You are here
கல்வி புதிய கொள்கைக் கலவை 

கல்வி – புதிய கொள்கைக் கலவை – 3: படிப்பு, வேலை, தொழில்

ராமானுஜம்

1. இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் ‘மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும்’ என்று எழுதியிருந்ததற்கு ஒரு நண்பர் எதிர்க் கருத்து தெரிவித்துள்ளார். “இம்மாதிரி ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் நம்மால் நனவாக்க முடியுமா, வேண்டுமா? ஒவ்வொருவரும் பிற்காலத்தில் ஏதோ வேலை, தொழில் செய்வார்கள், அது என்ன என்று இன்றே கண்டறிந்து பள்ளியில் அதற்கான தயாரிப்பைச் செய்ய முடியுமா? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்” – என்று அவர் சொல்லவில்லை. ஆனால் என் மனம் நோகக் கூடாது என்று பல பாராட்டுகளுடன் பெரும்பாலும் இதைத்தான் அவர் சொல்கிறார்.
இது மிகவும் நியாயமான விமர்சனம் என்று நான் கருதுகிறேன். கடந்த இதழில் இக் கருத்தின் மறுபுறமாக கல்வி மீதான வேறொரு விமர்சனத்தையும் முன்வைத்திருந்தேன். “படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”, “பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் எந்த வேலைக்கும் தகுதியில்லாத உதவாக்கரைகளை உருவாக்குகிறது” என்று பல நடுத்தர வர்க்கத்தினர் பேசுகின்றனர். சமீப காலத்தில் “employability” (வேலைத் தகுதி பெற்றிருத்தல்) சமூக பொருளாதார விமர்சகர்களின் பேச்சில் ஏகமாக அடிபடுகிறது. தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் (திரு. நாராயணமூர்த்தி போன்றவர்கள்) அடிக்கடி சுமத்தும் குற்றச்சாட்டு இது. இதிலும் நியாயம் உள்ளது.
மீண்டும் ஒரு முக்கோணம்!

இந்த மூன்று நிலைகளையும் மிகச் சுருக்கமாக இவ்வாறு கூறலாம்:
கற்பவரின் (குழந்தையின், மாணவரின்) உலகறிவு, உலகப்பார்வை, வாழ்க்கை அநுபவம், திறன்கள் இவற்றை மையப்படுத்தி அவற்றிற்குச் செறிவூட்டி மாணவரின் உள்வளங்களுக்குச் செழுமை தருதலே உண்மையான கல்வி.
நவீன உலகில், நாடு, சமூகம் எல்லாமே பொருளாதாரத்தை மையப்படுத்தியே இயங்குகிறது. கல்வியின் நோக்கம் கற்போரை பொருளாதாரத்தில் பங்குபெற நன்கு தயாரிப்பதாகும். படிப்பு வேலை ஈட்டித்தர, தொழில் செய்ய உதவ வேண்டும், மற்றதெல்லாம் அதற்கப்புறம்தான்.
இயற்கை, சமூகம், கலாச்சாரம் குறித்து, அது எப்படிப்பட்டது, எவ்வாறு நம்மை நிர்ணயிக்கிறது, நம்மால் என்ன செய்ய இயலும் என்ற பாடத்திட்டத்தை மையப்படுத்தி, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதே பொதுக்கல்வியின் நோக்கம், வழிமுறை; அதற்குப் பிறகு அவரவர் தலையெழுத்து!
இவ்வாறு சுருக்குவது விவாதத்திற்காகத்தான். உண்மையில் இந்நிலைகளில் பல வேறுபட்ட வடிவங்கள் உண்டு. மற்ற நிலைகளோடு ஊடுருவும் கருத்துகள் உண்டு. இருந்தும் இவ்வாறு எதிர்ப்படுத்துவது பயனுள்ளது என்று கருதுகிறேன். ஏனெனில், மூன்று நிலைகளிலும் உள்ள அடிப்படைகள் வலுவானவை, ஒவ்வொன்றிலும் ஒரு சமூக அரசியல் வெளிப்படுகிறது என்று நாம் உணரவேண்டும்.
நம் கல்விமுறை பெரும்பாலும் மூன்றாம் நிலை சார்ந்தது. கடந்த பத்தாண்டுகளில் துவக்கக் கல்வியில் மட்டும் முதல்நிலையின் பாதிப்பு ஓரளவு தெரிகிறது. இரண்டாம் நிலை கல்வி முறைக்கு வெளியே நிறைய பேசப்பட்டாலும் கல்வி முறையில் பெரும்பாலும் இல்லை என்று கூறலாம்.
