You are here
கடந்து சென்ற காற்று 

மரம் ஏறும் யானை

ச.தமிழ்ச்செல்வன்

எ   ம்மாதமும் போல இம்மாதமும் சுழன்றடித்த காற்று எல்லாத் திசைகளிலும்  தூக்கிப்போட்டுக் கொண்டிருந்தது. விதவிதமான கூட்டங்கள் விதவிதமான மனிதர்களுடனான சந்திப்புகள் எனக் கடந்து சென்றது காற்று.
மயிலாடுதுறையில் இயங்கும் ஏ.வி.சி. கல்லூரியில் மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பணம் வசூல் செய்து விளம்பரங்கள் சேகரித்துத் தங்கள் படைப்புகளை வெளியிட ‘இளந்தூது’ என்கிற ஒரு இதழை நடத்தி வருகிறார்கள். அதன்  27 ஆவது இதழை வெளியிட்டுப்பேச என்னை அழைத்திருந்தார்கள்.  120 பக்கங்களுக்கு மேல் கொண்ட பெரிய அளவிலான இந்த இதழில் “இளைஞனே! வீழ்வது வெட்கமில்லை..  வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்” என்கிற பாணியிலான எண்ணற்ற கவிதைகளும் மாணவ மாணவியர் வரைந்த ஓவியங்களும் அறிவியல் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு கூட்டு முயற்சி என்கிற அளவில் இது மிகவும் பாராட்டத்தக்க முன்னுதாரணம். கல்லூரி நிர்வாகத்திடம் பணம் வாங்கினால் சுதந்திரம் போய்விடும் என்பதால் சொந்த முயற்சியில் மாணவர்கள் இதை நடத்துவதாகச் சொன்னார்கள். படைப்பார்வத்தைத் தூண்டும் முயற்சி என்கிற அளவோடு நிற்பதால் நிர்வாகமும் ஒத்துழைக்கிறது. 27 இதழ்களில் ஒரு இதழில் கூட  ஒரு மாணவியை ஆசிரியராக வைக்கவில்லையே என்பதைச் சுட்டிக்காட்டினேன். வரும் காலத்தில் செய்வதாக மாணவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நிறுவனங்களில் போய் விளம்பரங்கள் வசூல் செய்வது,  பின் இரவு நேரம் வரை இதழ் தயாரிப்புக்காகக்  கூடிச் செயல்படுவது போன்றவற்றில் பெண்களை ஈடுபடுத்துவதில் உள்ள சிரமங்களை மாணவர்கள் குறிப்பிட்டார்கள். ஆண்கள்-பெண்கள் சேர்ந்து பழகும் காட்சி குடும்பத்தாரை சங்கடப்படுத்தும் என்பதுதான் மையப்பிரச்னை என்பதை நான் புரிந்து கொண்டேன்.
தகுந்தபடி வேலைமுறைகளையும் நேரத்தையும் வேலைப்பிரிவினையையும் முன்கூட்டித் திட்டமிட்டால் பெண்களை ஈடுபடுத்த முடியும் என்பதற்கு என் அறிவொளி இயக்க அனுபவத்திலிருந்து சில முன்னுதாரணங்களை எடுத்துரைத்தேன். பெண்களை எப்படியாவது பொது நீரோட்டத்தில் பங்கேற்கச்செய்ய ஆண்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். சிந்தனையும் பார்வைகளும் சொற்களும் சுத்தமாக இருந்தால் பெண்கள் பங்கேற்பு இன்னும் எளிதாகும். நம் சமூகத்தின் “பஞ்சு-நெருப்பு” பாலிசியை உடைப்பில் போட இதுபோன்ற ஆரோக்கியமான முயற்சிகள் தேவை. மாணவ-மாணவியரின் படைப்புகளைப் பொறுத்த அளவில் இவை யாவும் ஆரம்ப முயற்சிகள் என்பதால் இப்படித்தான் துவங்கும். வார்த்தைகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை உருவி எடுத்துக் கதையும் கவிதையும் எழுதுவது எப்படி என்பதையே என் “சிறப்புரை”யின் மைய அச்சாகக் கொண்டு பேசினேன்.
அன்று மாலை மயிலாடுதுறையில் கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து ஒரு தெரு முனையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நான் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மேள தாளம், ஆட்டபாட்டம், கூச்சல் குழப்பத்தோடு ஒரு பிள்ளையார் சிலையை  இழுத்துக்கொண்டு  ஊர்வலம் ஒன்று மேடையைக் கடந்தது. பிள்ளையாரின் தலைக்கு மேலே இந்து முன்னணியின் கொடி பறந்து கொண்டிருந்தது. ஒரு 15 பேருக்கு மேல் இருக்காது. சின்னக்கூட்டம்தான். பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெற்ற பிள்ளையார் ஊர்வலங்களிலும் கூட்டம் குறைவுதான். ஆனால் ஊர்வலங்களின் எண்ணிக்கையும் சிலைகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். முன்பு, இந்த ஊர்வலங்களை மசூதிகள், சர்ச்சுகள் இருக்கும் வழியாக எடுத்துச்சென்று ஒரு பதட்ட்த்தை ஏற்படுத்தித் தம் அரசியலை முன்னெடுக்க