You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று-10: பரசுராமன் என்னும் நிலைக்கண்ணாடி

ச.தமிழ்ச்செல்வன்

மரணம் தவிர்க்க முடியாததுதான். இயற்கையான நிகழ்வுதான். ஆனாலும் அது எதிர்பாராத தருணத்தில் நம் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு நேரும்போது நாம் முற்றிலும் நிலைகுலைந்துதான் போகிறோம். புதுச்சேரியிலிருந்து தோழர் ராமச்சந்திரன் தொலைபேசியில் சொன்னபோது நம்ம பரசுராமனா இறந்துட்டார்? என்று கேட்டேன். பலரும் இப்படித்தான் கேட்டார்கள். என்னால் இன்னும் அவருடைய மரணத்தை ஏற்க முடியவில்லை.
பாண்டிச்சேரி மொழியியல் மையத்தில் பேராசிரியராகப்பணியாற்றி வந்த முனைவர் பரசுராமன், நம் சம காலத்தில் ஒரு பேராசியர் அணிந்து கொண்டிருக்கும் எந்த மூடாக்கும் இல்லாத நம் சக தோழராக நம்மோடு பணியாற்றியவர். ஒரு உண்மையான காந்தியவாதி. இடதுசாரிகளோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் புதுவை அறிவியல் இயக்கத்தோடும் தன்னைக் கரைத்துக்கொண்டு பணியாற்றியவர். அவருடைய மரணத்துக்கு முந்தின இரவு வரை  இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
ஒரு நாள் முன்னதாக சென்னையில் தமுஎகச அமைப்புக்கூட்டம் ஒன்றில்தான் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்தநாள் அவருடைய மரணச்செய்தி. புதுச்சேரியில் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதுதான் அவருடைய முழுப்பரிமாணத்தையும் முதன்முறையாக உணர்ந்தேன்.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு, சம்பல் கொள்ளைக்காரர்களை சீர்திருத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அறிவொளி இயக்கத்திலும், புதுவை அறிவியல் இயக்கத்தில் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றியதோடு தற்போது துணைத் தலைவராக இருந்து செயல்பட்டுவந்தவர்.ஒரு அறிவியல் ஆர்வலருக்குத் தேவையானஆர்வமும், எளிமையும், நிர்வாக பொறுப்பும் ஏற்ற வாழ்வியல்  முறைகளையும் கொண்டவர். புதிய உருவாக்கங்களில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தவர். பின்பற்றுவதற்கேற்ற மிகச்சிறந்த அறிவியல் தொண்டராக இருந்தவர்.
துளிர் இல்லங்கள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, குழந்தைகள் அறிவியல் திருவிழா, அறிவியல் உருவாக்குவோம் போன்ற பள்ளி மாணவர்களுக்கானநிகழ்ச்சிகளின் கருத்தாளர், ஒருங்கிணைப்பாளர், பயிற்சியாளராக பணியாற்றிவர்.மத்திய அரசின் அறிவியல் பரிமாற்றகுழுவின் அகில இந்திய உறுப்பினராகவும், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பில் தேசிய குழு உறுப்பினராகவும் பணியாற்றிவர். புதுவை ஆளுநர்  உள்ளிட்ட எண்ணற்ற பிறமொழிக்காரர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார். அவர்களுக்காகப் பல எளிய நூல்களையும், குழந்தைகள் தமிழ் இலக்கணத்தை விளையாட்டாகக் கற்றுக்கொள்ள கதை வடிவில் அநேகம் புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெரிய பொறுப்புகள், பதவிகள் அவரைத் தேடி வந்தபோது அவற்றை நிராகரித்து, இயக்கப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர். ஆளுநர், அமைச்சர்கள் என எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் மீதான தன் விமர்சனத்தைத் துணிச்சலாகவும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் பேசியவர். மாணவர்களைச் செதுக்கி வளர்ப்பதில் மன நெகிழ்ச்சியுடன் ஈடுபடுபவர்.
