ்தீனம் கி.இலக்குவன் / பாரதி புத்தகாலயம்
1967 யுத்தத்திற்கு முன் இருந்த எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு பாலஸ்தீனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். யாசர் அராபத், ஹனி எல்.ஹசன் மற்றும் கலீல்வாசித் ஆகிய மாவீரர்கள் குறித்த ஆழமான பதிவுகள் இந்த நூலில் உள்ளன. இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு தன் முழு மானசீக ஆதரவை தெரிவித்து பாலஸ்தீனத்திற்குத் துரோகம் இழைக்க முடிவெடுத்துள்ள சூழலில் இதுபோன்ற புத்தகங்களின் தேவை அதிகரித்துள்ளன.

26. மா.இராசமாணிக்கனார் இரா.கலைக்கோவன் / சாகித்ய அகாடமி
தமிழக கல்வெட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்த வரலாற்றாய்வாளர் முனைவர் மா.இராசமாணிக்கனார் பற்றிய அரிய பதிவு இது. மாணவர்கள்தான் சிந்தனைக் கருவூலம் என அறிவித்து ஆசிரியர்களின் மமதையை அடக்கியவர். தனது சொற்பொழிவுகளில் தமிழ்ப் பற்றை நாட்டுப் பற்றோடு சேர்த்து ஊட்டியவர். ம.பொ.சிவஞானத்திற்கும் இராசமாணிக்கனாருக்கும் இடையே நடந்த மக்கள் ஆய்வு சொற்போரையும் நூல் அழகாய் பதிவுசெய்வது சிறப்பு.

27. சென்னைக்கு மிக அருகில் விநாயக முருகன் / உயிர்மை
ஊடகம், தகவல் தொழில்நுட்பம், பன்னாட்டு தொழில் போட்டி இவற்றின் கொடுங்கோல் பயணம் விவசாயத்தை முற்றிலும் குதறுவதை சொற்களில் விவரிப்பதும், நவீன நகரத்தின் பாழ்மூலையில் விபரீத உறவுகளின் வழி நடக்கும் குற்றங்களும் மாறிமாறி நம்மீது யதார்த்த அமிலமழை பொழிய, வலியை விதைக்கும் வித்தை விநாயகமுருகனின் வெற்றி.

28. சரித்திரப் பிழைகள் எஸ்.அர்ஷியா / புலம் வெளியீடு
சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் ஒருவரைப் பார்ப்பதே இன்று அரிதாக உள்ளது. அதிலும், அரசு சாதியை வெறியாக கட்டவிழ்த்து வன்முறை ஆயுதத்தை கையிலெடுக்கும் போது அப்படிப் பேசுபவர் யார் பக்கம் என்பது அதைவிட முக்கியம். இந்த நூலில் பரமக்குடி தலித்கொலைகளில் தொடங்கி போபால் பேரழிவு, தண்ணீர் அரசியல் கல்வி என விரியும் அரசியல்… பார்வை நம்மைப் பாராட்டத் தூண்டுகிறது. மோடி: கிழியும் பொய் முகம் முக்கிய கட்டுரை.

29. வலி கலைச்செல்வி / காவ்யா பதிப்பகம்
கலைச்செல்வியின் கதைகள் வலி தருகின்றன. நீர் ஆதாரத்தை முற்றிலும் அழிக்கும் மணற்கொள்ளை, பன்னாட்டு பாட்டில் குடிநீர் என்பன சாதாரண குடும்பப் பெண் மீதான வன்முறையாக வெடிப்பதை விவரிக்கும் ‘நீர் வழிப் பாதை’ பாடமாக வைக்கத்தக்க சிறப்பான கதை. வலி கதையும் அவ்வாறே. மனிதநேய எழுத்து இது. தமிழில் பெண் எழுத்திற்கு ஒரு நம்பிக்கை ஊற்று இந்த தொகுதி.

