You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

சோழம்பேட்டையிலிருந்து அறிவியல் இயக்க தலைவராக….

சோ. மோகனா

“மனிதனின்  சமுதாய  வாழ்வே..அவனுடைய  சிந்தனையை  உருவாக்கி, நிரணயிக்கிறது”  – மாவோ
“மனிதன் பிறந்து பயனின்றி  அழியக்கூடாது”                                                                 லெனின்.
“உன்னை எவராலும்  தோற்கடிக்க முடியாது..உனது நம்பிக்கையில்  தோற்காத வரை”                                            நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
“நாங்கள்  எதார்த்தவாதிகள்.. அதனால் அசாத்திய கனவுகளைக் காண்கிறோம்”     – சே குவேரா..
“ஒரு புத்தகம், ஒரு பேனா, ஓர் ஆசிரியர் ”  என்பவை உலகை மாற்றும் வல்லமை வாய்ந்த கருவிகள்,
இவற்றைக் கருத்தில் கொண்டு தொடருவோம்..
இன்றைய இந்த நிலையையும்,, ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் உள்ள எனது நிலையையும் எண்ணிப் பார்க்கிறேன். ரொம்பவே பிரமிப்பாக உள்ளது.
இன்று  சமூகத்தால்  மதிக்கக்கூடிய நிலையிலும், அதைவிட முக்கியமாக, மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும், அவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை விதைத்து, மக்கள்  மனப் பரப்பில்  ஆழமாக  ஏர் ஓட்டி, சமூகசிந்தனையை வளர்த்து, சமூகத்தை மேம்படுத்த   வேண்டியதைக் குறிக்கோளாக  உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இதெல்லாம் ஒருவருக்கு, அதுவும், கிராமத்தின், பிற்படுத்தப்ப்பட்ட சமுதாயத்தின்  ஏழைக்குடும்பத்தில்,   பிறந்த ஒரு பெண்ணுக்கு சாத்தியமா என்றால் இல்லை என்றே கூறுவோம். எதுவும் கைகூடும்.  முயற்சியும்,திறமையும் வாய்ப்பும் இருந்தால் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
பதினைந்து நாட்களுக்கு முன், ஒரு நாள் இரவு  நண்பர் ஒருவர் என்னை கைபேசியில்  அழைத்தார்.
“நான் உங்க ஊர்க்காரன்..சோழம்பேட்டைதான். எங்க  ஊரிலிருந்து ஒரு  ஆளுமை  உருவாகி இருக்கிறது எனபதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.
எனக்கு ஒரே  ஆச்சரியம்.. என்னடா இது. நம்ம ஊரிலிருந்து ஒருவர் நம்மைப் பாராட்டிப் பேசுகிறாரே  என்று.. அப்புறம்..அது சரி  நீங்க யார் என்றேன். அவர் சொன்ன பதில்தான் என்னை சந்தோஷ அதிர்ச்சியில் மிரள வைத்தது. அவர்தான் நான் எழுதும், “என் வாழ்க்கை, என் போராட்டம், என் அறிவியல்” என்ற தொடர் கட்டுரையின்  முதல் நாயகரான மொச்சக்கொட்டையின் பேரன். எனக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் வார்த்தையே வரவில்லை. ஊமையாகிப் போனேன். கண்களில் நீர் கரையிட்டது.  அவரிடம் சொல்லவில்லை. அவர் ஏராளமாய் பேசினார். நிறைவாக அவர் சொன்ன செய்தி என்னை எங்கோ பிரபஞ்சத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.அவரின் பெயர் பாலசுந்தரம். தற்போது காரைக்காலில், பொறியியல்  பேராசிரியர். சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்து. நினைக்கவே பெருமிதமாக  உள்ளது. சோழம்பேட்டையில் வெட்டியானாக, சமுதாயத்தின் அடுக்கிய மூட்டைகளில் அடியிலும் அடிமூட்டையாகக் கிடந்த ஒருவரின் வீட்டுப் பிள்ளை இன்று சமூகத்தின் மதிப்பு மிக்க ஒரு பணியில், அவரின் மாணவர்களுக்கு, நான் எழுதிய தகவலை எடுத்துச் சென்று காட்டி சொன்னாராம். “புத்தகம் பேசுது” இதழில் என்னை, கட்டுரை எழுத வைத்ததின் அறுவடைப் பயன்தான்.