புதிய கல்விக் கொள்கையும், பிரதமரின் “இந்தியாவில் உற்பத்தி” எனும் திட்டமும், இன்றைய பொருளாதாரத்தின் போக்கும், வளர்ந்துவரும் மதவாத, பெரும்பான்மைவாதமும் இந்நிலைகளை எவ்வாறு பாதிக்கின்றன?
2.   இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி – கான்பூருக்கு ஒரு முறை சென்றிருந்த போது, நான் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தில் பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். பிரபல கணினி மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த அவர், கான்பூரில் படிக்கும் மாணவர்களை வேலைத் தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் அவரைச் சந்திக்கையில் “எத்தனை பேரை வேலைக்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டேன். “110” என்ற பதில் அதிர்ச்சி தந்தது எனக்கு. “கணினியில் மாணவர்கள் அத்தனை பேரா?” என்று கேட்டேன். (இது பத்து வருடங்களுக்கு முன்னால்; அப்போது ஒரு வகுப்பில் 60/65 பேர் மட்டும்தான்.) “இல்லை இல்லை, கம்யூட்டர் சைன்ஸ் மாணவர்கள் 10 பேர் கூட இல்லை. அவர்கள் எல்லாம் எங்கள் கம்பெனியில் சேர மாட்டார்கள். நான் எடுத்ததெல்லாம் மற்ற துறைகளிலிருந்து, எல்லாத் துறைகளிலும்,” என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மாணவர்களுக்கு மென்பொருள் தயாரிக்கத் தெரியவேண்டுமே! அவர் சொன்ன பதில்: “நீங்க வேறே ஏதோ உலகத்தில் இருக்கீங்க. இந்த மாணவர்களுக்கு எந்த ஆழமான கணினியியலும் தேவையில்லை. எங்களுக்கு எது வேணுமோ அதை நாங்களே சொல்லித் தருவோம். அரசாங்க செலவுலே தேர்வு வைச்சு லட்சக்கணக்கான மாணவர்கள்லே இவங்களைத் தேர்ந்தெடுத்து இருக்காங்க. எனக்கு அது போதும். நேர்காணல் எல்லாம் அவன் குடிகாரன், கெட்ட பழக்கங்கள் உள்ளவனா என்றெல்லாம் பார்க்கத்தான்!”
‘ஐ ஐ டி நுழைவுத் தேர்வில் வெற்றி’ என்ற ஒரே தகுதி போதும், அங்கு என்ன கற்றாலும் அது தேவையில்லை என்பது தொழிலின் வாதம் என்றால் நமக்குத் தெரிவது என்ன? இந்தியாவின் தலைசிறந்த ஐஐடி கான்பூரில் கிடைக்கும் கல்விக் கூடம் பொருத்தமற்றது என்பது தொழிலின் கருத்து என்றால், ‘எத்தகைய கல்வியும் எங்களுக்குப் பொருத்தமற்றது, எங்களுக்குத் தேவை பயிற்சிதான், அதை நாங்களே தர முடியும்’ என்று பொருள் கொள்ளலாம். இன்னும் ஒருபடி மேலே போய், “ஐஐடி தரும் கல்வியைப் பயன்படுத்தும் அளவு சவால்கள் எங்களிடம் இல்லை, பள்ளி இறுதியில் அடைந்த திறன்கள் எங்களுக்குப் போதும்” என்று உணரலாம். இப்பார்வையிலிருந்து தொழில் தரப்பு விமரிசனம் உயர்கல்வியின் தரம் குறித்ததே இல்லை என்று நமக்குத் தெளிவு கிடைக்கிறது. இப்பார்வையில், வேலை தேடித் தருவது படிப்பு அல்ல, நுழைவுத் தேர்வுகள்தாம்.
இச் சிந்தனை வேறொன்றையும் வெளிச்சமாக்குகிறது. ‘ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று வந்தாலும், உள்ளே வந்தவுடன் அவர்களுக்குப் தகுதியில்லை என்று தெரிகிறது. அவர்கள் எல்லாம் ‘Unemployable (வேலைக்கு உதவாதவர்கள்)’ என்ற குற்றச்சாட்டு, உண்மையில் ‘பட்டம்’ என்ற ‘சான்றிதழ்’ மதிப்பில்லாதது என்பதையே குறிக்கிறது. (ஐஐடியின் நுழைவுத் தேர்வு தரும் சான்றிதழ் மீது குற்றச்சாட்டு இல்லை).
