You are here
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சமகாலத்தின் தகிக்கும் எதார்த்தம்…

சம்சுதீன் ஹீரா

கேள்விகள்: ச.மதுசூதன்

சம்சுதீன் (36) என்பது அவருடைய இயற்பெயர் , ஹீரா என்பது அவரது செல்லப்பெயர். (ஹீரா என்றால் உருது மொழியில் வைரம் என்று பொருள்). படைப்புகளுக்காக இரண்டு பெயர்களையும் சேர்த்து சம்சுதீன் ஹீரா.
சொந்த ஊர் திருப்பூர். திருப்பூர் க.சு.செ அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு (கணிதம் அறிவியல்) தேர்ச்சி பெற்று பள்ளியில் நான்காவது மதிப்பெண் பெற்றிருந்தும் மேற்கொண்டு படிக்க அப்போதைய குடும்பச் சூழல் அவ்வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை.
கதவு கிரில், டையிங், பிரிண்டிங் இயந்திர பாகங்கள் தயாரிக்கும் பட்டறைக்கு வேலைக்குச் சென்றதால், அப்போது பிடித்த சுத்தியல் தான் இப்போது அவரை இடதுசாரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் ‘ஹீரா எஞ்சினியரிங்’ என்கிற பெயரில் எட்டாண்டுகளாக ஒர்க் ஷாப்  வைத்து நடத்திக்கொண்டு வருகிறார் என்பதோடு, கடந்த பத்தாண்டுகளாக அவர் வசிக்கக்கூடிய பகுதியில் இருக்கும்  மணவாளன் இளைஞர் மன்றத்திலும் செயல்பட்டு வருகிறார்.
2009-ல் இருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.
‘கீற்று’ போன்ற இனைய தளங்களிலும் முகவரி, பறையோசை, போன்ற பிளாக்குகளிலும், முகநூலிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவற்றைத் தொடர்ச்சியாக எழுதிவரும் சம்சுதீன் ஹீரா இயல்பான வாசிப்பை நேசிக்கக்கூடியவர் என்பது கூடுதல் தகவல்.
வாசிப்பையும், எழுத்தையும் ஒரு  அரசியல் நடவடிக்கையாகவே கருதும் ஹீராவின் முதல் நாவல் மட்டுமல்ல இது. அச்சாகும் அவருடைய முதல் படைப்பும் இந்நாவல்தான்.

மிகக்குறுகிய  காலத்தில் பரவலான வாசிப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் உங்கள் நாவலான மெளனத்தின் சாட்சியங்கள் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து விட்டதா..?
இதுவரை இறுக்கமாக கட்டமைக்கப்பட்டிருந்த மௌனம் மெதுவாகக் கலையத்துவங்கியிருப்பதும், பொதுப்புத்திகளால் மூடப்பட்டிருந்த மனசாட்சிகள் மெல்லத் திறந்து விவாதிக்கப்படுவதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சமூகத்தில் நிலவும் புறச்சூழலைக் கருத்தில்கொண்டு, இந்த நூலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இடதுசாரி மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பங்களிப்பின்றி மிகக் குறுகிய காலத்தில் இரண்டாம் பதிப்பை நோக்கி நகர்வது சாத்தியமில்லை. ஆனாலும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். ”மழைபெய்து ஓய்வதுபோல் மதவாதம் மண்ணில் ஓய்ந்திடாதா..?” என்று நாவலின் முடிவில் யாசர் ஏக்கத்தோடு கேட்கும் கேள்விக்கான தேவை இருக்கும்வரை, இந்த நாவலின் நோக்கம் நிறைவேறியதாகக் கருத முடியாது.

