You are here
கல்வி புதிய கொள்கைக் கலவை 

மையத்தில் ஒரு முக்கோணம்

ராமானுஜம்

படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் காட்சி. அழுத்தி நிதானமாக மாவைக் கைகள் பிசைகின்றன. மாவு உருண்டையை அழுத்திப் பிசையும்போது காமிரா அருகே நெருங்க ‘க்ளோஸ் அப்’பில் காட்டுகிறது. அது ஒரு மனிதமூளையாகவும் பரோட்டா மாவாகவும் மாறி மாறித் தெரிகிறது. நம் மனம் அதற்குப் பழகும் போது, கைகள் மாவை நீண்ட குழாய் போல உருட்டிப் பிசைகின்றன. அடுத்த கணம் கத்தி வைத்து அதைச் சிறிய உருளைகளாக வெட்டும்போது, நம் மனம் பெரும் அதிர்ச்சி அடைகிறது. மூளையைப் பிசைந்து வெட்டினால் மனம் தாங்குமா?
இது ஒரு படக் காட்சி. ஐஐடி மும்பையில் பணிபுரியும் நண்பர் பேராசிரியர் ராஜா மோஹந்தி 25 வருடங்கள் முன் எடுத்த குறும்படம். “எச்சரிகையாயிரு குழந்தாய், அவர்கள் உன் மனத்தைத் திருடுகிறார்கள்!” என்று பள்ளிக் கல்வி குறித்து எடுத்த படம். மனித இனத்தின் அறிவை பாடத்திட்டமென்றும் கண்டதுண்டமென வெட்டுவது பரோட்டா மாவு வெட்டுவது போல என்றும் பள்ளிக் கல்வி மூளைச் சலவை செய்யுமிடம் என்றும் சொல்லாமல் சொல்லும் படம் அது. குழந்தை முகம், மூளை, சப்பாத்தி மாவு எல்லாம் மாறி மாறி வந்து நம் உணர்வைத் தாக்கும் வெற்றி அவருடையது.
கல்வியின் நோக்கம்தான் என்ன? மனித இனத்தின் கடந்த 3000 வருடக் கற்றலைச் சுருக்கிய முறையில், “முப்பதே நாட்களில் ஸ்கூட்டர் பராமரிப்பு” என்ற பாணியில், பத்தாண்டுகளுக்குள் ஜீரணித்த சிறு கல்வித் துண்டுகளாகத் திணிப்பதுதானா? பெரும்பாலும் நடப்பு இத்தகைய முயற்சிதான் என்பது பள்ளிப் பாடத்திட்டத்தை ஆழ்ந்து நோக்கிய எவருக்கும் தெளிவாகும்.
‘அனைவருக்கும் கல்வி’ என்ற சமூகக் குறிக்கோளே மனித இனத்திற்கு மிகச் சமீபமான ஒன்றுதான். இன்று ‘எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும், பத்தாண்டு கல்வியினை நிச்சயம் படிச்சே ஆகணும்’ என்று பாட வேண்டிய அவசியம் குறைந்து விட்டதுதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யாரும் தைரியமாக, “எல்லாக் குழந்தைகளும் படிக்கணும் என்று அவசியமில்லை, உன் குழந்தை நாளை கூலி வேலைதான் செய்யும், அதற்குப் படிப்பு வேண்டாம்” என்று மேடையேறிப் பேச முடியுமா? தொலைத்து விடுவார்கள். ஆனாலும், அம்மாதிரி நினைப்பவர்கள் யாருமில்லை என்று ஆகிவிட்டதா? யதார்த்தம் நமக்குத் தெரியும்.