30. மாமன்னன் அசோகன் சார்லஸ் ஆலன் தமிழில்: தருமி எதிர் வெளியீடு
பவுத்த மதத் தழுவல் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவை சார்லஸ் ஆலன் அக்கறையோடு கையாள்கிறார். மாமன்னன் அசோகன் மக்கள் நல அரசாக தனது ஆட்சியை நிலைநிறுத்துகிறார். அதற்கான போராட்டங்கள், அவர் நேர்கொண்ட சிக்கல்கள் தீர்வுகள் நமது பாடபுத்தகங்கள் சொல்லாதவை.

31. மாற்றுப் படங்களும் மாற்றுச் சிந்தனைகளும் அம்ஷன் குமார் / சொல் ஏர் பதிப்பகம்
பாலு மகேந்திராவின் வீடு, மகேந்திரனின் உதிரிப் பூக்கள், என தொடங்கும் மாற்று சிந்தனைப் படங்களின் ஆழமான விவரணை திரைபடங்கள் குறித்த வேறொரு வழிப்பாதையை விதைக்கிறது. நூல் சிறப்பு பி.கே.நாயருடைய பேட்டி – சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படம் குறித்த கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

32. கடவுளின் நூறு முத்தம் யாசகன் / புக்ஸ் ஃபார் சில்ரன்
தன் மகளுக்கு யாசகன் எழுதும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவது நேசம் பாசம் அக்கறை உறவு நெருக்கம் மட்டுமல்ல. அரசியல், கல்வி கலாச்சாரம் சார்ந்த உரையாடலும்தான். அறிவொளி இயக்கம், முதல் வீட்டுப் பாட அரசியல் வரை அவர் மகளிடம் எல்லாமும் பேசுகிறார். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் கடிதங்களின் தேவையை உணர வைக்கிறார்.

33. பச்சை விரல் வில்சன் ஐசக் தமிழில்: எஸ்.ராமன் காலச்சுவடு
கேரளத்தில் பிறந்த மெர்சி மாத்யூ எனும் சிறுமி மத்திய பிரதேசம் சென்று பழங்குடி மக்களோடு வாழ்வைத் தொடர்ந்து அவர்களில் ஒருத்தியாய் அவர்களது உரிமைகளுக்காக போராடிய களம் பச்சைவிரல். மலைவாழ் மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் தரும் உரிமைகளைப் பெற்றுத்தந்த போராளி மாத்யூ அம்மையாரின் வீர வரலாறு இது.

34. காந்திஜி – நேதாஜி கடிதத் தொடர்புகள் ஜீவபாரதி / ஜீவா பதிப்பகம்
காந்தி – போஸ் கடிதங்கள் இன்றைய தலைமுறை வாசித்து விவாதிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகும். காந்தியால் காங்கிரஸ் தலைமைக்கான தேர்தலில் நிறுத்தப்பட்ட பட்டாபி சீத்தாராமையா நேதாஜியிடம் தோற்றபோது… இது என் தோல்வி என பகிரங்கமாக அறிவித்த காந்திக்கு போஸ் எழுதிய கடிதம் வரலாற்றுப் பெட்டகம். காந்தியை விட நேதாஜியை அதிகம் நாம் புரிந்துகொள்ள உதவும் நூல் இது.

35. மம்போ கே.ஆர்.ரமணன் / புக்ஸ் ஃபார் சில்ரன்
பள்ளிக்கூடம் போக ஆசைப்படும் குட்டியானை மம்போ குழந்தைகளுக்கு வசீகரமான கதை. பள்ளியில் எல்.கே.ஜி. படித்து மளிகைக் கடை எலி மூஞ்சுவுடன் சைக்கிள் சவாரி செய்து…. அவர்கள் பிளாட்டில் தங்கி தூங்கி குளித்து…. சூப்பர் கதை… நவீன நடை… அற்புத ஓவியங்கள்…. வேறு என்ன வேண்டும்.

36. சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே... சு.தியடோர் பாஸ்கரன் / காலச்சுவடு
தமிழ் சினிமாவின் வரலாற்றை இத்தகு வித்தியாசமான தலைப்பில் தந்திருக்கிறார் தியடோர் பாஸ்கரன். இந்தப் புத்தகத்தில் எனக்குக் கிடைத்த சிறப்பான வியப்பு, சினிமாவில் வேலை பார்க்கும் தொழிலாளர் சங்கம் அமைத்து போராடும் அந்த வரலாற்றை தனியே தந்திருப்பது. சமீபத்திய சினிமா நடிகர் சங்கத் தேர்தல் அருவறுப்புக்கு நடுவே தியடோர் காட்டும் பாதை நம்மை சிந்திக்கத் தூண்டுவது.