மொழியியல் வல்லுநரான அவர் தமுஎகச நிகழ்வுகளில் நாற்காலிகளைத் தூக்கிப் போடுபவராகவும் உணவுப்பொட்டலங்களைப் பிரித்துக் கொடுப்பவராகவும் பெருக்குமாறை எடுத்து இடத்தைச் சுத்தம் செய்பவராகவும் எனப் பல தோற்றங்களில் அவரைப் பார்த்திருக்கிறோம். அஞ்சலிக்கூட்டத்தில் பலரும் முதன்முறையாக அவரைப்பற்றி முழுதும் அறியும்போது இத்தனை பெரிய ஆளுமையுடனா நாம் தோள்மீது கைபோட்டுப் பழகியிருந்தோம் என்கிற வியப்பை வெளிப்படுத்தினர். எனக்கு மனம் நடுங்கியது.
இயக்கத்தின்மீதும் தோழர்கள்மீதும் அவருடைய விமர்சனங்களை அவர் முன்வைக்கும் போது அவர் கைக்கொள்ளும் மென்மையும் அக்கறையும் பொதிந்த வார்த்தைகளும், அதைச் சொல்லும் தொனியும் எனக்கு இன்னும் கைவரவில்லையே என்கிற ஏக்கத்தை உருவாக்குபவை.இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் கூட அவருடைய மிருதுவான குரல் என் செவிகளுக்கு அருகாமையில் கேட்கிறது. மனதை உருக்குவதாக அக்குரல் தொடர்ந்து கடந்த பத்து தினங்களாக எனக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.அந்தக்குரல்  என்னை இன்னும் பக்குவப்படுத்துகிறது. அவரைப்போல வாழ வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அவருடைய வாழ்வை ஒரு கண்ணாடி போல எனக்கு முன்னே நிறுத்தி என்னைத் திருத்தமாக்கிச்   சீர்படுத்திக்கொண்டே இருக்கிறேன். உண்மையிலேயே நீங்கள் எம்மோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் தோழர் பரசுராமன்.தோழர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் இறந்தபோது இதுபோன்ற ஆழ்ந்த துக்கத்துக்கு ஆளானேன். அதுபோன்ற ஒரு இழப்பை இப்போதும் உணர்கின்றேன்.
எப்படி ஈடு செய்வோம் இந்த இழப்பை?
சமீபகாலமாக அக்குபங்ச்சர் சிகிச்சைக்கு நான் சென்று கொண்டிருக்கிறேன். சில குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு மெல்ல மெல்ல விடுதலை கிடைக்கிறது. இந்த 60 வருட வாழ்க்கையில் எல்லாவிதமான வைத்திய முறைகளுக்குமான சோதனைக்கூடமாக என் உடலைத் தொடர்ந்து ஒப்படைத்தே வந்திருக்கிறேன். எந்த வைத்திய முறையானால் என்ன? நமக்கு பிரச்னை தீர்ந்தால் போதும் என்பதுதானே நம்முடைய பாதையாக இருக்க முடியும்.
அலோபதியைக் கைப்பற்றி இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மீது தொடுக்க வேண்டிய யுத்தத்தை அலோபதி மருத்துவத்தின் மீதே தொடுப்பதில் ஒரு நோயாளியாக, எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.அக்குபங்ச்சர் என்னும் தொடு சிகிச்சை முறையில் நோயாளியே அடுத்த சில மாதங்களில் டாக்டராகி விடுகிறார். ஆகவே கூடுதல் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் அவர்கள் செயல்பட வேண்டியுள்ளது.
பிறந்த குழந்தையின் முதுகைத் தட்டிக்கொடுப்பது, கன்னங்களை வருடுவது, முத்தமிடுவது, கன்னத்தைக் கிள்ளுவது, கிச்சு கிச்சு மூட்டுவது என்று இயல்பாகத் துவங்குகிறது அக்கு வைத்தியம் நம் வாழ்வில். அது வைத்தியம் என்பது தெரியாமலே நடந்துகொண்டிருக்கிறது. தொடுதல் என்பது நம் வாழ்வின் மிக முக்கியமான செயல்பாடாக இருந்துகொண்டிருக்கிறது.
வேட்டைக்காலத்தில் எல்லா நாளும் வேட்டைக்குப் போனவர்கள் பெண்கள்தாம் என்கிற உண்மையை தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குரல்நாண்கள் பிரிந்து மொழி என்கிற ஒன்று வராத காலத்தில் இடது கையில் குழந்தையை வைத்துக்கொண்டு  அதன்  காதுகள்  தாயின் இதயத்துடிப்பைக் கேட்டபடி நிம்மதியாக உறங்க, மிச்சமிருந்த வலதுகையால் பழங்களைப்பறிக்கவும் சிறு விலங்குகளை வேட்டையாடவுமாக இருந்தாள் நம் ஆதித்தாய். அதனால்தான் நமக்கு வலது கைப்பழக்கம் வந்தது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.குரல் இல்லாத காலத்தில் தாயின் அருகாமையை உணர்த்த குழந்தையின் செவிகளைத் தாயின்  இதயத்தில் வைத்த்துகூட ஒரு அக்கு டச்தானே.
