You are here
நூல் அறிமுகம் 

படிக்கவும், விமர்சிக்கவும் கூடிய சுய சரித்திரம்

    ல்லோர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்ல விரும்பிய விதத்தில் சிலர் எழுதி வைத்து இருக்கிறார்கள்.  அதுதான் சுயசரித்திரம். சுயசரித்திரத்தில் உண்மையாகவே சொல்லப்பட்டது குறைவு என்றும், சொல்லப்படாதது மறைத்து ஒளித்து வைத்திருப்பது அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. எத்தனைதான் மறைத்தாலும், சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாததைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதுதான் சுயசரித்திரம் என்பதைப் படிக்க வைக்கிறது.
‘எனது போராட்டம்’ என்பது ம.பொ.சி. என்று அறியப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞான கிராமணி எழுதியிருக்கும் சுயசரித்திரம். அவர்க்கு சுயசரித்திரம் எழுதிவெளியிடும் போது அறுபத்தாறு வயதாகி இருந்தது. அவர் தமிழ் மட்டுமே படித்திருந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர், ஆறு முறைகள் சிறை சென்றவர். அதில் இரண்டு முறை சுதந்திர இந்தியாவில் தன் இலட்சியங்களுக்காகச் சிறைப்பட்டார்.
காங்கிரஸ் தொண்டராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் சொந்த முயற்சியால் தமிழ் படித்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தைத் தமிழ் இலக்கியமாக நிலை நாட்டினார். கட்டபொம்மன், கப்பல் ஓட்டிய வ.உ.சி. என்று தலைவர்கள் பற்றி நூல் எழுதினார். தமிழ்நாட்டில் தமிழ்மொழி தான் வேண்டுமென்று குரல் கொடுத்தார். தமிழ்தேசியத்தின் மீதும் ஈடுபாடு கொண்ட தலைவராக இருந்தார். அதுதான் அவரின் பெரும் பங்களிப்பு. அவருக்கு அதில் துணைசெய்ய காங்கிரஸில் யாருமில்லை.
இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களோடு அவர் இருந்தார் என்றாலும் இந்திய தேசியத்திற்குள் அவருக்குத் தமிழ் தேசியம் இருந்தது. தனக்கான தலைவர்களை அவர் தானாகவே கண்டுகொண்டார். ராஜாஜிதான் அவர் தலைவர். அவர் தான் தனக்கு வழிகாட்டி என்று கருதினார். ஆனாலும் யாரும் ஒரே தலைவனைத் தொடர்ந்து இருக்க முடியாது. சிந்திக்கக் கூடியவன் தன்னளவில் தலைவனாகிறான் என்பதுதான் எனது போராட்டம் சொல்கிறது.
எனது போராட்டம் – ம.பொ.சி. யின் சுயசரித்திரம் என்றாலும் அவர், தன் குடும்பம், சொந்த வாழ்க்கை பற்றி அதிகமாக ஒன்றும் எழுதவில்லை. தனக்குச் சொந்த வாழ்க்கை என்பதே ஒன்று இல்லை, அரசியல் வாழ்க்கைத்தான் தன் வாழ்க்கை என்ற முறையில் எழுதியிருக்கிறார். அதனை அறிந்துகொண்டே எழுதியிருக்கிறார்.
தென்னாட்டில் பல அரசியல் தலைவர்களோடு அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. தன் தமிழ் படிப்பாலும், தர்க்கரீதியான பேச்சாலும் தனிநபர் ஒழுக்கத்தாலும் பலருடைய ஆதரவிற்கும், அன்பிற்கும் உரியவராக இருந்தார்.   அதனையே பெரும் செல்வமாகக் கருதினார் என்பதை எழுதியே நிலைநாட்டி இருக்கிறார்.
அவருக்கு சத்தியமூர்த்தி, ராஜாஜி, வி.வி.கிரி, ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத் தேவர், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்று பலரோடும் இருந்த இணக்கம் பற்றி திறந்த மனத்தோடு எழுதி இருக்கிறார்.
அவருக்குப் பிடிக்காதவர் என்றால் அது,  கு.காமராஜர் தான். அதனை அவர் மறைக்கவே இல்லை. தன் அரசியல் முன்னேற்றத்தைத் தடுத்தவர் என்று வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார். சுயசரித்திரம் என்பது பூசிமெழுகியே எழுதப்படுவது – என்பதை ம.பொ.சிவஞானம், காமராஜர் விஷயத்தில் பின்பற்றவே இல்லை. ஆயிரம் பக்கங்கள் கொண்ட சுயசரித்திரம் ஒரு வரலாற்று ஆவணம். அது ஒரு தலைபட்சமாக – ம.பொ.சி.யின் பார்வையில் – அவர்  பங்களிப்பாகவே எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அது கவனிக்கத் தக்கப் புத்தகம்தான்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, குறிப்பாக சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள், அதனைத் தடுக்க மேற்கொண்ட பெரும் முயற்சிகளை அவர் தெளிவாகவே எழுதியிருக்கிறார்.
வடவேங்கடத்தைப் பெற தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையும், திருத்தணி, சித்தூர் பகுதிகளை மீண்டெடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றதையும், கேரளா  அமைக்கப்பட்டபோது, நாகர்கோவிலைப் பெற தான் பாடுபட்டது பற்றியும்,  தமிழகத்தில் இருந்த பெரிய கட்சிகள் – காங்கிரஸ் உட்பட, ஒதுங்கி நின்றதையும் கவனம் பெறும் வரலாறாகவே எழுதி இருக்கிறார். வரலாறு என்பது சரித்திர பேராசிரியர்கள் ஆராய்ந்து எழுதுவது இல்லை. அது நிகழ்ந்த போது, நேரடியாக அதில் பங்குப் பெற்றவர்கள் எழுதுவதுதான். அதில் எத்தனை சார்பு இருந்தாலும் உண்மை இருக்கவே செய்கிறது.
காங்கிரஸ் போராளியாக வாழ்க்கையைத் தொடங்கிய ம.பொ.சி. பேச்சாளர், பத்திரிகையாளர், தமிழரசு கழகத் தலைவர் என்று தன்னைத்தானே நிலைநாட்டிக் கொண்டார். அதில் மற்றவர்கள் பங்களிப்பு என்பது குறைவுதான்.
அவர் கடைசிக்காலம் பற்றி, தியாகராய நகரில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது பற்றி, மயிலாப்பூரில் தேர்தலில் நின்று தோல்வியுற்றது பற்றி, அமைச்சரவையில் சேர அழைக்கப்பட்டது பற்றி, அதற்காக விமர்சனங்கள் வந்தது பற்றி தான் எம்.எல்.சி.யாக ஆக்கப்பட்டு  தலைவரானது பற்றி – பதில் சொல்லும் விதமாக நிறைய எழுதியிருக்கிறார்.
எனது போராட்டம், 1972-ஆம் ஆண்டு வாழ்வோடு முடிந்துவிடுகிறது. மற்ற பகுதிகளை எழுதிவிடுவேன் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் 1995-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த அவரால் விட்டதைத் தொடர முடியவில்லை.
ம.பொ.சி.யின் சுயசரித்திரமான ‘எனது போராட்டம்’ சொந்த வாழ்க்கைப் பற்றி அதிகம் இல்லாத ஒரு சுயசரித்திரம். படிக்கவும் விமர்சிக்கவும் உரியது.

Related posts

Leave a Comment