சங் பரிவாரங்கள் முனைந்தன. இஸ்லாமிய மக்களும் கிறித்துவ மக்களும் பல இடங்களில் இந்த ஊர்வலங்களை வரவேற்று மாலை அணிவித்து அந்த யுத்த தந்திரத்தை முறியடித்தார்கள். இது பற்றி தமிழகத்தின் 17 மையங்களில் பிள்ளையார் ஊர்வலங்களை ஆய்வு செய்த க்ரிஸ் புல்லர் அவர்களின் ஆய்வு மிக முக்கியமானது, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் 17 பக்கக் கட்டுரையாக அது முன்பு வெளிவந்தது. ஆகவே பழைய திட்டத்தைக் கைவிட்டு இப்போது மதவாதக் காற்றைப் பரவலாக்கி விசிறியடிக்கும் உபாயமாகப் பிள்ளையாரையும் சதுர்த்தியையும் பயன்படுத்த அவர்கள் முனைந்துள்ளதாகத் தெரிகிறது.
***
தமுஎகச இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவை தஞ்சை மாவட்டக்குழு தஞ்சாவூரில்  இசை மேதை ஆபிரகாம் பண்டிதர், கானாமிருத சாகரம் நூலை அச்சிட்ட அதே லாலி ஹாலில் வைத்து நடத்தினர். தஞ்சை இப்போது ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் இரவு பத்து மணிக்கு மேல் பொதுக்கூட்டம், கலை இரவு நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறை மறுத்துவிட்டது. அழுகி நாறும் தஞ்சாவூர்க் கடைத்தெருக் குப்பைகளை அகற்ற ஸ்மார்ட் சிட்டி ஒன்றும் செய்யாது போலும். முதல் ஆப்பு நமக்குத்தான்.  என்றாலும் தஞ்சைத் தோழர்கள் ஒருநாள் கலை இரவை இரண்டுநாள் கலை இரவாக நடத்தி ஸ்மார்ட் சிட்டிக்குள் கொடியை நட்டு வைத்தார்கள். இதுபோன்ற உள்ளூர் உபாயங்களும் உத்திகளும் காண்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.
இவ்வாண்டு தமுஎகச விருது பெற்ற நூல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முக்கியமான நூலாக அமைந்துவிட்டது. பரிசு பெற்ற மானுடவியலாளர் பக்தவச்சலபாரதி அவர்களின் இலக்கிய மானுடவியல் என்னும் நூலை வாசித்தேன்.அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், தமிழகப் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான திறப்பாக அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தின் ஒவ்வொரு பனுவலும் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த ஒரு புதிய நிலை மாற்றத்தைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடும் பக்தவச்சல பாரதி “தமிழ்ச்சூழலில், குறிப்பாகச் சங்க இலக்கிய ஆய்வில், இலக்கிய மானுடவியலின் முதன்மையான இலக்கானது அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் விளக்குவதாகும்.சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ் வழக்கு மொழியாகத் தொடர்கிறது.வாழும் மொழியாக விளங்குகிறது. இந்த நீண்ட நெடிய தொடர்ச்சியில், அது ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் மிகுதி.அவ்வாறே சமூகப்பண்பாட்டு முறைகளிலும் தொல் வடிவங்கள் தோன்றி காலவோட்டத்தில் பல மாற்றங்கள் கண்டு இன்றைய தமிழ் மரபாக உருப்பெற்றுள்ளது” என்று முன்னுரையில் விளக்குகிறார். இவ்வரிகளின் விரிவான விளக்கமாக அமைந்த இருபது கட்டுரைகளில் இலக்கியம், சமூகம், சமயம், வாழ்வியல் ஆகிய நான்கு பகுதிகளில் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு வாழ்வை இலக்கியப்பிரதிகளை முன் வைத்து நமக்கு வாசித்துக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரும் வாசித்தே தீரவேண்டிய கையேடாக இந்நூல் அமைந்துள்ளது.(விலை ரூ.300.பக்-400)ஏற்கனவே பண்பாட்டு மானிடவியல், திராவிட மானிடவியல், நாடோடிகள் போன்ற பல நூல்களின் மூலம் தமிழ் வாழ்வின்மீது புதிய வெளிச்சம் பாய்ச்சிய திரு.பக்வச்சலபாரதி  உண்மையில் தமிழ்ச்சமூகத்துக்குக் கிடைத்த பொக்கிஷம்தான்.
