You are here
நூல் அறிமுகம் 

ஒளி ஆண்டு கொண்டாட்டம்

முனைவர். இரா.சாவித்திரி

   வான் பொருள்களான சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகிவற்றின் மீது உள்ள எண்ணற்ற புதிர்களை உடைத்தெறிந்து உண்மை உணர்த்தியவர்கள் அறிவியல் அறிஞர்கள். அந்த அறிவியல் உண்மைகளை சாதாரண மனிதர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்ட நூல் நிறமாலை எனச் சொல்லலாம்.
சர்வதேச ஒளியாண்டாகக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில் (2015) ஒளியைப் பகுத்து ஆராய்ந்து பிரபஞ்ச ரகசியங்களை அறியும் நியமாலை ஆய்வு குறித்த எளிய அறிமுக நூல்.
வெகு தொலைவில் உள்ள வான்பொருள்களிலிருந்து நம்மை வந்தடையும் ஒளியை மட்டும் வைத்து அந்த வான்பொருள் குறித்து அறிய வழி செய்கிறது.
நிறமாலை பகுப்பு ஆய்வு
நிறமாலை என்பது என்ன? நிறமாலை பகுப்பு ஆய்வின் வழி எப்படி வான்பொருட்களின் தன்மை குறித்து அறிந்து கொள்கிறோம், நிறமாலை பகுப்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைக் கதைபோல சுவையாகச் சொல்லிச் செல்கிறார்  ஆசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.
பிரபஞ்சத்தில் உள்ள சில விஷயங்களை அறியவே முடியாது. அவை மர்மப் புதிராக நம் ஊகம் சார்ந்து மட்டுமே இருக்கும் என்று அடித்துச் சொன்னவர் தத்துவ அறிஞர் அஸ்தே காம்த்தே என்று அறிவியல் அறியாத காலத்திலிருந்து கதை தொடங்குகிறது.
ஆனால் அஸ்தே காம்த்தே காலத்திலேயே வானவியலாளர்கள் சூரியனைப் பற்றிய பல புதிர்களை விடுவித்து சூரியனின் இயக்கம், விண்மீன்களின் தொலைவு, அவற்றின் ஒளி, வெப்பநிலை எனப் பல அம்சங்களை அறிய முடியும் என்று நிறுவினார்கள் என்ற அறிவியல் கதை தொடர்கிறது.
எட்டாத தொலைவில் உள்ள விண்மீன்களில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அவற்றின் செறிவு எவ்வளவு, அந்த விண்மீன்களின் மேற்பரப்பு, வெப்பம் என்பன போன்ற பற்பல தகவல்களை அறிய உதவுகிறது நிறமாலை பகுப்பு ஆய்வு.
மண்ணில் இருந்து கொண்டே விண்ணில் உள்ளவற்றை ஆய்வு செய்யும் முறை இது.
சுவைமிக்க நிறமாலை கதையின் துவக்கப்புள்ளியாக ஐசக் நியூட்டனைக் காண்கிறோம். காண்பதற்கு வெள்ளை ஒளியாக உள்ள காணுறு சூரிய ஒளியை முப்பட்டகத்தில் (Prism) புகுத்தினால் வெளிவரும் ஒளி நிறமாலையாகப் பிரிந்து வானவில் போல் காட்சிதரும் என்று 1666-இல் நடத்திய ஆய்வு ஒன்றில் இவர்  நிறுவினார்.
நிறப்பிரிகை செய்து பிரித்த பலநிற ஒளிகளை மறுபடி முப்பட்டகம் புகுத்தி சோதனை செய்தபோது, மீண்டும் வெள்ளை ஒளி வெளிப்பட்டது. இதனால் சூரிய ஒளி உள்ளது உள்ளபடியே பல வர்ண ஒளிகளின் கலவை என்பதை நிறுவினார். இந்த நிறப்பிரிகைக்கு நிறமாலை (Spectrum) என்று பெயரும் சூட்டினார்.
1752-இல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாமஸ் மெல்வில் இவ்வாய்வைத் தொடர்ந்தார். தொடர இயலாமல் அவர் வாழ்நாள் முடிவுற்றது.
சூரிய நிறமாலையில் தென்படும் கருங்கோடுகள் பற்றி ஆய்வு செய்தவர் (1802) வில்லியிம் ஹைடு வோல்ஸ்டன் இக்கருங்கோடுகள் நிறங்களின் எல்லைக் கோடுகள் என்பதை வெளிப்படுத்தியவர் இவர்.
முப்பட்டகம் இல்லாமலே சூரிய ஒளியை நிறப்பிரிகை செய்ய இயலும் எனக் காட்டிய விஞ்ஞானி ஜேம்ஸ் கிரைகோரி. சூரிய நிறமாலையில் காணப்படும் கருங்கோடுகள் உள்ளபடியே சூரியனில் உள்ள தனிமங்களைச் சுட்டுகிறது.
லென்சுகள். முப்பட்டகங்கள் தயாரிக்கப்பட்ட தொடக்க நிலையில் துல்லியமான கருவிகளாக அவை அமையவில்லை. இக்குறைபாட்டை உணர்ந்து லென்சுகளை சிறப்பு வடிவத்தில் வடிவமைக்க வந்த ஆய்வாளர் பிரான்ஹாப்பெர்.
நிறமாலையை விரித்துப் பெரிதாக்கி சூரிய நிற மாலையின் இடையே காணப்படும் கருங்கோடுகள் பற்றிய விரிவான ஆய்வை விளக்குகிறது இந்நூல்.
இக்கோடுகள் சூரிய ஒளியின் பாகம் என நிறுவியவர் ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் இர்ச்சாஃப் (1824-1887) நிறமாலை விதிகள் என்று அறியப்படுகின்ற இயற்கை விதிகளைக் கண்டு வெளியிட்டவரும் இவரே.
நிறமாலைக் கோடுகளை கூர்மையாக அலசுவதன் வழி பிரபஞ்ச ரகசியத்தைத் திறக்கும் சாவிகள் கிடைத்திருப்பதை இந்நூல் நமக்குச் சொல்லுகிறது.
அறிவியல் சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களின் முழு ஈடுபாட்டையும், ஏற்பட்ட இடர்களை சவாலாக மேற்கொண்டு அவர்கள் செய்த சாதனைகளையும் பார்க்கும்போது, அந்த அறிவியல் உண்மைகளை எளிதாகப் பரிந்து கொள்ள முடியும். இந்த உளவியல் அடிப்படையில் விஞ்ஞானிகள் தம் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் சார்ந்த இடர்ப்பாடுகளையும் ஆசிரியர் விவரித்துள்ளார்.
ஒளியை விளக்கவும், அதன் அலை, பண்பு துகள் பற்றி விளக்கவும் வரும் பகுதிகள் எளிமையாக உள்ளன. குறிப்பாக ஒலியின் அலைவளைவுப் பண்பை விளக்குவது எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு (பக்.25)
அறிவியல் பாடங்கள் படிக்க இடர்படும் மாணவர்களுக்கு உறுதுணையாக இந்நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
அறிவியல் அறிவு அதிகம் இல்லாதவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பொது நூலகங்களில் இடம் பெறும் தகுதி உடையது இந்நூல் என்று உறுதியாகச் சொல்லலாம்.

Related posts

Leave a Comment