‘அனைவருக்கும் பள்ளிக் கல்வி’ என்ற தத்துவமே பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகுதான் உலகில் அரசியல் ரீதியாகப் பேசப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்காக, எல்லாருக்கும் விவிலிய நூல் படிக்கத் தெரியவேண்டும் (ஏனெனில் அதில்தான் கடவுள் தந்த உண்மை உள்ளது, பாதிரிமாரை நம்பக் கூடாது) என்ற உணர்வில்தான் பள்ளிக்கல்வி பரவியது. பிரபுக்களுக்கு ஒரு கல்விமுறை, சாதாரண மக்களுக்கு ஒரு கல்விமுறை என்று மாறியது கடந்த நூற்றாண்டில், மிகச் சமீபத்தில்தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின், முதலாளித்துவமும் பொதுவுடைமைத் தத்துவமும் உலகெங்கும் பரவ, ‘அனைவருக்கும் கல்வி’ எனும் அடிப்படைத் தத்துவத்தின் அடிப்படைக் குறிக்கோள்களும் அவைசார்ந்து மாற்றம் அடைந்தன. இன்றைய உலகில் நாடுகளின் பள்ளிக் கல்விநிலையும் அவற்றின் சமூகப் பொருளாதார அந்தஸ்தும் ஒன்றிணைத்துப் பேசப்படுகின்றன.
இந்தியாவில் சுதந்திரம் வருமுன்பே, கோபாலகிருஷ்ண கோகலே காலத்திலிருந்து அனைவரும் பள்ளிக் கல்வி பெறுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. காந்தி, குமரப்பா, ஜாகிர் உசேன் போன்றோரின் கல்விகுறித்த கருத்துகளும், தாகூரின் அக்கறையும், பல விவாதங்களை எழுப்பின. சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க கல்வியின் முக்கியத்துவமும் அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்றும் பலர் பேசினர், எழுதினர். கடந்த எழுபதாண்டுகளிலும் இச்சர்ச்சை தொடர்கின்றது, இன்னமும் வரும் ஆண்டுகளிலும் தொடரத்தான் செய்யும். கல்வியின் நோக்கம் குறித்த சமூக விவாதம் தொடர்ந்து நடைபெறுவது அவசியமும் கூட.
(மனித குலத்தின் அறிவைப் பத்தாண்டுகளில் சுருக்குவதைக் கேலி செய்துவிட்டு, பள்ளிக் கல்வியின் வரலாற்றை ஒரு பக்கத்தில் சுருக்குகிறாயே என்று நீங்கள் கேலி செய்வது புரிகிறது, ஒரே ஒரு கருத்தை வலியுறுத்தத்தான் இதெல்லாம், சற்றுப் பொறுங்கள்).
“நான் எட்டாம் வகுப்புதான் படிச்சேன், ஆனா எனக்கு எட்டு மளிகைக் கடை நடத்தும் சாமர்த்தியம் உண்டு. என் பையனை காலேஜ் வரை படிக்க வச்சேன், ஒரு கடை நடத்தக்கூட தெரியலே. என் பேரப் பிள்ளையெல்லாம் ‘கான்வெண்ட்’ல படிக்கிறாங்க, ஒரு லெட்டர் ஒழுங்கா எழுதத் தெரியலே, ஒரு கணக்கு உருப்படியா போடத் தெரியலே” – இது ஒரு பெரியவரின் புலம்பல். அரசாங்கம் நியமித்த ‘சிவஞானம் கமிட்டி’ மக்களிடம் கருத்துக் கேட்டல் நிகழ்த்தியபோது, “என்னய்யா பாடஞ் சொல்லித் தர்றீக?” என்று உரிமையோடு கேட்ட பெரியவர்.
‘அனைவருக்கும் கல்வி’ என்று பள்ளிக் கல்வி விஸ்தீரணம் அடையும்போது, ஆயிரம் பேர் படித்த காலத்திலிருந்து பத்து லட்சம் பேர் படிக்கும் நிலைக்கு வருகையில், தரம் குறைவது தடுக்க முடியாத ஒன்றா? சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்வதும் தரத்தை உத்திரவாதப் படுத்துவதும் ஒரே நேரத்தில் சாத்தியமா? இதுபோன்ற கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றுக்கு மேலோட்டமாக பதில் கூறுவதும், “எல்லாமே அவசியம்தான், எண்ணிக்கையும் பல மடங்கு ஆகவேண்டும். தரமும் உயரவேண்டும், அனைவரையும் சமமாக நடத்தவும் வேண்டும்” என்று மட்டும் வலியுறுத்துவதும், காகித அளவில் சரியான திட்டங்களை வகுத்து அதை அமல்படுத்துவதில் அக்கறையற்ற போக்கை ஆதரிக்கும். சற்று ஆழமாக நோக்கி முரண்பாடுகள் உள்ளனவா, இருந்தால் ஏன் உள்ளன, எவ்வாறு அவற்றை எதிர்கொள்வது, சமாளிப்பது என்று சிந்திக்க முடியும்.