37. ஸ்டீபன் ஹாக்கிங் (வாழ்வும் பணியும்) கிட்டி ஃபெர்கூசன் / தமிழில்: பேரா. வின்சென்ட் எதிர் வெளியீடு
சக்கர நாற்காலி விஞ்ஞானி இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் முழுமையான வாழ்க்கை வரலாறு… நிமிர்ந்த நன்னடையோடு கல்லூரி சென்று வினோத தளர் நரம்பியல் நோய் தாக்கி, பேச்சும் இயக்கமும் அற்றுப் போன பின்னும் தொடரும் ஆய்வின் மூலம் மனித அறிவை மேலும் விரிவாக்கிய மாமனிதரின் சரித்திரம் நம்மை எழுச்சிகொள்ள வைக்கும் பல்வேறு திருப்புமுனைகளை, சமூக மதிப்பீடுகளை, தன்னம்பிக்கைத் தருணங்களை உள்ளடக்கியது. மிக சரளமான கச்சிதமான மொழிபெயர்ப்பு.

38. இன்ஸ்பெக்டர் செண்பகராமன் (குறுநாவல்கள்)அசோகமித்திரன் / காலச்சுவடு
அசோகமித்திரன் ஒரு குறுநாவல் பிரியர். ஒவ்வொரு குறுநாவலும் வெற்றி எனும் மகுடம் சுமக்கத் தவறுவதே இல்லை. மானுட சிக்கல், எளிய வாழ்வின் அவலம், ஆடம்பரமற்ற மத்தியதர வர்க்கத்தின் போராட்டங்கள் இவற்றை பிழிந்து தரும் இந்தக் கதைகளில் மணல், விழா ஆகியவை திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுபவை.

39. மோடி : ஆண்டு ஒன்று வேதனைகள் ஆயிரம் ஏ.சுலைமான் / பாரதி புத்தகாலயம்
நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சியில் விவசாயத்திற்கு அடித்த நில மசோதா சாவு மணி தொடங்கி கல்புர்கி கொலை வரை நாடு சந்திக்கும் வேதனைகளை பட்டியலிடும் இந்த பிரசுரம், நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தாராளவாதமும் மதஅடிப்படை வெறியும் இந்த அரசாங்கத்தின் இரு விழிகள்… அவை போகும் பாதை நாட்டையே பேரழிவுக்குத் தள்ளிவிடும் என்பதே செய்தி.

40. கேளிக்கை மனிதர்கள் அரவிந்தன் / காலச்சுவடு பதிப்பகம்
அரவிந்தனின் சினிமாகுறித்த இக்கட்டுரைக் தொகுதி வெகுஜன சினிமாவை தனது கூர் விமர்சன பார்வையால் செதுக்குகிறது. ஒரு படம் ஓடவேண்டுமென நாம் ஏன் நினைக்கவேண்டும் என்ற கேள்வி அருமை. சமூகப் பார்வையின் குறை வெளிச்சமும் சாதி உணர்வுகளின் உச்ச வெளிச்சமும் தமிழ் சினிமாவின் ஆன்மாவைக் கொல்கிற உண்மையை இதைவிட சிறப்பாக பேசுதல் முடியாது. நம்பிக்கை தரும் படைப்புகளையும் அவர் வரிசைப்படுத்த தவறவில்லை.

41. புவி வெப்பமயமாதல் டின் குட்வின் தமிழில்: க.பூரணசந்திரன் அடையாளம்
புவி சூடேற்றம் குறித்த மிக பிரபலமான ஆங்கில அறிவியல் நூலை தமிழில் தந்திருக்கிறது அடையாளம். தோழர் பூர்ணசந்திரனின் வேலைகள் எப்போதும் மிக நுணுக்கமானவை. இந்தப் புத்தகம் புவி வெப்பமயமாதலின் அடிப்படை அறிவியல் உண்மைகளை முன்வைப்பதோடு, அதன் பின்விளைவுகளையும் வருங்கால பாதுகாப்பிற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய உயிர்காப்பு நடவடிக்கைகள், அவசரகால செயல்பாடுகள் இருக்க உலக அரசியலோ ஆதிக்க நாடுகளின் நெருக்கடியால் எதிர் திசையில் பயணிப்பதை மனபதைப்போடு வாசிக்கிறோம்.