ஒரு மனிதனின் வாழ்நாளில், 13 – 18 வயது என்பது மிக்க முக்கியமான கால கட்டம். மாற்றத்தை முளைக்க வைக்கும்  வயது.  இதுவே மனிதனின் மன மாற்றத்துக்கும், அவனை சமூக பொறுப்புள்ளவனாக மாற்றவும், பெரிதும் துணை நிற்கிறது. இந்தப் பருவம் என்பது, ஒருவரின்  உயர்நிலைப் பள்ளியின்  பருவமே..  இதில்தான்  ஆசிரியர்கள் அனைத்திலும் ஆசானாக முன் நிற்கின்றனர். அவர்களே, ஆதர்ச  மாடலாகவும் மாணவர்கள் மனதில் வலம் வருகின்றனர்.
நானும் மற்றவர்களைப் போலவே உயர்நிலைப் பள்ளியில் தான் ஏராளமாய், உலகை, சமூகத்தை,அதன் படிநிலைகளை,அதன் மாற்றங்களை, மனித மனங்களைப் படிக்கக்  கற்றுக் கொண்டேன். மோகனா என்ற கிராமத்துக் குழந்தையை 1957-1963  வருடங்களின் கல்வியும், சூழலும் அதிரடி மாற்றம் செய்து, சமூகம் பற்றிய  சிந்தனை ஓட்டம் உருவாகும் ஒரு பெண்ணாக, தைரியம் நிறைந்த, வாழ்வில் மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதமாக  மாற்றியது.
உயர்நிலைப் பள்ளியின் கடைசி மூன்று வருடங்கள்தான்  ஒருவரின் வாழ்வின் ஆதாரத்தை மீட்டும் சுருதியாக இருக்க முடியும். 9ம் வகுப்பிலிருந்து, 11ம் வகுப்பு வரை, நாம்தான்  இந்த  உலகின் நாயகர் என்ற எண்ணம் நிலவும். நம்மை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் நிகழ்வுகளை நிகழ்த்த துடித்த வயது.
நான் 9ம் வகுப்பு வந்ததும், அப்போதிருந்த கல்விச் சூழலில், இந்தி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 11ம் வகுப்பு வரை இந்தி படித்தேன். இந்தி எதிர்ப்பு என்ற பேச்சா..ம்.அப்படி  எதுவும் இல்லை, தெரியாது..அரசியல் வாதிகள் அது பற்றி பேசவும் இல்லை.  காங்கிரஸ்  ஆட்சி நடந்த காலம் அது. நான் நன்றாக இந்தி படித்தேன். அதில் அதிக மதிப்பெண்ணும் பெற்றேன். ஆர்வம் இருந்தால், மொழி கற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல..
டீன் ஏஜ் வந்தாயிற்றா.. எல்லாவற்றிலும் அதீத ஆர்வம்.. குஞ்சிதபாதம் சார் மூலம், பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ளுதல்.. அதில் சுமாராக இரண்டாம் மூன்றாம் பரிசுகள் பெறுதல்தான். இல்லாவிட்டாலும் வருத்தம் கிடையாது.  அதில் கில்லாடிகளான என் வகுப்பு நண்பர்கள், சரசுவதி, சாலாட்சி, யமுனா இருந்தனர் அனைத்திலும் போட்டி போட்டு வென்றெடுக்க.. உயர்சாதிக் குழநதைகள். என் நண்பர்கள் அவர்கள்தான். சாலாட்சி, எங்கள் அறிவியல் ஆசிரியரின் தங்கை. யமுனாதான் எப்போதும் வகுப்பில் முதல்…
அவர்கள் படிக்காத அனைத்துக் கதைப்புத்தகங்களும் நான் படித்து முடித்துவிடுவேன். எக்கச்சக்கமாய் பாக்கெட் நாவல்கள், படக்கதைகள், படிப்பேன். நூலகத்தின் நிரந்தர நுகர்வோர் மற்றும்  பங்கேற்பாளர்.  பள்ளியின்  உணவு இடைவேளையின் போது  நூலகம் திறந்திருக்கும். அங்கு தேவைப்படுவோர் சென்று புத்தகம் எடுக்கலாம். படிக்கலாம்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே ஓட்டமாய் நூலகத்திற்கு என்று விடுவேன். என் வகுப்புக்கு இரண்டு வகுப்பு தள்ளிதான்  நூலகம். (இப்போது அது சாமான்கள் வைக்கும், அறையாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது). நூலகம் மூலம், தமிழ் அறிஞர் மு.வ அவர்களின்  மண்குடிசை, கரித்துண்டு, பாவை, நெஞ்சில் ஒரு முள், கள்ளோ காவியமோ எல்லாவற்றையும் அவசர அவசரமாய் படித்து முடித்து விட்டு, அவற்றைப பற்றி பேச, விவாதிக்க ஆளின்றி தடுமாறுவேன். ஜாவர் சீதா ராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’யை, பேயாய்ப் படிப்பேன். எந்த நேரத்திலும் புத்தகம் படிப்பேன்.  நூலகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை மறுநாள் கொடுக்க வேண்டுமென்றால், வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு, இரவு 1 மணிவரை படித்த அனுபவம் ஏராளமாய் உண்டு.
