You are here
நூல் அறிமுகம் 

வாசித்ததில் யோசித்தது

ஆயிஷா இரா நடராசன்

1.குழந்தைமை: புதிரும் அற்புதமும்                 மரியா மாண்டசொரி            தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன்   சாளரம்
இத்தாலியக் கல்வியாளர் மரியா மாண்டசொரியின் பிரபலமான The Secrets of Childhood நூல் தமிழில் சக்தி காரியாலயம் மூலம் வைத்தீஸ்வரன் (இந்தியா வந்தபோது மேடம் மாண்டசொரியோடு உடன் பணியாற்றியவர்) தமிழாக்கம் செய்து 1949ல் வெளிவந்தது. மறுபதிப்பு இது. கல்வியில் புரளும் யாவரும் கற்கவேண்டிய அறிய புத்தகம். நமது தனியார் ஆங்கில பள்ளிகள் பல மாண்டசொரி முறைபடி நடப்பதாக விளம்பரம் செய்கின்றன. அது மோசடி என்பதை இதை வாசித்தால் அறியலாம்.

2.குழந்தைகளுக்கான பாட்டு கதை நாடகம்              தொ.வ.கீதா  /  கோ.பழனி, தாரா புக்ஸ்
தாய்மொழியில் கற்றலை சரளமாக்கிட, குழந்தைகளின் சொல்வளத்தை அதிகரித்து கற்பனை சக்தியை ஆழமாக்கும் சிறந்த முயற்சி. களஆய்வு செய்து சேகரித்த படைப்புகள் இவை. மிக நேர்த்தியான வடிவமைப்பு சேர்ந்து பிள்ளை தமிழ் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. பாடப் புத்தகங்களுக்கு மாற்றாக இதுபோல நாம் உருவாக்கி மாற்றுக் கல்வி ஜன்னல்களை திறந்துவிட முடியும்.

3.சங்க இலக்கியக் காட்சிகள்        (மார்க்சிய வெளிச்சத்தில்) வெ.பெருமாள்சாமி         பாரதி புத்தகாலயம்
நம் தமிழ் இலக்கியத்தின் பிரதான பிரதிகள் அனைத்தையும் மார்க்சியப் பார்வையால் மறுவாசிப்பு செய்கிற அவாவைத் தூண்டும் புத்தகம். ஆய்வுகள் பல முனைவர் பட்டம் வாங்கினாலும், செய்யவேண்டிய ஆய்வு இதுதான். தோழி, தலைவி, தலைவன் உறவுகள் மட்டுமே திரும்ப திரும்ப வாசிக்கப்படும் சூழலில் ஆழமான ஆய்வுப் பார்வையால் சங்க இலக்கியத்தை வாசித்துத் தந்திருக்கும் நூலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்.

4.கண்ணீர் சிந்தும் கதைகள்                    மா.ஞானபாரதி  /  பாரதி புத்தகாலயம்
இன்று ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றித் தனியாக யாராவது ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும் என்ற நமது நெடுநாள் கனவு நினைவாகி இருக்கிறது. வக்கிரம், சூது, வன்முறை, பெண் அடிமை, பாலியல் கொடுமைகள் வலிந்து திணிக்கப்படும் நமது மெகா தொடர்கள் கண்ணீர் விட வைத்தே மனதில் குரோதம் வளர்க்கும் உளவியல் பயங்கரம் நெஞ்சை சுடுகிறது.

5. சே குவேரா                        ஜா.மாதவராஜ் / பாரதி புத்தகாலயம்
அமெரிக்க உளவு நிறுவனம் சே பற்றி எப்படி எல்லாம் கிலி அடைந்தது… அவரைக் கொலை செய்ய உளவாளிகளை ஏவியது என்பதன் பின்னணியில் உலகின் VIP புரட்சியாளரின் வரலாற்றை மறுவாசிப்பு செய்துள்ளார் மாதவராஜ். எதற்கும் அஞ்சாத சே இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை விடியலாக இருப்பது ஏன் என்பது பக்கத்திற்குப் பக்கம் விளங்குகிறது.

