You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

படிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள்…

பேரா.சோ.மோகனா

மனிதனின்  ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற போது, தயங்காமல்..புத்தகம் என்று சொன்னாராம்” இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்..
“கரண்டியைப் பிடுங்கிவிட்டு , பெண்களின் கையில் புத்தகத்தைக் கொடுங்கள்” என்றார் வெண்தாடி வேந்தரான பெரியார்.
படிக்காத பாமரனாய்ப் பிறந்து. உலகம் போற்றும்,நடிகனாக ,  உலகை சிரிப்புக்கடலில் மூழ்கடித்த , உலகிலேயே அதிகமாய் ஊதியம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்,             ”ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்..!”
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு என்பது புத்தகம் மட்டுமே” ..வின்ஸ்டன் சர்ச்சில்..
அதைவிட இன்னும் முக்கியமானது..
“இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.” ஹென்றி ஃபோர்ட்.
2015, செப்டம்பர் மாதத் துவக்கத்தில் மதுரை புத்தக் கண்காட்சியில் வாங்கி வந்து  படித்த புத்தகங்களில் என் மனதை ஈர்த்தவை..இரு புத்தகங்கள்..
மயிலம்மா,.போராட்டமே வாழ்க்கையாக,,(பிளாச்சிமடை.கோக்கோ கோலா  நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்ட வரலாறு..). ஆசிரியர்:.ஜோதிபாய் பரியாடத்து..தமிழில் :சுகுமாரன்..எதிர் .வெளியீடு.
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் :ஆசிரியர்: சசி வாரியர் (ஆங்கிலம் ) தமிழாக்கம்.:     இரா.முருகவேள் எதிர் வெளியீடு
பயணங்கள் முடிவதில்லை..சோ.சுத்தானந்தம்.. எஸ் எஸ் புக்ஸ் வெளியீடு
கடைசி இலை: ஓ. ஹென்றி. இரவல் நகை: மாப்பசான் ..அறிவியல் இயக்க வெளியீடு.
“படிப்பறிவு அதிகம் இல்லாத அப்பாவி ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மா, தனது ஊரிலும், சுற்றியுள்ள ஊர்களிலும், கோக்கோ கோலா பன்னாட்டுக் கம்பெனியால்  நீர் வற்றிப் போகவும், கிடைக்கும் நீரிலிருந்து நோய்கள் பரவுவதாலும், மக்களை இணைத்துப் போராட  வைத்தவர்.  கோக்கோ கோலா மென்பானத்தில் அதிக அளவு பூச்சிக் கொல்லி நச்சுகளும் கலந்திருப்பதை அறிந்து அரசும் தடை  விதித்தது. பன்னாட்டுக் கம்பெனிகளின் நிகழ்வுகள் நிகழ் காலத்துடன் மட்டுமல்ல, எதிர்காலத்துடனும் நீண்ட தொடர்புடையது. பாதிக்கப்பட்ட நீரால் நிலம் களரானதால், விவசாயமும் நடக்காது. இதற்காக மக்களை இணைத்து 5 ஆண்டுக்காலம் தொடர் போராட்டம் நடத்தினார். 7 ஆதிவாசிப் பெண்களுடன், கைதாகி சித்திரவதைப் பட்டார். அவரின் கதை போராட்டம் மட்டுமல்ல; ஒரு படிப்பினையும் கூட.எப்படி ஒரு  சாதாரண பெண் போராளியாக்கப்பட்டாள் என்ற  அனுபவப் பகிர்வுதான் இது.
அடுத்து ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ என்ற புத்தகம் மனசைப் பிசைகிற விஷயம்தான். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