வரலாற்று வாசிப்பில் ஆர்வமுண்டு என்கிறீர்கள். ஆனால் வரலாற்று வாசிப்புகள் வறட்சியான வார்த்தைப் பிரயோகங்களை மட்டுமே கொண்டதாயிற்றே! உங்களுடைய மொழிநடையோ சரளமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கிறதே; பரவலான இலக்கிய வாசிப்பில்லாமல் இது சாத்தியமற்றதாயிற்றே?
வரலாற்றில் மிகுந்த ஆர்வமுண்டு. அதேபோல எல்லா வகையான இலக்கியங்களையும் தேடித்தேடிப் படிப்பதுமுண்டு. அதுவும் அரசியல் பேசும் இலக்கியங்கள் என்றால் அதீத ஆர்வம் உண்டு. இலக்கியங்களில் மக்களின் மொழியில் வரலாறையும் அரசியலையும் அழகியலோடு கொடுத்த எத்தனையோ படைப்புகளைச் சொல்ல முடியும். தாய், வெண்ணிற இரவுகள், உன் அடிச்சுவட்டில் நான், தீண்டாத வசந்தம், எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி என்று இதன் பட்டியல் நீளமானது. வறட்டுத்தனமான வார்த்தைகளுடன் சிக்கலான, மக்களுக்குப் புரியாத வடிவத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் சாமானிய மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற நோக்கமற்றவை. அது, கலை கலைக்கானது என்ற மக்களிலிருந்து அந்நியப்பட்ட போக்கைத் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட அரசியலின் விளைவு. வரலாற்றை இலக்கியங்களில் அழகியல் குன்றாமல் எளிமையான முறையில் சொல்வதன்மூலம் எல்லாவிதமான மக்களையும் சென்றடையச் செய்யமுடியும் என்று மக்களுக்கான படைப்பாளிகள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு முயற்சியே மௌனத்தின் சாட்சியங்கள்.

கோவை  போன்ற தொழில்சார் பெருநகரங்களில் இஸ்லாமியர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்குமான உறவு குறித்து குறிப்பிட்டுச் சொல்ல இயலுமா..?
1960 களில் இதே கோட்டைமேடு பகுதி முஸ்லிம்களின்மீது தாக்குதல் நடத்தி ஒரு கலவரத்தை ஏற்படுத்த சில இந்துத்துவ சக்திகள் முயன்றன. அப்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர் அப்பு தலைமையிலான துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் கோட்டைமேட்டைச் சுற்றி பாதுகாப்பாக நின்று அந்த சூழ்ச்சியை முறியடித்தனர். பொதுவாக அந்த காலகட்டம் வர்க்க சிந்தனை பெற்ற தொழிலாளர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னதான விடுதலைப் போராட்டங்களில் இருந்து, சுதந்திரத்திற்குப் பிந்தைய வீரஞ்செறிந்த ஆலைப்போராட்டங்கள் வரை வரலாறு நெடுகிலும் தாழ்த்தப்பட்ட மக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்தே போராடினர். தங்கள் எதிரிகள் யார் என்பதை அந்த மக்கள் உணர்ந்தே இருந்தனர். மாமா என்றும் சாச்சா என்றும் உறவுமுறை சொல்லி அழைக்கும் வழக்கமும் அப்போது இருந்தது. சில இடங்களில் திருமண உறவுகள் வைத்துக்கொண்ட உதாரணங்களும் உண்டு. 80 களுக்குப் பிறகு இந்துத்துவ இயக்கங்களின் வருகையும், வணிக முரண் பொதுவான ‘இந்து தேசியக்’ கருத்தியல் மூலம் சமூகமயமாக்கப்படும் வரை இரு சமூகங்களுக்கிடையே பெரிய முரண்களுக்கான முகாந்திரம் ஏற்பட்டிருக்கவில்லை. அதுவரை இந்த சமூகங்களுக்குள் எந்த மோதலும் ஏற்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. சொல்லப்போனால் இன்றுவரையும்கூட இரு சமூகங்களுக்கிடையே முரண்கள் எதுவும் இருப்பதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. தவறாக வழிகாட்டப்பட்ட சில இளைஞர்களே மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிப்போகின்றனர்.