6.சுயமரியாதை மண்ணின் தீராவாசம்            ஊ.பு.அ. சௌந்திர பாண்டியனார் வரலாறு           திலகபாமா  /  காவ்யா
தமிழ் சுயமரியாதை இயக்கம் தமிழ்வாழ் விவசாய பாரம்பரியத்தை காடுகள் தாண்டி… உய்வித்து பதரான கட்டாந்தரையைக் கூட விவசாய நிலமாக்கிய சரித்திரம் கண்டது. அதைச் சாதித்துக் காட்டிய பாண்டியனார் மலர்ப் பண்ணை, கனிகளின் தோப்புகளை உருவாக்க களம் கண்ட வரலாறு.
7.அறிவியல் புரட்சியாளர் டார்வின்               ஆர்.பெரியசாமி  /  Books For Children
பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வினின் வாழ்வை, அவரது பிரமாண்ட அறிவியல் பங்களிப்பின் பின்னணியில் அழகாக விவரித்திருப்பது வாசிப்பவரை ஆச்சரியப்பட வைக்கிறது. நீண்ட விவாதங்கள், சர்ச்சோடு நெடிய போராட்டம். இருக்கும்போதே மரண சர்டிபிகேட் என டார்வின் சந்தித்த போராட்டங்களை எத்தனை முறை வாசித்தாலும் தகும்.

8.கனகக் குன்று கொட்டாரத்தில் கல்யாணம்              நாஞ்சில் நாடன்  /  நற்றிணை
நாஞ்சில் நாடனின் புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுதி. அவரது நடையும் எளிய மக்களின் வாழ்வினை நிழல் போல தொடரும் எழுத்துலகும் விட்டகலா இரவுகளை நம்மில் விம்மலாக எழவைக்கும் கதைகளாகின்றன.

9.சோவியத்துக்குப் பிந்தைய உலகம்                 அ.மார்க்ஸ்  /  உயிர்மை
சோவியத் வீழ்ந்ததாக மார்தட்டிய ஏகாதிபத்திய சக்திகள் பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், இரான்-இராக் என தனது ரத்தவெறியை, ஆக்கிரமிப்புப் போரை படர்த்தும் அதேவேளை எகிப்திலும் மத்திய கிழக்கிலும் கேட்கும் உலக இடதுசாரி இயக்கங்களின் பேரெழுச்சியை, அதன் பின்னணி நியாயங்கள் இவற்றை தனக்கே உரிய பாதையில் அலசுகிறார்.

10.என் இரவு ஒரு தேநீர் கோப்பையாடுகிறது         (கவிதை) க.அம்சப்பிரியா  /   பொள்ளாச்சி இலக்கியவட்டம்
அம்சப்பிரியா கவிதைகள் ஆர்பாட்டமில்லாமல் நமது காலடி மண்ணைக் கவ்விச் செல்லும் கடல் அலைகளைப் போல ஒரு நொடி ஆடவைக்கும் ஆற்றல்மிக்கவை. ஒரு பூவையாவது பறித்துச் செல்லுங்கள் என பூத்துக் குலுங்கி நிற்கும் ரோஜாப் பதியங்கள்.

11. இருட்டைத் தின்றவர்கள்                      இலா.வின்சென்ட்  /  பாரதி புத்தகாலயம்
இத்தொகுப்பு இடதுசாரி இயக்கத்தின் அடிநாதமாய் ஒலிக்கும் உயிரைப் பணயம் வைத்த மக்கள் உரிமைப் போராட்டங்களின் மத்தியிலிருந்து கிளம்பிய கதைகளின் அணிவகுப்பால் ஆனது. வின்சென்ட் போன்றவர்கள்தான் தடுமாறும் தமிழ் சிறுகதை உலகை நமது வாழ்வை பேசும்போர்க்கள முரசாய் மாற்றமுடியும். ‘விதைகள் உறங்காது’ கதை உங்களை உறங்கவிடாது.

12.பெரியசாமித் தூரன்  கருத்தரங்கக் கட்டுரைகள்     தொ:சிற்பி பாலசுப்பிரமணியம் / சாகித்ய அகாடமி
பாரதி தமிழ்’ தந்த பெரியசாமித் தூரன் நூற்றாண்டில் கோவையில் நடந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. பதினான்கு கட்டுரைகளில் அவரது சிறுவர் இலக்கிய பங்களிப்பு பற்றி வாசிக்கும்போது பல ஆச்சரியங்கள். தூரனின் பறக்கும் மனிதன் எனும் அறிவியல் புனைக்கதை பதிவும் நல்ல விஷயம்.