தூக்கு நிறைவேற்ற அவர் செய்ய வேண்டிய சடங்குகள், அவரின் மனப் போராட்டம், அவரின் குடும்பம், அவருக்கு திருமணம் முடிக்க யார் பெண் கொடுப்பார்கள்  என்ற அனைத்து விபரங்களும் அடங்கியதுதான் தூக்குமேடைக் குறிப்புகள். இதில் ஜனார்த்தனன் பிள்ளைதான் நாயகன்.  மூன்றாம் வகுப்பு வரை படித்தவர். தொடர்ந்து வயிற்றுக்கு சோறு போட வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக தூக்கு போடும் பணிக்குப் போன மனிதர். இது எப்படி இருக்கு? இது அரசு வேலை என்பதால்தான். ஆனால் இவரின் பிறந்த   நாள் கூட சரியாகத் தெரியாது. அவரின் பணிக்காலம் என்பது  30 ஆண்டுகள். இதில் ஜனார்த்தனன் பிள்ளை 1940 லிருந்து 1970 வரை, 117 மனிதர்களை தூக்கில் போட்டுக் கொன்றவர். இவரை நாம் கொல்வோமா இவரைப் பற்றி என்ன பேசுவோம்? மனிதனாகப்  பார்ப்போமா?
மற்ற இரண்டு புத்தகங்களில், பயணங்கள் முடியவதில்லையில்  தோழர் சுத்தானந்தம் தன்  வாழ்நாள் பயண நிகழ்வுகளை அற்புதமாக பதிவிட்டுள்ளார்.
இவற்றை எல்லாம் படிக்கும்போது,  நான் எனது பால்ய வயது வாழ்க்கையையும், தற்போதைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன். அதன் அனைத்து விளைவுகளையும், பின்னணிகளையும்  ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன்..ம். ம..பெரிய நீண்ட பெருமூச்சுதான்.
ஒருக்கால் என் பெற்றோர் முக்கியமாக என் தந்தை என்னை பாடப் புத்தகம் தவிர, வேறு புத்தகம் படிக்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்று எனக்கு கட்டுப்பாடு விதித்திருந்தால்..(அன்றைக்கு அந்தக் கால கணக்குப்படி அப்பாதான் அனைத்து விஷயங்களுக்கும் நீதிபதி இன்றைக்கும் அப்படித்தான் உள்ளது.பெரிசா மாற்றம் ஏதும் இல்லை) இந்த மோகனா, அனைவரிடமும், சகஜமாய் பழகும், அனைத்தும் ஆராய்ந்து ஏற்றும் கொள்ளும், சாதியத்தை மறுக்கும், புத்தகத்தை உயிரை விட அதிகமாய் நேசிக்கும், கல்வியை அனைவருக்கும் கொடுக்க நினைக்கும் மோகனாவாக  வந்திருப்பாளா என்றால். நிச்சயமாய் இல்லை என்றேதான் கூறவேண்டும். ஏனெனில், என் அப்பாதான் தினமும், என்னை பேப்பர் படிக்கச் சொல்வதுடன், அதிலுள்ள விஷயங்கள் பற்றியும் என்னிடம் விவாதிப்பார்.. சொல்லிக் கொடுப்பார்கள்..அதன் மூலம் பிறந்ததுதான் எனது உலக ஞானம். பள்ளிப் பருவம் வரை தந்தைதான் நிறைய விஷயங்களைக் கற்றுத் தந்தவர்கள்.
1962, அக்டோபர் 20 ம் நாள் துவங்கிய  சீன- இந்திய எல்லைப் போரின்போது, ஏராளமான பாதிப்புகள் இந்தியா முழுமைக்கும் நடந்தன. அதில் முக்கியமாக, ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும்  8-9 மணி வரை இந்தியா முழுமையும் இருட்டடிப்பு செய்யப்படும் என்றார்கள். எங்கள் சோழம் பேட்டையிலும் இரவு  8 மணிக்கும் 9 மணிக்கும் ஒரு சங்கு ஊதும். விளக்கை அணைத்து விடுவோம்.  ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும், ஒரு வேளை உணவை, சாப்பிடாமல் தியாகம் செய்யவேண்டும். இதனை   போர்க்களத்தில் பணிபுரியும் இந்திய ஜவான்களுக்காக இந்த ஏற்பாடு என்று அப்பா சொன்னார்கள். எங்கள் வீட்டில் போர் முடியும் வரை அரசு சொன்னதை அப்படியே கடைப்பிடித்தோம்.வியாழன் இரவு யாரும் சாப்பிட மாட்டோம்.  திங்கள் கிழமை இரவு 8-9 மணி மண்ணெண்ணெய் விளக்கு கூட கிடையாது. ஒரே இருட்டுதான். (அப்ப ஏது மின்விளக்கு எங்களுக்கு?  எங்க ஊருக்கு மட்டும்தான் தெருவில் மினுக் மினுக்கென மஞ்சள்கலரில் எரியும் ஒற்றைத் தெருவிளக்கு.. வீட்டுக்கு கரண்ட் வந்தது 1970 தான்)