இப்படியான பெண்களின் வரலாற்றை ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதிய உலக வரலாற்றில் பெண்கள் என்கிற புத்தகம் பேசுகிறது. ராதாகிருஸ்ணன் மொழிபெயர்ப்பில் என்சிபிஹெச் வெளியீடாக வந்திருக்கும் அந்நூல், நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்.
வரலாற்றில் ஆண்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஏனெனில் அவர்கள்தான் அதை எழுதுகிறார்கள். மனித சமூகம் உருப்பெற்ற வரலாற்றில் பெண்களின் மகத்தான பாத்திரம் இன்றுவரை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. விவசாயத்தையும் நெசவுத்தொழிலையும் இன்னும் எண்ணற்ற  ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திய பெண்களின் பங்களிப்பு இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளில் இடம் பெறவில்லை.ரோஸலிண்ட் மைல்ஸ் அதற்கான சினத்துடனும் ஒட்டுமொத்த ஆண்களின் வரலாற்றின் மீது ஒரு தீராத நக்கலுடனும் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
“மனித இனத்தின் கடந்தகாலம் பற்றிய ஒருபக்கச் சாய்வான கணிப்புகளை  இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித ஜீவிகள், வரலாறு போதிப்பவற்றிலிருந்து படிப்பினை பெற முடியுமா? எல்லோருக்கும் முழு மனித நேயம் என்கிற லட்சியத்தில் ஒரு முன்னிலும் நீதியான சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கு ஆண்கள் தந்தை வழிச்சமுதாயத்தின் இறுக்கமான வைதீகப்போக்குகளுக்கும் வாழ்க்கையை மறுக்கும் படிநிலை மரபுரீதியான முறைமைகளுக்கும் முடிவு கட்டுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இதற்குக் கைம்மாறாகப் பெண்கள், தமது சமுதாயங்களை வெளிப்படையாக ஒழுங்கமைப்பதற்கு உள்ள பொறுப்பில் தமது பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.தனிப்பட்ட துறையில் ஆண்களைப் பங்காளிகளாக ஏற்று நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.இது ஆதிக்கம் வகிக்கும் தந்தையை கேள்வியின்றி அப்படியே ஏற்று நேசிக்கும் மகளைப்போன்ற நிலையில் அல்ல.அனைத்து வருங்கால வளர்ச்சிகளும் இனிமேல் இருபாலரின் பார்வையிலிருந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில், வரலாற்றை உருவாக்குவதற்கு ஆண்கள், பெண்கள் இரு தரப்பினரும்  சம அளவில் முக்கியமானவர்கள். வருங்காலம் பற்றிய நம்பிக்கை,கடந்த கால வெற்றியைப்போன்றே, ஆண்கள்-பெண்கள் ஆகிய இரு தரப்பாரின்  ஒத்துழைப்பிலும்  பரஸ்பரம் இட்டு நிரப்பும் செயல்பாட்டிலும்தான் அடங்கியுள்ளது”
என அவர் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். வரலாற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்ட தேர்ந்த வார்த்தைகள் இவை. எப்போதும் இதுபோன்ற பெண்நிலையில் நின்று எழுதப்பட்டுள்ள புத்தகங்களை வாசிக்கும் போதெல்லாம் ஆழ்ந்த குற்றவுணர்வுக்கு நாம் ஆளாவது தவிர்க்கவியலாததாகிவிடும் – நிறவெறியைத் துறந்து தன்னுணர்வு பெற்ற ஒரு வெள்ளைக்காரனைப்போல, சாதியம்துறந்து தன்னுணர்வுபெற்ற ஓர் ஆதிக்கசாதிக்காரனைப்போல,
குழந்தையை அடிப்பது தப்பு என முழுமையாக உணர்ந்துவிட்ட ஓர் ஆசிரியனையும் தகப்பனையும் போல.                                (தொடரும்)

Related posts

Leave a Comment