இஸ்லாமியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சி வியாபாரப் போட்டியினால் மட்டுமே உருவானது என்றால்… அவர்கள் தவிர்த்து வியாபாரிகளாக இருக்கக்கூடிய  குறிப்பிட்ட சில சாதியினரிடம் மட்டும்தானே இஸ்லாமிய எதிர்ப்புணர்வு இருக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த இந்துக்களிடமும் இஸ்லாமிய வெறுப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது இல்லையா?
ஒட்டுமொத்த இந்துக்களிடமும் இஸ்லாமிய வெறுப்பு ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுவதை நான் மறுக்கிறேன். தமிழகச் சூழல் அப்படியானதாக இல்லை. சில ஊடகங்கள் அப்படியொரு சித்திரத்தைக் கட்டமைக்க முயன்றாலும் மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே ஊரில்தான் வாழ்கிறார்கள், ஒரே பேருந்தில்தான் பயணிக்கிறார்கள், ஒரே மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கிறார்கள் அப்படியிருக்க, ஒட்டுமொத்த இந்துக்களிடம் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதாக சொல்லப்படுவது தவறு. கோவையில் ஆரம்ப கட்டத்தில் சிறு வணிகத்தில் இஸ்லாமிய வணிகர்களுக்கும், இந்துக்களில் குறிப்பிட்ட சில வணிகப்பிரிவு மக்களுக்குமான முரண் சிறிய அளவில் இருந்தது. ஆனால் அது சமூக வயப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது, வணிகம் ஜனநாயகமாக இருந்தது. ஏகபோகத்திற்கான ஒட்டுமொத்த சந்தையைக் கைப்பற்றுவதற்கான போட்டியாக அது
வளர்ந்திருக்கவில்லை. வடக்கத்திய முதலாளிகள் கோவைக்கு வரும்போது கூடவே இந்துத்துவ அமைப்புகளையும் கூட்டிவந்தனர். பிறகு அது சந்தையைக் கைப்பற்றுவதற்கான ஏகபோகத்திற்கான போட்டியாக வளர்கிறது. அந்த வட இந்திய முதலாளிகளின் பெரும் மூலதனங்கள் நகைத்தொழில், ஜவுளி வியாபாரம், எலக்ட்ரானிக் தொழில், போன்றவற்றில் கால்பரப்பியதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சுதேசி இந்துக்களின் வணிகத்தைக் கைப்பற்றியது. இஸ்லாமியர்கள் பழைய இரும்பு வியாபாரம், மீன் மார்க்கெட் போன்ற சிறு வணிகங்களில் ஆதிக்கம் செலுத்தினர். அதுபோக ஜவுளித்துறையிலும் குறிப்பிட்ட அளவுக்கு வட இந்திய வணிகர்களுக்கு போட்டியாக இருந்தனர். திராவிட இயக்கங்களின் செயல்பாட்டால் மொழியுணர்வு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் செல்வாக்கு செலுத்திய காலகட்டம் அது. இந்தி பேசும் வட இந்திய முதலாளிகள், மற்ற தமிழ்பேசும் இந்து வணிகர்களிடமிருந்து தனிமைப்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்து இயக்கங்களுக்கு பெருமளவு நிதியுதவி செய்து, இந்து இயக்கங்களை வளர்த்தெடுத்தனர். அதன் மூலம், பொதுவான ‘இந்துதேசியம்’ என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. இதன் பலனாக இஸ்லாமியர்களுக்கெதிரான ’இந்துதேசிய’ வாதத்தின்மூலம் வியாபார முரண் சமூக மயமாக்கப்பட்டு வெகுமக்கள் மத்தியில் இஸ்லாமிய வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் துவங்கியது.. இன்றைக்கு கோவையில் பெரும்பாலான தொழில்கள் வட இந்திய வணிகர்களின் கைகளில் ஏகபோகமாக சிக்கியிருப்பதைக் கருத்தில்கொண்டால் ’இந்துதேசிய’ அரசியலின் மூலம், வட இந்திய முதலாளிகள் அடைந்த வர்த்தக லாபத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மக்களைப் பொருத்தவரை இந்துதேசியக் கருத்தியலோ, இஸ்லாமிய வெறுப்போ செல்வாக்கு செலுத்துவதாகக் கருத முடியாது.