13.தகவல் அறியும் உரிமைச் சட்டம்                எஸ்.ஏ.எம்.பர்க்கத் அலி  /  விகடன் பிரசுரம்
தகவல் அறியும் உரிமை நமது நாட்டில் சட்டமானதன் பின்னணியில் இடதுசாரி எம்.பிக்களின் ஆதரவு பெற்ற மைய்ய அரசு என்பதே காரணம் என்பதைக் காலம் மறக்கக் கூடாது. ஆனால் பர்க்கத்அலி இந்த (RTI) சட்டத்தின் நுணுக்கங்கள் ஓட்டைகள் என அனைத்தையும் அலசி அதை சரியாகப் பயன்படுத்த நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.

14. இவைகளா கனவுப் பள்ளிகள்?                  பொ.இராஜமாணிக்கம்  /  பாரதி புத்தகாலயம்
குழந்தைகளை கல்வி எனும் பெயரில் சித்திரவதை செய்து – அடைத்து வைத்து அலற அலறக் கொலைகூட செய்யும் ஒன்றை கனவுப்பள்ளி என அழைக்க முடியுமா? தமிழக தனியார்மய கல்வி வரலாற்றின் ரத்தகறை படிந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இராஜமாணிக்கம் தரும் புள்ளி விபரங்கள் விவரணைகள் நம்மைக் கலங்க வைக்கின்றன. கனவில்கூட அப்படிப்பட்ட பள்ளிகள் தேவை கிடையாது.

15. பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும்         எஸ்.கருணா  /  பாரதி புத்தகாலயம்
உலக சினிமா எனும் பெரிய கடலில் மூழ்கி கருணா எடுத்துள்ள முத்துக்களின் தொகுதி. சினிமாவின் இதுவரை பதிவாகாத சரித்திரம் இது. உலக சினிமாவை சாதித்தது அறிவியல் எழுச்சியும் அரசியல் புத்துணர்ச்சியும்தான். அதன் ஆதாரம் இந்த நூல் முழுதும் ஓடுகிறது. ஊடகம் எனும் பூதம் உலகைப் பிடித்து ஆட்டும் கதை இதுதான்.

16. காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்         ஸ்டீபன் ஹாக்கின்ஸ்  /  தமிழில் நலங்கிள்ளி            எதிர் வெளியீடு
குவாண்டம் என்பதை அக்குசம் என தமிழ்ப்படுத்துவது உட்பட சில நெருடல்கள் இருந்தாலும் காலம் (சுருக்கமான வரலாறு) மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளது. இம்முறை அழகிய ஓவியங்களுடன். காரல் சாகனின் முன்னுரை ஸ்டீபன் ஹாக்கின்ஸின் தன்னுரை…. இவை சுவாரசியமாக உள்ளன. அரிய அறிவியல் தமிழ் முயற்சி இது.

17. செய்தித் தொலைக்காட்சி         நெல்லை மணிமாறன் /         பாரதி புத்தகாலயம்
தனியாக செய்திச் சானல் தொடங்குவது யார்? இவ்வளவு பணம் ஏது? எதற்காகத் தொடங்கப்படுகிறது. அவை செய்திகளாக இல்லாமல் எப்படி தூற்றும் துவேஷ துர்நாற்றம் வீசும் அரசியலை முன் எடுக்கின்றன என்பதை ஆழமாக அலசும் நூல் இது. செய்திகள் குறித்த விமர்சனப் பார்வைக்குப் பெயர் போனவர் தோழர் மணிமாறன்.

18. எனது நிலத்தை விட்டு எங்கே செல்வது?          தீபச்செல்வன்  /  உயிர்மை
ஈழத்தின் இன்றைய நிலைபேசும் இந்தக் கட்டுரைகளின் அரசியல் தமிழ் இனப் போராட்டத்தின் உள்மனக் குரலாய் பதிகிறது. இங்கே இருந்தபடி பிரதமருக்கு கடிதங்கள் போடுவதும் அரை நாள் உண்ணாவிரதம் இருப்பதும் நீரோ பிடில் வாசிக்கும் சூழ்ச்சி என்பது பிடிபடும்போது ஆழ்மனவலி கோபமாகப் பொங்குகிறது. இந்தப் புத்தகத்தை (குறைந்தபட்சம்) ஐ.நா. குழுவுக்கு அனுப்பலாம்.

19. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்             காம்கேர் கே.புவனேஸ்வரி  /  விகடன் பிரசுரம்
நீங்கள் ஒவ்வொரு முறை இணையத்தில் துழாவும் போதும் எதைத் துழாவுகிறீர்கள் என்பது பதிவாகி… தீவிரமாக உங்கள் கைபேசி வழியே நீங்கள் எங்கே சென்றாலும் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்கிறார். புவனேஸ்வரி. இணையம் மூலம் உலகம் ஒரு நவீன கிராமமாகியது ஒருபுறம். ஆனால் செயற்கைக் கோள் மூலம் நம் தெருவை அமெரிக்கா உளவு பார்ப்பது மறுபுறம். இதன் அரசியல் நம்மைத் திகைக்க வைக்கிறது.

20. துருவன் மகன் அமர்மித்ரா (வங்காளம்)                   தமிழில்: பெ.பானுமதி  / சாகித்ய அகாடமி
வங்காள நாவல்களில் இது தனி ரகம். தேவலோக கந்தர்வன் மனிதனாக வாழ சபிக்கப்பட்டு இங்கே வர்ணாசிரம சித்திரவதைகளுக்கு ஆளாவதே கதை. ஆனால் இதில் சித்தரிக்கப்படுவது பெண்களின் ஆகக் கீழான இழிவுநிலை. மழை பொய்க்கும் ஒரு நாட்டில் வர்ணாசிரமம் பழியை யார் மீது போடும் என்றால் ஈன சாதி கன்னிப்பெண்…. திரும்ப திரும்ப தாக்கும் யதார்த்தம் இந்த நாவலின் வலிமை.

21. சூஃபி – விளிம்பின் குரல்                     ஹெச்.ஜி.ரசூல்  /  பாரதி புத்தகாலயம்
சூபி இலக்கியம் மற்றும் தத்துவஞானம் ஒரு சமயக் குழுவுக்குச் சொந்தமானது அல்ல. அது உலகளாவிய விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம். இசுலாமின் பகுத்தறிவுப் பாதை என விளக்கும் ரசூல், அது ஏன் மனித நேயம், சகோதரத்துவம், சோஷலிசம் போன்றவற்றுக்கு மிக அருகில் வரை வருகிறது என்பதையும் விளக்கத் தவறவில்லை.

22. நடுக்கடல் மௌனம்                 தேவேந்திர பூபதி / காலச்சுவடு
இயற்கையோடான மனிதனின் எதிராடல் எத்தனையோ விளைவுகளை பதிவாக்கிப் பதைக்க வைத்துள்ளது. அதன் பெரும் கூக்குரலை…. அலறலை நாம் தேவேந்திர பூபதியின் மௌனக் கவிதை வரிகளில் கேட்டுத் திகைக்கிறோம்.

23. கி.மு.  கி.பி.  மதன்  /  கிழக்கு பதிப்பகம்
மதன் வரலாறு எழுதுவதை வாசித்தால் ஏனோ பில்பிரைசன் ஞாபகம் வந்துவிடும். இதிலும் அறிவியல்பூர்வமாக புவியின் மனிதனின் பண்பாட்டு வரலாற்றை செய்து அசத்தி இருக்கிறார். முதலில் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தது பெண்தான் என எதை வைத்துச் சொல்கிறார் என்பதைத் தான் லேசாக நெருடுகிறது. மற்றபடி, நாகரீகம், மதப்போர்கள் என ஒருவகை எள்ளலோடு துள்ளும் எழுத்து.

24. கானகம் சொன்ன சிறுவர் கதைகள்   கொ.மா.கோதண்டம் நர்மதா பதிப்பகம்
இந்த 12 கதைகளும் குழந்தைகளுக்கு அறிவியலை நயம்பட சொல்லும் உத்தியோடு படைக்கப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் கானத்தின் ரகசியங்கள் என அடுக்கி செல்லும் லாவகம் மிகவும்  நேர்த்தியாக உள்ளது. சிறுவர் கதையாடலின் நல்வரவு இந்த நூல்.

25. பைசைக்கிள் தீவ்ஸ்         திரைகதை: அஜயன் பாலா  /  புதியகோணம்
மிகப் பிரபலமான திரைப்படப் பிரதியாய் உலகெங்கும் பேசப்பட்ட ஒரு ஒப்பற்ற காவியத்தைத் தமிழ்ப்படுத்தித் தந்திருக்கிறார் தோழர் அஜயன் பாலா. மெல்லிய மனித உறவுகளின் துயரச் சித்திரமான இது ஏன் திரும்பத் திரும்ப நேசிக்கப்படுகிறது என்பதற்கான சாட்சி நம்மை விம்ம வைக்கும் யதார்த்தக் கதையாடல் என்பதை காலம் மறந்துவிடாது.