42. காற்றை அழைத்துச்செல்லும் இலைகள் (கவிதை) க.அம்சப்பிரியா / அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்
வித்தியாசமான முயற்சி இது. அம்சப்ரியாவின் கவிதைகளை தனிமனித அவலக் கவிதைகளாக நாம் கொள்ளமுடியும். உறவுகள் பாசாங்காகிவிட்டன. நுகர்வு கலாச்சார நெருக்கடிகளால் மனித பாசம், நேசம் எல்லாமே வேஷம்தான். ஆனால் எப்போதோ துளிர்க்கும் காட்டுச்செடி மாதிரி வேறு எங்கிருந்தோ தோழமை அர்த்தம் கொள்ளும் மனவெளி அவருடையது. இந்தத் தொகுதியில் சக கவிகளையும் ஆங்காங்கே அடிக்குறிப்பு போல அச்சடித்து கவிதை – நூல் வடிவத்தை வேறு ஒரு பாதைக்கு செலுத்தி அசர வைத்து இருக்கிறார்.

43. குஞ்சுவாத்து பிங் மார்ஜோரி ப்ளேக் தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ புக்ஸ் ஃபார் சில்ரன்
குழந்தைகளுக்கு படத்தோடு சொல்ல முடிந்த அழகு கதை இது. தன்னம்பிக்கை, தைரியம், மனம் விடாத முயற்சி, துளிர்விடும் சுயம் என இக்கதை வழியே குழந்தைகள் பலவற்றை உணரமுடியும்… சீனக் குழந்தைகள் கதை சொல்லியான மார்ஜோரி ப்ளேக் குர்ர் வீஸ் எனும் ஓவியரோடு சேர்ந்து முன்வைக்கும் விந்தை உலகை இளங்கோ தமிழுக்குத் தந்திருக்கிறார்.

44. வண்ணம் பூசிய பறவை ஜெர்ஸி கோஸின்ஸ்கி / தமிழில்: பெரு.முருகன் புலம் வெளியீடு
இரண்டாம் உலகப் போர். தன்னந்தனியாக உலாவும் உழலும் ஒரு ஐந்து வயது யுத்த அனாதைச் சிறுவனின் வாழ்வை இந்த நாவல் பேசுகிறது. தற்காலிக தத்துப் பெற்றோரிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்ட அவன்தான் நூலாசிரியர் கோஸின்ஸ்கி, போலந்தின் எழுத்தாளர். இந்த சுய அனுபவ நாவல் உலக இலக்கியத்தில் தனக்கெனத் தடம் பதித்த அரிய நூல். மறுபதிப்பாகி உள்ளது.

45. சேதுபதியின் சேர்வைக்காரன் (நாவல்) க.மனோகரன் / காவ்யா
ராமநாதபுரம் பற்றிய வரலாற்றுப் புதினம் இது. மதுரையை மைசூர் தளபதி தாக்க வரும்போது திருமலை நாயக்கர், ராமநாதபுர மன்னர் சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை நாடுவதும் அதன் விளைவாக நடக்கும் (மூக்கறுப்பு போர்) பற்றி நாவல் விவரிக்கிறது. இப்படி ஒரு வரலாற்று நாவல் படித்து நாளாகிறது. இதுபோன்ற படைப்புகளில் மக்கள் வெறுமனே வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருப்பது இருக்கட்டும். இந்த மூக்கறுப்புப் போர் நம் பாடப் புத்தகங்களில் ஏன் இல்லை?