இஸ்லாமியர்கள் தாங்கள் அமைப்பாக உருமாற்றிக்கொள்கிற தேவை இந்து பாசிசத்தால் நிகழ்ந்ததுதான் என்றாலும். அமைப்பாகத் திரண்ட பின்னால் அவர்கள்  பெற்ற சமூக பாதுகாப்பும், சமூகமும் என்னவாக இருந்தது?
இஸ்லாமியர்கள் அமைப்பாகத் திரண்டது குறித்து சொல்வதானால், இஸ்லாமியர்களுக்கெதிரான இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகளின்போது அச்சமுற்ற ஒரு சமூகத்தின் உடனடி தேவைகளாக 1986 களுக்குப் பிறகே கட்டுக்கோப்பான இஸ்லாமிய அமைப்புகள் தோன்றின. அன்றைய சூழலில் அது தேவையானதாக இருந்தாலும், மற்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளின் செயல்பாட்டுத் தொய்வாகவே இதைக் கருத முடியும். மேம்போக்கான பார்வைக்கு இஸ்லாமிய அடையாளத்தின்கீழ் இஸ்லாமியர்கள் அணிதிரள்வது இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பாகத் தெரிந்தாலும், தனித்த அடையாளத்தின் கீழ் இஸ்லாமியர்களை அடைப்பதென்பது இந்துத்துவ சக்திகளின் அஜண்டாக்களில் ஒன்று என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில இஸ்லாமிய தூய்மைவாதம் பேசும் சக்திகள், மேலும் மேலும் இஸ்லாமியர்களை வெகுஜன அரசியலில் இருந்து பிரித்தெடுத்து தனித்த அடையாளத்துக்குள் கொண்டு சென்று அடைப்பதன்மூலம் இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவின. பல இஸ்லாமிய இயக்கங்கள் இன்று பொது வெளியில் பிற ஜனநாயக சக்திகளோடு சேர்ந்துநின்று பொதுத் தளத்தில் போராடுகின்றன. இது நம்பிக்கையளிக்கக் கூடியதாக இருக்கிறது. எல்லாப் போராட்டங்களும், அரசியலின் மைய நோக்கமும் பொருளாதாரத்தையும் அதைக் கட்டுப்படுத்தும் ஆதிக்கத்தையும் மையப்படுத்தியே உள்ள நிலையில், வர்க்க விடுதலை மட்டுமே மனிதகுலத்திற்கான ஒரே பாதுகாப்பாக இருக்கமுடியும். எல்லாப் பக்கங்களில் இருந்தும் குறிவைக்கப்படும் சமூகமாக இருக்கும் இஸ்லாமியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் அமைப்புகளின் வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ள நிலையில் இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தி.க அலுவலக உடைப்பு, இந்து-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையேயான கொலைகள் என மதவாத நிறுவனங்கள் தங்களை கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரித்துக் கொண்டிருந்த போது, இடதுசாரி இயக்கங்கள், திராவிடக் கட்சிகளின் பணி மற்றும் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
திராவிடர் கழகமும் இடதுசாரிக் கட்சிகளும் மதவெறிக்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டன என்றாலும் மதவாத அமைப்புகளின் வளர்ச்சிப்போக்கு குறித்த துல்லியமான கணிப்பு இல்லாமலிருந்தது என்றே கருதவேண்டும். திராவிடக் கட்சிகளைப் பொருத்தவரை மதவாத சக்திகளுடன் மென்மையான போக்கையே கடைப்பிடித்தன. பின்னாளில் மதவாதக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு சமரசம் செய்துகொண்டதையும் பார்த்தோம்.