அப்போது இந்தியாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து சீனாவின் ஆக்ரமிப்பு வேகத்தை முடக்கியது அமெரிக்காதான் என்று அரசியல் தகவலை எனக்குச் சொன்னது அப்பாதான். அப்போது அதன் அருமை எனக்குத் தெரிய வில்லை. இப்போது அதன் பின்னணி அரசியல் உணருகிறேன். அக்காலக்கட்டத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான்                    F கென்னடி இந்தியர்களின் மனதில் மிகப்பெரும் ஹீரோவாக விளங்கினார். பட்டிதொட்டி எங்கும்கூட அமெரிக்க அதிபர் கென்னடிபற்றி இந்திய மக்கள் புகழ்ந்து பேசினர். சாதாரண பெட்டிக்கடைகளில்கூட கென்னடியின் புகைப்படங்கள் நேருவுடனும், காந்தியுடனும் காணப்பட்டன. 1963 நவம்பரில் கென்னடி கொலை செய்யப்பட்டவுடன், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் நடந்த இந்தப் போரில், இரு நாடுகளின் தரைப் படைகள்தான் பங்கேற்றன. கப்பல் படை, விமானப் படை பங்கேற்கவில்லை. இந்தியத் தரப்பில் 1,383 பேரும், சீனத் தரப்பில் 722 பேரும் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் இந்தியா தோல்வியடைந்தது, என்ற தகவல்களை அப்பா வேதனையோடு தெரிவித்தார்கள். அப்பா சோமசுந்தரம் காங்கிரஸ் ஆதரவாளர்.
நான் கொஞ்சம் 9ம் வகுப்பு படித்த போது அம்மாவுக்கு உதவி தேவைப்படும்போது, என்னைத் துணைக்கு அழைப்பார்கள். என்ன உதவி? அம்மா ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும்போது. சும்மா கூட உட்காருவதும், அவர்கள் கை ஓயும்போது, கொஞ்ச நேரம் ஆட்டுரலின் குழவியைப் பிடித்து சுற்றுவதும்தான். அப்பவும் நான் அரிசி மாவு ஆட்ட பிகு பண்ணுவேன். உளுந்து மாவு மட்டும்தான் ஆட்டுவேன் என அடம் பிடிப்பேன். அதற்காக அம்மா எனக்கு ஏராளமாய் கதை சொல்வார்கள். இன்னும் கூட அந்தக் கதைகள் நெஞ்சில் நிற்கின்றன. அவைகள் எக்கச்சக்கமாய் கற்பனை கலந்தவைகள்.. இவற்றை உருவாக்கியவர்கள் யாராக இருக்கும் என இன்று எண்ணிப்பார்க்கிறேன்.
எங்கள் சைக்கிள் மற்றும் மளிகைக் கடைக்கு சுதேசமித்திரன் மற்றும் தினத்தந்தி பேப்பர் வரும். தினத்தந்தியில் வரும் சிந்துபாத் படக்கதையின் ரசிகை நான். கல்கி, கதிர் மற்றும் விகடன் வார இதழ்களும் வாங்குவோம். அதன் மூலம்தான் எனது வாசிப்பின் பரப்பு விசாலமானது என்று எண்ணுகிறேன். அத்துடன் ரோட்டில் என்ன பேப்பர் கிடந்தாலும், அது பக்கோடா, காராபூந்தி கட்டி வீசிப்போட்ட பேப்பராக இருந்தாலும் அதனை எடுத்து படிப்பது என வழக்கம்.  சகட்டு மேனிக்கு. நல்லது கெட்டது, தரமானது தரமற்றது என்ற பாகுபாடின்றி. எல்லாவற்றையும் படித்தேன். தரமுள்ளதை பின்னர் காலப்போக்கில் தேர்ந்தெடுக்க கற்றுக் கொண்டேன்.
மனிதப் படைப்பில் மிக உச்சமானது மொழி. அந்த மொழியில் உருவாகும் புத்தகங்களே மனிதனைச் சிந்திக்கத் தூண்டி அறிவுவளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதிகமாக வாசிக்கும் இனத்திலிருந்தே கல்வியாளர்களும் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் தோன்றுகிறார்கள்.
“உலகில் செலவில்லாத பயனுள்ள ஒரே பொழுது போக்கு வாசிப்பு மட்டுமே”.
(தொடரும்)

Related posts

Leave a Comment