பெரும்பாலான நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் குரலில் ஒலிப்பதும் இதுவே. “இன்றைக்கு பி.ஏ. பிஎஸ்சிக்கு எல்லாம் மதிப்பே இல்லை” என்று புலம்பும் நண்பர், பாடத்திட்டத்தைக் குறை சொல்லவில்லை.கல்லூரியில் என்ன நடக்கிறது என்று கூட அவருக்குத் தெரியாது. “இந்தச் சான்றிதழ் வேலை தேடித் தராது” என்று வேலை தருபவர்கள் குறித்துத் தான் புலம்புகிறார்.
பள்ளியிறுதித் தேர்வில் “100க்கு 90 என்பதற்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது” என்று புலம்புவரின் அர்த்தமும் இதுதான்.
கல்வி என்பதன் நோக்கம், இறுதி நிலை (பள்ளி / கல்லூரி) சான்றிதழ் ஒன்றே, அதில் வெற்றி / தோல்வி என்று பிரித்துத் தருவது (மட்டும்) அரசின் பொறுப்பு. அதற்கும் வேலை வாய்ப்புக்கும் நேரடியான தொடர்பு தேவை என்ற கண்ணோட்டம் இது, நகர்ப்புற நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பார்வை பெரும்பாலும் இத்தகையதுதான்.
கல்வியாளர்களின் கட்டுரைகளிலும் பொதுத் தேர்வுகள் மற்றும் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் குறித்த கவலை தெரிகிறது. பெரும்பாலும் அரசு நடத்தும் பள்ளியிறுதித் தேர்வுகளும், பல்கலைக் கழகங்கள் வழங்கும் சான்றிதழ்களும் ஆழ்ந்த விமரிசனங்களுக்கு உள்ளாகின்றன.
பிரச்சினை மையமானது, முக்கியமானது. பொதுத் தேர்வுகள் தரும் சான்றிதழ்களும் பல்கலைக்கழகங்களும் வழங்கும் சான்றிதழ்களும் உண்மையான தேர்ச்சி நிலையைப் பிரதிபலிக்கவில்லை. இதில் அடிப்படை மாற்றம் தேவை. ஆனால் இது “உண்மையான தேர்ச்சி நிலை என்றால் என்ன?”, “கல்வியில் வெற்றி / தோல்வி என்பதின் பொருள் என்ன?” என்று சிந்திக்காமல், வேலையையொட்டியதாக நிர்ணயிக்கப்படக் கூடாது. இங்குள்ள கருத்துமோதலை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
3. தொழிற்கல்வி பற்றிய விவாதம் சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய ஒன்று. மகாத்மா காந்தியின்  ‘புதிய கல்வி’ (Nail Talim) ஒவ்வொரு பள்ளியும் ஒரு உற்பத்திக்கூடமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பொருள் ஈட்டும் வழிமுறைகள் பள்ளியில் கையாளப்பட வேண்டும். கிராமப் பொருளாதாரத்தில் பள்ளி முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அதன்மூலம் கற்றல் வழிமுறைகளும் பாடத்திட்டமும் வடிவம் பெற வேண்டும் என்ற கருத்தை காந்தியும், ஜே.சி.குமரப்பர்வும் புதியதொரு கல்விமுறையாக முன்மொழிந்தனர். தாகூரின் கனவுப் பள்ளி சற்று வித்தியாசமானது. ஆனால் அதிலும் மாணவர்கள் கிராமத் தொழில்களில் ஈடுபடுவது முக்கிய அம்சமாக அமைந்தது. இந்தியாவின் பல பரிசோதனை முறை மாற்றுப் பள்ளிகளில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2005இல் NCERT  என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்ட வரையறை தயாரிக்கும்போது கல்விகுறித்த ஆழ்ந்த விவாதம் நடத்தியது. 20 குழுக்களில் ஒன்றாக பேராசிரியர் அனில் சத்கோபால் தலைமையில் ‘வேலையும் கல்வியும்’ என்ற குழு அமைத்து, அதில் ஆழ்ந்த விவாதங்கள் நடத்தப்பட்டு, சிறந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதில் மேற்படி குறிப்பிட்டது மட்டுமல்ல, நாட்டில் ‘தொழில்மூலம் கல்வி’ எனும் வழிமுறையின் வரலாறு, அதன் சாத்தியம், அவசியம் எல்லாம் சிறந்த முறையில் விளக்கப்பட்டுள்ளன. இருந்தும் 2005 தேசியப் பாடத்திட்ட வரையறையில் தொழில்வழிக் கல்வி மையமாக இடம் பெறவில்லை.