26. ஓநாய் குலச்சின்னம்             ஜியாங்ரோஸ்         தமிழில்: சி.மோகன்    அதிர்வு பதிப்பகம்
இந்தியாவிலும் ஆதி நாடோடி வேட்டையாடி சமூகத்தினர் தமிழகத்தில் பாணர், பாடினி, கூத்தர், பொருநர் குயவர், வயிரியர், குறலியர் என சங்க இலக்கிய நாடோடிகள் சங்கம் (Nomadic Associtions of India) அமைக்கப்பட்டதும் அதன் தொடர்ச்சியாக நாடோடி சமூகங்களின் சிதறுண்ட வாழ்வையும் ‘ஓநாய்குலச் சின்னம்’ நேர்த்தியாக முன்வைக்கிறது. உலக முழுதுமான நாடோடி இன மக்கள் வரலாறைப் படிக்கும் போது பெரிய மலைப்பு ஏற்படுகிறது.

27. நன்னினும் நல்லன்         வெ.இறையன்பு  /  உயிர்மை
பதினாறு கதைகள் கொண்ட இந்தப் புதிய தொகுதி, எழுத்தாளர் வெ.இறையன்புவின் பகட்டில்லாத கதை பயணம் தொடர்வதைகாட்டுகிறது. பெரும்பாலான கதைகளில் அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் நமக்குத் தரும் பாடங்கள் மீண்டெழும் மனிதநேயம் என விரிகின்ற ஆயாசம் மனதை ஆட்கொள்கிறது.

28. நதியைத் திருடிய கள்வன்                   யூமா வாசுகி /  NCBH
யூமா வாசுகி மொழிபெயர்ப்பில் அமைந்த அழகான ஐம்பது நாடோடிக் கதைகளின் தொகுப்பு. சிறுவர் வாசித்து மகிழ எளிய ஆர்வமேலிடும் பதியல். நேர்த்தியான தேர்வு. செழுமையான அச்சு. குழந்தைகள் குதூகலிக்க மேலும் உற்சாக வரவு இந்த நூல்.

29. தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி            கவிதை    சில்வியா பிளாத்  /  காலச்சுவடு
சில்வியா பிளாத் தமிழ் பெண்ணிய சூழலில் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வந்துள்ள புதிய கோணம். கவிதை நூல் முழுதும் மரணம் பற்றிய மிகை விழைவு. பெண் உடல் குறித்த இந்த நவீனத்துவ அரசியல் குரல் வாசகனை நோக்கி இயங்கவில்லை…. எனவே அவற்றில் ஈடுபடுவதே பெரிய பயிற்சியாக உள்ளது.

30. தமிழர் தாவரங்களும் பண்பாடும்               பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி  /  தடாகம்
தமிழர்களின் ஐந்திணை எனும் சூழல் வாழ்வு இன்று மறக்கப்பட்டுவிட்டது. நமது பண்பாட்டிற்கே உண்டான தாவரங்கள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டின் தாவரங்கள், அவற்றின் சிறப்புகளை தொகுத்துள்ள இந்த 52 பக்கப் புத்தகம் ஒரு அறிய பொக்கிஷம்.

31. பாடநூல் அரசியல்                     த.பரசுராமன்  /  புதுவை அறிவியல் இயக்கம்
பாடநூல்களில் பெண்கள், உழைக்கும் மக்கள் எப்படிச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதிலிருந்து தொடங்கி குழு அரசியல், கட்சி அரசியல், காவி அரசியல், சாதி அரசியல் என இழிந்திருப்பதை விளக்கும் நூலாசிரியர்,’கல்வி ஒரு அரசியல் செயல்பாடு’ என்பதை நிரூபிக்கிறார்.

32. அக்னிச் சுடர்கள்      அரவிந்த் குப்தா               தமிழில்: விழியன்     Books For Children
இந்திய அறிவியல் வானில் மிளிர்ந்த நட்சத்திரங்கள் பற்றிய அரியதொகுப்பு இது. பலரது பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. விஞ்ஞானி என்றாலே ராக்கெட் விஞ்ஞானி என்றானபின், இந்த உண்மை அறிவியல் மேதைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வது மிகவும் சிறப்பான பணியாகும். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்கவேண்டிய நூல்.