கோவையில் விஜயா பதிப்பகம் சார்பாக என்னுடைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. திரு விஜயா வேலாயுதம் அவர்கள் என் மீதும் என் கதைகளின் மீதும் கொண்ட  அளவற்ற அன்பினால் நடந்த கூட்டம் அது.தோழர்கள் மதுக்கூர் ராமலிங்கம், தங்கம் மூர்த்தி,கீரனூர் ஜாகிர்ராஜா, பேராசிரியர் துரை ஆகியோர் பொறுப்பாகக் குறிப்புகள் எடுத்துவந்து பேசியது மகிழ்ச்சியளித்தது. எந்தக்குறிப்பும் இல்லாமல் என்னுடைய ஐந்து கதைகள் பற்றி திரு.வேலாயுதம் அவர்கள் பேசியது எனக்கு மிகுந்த மனநிறைவளித்தது.குறிப்பாக என்னுடைய ஏழாம் திருநாள் என்கிற கதை பற்றி அவர் சிலாகித்துப் பேசியது வியப்பாக இருந்தது. என் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை அது. யாரும் பொதுவாக கவனம் செலுத்தாத கதை. திரு.சுந்தரராமசாமி அவர்கள்  காலச்சுவடு மலருக்காக என்னிடம் கதை கேட்ட போது நான் அனுப்பி அவர் திருப்பி அனுப்பிய கதை அது. அவருக்கு அக்கதை பிடிக்காமல் போனது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது. ஒருவேளை அதைவிட நல்ல கதை கிடைத்திருக்கலாம். மற்றபடி என்னுடைய படைப்புகளுக்காக ஓர் ஆய்வரங்கம் நட்த்துமளவுக்கு நான் படைத்துவிடவில்லை:  வேலாயுதம் அவர்களின் அன்புக்கு மரியாதை செய்யவே இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று ஏற்புரையில் சொன்னேன். தமிழ்ச்சிறுகதைகளின் ஊடாகப் பயணித்தே நான் என் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டதைக் குறிப்பிட்டு, பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி என  நான் வாசித்த தமிழ்ச் சிறுகதையாளர்களே என் கைகளில் செங்கொடியைக் கொடுத்தார்கள் என்றேன். என் வழியெங்கும் கூடவே வரும் சிறுகதைகள் பற்றித் தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.ஒவ்வொருவருக்கும் அப்படி எழுதச் சில கதைகளோ கவிதைகளோ நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன்.
ஜோலார்பேட்டைக்கு சென்னையிலிருந்து ஒருநாள் ரயிலில் போனேன்.மாடி ரயிலில் கீழ்த்தளத்தில் அமர்ந்து போனது புதிய அனுபவம். பிளாட்பாரங்களில் ரயில் நிற்கும்போது மனிதர்கள் நம் தலை மீது நடப்பதுபோலப் போனது ஒரு திடுக்கிடும் அனுபவம்தான். அப்பயணத்தின்போது வாசித்த புத்தகம் ம.நவீன் எழுதிய வகுப்பறையின் கடைசி நாற்காலி. மலேசியாவைச் சேர்ந்த  ஆசிரியரான அவர் தன் வகுப்பறை அனுபவங்கள்  சிலவற்றைக் கூர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். நம்முடைய வகுப்பறைகளிலிருந்து அவை பெரிதாக வேறு பட்டிருக்கவில்லை. உலகம் பூராவும் குழந்தைகளைச் சித்ரவதை செய்வதில் பெரியவர்கள் ஒன்றாகவே நிற்கிறார்கள்.
அப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்  மரம் ஏறும் யானைகள் என்றொரு கட்டுரை உள்ளது. அதில் ஆசிரியர் ஒரு கார்ட்டூனைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அந்தக் கார்ட்டூனில் ஒரு விலங்குகள் பள்ளிக்கூடம். பறவை, குரங்கு, பெங்கியின், யானை, மீன், நீர்நாய், நாய் என எல்லோரும் வரிசையாக நிற்பார்கள். அவர்களின் ஆசிரியர் அப்போது கூறுகிறார். ”பாடமெல்லாம் முடிந்து விட்டது. இப்போது நீங்கள் பரீட்சைக்காக நிற்கிறீர்கள்.பரீட்சை என்னவென்றால் நீங்களெல்லாம் இந்த  உயரமான மரத்தில் ஏற வேண்டும். யார் வேகமாக ஏறுகிறார்கள் என்பதைப்பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்” குரங்கைத் தவிர மற்ற விலங்குகள், பறவைகள் எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள்.  குரங்கின் வெற்றி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிட்ட  ஓர் தேர்வுமுறையல்லவா?  நம்முடைய கல்வி முறையும் இப்படிப்பட்டதுதான் என நவீன் முடிக்கிறார். ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு திறன் இருக்கிறது.அதுபற்றி எந்தக் கவலையும் படாமல் எல்லோருக்கும் ஒரே தேர்வாக மரம் ஏறச்சொல்வதுபோலத்தான்   நம் கல்வி முறை இருக்கிறது.
இதைவிட எளிதாக நம் கல்வி முறையை விளக்கிவிட முடியாது. (புலம் வெளியீடு-ரூ.70.பக்-96)

Related posts

Leave a Comment