இன்றைய இந்தியாவின் கல்விக் கொள்கைக்கு மையமான அக்கறை எதுவாக இருக்கவேண்டும் என்றால் இந்த மூன்று புள்ளிகள் கொண்ட முக்கோணத்தைக் குறிப்பிடலாம்.
சிறந்த கல்வியாளரான, நாயக் இதை ‘Trinity of Indian education’ (quantity, quality, equality) என்று குறிப்பிடுகிறார். பல கோடிக் கற்போருக்கு கல்வி தரும் எண்ணிக்கைப் பிரச்சினையும், சமூகத்தின் ஆழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை மீறி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புத் தருவதும், அதேநேரம் குறைந்த தரத்தை ஒத்துக்கொள்ளாது நல்ல தரத்தை உறுதிப்படுத்துவதும் அங்கீகரிக்க வேண்டிய சவால்தான்.
மேற்படி அவசரமாகத் தந்த வரலாற்றில் இந்த முக்கோணம் பற்றிய அக்கறை வெளிப்படுகிறது. இன்று பேசப்படும் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தில் இது பற்றிய அக்கறையே இல்லாதது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும்தான் தருகிறது.
பள்ளிக் கல்விக்காகத் தரப்பட்டுள்ள 13 மையப் பொருட்கள்:
1.    துவக்கக் கல்வியில் கற்றல் திறன்களை உறுதிப்படுத்துதல்.
2.    உயர்நிலைக் கல்வியில் எல்லாரையும் பங்கு பெறச் செய்தல்.
3.    தொழிற்கல்விக்கு வலுத் தருதல்.
4.    தேர்வுமுறைகளைச் சீர்திருத்துதல்.
5.    ஆசிரியர் தரத்திற்காக ஆசிரியர் கல்விக்கு மறு உருத் தருதல்.
6.    கிராமப்புற எழுத்தறிவு நிலையை ‘வேகப்படுத்தல்’.
7.    பள்ளியிலும் முதியோர் கல்வியிலும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்.
8.    புதிய கல்விமுறைகள் கொண்டு அறிவியல் கணிதக் கல்வியை மேம்படுத்தல்.
9.    பள்ளி நிர்வாகம்.
10.    அனைவரையும் உள்ளடக்கிய கல்வி (பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாகள்).
11.    மொழிகளை வளர்த்தல்.
12.    முழுமைக் கல்வி (நெறிமுறைக் கல்வி, சுகாதாரம், கலை, வாழ்வியல்).
13.    குழந்தை நலத்தில் அக்கறை.
இவை அனைத்துமே நாம் சிந்திக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய பொருட்கள்தாம். ஆனால் இத்தகைய பட்டியல் நம் நகர்ப்புறங்களில் பிரபலமான ‘மினிமீல்ஸ்’ போலக் காட்சி தருகிறது – ஒரு சிறிய கிண்ணத்தில் மைசூர் பாகு, ஒன்றில் சாம்பார் சாதம், ஒன்றில் தயிர் சாதம், ஒரு அப்பளம் என்றெல்லாம் தருவதுபோல. மையமான, ஆழமான பிரச்சினைகள் என்ன, நம் நிலை எத்தகையது, எங்கு எவ்வாறு செய்யவேண்டும், எத்தகைய தடைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிநிலை ஏதுமில்லாது மிக மேலோட்டமான பார்வையே மிஞ்சுகிறது.