33. தஸ்தயெவ்ஸ்கி கதைகள்                       தமிழில்: எம்.ஏ.சுசீலா  /  நற்றிணை
உலகச் சிறுகதைகளில் தனக்கான தனிமுத்திரை பதித்தவர். ரஷ்ய இலக்கியத்தின் நவீனத்துவ குரலாளர் தஸ்தயெவ்ஸ்கி. இக்கதைகள் தமிழுக்கு வந்திருப்பது அதற்கான சொற்களின் வாழ்க்கை இரக்கமற்றதன் அன்றாட வாழ்வெனும் சக்கரத்தில் நொறுங்கி பிறழ்ந்த வடிவமாகத்தான். நேர்த்தியான மொழிபெயர்ப்பு.

34. நூல்கள் பயன்பாடும் பாதுகாப்பும்                  முனைவர் ப.பெருமாள்  /  பாரதி புத்தகாலயம்
நூலகங்கள் பற்றிய தமிழின் அரிய நூல் இது. வீட்டிற்கு ஒரு நூலகம் எனும் நமது கனவுக்கான பாதையை பராமரிப்பை இந்த நூல் வழி எட்டமுடியும். தேசிய புத்தக விபர அட்டவணை சர்வதேச அட்டவணையின் நோக்கம் என பரந்து பட்ட பதிப்பு உலகின் சர்வதேச அரசியல் பேசத் தவறவில்லை.

35. யுத்தங்களுக்கிடையில்                      அசோகமித்திரன்  /  நர்மதா பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடங்கி இரண்டாம் உலகயுத்தத்தில் முடியும் நாவல் இது. மாயவரம் (தற்போதைய மயிலாடுதுறை)யில் ஆசிரியர் ஒருவர் 40 வயதில் இறந்துபோகிறார். அவரது பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பது நாவல். இடையே சீதா எனும் கதாபாத்திரம் அந்தக் காலத்திற்கே உரிய இரண்டாம் கல்யாண விவகாரத்தில் யுத்தங்களுக்கிடையே பிழைத்திருப்பது பற்றிய பதிவு. பல இடங்களில் அசோகமித்திரனின் இருண்மை, நகைப்பு. குண்டுகளுடன் யுத்தம் நம்மைத் தாக்கவே செய்கிறது.

36. காலனியம்           பீபன் சந்திரா        தமிழில்:அசோகன் முத்துசாமி/ பாரதி புத்தகாலயம்
வரலாற்றை மறுவாசிப்பு செய்வது எப்படி என்று நாம் பீபன் சந்திராவிடம் தான் கற்கவேண்டும். அற்புதமான, அழுத்தமான சமூக அறிவியல் பார்வையில் காலனியத்தைக் கழட்டி தனது எக்ஸ்ரே எழுத்தில் பதித்து நமக்கு தெளிவாக்கியதை தமிழில் எளிதாக்கி தரும் முயற்சியில் பிரமாண்ட புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி படித்துத் தெளிந்து விடுகிறோம்.

37. தெய்வத் தாய் தெரஸா                  வாத்தியார் ராமன் / வ.உ.சி பதிப்பகம்
அன்னை தெரஸா பற்றிய முழுமையான பதிவு. லோரெடோ கன்னிமாடத்திலிருந்து 1928ல் கொல்கத்தா பயணமான அக்னெஸ், அன்னை தெரஸாவாக மாறிய கதை பலமுறை சொல்லப்பட்டு விட்டாலும் அது தெரீஸி மார்ட்டின் எனும் புனிதப் பயண வாயிலை ஏழைகளின் புன்னகை நோக்கி எப்படித் திருப்பியது எனும் இடம் இந்த நூலில் வாசித்தால் கண் கசியும் விதம் அழகாக சித்தரிக்கப்படுகிறது.