அப்போது ரொம்பவும் பிரபலமான புத்தகம், ரொம்ப மெலிதாக குறைவான காசில் வாங்கக் கூடிய  கல்கண்டு தான். இதில் வரும்    சங்கர்லால் துப்பறிகிறார் என்ற தொடர்கதை அச்சம் தரும் வகையில் அட்டகாசமாக இருக்கும் அந்த காலத்தில். நாற்காலியில் உட்கார்ந்து படித்தால்  பயத்தில் நாற்காலியின் ஓரத்துக்கு வந்துவிடுவோம்.. கதை படிக்க நேரம் காலம் இன்றி படித்தேன். என்னைப்  புரட்டிப் போட்டதில்,என்னுள் சமூக மாற்றம் விதைத்ததில்,  எனது துணிவு வளர்த்ததில் புத்தகங்களின்  பங்களிப்பு அதிகம்தான்.
நான் படித்த கதைப் புத்தகங்கள் எண்ணிக்கை சொல்லி மாளாது. ராணிப் பத்திரிகை வாசகி நான். அதில் வரும் தொடர்கள் விடாமல் வாசிப்பேன்.  ராணிமுத்து புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். எஸ்.ஏ.பி யின் வேங்கையின் மைந்தன் அப்போதுதான் வந்தது. குமுதத்தின்  முக்கிய தொடரை  எழுதும் சாண்டில்யன் சாதாரணமாய் குமுதம் வாசகர்கள் மத்தியில் பிரபலம். அவரின் கடல்புறா, யவன ராணி யின் கற்பனைக் கதையோட்டம், கதையின் படம் எல்லாம் கலக்கலாக இருக்கும். அவரின் ரசிகை நான்.  தினத்தந்தி.  தினமணி, ஆனந்த விகடன், தினமணிக் கதிர் (வாராந்தரி), கல்கி, கலைமகள், இவற்றின் தொடர் வாசகி நான். சாப்பிடக் கூட மறந்து நாளிதழ் வார இதழ் படிப்பேன்.
கதை படித்தாலும் வகுப்பில் சோடை இல்லை.  ஆனால் வகுப்புக்கு தாமதமாய் வருவதுதான் என் பொதுவான வழக்கம். சீக்கிரம் போவது என்பது சரித்திரத்தில் எப்போதுமே கிடையாது. இதற்காக வகுப்பு ஆசிரியரிடம் திட்டு வாங்கி, வெளியில் நின்றிருக்கிறேன் நிறைய நாட்கள். ஆனாலும் தாமதமாய்ப் போவதை நிறுத்த மாட்டேன். எங்களின் வகுப்பு ஆசிரியர்தான் ஆங்கிலமும் கணிதமும் எடுப்பார். நான் தாமதாமாய் வந்ததைப் பார்த்து அவருக்கு வருமே  கோபம் சொல்லி மாளாது.. அவர் பிராமண சமூகம் என்பதால், எப்படித் திட்டுவார் தெரியுமா? நீயெல்லாம் ஏண்டி படிக்க வர்றே. பேசாம ரெண்டு மாட்டை ஓட்டிகிட்டு சாணி தட்டப் போ என்பார். ஒரு முறை கூட அவர் மேல் எனக்கு கோபம் வந்ததில்லை. அவரே எனக்கு அருமையாக ஆங்கில இலக்கணம் சொல்லித் தருவார். கணிதமும் அன்போடு சொல்லித்தருவார். வகுப்புக்கு வெளியில் நின்று கொண்டே.. ஆங்கில கிராமரும், கணக்கும் போடுவேன். சரியாக உள்ளதால் பிறகு என்னை வகுப்பில் சேர்ப்பார். 10ம் வகுப்பு வரை இது தொடர்கதைதான். நாங்கள் அவருக்கு வைத்திருந்த பெயர் போட்மெயில்  வாத்தியார். அவ்வளவு வேகமாய் நடப்பார். அவரின் பேர் தெரியவே தெரியாது கடைசிவரை.