46. காலனியம் பிபன் சந்திரா தமிழில்: த.அசோகன் முத்துசாமி பாரதி புத்தகாலயம்
இந்திய தீப கற்பத்தில் காலனியாதிக்கம் குறித்த விரிவான ஆய்வுநூல். காலனியாக்கம் நவீன மயமாக்கலின் முக்கிய பகுதி என சொல்வதை பொய், வளர்ச்சிப் பாதை என்பதன் முதல்படி என அதை வரலாற்றாளர்கள் வர்ணிப்பது பித்தலாட்டம் எனக் காட்டியவர் பிபன் சந்திரா. குறிப்பாக நான்காவது அத்தியாயமான, காலனிபிரபு. இந்திய உதாரணம் என்கிற கட்டுரை மார்க்சின் ‘இந்தியா’ கட்டுரை போலவே முக்கியத்துவம் வாய்ந்தது. தனியாக இந்த நூலுக்கு வரலாற்றாளர்கள், மாணவர்கள் வாசிப்பு முகாம் நடத்தவேண்டும்.

47. உம்மத் ஸர்மிளா ஸெய்யித் / காலச்சுவடு
அசாத்தியத் துணிச்சலோடு இலங்கைப் போர்க்களத்தின் பெண் சாட்சியங்களை அடுக்கும் நாவல். தவக்குல், யோகா, தெய்வானை எனும் மும்முனைத் தாக்குதல் இது. போர்க்கால அவலம் ரத்தம் உறைய வைக்கும் பின்புலத்தில் தன்னார்வத் தொண்டும், முன்னாள் போராளி எனில் துரத்தும் துரோகமும், அரசியல் போரின் அங்கமாகும் பெண் குடும்பத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுவது என மூன்று கோணங்களில் ஈழப்போரை சிலுவையாய் சுமந்த இந்த எழுத்து…. தரும் அனுபவம் சொல்லில் அடங்காதது.

48. கிம்-கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் ஜமாலன் / நிழல்
கிம்-கி-டுக் சர்வதேச புகழ்மிக்க தென்கொரிய இயக்குனர்…. வாழ்வின் பசி படு குழியிலிருந்து மீண்டு உலகை தனது காமிரா கண்களுக்கு இரையாக்கிய பிரமாண்டம் அவர். அவரது வாழ்க்கை வரலாறு. நம்ம தமிழ் இயக்குனர்களில் அதிக நாள் ஓடும் படம் என மட்டுமே வெற்றி / தோல்வியை நாம் நிர்ணயிப்பது சினிமா எனும் மக்கள் கலை மீதான துரோகம் என்பதை புரிய வைக்கும் வாழ்க்கை கிம்-கி-டுக் உடையது.

49. காத்து கருப்பு நேயம் சத்யா / புலம் வெளியீடு
மனப்பிறழ்வு நோயை மூடநம்பிக்கை வழியில், பேய் பிடித்ததாகக் கொண்டு வேப்பிலை அடித்து ஆணி அறைந்து சங்கிலி பூட்டும் அவலத்திற்கு எதிரான அறிவியல் நூல் இது. சாமி பேய் ஒப்பிடுவதை படித்தவர்களும் ஆதரிப்பதும், சினிமா மற்றும் ஊடகங்கள் அதை ஒரு யுக்தியாய் பயன்படுத்துவதும், கஞ்சா அபின் என களமிறங்குவது காட்டுத் தனமான நடைமுறை. அதற்கு எதிரான உளவியல் மருத்துவ சிகிச்சைமுறைகளை முன்வைக்கிறது இந்த அக்மார்க் அறிவியல் நூல்.

 50. அளவீடற்ற மனம் ஜெ.கிருஷ்ணமூர்த்தி தமிழில்: எம்.ராஜேஸ்வரி / நர்மதா, சென்னை.
ஜெ.கே. நெஞ்சுக்குள் இருக்கும் மனம் எனும் தனது பார்வையை மையமாக வைத்து நிகழ்த்திய தத்துவார்த்த உரைத்தொகுப்பு. தியசோபிகல் சித்தாந்த செல்லப் பிள்ளையான ஜெ.கே. அதையும் சேர்த்தே கேள்விக்கு உட்படுத்துவதும் ஒழுங்கின்மையின் அறவியலை விவரிப்பதும் நூலின் முக்கிய இடங்கள். செறிவான மொழிபெயர்ப்பு.

Related posts

Leave a Comment