38. நேரு குடும்ப வரலாறு     முஹம்மது யூணுஸ்        தமிழில்: எ.பொன்னுசாமி / விகடன் பதிப்பகம்
நேரு குடும்பத்தின் நிழலாக வாழ்ந்தவர் முஹம்மது யூணுஸ். அந்த இந்திய ராஜீய குடும்பத்தின் இருள் கவ்வாத பிரமாண்ட அறைகளின் திரைச்சீலைகள் வழியே வழிந்தோடிய அதிகாரம், பெருங்கனவு, பகைமை, இவற்றிடையே துளிர்ந்த நவீனத்துவம் என தளராத நடையில் விவரித்துச் செல்கிறது புத்தகம்.

39. கஸ்தூர்பா: மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள்    மைதிலி சிவராமன்  /   பாரதி புத்தகாலயம்
மகாத்மா காந்தி பற்றி லட்சம் புத்தகங்கள். அன்னை கஸ்தூர்பா பற்றியோ படிக்க நூல்கள் இல்லை. தீகார் சிறையில் சுதந்திரப் போராட்டக் கைதியாகி, அங்கே தன் உயிரை இழந்த தியாகச் செம்மல் குறித்து அபூர்வமாய் வெளிவந்த நூல் இது. பெண்ணியப் பார்வையில் கஸ்தூரிபாவின் வாழ்வை வாசிக்கும்போது நம் மண்ணின் சுதந்திரப் போர் வேறு அர்த்தம் பெறுவதை காணலாம்.

40. வேறொரு மனவெளி     தொ:பாலுமணிமாறன்      தங்கமீன் பதிப்பகம்
வேறொரு மனவெளி சார்ந்த சிறுகதைகள்தான் இவை. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. பொழப்பு கதை அளவுக்கு மற்றவை பாதிக்கவில்லை. காரணம் அவை அமைந்துள்ள சற்றே மேலெழுந்த வசதியான வாழ்வின் நெடி. ஆனால் பெண் என்பதால் வரும் துயரம் உலகெங்கும் பொதுவானதாக இருப்பதற்கான சான்று தொகுதி முழுதும் விதைக்கப்பட்டுள்ளது.

41. பள்ளிகளில் பாகுபாடு            தமிழில் :சே. கோச்சடை  /  மணற்கேணி
பள்ளிகளில் பாகுபாடு எப்படி எல்லாம் காட்டப்படுகிறது என்பதை அலசும் தேசிய ஆவணம் இது. சாதிய மத, ரீதியான ஒடுக்குமுறை வகுப்பறையிலும் மதிய உணவிலும் எதிரொலித்தல் இந்தியா முழுதும் தொடர்கிறது. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளன.

42. மக்கள் நாட்குறிப்பில் சுதந்திரப் போராட்டம்           தொ: சீத்தாராம் யெச்சூரி / பாரதி புத்தகாலயம்
வரலாறு என்பதை தனி மனிதர்கள் படைப்பதில்லை. சாதாரண மக்களே வரலாற்றை இயக்குகிறார்கள் எனும் மார்க்ஸின் கூற்று நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கும் பொருந்துகிறது என்பதை நேரடியாக களத்திலிருந்து தொகுத்த நாட்குறிப்புகளே சாட்சி என விளக்கும் அரிய நூல். இந்திய சுதந்திரப் போர் குறித்த இந்த உண்மைப் பதிவு பாடமாக வைக்கப்பட வேண்டும்.

43. பகல் கனவு      ஜிஜுபாய் பதேக்கா             தமிழில்: சங்கர ராஜுலு    N.B.T.
உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஜிஜூபாய் தன் மகனை வளர்த்தெடுக்க கல்வியில் மாண்டசொரி முறையை முற்றிலும் ஆய்வு செய்து, 1914ல் பவ நகரில் (குஜராத்) ஒரு பாலர் பள்ளியில் கல்வி பரிசோதனைகள் செய்து எழுதிய புத்தகம். ‘குழந்தைகளை வணங்குவோம்’ என்பது அவரது தாரக மந்திரம். எத்தனை பேருக்கு மரம் ஏறத் தெரியும் என கேட்குமிடம் மிக அற்புதம்.

44. நஜ்ருல் என்றொரு மானுடன்                  சு.கிருஷ்ணமூர்த்தி  /  பாரதி புத்தகாலயம்
புரட்சிக்கவி என்றால் அது நஜ்ரூலைத்தான் முதலில் குறிக்கும். வங்காளத்தில் தான் எழுதிய கவிதை நூலை நஜ்ரூலுக்கு தான் தாகூர் சமர்ப்பித்தார். ஆனால் ஓயாத சிறைவாசம் சித்திரவதை நஜ்ரூலை மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாக்கி, வீதியில் தள்ளியதை வாசித்தால் மனம் பதறுகிறது. நெருப்புக் கவிக்கு நம் நெஞ்சம் பணிகிறது.