‘தொழிற் கல்வி’க்கும் ‘தொழில் வழிக் கல்வி’க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மையமானது – முன் சொல்வது பிழைப்புக்கு வழி வகுக்கும் குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பித்தல்; பின் சொல்வது, கைவேலை, உற்பத்தியில் பங்கு என்பதை அன்றாடப் பின்னணியாகக் கொண்டு அதன் மூலம் பாடத் திட்டத்தின் பல பாகங்களையும் அமல்படுத்துதல்.   ‘30 நாட்களில் ஆங்கிலம் பேசலாம்’ என்பதற்கும், ஆங்கில வழிக் கல்விக்கும் உள்ள (ஆங்கிலம் கற்றல் பொறுத்தவரை உள்ள) வேறுபாடு. ‘தொழில் வழிக் கல்வி’ பயில்வது தொழில் அல்ல, அல்லது தொழில் மட்டுமல்ல, கலாச்சாரம், இயற்கை, தொழில்நுட்பம், வரலாறு, வர்த்தகம் போன்ற ‘பாடங்கள்’.
இன்று புதிய கல்விக் கொள்கையிலும், பிரதமரின் ‘இந்தியாவின் உற்பத்தி’ திட்டத்தின் பக்கபலமாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட தொழிற்கல்வித் திட்டத்திலும் பேசப்படுவது ‘தொழில் வழிக் கல்வி’ அல்ல, தொழிற்கல்விதான். மிகச் சுருக்கமாகச் சொன்னால் இன்று முன்மொழியப்படும் திட்டம் கீழ்க்கண்ட அம்சங்கள் கொண்டது:
துவக்கக் கல்வியிலேயே ‘லேசாக’ தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை குறைந்த அளவிலாவது தொழிற்கல்வியில் பங்கேற்பு கொணர வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையின் திறமை / ஈடுபாடு / இயற்கையான திறன் எத்தகையது என்று நிர்ணயித்து தொழிற்கல்வி அல்லது பொதுமுறைக் கல்வி என வழிவகுக்க வசதி செய்ய வேண்டும்.
9/10 வகுப்புகளில் தொழிற்கல்விக்குப் பிரிய வாய்ப்பு ஏற்படுத்தி, 11/12 வகுப்புகளில் விரிவான தொழிற்கல்வி வாய்ப்பு தரலாம். இவ்வாறு பிரிபவர்களுக்கு மீண்டும் பதினோராம் வகுப்பில் அல்லது கல்லூரியில் பொதுவழி மாணவர்களோடு இணைய வாய்ப்பு உண்டு.
இன்று பெரும்பாலும் “பயனில்லாததாக” விளங்கும் எண்ணிக்கையில் அதிகமான பிஎஸ்சி போன்ற பொதுவான கல்லூரிக் கல்வி தொழிற்கல்விக்கானதாக மாற்றப்படலாம். இதன்மூலம் ‘இந்தியாவில் உற்பத்தி’ மூலமாக தேவைப்படும் பல மடங்கு தொழிலாளர்களை உறுதி செய்யலாம்.
தொழில் வல்லுனர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரவேற்கப்பட வேண்டும். தொழிற்கல்வியில் மட்டுமல்லாது, மாணாக்கருக்கு வாழ்க்கைக் கல்வி அளிப்பதிலும் அவர்கள் பங்கு முக்கியமாக இருக்கும். பாடத்திட்டம் தயாரிப்பதிலும் அவர்கள் பங்கு இருக்கும். கல்விக்கூடங்களுக்கும் தொழில் தலைவர்களுக்கும் நெருங்கிய உறவு ஏற்படுத்தப்படும்.
இவையெல்லாம் வெளிப்படையாக எழுதப்படாதவை. ஆனால் ‘Industry initiative in education’, ‘Revised plan for secondary and higher scondary vocational education’என்பதுபோன்ற ஆவணங்களில் முன்மொழியப்படும் கருத்துகள் இத்தகையவைதான்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவை வரவேற்கத்தக்க கருத்துகள்தாம். ஆனால் நம் நாட்டின் யதார்த்தம் எத்தகையது? பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் அடித்தள மக்கள் மட்டுமே என்ற நிலை. நாடெங்கிலும் பாலிடெக்னிக்குகளில் சேர்க்கை குறைவு. அங்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பங்கேற்பு குறைவு. இக் கூடங்களில் பயிலும் மாணவர்கட்கும் தொழிற்கூடங்களுக்கும் பெரும்பாலும் ஏதும் உறவற்ற நிலை. தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் பங்கேற்பு முற்றிலும் இல்லாத நிலை. இவை எல்லாம் மேலே சொன்ன திட்டங்களால் மாறுமா? மாற்றத்திற்கு ஏதும் புதிய வழிமுறை உண்டா?