இஸ்லாமியர்களின் வியாபார ஸ்தலங்களை நிர்மூலமாக்கவும், அவர்களை வேட்டையாடவும் பயன் படுத்தப்பட்ட    அதே அருந்ததியர்கள்தான் பின்னர் இஸ்லாமியர்களுடன் இனக்கமாகவும், பாதுகாப்பானவர்களாகவும் மாற்றமடைந்ததை வெறும் வழக்கு, சிறை, நீதிமன்ற அலைக்கழிப்புகளென சுருக்கி விட முடியுமா… ?
இந்துத்துவ சக்திகளின் முன்னணிப் படையாக அருந்ததிய இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. எல்லா சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் இருந்தனர். அருந்ததிய இளைஞர்களின் மனமாற்றத்திற்கு சிறை, வழக்குகள் போன்றவற்றை மட்டுமே முழுக்காரணியாகச் சொல்லிவிட முடியாது. அது ஒருவகையான அரசியல் வளர்ச்சிப்போக்குக்கான காலகட்டம். தலித் அரசியல் முன்னிலைக்கு வந்து செல்வாக்கு செலுத்தத் துவங்கிய கட்டம். அதற்கு பல காலம் முன்பே ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் அந்த மக்களிடையே செயல்பட்டுக்கொண்டு இருந்தன. வழக்குகள், சிறை போன்ற அனுபவங்கள் அந்த அரசியலை நோக்கி  இளைஞர்களை நகர்த்தியதில் குறிப்பிட்ட பங்கு வகித்தன என்று சொல்லலாம். சிறைக்குள் அந்த இளைஞர்கள் நடத்தப்பட்ட முறைகளில், வழக்குகளில் காட்டப்பட்ட பாரபட்சம் போன்றவை அந்த இளைஞர்களிடையே உருவாக்கப்பட்டிருந்த பொதுவான ’இந்துதேசியக்’ கருத்தியலை உடைத்திருக்கவேண்டும். இதுபோன்ற அனுபவங்கள் அந்த இளைஞர்களின் அரசியல் தேர்வில் ஒரு மாற்றத்தைக் கோரியிருக்கலாம். வழக்கு நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசியல் ரீதியான பாதுகாப்பை வழங்கிய அமைப்புகளைநோக்கி அவர்கள் நகரத் துவங்கினர். இஸ்லாமிய – தலித் இணக்கம் என்பது ஒடுக்கப்படும் சமூகங்களுக்கிடையே ஏற்படும் இயல்பான ஒருங்கினைப்புதான். ஒடுக்கப்படும் சமூகங்கள் ஒன்றுசேர்ந்து போராடுவது இயல்புதானே.

குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களோடு சேர்த்து அப்பாவி இஸ்லாமியர்களையும் கைது செய்ததை அரசியல் நிர்ப்பந்தம் என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது காவல்துறையில் இந்துமயமாக்கல் என எடுத்துக்கொள்ளலாமா..?
அரசுக்கெதிரான குற்றச் செயல்களில் ஒட்டுமொத்த சமூகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி அச்சுறுத்துவது, ஒட்டுமொத்தமாகத் தண்டிப்பது என்பது அரசின் பொதுப்போக்காக இருக்கிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, வீரப்பன் பிரச்சனையில் ஒட்டுமொத்த மலைவாழ் மக்களைக் கைதுசெய்து நெருக்கடி கொடுப்பது, கூட்டம் கூட்டமாக தண்டிப்பது, மாவோயிஸ்டுகள் பிரச்சனையில் ஒட்டுமொத்த பழங்குடி மக்களை கைதுசெய்து நெருக்கடி கொடுப்பது, கூட்டமாக தண்டிப்பது, என பல உதாரணங்களைச் சொல்லமுடியும். கோவை பிரச்சனையைப் பொருத்தவரையில் தமிழகக் காவல்துறைக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தெருவில் மோதிக்கொள்வதும், குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் மேற்பட்டோர் பலியானதில் சமூகத்தின் பொது அமைதி குலைந்து ஏற்பட்டிருந்த பீதியும் காவல் துறையிடம் ஏற்படுத்திய ரியாக்சன் தான் அது. முன்னதாக 93 இல் மும்பை குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டதுபோல கோவையிலும் கைது செய்யப்பட்டனர். எனவே இதை அரசியல் நிர்பந்தம் என்றுதான் கருதமுடியும். காவல்துறையைப் பொருத்தவரை சில காவலர்களிடம் இந்துத்துவ சிந்தனை செல்வாக்கு செலுத்தியது உண்மை என்றாலும், ஒட்டுமொத்த காவல் துறையிலும் அந்த சிந்தனை இருந்தது என்று சொல்ல முடியாது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான இஸ்லாமிய இளைஞர்களின் மீள்வாழ்வு சந்தித்த எதிர்வினைகள் ஒருபுறமென்றாலும் சமூகம் அம்மனிதர்களை என்னவாக எதிர் கொள்ளும்..?
12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான சிறைவாசிகளுக்கு மக்களைப் பொருத்தவரை அனுதாபமும் புறக்கணிப்பும் சம அளவில் இருப்பதாகவே கருத முடியும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்தவர்கள் என்ற அனுதாபத்தோடு ஒரு சாராரும், ஒட்டுமொத்த சமூகத்துக்கு இழி பெயரை ஏற்படுத்தியவர்கள் என்ற கோபத்தோடு ஒரு சாராரும் அவர்களைப் பார்க்கின்றனர். ஆனால் பெரும்பாலான அமைப்புகள் விடுதலையான சிறைவாசிகளை அரவணைத்துக் கொள்ளவில்லை. கூடுமானவரை தங்கள் அரசியலுக்கு இடையூறு ஏற்படாதபடி அவர்களை தள்ளிவைத்துப் பார்த்தன. சில அமைப்புகள் அவர்களின் அரசியலுக்கு தேவைப்படும்போது சிறைவாசிகளைப் பயன்படுத்திக்கொண்ட உதாரணங்களும் உண்டு. சில இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் உளவுத்துறையின் முயற்சியால் சிறைமீண்டவர்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகள் கிடைத்தன. அரசிடமிருந்தும் சில உதவிகள் கிடைத்தன. அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு தட்டுத்தடுமாறி வாழ்க்கையை நடத்துபவர்களும் உண்டு. இரண்டாம் கட்ட சட்டவிரோதத் தொழில்களுக்குச் சென்று பொருளாதாரரீதியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களும்  உண்டு. ஒட்டுமொத்தமாக வாழ்க்கையே சீரழிந்து போனவர்களும் உண்டு. இதில் வர்க்கக் கண்ணோட்டத்தோடு கூடிய பார்வைதான் இப்போது செல்வாக்கு செலுத்துகிறது.

இந்த நாவல் வலியுறுத்தும் சமூக ரீதியான ஒற்றுமைக்கு சவாலாக இருப்பது எது? அதை எப்படி எதிர்கொள்வது.?
பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுப்புத்தியில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த தப்பெண்ணமும், இஸ்லாமியர்களின் வலியை, வேதனையை, இழப்பை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்துக் கடந்து செல்லும் பெரும்பான்மைச் சமூகத்தின் அர்த்தமற்ற மௌனமுமே இப்போதைய சவாலாக இருக்கிறது. பொதுப்புத்தி என்பது மக்களுக்கே தெரியாமல் அவர்களது மூளைக்குள் பிளவுச் சக்திகளும் சார்பு ஊடகங்களும் பிரச்சாரங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தப்பட்ட பொய்களும் வெறுப்புணர்வும் கெட்டிப்பட்டுப்போய் திடமாகிப்போன சிந்தனையின் திரட்டு. இந்தப் பொதுப்புத்தியால் பெரும்பான்மைச் சமூகத்தின் உளவியல், சிறுபான்மைச் சமூகத்தின் மீது இரக்கமற்ற முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தியலை மாற்றுவதற்கான வேலைகளைப் பண்பாட்டுத் தளத்தில் முன்னெடுப்பது அவசியமானது. எனவே தொடர் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மனதிலுள்ள பொதுப்புத்தியை மாற்ற, தொடர்ச்சியான இயக்கங்கள் தேவை. எதார்த்தத்தில் உலகம் முழுவதும் பொய்களே செல்வாக்கு செலுத்துகின்ற இந்த அசாதாரணமான சூழலில், புதைக்கப்பட்ட உண்மை வரலாறுகளைத் தோண்டியெடுத்து மக்களின்முன்பு வைப்பது அவசியம். உண்மைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் நாம் தான் தொய்வாக இருக்கிறோம் என்று கருதுகிறேன்.