45. அயல்பசி ஷாநவாஸ்  /  உயிர்மை
தற்போது சிங்கப்பூரில் குடியேறி உணவகம் நடத்தி வரும் ஷாநவாஸ், உலகெங்கிலும் உள்ள உணவுக் கலாச்சாரத்தை 32 கட்டுரைகளாக எழுதிச் செல்கிறார். உணவோடு, அந்த நாடுகளின் உணவு உபகரணங்கள், கத்தி, பரிமாறும் முறை அடுப்பு என பல சுவாரசியங்கள் உண்டு. உணவுப் பண்பாடு மானிட வாழ்வின் அடிப்படை என்பதை உணர வைக்கும் நூல்.

46. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் விந்தன்  /  பாரதி புத்தகாலயம்
தமிழ்ச் சூழலின் மாபெரும் அரசியல் வித்தகர் நடிகர் எம்.ஆர்.ராதா. நாத்திகர், தீவிர இந்துமத ஆதிக்க எதிர்ப்பாளர். நாடக மேடைகளில் அரசியல் தீப்பொறி பறக்க வைத்த மேதை. அவரது சிறைச் சிந்தனைகள் இன்றைய காவிமய அரசியலுக்கான சாட்டையைச் சொடுக்க நமக்கு கட்டாயம் உதவும்.

47. எனது இளமைக் காலங்கள்         ஃபிடல் காஸ்ட்ரோ  /             பாரதி புத்தகாலயம்
ஃபிடல், சே தோழமை ஆண்டுகளை முன்வைக்கும் பக்கங்கள் மிக அற்புதமானவை. ஒரு அரசியல்சித்தாந்தியாக மக்கள் எழுச்சியின் நாயகராக எதிரிகளின் சிம்மசொப்பனமாய் உருவெடுக்கும் ஒரு இளைஞனின் ரத்த சரித்திரம் இது. போராட்டம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. உலக வரலாறை அவர்கள் மாற்றி எழுதுகிறார்கள் தங்களது மக்கள் புரட்சி மூலம்.

48. முகமற்றவர்களின் அரசியல்                  கே.எம். சரீப்  /  உயிர்மை
ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலை தற்போதைய தனிமனித கட்சி அரசியலில் சாத்தியமே இல்லை. மக்கள் ஒன்றிணைவது மட்டுமே ஒற்றைத் தீர்வு. வர்க்கங்களாக உணர்தலை எப்படியோ தந்திரமாக உடைக்கும் ஆதிக்கவாதிகளின் முகத்திரை கிழிகிறது. ஆனால் சரீப் தனது வாசிப்பை, தேடலை இன்னும் விரிவாக்கினால்… முகமற்றவர்களை முகவரியாக வழிகாண முடியும்.

49. குறி அறுத்தேன் திருநங்கை கல்கி  /  விகடன்
திருநங்கைகளுக்கு தனி வாரியம் அமைச்சகம் அமைப்பது போதாது. நாம் அவர்களை சக மனிதர்களாக கருத நம் சமுதாயத்தை பழக்கிட வேண்டும். அதற்கு அவர்களது சுயசரிதைகள் இன்னும் பல வெளிவர வேண்டும். கல்கியின் கதை நம் வாசிப்பிற்கு தீமிதித்த உணர்வைத் தந்து மனசாட்சியை கிளறிவிடுகிறது.

50. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால  ஆவணங்கள்  ஜெ.டால்பாய்ஸ்வீலர்  /  தமிழில் க. ஜெயராமன்  / சந்தியா பதிப்பகம்
கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியத் தீபகற்பத்தில் அடி எடுத்து வைத்த ஆரம்ப நாட்களின் ஆக்கிரமிப்பு ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார்கள். சென்னையை 22 ரூபாய்க்கு புதுவையின் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும், ஆற்காடு நவாப்பிடமிருந்து கடலூரை 16 ரூபாய்க்கு பத்திரம் ‘போட்டுள்ளது மனதைப் பிசையும் விஷயம். இதுபோல பல அதிர்ச்சிகள் நூல் முழுதும் உள்ளன.

Related posts

Leave a Comment