எப்போதுமே அறிவியல் மற்றும்  கதைகளில்தான் ஆர்வம். நன்றாக படம் போடுவேன். அதனால் எங்க பச்சைக்கிளி சாருக்கு (சேதுராமன்) என்னைப்பிடிக்கும் ..நான் சின்னப்பெண் என்பதாலும். அவர் சொல்லும் கேள்விகள் பொதுப்  பரீட்சையில் வரும் என்பதால் அந்த பட்டம் அவருக்கு மாணவர்களால் ஆசையோடு வழங்கப்பட்டது.
ஆனால் அப்போது உயர்நிலைப் பள்ளியில், 10 ம் வகுப்பு வந்துவிட்டால் composite maths என்ற பிரிவு ஒன்று உண்டு. இதனை கணிதம் நன்றாக வரும் குழந்தைகள்தான் எடுப்பார்கள். நான் அப்போது விரும்பி இந்த பிரிவை எடுத்தேன். ஆனால் சாலாட்சி, யமுனா இதனை எடுக்க வில்லை. சரஸ்வதி மட்டும் எடுத்தாள். சாலாட்சி இதனை எடுக்காததின் இன்னொரு காரணம், composite maths வகுப்பில், நிறைய ஆண்கள் இருப்பார்கள் என்பது கூட.. எங்கள் பள்ளி, பொதுவாக ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தாலும்,பெரும்பாலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுப்புகள் தனித்தனியேதான். இந்த composite maths ல் வரும் அல்ஜீப்ரா நான் பிச்சு உதறுவேன்.
சுட்டி மோகனா பெண்ணுக்கு,  பதினோராம் வகுப்பு பள்ளியிறுதி படிக்கும்போது, அதுவும் அரசுத் தேர்வு எழுத இருக்கும் நேரத்தில் ஒரு சோதனை வந்தது. அம்மை போட்டு விட்டது. உடல் முழுவதும் பெரிசு பெரிசா கொப்புளம். ஒரே அரிப்பு, மேலும் உடலில் உடை அணிவிக்க முடியவில்லை. முக்கியமாக படிக்கத் தடை போட்டாயிற்று. படித்தால் கண் தெரியாமல் போய்விடும் என்றார்கள். சின்னப் பெண்ணா… என்ன செய்வது என்று தெரியாமல், பயந்து கொண்டு படிக்கவில்லை. கிராமம் வேறா, ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொன்னார்கள். என்னை வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் படுக்க வைத்தார்கள். உடலின் மேல் ஒரு வெள்ளைத் துணி போட்டு மூடி வைத்திருந்தார்கள் எத்தனை நாட்கள் என்பது எதுவும்  நினைவில் இல்லை.
ஆனால் 11ம் வகுப்பின் பொதுத் தேர்வும் வந்தது. நான் ஒரு மாதமாய் எதுவும் படிக்கவே இல்லை. பொதுத் தேர்வுக்கு முன் ஒரு முன்தேர்வு நடத்தி அதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களைத்தான்  பொதுத் தேர்வுக்கு அனுப்புவார்கள். என் விஷயத்தில்  இது நடக்கவில்லை. ஏனெனில் எனக்கு  பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத முடியாத நிலை. அம்மை சரியாகவில்லை. அது குறையவில்லை எனவே எனது அன்புமிகு தலைமை ஆசிரியர் திருமிகு தேவசகாயம் சார்தான் எனக்கு சிறப்பு அனுமதி தந்து என்னை  நேரடியாக பொதுத் தேர்வு எழுத  அனுமதித்தார். அப்போதும் கூட, அம்மைபோட்டு மூன்று தண்ணீர் ஊற்றுமுன்பே தேர்வு எழுதிவிட்டு வந்தேன். வீட்டிலுள்ளவர்களிடம் சண்டை போட்டுவிட்டு தேர்வுக்குச் சென்றேன். படிக்காமல் எப்படி பாஸ் செய்ய? என்ன நடந்திருக்கும். வீட்டில் அனைவரும் சந்தோஷமாய்  பாப்பாத்தி என்ற மோகனாவின்  படிப்பை நிறுத்தி விடுவதென்று ஒட்டு மொத்தமாய் முடிவெடுத்தனர்.
சலிப்பும் ஓய்வும்  தற்கொலைக்கு சமம்..
-பெரியார்

Related posts

Leave a Comment