You are here

மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…

ஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது
– நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை)
மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே இது இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மதவெறிக்கு எதிராக நடந்த எழுச்சியின் தலைவர், தமது மந்திரமா தந்திரமா எனும் ஒப்பற்ற கலைப்பூர்வ ஆயுதத்தை அளித்த நரேந்திர தபோல்காரை 2013 ஆகஸ்ட் 6 அன்று, மகாத்மாவை மண்ணில் சாய்த்த அதே காவிபடிந்த தோட்டாக்கள் வீழ்த்தின. சாமியார்கள் குறிசொல்வதும், மக்களுக்கு ஆரூடம் எனும் பெயரில் கொள்ளை நரபலி இடுவதற்கு எதிராக முழங்கிய அந்த இடதுசாரிப் போராளியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. இந்துத்வா இதழ் சரியான பாடம் கற்பித்து விட்டதாக தலையங்கத்தில் இழித்துரைத்த சாட்சி இருந்தும் காவல்துறை வழக்கை திசைதிருப்பியது. 2015 பிப்ரவரியில் குஜராத்தின் மக்கள் நலச் சிந்தனையாளர், மராத்திமொழி எழுத்தாளர் சிவாஜி எனும் மதசார்பின்மைவாதியை அறிமுகம் செய்த வரலாற்றாளர் படேல் சிலைவைப்பை விமர்சித்து கோட்ஸே எனும் கொலைகாரன் தேசத் தியாகி ஆக்கப்படுவதை எதிர்த்து, மதவெறி அரசியலுக்கு எதிராக களத்தில் நின்ற போராளி கோவிந்த பண்சாரே, மகாத்மாவைச் சாய்த்த அதே காவிபடிந்த தோட்டாக்களுக்கு இரையானார். இத்தனைக்கும் அவரது உயிருக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் இருந்தும் சரியான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இப்போது காந்தியைக் கொலைசெய்த அதே தோட்டாக்கள் எம்.எம். கல்பர்கி எனும் கர்நாடக சமூக சிந்தனையாளரும் பகுத்தறிவுப் பகலவனுமான மாமேதையைச் சாய்த்துள்ளன. வாச்சனா கவிதைகளின் (புதுகவிதை இயக்கம்) வித்தக முன்னோடியாக, எழுச்சிமிக்க கர்நாடக மதஎதிர்ப்பு நாத்திக இயக்கத்தின் பிரதிநிதித்துவப் புயலாக வீசிய அந்த இடதுசாரி பேராசிரியரை வினாயகர் விக்கிரஹ அரசியலுக்கு எதிராகப் பேசியதற்காக உயிரை எடுத்துள்ளது… தார்வ்த் எனும் ஊரில் இந்துத்வா வெறியர்கள் சில மாதங்களுக்கு முன்தான் ‘இவரைத் தீர்த்துகட்ட இரண்டு லிட்டர் மண்ணெய் போதும்’ என்று கொக்கரித்திருந்தனர். அரசுகள் இவர்களைப் பாதுகாக்க மறந்தன. இப்போது மேலும் பதினேழு அறிவு ஜீவிகளின் பெயர்களைக் கொலைப்பட்டியலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சாதிய வன்முறையால் நடக்கும் ஆணவ (கவுரவ) கொலைகளும் ஒருவிதத்தில் அதேவழியில் தமிழகபாணியாகவே இருக்கிறது. பிரபல நடிகரை, திப்புசுல்தானாக நடித்தால் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என மிரட்டுவதும், அதே மகாத்மாவை விழவைத்த தோட்டாக்களின் மொழியில்தான். ஆட்சிஅதிகாரத்திலிருந்து, சினிமா உட்பட கலைவடிவங்கள். அதன் தொடர்ச்சியாய் கல்விவரை காவிமயமாக்கும் முயற்சியை அடியோடு வேரறுக்க, நாம் மதசார்பற்ற சக்திகளை,  ஜனநாயகக் குரல்களை, அறிவியல் சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பது அவசியம். அதற்கான களம் புகவேண்டிய தருணம் வந்துவிட்டது.                                                            – ஆசிரியர் குழு

Related posts

Leave a Comment