இந்த சவாலை எதிர்கொள்வதில் எழுத்தாளர்கள் கலைஞர்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியம் என கருதுகிறீர்கள்?
“எழுத்தாளன் என்பவன், ஒரு சமூகம் சொல்லத்தயங்கி நிற்கும் பொருளை, அந்தச் சமூகத்தை நோக்கி, சமூகத்தின் சார்பாக, சமூகத்தின் குரலாகப் பேசவேண்டும்” என்பார் த.மு.எ.க.ச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன். அதுபோல, சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சமூகத்தோடு சேர்ந்து இயங்குவது சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு கலைஞனின் கடமை. சமூகம் எதிர்கொள்ளும் எந்தச் சிக்கலுக்கும் எதிரான முதல் குரல் எழுத்தாளர்களிடமிருந்தே வரவேண்டும். சமூகம் சார்ந்த சிந்தனைகளிலிருந்து எழுத்தாளர்களை அந்நியப்படுத்தும் அரசியல் போக்கு இடைக்காலங்களில் உருவானது. மாற்று இலக்கியங்கள் என்ற பெயரில் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட படைப்புகள் வெளிவரும் போக்கு நிலவியது. இந்த வகையான போக்கு, சமூகம் சாராத தனிமனித உளவியல் சிக்கல்களை மட்டும் பேசுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த உளவியல் சிக்கல்களுக்கு சமூகத்தில் நிலவும் புறச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் வெறுமனே புலம்பித் தள்ளுவதே இலக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைப் போராட்டங்களாகட்டும், தெலுங்கானா புரட்சியாகட்டும், ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களாகட்டும்; அதிலெல்லாம் தீரமுடன் போராடிய பாரம்பரியம் உடையவர்கள் நம் பெண்கள். ஆனால் இந்த மாற்று இலக்கியப் போக்கு பெண்களை, உடல்சார்ந்த எழுத்துக்களே புரட்சிகர இலக்கியங்கள் என்று கருதச்செய்தது. இந்த சூழ்ச்சிகரமான போக்கு தன்னுடலைத் தானே சிலாகித்து எழுதும் சுய மோகிகளாக சில பெண் எழுத்தாளர்களை உண்டாக்கியது. வீரஞ்செறிந்த ஆண்களைக் குடிக்கலாச்சாரம்,, கட்டற்ற பால் சுதந்திரம் என்றெல்லாம் சீரழிக்கத் துவங்கியிருக்கிறது. இந்தப் போக்குகள் மிகவும் அபாயகரமானவை. இவற்றை எதிர்கொண்டு முறியடிக்கவேண்டிய சூழலில் இப்போது நாம் இருக்கிறோம்.

இந்த வேற்றுமைகளுக்கு இறுதித் தீர்வாக நீங்கள் கருதுவது எதை..?
பொதுவாக எல்லா சமூக சீர்கேடுகளுக்கும் இந்தச் சுரண்டல் சமூகக் கட்டமைப்பே அடிப்படை. எதுவரை சுரண்டல் தொடர்கிறதோ அதுவரை இந்த வேற்றுமைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். சொல்லப்போனால் இந்தச் சுரண்டல் சமூகத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலின் மூலம் அடையும் ஆதாயங்களையும் ஏகபோகங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே, இதுபோன்ற வேற்றுமைகளும் பிளவுகளும் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப் படுகின்றன. இந்தக் கட்டமைப்புக்குள்ளான நமது போராட்டங்கள் அனைத்தும் இந்தப் பிளவை மட்டுப்படுத்தவும், சீர்திருத்தத்திற்கானதாகவும் மட்டுமே இருக்கும். இறுதித் தீர்வு என்பது சமூக மாற்றமே. முற்றிலுமாக வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட, சுரண்டலற்ற சமூகமாக நமது சமூகம் மாற்றமடையும்போது இந்தப் பிளவுகளுக்கான தேவையே இல்லாமல் போய்விடும்.
***

Related posts

Leave a Comment