கொடுக்கப்பட்ட பொருட்களையும், அவைகுறித்த கருத்துச் சுருக்கம் மற்றும் கேள்விகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது நமக்குக் கிடைக்கும் புரிதல் கீழ்க்கண்டவாறு:
1.    பெரும்பாலும் ஆரம்பக் கல்வியில் பள்ளிச் சேர்க்கையிலும், தக்க வைத்தலிலும் பிரச்சினையில்லை, தரம் குறைவு ஆனால் ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்து, வண்ணப் பொருட்களும் அழகான புத்தகங்களும் தந்தால் எல்லாம் சரியாகி விடும்.
2.    உயர்நிலைக் கல்வியில் முழுமைப் பங்கு இல்லை. ஆனால் கொஞ்சம் முயற்சி செய்து, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் என்று (!!)  பல தரப்புகளையும் ஈர்க்க வழிமுறைகள் கொண்டு சமாளித்து விடலாம்.
3.    இதற்கெல்லாம் புதிய கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் முக்கியம், அதைக் கொண்டு பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
4.    தொழிற்கல்வியும், கணித-அறிவியல் கல்வியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக அவசியம். தொழில்களின் தேவையைக் கணக்கில் கொண்டு இதை நாம் வலியுறுத்த வேண்டும்.
5.    ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதது (அல்லது நன்கு கற்பிக்காதது) பெரும் பிரச்சினை, அவர்கள் சமூகத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வழி செய்யவேண்டும்.
6.    ‘நம்’ மொழிகளையும், ‘இந்தியக் கலாசாரத்தையும்’ பாதுகாத்து, கல்வியை முழுமை பெறச் செய்யவேண்டும்.
7.‘வேலைக்குத் தகுந்தவராக’ வளர ‘திறன்கள்’ மிக அவசியம். ஆகவே திறன்களுக்கு முக்கியம் தரவேண்டும்.
8.    பெரும்பாலும் கல்வியின் பிரச்சினைகள் நிர்வாகப் பிரச்சினைகள்தாம், முறையான, ‘நவீன’ நிர்வாக வழிமுறைகள் கொண்டு தீர்வு காணலாம்.
மேற்பட்ட பார்வை நாம் மேலே சொன்ன முக்கோணத்தை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
இந்த விவாதத்தில் பல பரிமாணங்கள் உள்ளன, பல நூல்களைப் படித்து சிக்கலை விடுவிக்க வேண்டியுள்ளது. இருந்தும் மையமாக ஒரு கருத்தை நாம் முன்வைக்க முடியும்:
நம் சமூகத்தில் கல்வி குறித்த நம்பிக்கையின்மை ஒன்று நிலவுகிறது. குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், ‘வேலைக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை’ என்றும், ‘நம் கல்வி நம் கலாச்சாரத்திலிருந்து அப்பாற்பட்டு போய்க் கொண்டிருக்கிறது’ என்றும், ‘அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் சரியில்லை’ என்றும், ‘கிராமப்புறக் கல்வியைச் சீர்திருத்த கொஞ்சம் பணம் அதிகம் செலவழித்தால் போதும்’ என்றும், ‘புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு தேவையை நிரப்பலாம்’ என்றும் (பெரும்பாலும்) நம்புகின்றனர்.
இன்று நம் முன்னால் நிற்கும் புதிய கொள்கைக் கலவை இத்தகைய புரிதலை அடிப்படையாகக் கொண்டது. இப்பார்வையை அடியோடு நிராகரித்து, முன்சொன்ன முக்கோணத்தை மையப்படுத்தும் முற்போக்கு சிந்தனையாளர்கள், மேற்பட்ட கருத்து எவ்வளவு தூரம் நவீன நகர்ப்புற இந்தியாவில் ஊடுருவி உள்ளது என்று புரிந்து கொள்வதோடு, அத்தகைய கருத்து இன்றைய பொருளாதாரக் கொள்கையும், பெரும்பான்மை இந்துத்துவமும் கலந்த சமூக அரசியலின் கையில் எப்படியெல்லாம் வலுப்பெறுகிறது, உருமாறுகிறது என்றும்  உணரவேண்டும்.
மிகவும் கவலைப்பட வேண்டிய நிலைதான் இது, ஆழ்ந்து சிந்தித்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
(தொடரும்)

Related posts

Leave a Comment