மாற்றம் நிச்சயம் தேவைதான். ஆனால் நம் சமூகப் பிரச்சினையை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் மாற்றத்துக்கு வழிவகுக்க முடியாது.
செய்யும் தொழிலே தெய்வம்
என்று பாடுவதில் குறைச்சலில்லை. ஆனால் நம் சமூகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக கடும்பிடியாகப் பிடித்த சாதிக் கொடுமை, பிறப்பு ரீதியாகவே செய்யும் தொழிலை நிர்ணயித்து வந்துள்ளது. இதை உடைத்து அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, எத்தொழிலிலும் புகும் வாய்ப்பு எனும் முறை கொணர்ந்ததே மிகச் சமீபத்தில்தான். அதிலும் பாதியளவு கூட இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில், 13 வயதுக் குழந்தை ஒன்றின் ‘ஈடுபாட்டையும், திறமையையும்’ கணித்து “உனக்குத் தொழிற்கல்விதான் ஏற்றது” என்று பரிந்துரை செய்தால், அக்குழந்தை மருத்துவரின் மகனாகவோ, மாவட்ட ஆட்சியரின் மகனாகவோ இருக்குமா? கூலி வேலை செய்யும் தலித்துக் குடும்பத்து குழந்தையாகத்தான் இருக்கும் நிச்சயமாக! ‘பிஎஸ்சி’ எல்லாம் வேண்டும், தொழில் கற்றுக்கொள் என்று எந்தக் கல்லூரிகளுக்கு யார் பிள்ளைகளை அனுப்புவார்கள்? பெரு நகரங்களின் மேல்மட்ட மக்கள் கொண்ட கல்லூரிகளா அப்படி உருமாறும்?
இன்றைய பொருளாதாரத்தில் உலகமயமாக்கப்பட்ட உலகச் சந்தையில் பங்குபெறும் ‘அறிவுப் பொருளாதாரத்தில் இயங்கும்’ நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்களின் கல்விமுறை, மேலே சொன்ன தொழிற்கல்வி மையம் கொண்ட முறையாக மாறாது. அவர்களுக்கு தொழில்நுட்பம், குறிப்பாக தகவல் தொடர்பு, கணினி மென்பொருள் தொழில்நுட்பை பயன்படுத்திய உலகத் தரக் கல்வி கிடைக்கும். ‘இந்தியாவில் உற்பத்தி’ செய்ய உலகச் சந்தைக்கு மலிவான உழைப்பு தரும் உழைப்பாளி குடும்பங்களுக்கு ‘பொதுக்கல்வி’ முறை வீண்தான். ஆரம்பத்திலிருந்தே இயந்திரங்களைப் பயன்படுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் கற்றுத் தருவோம், மற்றதெல்லாம் அக்கறையில்லை என்ற நோக்கமே மிஞ்சுகிறது.
இன்னொன்றும் சொல்ல வேண்டும். இன்றுவரை தனியார் தொழிற்கூடங்கள் கல்வியில் காட்டியுள்ள அக்கறை நமக்குப் பெரிதும் நம்பிக்கை தருவதாக இல்லை. அவர்களின் பங்கேற்பு கல்வியைச் செழுமைப்படுத்தும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை.
வேலை வாய்ப்பு, தொழில் பெருக்குதல் என்று பேசி, இறுதியில் குலத் தொழிலையும், சாதி சார்ந்த தொழில் பங்கேற்பையும் நியாயப்படுத்தி நிலைப்படுத்தும் ஏற்பாடே நடந்தேறும் என்றுதான் அஞ்ச வேண்டியுள்ளது. தொழில் தலைவர்கள் குறுகிய எதிர்கால நலனுக்காக நீண்ட தொலைநோக்குதலை ஒழித்து விடுவார்கள் என்ற அச்சமும் உள்ளது.
அப்படியானால் ‘பொறுப்புள்ள குடிமகனை உருவாக்கும் கல்வி’ என்பதுபோல், ‘சிறந்த தொழிலாளியை உருவாக்கும் கல்வி’ என்று நம்மால் வரையறுக்க முடியாதா? அது எத்தகைய கல்வி?’ இந்தியாவில் அப்படி கனவு கண்டாலும் அமலாக்க இயலுமா? புதிய கல்விக் கொள்கை அத்தகைய ஆதர்சங்களை இலக்காகக் கொள்வது சாத்தியமா?
சாத்தியம்தான், ஆனால் சுலபமில்லை. மேலும் சிந்திப்போம்.

(தொடரும்)

Related posts

Leave a Comment